வருவான்-34

 வருவான்-34


"சுதா! நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை ரகுவுடன் சேரவிடமாட்டேன்.... உன் கண் முன்னால் ரகுநந்தனை திருமணம் செய்து காட்டுகிறேன்..." என்று அந்த ஊரே அதிரும் வகையில் கண்கள் சிவக்க, ஒவ்வொரு நரம்பும் துடிக்க, இரத்தம் கொதிக்க சபதமெடுத்தாள் வைதேகி.


     உணர்ச்சி வசப்பட்டுக் கூறிய பிறகுதான், அவள் சொன்ன விஷயத்தின் அர்த்தம் புரிந்தது வைதேகிக்கு. 


சுதாவும், ரகுவும் மறுஜென்மம் எடுத்திருப்பார்கள் என்பதே யூகம்தான். இவர்கள் இருவரும் எங்கே யாருக்குப் பிறந்திருக்கிறார்கள்? என்று எப்படித் தெரிந்து கொள்வது? இந்த லட்சணத்துல, சுதா கண் முன்னால் நான் எப்படி ரகுவைத் திருமணம் செய்து கொள்ள முடியும்?!! ரகுவிற்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து, நினைத்து என் மனம் வேதனைபடுவதால் இந்த மாதிரி யெல்லாம் தோன்றுகிறது.' என்று நினைத்தவள். தன் அறையை விட்டு வெளியே வந்தாள். 


ஹாலில் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பத்மா ஏதோ கஷாயம் கலந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். 


"என்னாச்சு வலி வந்துவிட்டதா?" என்று வைதேகி இருவரையும் பார்த்துப் பொதுவாகக் கேட்டாள். 


அதற்கு பத்மா,"அப்படித்தான் நினைக்கிறேன். அண்ணாவை அடுத்தத் தெருவில் இருக்குற, பிரசவம் பார்க்கும் பாட்டியைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கேன். அவங்க வந்து பார்த்தால், பிள்ளை எப்போ பிறக்கும்னு சரியா சொல்லிடுவாங்க. நீ இவ பக்கத்துல இரு. நான் ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போகத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கிறேன்." என்று கூறி வைதேகியிடம் கர்ப்பிணியை ஒப்படைத்து விட்டுத் தன் அறைக்குள் பத்மா சென்றாள். 


வைதேகிக்கு மனமெல்லாம், 'ரகுநந்தன் மறுபடியும் பிறந்திருக்கிறானா?ன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?' என்ற யோசனையிலேயே இருந்தது. 


அப்பாவும், பிரசவம் பார்க்கும் பாட்டியும் வந்ததும், 


மெல்ல பத்மாவிடம் சென்ற வைதேகி, 'ரகு மறுபிறவி எடுத்திருப்பானா?' என்ற  தன் சந்தேகத்தைக் கேட்டாள். 


ஒரு நிமிடம் பத்மாவின் கண்களிலும் 'ரகுநந்தன் மறுபடியும் பிறந்திருப்பானா?' என்ற ஏக்கம் தெரிந்தது. 


'இதெல்லாம் கற்பனை' என்று பத்மாவின் மூளை சொல்ல, 


தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வைதேகியைப் பார்த்தாள்.


 வைதேகியின் முகத்தில் தெரிந்த தவிப்பு பத்மாவிற்குப் பயத்தைக் கொடுத்தது. 


'ரகுவைத் தான் இழந்து விட்டோம். வைதேகியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.' என்ற எச்சரிக்கை மனதில் உருவெடுக்க,


"பத்திரிக்கையில் நிருபராக வேலை பார்த்தவள் போலயா பேசுற? எதையாவது போட்டுக் குழப்பிக்காம வெளிய வா! உன் மனசை, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பணிவிடை செய்றதுல திருப்பு." என்று சற்று கண்டிக்கும் தோரணையில் கூறினாள் பத்மா.


இருவரும் ஹாலுக்கு வர, அந்தப் பாட்டி, "சும்மா சூட்டு வலிதான்... குழந்தை இந்த வாரக் கடைசில பிறக்கும்." என்றார். 


பிறகு கர்பிணிப் பெண்ணைப் பார்த்து, 


"பிள்ளை எப்ப பிறக்கும்னு டாக்டர் சொன்னார்? ஆம்பளப் பிள்ளைங்கதான் குறிச்ச தேதிக்கு முன்னாடி பிறக்கும். இது பொண்ணு. குறிச்ச தேதியில, இல்லைனா... இரண்டு மூணுநாள் பின்னாடிதான் பிறக்கும்." என்று கூறினார்.


"எனக்குப் பொண்ணா பிறக்கப்போறா?" என்று கேட்டாள் கர்ப்பிணி.


"ஆமா! ஏன் டாக்டர் சொல்லலையா?" என்று பாட்டி கேட்டார்.


"இல்லை!"


"உங்க வீட்ல பொண் குழந்தை வேணாம்னு சொல்வாங்களா? " என்று பாட்டி கேட்டார்.


"சேச்சே! அப்படியெல்லாம் இல்லை!"


"உன் புருஷன் என்ன வேலை பார்க்கிறாரு?" என்று பாட்டி கேட்டார்.


"ஏன் பாட்டி? அவர் ஒரு ஆடிட்டர்கிட்ட வேலை பார்க்கிறார்." என்றாள். 


"சும்மாதான் கேட்டேன்." என்ற பாட்டி, அந்தப் பெண்ணின் வயிற்றைத் தொட்டு, 


"அம்மாடி! நீங்க இந்த வாரமே பொறந்துடுவீங்களா?" என்று கேட்டார்.


அடுத்த நிமிடம் குழந்தை வேகமாக முட்டவே, 


"உன் பொண்ணே சொல்லிட்டா இந்த வாரம் பிறந்துடுவாளாம்." என்றார் சிரித்துக் கொண்டு.


"அடேங்கப்பா! உள்ள இருக்கிற குழந்தை இதெல்லாம் சொல்லிடு மா? ஏன் பாட்டி இப்படி?" என்று சிரித்தாள் வைதேகி.


"என்ன தாயி அப்படிச் சொல்லிட்ட? மகாபாரதத்தில அபிமன்யு கதை கேட்டதில்லை?"


"நீங்களே சொல்லிட்டீங்க கதைன்னு. பின்ன எப்படி?


"அம்மாடி கதைன்னா என்ன நினைச்சே? முழுசும் பொய்யின்னா? உண்மையான கருபொருளை வைத்துதான் கதை சொல்வாங்க... அதலயும் இந்த மாதிரி விஷயங்களை ஆராயாமல் சொல்லமாட்டாங்க."


"சரி நம்பிட்டேன்."


"இல்லை! நீ நம்பல. ஒரு வேலை செய். இந்தப் பெண்ணின் வயிற்றில் கையை வைத்து, உனக்குத் தேவையான விஷயத்தக் கேளு. குழந்தை உதைச்சா, நடக்கும்... உதைக்கலைன்னா நீ நினைக்கிறது நடக்காது. அதுக்கப்புறம் நீ கேட்ட விஷயமும் நடந்த பின்னாடி சொல்லு குழந்தை பேசுமா?ன்னு."


வைதேகி, கை நடுங்க மெதுவாகக் கர்ப்பிணியின் மேடிட்ட வயிற்றைத் தொட்டு, 'ரகு பிறந்துட்டாரா?' என்று கேட்டதுதான் தாமதம்,  


குழந்தை வைதேகியின் கையிலேயே உதைத்தது. 


உடம்பெல்லாம் சிலிர்க்க கையை எடுத்தவள், 'இது மட்டும் உண்மை என்று தெரிந்தால் உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்.' என்றாள் மீண்டும் தன்னிச்சையாக.


சட்டென்று சுதாரித்த வைதேகி, 'இன்னைக்கு என்ன? என் மனசும் வார்த்தைகளும் என்வசம் இல்லாததுபோலிருக்கே?' என்று யோசித்தவளை,


"என்னம்மா? அப்படி என்ன அதிசயத்தைக் கேட்டுட்ட? குழந்தை உதைச்சதும் நீ அதிர்ச்சியாயிட்ட? என்ன நினைச்சேன்னு தெரியல. ஆனா நிச்சயம் நடக்கும்." என்று கூறி விட்டு, 


பிரசவம் பற்றிய விவரம் கூறியதற்குப் பணம் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.




வைதேகிக்கு இருப்பு கொள்ளவில்லை! 'ரகு பிறந்துவிட்டாரா? எங்கே? கடவுளே எப்படிக் கண்டுபிடிப்பேன்?' என்று தலையைப்பிடித்துக் கொண்டு ஷோபாவில் அமர்ந்தாள்.


வைதேகியின் தவிப்பைப் பார்த்த பத்மா,


"என்ன வைதேகி, ஏன் இப்படி உட்கார்திருக்கே? ஏதாவது பிரச்சினையா? எங்கிட்ட சொல்லக்கூடாதா? எனக்குத் தெரிந்தவரை யோசனை சொல்வேன்ல?" என்று பரிவுடன் கேட்டதும், 


வைதேகி விவரம் சொல்ல, பத்மாவிற்கு அதிர்ச்சியாகி விட்டது. 


"என்ன சொல்ற வைதேகி? ரகு பிறந்துட்டானா? கருவில் இருக்கும் குழந்தை உதைப்பதை வைத்துச் சொல்லமுடியலைனாலும். நீ ரகு பிறந்துட்டான்னு சொன்னதும் என் இடது கண் துடிக்குது. நிச்சயம் ரகு பிறந்திருப்பான்... ஆனா என்னால பார்க்க முடியுமா?" என்று கண்கலங்கி, பூஜை அலமாரியைத் திறந்து கடவுளிடம் வேண்டினாள் பத்மா. 


இவர்கள் இருவரும் தவிப்பதை பார்த்த செல்வம், "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை... இருந்தாலும் உங்கள் கஷ்டத்தைப் பார்க்க முடியாததால் எனக்குத் தெரிஞ்ச வழி சொல்றேன். ஆனா அது முழு உண்மையான்னு தெரியல." என்று முன் மண்டையைச் சொறிந்தபடி யோசனையுடன் கூறினார். 


   செல்வம் இவ்வாறு சொன்னதுதான் தாமதம் இரு பெண்களும் வேகமாக ஓடிவந்து அவர் காலடியில் அமர்ந்தனர். 


"சொல்லுங்க அண்ணா! ரகு எங்கே பிறந்திருக்கான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?" என்று கேட்டாள் பத்மா.


"நாடி ஜோதிடம் பார்க்கிறவங்க சொல்வாங்க... வைத்தீஸ்வரன் கோயில்னு ஒரு ஊர் இருக்கு. அந்த ஊர்லதான் பாரம்பரியமாக நாடி ஜோதிடம் பார்க்கிறவங்க இருக்காங்க. அவங்கள போய்ப் பார்ப்போம்." என்றார் செல்வம்.


அடுத்தநாள் கர்ப்பிணிப் பெண்ணின் பெற்றோர் வந்து வைதேகி குடும்பத்துக்கு நன்றி கூறி, அவர்களின் பெண்ணை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். 


அன்று இரவே, செல்வம், வைதேகி, பத்மா மூவரும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பஸ் ஏறினர். 


விடியற்காலையில் வைத்தீஸ்வரன் கோயிலில் வசித்த, செல்வத்துடன் வேலை பார்த்த நண்பர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். 


அந்த நண்பர் மூவரையும் அழைத்துக் கொண்டு பல நூற்றாண்டு பாரம்பரியமாக நாடி ஜோதிடம் பார்க்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். 


அங்கு பயங்கரக் கூட்டம். பெயரைப் பதிவு செய்து விட்டுக் காத்திருந்தனர். 


மதியம் இரண்டு மணிக்கு மேல் உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது.


ஜோதிடநிலய அலுவலர், அவர்கள் அங்கு வந்ததற்கான விபரம் கேட்டார். 


கொஞ்சம் தயங்கிய செல்வம், வந்த காரணத்தைக் கூறினார். ரகு, குழந்தைகள்  காப்பகத்தில் வளர்ந்ததால், அவனுடைய பிறந்த வருடம், மாதம் எதுவும் தெரியாது என்று கூறவும். 


"ரகுவின் மீது மிகவும் பாசம் கொண்டவர் யார்? என்று ஜோதிடம் நிலைய அலுவலர் கேட்டதும், பத்மாவும், வைதேகியும் தங்கள் பெயரைக் கூறினர்.


"ரகுவிற்கும் இவர்களுக்கும் என்ன உறவு?" என்று கேட்டதும்,


 உண்மையைக் கூறினர். இருவரது இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்து கொண்டு, 


"உங்களுக்கான ஓலை கிடைத்ததும் போன் செய்கிறோம் வாருங்கள்." என்று கூறினார். 


செல்வம், "நாங்கள் வெளியூரிலிருந்து வருகிறோம். நாளைக்கே இங்கே வரட்டுமா? என்று கேட்டதும்.


"இது ஓலை கிடைப்பதைப் பொருத்த விஷயம்... அதனால் எங்களிடமிருந்து ஃபோன் வரும்வரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும். உங்கள் அதிர்ஷ்டம் இன்றே கூட ஓலை கிடைக்கலாம்." என்று கூறி அனுப்பி வைத்தார். 


அங்கிருந்து கிளம்பி வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று, வைத்தீஸ்வரனையும், அம்மனையும் வணங்கி விட்டு, நண்பரின் வீடு வந்து சேர்ந்தனர். 


"இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்து விட்டீர்கள். ஒரு வாரமாவது தங்கியிருந்து பார்த்துவிட்டே செல்லுங்கள்." என்று நண்பர் கூறவும், 


மூவரும் அங்கேயே தங்கினர். அடுத்து  வந்த இரண்டாம் நாளும் கோயிலுக்குச் சென்று, "தாங்கள் வந்த விஷயம் நல்லபடியாக நடக்க வேண்டும்." என்று வேண்டிவிட்டு வீடு திரும்பிய பத்து நிமிஷத்தில் ஜோதிடரிடமிருந்து ஃபோன் வந்தது.


 மறுநாள் காலை வரச்சொன்னார்கள். 


அடுத்த நாள் கோயிலுக்குச் சென்று மனமுருகி வைத்தீஸ்வரனையும் அம்மனையும் வணங்கி விட்டு, ஜோதிடநிலையம் வந்து சேர்ந்தனர்.


 சிறிது நேரத்தில் ஒரு பெரியவர் முன் அமர்ந்தனர். அப்பெரியவர் "என்ன விபரம் வேண்டும்? " என்று கேட்டதும், 


செல்வம் வந்த விபரத்தைக் கூறினார். 


வைதேகி, பத்மா இருவருக்கும் பொறுத்தமான ஓலைகள் வந்தன. முதலில் பத்மாவை அழைத்துத் தனக்கு எதிரில் அமரச்சொன்ன பெரியவர்,


"நான் ஒவ்வொரு ஓலையாக எடுத்துச் சில விபரங்கள் கூறுவேன். அவை உங்களுக்குப் பொருத்தமானதாக இருந்தால், 'ஆமாம், இல்லை' என்று மட்டும் பதில் கூறுங்கள்." என்று கூறி விட்டு, 


"நீங்கள் புதன் கிழமை பிறந்தவரா? " என்று பெரியவர் பத்மாவிடம் கேட்டதும்,


"ஆமாம்!"என்றாள்.


"காலை எட்டு இருபதுக்குப் பிறந்தீர்களா?"


"ஆமாம்!"


"1970 ல் பிறந்தீர்களா?"


"ஆமாம்!"


"உங்க அப்பா பெயர் சுப்பிரமணியனா?"


"ஆமாம்! "


"அம்மா பெயர் வேதவல்லியா?"


"இல்லை!" என்று பத்மா கூறியதும், 


அவரிடமிருந்த மற்ற ஓலைகளைப் பார்த்து, வேறு ஓலையை எடுத்து மீண்டும் கேட்க ஆரம்பித்தார்.


"உங்க அம்மா பெயர் முத்துலெட்சுமியா?"


"ஆமாம்!"


"உங்களுக்கு ஒரே உடன்பிறப்பு. ஆண். அவர் உங்களுக்கு மூத்தவர் சரியா?"


"ஆமாம்!"


"உங்கள் சொந்த ஊர் ராமனாதபுரமா?"


"ஆமாம்!"


"உங்களுக்குத் திருமணம் முடிந்து, கணவர் காலமாகிவிட்டாரா?"


"ஆமாம்!"


இப்படியே பல கேள்விகள் கேட்டு பத்மாவிற்கும், பிறகு வைதேகிக்கும் பொறுத்தமான ஓலையைத் தேர்வு செய்ததும், 


அந்தப் பெரியவர், "இன்று மாலை நான்கு மணியளவில் வாருங்கள். கணித்து வைக்கிறேன்." என்று கூறினார். 


அன்று மாலை நான்கு பதினைந்திற்கு மீண்டும் பெரியவர் முன் அமர்ந்தனர்.


"இரு பெண்களையும் யோசனையுடன் மாறி மாறிப் பார்த்துவிட்டு, 


"நீங்கள் எதற்காக அந்தப் பையன் மறுபிறவி எடுத்துட்டாரான்னு தெரிஞ்சுக்க நினைக்கிறீங்க?" என்று கேட்டார்.


"அவரைப் போய்ப் பார்க்கத்தான்." என்றனர் கோரஸாக.


"எனக்குத் தனித்தனியாகப் பதில் சொல்ல வேண்டும். சரியா? என்றவர்,


"பார்ப்பதால், உங்களுக்கு என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது? " என்று பெரியவர் கேட்டதும், 


சுர்ர்ரென்று கோபம் வந்து விட்டது வைதேகிக்கு,


"பிரயோஜனம் இருக்கா? இல்லையான்றது எங்க கவலை. அவர் எங்கே பிறந்திருக்கிறார்னு சொல்லுங்க போதும்!" என்றாள்.


"இங்க பாரும்மா! இது கோபப்படுற விஷயமில்லை. அந்தப் பையனைப் பற்றித் தெரிஞ்சுக்கிறதுல ஒரு பிரச்சினை இருக்கு. நான் கேட்கிறதுக்கு நீங்க பொறுமையா பதில் சொன்னாத்தான், என்னால உங்களுக்கு நல்லது பண்ண முடியும்...." என்று பெரியவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, 


பத்மா, "அப்படி என்ன பிரச்சனை?" என்று வேகமாகக் கேட்க, பத்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு,

பொதுவாக,


"இந்தப் பையன் ரகுநந்தன்,  யாரோ ஒரு பொண்ணால வஞ்சிக்கப்பட்டு இறந்து போயிருக்கான். அந்தக் கோபம் அவன் ஆத்மாவுக்குக் குறையல..." என்று பெரியவர் சொல்லும்போதே,


"ரகு ஆத்மாவா இருக்காரா? அப்போ மறுபிறவி எடுக்கலையா?" என்று செல்வம் கேட்க, 


"ஒரு சிலரின் மரணம் மிகவும் கொடுமையானதாக இருக்கும். இயல்பிலேயே ரகுநந்தன் ரொம்ப நல்லவனாக, இரக்கமுள்ளவனாக வாழ்ந்திருக்கிறான்... ஆனால் அவன் வாழ்நாளில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கான். அதோடு யாரோ ஒரு பொண்ண நம்பி ஏமாந்து, அவளால் இறந்தும் போயிருக்கான். அவனுக்கு நிறைவேறாத ஆசை ஒன்று  இருந்திருக்கு. அவன் இறக்கும் தருவாயில், அவனுடைய மனதில், அவன் விரும்பியக் குடும்ப பாசம், காதல், இதெல்லாம் நிறைவேறாத ஆசையாகவும், ஒரு பெண்ணால் வஞ்சிக்கப்பட்ட கோபமும் இருந்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இறந்து போறவங்க, மறுபிறவி எடுத்தாலும், அவனுடைய இயல்பான குணம் மனிதனாகவும், பெண்ணால் வஞ்சிக்கப்பட்ட கோபமும், நிறைவேறாத ஆசைகளும் இருப்பதால் ஆத்மாவாகவுமாக அலைவார்கள். இதேதான் ரகுநந்தன் விஷயத்திலும் நடந்திருக்கிறது." என்று கூறி நிறுத்தினார். 


    பெரியவர் பேசுவதற்காக  மூவரும் காத்திருந்தனர். ஆனால் அவர் அமைதியாக இருக்கவே, மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.


    சிறிது நேரத்திற்குப் பிறகு பத்மாவையும், வைதேகியையும் நிமிர்ந்து பார்த்தார். "உங்கள் இருவரில் ஒருவரால்தான் அந்தப் பையனின் மறுபிறவியைப் பார்க்க முடியும்., என்றவர் சிறு யோசனைக்குப் பின்,


  "சரி... விஷயத்தை உடைத்து விடுகிறேன். அந்தப் பையன் மறுபிறவி எடுத்துவிட்டான். அவனுக்கு இப்பொழுது ஐந்து வயது. அவனுடைய பெயர் முருகப்பெருமானின் ஒரு பெயராகத்தான் இருக்கும். இப்போதைக்கு ரகுநந்தனின் மறுபிறவியை முருகன் என்றே வைத்துக் கொள்வோம். முருகனுக்குப் பூர்வஜென்ம ஞாபகம் இருக்காது. ஆனால் ரகுநந்தனின்  ஆத்மா, அதனுடைய ஆசையை நிறைவேற்றத் தன்னுடைய மறுஜென்மான முருகனின் உதவியை நாடும். ஆனால் ஆத்மா தன் முகத்தை  முருகனுக்குக் காட்டாது. ஒருவேளை முருகன், ஆத்மாவின் முகத்தைப்   பார்த்து விட்டால், முருகனுக்கு, தனது பூர்வஜென்ம ஞாபகங்கள் அரைகுறையாக வெளிவந்து, அவன் மனநிலையைப் பாதிக்கும்.


அப்படியும்  கடைசிவரை முருகனுக்கு, பூர்வ ஜென்மத்தில் நடந்த, எந்த ஒரு விஷயமும் தெளிவாகத் தெரியாது... 


அதனால் முருகனின் மனநலம் பாதிக்கப்படுவதால், ரகுநந்தனின் ஆத்மா தன் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும். 


இதற்கிடையில், ஏற்கனவே ரகுநந்தன் உயிர் போகக் காரணமாக இருந்த பெண்ணும் மறுபிறப்பு எடுத்து விட்டாள். 


அவள், தெரிஞ்சோ தெரியாமலோ, ஆத்மாவின் முகத்தை, முருகன்  பார்க்கும் சந்தர்ப்பத்திற்குக்  காரணமாவாள். அப்படி ஏற்படக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா இல்லையா?" என்று பெரியவர் மூவரையும் பார்த்துக் கேட்டார். 


  "ஆமாம்!" என்று மீண்டும் மூவரும் கோரஸாகப் பதற, அவர்கள் மூவரின் முகத்தில் தெரிந்த வேதனையைப் பார்த்தவர்,


  "அவ்வாறு ஆத்மாவின் முகத்தை,  முருகன் பார்க்காமல் தடுப்பதற்கோ அல்லது அப்படியே பார்த்தாலும் பிரச்சனையாகாமல் போவதற்கு  ஒரே வழிதான் இருக்கு.... ஆனா அது உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்." என்று பெரியவர் கூறியதும்,


  "பரவாயில்லைங்க ஐயா! அது என்ன வழின்னு சொல்லுங்க." என்று பத்மா கேட்டதும், 


பெரியவர் சிறிது நேரம் கண்மூடி இருந்து விட்டுப் பேச ஆரம்பித்தார். 


 

"அந்த ஆத்மாவின் நிறைவேறாத ஆசைக்கே தடுக்கும் சக்தி இருக்கிறது. ஆத்மாவின் கடைசி ஆசை என்ன? என்று உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அது ரகுநந்தனின் திருமணம். சரியா?" என்று மூவரிடமும் கேட்க, 


  மூவரும் "ஆமாம்!" என்று தலையசைத்தனர். 


  "ரகுநந்தன் திருமணம் செய்ய இருந்த பெண்ணால் மட்டுமே விபரீதம் ஏற்படாமல் தடுத்து, ஆத்மாவின் ஆசையையும் நிறைவேற்றி, ஆத்மா நிம்மதி அடைந்து முக்தி பெற வைக்க முடியும்." என்று நிறுத்தி, மீண்டும் தொடர்ந்தார்.


  "புரிந்ததா? " என்று கேட்டார்.


  "என் பொண்ணு வைதேகி தான் ரகுவை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தாள். அவளால் விபரீதத்தைத் தடுக்க முடியும்ங்கறவரை புரியுது. ஆனா ரகுவோட கடைசி ஆசை வைதேகியை கல்யாணம் பண்ணிக்கிறது. இதை எப்படி வைதேகியால்  நிறைவேத்தி, ஆத்மாவை வழியனுப்பி வைக்க முடியும்?" என்று செல்வம் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே வைதேகி,


  "இப்ப  நான் என்ன செய்ய?" என்று பெரியவரிடம் கேட்டாள். வைதேகி புரிந்து கொண்டுதான் கேட்கிறாளா?' என்பதை அறிய பெரியவர் வைதேகியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். 


  ரகுவின் மறுபிறவியை வைதேகி திருமணம் செய்து கொண்டால், அவனுடைய ஆத்மாவின் ஆசை நிறைவேறும். அது நடக்கவேண்டுமானால் வைதேகி இறந்து, மறுபடியும் பிறக்க வேண்டும். 


  'அது எனக்குப் புரிகிறது. ஆனால் இறப்பவர்கள் எல்லாம் மறுபடியும் மனிதனாகப் பிறந்து விடுகிறார்களா என்ன?' என்பதைப் போலப் பார்த்தாள் வைதேகி.



  "உனக்கு இன்னும் ரகுநந்தனுடைய ஆத்மாவின் ஆசையை நிறைவேற்ற  விருப்பமிருந்தால், நாளைமறுநாள் இரவு, உனக்குத் தெரிந்த பெண்ணின் பிரசவத்தில் பிரச்சனை வரும். சரியாக இரவு பதினோரு மணி நாற்பத்தைந்து  நிமிசத்துல,  வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூச்சு திணறும், அந்த நேரத்தில் உன் உயிர் பிரிந்தால் பதினோரு மணி ஐம்பத்தைந்தாவது நிமிடத்தில் அஸ்த நட்சத்திரத்தில்  நீ பிறப்பாய்." என்று நிறுத்தியவர்,


    பத்மாவைப் பார்த்து, அதே ஆஸ்பத்திரியில் ஒரு ஆண் குழந்தை பெற்றவர்களைத் தவறவிட்டு அழும். அவன்தான் நீங்கள் தேடும் ரகுநந்தனின் மறுபிறவி முருகன! அந்தப் பையனை அவன் பெற்றோரிடம் சேர்த்து வை. அவர்கள் அந்த ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள கோயிலில் பிள்ளையைத் தேடிக்கொண்டிருப்பர். நன்றாகக் கவனிம்மா!  வைதேகியின் கடைசி நேரத்தில், நீ ரகுநந்தனோட மறுபிறவிக் குழந்தையுடன் இருப்பது அவசியம். அப்பொழுதுதான் அவர்கள் அடுத்தப் பிறவியிலாவது ஒன்று சேர முடியும்." என்று கூறி விட்டு அருகில் டம்ளரில்  இருந்த தண்ணீரை குடித்து விட்டு,


  "இதெல்லாம் நீங்க செய்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. அதாவது, முருகனுக்காகவோ, ரகுநந்தனின் ஆத்ம சாந்திக்காகவோ நீங்கள் எதுவும் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. என்னிடம் ரகுநந்தன் பற்றித் தெரிந்துகொள்ள  வந்ததால்தானே உங்களுக்குத் தெரிந்தது?  அதனால்தான் ஆரம்பத்துலயே, "ரகுநந்தனின் மறுபிறவியைப் பார்ப்பதால் என்ன பிரயோஜனம்? னு கேட்டேன். நான் கூற வேண்டியது என் கடமை. அதைச் செய்யவதோ, செய்யாமல் விடுவதோ உங்கள் விருப்பம். ஆனால் ரகுநந்தனின் மறுபிறவி குழந்தையை வைதேகி கட்டாயம் பார்க்கவே கூடாது. அப்படிப் பார்த்துவிட்டால் அந்தக் குழந்தையின் பெற்றோர் கிடைக்கவே மாட்டார்கள். குழந்தை அனாதையாகிவிடும். உங்கள் வீட்டில் கொண்டு வந்து வளர்ப்பது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் பத்மா மட்டும் பிரசவம் நடக்கும் ஆஸ்பத்திரிக்குச் சென்று அந்தக் குழந்தையைப் பார்த்து அவனுடைய பெற்றோரிடம் சேர்த்து வைக்கலாம்.  அந்தப் பையனின் திருமணம் நிச்சயமாக பத்மாவின் முன்னிலையில்தான் நடக்கும். பத்மாவின் கடைசிக் காலங்கள் அவர்களுடன் இருப்பீர்கள்." என்று கூறி முடித்துவிட்டு, எழுந்து சென்று விட்டார்.


   ஊருக்கு வந்து வீட்டில் அமர்ந்திருந்த மூவருமே எதுவும் பேசவில்லை. 


செல்வத்திற்கும், பத்மாவிற்கும் ரகுநந்தனுக்காக, வைதேகி தவறான முடிவெடுத்துவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தனர்.  


இறுதியாக பத்மா, வைதேகியிடம்,


  "இதையெல்லாம் முழுசாக நம்ப வேண்டாம் வைதேகி. அந்தக் குழந்தையைப் பார்க்கத்தானே சென்றோம். நீயே சொல், நம் உறவில் யாரும் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் இல்லை. ஒருவேளை அப்படி யாராவது இருந்தாலும், நான் மட்டும் சென்று அந்தக் குழந்தையைப் பெற்றோரிடம் சேர்த்துவிட்டு வந்து விடுகிறேன். ரகு எங்கேயோ நல்லா இருக்கான் என்ற நிம்மதி போதும் நமக்கு. சரியா? மத்தபடி குழப்பிக்காம படு." என்று கூறி விட்டுப் படுக்கை அறைக்குள் சென்று விட்டாள்.


   விடியற்காலை எழுந்து வாசல் தெளித்து விட்டு, காபி போட அடுப்பைப் பற்ற வைக்கும்போது வீட்டின் காலிங்பெல் அடித்தது. அடுப்பை அணைத்து விட்டு, வாசல் கதவைத் திறந்த பத்மாவிற்கு வாசலில் நின்றவரைப் பார்த்ததும் தலை சுற்றி கண்கள் இருட்ட... 


  வாசலில் நின்றது யார்? 


  அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்… 


      💍 💍 💍 💍 💍 💍 💍 💍 💍 


  



Post a Comment

0 Comments