வருவான்-33
ஜெய் கொடுத்த ஐடியா சரிவரும்னு தான் நினைக்கிறேன். "நான் தற்கொலை செய்து கொள்வேன்னு சொன்னா நிச்சயம் வைதேகி என்னைப் பார்க்க வருவா. ஒருவேளை அவ வரலைன்னா, நிஜமாவே தற்கொலை பண்ணிக்குவேன் ஜெய்!" என்று ஐடியா கொடுத்த, ஜெய்யையே பயமுறுத்தி அனுப்பியிருக்கேன். அதனால் எப்படியும் வைதேகியை, ஜெய் கூட்டிட்டு வந்துடுவான்.
’அவர்கள் வந்து பார்க்கும்போது என் நிலை கொஞ்சம் சரியில்லாமல் இருந்தால்தான் நம்பும்படி இருக்குமோ?!...’ என்று எண்ணியவன்,
"என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை" என்று ஒரு பேப்பரில் எழுதினான். பிறகு,
‘அவ வந்து பார்க்கும்போது எனக்கு சிகிச்சை நடக்கிற மாதிரி இருந்தாதானே நல்லாயிருக்கும்?!! என்ன பண்ணலாம்? யாரை துணைக்கு அழைக்கலாம்’னு ரகு யோசித்துக் கொண்டிருக்கும்போது சுதா வந்தாள்.
அவளிடம் உதவி கேட்க மனமில்லாமல், 'இப்ப எதுக்கு வந்திருக்கான்னு தெரியலயே? வைதேகி என்னைவிட்டுப் பிரிந்ததும், என்னிடம் நெருங்கப்பார்க்கிறவள்... அதுவும் இந்த ஒரு வாரமா சுதா தொல்லை தாங்க முடியல…’ என்று நினைத்தவன்,
மனசுல இருந்த டென்ஷனை வெளியே காட்டாமல், சுதாவுக்கு முதுகு காட்டி நின்று, அந்த இடத்தில் இருக்கும் பொருட்களைச் சரிபார்ப்பதுபோல் நடித்தான்.
லேசாகச் செருமிய சுதா,
"கடிதமெல்லாம் எழுதித் தயாரா வச்சுட்டீங்க போல?!! பரவாயில்லை! ஜெய் சொன்னதால உங்களுக்கு என் உதவி தேவைப்படுமா? ன்னு கேட்க வந்தேன். நீங்க என்னடான்னா என்கிட்டப் பேசக்கூடப் பிடிக்காம அந்தப் பக்கம் திரும்பி நிக்கிறீங்க... நீங்க இந்த அளவு வைதேகியை விரும்புறீங்கன்னு நான் நினைக்கல டாக்டர். ஜெய் சொல்லித்தான் புரிந்தது. நான் உங்ககிட்ட பேசிய விதத்தை நினைச்சா எனக்கே அருவருப்பா இருக்கு. உங்களுக்கும் வைதேகிக்கும் கல்யாணம் ஆகும் வரை உங்க கண்ணுலயே படக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா ஜெய் தான் உங்களுக்கு உதவச் சொன்னார். அது மட்டுமில்ல, ஜெய் என்னை விரும்புறதாவும் சொன்னார். அவர் சொல்லிட்டுப் போனபிறகு யோசிச்சுப் பார்த்தேன்…
நாம விரும்புறவங்களை விட, நம்மை விரும்புறவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நல்லதுன்னு அனுபவம் வாய்ந்த பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதனால அவர் காதலை ஏத்துக்கலாம்னு முடிவுக்கு வந்தபிறகுதான் உங்களைப் பார்க்க வந்தேன் டாக்டர்.” என்று சுதா சொன்னதும் ரகுவிற்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது.
"ஜெய் உன்னை விரும்புறான் னா சொன்னான்? ராஸ்கல் என்கிட்ட கூட மறைச்சுட்டானே?... ஹப்பா! இப்பதான்மா என் மனசுக்கு நிம்மதியா இருக்கு. உன்னை மாதிரி கெட்டிக்காரப் பொண்ணு, இப்படிப் பண்றாளேன்னு ரொம்பக் கவலையா இருந்துச்சு. எப்ப என் ஜெய் காதலை, நீ ஏத்துக்கிட்டியோ அந்த நிமிஷமே நீ எனக்குத் தங்கச்சி தான்." என்று மிகவும் சந்தோஷமாகக் கூறிய ரகு,
"இனி உங்கிட்ட உதவி கேட்கலாம்... வைதேகி வந்து பார்க்கும்போது, நான் இப்படி சிரிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தா அவ கண்டுபிடிச்சுடுவா. அவ நம்புற மாதிரி இருக்கனும்னா, எனக்கு சிகிச்சை பண்றது மாதிரி செட்டப் பண்ணினா நல்லா இருக்கும். இல்லையா சுதா?" என்று கேட்டான் ரகுநந்தன்.
"வாவ்! ஐடியா நல்லா இருக்கு...!!” என்று மிகவும் சந்தோஷமாகக் கூறினாள் சுதா.
உடனே ரகுவைக் கட்டிலில் படுக்க வைத்து, குளுகோஸ் ஏற்றும் ஸ்டாண்ட், இன்னபிற பொருட்களை எடுத்து வைத்து, நிஜமாகவே சிகிச்சை நடப்பதுபோல ஏற்பாடுகளைச் செய்தாள்.
‘எல்லாம் சரியாக இருக்கிறதா?’ என்று சரிபார்த்தவள்,
"டாக்டர்! எல்லாம் ஓகே! ஆனா உங்க முகத்தைப் பார்த்தால் சின்னக் குழந்தை கூடக் கண்டுபிடிச்சுடும். உங்களுக்கு உடம்பு நல்லாதானிருக்குன்னு... முகம் பூராவும் வைதேகி வரப்போற மகிழ்ச்சி பூத்து குலுங்குது." என்று கூறிச் சிரித்தவளைப் பார்த்த ரகுநந்தன்,
'இவள் சிறு பெண். எத்தனை வெகுளித்தனமாகச் சிரிக்கிறாள்? ' என்று நினைத்து,
"என் முகத்தை என்ன பண்றது?" என்று கேட்டு ரகுவும் சிரித்தான்.
சிறிது யோசித்த சுதா,
"ஒரு ஐடியா! ஆனா… பெரிய்ய சர்ஜன்னு பேரு. ஆனா, உங்களுக்குதான் ஊசி குத்திக்கிறதுன்னா பயமாச்சே!. நீங்க, போன தடவை ரெத்த பரிசோதனைக்கான ஊசி போட்டுக்கிட்டபோது, நான்தான் உங்க முகத்தைப் பார்த்தேனே. இதயநோயே வந்த மாதிரி இருந்தீங்க."
"இப்ப எதுக்கு இந்தக் கதை?" என்று கேட்டான் ரகுநந்தன்.
"ரொம்ப சிம்பிள்! இரும்புசத்து குறைபாடு இருக்கிறவங்களைக்கு நரம்பு ஊசி முலம் இரும்புச்சத்தை ஏத்துவோமே. அந்த ஊசியை நீங்களே, உங்களுக்கு நரம்பு ஊசி குத்துற இடத்துல போட்டுக்குங்க டாக்டர்." என்று சுதா சொல்லி முடிக்கும் முன்,
"அடிப்பாவி என்ன ஒரு கொடூர ஐடியா!... நரம்பு ஊசி?!!! அதுவும் எனக்கு நானே போட்டுக்கறதா? வில்லி! வில்லி!" என்று ரகு கத்த,
"சூப்பர்!"இப்பத்தான் உங்க முகத்துல ஒரு மரணக் களை! " என்று திருப்தியாக சுதா பெருமூச்சு விட,
"அடிப்பாவி! நீயெல்லாம் ஒரு பொண்ணா?" என்று செல்லமாகக் கோபப்பட்டான்.
"ப்ச்! என்ன டாக்டர்! நீங்கதானே உண்மை மாதிரி தெரியனும்றீங்க? கல்யாணக் களை தான் உங்க முகத்தில் இருக்கு... உங்க முகத்தைப் பார்த்தாலே வைதேகி கண்டு பிடிச்சுடுவாங்க. அவங்க பத்திரிக்கை நிரூபர் வேற." என்று சுதா சொல்வதும் சரியென்று ரகுநந்தனுக்குத் தோன்றவும்,
"உங்களை என்னவோன்னு நினைச்சேன். காதலுக்காக ஊசிகூடக் குத்திக்க மாட்டீங்களா?" என்று கூறி சுதா சிர்க்கவும்,
ரகுநந்தனின் ஈகோ தூண்டப்பட்டு,
"சரி! சரி! ஊசியில் மருந்தை ஏத்திட்டு வா!" என்றான் கெத்தாக,
சுதா ஊசியில் மருந்து ஏற்றத் திரும்பியதுமே, ரகுநந்தனுக்கு எப்பொழுதும் ஊசி என்றால் ஏற்படும் பயத்தைத் தாண்டி, அவனுடைய உள்ளுணர்வு 'ஊசி வேண்டாம்' என்றது.
சுதா ஊசி எடுத்துவர, ரகுநந்தனின் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது.
'என்ன இது? எனக்கு அளவுக்கு மீறி உடம்பு வியர்க்குதே! ஏதோ தப்பு நடக்கப் போற மாதிரி தோணுதே? ஊசி வேணாம்னு சொல்லிடுவோமா?’ என்று யோசித்தவாறு சுதாவைப் பார்த்தவன்,
'ச்சே! இந்தச் சின்னப் பெண் முன்னாடி ஊசிக்குப் பயப்படுறதா?' என்று ரகுவின் ஈகோ மீண்டும் எகிற,
‘ஊசியின் சிரிஞ்ச்சுக்குள் என்ன மருந்து இருக்கிறது?' என்று கூடப் பார்க்காமல், சட்டென்று ஊசியை வாங்கித் தனக்குத்தானே குத்திக்கொண்டான்."
"ரகுஊஊ! வேண்டாம்!" என்று அலறி எழுந்தாள், தன் வீட்டில் நன்கு உறங்கிக் கொண்டிருந்த மஞ்சு.
வழக்கம்போல உடம்பெல்லாம் வியர்க்க, தூக்கம் கலைந்த பிறகும் ரகுநந்தன் ஊசி குத்திக்கொள்ளும் காட்சி கண்ணுக்குள் நிற்க! எவ்வளவு கண்ட்ரோல் செய்தும் மஞ்சுவின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகி, நைட்டியின் நெஞ்சுப்பகுதியையே நனைத்தது...
‘கனவு மாதிரியே இல்லையே? நிஜமாகவே நடந்தது போல இருக்கே?' என்று நினைத்த மஞ்சு பால்கனிக்கு வந்து தூரத்தில் தெரியும் நதியைப் பார்த்தாள். மனம் சமாதானமடையவில்லை!
ரகுநந்தனை நினைக்க, நினைக்க ஒருவிதமான வலி நெஞ்சில் தோன்றி, தொண்டையை அடைக்க, பயந்து போன மஞ்சு வேகமாகப் பூஜை அறைக்குள் புகுந்தாள்.
கடவுள் கிருஷ்ணரின் படத்தைப் பார்த்தவள்,
"கண்ணா! என்ன கனவு இது? யார் அந்த ரகுநந்தன்? அவன் ஊசி போட்டுக் கொண்டது எனக்கு என் உயிரே போற மாதிரி இருக்கு? நான் ஊசிக்குப் பயந்தவள் இல்லையே?!! பிறகு ஏன்? என் ரகுவிற்கு என்ன ஆச்சு? கனவுபோலத் தெரியலயே? எனக்கு மனசு படபடன்னு அடிச்சுக்குதே? என் ரகுநந்தனைக் காப்பாற்று! இதுநாள்வரை நான் உன்மீது கொண்ட பக்தி உண்மைனா, என் கண்முன்னால் ரகுநந்தனைக் கொண்டு வந்து நிறுத்து!" என்று மஞ்சு கேட்டவுடன்,
கிருஷ்ணரின் படத்தில் இருந்த பூ கீழே விழுந்தது.
அன்று!....
டைரி பறிக்கப்பட்டதும் பயந்து பின்னால் நகர்ந்த வைதேகி,
மீண்டும் அவள் மடியில் டைரி விழுந்ததும், ஒரு முறை நாற்காலியைப் பார்த்தாள். அதில் ரகு அமர்திருப்பதுபோல் தெரியவில்லை. சுற்றிலும் கண்களால் தேடினாள். ரகு எங்கு இருக்கிறான் என உணரமுடியவில்லை...
'ஜெய் வந்து அழைத்தும், தான் வரவில்லை என்ற கோபம் ரகுவிற்கு.' என்று நினைத்தவள் டைரியை படிக்க ஆரம்பித்தாள்...
டைரியில் இருந்த வரிகள் வைதேகியின் மனக்கண்ணில் காட்சியாக விரிய,
ஊசி மருந்தோட நிறத்தக் கூடப் பார்க்காம, நான் ஊசியை வாங்கி எனக்குக் குத்திக்கிட்டேன். என்ற டைரியின் வரியைப் படித்ததும்,
"ரகுஊஊ! வேண்டாம்! " என்று தன்னையறியாமல் சப்தமாக அலறிவிட்டாள் வைதேகி!
‘சுதா திருந்தியிருக்க மாட்டாள்’ என்று நிச்சயமாக நம்பிய வைதேகிக்கு,
"மிகவும் வீரியமான, விஷ ஊசியைப் போட்டுக்கிட்டிருக்கிறார்" என்று, ரகு இறந்த தினத்தன்று டாக்டர் கூறியது நினைவில் வந்தது...
"கடவுளே! கிருஷ்ணா! உன்னை எத்தனை நாள் கும்பிட்டிருப்பேன்? உன்மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்? என் ரகுவை காப்பாத்தியிருக்கக் கூடாதா?" என்று அமர்ந்த நிலையிலேயே, முன்புறம் மடங்கி, தரையில் நெற்றி படிய, “ஓ!ஓ!” வென்று வாய்விட்டழுதாள்.
தரையில் படிந்திருந்த வைதேகியின் கைகளில் டைரி உரச, கண்களிரண்டும் கனலாய்த் தகிக்க, உடம்பில் உள்ள சகதி முற்றிலும் அழிந்து, தன் கைகளைத் தூக்குவதே வைதேகிக்குப் பெரும்பாடாக, நடுங்கும் கைகளால் மீண்டும் டைரியை எடுத்தாள்.
ரகுவின் அறையே நெருப்பாக எரிவதுபோலத் தோன்ற, அந்த அறையில் இருப்பதே வைதேகிக்குக் கடினமாக இருக்கவே, அறையைவிட்டுத் தட்டுத்தடுமாறி, வெளியே வந்து பரிசோதனைகூடத்தின் ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து மேலே படிக்கத் தொடங்கினாள்.
24/09/1994
ஊசி குத்திக்கொண்ட மறுநிமிடமே நான் குத்திக்கொண்டது, இரும்புச்சத்து ஊசியில்லை என்பது புரிய,
ஊசியைப் பார்த்தவன், சிரிஞ்சில் மீதமிருந்த மருந்தின் கலர் வித்தியாசம் தெரிய, சட்டென்று சுதாவைப் பார்த்தேன்.
அவள் அசால்ட்டாக அருகில் இருந்த டேபிளின் மேல் ஏறி அமர்ந்தாள்.
"என்ன ரகு? அப்படிப் பார்க்கிறீங்க? உங்க சந்தேகம் நூறு மடங்கு உண்மைதான். நீங்கள் குத்திக்கிட்டது விஷ ஊசியேதான்... அது எப்படி? நான் ஆறேழு மாசமா காதலிப்பேன்... நேத்து வந்தவ, தட்டிட்டு போவாளாமா?...” என்று கோபத்தில் உக்கிரமானவள், திடீரன்று சிரித்து,
“உங்க விதியைப் பார்த்தீங்களா ரகு? மருத்துவ முகாமுக்குப் புறப்பட்டுக்கிட்டிருந்த எங்கிட்ட வந்து, ஜெய் உங்க திட்டத்தைச் சொல்லி உங்களுக்கு உதவச் சொன்னான். எனக்கு எப்படி இருந்திருக்கும்? உடம்பெல்லாம் எரிந்தது... எவ்வளவோ கஷ்டப்பட்டு அந்த வைதேகியை நான் ஓட்டிவிட, நீங்க ரெண்டு பேரும் அவளைக் கூட்டிட்டு வரத் திட்டமா போடுறீங்க?” என்று கொதித்தவள்,
“ஜெய் வந்து சொன்னதும் எனக்கு அழுகைதான் வந்துச்சு... கதவைச் சாத்திட்டு அழுதேன். எனக்கு நல்லா தெரியும். வைதேகியும் நீங்களும் சந்திச்சுட்டா, நான் உங்களைப் பிரிக்கிறதுக்காகச் செஞ்ச அத்தனையும் உங்களுக்குத் தெரிஞ்சுடும். சும்மாவே என் மேல உங்களுக்குக் காதல் பொத்துக்கிட்டு வருது... இதுல நான் பண்ணிய வேலை தெரிஞ்சா? இந்த ஜென்மத்தில என்னைத் திரும்பிப் பார்க்க மாட்டீங்க…” என்று பயத்தில் கலங்கியவளுக்கு மீண்டும் கோபம் எழ,
“என்னால உங்களை வைதேகிக்கு விட்டுக்கொடுக்க முடியாது... யார் அவ? உங்களுக்கும், எனக்கும் இடையே வர? எனக்கு நினைக்க நினைக்கத் தாங்கலை... எனக்குச் சொந்தமான ரகுவை, இன்னொருத்தி கையில் கொடுக்கிறதா? ஹாஆஆஆ! " என்று அடித்தொண்டையிலிருந்து காற்றை வெளியிட்டுக் கத்தியவாறு தரையில் குதித்தவள், ரகுநந்தன் அருகில் வந்தாள்...
"எனக்குக் கிடைக்காதது இன்னொருத்திகும் கிடைக்கவே கூடாதூஊஊ... அமைதியா உட்கார்ந்து யோசிச்சேன்... உங்க ரெண்டு பேரையும் சந்திக்க விடக் கூடாது... அதுக்கு?... முதல்ல வைதேகியைத் தான் கொல்ல நினைச்சேன்... ஆனா ஜெய் அவ கூடஇருப்பானே? அதனால உங்களைக் கொன்றுவிட முடிவெடுத்தேன். ஆஸ்பத்திரிலயும் பெரும்பாலும் யாரும் இல்லை! உங்க பக்கத்திலயும் உங்க நலம் விரும்பிகள் ரெண்டு பேரும் இல்லை... இதைவிட நல்ல சான்ஸ் எனக்குக் கிடைக்காதுன்னு, இந்த ஊசி மருந்தை எடுத்துக்கிட்டு இங்கே வந்தேன்... உங்களோட மல்லுக்கட்டி என்னால் ஊசி போட முடியாது... என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டேதான் இங்கே வந்தேன்…” என்று தீவிர பாவனையில் பேசிக்கொணிருந்த சுதாவின் முகத்தில் கோபம் கலந்த கொடூரப் புன்னகை விரிய.
“உங்க தற்கொலைக் கடிதத்தைப் பார்த்ததும்தான் எனக்கு ஐடியாவே வந்துச்சு... நீங்களும் என் முகத்தைப் பார்க்காம திரும்பி நின்றது எனக்கு வசதியா போயிடுச்சு... என் முகத்தைப் பார்த்து இருந்தா ஒரு வேளை என் மனசுல ஓடியதை நீங்க புரிஞ்சுக்க சான்ஸ் இருந்துச்சு... ஜெய் என்னை விரும்புறதாச் சொன்னா நீங்க என்னை நம்புவீங்கன்னு தோணவும், அப்படியொரு பொய்யைச் சொன்னேன்... நானே எதிர்பார்க்காத அளவுக்கு நீங்க அடியோட மாறுனீங்க... அதுவும் என் கோபத்தைத் தூண்டுச்சு... நான் உங்களை விட்டு விலகுறதுல உங்களுக்கு இவ்வளவு சந்தோஷமா? உங்கமேல இருந்த கொஞ்ச நஞ்ச காதலும் பறந்துருச்சு." என்று சுதா என்ற பாம்பு, விஷத்தைக் கக்கிக்கொண்டிருந்தபோது,
வெளியே யாரோ வருவது போல ஆளரவம் கேட்டது.
வேகமாக அறையை விட்டு வெளியேறிய சுதா, மீண்டும் ஓடிவந்து, வைதேகிக்காக நான் வைத்திருந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு, "இந்த மோதிரம் கூட எனக்குத்தான்" என்று கூறி விட்டு ஓடிவிட்டாள்.
இந்த விபரங்களை உனக்கும் என் நண்பர்களுக்கும் தெரியப்படுத்த, கட்டிலிலிருந்து கீழே விழுந்து, இந்த டைரியை எடு. ...... " என்று டைரி பாதியில் முடிந்திருந்தது.
என்ன நடந்திருக்கும் என்று தோன்ற, வைதேகிக்கு மீண்டும் அந்த அறையே அனலாக் தகித்தது,
"என்னை நீங்கள் பார்த்திருக்கவே கூடாது ரகு! என்னால்தானே உங்களுக்கு இப்படியொரு நிலை... என்னால் பொறுக்க முடியவில்லையே.... கடவுளே அப்படி என்ன பாவம் செய்துவிட்டோம்னு இப்படியொரு தண்டனை எங்களுக்கு... " என்று அரற்றியவளுக்கு,
“சுதா மோதிரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டாள்" என்று ரகுநந்தன் எழுதியிருந்தது ஞாபகம் வர,
‘அப்புறம் எப்படி இந்த மோதிரம் இங்கே?’ என்று யோசித்தவளுக்கு ஏதோ தோன்ற,
வேகவேகமாக அந்த மோதிரத்தை எடுத்து உற்றுப் பார்த்தாள். மோதிரத்தின் உட்பகுதியில் ரெத்தம் உறைந்திருந்தது...
அதைப் பார்த்தவளுக்கு, ‘சுதாவை ரகுநந்தன் தான் மாடியிலிருந்து தள்ளிவிட்டிருக்கிறான்’ என்று புரிய, அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
கண்விழித்தபோது, வைதேகிக்கு தன் வீட்டில் இருப்பது தெரிந்தது. அருகில் அப்பாவும், பத்மா அத்தையும் இருக்க, அவர்களிடம் நடந்ததனைத்தையும் கூறி அழுதாள் வைதேகி.
அந்த அதிர்ச்சியினால் ஏற்பட்ட காய்ச்சலி லிருந்து மீண்டுவர ஒரு வாரம் ஆனது வைதேகிக்கு.
அதன்பிறகு, வைதேகி யாரிடமும் எதுவும் பேசாமல் ஊமையாகிப்போனாள்.
பத்மாவும் அதிர்ச்சியால் இருபத்தி நாலுமணிநேரமும் புலம்பியபடியே இருந்தாள்.
இந்நிலையில் வைதேகி வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் புதிதாகக் குடி வந்தது.
ஒருநாள், புதிதாகக் குடிவந்த பக்கத்து வீட்டுப் பெரியவரும், அவருடைய மனைவியும் வைதேகி வீட்டிற்கு வந்து,
அவர்களுடைய மகளை முதல் பிரசவத்திற்காக, புகுந்த வீட்டிலிருந்து அவர்களுடைய வீட்டிற்கு, அழைத்து வந்திருப்பதாகவும், இந்நிலையில் அவர்களுடைய நெருங்கிய உறவில் யாரோ இறந்துவிட்டதாகவும், துக்கம் கேட்க இன்று செல்லவேண்டியிருப்பதால், அவர்களுடைய நிறைமாத கர்ப்பிணி மகளைப் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டினர்.
மறுக்க முடியாததால் வைதேகி வீட்டில் ஒத்துக்கொள்ளவும், அவர்களின் கர்ப்பிணி மகளை, வைதேகி வீட்டில் விட்டுச் சென்றனர்.
அந்தப் பெண் அனைவரிடமும் நன்றாகப் பழகினாள். வைதேகி வீட்டுப் பெண்போல், வீட்டு வேலைகள் கூடச் செய்தாள். எப்பொழுதும் சிரித்த முகம். ஏனோ அந்தப் பெண் வந்தது வைதேகி குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்தது.
இரண்டே நாளில் அந்தக் கர்ப்பிணிப்பெண் வைதேகிக்கு நெருங்கிய தோழியானாள்.
ஆனால் பத்மா, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணிடம் நெருங்கவில்லை.
வைதேகியிடமும், "யார் சிரித்துப் பேசினாலும் உடனே தோழியாகி விடுவியா? சுதா ஒருத்தி கத்துக் கொடுத்தது பத்தாதா?" என்று கூறியும் வைதேகிக்கு, அந்தப் பெண்மேல் ஏதோ இனம்புரியாத பாசம்.
மறுநாள் அந்தக் கர்ப்பிணிப்பெண், தன் புகுந்த ஊரில் நடந்ததாக, சில பேய்க்கதைகள் கூறி, "இதையெல்லாம் நீ நம்புறியா?" என்று அவள் கேட்ட நொடியில்.
வைதேகிக்கு ரகுநந்தன் ஞாபகம் வர, எழுந்து தன் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.
அதைப் பார்த்த அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, குற்றஉணர்ச்சி மேலிட, வைதேகி அருகில் அமர்ந்தவள், ஆறுதல் கூறுவதாக நினைத்து,
"அழாதே வைதேகி! உனக்கு எதையோ ஞாபகப்படுத்தி விட்டேனா? நானும் கேள்விப்பட்டேன். உனக்கு நடந்தது மிகவும் கொடுமைதான்... ஆனா நான் ஒன்னு சொன்னா, உன் அழுகை நின்னுடும்." என்று கூறியவள்,
வைதேகி பதில் சொல்லாமல் அழவும், "உன் ரகுநந்தன் மறுபடியும் எங்காவது பிறந்திருப்பார்... அவர் மாதிரி நல்லவங்களை ஆண்டவன் தவிக்க விடமாட்டான்." என்று கூறிய அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இடுப்பில் சுரீர் என்று வலி வர,
‘பிரசவ வலி வந்துவிட்டதோ?’ என்று பயந்து அவள் பத்மாவிடம் சென்றாள்.
அவள் போனபிறகும், 'ரகுநந்தன் மீண்டும் பிறந்திருப்பார்!' என்று அந்தப் பெண் கூறியது,
மீண்டும் மீண்டும் மனதில் அலையாய்ப் பொங்க, 'ரகுநந்தன் பிறந்திருப்பாரா? எங்கு பிறந்திருப்பார்? " என்றெல்லாம் தோன்ற, எழுந்து அமர்ந்தாள்.
'இந்த ஜென்மத்திலாவது ரகுநந்தன் நல்லபடியாக இருக்கனும்' என்று கடவுளைப் பிரார்த்தித்தவளுக்கு, சுதா முகம் அருகில் வந்து சிரித்தது,
"நானும் பிறந்துவிட்டேன்... இந்தப் பிறவியில் நானும் ரகுநந்தனும் சேர்ந்து விடுவோம்." என்று கூறுவது போலத் தோன்ற,
சுதா, தனக்கும் ரகுநந்தனிற்குமிடையே செய்ததனைத்தும் படம்போல் வைதேகியின் முன் விரிய,
ரகுநந்தனின் இறுதி நேரங்கள் வைதேகியின் கண்முன் தோன்ற,
கண்கள் சிவந்து, கலங்கி நின்ற கண்ணீர் இரத்தம் போல் காட்சியளிக்க, சட்டென்று வெறி வந்தவள் போல் எழுந்த வைதேகி,
"சுதா! நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை ரகுவுடன் சேரவிடமாட்டேன்... உன் கண் முன்னால் ரகுநந்தனை நான் திருமணம் செய்து காட்டுகிறேன்..." என்று அந்த ஊரே அதிரும் வகையில் சபதமெடுத்தாள்.
வைதேகியின் சபதம் வெல்லுமா?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
💍💍💍💍💍💍💍💍
0 Comments