உனது விழியில் எனது விலோசனம்…அத்தியாயம்🌟18
முப்பது வயது ஒத்த ஒரு ஆடவன் செவிலிப்பெண்ணிடம், தேவியின் ட்ரீட்மென்ட் பற்றி விசாரிக்க, அதை ஆத்மா கேட்டுக் கொண்டிருந்தது.
அதற்கு அந்த செவிலிப்பெண், "நீங்க சொல்ற மாதிரி என்னால எதுவுமே செய்ய முடியாது. அந்த தேவிக்குனு ஒரு நர்ஸ் இருப்பாங்க. அவங்களை மீறி தேவியோட அறைக்கு நான் போக முடியாது. அதோட அந்த இடங்களில் நிறைய சிசிடிவி கேமரா இருக்கும்."
"நீங்க இங்க வேலை பார்க்குற நர்ஸ் தானங்க? நீங்க நெனச்சா முடியாதா?" என்று அந்த ஆடவன் கெஞ்ச,
அவனை, 'நான் எவ்வளவு தன்மையா பேசுறேன்?… இவனுக்குப் புரியுதா? இல்லையா?' என்று பார்த்துவிட்டு,
"அது மட்டுமில்ல, எனக்குன்னு கொடுத்திருக்கிற டியூட்டிய விட்டுட்டு நான் வேற இடத்துல சும்மா சுத்தக்கூட முடியாது. அப்படியே இருந்தாலும் இந்த மாதிரி வேலை எல்லாம் என்னால பண்ண முடியாது."
"இதுல உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதுங்க…"
"நான் நிம்மதியா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். நிம்மதிய நீங்க கெடுக்காதீங்க. நீங்க வந்து என் கணவரோட நண்பர்ங்கிறதுக்காக உங்க ட்ரீட்மென்ட்க்காக உங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம். ஆனால் நீங்க சொல்ற மாதிரியான உதவி… எனக்கு ஏதோ வில்லங்கமா தெரியுது."
"ஏங்க? வில்லங்கமான வேலைய ஃபிரண்ட் டோட ஃவொய்ஃப் டயா செய்யச் சொல்லுவேன்?"
"அப்படினா நீங்க நேரடியாவே அந்தப் பேஷண்ட்ட போய் விசாரிக்கலாம்ல? இல்லாட்டி, எங்க டாக்டர்கிட்ட விசாரிக்கலாம். அதை விட்டுட்டு அவங்களுக்கு என்ன மருந்து கொடுக்கிறாங்கன்னெல்லாம் நான் பாத்துட்டு வர முடியாது. பார்த்துட்டு வரவும் கூடாது. அந்த மாதிரியான வேலை நான் செய்யவும் மாட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க." என்று கராராகக் கூறி விட்டு நகர முற்பட,
"தேவிக்கு ரொம்ப நாளா கண்ணு தெரியாம இருந்து, இப்ப ஆபரேஷன் பண்ணினதால கண்ணு தெரிஞ்சுரும்ன்னு கேள்விப்பட்டேன். அதப்பத்தியாவது சொல்லுவீங்களா?" என்று அவன் கேட்க,
"அவங்களுக்கு ஆபரேஷன் பண்ணுன டாக்டர், 'கட்டாயம் கண்ணு தெரிஞ்சிரும்! நைன்ட்டி ப்ரசெண்ட் கண்ணு தெரிஞ்சிரும்'ன்னு சொன்னாரு."
'தேவிக்கு மட்டும் ஏன் தனி கவனிப்பு? மருந்து மாத்திரை கூட டாக்டர்ஸ் கண்ணெதிரே தான் நடக்குதாமே?" என்ற அவனை,
'இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது?' என்பதுபோல் பார்த்துவிட்டு,
"எனக்கு அதப் பத்தி எல்லாம் தெரியாது சார். நீங்க இந்த மாதிரி என்கிட்ட கேக்குறத விட ஆறாம் நம்பர் அறைக்கு ட்யூட்டி பார்க்குற சிஸ்டர் கிட்ட போய் விசாரிங்க. அவங்களுக்குத்தான் இதெல்லாம் தெரியும்" என்று கூற,
"நீங்க விசாரிச்சு சொல்லக்கூடாதா எனக்கு?"
"அதை ஏன் நான் செய்யணும்கிறதுதான் என் கேள்வி? இது ஒன்னும் தப்பு இல்லன்னா நீங்களே போய்க் கேட்டுடலாமே?"
"நான் அவங்களுக்கு ஃபிரண்டும் இல்ல, ரிலேட்டிவ்வும்
இல்ல. அப்படி இருக்கும்போது நான் விசாரிச்சா ஒரு மாதிரி வியர்டா இருக்குமேன்னு யோசிச்சேன்."
"அதே தானே எனக்கும்? நீங்கள் தேவிக்கு ஃபிரண்டும் இல்ல… ரிலேடிவ் இல்லைங்கும்போது எதுக்காக அவளைப் பத்தின விஷயங்களை நீங்கள் விசாரிக்கிறீங்க?ன்னுதான் எனக்கும் தோணும்."
"நான் தான் சொன்னேனே? நான் கண் டாக்டர் க்குப் படிச்சிட்டு சின்ன லெவல்ல பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன். இந்த ஆஸ்பத்திரில குறிப்பிட்ட ஒரு பொண்ணுக்கு, கண்ணே தெரியாதுன்னு எல்லாரும் கைவிட்ட ஒரு பொண்ணுக்கு ஒரு ஆபரேஷன் நடந்திருக்கு. கண்ணு தெரியறதுக்கு நைன்ட்டி ப்ரசெண்ட் வாய்ப்பு இருக்குன்னு கேள்விப்பட்டுத்தான், அப்படி என்ன ஆபரேஷன் நடந்தது?ன்னு கேட்டா அதுக்கும் எங்களுக்கு ஆன்சர் கிடைக்கல. என்ன மாத்திரை, மருந்து கொடுக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு, கொஞ்சம் விசாரிச்சபோது, அவளுக்குன்னு மாத்திரை மருந்துகூட டாக்டர்தான் தராங்கன்னு பதில் வந்துச்சு. இந்த அளவுக்கு சீக்ரெட்டா ட்ரீட்மென்ட் பண்ற அளவுக்கு அந்த தேவியைப் பார்த்தா ஒரு பெரிய இடத்து பொண்ணு மாதிரியும் தெரியல. ஒரு க்யூரியாசிட்டினு கூட வச்சுக்கங்களேன்." என்று வந்தவன் சிரிக்க,
"உங்களோட தொழிலுக்காக, உங்களுடைய கியூரியாஸிட்டிக்காக நான் ஏன் உதவனும்? நீங்களே சொல்றீங்க சீக்ரட்டா வச்சிருக்காங்கன்னு. அப்படியொரு சீக்ரட்டான ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுகிட்டு வந்து உங்கள்ட்ட சொல்றது தப்பு இல்லையா?" என்று கேட்டாள்.
"ஏங்க அதைத் தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்க? உங்க ஆஸ்பத்திரிக்கு எதிர்ல ஒரு ஆஸ்பத்திரி போட்டு உங்க ஆஸ்பத்திரி விடப் பெருசா கொண்டு வந்துட முடியும்னு நீங்க நம்புறீங்களா?"
"நீங்க தாராளமா எங்க ஆஸ்பத்திரிக்கு எதிர்ல ஒரு ஆஸ்பத்திரி ஓபன் பண்ணி, நல்லா பெருசா கூட வாங்க. அதுல எனக்கு என்ன பிரச்சனை?"
"பின்ன என்னங்க? இத நீங்க தெரிஞ்சுட்டு வந்து சொல்றதுல நான் என்ன செஞ்சற முடியும்னு நீங்க நினைக்கிறீங்க?"
"அதுதான் எனக்குக் கிளியரா சொல்லத் தெரியல. ஆனா நீங்க ஒரு ஐ ஸ்பெஷலிஸ்ட். நீங்க ஒரு பேசன்ட்க்கு ரொம்ப சீக்ரெட்டா ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அத உங்க ஹாஸ்பிடல் இருக்கிற ஒரு நர்ஸ் வெளியில சொன்னா, அது தப்பா? தப்பில்லையா?" என்று கேட்டதும்,
'இவளிடமிருந்து நமக்குத் தேவையான தகவல் வராது என்பதைப் புரிந்து கொண்டவன்,
"சரிங்க வர்றேங்க. ரொம்ப நல்ல நர்ஸ்ங்க நீங்க. உங்கள மாதிரி நர்ஸ் எங்க ஆஸ்பத்திரிக்குக் கிடைச்சா ரொம்ப சந்தோசம்." என்று கூறிவிட்டு வெளியேறினான்.
செவிலிப்பெண், 'இவன் நல்லவனா கெட்டவனானு தெரியல? எதுவா இருந்தாலும் இவன் கேட்கிற உதவி நான் செய்யறது தப்பு." என்று கூறி சிரித்துவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
வெளியே சென்று கொண்டிருந்த அவனை ஆத்மா தொடர்ந்து சென்றது. 'இவன்தான் கூகைட்ட பேசுற அந்த ஆண் குரலுக்குச் சொந்தக்காரனான்னு எப்படித் தெரிஞ்சுக்கிறது?' என்று அவன் பின்னாடியே சென்றது ஆத்மா.
ஆஸ்பத்திரியிலிருந்து வெளிவந்தவன் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு மெயின் ரோட்டில் ஒட்டி, கேகே நகர் சாலை வந்ததும் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ஃபோனை எடுத்தான்.
ஏதோ ஒரு நம்பர் அடித்துவிட்டு வெகுநேரம் காத்திருந்து
"ப்ச்சு" என்று கூறி விட்டு மீண்டும் போன் அடித்தான்.
அப்பொழுதும் எதிர்ப்புறம் எடுக்காமல் போகவே, "ஃபோனை எடுக்கறத விட்டுட்டு என்ன பெரிய வேலை?" என்று கூறிவிட்டு வண்டியை உயிர்பித்து கேகே நகர் பிரதான சாலையில் ஓட்டினான்
ஒரு வீட்டுக்குள் நுழைந்து காரை பார்க் செய்துவிட்டு, வீட்டிற்குள் நுழைய,
அங்கிருந்த ஒரு முதிய தம்பதியர்கள், "என்னப்பா அதுக்குள்ள வந்துட்ட?" என்று கேட்டார்கள்.
"கொஞ்சம் தலைவலிப்பா! அதான் வந்துட்டேன்!" என்று கூறி தனது அறைக்குச் சென்று கதவைத் தாழ் போட்டுக்கொண்டான்.
ஆத்மா அவனுடைய வீடு முழுவதும் பார்வையால் அலசிப் பார்த்தது.
அங்கே எங்காவது தேவியின் புகைப்படமோ, தேவியின் அம்மாவின் புகைப்படமோ வேறு யாருடைய புகைப்படமாவது இருக்கிறதா? என்று தேடிப் பார்த்தது.
அறை முழுதும் தேடியும் தேவி சம்பந்தப்பட்ட யாருடைய புகைப்படம் அல்லது எந்த ஒரு பொருளும் அவன் வீட்டில் இல்லை. அவன் அறையில் கூட இல்லை.
'இவன் நிஜமாகவே கூகையுடன் பேசிய ஆண்தானா? இல்ல, நிஜமாகவே கண் ஆஸ்பத்திரி திறப்பதற்கான ஐடியாக்காக வந்தவனா?' என்று சிறிது நேரம் அவனைப் பார்த்திருந்த ஆத்மா,
'இவனோட கொஞ்சம் விளையாண்டால் என்ன?' என்று தோன்ற,
அவன் போர்த்தியிருந்த போர்வையை இழுத்து விட்டது.
"அம்மா என்னைக் கொஞ்ச நேரம் தூங்க விடுங்கம்மா. பகல் நேரத்துல ஏன் போர்த்தியிருக்கேன்னு கேட்பீங்க. அப்பதான் எனக்குத் தூக்கம் வரும். எனக்குக் கொஞ்சம் தலைவலி போகட்டும்." என்று கண்ணை மூடிக்கொண்டு கூற,
அவனுடைய அம்மாவின் குரலில், "அந்தப் பொண்ணப் போய்ப் பார்த்தியா? ஏதாவது விவரம் கிடைச்சதா? என்று ஆத்மா கேட்டதும்,
தூக்கிவாரிப் போட்டு எழுந்தவன், "எந்தப் பொண்ணு? என்ன விவரம்? என்ன சொல்றீங்க?" என்று பதறினான்.
அவன் முகத்தில் இருந்த பதற்றமே அவன் தாயாருக்கு இவன் தேவி என்ற பெண்ணைத் தேடிச் சென்ற விவரம் தெரியவில்லை என்று புரிந்தது.
'ஏன் இவன் இவ்வளவு பதறுகிறான்?'
அதற்குள் அந்த ஆடவன், 'அம்மா குரல் கேட்டுச்சே? அம்மா பேசின மாதிரி தானே இருந்துச்சு? அம்மாவ காணோம்?!' என்று நினைத்தபடி அறையின் கதவைப் பார்க்க,
அது சாத்தியபடியே இருந்தது.
மீண்டும் அவன் படுத்ததும் அவன் கட்டிலுக்கு அருகில் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த பேப்பர்கள் புத்தகங்களைத் தள்ளி விட்டது ஆத்மா.
விழுந்த புக்குகளில் ஏதேனும் போட்டோ அல்லது ஏதாவது லெட்டர் இந்த மாதிரி இருக்கிறதா? என்றும் பார்த்தது.
மீண்டும் எழுந்து பார்த்த அந்த ஆடவன்
'ஏசி ரூம் ஜன்னல் எல்லாம் சாத்தியிருக்கு. எப்படி இந்த புக்கு விழுந்திருக்கும்? என்று பார்த்தான்.
*இந்த அம்மா அடுக்குறேன்னு சொல்லிக் கோணல் மாணலாயெல்லாம் அடுக்கி இருப்பாங்க." என்று எழுந்து செல்லப் போனவன் மீண்டும் போர்த்திக் கொண்டு படுத்தான்.
"யார்டா நீ? நானே நீ யாரு என்னன்னு தெரியாம குழப்பிப் போயிருக்கேன் நீ என்ன நிம்மதியா தூங்குறது?' என்று மீண்டும் அவன் போர்வையை ஆத்மா இழுத்து விட,
அவன், தூங்காமல் விழித்திருந்ததால்
சட்டென்று எழுந்து அமர்ந்தான். தன் அறையைச் சுற்றிலும் பார்வையை செலுத்தினான்
பிறகு தனது மொபைல் போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.
எதிர்ப்புறம் எடுக்காமல் போகவே கண்டபடி வாய்க்கு வந்த வார்த்தைகளால் திட்டிவிட்டு, மீண்டும் ஃபோன் டயல் செய்தான்.
எதிர்ப்புறம் எடுத்துவிட,
"ஹலோ! நான் தான்டா. இல்ல, வேலைக்குப் போகல. போன காரியம் ஒர்க்அவுட்டாகல. அதான் வீட்டுக்கு வந்துட்டேன்."
எதிர்புறம் இருந்து பேசுபவன், "எந்த வேலை? அந்தக் கண்ணு தெரியாத பொண்ண பின்தொடர்ந்துட்டு இருக்கியே அந்த வேலையா?" என்று கேட்டான்.
"வேற என்ன? அதேதான்."
"இது உனக்குத் தேவையா டா? உன் ஸ்டேட்டஸ் என்ன? ஏன் இப்படிப் பண்ற?" என்ற எதிர் முனையில் பேசுவன் கேட்க,
"எல்லாம் காதல் படுத்துற பாடு மச்சி" என்று சிரித்தான்.
பிறகு போனில் அவன் ஏதேதோ நமக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க,
ஆத்மா அவனைப் பார்த்த வாறே,
'ஒரு வேளை தேவியை விரும்புபவன் அல்லது தேவிடைய காதலனாக இருப்பானோ? காதலனாவோ, ஒருதலையா காதல் பண்றவனாவோ இருந்தா தேவியோட போட்டோ இல்லாம இருக்காதே?' என்றும் தோன்ற,
'இவன் யார்? என்னோட தேவிக்குத் தெரிஞ்சவனா அல்லது வேறு எந்த தேவியையும் பார்க்க வந்தவனா?' என்று நினைத்தபடி அப்படியே அமர்ந்து இருந்தது.
அப்பொழுது ஆத்மாவின் மனசாட்சி
"என்ன இது? எல்லாக் கதைலயும் ஆத்மாவைத்தான் யாரு? என்ன நடந்ததுன்னு மனிதர்கள்தான் தேடுவாங்க! இங்கே நீ தேடுகிறாயே? என்று இடிக்க,
"என்ன பண்றது? இப்பலாம் உசுரோட இருக்கிறவங்கல விட ஆத்மாக்கள் எவ்வளவோ பெட்டராத்தானே இருக்கு? மிருகங்களும் ஆத்மாக்களும் தன்னைக் கஷ்டப்படுத்துறவங்களத்தான் தொந்தரவு பண்ணும்… அப்பாவிகள தொந்தரவு பண்றது இல்ல… நல்லது பண்றது யாரா இருந்தா என்ன?"
❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️
மேனகாவை சமாளித்த விபாட்சு நண்பர்களுடன் சென்று விட,
நேத்ராவும் சுபத்ராவும் அவன் தங்களைக் காப்பாற்றியதில் மகிழ்ந்து, அவன் சமாளித்த விதத்தில் ஆச்சரியமாகி, கண்கள் முழுவதும் காதலாகிப் பார்க்க,
விபா அருகே வந்ததிலிருந்தே நேத்ராவும், சுபத்ராவும் அவனை விருப்பமுடன் பார்த்ததைக் கவனித்தார் மேனகா.
'இனி அவ்வளவுதான் அம்மாவோடு வீட்டிற்குச் செல்லவேண்டியதுதான்' என்று நொந்துபோன தோழிகளிடம்,
மேனகா தானாகவே, "நீங்க ரெண்டு பேரும் ஷாப்பிங் முடிச்சுட்டு சீக்கிரமா வந்துடுங்க" என்று கூறி தோழிகளை மால் லில் விட்டுச் சென்றதும், தோழிகள் குஷியில் துள்ளிக்குதித்தனர்.
இருவரது கண்களும் மீண்டும் நண்பர்களைத்தேடியது.
'அம்மாவப் பார்த்ததும் இங்கிருந்து கிளம்பியிருப்பார்.' என்று கவலைப்பட்ட தோழிகள்,
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
கொஞ்சம் கூட உயிர்ப்பு இல்லாத சிரிப்பை சிந்தினார்கள்,
"என்னப்பா பண்ணலாம்?" என்று நேத்ரா கேட்க,
நீயே சொல்லு! என் மூடே அவுட்" என்று சோர்வுடன் அருகில் இருந்த நாற்காலியில் சுபத்ரா அமர,
'விபாட்சுவை சந்திக்கலாம்னு ஆவலா வந்த இடத்துல, அம்மா வந்து முழு ப்ளானையும் கெடுத்துட்டதால நொந்து போன என்னைப் பார்த்துதான் சுபாவும் டல்லா ஆயிட்டாளோ?' என்று எண்ணியவாறு சுபத்ராவின் முகத்தைப் பார்த்த நேத்ராவிற்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது.
'என்னோடு சேர்ந்து லீவை என்ஜாய் பண்ண வந்தாள்… என் கஷ்டத்துக்கு இவள நோகடிக்க வேண்டாம்.' என்று நினைத்த நேத்ரா,
"ஃபுட் கோர்ட் நாலாவது மாடில இருக்குல. அங்கபோய்ச் சாப்பிடுவோம்… சோர்வு போயிடும் மறுபடியும் ஜாலியா ஊர் சுத்தலாம்" என்று ஆர்வமாக சுபத்ராவைப் பார்க்க,
நேத்ராவின் முகத்திலிருந்த சங்கடம், சுபத்ராவைப் பாதிக்கவே,
'ச்சே! என்ன பொண்ணு நான்? பிறந்ததிலிருந்து என்கூடவே இருக்கிறவ நேத்ரா… இவ சந்தோசத்தை, என் பிரச்சனையால கெடுக்கனுமா?' என்று வம்பாக வரவழைத்த சிரிப்போடு,
"வாவா… நமக்குச் சோறு முக்கியம் பிகிலு" என்று கூறி நேத்ராவையும் இழுத்துக்கொண்டு எக்ஸ்கலேட்டரில் ஏறினாள்.
ஃபுட் கோர்ட்டில் வழக்கம்போல என்னென்ன ஸ்டால்கள் இருக்கிறதென்று சுத்தி பார்த்துவிட்டு,
ஒரு இடத்தில் அமர்ந்தவர்கள், என்ன வாங்கலாம்? என்று லிஸ்ட் போடும்போது யாரோ,
"ப்பே!" என்று அவர்களுக்குப் பின்னே இருந்து பயமுறுத்த,
அசால்ட்டாகத் திரும்பிப் பார்த்த சுபத்ராவின் கண்கள் மின்னியது…
சுபத்ராவின் கண்களே அவளது மனதில் இருந்த அவனுக்கான தேடலை வெளிச்சம் போட்டுக் காட்ட,
விபாட்சு விண்ணில் பறந்தான்.
விபாட்சுவின் குரலை வைத்தே அடையாளம் கண்டு கொண்ட நேத்ரா நிமிர்ந்து கூடப் பார்க்காமல் மனதிற்குள் மகிழ்ந்தபடி,
"வாங்க! கரெக்டா சாப்பிடுற நேரத்துக்கு வந்தாலே நீங்கதான்னு எனக்குத் தெரியாதா? உட்காருங்க சேர்ந்து கொட்டிக்கலாம்" என்று கிண்டலாக பாபி கிருஷ்ணாவையும், கைலாஷையும் பார்க்க,
அவளையே பார்த்துக் கொண்டிருந்த பாபி கிருஷ்ணாவும் கைலாஷாசும், குஷியாகி,
"இன்னைக்கு எங்க ட்ரீட்டு. ஓகே?" என்று மிகவும் சந்தோசமாகக் கேட்க,
"இத நாங்க எதிர்பார்க்கல… ஆனா சூப்பர்! ஃபுட் கோர்ட்டையே மடிச்சு சாப்பிட்டுட வேண்டியதுதான்." என்ற சுபத்ரா,
"சாரி! திடீர்னு அம்மாவ பார்த்ததும் உங்கள மாட்டிவிட்டுட்டேன்… ஆனா தேங்க்ஸ் சூப்பரா சமாளிச்சதுக்கு" என்று பொதுவாகக் கூற,
அந்தச் சூழ்நிலையை சமாளிக்க,
"நாங்க போயிருப்போம்னு தான நினைச்சீங்க?" என்று கைலாஷ் பேச்சை மாற்ற,
"ஆமா… எப்படிக் கண்டுபிடிச்சீங்க?" என்ற நேத்ராவிடம்,
"இதென்ன பிரமாதம்? நேரா ஃபுட் கோர்ட் வந்துட்டீங்களே?" என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்த விபாட்சுவை கூர்ந்து பார்த்தபடி
"யூ மீன்?" என்று கேட்டாள் சுபத்ரா.
"பெண்களுக்கு எந்த இடத்துக்குப் போனாலும் ஆரம்பமும் முடிவும் சாப்பாடுதானே? சோ சிம்பிள்…" என்று தோளைக் குலுக்க,
விபாட்சுவின் கண்களிலிருந்த காதலும், முகத்திலிருந்த ஆர்வமும் குரலிலிருந்த துள்ளலும் தோழிகளை மந்திரிச்சுவிட்ட கோழிபோல் ஆக்க,
"ம்ம்ம் பிரமாதம் பாஸ்…" என்று புருவங்களையும் தோள்களையும் ஒரே நேரத்தில் ஏற்றி இறக்கி தோழிகளுமே ஒரே குரலில் கூறினர்.
'ஒரே அச்சாகப் பிறக்கவில்லையே தவிர நடவடிக்கைகள் எல்லாமே ஒரே மாதிரிதான்' என்று இருவரையுமே அன்பு பொங்க விபாட்சு பார்க்க,
இரு பெண்களுக்குமே வயிற்றுக்குள் உருவான இன்பம், மெல்ல மேலேறி, நெஞ்சாச்கூட்டை தகர்க்க,
தோழிகளின் அன்பு சாம்ராஜ்யத்தின் எழில்மிகு அரண்மனையில் காதல் என்னும் நவரத்தின சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்தான்ஈ விபாட்சு.
மேனகா…
மனசு சரியில்லாததாலும், குழப்பமாக இருந்ததாலும் தனிமை தேவைப்பட்டதால், இரு பெண்களையும் மால்லில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தார் மேனகா.
'நேத்ராவும், சுபத்ராவும் அந்தப் பையனை விரும்புறாங்களா? அடக்கடவுளே! இது இவளுக ரெண்டு பேருக்கும் தெரியும்போது என்ன ஆகும்?' என்று நினைத்தவருக்கு,
'விபரீதம் ஏதோ நடந்துவிடுமோ? எனக்கு நேத்ராவும் மகள்தான்… தாய் தந்தை இல்லாம தாத்தா, அப்பத்தா பராமரிப்பில் வளர்பவள்.' என்று நினைத்தவர்,
நேத்ரா, சுபத்ராவிடமிருந்து விடைபெற்ற மேனகா ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்ததும், பூஜையறையில் விளக்கேற்றி,
"என்னோட ரெண்டு பொண்ணையுமே காப்பாத்துங்க." என்று கண்ணீர் மல்க வேண்டினார்.
அதீத கவலையுடன் முற்றத்தில் அமர்ந்தவருக்கு, ஒன்பது வருடங்களுக்கு முன், நேத்ரா சுபத்ராவிற்குப் பத்துவயது ஆகும்போது நடந்தவைகள் ஞாபகத்திற்கு வந்து கலங்கடித்தது.,
பரமக்குடியில் நேத்ராவின் அப்பா வேலைபார்த்த கம்பனியின் முதலாளி இறந்ததும், அடுத்து கம்பனியை எடுத்துப் பார்க்க ஆள் இல்லாமல் மூடினர்.
இதனால் வேலை இழந்த நேத்ராவின் அப்பாவிற்கு, சிங்கப்பூரில் வாழ்ந்துகொண்டிருந்த தனது பெற்றோர்மூலம் சிங்கப்பூரிலேயே கணவனுக்கு நேத்ராவின் அம்மா வேலை வாங்கித்தர,
பணி நிமித்தமாக நேத்ராவின் தந்தை சிங்கப்பூர் செல்லவேண்டி இருந்தது.
ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கியதால், நேத்ராவை தனது தாய், தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு சிங்கப்பூருக்கு மனைவியுடன் சென்ற நேத்ராவின் அப்பா, விமான விபத்தில் கணவன் மனைவி இருவருமே உயிர் நீத்தனர்.
அன்றிலிருந்து நேத்ராவைத் தனது மகளாக எண்ணி அன்பு காட்டிவந்தார் மேனகா.
இந்நிலையில் தனது இரு பெண்களுமே ஒருவனை விரும்புவதை அறிந்து துடிதுடித்துப் போனார் மேனகா.
நேத்ரா எதையும் எளிதாகக் கடந்து விடுபவள்தான் ஆனால் ஏற்கனவே தாய் தந்தையை இழந்து வாழும் பெண்ணுக்கு அவள் விரும்பும் காதலனாவது கிடைக்கவேண்டுமே… இல்லையென்றால் நேத்ரா பாவமில்லையா?"
சுபத்ரா, இவள் ஒன்றை நினைத்துவிட்டாள் கடைசிவரை போராடி அடையிறவளாச்சே… இவளுக்கு நேத்ராவின் காதல் தெரிந்தால் என்ன ஆகும்?' என்று கலங்கினார்.
அதே பதற்றத்துடன்
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!
விலோசனம் தொடர்ந்து வரும்…
❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️
0 Comments