உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟20

உனது விழியில் எனது விலோசனம்…
அத்தியாயம்🌟20


மூன்றாம்நாள் தேவியிடம் வழக்கமான பரிசோதனை என்று கூறி தேவியின் கண்கட்டை அவிழ்த்துவிட்டு,


"உள்ளங்கையோட நடுபகுதி, குழிவா இருக்குல்ல அந்தப் பகுதியால ரெண்டு கண்ணையும் அழுத்தமில்லாம மூடிக்கம்மா. வெளிய இருக்குற வெளிச்சம் உள்ள போகாதபடி மூடிக்கோ" என்று டாக்டர் கூறியதும்,


உள்ளங்கையின் நடுபகுதியை இரு கண்களிலும் வைத்து மூடிக்கொண்டாள் தேவி.


"இப்போ மெல்ல்ல்ல இமையப் பிரிச்சு உள்ளங்கைக்குள்ளயே கண்ணைத்திற, 


அதேபோல் செய்து, "ம்ம் திறந்துட்டேன் டாக்டர்" என்றாள் தேவி.



"கொஞ்சம் கொஞ்சமா மெதுவா ஸ்லோமோஷன்ல கையை விலக்கி வெளில பாரு… ஜஸ்ட் செக்அப்தான், டென்சன் ஆகாம, மெல்லத்திறந்து பார்த்து, என்ன செய்யுது? எப்படி இருக்குன்னு சொல்லு" என்று டாக்டர் தேவியின் முகத்தையே பார்க்க,


மருத்துவர் இன்ஸ்ட்ரக்சன்ஸ் கொடுக்கக் கொடுக்க மெல்ல கண்களைத் திறந்தாள்.


"வெள்ளையா மேக மூட்டம் போலத் தெரியுது‌." என்று தேவி கூறியதும்,


"குட்… கண்ணைக் கஷ்டப்படுத்திக் கூர்ந்து பாக்காம, ரிலாக்ஸ்டா அந்த வெள்ளை மேகம் கலையிறவரை வெய்ட் பண்ணுமா. அவசரப்படாத…"


*ம்ம்" என்றவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மேகம் விலக,


அவன் முன் யாரோ நின்றிருந்தார்கள்.


"ம்ம் விலகிடுச்சு டாக்டர்.‌.‌. யாரோ என் முன்னாடி நிக்கிறது நிழல்போலத் தெரியுது." என்ற அவசரமாக சந்தோஷத்துடன் கூறியபடி கண்கள் தெளிவாகத் தெரியவில்லையோ என்று கண்ணைக் கசக்கப் போனவளைத் தடுத்து,


"பொறுமை… பொறுமை… எக்ஸைட் ஆகாதேம்மா… இது செக்அப்தான்… சரியா? நிதானமா கோஆப்ரேட் பண்ணு…"



"சரி"



"ஜஸ்ட் டூ செகண்ட்ஸ் கண்ணைக் கஷ்டப்படுத்தாம மெல்ல மூடிட்டு, அதேமாதிரி மெல்லத் திறந்து பாரும்மா"


அதுபோலவே இரண்டு நிமிடம் கண்களை மூடி, மெல்லத்திறந்தவள் ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்…


அவள் முன் சிங்கப்பூர் டாக்டரை அறிமுகம் செய்துவைத்த ஃபிரண்ட்!!


யார் அது?



❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️



பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்று சுபத்ரா கூறியதும் நேத்ராவிற்குக் குஷியாகி,


"என்ன்னு தெரியல எனக்கும் பாடத்தக் கவனிக்க முடியல… வெளிய போயிடுவோமா?" என்று நேத்ரா கேட்டதுதான் தாமதம் சுபத்ரா எழுந்தேவிட்டாள்.


பொதுவாக விபாட்சு, தன் நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி நடத்தும் இடங்களுக்கு, சும்மா சுற்றிப் பார்ப்பதுபோல் போய்ப்பார்த்தும், அவர்களது கண்களில் விபாட்சு தட்டுப்படவில்லை… 


'கால்வலிச்சதுதான் மிச்சம்' என்று ஒரு மரத்தடி கல்மேடையில் அமர்ந்த இருவருக்குமே, 


'தங்களது தோழியிடம், என்ன சாக்கு சொல்லி விபாட்சுவைப் பார்க்கிறதுக்காக அவனோட வகுப்பறைக்குச் செல்லலாம்?' என்ற யோசனையில் தலை வெடித்தது.


வேறுவழி இல்லாமல், "எங்க நம்ம பசங்கள காணோம்?" என்று நேத்ரா மிக இயல்பாக, ஆர்வமில்லாததுபோல் கேட்க,


"அவனுங்கள்ல்லாம் பெரிய படிப்பாளிகள்" என்று மனதில் உள்ள கடுப்பை மறைத்துக் கிண்டல்போல் சுபத்ரா கூறிச் சிரித்தாள்.


"ம்ம்? அப்படி விடக்கூடாதே… வா… வம்பிழுத்துட்டு வருவோம்" என்று சுட்டித்தனமாகச் செய்வதைப் போல் நேத்ரா கூறிவிட்டு, 'சுபத்ரா என்ன சொல்லப்போகிறாள்?' என்று தடதடக்கும் இதயத்தோடு கண்களைச் சுருக்கிப் பார்க்க,


ஐடியா கிடைத்த சந்தோசத்தை மறைத்து, "அப்டீங்கிற? வாவா! நாம இப்படி இருக்கும்போது, அவனுங்க என்ன பாடத்த கவனிக்கிறது? அதுவும் அந்த பாபிலாம் இந்த நேரத்தில் க்ளாஸ்ல இருக்கவே கூடாது" என்று ஏதோ பாபியை வம்புக்கு இழுப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்பதுபோல் பேசிவிட்டு கல்மேடையிலிருந்து குதித்து இறங்கினாள் சுபத்ரா.


வகுப்பறையின் ஜன்னல் வழியாக சைட் அடிக்கச் சென்ற தோழிகளுக்குப் பெருத்த ஏமாற்றம்… நண்பர்கள் மூவருமே அவர்கள் இடத்தில் இல்லை.


"இவனுங்க நம்மளுக்கு மேல சுபா… இன்னைக்குக் காலேஜ்ஜுக்கே வரல!" என்று ஏமாற்றத்தை மறைத்து நேத்ரா சிரிக்க,


"கொஞ்சம் அப்டி பாரு!" என்று இரண்டடி தள்ளி நின்றுகொண்டு சுபத்ரா தன் கண்களால் காட்ட,


அங்கே மூன்று நண்பர்களும் வகுப்பறையை விட்டு வெளியே வருவதற்காக, பேராசிரியரிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார்கள்…


"சுபா வாவா… நாம இங்க நிக்க வேண்டாம்" என்று சுபத்ராவை இழுத்துக்கொண்டு அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடினாள் நேத்ரா


"அடிப்பாவி! இவனப் பார்க்கத்தானே இல்லாத வேலையெல்லாம் பண்ணிட்டு வந்தேன்? இவ ஏன் வெளிய இழுத்துட்டுப் போறா?' என்று நினைத்த சுபத்ரா,


"ஹேய் பக்கி! ஏன் வெளிய போற?" என்று அவளோடு ஓடாமல் நிற்க,


"நாம இங்க நின்னா அவனுங்களுக்காகக் காத்திருக்கிற மாதிரி தோணும். வா…" என்று வெளியே வந்த நேத்ரா, 


லைப்ரரிக்குச் செல்லும் பாதை வந்ததும் நேத்ரா, மிகமிகமிக மெதுவாக ஏதோ பீச்சில் காற்றுவாங்கியபடி சுற்றுவட்டாத்தை ரசித்ததுபோல் லைப்ரரியை நோக்கி அன்னநடை நடக்க,


'இது கொஞ்சம் ஓவராத் தெரியுதே?' என்று நினைத்த சுபத்ரா, "இது என்ன நடை நேத்ரா? இயல்பா நடக்கிறமாதிரித் தெரியல… செயற்கையா இருக்கு… அதவிட அவனுங்களுக்கு லைப்ரரி பில்டிங் எங்க இருக்குன்னாவது தெரியுமோ தெரியாதோ?" என்று மெல்லக் கேட்டாள்.


"அது எனக்குத் தெரியாதா? அவங்க நம்மளப் பார்க்கிறவரை லைப்ரரிக்கு நடந்துக்கிட்டே இருப்போம். அப்புறம் வேற எங்காவது போய்க் கடலை வறுக்கலாம்." என்று நேத்ரா கூறும்போதே,


தோழிகளின் முன்னால் வந்து நின்ற நண்பர்கள்,


"அடேங்கப்பா… லைப்ரரிக்கெல்லாம் போற மாதிரி இருக்கு?" என்று விபாட்சுவும்,


"அது ஒன்னுமில்ல விபா… ரொம்ப நாளா இந்த பில்டிங் ஆள்நடமாட்டமில்லாம கிடக்கே! பேய்வீடா இருக்குமோ?ன்னு பார்க்க வந்திருப்பாங்க" என்று பாபி கிருஷ்ணாவும்,


"ஓஓ… அதுதான் இவ்ளோ மெல்ல்ல்ல நடக்கிறாங்களாமா?" என்று கைலாஷ்சும் கலாய்க்க,


"எங்களக் கிண்டல் பண்றது இருக்கட்டும். நீங்க இங்க என்ன பண்றீங்க?" என்று சுபத்ரா விபாட்சுவைப் பார்த்துக் கேட்டதும்,


சுபத்ராவைப் பார்த்து, 'இந்த தேவதையின் தரிசனத்துக்காகத்தான் வந்தோம்.' என்று நினைத்தாலும்,


"நீங்க எங்களப் பார்க்கத் தானே வந்தீங்க?" என்று ஆர்வமும் காதலுமாய் விபாட்சு சுபத்ராவைப் பார்த்துச் சட்டென்று கேட்டதும்,


"ம்ம்? அப்புறம்? நினைப்புதான் பொழப்பக் கெடுத்துச்சாம்" என்று சிலுப்பினாள் சுபத்ரா.


'என்னைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கா… ஆனா சிலுப்பலப் பாரு' என்று நினைத்தவனுக்கு, ஒரு பீரியட் மட்டும் பேசிவிட்டு, மீண்டும் வகுப்பறைக்குச் செல்ல மனம் இல்லாமல், 'சாயந்தரம்வரை சுபத்ராவோடு கழிக்கலாமே' என்று தோன்ற,


"சரிசரி… வாங்க மொதல்ல காலேஜ்ஜுக்கு வெளியே போயிடலாம்" என்ற சுற்றும்முற்றும் பார்த்தவாறு விபாட்சு வேகமாகக் கேட்ஐ நோக்கி நடந்தான்.


"அச்சச்சோ! அடுத்த பீரியட் கோர் சப்ஜக்ட்" என்று சுபத்ரா பதறவும்,


"எதே…" என்று கோபமும் எரிச்சலுமாய் விபாட்சு சட்டென்று திரும்பி சுபத்ராவைப் பார்க்க,


'அடக்கடவுளே! இவ விபாவோட முட்டிக்கிட்டா, அப்புறம் அவன் சிரிக்கக் காசு கேட்பானே! அப்புறம் நான் எப்படி சைட் அடிக்கிறது?' என்று பதறிய நேத்ரா,


சுபத்ராவிற்கும், விபாட்சுவிற்கும் இடையில் நின்றுகொண்டு,


"கூல்… கூல்…  அவ அப்டிதான். நிஜமாவே நாங்க இதுவரை க்ளாஸை கட் அடிச்சது கிடையாது… அதான் இப்படி…" என்று 'ப்ளீஸ் புரிஞ்சுக்கோ' என்பதுபோல் விபாட்சுவைப் பார்க்க,


"அப்போ அன்னைக்குக் கேன்டீன்ல பார்த்தமே? அதுக்குப் பேருதான் க்ளாஸ் அட்டர்ன் பண்றதா?" என்ற பாபி கிருஷ்ணாவை, 


'இவன்வேற' என்று நேத்ரா பார்க்கும் போதே,


"அதுக்கு நீங்க தான்டா காரணம்!" என்று உணர்ச்சிவசப்பட்டு சுபத்ரா  எகிறிவிட்டாள்.


"என்ன?" என்று மூன்று நண்பர்களும் புரியாமல் பொங்கிய போதே, 


அவர்களின் அதிஅற்புதமான மூளை,

சுப்தராவின் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை உணர்த்த விளைந்தது. 


சுபத்ராவும், நேத்ராவும் பாடங்களைக் கவனிக்காமல் போனதற்கு நண்பர்கள்தான் காரணம்கிறாளே அதுக்கு என்ன அர்த்தம்? 


அதிலும், 'சுபத்ரா கட் அடிப்பதற்கு விபாட்சுவின் நினைவுகளும்,'


'நேத்ரா க்ளாஸ்சைக் கட் அடித்ததற்கு பாபி கிருஷ்ணா, கைலாஷ்தான் காரணம்' என்று மூன்று நண்பர்களுக்குமே அவரவர் மூளை புரியவைக்க, 


'வொர்க்அவுட் ஆயிடுச்சுடா' என்று

ஒருவரை ஒருவர் வெட்கத்துடன் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்.


பிறகு தன்னிலை திரும்பிய விபாட்சு, சுபத்ராவைக் குறும்பாகப் பார்த்தபடியே நேத்ராவிடம், "சரி நேத்ரா, நீ மட்டுமாவது எங்ககூட வர்றியா? பக்கத்துல ஒரு ஐஸ்கிரீம் ஷாப் இருக்கு. அங்க போய் பலூடா சாப்பிடலாம்" என்று வம்பிழுக்க,


"பலூடா வா? என்று கண்கள் மின்னக் கேட்ட சுபத்ரா, நண்பர்கள் மூவரையும் பார்த்து, 


"நமக்கு பலூடாதான் பிகிலு முக்கியம்! 'கோர்' சப்ஜக்ட்டாவது ஒன்னாவது" என்று சிரிக்க, 


அடுத்த கணம் ஐவரும் ஐஸ்கிரீம் ஷாப்பில்.


அங்கிருந்து கிளம்பியவர்கள், இரு புறமும் வேம்பு மரங்கள், குளிர்ந்த நிழற்குடை விரிக்க, ஆவாரம்பூ மஞ்சல் வண்ண பூக்களைப் பாதையெங்கும் தூவி வரவேற்க,


நேரங்காலம் பாராது, சுற்றுப்புறம் மறந்து,


வானுலகிலிருந்து இறங்கிய தேவதைகளும் தேவர்களையும் போல் ஆவாரம்பூ விரிப்பில் பூவிற்கும் வலிக்காமல் நடந்தனர்.


சின்னச்சின்ன அர்த்தமற்ற பேச்சுக்களைத் தவிர பெரும்பாலும் மனம்பேசுவதைக் கேட்டவாறு நடந்தனர்.


விபாட்சுவுடன் நேத்ரா முன்னால் நடக்க, விபாட்சுவின் கால்தடங்களில் பாதம் பதித்து சுபத்ராவும், அவளுடன் நோத்ராவை சைட் அடித்தபடி பாபி கிருஷ்ணாவும், கைலாஷ்சும் பின்தொடர்ந்து சென்றனர். 


தன்னுடன் இணையாக சுபத்ரா வரவில்லையென்றாலும் அவள் தன் பாதச்சுட்டில் பட்டுப் பாதம் பதிய நடந்து வருவது திருமண நாளன்று அக்னியை வலம்வருவதைப் போன்று தோன்ற,


இது நடக்கவேண்டுமே என்று இயற்கையிடம் மனதார வேண்டினான்.


அப்பொழுது விபாட்சுவின் மீது மோதிய தென்றல் அவனடிபற்றி நடந்துவரும் சுபத்ராவைத் தழுவ,


விபாட்சுவின் பிரத்யேக வாசம் சுபத்ராவின் உடலைத் தீண்டத் தீண்ட அவனே தன்னைத் தீண்டியதைப் போன்றதொரு உணர்வில் தத்தளித்தவளுக்கு வார்த்தைகளால் வடிக்க முடியாத  இன்பமான அனுபவத்தைத் தந்தது.


அவனோடு மனதளவில் நெருக்கமானதொரு உணர்வு எழ சுபத்ராவின் உடல் சிலிர்த்தது.


சுபத்ராவின் உடல் தென்றல் தீண்டும் போதெல்லாம் சிலிர்ப்பதைக் கண்டவனுக்கு, அவளுடைய மனம் புரிய, அவளோடு குறும்பாக விளையாட எண்ணி, நடந்துகொண்டிருந்தவன் சட்டென்று நிற்க,


கனவுலகில் மிதந்து வந்து கொண்டிருந்த சுபத்ரா நேராக விபாட்சுவின் முதுகிலேயே மோதி நின்றாள்.


எதிர்பாராமல் விபாட்சுவின் ஸ்பரிசம் பட்டதால் சுபத்ராவிற்கு நாணத்தில் முகம் சிவக்க, எப்படி சமாளிப்பது என்று சுபத்ரா யோசிக்கும்முன், நேத்ரா மீண்டும் இருவருக்கும் இடையே வந்து நின்று கொண்டு,


'முடிஞ்சது! சுபத்ராவிற்கும் விபாட்சுவிற்கு மறுபடியும் சண்டைவரப்போகிறது என்று நினைத்த நேத்ரா,


"சுபா… நான் தான் அவர நிற்கச் சொன்னேன்… வேணும்னே எதுவும் நடக்கல" என்று சுபத்ராவை சமாளிக்க,


நேத்ராவின் சமாளிபிகேசன் புரிந்தாலும், விபாட்சுவின் மீது மோதியதால் ஏற்பட்ட பரவசத்தில்  சிவந்த கன்னங்களைப் பிறர் அறியாமல் மாற்றுவதற்கு இதுதான் சரியான வழி, நம்மளும் அப்படியே கெத்த மெயின்டெய்ன் பண்ணுவோம்' என்று, 


சற்றே தடையையை உயர்த்திக் கீழ் கண்ணால் பார்த்தவாறு, "ஓகே ஓகே நீ சொல்றதால பேசாம வர்றேன்… ம்ம்?" என்று சுபத்ராவும் குளற,


மீண்டும் இதேபோல் சுபத்ரா விபாட்சுவின்மேல் மோதுவதைத் தடுப்பதாக நினைத்த நேத்ரா,


"நீ விபாவோட நட, நான் இவங்களோட வர்றேன்" என்றதும், 


"ஹைய்யோ… நேத்ராஆஆஆ… உன்ன மாதிரி என் மனச புரிஞ்சுக்கிட்டவங்க யாருமில்ல… ஐ லைக் யூ" என்று விபாட்சு பேசிய பாவனையில், 


வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள் நேத்ரா. 


'நேத்ரா தங்களுடன் சேர்ந்து வருவதை விரும்பியிருக்கிறாள்' என்று பாபி கிருஷ்ணா வும், கைலாஷ்சும் குதூகமானார்கள்.


'சுபத்ராவும் விபாட்சுவும் அருகருகே நடக்க, இந்தப் பயணம் நீண்டுகொண்டே போகக்கூடாதா?' என்று ஏங்கியது சுபா, விபாவின் காதல் கொண்ட இதயங்கள்…


வெகுதூரம் நடந்த களைப்பில் ஒரு சாட்கார்னருக்குள் சென்று அமர்ந்து பாவ்பாஜி ஆர்டர் செய்தனர்.


நேரம் ஆக ஆக, தங்களுக்குப் பிரியமானவய்களைப் பிரியவேண்டுமே என்ற எண்ணம் நேத்ராவிற்கும், விபாட்சுவிற்கும் தலைதூக்க,


'அச்சோ இன்னும் ரெண்டு மணிநேரம்தான் சேர்ந்து இருக்க முடியும்… இன்னும் ஒரு மணிநேரம்தான்… என்று நேத்ராவும், விபாட்சுவும் தங்கள் கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்தனர்.


'காலேஜ்ல தினமும் இப்படிக் கட் அடிச்சுட்டு வெளியே வர முடியாது… காலேஜ் முடிஞ்ச பிறகு தினமும் தங்களின் காதலுக்கு உரியவர்களைச் சந்திக்க என்ன செய்யலாம்?' என்று பாவ்பாஜி சாப்பிட்டபடியே நேத்ராவும் விபாட்சுவும் கடுமையாக யோசித்தனர்.


'அப்போ மற்றவர்கள்?' என்று தோணவே, நாம் மற்ற மூவரையும் பார்க்க, 


'அதான் யோசித்து மண்டையை உடைச்சுக்க இவங்க ரெண்டு பேர் இருக்காங்களே! நாம எதுக்குத் தேவையில்லாம மூளைக்கு வேலைகொடுத்து, அத டயர்ட் ஆக்கனும்?' என்று பாவ்பாஜியை ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.


நல்லதொரு ஐடியா நேத்ராவிற்குத் தோன்ற, நண்பர்களைப் பொதுவாகப் பார்த்து,


"வந்து… ரொம்ப நாளா எனக்கொரு ஆசை…" என்று இழுக்க,


பதறிய பாபி கிருஷ்ணா, "ஹேய் இதெல்லாம் இப்டி பப்ளிக்கா சொல்லக் கூடாது… வீட்டுக்குப் போய் மெசேஜ் பண்ணு" என்றதும்,

 

அவன் தோளைத் தட்டிய விபாட்சு, "புத்திய கண்ட்ரோல் ல வைடா!" என்று கலாய்த்துவிட்டு,


"நீ சொல்லு நேத்ரா" என்று விபாட்சு கூறவும்,


"அது… வந்து" என்று சுபத்ராவைப் பார்த்தாள்.


'எதுவா இருந்தாலும் வெளிய வரட்டும்' என்று சுபத்ரா நிதானமாக பாவ்பாஜியைப் பார்க்க,


"ம்ம்ம்…" என்று ஊக்கினான் பாபி கிருஷ்ணா.


"தப்பா எடுத்துக்கக் கூடாது" என்று கண்கள் அலைப்புற, உதடுகளை ஈரப்படுத்திக் கொண்ட நேத்ராவிடம்,


'ஒருவே…ளை, ப்ரபோஸ் பண்ணப்போறாளோ?' என்று நினைத்து,  "இல்ல… இல்லயில்ல… தப்பில்லை… தப்பா நினைக்கல்லை" என்ற கைலாஷை,


'எத்தனை இல்ல? அவளப் பேசவிடுங்கடா' என்பதுபோல் பார்த்தாள் சுபத்ரா.


"எனக்கு… எனக்கு…"


"ஏய் சீக்கிரம் சொல்லும்மா இவன் தொல்லை தாங்கல… டென்சன்ல கீழ விழுந்து தொலைக்கப் போறான்." என்ற விபாட்சுவைப் பார்த்து, சட்டென்று


"எனக்குக் கார் ஓட்டிப் பழகனும்னு ஆசை" என்றாள் நேத்ரா.


"அட சட்… இதுக்குத்தான் இந்த இழுவையா" என்று பாபி கிருஷ்ணா திரும்பிக்கொள்ள,


"ஏன் உங்க வீட்ல ஒத்துக்கிற மாட்டேங்கிறாங்களா?" என்று அக்கரையாகக் கேட்டான் கைலாஷ்.


"அதில்ல… சினிமாலலாம் கார் ஓட்டப் பழகித்தர வரும் பசங்கள, பொண்ணுங்க லவ் பண்ணிடுறதா காட்டுறதப் பார்த்துப் பயப்படுறாங்க"


"நியாயம்தானே?" என்ற விபாட்சுவை 'ஏன்டா?' என்பதுபோல் பாபி கிருஷ்ணா முறைக்கவும்,


சட்டென்று விபாட்சுவிற்கு பல்பு எரிய,


"நான் என் கார்ல உனக்குச் சொல்லித்தரவா?" என்று ஐடியா கொடுத்தான்.


விபாட்சுவே தானாக, அதுவும் முகமெல்லாம் மலர்ந்து தானே கார் ஓட்டச் சொல்லித்தருகிறேன் என்று கூறியதே, தனது காதலை அவன் ஏற்றுக்கொண்டானென நம்பினாள் நேத்ரா.


விபாட்சுவின் கண்களைக் காதலுடன் பார்த்தவள், அவன் கண்களில் மின்னும் காதலைக் கண்டு, 'இந்த நிமிடம் இந்த உலகத்தில் என்னைவிட சந்தோசமாக இருப்பவர்கள் எவருமில்லை'… என்று புலங்காகிதம் அடைந்தாள்.


மற்ற மூவருமே குஷியாகி "ஓகே டன்" என்று கத்த அந்த இடமே குதூகலமாகியது.



'இவனை மட்டும் நேத்ரா விரும்பமாட்டானு நேத்ரா வீட்டில் நம்பிவிடுவார்களா?' என்ற முக்கியமான சந்தேகம் அந்த மரமண்டைகளுக்குத் தோணவே இல்லையே?!!


அதே வேளையில் விபாட்சுவின் அம்மா கௌதமிக்கு ஃபோன் செய்து, விபாட்சு வகுப்பைக் கட் அடித்து, நேத்ரா சுபத்ராவுடன் கல்லூரியிலிருந்து வெளியே சென்றுவிட்டதாக, நல்லவன் ஒருவன், தன் ஒற்றுவேலையைத் திறம்படச் செய்ய,


கௌதமியின் முகம் மாறியது.


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️



Post a Comment

0 Comments