வருவான்-35

 வருவான்-35


காலிங் பெல் சப்தம் கேட்டு, காபி போடுவதற்காகப் பற்ற வைத்த அடுப்பை அணைத்து விட்டு, கதவைத் திறந்த பத்மாவுக்கு அதிர்ச்சியில் கண்கள் இருட்ட… 


அங்கே...


பக்கத்து வீட்டு கர்ப்பிணிப் பெண்ணின் தந்தை.


'கடவுளே! டென்சனில் இவருடைய பெண் கர்ப்பிணி என்பதை மறந்து விட்டேனே! ஜோதிடரும், தெரிந்த பெண்ணின் பிரசவம் என்று தானே கூறினார்!... அப்போ நாடி ஜோதிடம் நடக்கப்போவதைத்தான் சொன்னதா?' என்று நினைத்த பத்மாவிற்கு, வைதேகியின் நினைவு வர, 


சட்டென்று 'வீட்டின் உள்ளே யாராவது எழுந்து விட்டார்களா?' என்று பார்த்தவள், 


வைதேகி மற்றும் செல்வம் இருவரும் படுக்கையை விட்டு எழும்பவில்லை என்பதை அறிந்து, வீட்டிற்கு வெளியே வந்து, வெளிப்புறமாகக் கதவைச் சாத்திவிட்டு, மெதுவாக கேட் அருகே சென்றாள். 


"வாங்கண்ணா! என்ன விடிகாலைல இங்கே? " என்று ஹஸ்கி வாய்சில் கேட்டாள்.


அதுவரை பத்மாவின் செயல்களைப் பார்த்து, 'இந்தப் பொண்ணுக்கு என்னாச்சு? என்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தவர், 


"ம்ம்? ஹாங்... அது... வந்து... என் பொண்ணுக்கு இடுப்புவலி எடுத்துடுச்சும்மா... உதவிக்கு வரேன்னு சொன்ன உறவுமுறை இன்னைக்கு இரவுதான் ஊர்ல இருந்து கிளம்புறாங்க. உனக்குத் தெரியாததில்ல... பிரசவ நேரத்துல, கூட ரெண்டு பொண்ணுங்க இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும்... எங்களோட நீயும், வைதேகியும் ஆஸ்பத்திரிக்குத் துணைக்கு வர முடியுமாம்மா?" என்று கேட்டவரின் முகத்தில் தெரிந்த பயம், பத்மாவை மறுக்க முடியாமல் செய்ய, 


"வீட்ல யாரும் எந்திரிக்கல... நீங்க முன்னாடி ஆஸ்பத்திரிக்குப் போங்க! நான் கிளம்பிவரேன்." என்று கூறி அவரை அனுப்பி விட்டு, வீட்டின் உள்ளே வந்தவள், செல்வத்தை மட்டும் எழுப்பி விபரம் சொன்னாள். இதைக்கேட்டதும் செல்வத்திற்கு வியர்த்தது... 


"நாடி ஜோதிடம் பார்க்க வைதேகியை கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாது பத்மா. நீ மட்டும் ஆஸ்பத்திரிக்குப் போயி அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கும் துணையா இரு. ரகுவையும் அவனோட அம்மா, அப்பாகிட்ட சேர்த்துடு." 


"வைதேகி, என்னைக் காணாமல், எங்கே? ன்னு கேட்டா" 


"தூரத்துச் சொந்தக்காரங்க வீட்ல விஷேசதுக்கு நீ போயிருக்கிறதா சொல்லிடுறேன். நீ கிளம்பு. நான் பார்த்துக்கிறேன்." என்று செல்வம் கூறியதும், 


பத்மா இரு நாளுக்குத் தேவையான சேலை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டிற்குச் சென்றாள். 


நல்லவேளையாக அவர்களும் அப்பொழுதுதான் டாக்ஸியில் ஏறிக்கொண்டிருந்தனர். பத்மா வந்ததும் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.


காலையில் விழிப்பு வந்து, வைதேகி கண்களைத் திறக்கும் சமயம், நல்ல காபி மணம் வரவே, கண்களைத் திறக்காமலே,


"என்ன பத்மாத்தை காபி மணம் ஆளைத்தூக்குது. செம சந்தோஷத்துல இருக்கியா?" என்று கேட்டபடி தன் கண்களைத் திறந்து பார்த்த வைதேகி, எதிரில் செல்வம் நிற்கவே, சட்டென்று வாரிச்சுருட்டி எழுந்தவள்,


"அப்பா நீங்களா? பத்மாத்தை எங்கே? என்னை எழுப்ப முயற்சி செஞ்சு ஓய்ந்து போய், உங்ககிட்ட காபியை குடுத்து விட்டுட்டுச்சா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் வைதேகி.


தன் பெண்ணின் முகத்தில் சிரிப்பைப் பார்த்ததும், 'நல்ல வேளை நாடி ஜோதிடர் சொன்னதைப் பெரிதாக நம்பவில்லை வைதேகி.' என்று நிம்மதியடைந்தார் செல்வம். 


அவரும் சிரித்துக் கொண்டே, "நம்ம ராசி, இப்பவும் சரியா வேலையைக் காட்டிடுச்சுமா வைதேகி. ஒருதடவை எங்காவது ஊருக்குப் போனா, தொடர்ந்து அடுத்தடுத்து ஏதாவது ஊருக்குப் போவொம்ல? அதே கதைதான் இப்பவும், என் பெரியம்மாவோட, மகளோட, சின்ன மாமியாரோட. ...."


"அப்பா! போதும்! காலங்காத்தால, உங்க ராமாயணத்தை ஆரம்பிச்சுடாதீங்க...மண்டை காயுது... இந்த உறவுமுறை யெல்லாம் சொல்லாம விஷயத்தை மட்டும் சொல்லுங்க..." என்றாள் வைதேகி.


"சரிமா! நம்ம தூரத்து உறவுல காதுகுத்து வச்சிருக்காங்க. எனக்கு உடம்பு சரியில்ல... மறுபடியும் பிரயாணம் பண்ண முடியாது. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கன்னு பத்மாகிட்ட சொன்னேன். உடம்பு சரியில்லாத நேரத்துல என்னை மட்டும் தனியா விட முடியாதுன்னு, உன்னை எனக்குத் துணையா விட்டுட்டு, பத்மா மட்டும் மொத பஸ்சுக்கு போயிட்டா..." என்று செல்வம் கூறியதும், 


வைதேகி, "உங்க உடம்புக்கு என்னப்பா?" என்று கவலையுடன் கேட்க,


செல்வம், "ஒரு வாரமா ஒரே அலைச்சல்ல ம்மா... அதான் உடம்பு அசதியா இருக்கு. வேறொன்னுமில்ல ம்மா..." என்றார்.


"சரிங்கப்பா! நான் போயி குளிச்சுட்டு வந்து, பலகாரம் பண்றேன். முடிஞ்சா காய்கறி வாங்கிட்டு வந்துடுங்க ப்பா," என்று கூறி விட்டு, காபியை குடித்துவிட்டு, குளியலறை நோக்கிச் சென்றாள்.


செல்வம் சொன்ன பொய்யை வைதேகி முழுவதும் நம்பிவிட்டதில் நிம்மதி அடைந்த செல்வம், கூடையை எடுத்துக் கொண்டு, மார்க்கெட்டுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.


மதிய உணவு சாப்பிட்டதும், 'ஒரு குட்டித் தூக்கம் போடலாம்' என்று நினைத்த வைதேகி, படுக்கை அறைக்குள் சென்று, ஒரு கதை புத்தகம் எடுத்துக் கொண்டு படுத்தாள். 


தூக்கமும் வரவில்லை. கதையும் மனதில் பதியவில்லை... 


வைதேகியின் மனம், நாடி ஜோதிடர் சொன்ன விபரங்களை மெல்ல அசைபோட்டது. 


' இதெல்லாம் உண்மையா? அல்லது நம் பலவீனத்தைப் பயன்படுத்திக் கதை விடுகிறார்களா?... ரகு பற்றி எதுவும் சொல்லாமல், என் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் கூறியிருந்தால், என்ன பலன் சொல்லியிருப்பார்கள்?... நிச்சயம் என் கல்யாணம் சம்மந்தமா ஏதாவது சொல்லியிருப்பார்கள். அப்பத் தெரிஞ்சிருக்கும், இதெல்லாம் உண்மையா? புருடா வா ன்னு!... ச்சே! யோசிக்காம செஞ்சுட்டோம். எல்லாம் அந்தப் பாட்டி செய்த வேலை.' என்று நினைத்த வைதேகியின் மனம், 


அவளையே எதிர்கேள்வியும் கேட்டது. 'பாட்டி சொன்னா இதையெல்லாமா நம்புவாங்க? அப்பவே பத்மாத்தை சொல்லுச்சு. 'உன் கவனத்தை அந்தக் கர்ப்பிணிப் பெண் பக்கம் திருப்புன்னு' நான்தான் குழம்பிட்டேன்.' என்று தன்னையே கடிந்துகொண்டவளுக்கு, 


சட்டென்று பக்கத்து வீட்டுக் கர்ப்பிணிப் பெண்ணின் ஞாபகம் வந்தது. 


'அடடா! அவங்க எப்படி இருக்காங்கன்னு தெரியலயே?' என்று எண்ணிய வைதேகிக்கு, 


சுர்ர்ரென்று நடு மண்டையில் ஷாக் அடித்தது போல், 'பக்கத்து வீட்டுப் பெண் எனக்குத் தெரிந்த கர்ப்பிணி தானே? என்று தோன்ற, 


"ஒருவேளை ஜோதிடர் சொன்ன பெண் ஏன் அவங்களா இருக்கக் கூடாது?... சேச்சே! அவங்களுக்கு இந்நேரம் குழந்தை பிறந்திருக்கும்.' என்று தன்னையே சமாதானப் படுத்தியவள், 


'அந்தப் பாட்டி சொன்ன மாதிரி இந்த வாரக் கடைசி நாள் இன்னைக்குத் தானே? பத்மாத்தை இங்கே ஊர்லயே இல்லை.... நிச்சயம் பத்மாத்தை வருவதற்கு ரெண்டு நாளாவது ஆகும். பின்ன எப்படி ஜோதிடர் சொன்னதெல்லாம் நடக்கும்? உனக்கு வர வர ஜோதிடத்திலெல்லாம் நம்பிக்கை வந்துவிட்டது வைதேகி! இது சரியில்லை." என்று நினைத்துச் சிரித்தவளுக்கு விக்கல் எடுத்தது... 


எழுந்து தண்ணீர் குடித்தவள், எட்டி "ஹாலில் அப்பா என்ன செய்கிறார்?' என்று பார்த்தாள். செல்வம், தரையில் எதையோ விரித்து நன்கு உறங்கிக்கொண்டிருந்தார். 


சிறிது நேரத்திற்கு முன், 'வைதேகி உறங்கிவிட்டாளா?' என்று படுக்கை அறை வாசலில் நின்று பார்த்தார். 


அப்பொழுதான் வைதேகி கண் மூடி யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, 'அவள் அசந்து தூங்கிவிட்டாள்.' என்று மன நிம்மதியுடன் படுத்தவர்தான்.


 செல்வம் உறங்குவதைப் பார்த்த வைதேகி, மீண்டும் தன் படுக்கையில் அமர்ந்தாள். துளிகூட உறக்கம் வரவில்லை. 


எழுந்து வாசலுக்கு வந்தாள். மதியம் மூன்று மணியிருக்கும், தெருவில் ஜன நடமாட்டமே இல்லை. வாசல் அருகில் இருந்த மரத்தில் இரண்டு அணில்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததை வைதேகி லயித்துப் பார்த்தாள். 


"என்ன வைதேகி! அப்பாவுக்கு சமைச்சுபோட லீவ் எடுத்துட்டியா?" என்று நாலு வீடு தள்ளியிருக்கும் வீட்டக்கா கேட்டாள். 


"ஆமாங்க்கா!" என்று பதில் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கித்திரும்பிய வைதேகியிடம்,


"அதானே நின்னு பேசமாட்டியே? பத்மாதான் நிக்கிறான்னு நினைச்சு, சும்மா பேசிக்கிட்டிருக்கலாமேன்னு வந்தேன்." என்று அந்த அக்கா சொன்னதும், 


சின்ன சிரிப்பொன்றைப் பதிலாகத் தந்த வைதேகி, "அத்தை ஊருக்குப் போயிடுச்சு" என்றாள்.


"எப்ப? ஒரு மணிக்குத் தானே பத்மாவோட பேசிட்டு வந்தேன்."




"இன்னைக்கா? அத்தை விடிகாலைலயே ஊருக்குப் போயிருச்சே!" என்று சிரித்துக் கொண்டே கூறினாள் வைதேகி.


"என் கிட்ட விளையாடுற? ம்ம்?"


"நிஜமாத்தான்க்கா சொல்றேன். வீட்ல வந்து பாருங்க" என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள் வைதேகி.


"போடி போக்கிரி! பத்மா இன்னும் ஆஸ்பத்திரில இருந்து வரலையாக்கும்." என்றாள் அந்த அக்கா சிரித்தபடி.


"ஆஸ்பத்திரியா? என்னக்கா சொல்றீங்க? எந்த ஆஸ்பத்திரி? அத்தைக்கு என்ன ஆச்சு?" என்று வைதேகி நிஜமாகவே பதறவும், 


"பத்மாவுக்கு ஒன்னுமில்லை. அவ உங்கிட்ட சொல்லிட்டுப் போகலையா? உங்க அடுத்த வீட்டு அண்ணன் மக, மாசமா இருந்துச்சுல? அந்தப் பொண்ணுக்கு இடுப்புவலி எடுத்து ஆஸ்பத்திரில சேர்த்துருக்காங்க. நாங்க சமையல்லாம் முடிச்சுட்டு ஆஸ்பத்திரில போய்ப் பார்த்தோம்..." என்று மிகப்பெரிய பிரளயத்தை சர்வசாதாரணமாகக் கூறினாள் அந்த அக்கா.


"எந்த ஆஸ்பத்திரி அக்கா?" என்று கேட்டாள், தன் மனதில் உள்ள அதிர்வை வெளிக்காட்டாமல்,


"நம்ம அரசு மருத்துவமனையில்தான். ஏன் நீ போகப் போறியா? குழந்தைக்குக் கொடி சுத்தி இருக்காம். இடுப்பு வலி வேற நின்னுடுச்சு. குழந்தை நாளைக்குத் தான் பிறக்கும். நாளைக்கு நானும் வரேன். காலையில் சேர்ந்து போகலாம்." என்ற அந்த அக்காவிடம், 


"சரி க்கா! அப்பா எந்திரிச்சுட்டாங்க வரேன்." என்று கூறி விட்டு வீட்டிற்குள் வந்தவளுக்கு, வயிறு பிசைவது போலிருந்தது. 


தன் அப்பாவைப் பார்த்தாள். அவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார். 


'பத்மாத்தை, அப்பாவிடம் பொய் சொல்லிட்டுப் போயிருக்கா? அவரை எழுப்பிக் கேட்கலாமா?' என்று நினைத்தவள், அந்த எண்ணத்தைக் கைவிட்டு, படுக்கை அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தாள். 


ஜோதிடர் சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப எதிரொலித்தது.


"ரகுநந்தன் பிறந்துவிட்டான்."


"நீ அவனைப் பார்க்கக் கூடாது."


"சுதாவும் பிறந்துவிட்டாள்"


"உன்னால்தான் ரகுநந்தனின் ஆத்மாவிற்கு சாந்தி கிடைக்கும்."


"இரவு பதினோன்று நாற்பத்தைந்துக்குக் குழந்தைக்கு மூச்சு திணறும்." என்று ஜோதிடர் சொன்ன வார்த்தைகள். கேட்கும்போதே, 


"ரகு மீண்டும் பிறந்திருக்கிறார் என்று அறிந்தால், உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்!" என்று வயிற்றிலிருந்த சிசுவிடம், தான் கூறியது நினைவுக்கு வந்தது.


 'இப்போ அந்த ஜோதிடர் சொன்ன மாதிரி அந்தக் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படுமானால், ரகுநந்தன் பிறந்துவிட்டான் என்பது உறுதியாகிவிடும்... இதை எப்படிக் கண்டுபிடிப்பது? ஆஸ்பத்திரிக்குப் போனா அத்தை இருக்குமே?' என்று நினைக்கும் போதே,


"வைதேகியின் கடைசி நேரத்தில் நீ ரகுநந்தனோட மறுபிறவிக் குழந்தையுடன் இருப்பது அவசியம்." என்று ஜோதிடர் சொன்னது வைதேகிக்கு ஞாபகம் வர, 


மணியைப் பார்த்தாள். ஐந்து மணிதான் ஆகிக்கொண்டிருந்தது. "இரவு பதினோன்று நாற்பத்தைந்து க்கு குழந்தைக்கு மூச்சு திணறும்." என்று கூறினார். 


அந்த நேரத்தில் அத்தை, ரகுவின் மறுபிறவி முருகனுடன் இருக்கனும் னும் சொன்னார். அதனால பத்மாத்தை பதினொன்று நாற்பத்தைந்திற்கு முன்னாடியே முருகனைத்தேடிச் சென்று விடுவார். அந்த நேரம்தான், நான் ஆஸ்பத்திரிக்குள் போகனும். ஒருவேளை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூச்சு திணறவே இல்லையென்றால்?!! ரகு பிறந்துவிட்டாரா? என்று எப்படி தெரிந்து கொள்வேன்? கடவுளே! ஜோதிடர் சொன்னபடி நடக்குமா? இல்லையா?' எனக்கு உதவுங்கள்' என்று மனமுருகி வேண்டினாள். 


இரவு மணி எட்டு ஆனது. இரவு உணவு முடிந்து செல்வம் வழக்கம்போல சிறிது தூரம் நடந்துவரச் சென்றார். 


'அப்பா தூங்கியதும் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பனும். ' என்று திட்டமிட்டபடியே, வைதேகி அடுப்படியை சுத்தம் செய்து கொண்டு இருக்கும்போது, வீட்டு வாசலில் யாரோ சப்தமாக, 


"வீட்ல யாரு இருக்கீங்க? கொஞ்சம் வேகமா வெளிய வாங்க!" என்று கத்தினார்கள். 


கையைத் துடைத்தபடியே வெளியே வந்தவளிடம், 


"அம்மா! ரோட்டோரமா உங்கப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டார். முகத்தில் தண்ணி தெளிச்சும் மயக்கம் தெளியாததால, ரெண்டு பேரு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க. சீக்கிரமா போ ம்மா." என்று கூறவும், வேறு எதையும் யோசிக்காமல் இரு சக்கர வாகனத்தில் பறந்தாள். 


செல்வம் அதிர்ச்சியில் மயக்கமாகியிருந்ததாகவும், சின்னதாக சிகிச்சை செய்ததும் மயக்கம் தெளிந்து விட்டதாகவும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்னும் நர்ஸ் கூறினர். செல்வம் இருந்த அறைக்குச் சென்று பார்த்தாள்.


"அப்பா! என்னாச்சு ப்பா? " என்று வைதேகி கேட்டதும்,


"என்னன்னே தெரியல ம்மா நடக்கும்போது, யாரோ தள்ளிவிட்டுட்டாங்க. அதோட, என்னை எந்திரிங்க விடாம அமுக்கிக்கிட்டாங்க. கருப்பு உருவமாகதான்மா தெரிஞ்சது மனுசன் மாதிரி இல்லை!" என்று இன்னும் பயம் விலகாமல் பேசினார்.


அப்பொழுது அருகில் வந்த நர்ஸ், "இதையேதான் அப்பலயிருந்து சொல்றார். கீழே விழுந்தா கண் கொஞ்சம் கலங்கலா தானே தெரியும்? ஏதாவது இவர் மேல விழுந்திருக்கும் இவர் பயந்துட்டார்... ஹி... ஹி...ஹி…" என்று சிரித்தாள்.


'இது நல்ல சந்தர்ப்பம்! இன்று இரவு இங்கே தங்கினால், அந்தப் பொண்ணுக்கு குழந்தை எப்ப பிறக்கும்னு தெரிஞ்சுக்கலாம். என்று நினைத்த வைதேகி, நர்ஸிடம்,



"இன்னைக்கு இரவு அப்பா இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு போயிடுறோம்." என்று அனுமதி கேட்டாள்.


"என்ன? நீயும் பயந்துட்டியா? சரி சரி! இந்த பெட்லயே இருங்க." என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினார் நர்ஸ்.


சிறிது நேரம் அரற்றிக்கொண்டிருந்த செல்வம், மாத்திரையின் வீரியத்தில் அசந்து உறங்கினார். மணி ஒன்பதரை ஆனது.


மெல்ல வெளியே வந்த வைதேகி, அங்கிருந்த நர்ஸிடம், "பிரசவ வார்டு எங்கே இருக்கு?" என்று கேட்டு, 


அங்கு சென்று ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு வரும்போது,


 வெளி வராண்டாவில் பத்மா டென்சனாக வருவதைப் பார்த்து, மறைந்து நின்றுகொண்டாள் வைதேகி. 


பத்மா, வைதேகியைக் கடந்து சென்றதும், அந்த அறையை எட்டி பார்த்தாள். அந்தப் பொண்ணுக்கு வலி வந்துவிட்டது போல, சிறிது நேரம் கத்தியவள், பிறகு அமைதியாக இருந்தாள். 


வைதேகிக்குப் பின்னால் யாரோ வரும் சப்தம் கேட்டு, தலையை சேலையால் போர்த்திக் கொண்டு, முகத்தையும் மறைத்தவாறு நின்று கொண்டாள். 


டாக்டருடன் வந்த பத்மா, ஏதோ தோன்ற, வைதேகியைத் திரும்பிப் பார்த்தாள். பின் வேகமாக அறைக்குள் சென்றுவிட்டாள்.


செக்கப் முடிந்தபிறகு, கொடி குழந்தையின் கழுத்தை சுற்றியிருப்பதால், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விட முடிவெடுத்து, பிரசவம் பார்க்கும் அறைக்கு மாற்றினார்கள். பிரசவ அறையின் வாசலில், அனைவரும் காத்திருந்தனர். 


சிசேரியன் முடிந்து வெளியே வந்த நர்ஸ், "பெண் குழந்தை பிறந்திருக்கு. கொடி குழந்தையின் கழுத்தில் இறுக்கியதால் குழந்தைக்குக் கொஞ்சம் சீரியஸாக இருக்கு." என்று கூறிவிட்டு மீண்டும் பிரசவ அறைக்குள் சென்றாள். 


இதைக்கேட்ட பத்மாவும், மறைந்து நின்று கேட்ட வைதேகியும் அதிர்ந்தனர். 


உடனே பத்மா கர்ப்பிணிப் பெண்ணின் தாயிடம், "நான் அருகில் உள்ள கோயில்வரை போயிட்டு வர்றேன்." என்று கூறி விட்டு, அந்த இடத்தை விட்டு, சுற்றிலும் பார்வையை ஓட்டியபடி நடந்தாள். 


இதைப்பார்த்த வைதேகிக்கு, பத்மா, ரகுவின் மறுபிறவி முருகனைத் தேடிச்செல்கிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது. 


பத்மா கண்ணை விட்டு மறையும் வரை, பார்த்திருந்து விட்டு, கர்ப்பிணிப் பெண்ணின் பெற்றோர் அருகில் சென்று, எதார்த்தமாகப் பார்த்ததைப் போல, 


"என்னம்மா இங்கே நிற்கிறீங்க?" என்று கேட்டாள் வைதேகி.


"என் பெண்ணுக்குக் குழந்தை பிறந்து விட்டதும்மா. ஆனா குழந்தை சீரியஸாக இருக்காம். கடவுளை வேண்டிக்கிட்டு நிற்கிறோம். ஆமா நீ வருவேன்னு பத்மா சொல்லலையே?" என்று கேட்டார். 


வைதேகி தன் அப்பாவிற்கு நடந்ததைக் கூறினாள்.


சிறிது நேரத்தில் வெளியே வந்த நர்ஸ்,


"உள்ள வந்து குழந்தையைப் பாருங்க." என்று கூறி, விடு விடுவென்று உள்ளே ஓடினாள்.


மூவரும் அறையின் உள்ளே செல்ல, அந்த அறை மூன்று பிரிவுகளாக இருந்தது. அதில் ஒரு படுக்கையில் குழந்தையின் தாய் மயக்கமாகி இருந்தாள். 


குழந்தையை வேறொரு 'பெட்' டில் வைத்து சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. குழந்தையை அருகில் சென்று பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சியில் மூச்சடைத்தது. ஏனெனில் குழந்தை மூச்சு திணறிக்கொண்டிருந்தது. 


"குழந்தை பிறந்ததிலிருந்து அழக்கூட இல்லை. உயிர் மட்டும் இருக்குது. இப்ப மூச்சுவிடவும் கஷ்டப்படுகிறது." என்று வரண்ட குரலில் டாக்டர் கூறினார்.


வைதேகி மெல்ல அந்தக் குழந்தையின் கையைத் தொட, அது சட்டென்று வைதேகியின் விரலைப் பிடித்துக் கொண்டது. 


அந்தச் செயல், "எனக்காக உயிரைக் குடுப்பேன்னு சொன்னியே?" என்பது போல் இருக்க, 


வைதேகியின் உடல் ஒரு நிமிடம் தூக்கிப் போட்டது. நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தால் மணி பதினொன்று நாற்பத்தைந்து. 


வைதேகியின் கை சில்லிட, குழந்தையிடமிருந்த தன் விரலை உருவிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றாள். 


ஜோதிடரின் குரல் மீண்டும் எதிரொலித்தது, பயத்தில் காதைப் பொத்திக்கொண்டு வேகமாகத் தன் தந்தையின் அறைக்குள் சென்று கதவை மூடும்போது தூரத்தில் ரகுநந்தன் நிற்பது தெரிந்தது.


கதவை மூடாமல் கண்களைக் கசக்கிப் பார்த்தாள். ரகுநந்தன் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்த நொடியில், வைதேகிக்குத் தான் எடுத்த சபதம் ஞாபகத்துக்கு வந்தது. 


"சுதா! நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை ரகுவுடன் சேரவிடமாட்டேன்.... உன் கண் முன்னால் ரகுநந்தனைத் திருமணம் செய்து காட்டுகிறேன்..."


அவ்வளவுதான்! வைதேகியின் பயம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. 


அவள் கண்முன் சுதாவின் நயவஞ்சக முகமும், ரகுநந்தனின் முகமும் மாறி மாறித் தெரிய, அப்படியே பின்னோக்கி நடந்தவள், ஒரு டேபிளில் இடித்துக் கொண்டாள்.


அந்த டேபிளில் செல்வத்திற்குக் கொடுத்த தூக்க மாத்திரை டப்பா இருந்தது. அதை எடுத்து, அத்தனை மாத்திரையையும் கையில் கொட்டி, அருகில் இருந்த 'ஜக்' கில் இருந்த தண்ணீரை வாயில் ஊற்றி, மாத்திரைகளை இரண்டிரண்டாக விழுங்கி விட்டு, அருகில் இருந்த பேப்பரில்,


"அப்பா! அத்தை! மன்னித்து விடுங்கள்... நிச்சயம் என் ரகுவுடன் உங்களைப் பார்க்க வருவேன். வருகிறேன்." என்று எழுதி வைத்து விட்டு, தரையில் படுத்துத் தூங்க ஆரம்பித்தாள் வைதேகி. 





மணி பதினொன்று ஐம்பதுக்கு அந்தக் குழந்தை அசைவில்லாமல் கிடக்க, 


"குழந்தையைப் பார்க்கவேண்டியவர்களிடம் காட்டி விட்டு, கொண்டு செல்லுங்கள்." என்று கூறி விட்டு டாக்டர், வாஷ்பேசினில் கைகளைக் கழுவியவாறு, நர்ஸ்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறிவிட்டு, அறை வாசல் கதவைத் திறக்க, குழந்தை வீரிட்டு அழுதது. 


அதிர்ச்சியடைந்து டாக்டர் ஓடி வந்து பார்க்க, குழந்தை கையைக் காலை உதறி அழுதது... மீண்டும் பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்,


"உங்க பேத்தி பிழைச்சுக்கிட்டா. நல்லா ஆரோக்யமாவே இருக்கா." என்று கூறி சிரிக்க,


"தெய்வமே! உங்க பேர் என்ன டாக்டர்?" என்று தாத்தா கேட்க,


"எதுக்கு?"


"என் பேத்திக்கு உங்க பேர் வைக்கத்தான் டாக்டர்." என்றதும், 


"நான் என்ன செய்தேன்? எல்லாம் கடவுள் கருணை! அதனால் என் குல தெய்வத்தின் பெயரின் பாதியை ........ என்று வையுங்க." என்று கூறி சிரித்தார்.


டாக்டர், என்ன பெயர் வைத்தார்? 

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்… 

💍💍💍💍💍💍💍💍💍



Post a Comment

0 Comments