உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟19


உனது விழியில் எனது விலோசனம்…
அத்தியாயம்🌟19


'தேவியின் விஷயத்தில் ஏன் தலையிடுற?' என்று ஃபோன் பேசியவன் கேட்டதற்குக் காதல்தான் காரணம் என்று சொன்னவனைப் பார்த்த ஆத்மாவிற்கு,


'ஒருவேளை இவன் தேடிவந்த தேவி வேறு யாரோவாக இருக்குமோ?' என்று சந்தேகம் வர,


ஆத்மா மருத்துவமனைக்குச் சென்றது.


அங்கே தேவிக்கு, அன்றைய தினம் வழக்கமாக எடுக்கும் பரிசோதனை முடிவுகளை டாக்டர் பார்த்துக்கொண்டிருந்தார்.


"டாக்டர் இப்ப எப்படி இருக்கு?" என்று தேவியின் அம்மா கேட்க,


"எல்லாம் நார்மலா இருக்கு…" என்று கூறியபடி,


செவிலிப்பெண் கொடுக்கவேண்டிய மருந்து மாத்திரைகளை சரிபார்த்து தேவிக்குக் கொடுத்தபடி, தேவியிடம்,


"உங்க ஃபிரண்ட் ஃபோன் பண்ணி ரெகுலரா விசாரிக்கிறாங்க…" என்று சிரித்தபடி கூறிய மருத்துவர், 


தேவியின் அம்மாவைப் பார்த்து, 


தன்னைப் பின்தொடரும்படி தலையசைத்து ஜாடை செய்துவிட்டு அறையிலிருந்து வெளியே செல்ல,


தேவியின் அம்மா, தேவியிடம், "கேன்டீன்க்குப் போயி காபி குடிச்சிட்டு, உனக்கு பாதாம்பால் வாங்கி வர்றேன். பத்திரமா இருக்கனும் சரியா?…" என்று கூறித் தன் மகளின் தலைகோதிவிட்டு,


அறையிலிருந்து வெளியே வர, அவருக்காகக் காத்திருந்த செவிலிப்பெண்,


"நான் தேவியைப் பார்த்துக்கிறேன். நீங்க டாக்டரப்  பார்த்துட்டு வாங்க" என்று மென்நகையுடன் கூற,


"எல்லாம் சரியாயிருக்குன்னு சொன்னாரே? ஏதாவது பிரச்சனையா? எதுக்குத் தேவிக்குத் தெரியாம பேசனும்?" என்று பயந்துபோய் தேவியின் அம்மா கேட்டதும்,


"எங்களுக்குக் கொடுத்த இன்ஸ்டிரக்ஷன் படி எல்லாம் சரியா இருக்கு. உங்கள டாக்டர் எதுக்குக் கூப்பிடுறாங்கன்னு எனக்குத் தெரியல. ஒன்னும் பயப்படற மாதிரி இருக்காது. போயிட்டு வாங்க!" என்று சொல்லிச் சிரித்தார் செவிலிப்பெண்.


"அப்போ, பணம் ஏதாவது கட்ட வேண்டி இருக்குமா?" என்று தேவி அம்மா தயங்கியபடி கேட்க,


"அதெல்லாம் டிஸ்சார்ஜ் ஆகும்போது கட்டினா போதும். அந்த பில்லும் நான்தான் கொண்டு வருவேன். அதுனால பணத்துக்காக டாக்டர் கூப்பிட மாட்டாங்க." சென்று செவிலிப்பெண் கூறவும், 


டாக்டரின் அறையை நோக்கி, 'எதுக்காகக் கூப்பிட்டிருக்காரோ' என்று பயந்தபடியே சென்றார் தேவியின் அம்மா.


அறைக்குச் சென்றதும் எதிரில் உள்ள இருக்கையில் அமரச் சொன்னார் டாக்டர்.


"என் பொண்ணுக்குக் கண்ணு தெரிஞ்சுடும்ல டாக்டர்?" என்று மிரண்டு போய்க் கேட்டவரிடம்,


"எல்லாம் சரியா போயிட்டிருக்கும்மா… அவங்களுக்குக் கண் தெரிஞ்சுடும்… இன்னும் மூனு நாள்ல கட்டுப் பிரிக்கப் போறோம். அது சம்மந்தமாகப் பேசத்தான் கூப்பிட்டேன்."


"சொல்லுங்க டாக்டர்."


"கட்டுப்பிரிச்சுட்டு செக் பண்ணினா உங்க பொண்ணோட கண்ணு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுடும்."


"ம்ம்"


"உங்க பொண்ணோட கண்ணு மோசமா பாதிக்கப்பட்டு சரிபண்ண முடியாததால… உங்க பொண்ணுக்கு வேறொருத்தர் டொனேட் பண்ணுன கண்ணைத்தான் பொருத்தியிருக்கோம்.  தெரியும்ல?"


"ம்ம் தெரியும் டாக்டர்!"


"பொதுவாவே அடுத்தவங்களோட உறுப்பு நமக்கு செட் ஆகுறதுல கொஞ்சம் ப்ராப்ளம் வரும்."


"கடவுளே!"


"பயப்பட வேண்டாம்… சமாளிக்கக்கூடியதா தானிருக்கும். அது அப்புறம். இப்ப என்ன செய்யனும்னா, இந்த மூனு நாள் ரொம்ப கவனமா இருக்கணும்… உங்க பொண்ணு டென்சன் ஆகக் கூடாது… எத நெனச்சும் கவலைப்படக் கூடாது, பயப்படக் கூடாது… அதனாலதான் அவங்களுக்குக் கட்டு பிரிக்கிற விஷயத்த தேவிகிட்ட சொல்லல. நீங்களும் டென்சனாகி அவங்கள பயமுறுத்திடாதீங்க…"


"சரிங்க டாக்டர்!"


"அப்புறம்… உங்க பொண்ணுக்கு, சிங்கப்பூர் ‘ஐ’ ஸ்பெசலிஸ்ட்டை இன்ட்ரோ பண்ணி உதவுன ஃபிரண்ட் கட்டுப் பிரிக்கிற அன்னைக்கு இங்க வர்றதா சொல்லீருக்காங்க… இதுவும் உங்க பொண்ணுக்குத் தெரியவேணாம்."


"சொல்லலை டாக்டர்."


"சரி நீங்க கிளம்புங்க." என்று டாக்டர் கூறியதும் தேவியின் அம்மா டாக்டரின் அறையிலிருந்து வெளியே வரும்போது, டாக்டரின் அறையிலிருந்த திரைக்குப் பின்னே யாரோ நிற்பது போல் தோன்றியது.


"யாருக்கோ ட்ரீட்மெண்ட் குடுத்திட்டிருக்கார்." என்று நினைத்ததால் அங்கே நிற்பவரைச் சரியாகப் பார்க்காமல் கதவைத்திறந்து வெளியேறினார் மேனகா. 


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️

விடுமுறையை  நண்பர்கள் மற்றும் விபாட்சுவுடன் கழித்துவிட்டு வீட்டிற்கு வந்த நேத்ரா, 


'ச்சே மத்த நாளெல்லாம் நகருவேனான்னு கல்லுக்குண்டாட்டம் இருக்கும்… இன்னைக்கு? கண்ணைத் திறந்து மூடுறதுக்குள்ள சாயந்தரம் ஆயிடுச்சே?' என்று புலம்பியபடி உடைகூட மாற்றாமல் கட்டிலில் போய் விழ,


அவளைப் பார்த்த நேத்ராவின் அப்பத்தா,


"அம்மா நேத்ரா! முகத்தக் கழுவி, காபி குடிச்சுட்டு துணிய மாத்திட்டு உட்காரு. என்ன இது புதுப்பழக்கம்?" என்று அறையைப் பார்த்தபடி குரல் கொடுக்க,


எழுந்து வந்தவள் தன் அப்பத்தா அருகில் அமர்ந்து, "அப்பத்தா… இன்னைக்கு ஒருநாள் விட்டுடுங்களேன்… ப்ளீஸ்…"


"எல்லாப் பழக்கமுமே இன்னைக்கு ஒருநாள் மாட்டும்னுதான் ஆரம்பிக்கும்… அப்புறம் விடாது… போ! போய் முகம், கை, கால் கழுவிட்டு வா!" என்று காபி போடுவதற்காகச் சமையலறையை நோக்கி நடந்தவரிடம்,


"அப்பத்தா!" என்றழைக்க,


திருப்பிப் பார்த்தார்.


"உங்களுக்குத் தாத்தாவ எப்டி தெரியும்?"


"போடி கூறுகெட்டவளே! உனக்கு வேற வேலை இல்ல?" என்று சிரித்துவிட்டு நடந்தவரிடம்,


"அப்பத்தா… நீங்க லவ் மேரேஜா? அரேனஜ்டு மேரேஜா!" என்று கேட்டதும்,


இதே கேள்வியைத் தன் மகனான நேத்ராவின் அப்பா, தன்னிடம் கேட்டது அப்பத்தாவிற்கு ஞாபகம் வர, தூக்கிவாரிப் போட்டவராகக் கிட்டத்தட்ட ஓடிவந்து நேத்ரா அருகில் அமர்ந்தவர்,


"ஏன்? ஏன் இப்டிக் கேட்குற?"


"சும்மா தெரிஞ்சுக்கத்தான்"


"இப்ப சுபாகூடத்தானே போயிட்டு வந்த? யாரையாவது பார்த்துட்டியா என்ன?" என்று பதறவும்,


'இவங்களுக்கு என்னாச்சு?' என்று விழித்தவள்,


"ஏன் இப்படிப் பதறுறீங்க?" என்று கேட்கவும்,


அப்பத்தாவின் கண்களில், நேத்ராவின் அப்பா இதே கேள்வியைத் தன்னிடம் கேட்டது… ஒரு பெண்ணை விரும்புவதாகக் கூறி அழைத்து வந்தது… அவளுடன் மணம்புரிந்து சந்தோஷமாக வாழ்ந்தது… 


நேத்ரா பிறந்தது… சிங்கப்பூர் செல்லும்போது விமான விபத்தில் இறந்ததுவரை காட்சிகளாக ஓட, கண்ணீர் பொலபொலவெனக் கழுத்தைத்தாண்டி நெஞ்சில் இறங்கியது.


அதைப் பார்த்துப் பொறுக்க முடியாத நேத்ரா, "அச்சச்சோ இப்ப நான் என்ன கேட்டுட்டேன்‌? இப்டி அழுறீங்க? நீங்க மறக்க நினைக்கிற பழய காதல் எதையும் ஞாபகப் படுத்திட்டனா?" என்று கேட்டதும்,


'அப்பனுக்கும் பிள்ளைக்கும் ஒரே புத்தி! அவனும் நான் ஷாக்காகி நின்னதும் இப்டிதான் கேட்டான்.' என்று நினைத்தபடி முறைத்தவர்,


"ஒழுங்கு மரியாதையா போயிடு… இல்ல… மிளகாய்ப்பொடிய நாக்குல தடவிவிட்ருவேன்" என்று வழக்கம்போல மிரட்டிவிட்டு சென்றவரையே பார்த்தவண்ணம் அமர்ந்திருக்க,


மாலைநேர வசூல் முடிந்து வந்த தாத்தா, உடை மாற்றி, முகம் கைகால் கழுவித் துடைத்தபடி தனதருமைப் பேத்தியின் அருகில் அமர்ந்தார்.


வாயாடிப்பேத்தி இன்னேரம் இன்றைக்கு நடந்த விசயங்களைக் கொட்டிக் கவிழ்த்தாமல் சமையலறையே பார்த்தபடி சிலையாக அமர்ந்திருக்க,


நேத்ராவின் தலையைக் கோதிவிட்டு, "அப்படியென்ன அதிர்ச்சி தர்ற விசயத்த அப்பத்தா சொல்லிட்டாங்க?" என்று பாசமாகக் கேட்க,


"ஒன்னுமில்ல தாத்தா, உங்களுக்கும் அப்பத்தாவுக்கும் லவ் மேரேஜா? அரேன்ஜ்டு மேரேஜான்னு கேட்டேன். அதுக்குப்போயி என் வாயில மிளகாய்ப்பொடிய தடவீருவேன்னுட்டாங்க!" என்றதும்,


இதே கேள்வியைத் தன்னிடம், தங்களது மகன் கேட்டதாக அப்பத்தாக் கூறியது ஞாபகம் வந்து, தாத்தாவின் முகம் கருத்து, தனது மகனும் மருமகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்தார்.


அதனால் அவருக்கும் பழைய நினைவுகள் வந்து கண் கலங்க,


"ஆஹா! இவருக்கும் காதல்தோல்வி இருக்கும் போலயே?" என்று பரிதாபமாகப் பார்த்தவளை,


‘உருவத்துல ஆத்தாவோட கலர்ஸ்கேன் காப்பி மாதிரி இருந்தாலும் மத்ததெல்லாம் அப்படியே அப்பனக் கொண்டு பிறந்திருக்கே?!!’ என்று சிரித்தவர்,


"அது வந்து நேத்ரா, நம்ம குடும்பத்துக்கும், காதலுக்கும் சரிப்பட்டு வராது அதுனாலத்தான் அப்பத்தா அப்டிச் சொல்லீருக்காங்க."


"ஹுக்ஹும்… எந்தக் குடும்பத்துல காதல ஒத்துக்கிறாங்க?"


"அது… அப்படியெல்லாம் இல்லமா… நம்ம வீட்ல…"


"யாரு? என்னன்னு தெரியாதவங்களக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு, நல்லா பழகிப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன பிரச்சனை தாத்தா?"


"நான் சொல்றத நீ சரியா புரிஞ்சுக்கலம்மா. நமக்குத் தடையா இருக்கிறது, நீ நினைக்கிற மாதிரி ஜாதி, மதம், அந்தஸ்து அதெல்லாம் இல்ல"


"பின்ன? ஈகோ வா?"


"இல்ல பாப்பா! உங்க அப்பாவும் அப்படித்தான் உங்க அம்மாவை விரும்புகிறேன்னு சொல்லி வந்து நின்னான். உன் அம்மா  பார்க்கிறதுக்கும், பழகுறதுக்கும் நல்லா இருந்தா."


"வாவ் அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜா? நினைச்சேன்… ரெண்டு பேருமே அழகா இருக்காங்க?!! பொதுவா அரேன்ஜ்டு மேரேஜ்ல ஏதாவது ஒன்னு குரங்கு மாதிரி தானே இருக்கு?" என்று சிரித்தாள். 


"சேட்டை! அப்படியெல்லாம் சொல்லக் கூடாது… அப்புறம்… உங்கம்மாவ எங்களுக்குப் பிடிச்சதும் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டோம்…"


"சூப்பர் தாத்தா!" 


"ஆனா… அப்போ எங்க அம்மா, அதான் உன் பாட்டி, என்னையத் தனியாக் கூப்பிட்டு நம்ம குடும்பத்துக்குக் காதல் ஒத்து வராதுடா அப்படின்னு சொன்னாங்க.”


“வயசானவர்களே அப்படித்தான் தாத்தா. எல்லாரும் உங்கள மாதிரி இருந்திருவாங்களா?” என்று சற்றுக் கவலையாகக் கூறினார்


“எங்க அம்மா அந்த அளவுக்கு ரொம்ப மோசம் இல்லை. ஆனாலும் ரொம்ப ஸ்ட்ரிக்டா வேண்டான்னு சொன்னாங்க.”


"அப்புறம் ஏனாம்?"


“நான் கேட்டதுக்கு ஏதோ குலதெய்வம் சாபம் அப்படின்னு ஏதோ சொன்னாங்க.”


“அப்படின்னா? குலதெய்வம்ங்கிறது காப்பாத்துறது தானே தாத்தா?” என்று கேட்க,


“ஆமாடா, ஆனா நம்ம குலதெய்வம் ஒரு கன்னிப் பொண்ணு. வேற ஜாதிப் பையனை லவ் பண்ணாங்க. அதனால சொந்தக்காரங்க அந்தப் பொண்ணக் கொன்னுட்டாங்க. அவங்க ஆத்மா ரொம்ப உக்கிரமா இருந்திருக்கு. அவங்கள சாந்தி பண்ணி சாமியாக்கிட்டாங்க. அவங்களக் குலதெய்வமா கும்பிடுரோம்னு அந்தப் பொண்ணுட்ட அனுமதி கேட்டாங்க. ஆனாலும் உக்கிரம் குறையல அந்தப் பொண்ணுக்கு. 


அவங்க சாகுற நேரத்துல, “என் காதலை பிரிச்சீங்க இல்லையா?  இந்த வம்சத்துல யாரையும் காதலிச்சு சேர விடமாட்டேன்.” அப்படின்னு சொல்லிட்டு இறந்திருக்காங்க. 


“என்னைக் சாமியாக்கி கும்பிட்டாலும் கடைசியா நான் சொன்னது சொன்னதுதான். அதனால யாரு லவ் பண்ணாலும், நிம்மதியா கடைசி வரைக்கும் சேர்ந்து வாழ முடியாதுன்னு சொன்னாங்களாம்” என்று தாத்தா சொல்ல,


நேத்ரா நம்பாத பார்வை பார்த்தாள்.


“உங்க அப்பா, அம்மாவுக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு, ஏதோ பரிகாரம் எல்லாம் பண்ணி நிறையக் கோயிலுக்குக் காணிக்கை எல்லாம் செலுத்திட்டுதான் அப்பாவுக்கு அம்மாவுக்கும் கல்யாணம் பண்ணினோம். ஆனா பாரு, ஒரு ஆறு வருஷம் தான் சந்தோஷமா இருந்தாங்க. ஒருத்தர் கூட மிஞ்சல பாரு. அதான் எங்க பயம்." என்று தாத்தா கூற,


"இத இப்படியும் பார்க்கலாம் தாத்தா… கெட்டவனோட கஷ்டப்பட்டு நூறு வருசம் வாழுறத விட, நல்லவனோட, மனசுக்குப் பிடிச்சவனோட சந்தோஷமா ஆறு வருசமாவது வாழ்ந்துடலாம்."


"ஏன்மா? நல்லவனோட  நூறுவருசம் வாழனும்னு நினைக்கலாமே?"


"நிச்சயமா?" என்று முடித்தாள்.


அடுத்து வந்த நாட்களில் தோழிகள் இருவருக்குமே, ஒவ்வொரு நாளும் விடியும்போதே, ‘விபாட்சுவைப் பார்க்க வேண்டும்’ என்ற ஆவல் அதிகரித்தது.


கல்லூரியில் பாடம் நடந்துகொண்டிருக்க, பாடத்தில் கொஞ்சம் கூடக் கவனம் செலுத்த முடியவில்லை நேத்ராவால்.


இந்தமாதிரி இதுவரை தன்னுடைய படிப்பைக் கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு எந்த விசயத்தையும் நேத்ரா விட்டதில்லை.


'பாடத்த கவனி நேத்ரா! ப்ரேக் பீரியடில் விபாவ பார்த்துக்கலாம்' என்றும்,


'இப்ப நீ வெளிய போனா, விபா வெளியவா நிப்பான்?... க்ளாஸ்ல இருப்பான்? சோ, பாடத்த கவனி' என்று மூக்கனாங்கயிறை இழுத்து பசுவை வழிக்குக் கொண்டு வருவதைப் போல் எவ்வளவு முயற்சி செய்தாலும் இரண்டு நிமிடம் கூடத் தொடர்ந்து பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகவே,


'இது சரிப்பட்டு வராது. அவன பார்த்துட்டு வந்துடுவோம்… அடுத்த பீரியட் டாவது அடங்கி நிக்கும் மனசு' என்று எண்ணியவள், 


சுபத்ராவைத் திரும்பிப் பார்க்க, அவளோ, ஒரு பேப்பரில் கன்னாபின்னாவென்று வரைந்து கொண்டிருந்தாள்.


"ஹேய் லூசு! பாடத்தக் கவனிக்காம என்ன பண்ணிக்கிட்டிருக்க?"


"ம்ப்சு பாடத்த கவனிக்க முடியலப்பா" என்றதும், ஏன்? என்று ஒரு வார்த்தை நேத்ரா கேட்டிருந்தால் பல நிகழ்வுகளைத் தவிர்த்திருக்கலாம்.


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️















Post a Comment

0 Comments