வருவான்-32
ரகுநந்தனின் டைரியைப் பிரித்தாள் வைதேகி. அதில் நமக்குத் தேவையான வரிகள் அடங்கிய பக்கங்கள் மட்டும்...
டைரியில்...
13/03/1994
இன்று புதிதாக ஹௌஸ்சர்ஜனாகச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களில் சுமிதா என்ற பெண் மட்டுமே ஆர்வமாக வேலை செய்கிறாள்.
20/ 03/1994 (ஒரு வாரம் கழித்து...)
இன்று ஏனோ சுமிதாவிடம் மாற்றம் தெரிகிறது... இந்தப் பெண்ணுக்கு என்ன ஆச்சு?
27/03/1994 (இரு வாரம் கழித்து...)
சுமிதா கெட்டிக்கார பெண். ஆனால் இவளும் மற்ற பெண்களைப் போலவே மனதை சிதற விடுகிறாள். இந்தப் பெண்கள் ஏன் இத்தனை வேகமாக முடிவெடுக்கிறார்களோ?
13/04/1994 (ஒரு மாதம் கழித்து...)
இன்று என் அறையை சுமிதா சுத்தம் செய்திருக்கிறாள்... கேட்டால் சிரித்துவிட்டு ஓடிவிட்டாள்... இது தவறு என்று எடுத்துக் கூறினேன்.
27/05/1994 (இரண்டாம் மாத முடிவில்...)
இன்று சுமிதா அவள் வீட்டிலிருந்து மதிய உணவு எனக்கும், ஜெய்க்கும் எடுத்து வந்திருந்தாள்.
நான் அந்தச் சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
அந்த ஜெய் வாங்கிச் சாப்பிட்டுவிட்டான் இடியட்.
நான் சுமிதா கொண்டு வந்த உணவை சாப்பிடாததால் அவளும் மதியம் சாப்பிடாமல் இருந்திருக்கிறாள்.
மதியம் மூன்று மணியளவில் சின்ன அறுவை சிகிச்சை கேஸ் வர, அங்கு வந்த சுமிதாவின் முகம், அழுதழுது வீங்கி இருந்தது. இருந்தாலும் அறுவை சிகிச்சை முடியும்வரை எனக்கு மிகவும் துணையாக இருந்தாள். எல்லாம் முடிந்து என் அறைக்குத் திரும்பும்பொழுது,
ஒரு நர்ஸ் என்னிடம் வந்து, "டாக்டர்! அந்த சுமிதா பொண்ணு மதியம் சாப்பிடல. அழுதுகிட்டே இருக்கு. என்ன விஷயம்னு கேட்டா சொல்ல மாட்டேங்குது. கொஞ்சம் என்னன்னு வந்து பாருங்களேன்." என்றதும்,
எனக்கு சுமிதா எதற்காக அழுகிறாள் என்று தெரிந்ததால், "இப்பதான் அறுவை சிகிச்சை முடிஞ்சு வரேன். எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. நீங்க, டாக்டர் செந்திலைக் கூட்டிட்டுப் போய்ப் பாருங்க." என்று கூறி விட்டு என் அறைக்கு வந்துவிட்டேன்.
ஆனால் என் மனசு உறுத்தியது. 'அவள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவளுக்கு என்ன ஆச்சுன்னு பார்த்து விட்டு வந்திருக்கனும்.' என்று தோன்றியது.
அதே நேரம் என் புத்தி, 'இல்லையில்லை நான் இப்பொழுது சென்று சுமிதாவைப் பார்த்தால், அவளிடம் எனக்கும் பிரியம் இருப்பதாக நினைப்பாள். இதை வளரவிடக் கூடாது. நாளையும் இதேபோல் சுமிதா நடந்துகொண்டால் கண்டித்து வைக்கவேண்டியதுதான்.
28/05/1995 (அடுத்த நாள்...)
இன்று காலையிலிருந்து சுமிதா எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டாள். புரிந்து கொண்டாள் என்று நிம்மதியாக இருந்தேன்…
மாலை ஐந்து மணிக்கு என் அறைக்கு வந்தாள். அவளுக்கு என்னைப் பிடித்திருப்பதாகக் கூறினாள்.
நானும் வழக்கம்போல அறிவுரை சொல்ல ஆரம்பித்ததும்,
நான் மற்ற பெண்களுக்கு என்னென்ன அறிவுரை சொன்னேனோ, அதை அப்படியே என்னைப் போலப் பேசிக்காட்டி சிரித்த சுமிதா,
"எப்ப உங்களை எனக்குப் பிடிச்சதோ அன்னைக்கிலருந்து உங்களைப்பற்றிதான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்க எப்ப, என்ன செய்வீங்க? யார்கிட்ட எப்படிப் பேசுவீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். நான் மற்ற பொண்ணுங்க மாதிரி இல்லை டாக்டர். உங்களை எனக்குப் பிடிக்கும்... ஆனா நீங்க என்னை விரும்பனும்னு கட்டாயப்படுத்த மாட்டேன்... இனி உங்களுக்குக் கோபம் வருவது போல நடந்துக்க மாட்டேன். நீங்க என்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள், ஆனால் நான் உங்களை விரும்புறேன்... உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ண மாட்டேன். தினமும் உங்களைப் பார்த்தால் போதும் எனக்கு.
அப்புறம், ஒரு முக்கியமான விஷயம், நான் உங்களைத் தொந்தரவு பண்ண கூடாதுன்னா என்னை நீங்க சுமிதா ன்னு கூப்பிடக் கூடாது... மத்தவங்க மாதிரி சுமி ன்னும் கூப்பிடக் கூடாது. சுதான்னு கூப்பிடுங்க. " என்று கூறி விட்டுப் போய்விட்டாள்.
30/05/1994 (அடுத்த இரண்டாம் நாள்...)
இப்பொழுதெல்லாம் நானாக சுமிதா மனதை மாற்றும் விதமாகப் பேச ஆரம்பித்தால், "உங்களை நான் எந்த வகையிலாவது தொந்தரவு செய்தேனா? பிறகு ஏன்?" என்ற அதே வார்த்தைகளை விதவிதமாகக் கூறினாள்.
05/06/1994 (ஒரு வாரத்திற்குப் பிறகு)
இன்று, கோஷ்டி சண்டை போட்டதால், கத்திகுத்து பட்டு, படுகாயமடைந்த ஒருவனுக்குச் சிகிச்சை அளித்து விட்டு நிமிர்ந்தால், சுதா (ஆம்! நான் அவளை நல்ல தோழியாக ஏற்றுக்கொண்டதால் சுமிதாவை, சுதா என்றே அழைக்கிறேன்.) என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
'இது மருத்துவமனை... ஒரு மனிதன் உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கான். இந்த இடத்தில் இவர்களுக்கு எப்படி இப்படியெல்லாம் தோணுது?' என்று சுதா மீது ஏற்பட்ட எரிச்சலில், எனக்கு மிகவும் கோபம் வந்து அறையை விட்டு வெளியேறிவிட்டேன்.
'நோயாளியின் உறவினரிடம், பேசலாம்' என்று போனால் அங்கே! ஏதோ ஒரு பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து வந்த பெண், நோயாளியின் உறவினர்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், என் கோபம் இரண்டு மடங்கானது. வேகமாக அவளருகில் சென்று,
"ஏம்மா! இப்படிப் பண்றீங்க? பேட்டி எடுக்குற நேரமா இது? நோயாளியின் உறவினர்களிடம் நாங்க பேசனுமா வேண்டாமா?" என்று கோபமாகக் கேட்டேன்.
என் குரல் கேட்டு அந்தப் பெண் திரும்பினாள்.
"யம்மா! சும்மா சொல்லக் கூடாது... என்ன கண்ணு டா சாமி! அழகான வட்ட முகம்... சிரித்தபோது, படபடக்கும் வண்ணத்துப் பூச்சிபோல, சிமிட்டும் கண்கள்... எள்ளுப்பூ போன்ற மூக்கு, கரு கருவென்று சுருண்ட கூந்தல் பின்னி இடைவரை தொங்கியது. பொண்ணு மாநிறமாக இருந்தாலும் என்ன ஒரு ஈர்ப்பு?"
எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது... அவள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை... மற்ற பெண்கள்போல அவள் என்னிடம் வலிய வந்து பேசியிருந்தால், நானே விலகிச் சென்று இருப்பேன்...
ஆனால் நான் வலிய அவளிடம் சென்று பேச, அவள் விலகிச்சென்றாள்....
அவளிடம் ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது... இவளைவிட அழகான எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன்... ஆனா இவள்!! சர்கார் பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கிறாளாம்...
ஜெய்யிடம் அவளை எனக்குப் பிடித்திருக்கிறதென்று கூறினேன்... அவனுக்கு மிகவும் சந்தோஷம்...
இதில் ஆச்சரியமான விஷயம் என்னன்னா? நான் அந்தப் பொண்ண சைட் அடிப்பதை பார்த்தும் சுதா கண்டுகொள்ளவேயில்லை...
அடுத்தடுத்த நாட்களில் வைதேகியின் புராணமே பாடியிருந்தான்... வைதேகி பேட்டியெடுக்க வந்தது, சுதா வீட்டிற்குச் சென்றது....வைதேகி, தொழிலதிபரைப் பேட்டி எடுக்கச் சென்றபோது அவர் வீட்டுக்கு எதிரில் வைதேகிக்காகக் காத்திருந்தது... என்று அனைத்து நாட்களும் வைதேகி... வைதேகி... வைதேகி தான்... வேறு எதுவும் எழுதவில்லை...
வைதேகியைப் பற்றி ரகுநந்தன் எழுதியிருந்ததைப் படிக்க, படிக்க ரகுவின் மனதில் வைதேகியின் மேல் இருந்த காதலின் ஆழம் வைதேகிக்குப் புரிந்தது.
வைதேகியிடம் தன் காதலைத் தெரியப்படுத்த மாட்டேன் என்று ஜெய்யிடம் கூறியிருந்தும், வைதேகியை விட்டு விலக முடியாமல், ரகு தவித்த தவிப்பு, வைதேகியின் கண்களில் கண்ணீர் வரச்செய்தது.
தினமும் வைதேகியிடம் தன் மனதைத் திறந்து காதலைச் சொல்ல வருவதும், பிறகு விலகி நிற்பதுமாக ரகுநந்தன் பட்ட கஷ்டங்கள் படிப்பவரைக் கலங்கச் செய்தது.
'ஒரு ஆண், பெண்ணை இந்த அளவு விரும்புவானா? ஒரு பெண்மீது உயிரையே வைத்திருக்க முடியுமா? தனது எதிர்காலமே அந்தப் பெண்தான் என்று தன் வாழ்நாளையே அர்ப்பணிக்க முடியுமா? அவள் காதலுக்காக இவ்வளவு தூரம் போராட முடியுமா?' என்று ஒவ்வொரு நிகழ்வையும் படிக்கும்போது, ரகுந்தனின் காதலை எண்ணி வைதேகி ஆடிப்போனாள்..
சில பக்கங்களுக்குப் பிறகு சுதாவைப் பற்றி ரகு எழுதியிருந்ததைப் படித்தாள்.
14/08/1994
நானும் வைதேகியும் ஒருவரை ஒருவர் விரும்புவது தெரிந்தும், சுதா எதுவுமே நடக்காதது போல இருப்பது எனக்கு நிம்மதியைத் தருகிறது...
சுதா நல்லபெண், புத்திசாலி அதனால்தான் நான் சொல்லாமலே புரிந்து கொண்டு விலகிவிட்டாள்... இல்லையென்றால், வைதேகி மனதில் இருந்த தடையைப் பற்றி என்னிடம் கூறி, எங்களுக்குள் இருந்த காதலை வலுபடுத்தியிருக்க மாட்டாள்... வைதேகி என் வாழ்வில் வந்தபிறகு சுதா எங்கள் இருவருக்கும் நல்ல தோழியாக இருந்தாள்...
06/09/1994 (அடுத்த மாதம்...)
இன்று நிச்சயதார்த்தத்துக்காக மோதிரம் வாங்கிவர, ஜெய்யையும், சுதாவையும் அழைத்துச் சென்றேன். நான் இதய வடிவில் சிவப்புக்கல் பதித்த மோதிரத்தைத் தேர்ந்தெடுக்க, ஜெய் நல்லாயிருக்கு என்றான்...
ஆனால் சுதா முகத்தில் சுரத்தே இல்லாமல், "ம்ம் நல்லாருக்கு!" என்றாள். அவள் சொன்ன விதமே மோதிரம் அவ்வளவு நல்லா இல்லை! என்பது தெரிந்தது. அவளிடம் நேரடியாகக் கேட்டதற்கு,
"சிவப்பு நிற கல் டேன்ஜர் லைட் போலிருக்கு... ஏதோ தப்பாத் தோணுது... கல்யாணம்கிறது பல வருட வாழ்க்கை, அதுல முடிந்தவரை நேர்மறையான விஷயங்கள் இருப்பதுதான் நல்லது..." என்றாள்.
அவள் சொன்னது சரியாக இருக்கவே, என் வைதேகிக்குப் பிடித்த இளம் ஊதாநிற கல் பதித்த மோதிரத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
இந்த மோதிரம் எங்க மூணுபேருக்குமே பிடித்திருந்தது... என் வைதேகிக்கும் பிடிக்கும். வைதேகியிடம் நிச்சயதார்த்தம் நடக்கும்போது மோதிரத்தைக் காட்ட வேண்டும்...
அவள் கண்களில் தெரியும் காதலை ரசிக்க வேண்டும். அதுவரை, மோதிரம் ஜெய்யிடம் இருக்கட்டும்.
10/09/1994 (மூன்று நாட்கள் கழித்து...)
இன்று வைதேகி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? எதுவுமே கூறாமல் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?
11/09/1994 (அடுத்த நாள்...)
நான் சோர்வாக இருப்பதைப் பார்த்த சுதா என்னிடம் விசாரிக்க, நான் நடந்ததைக் கூறினேன். உடனே சட்டென்று என் காலில் விழுந்துட்டா... நான் பதறிப்போய்த் தள்ளி நிற்க, எழுந்தவள்,
"இப்போதாவது என் காதல் எத்தனை உண்மையானதுன்னு புரியுதா? நான் உங்களை விட்டு எந்தச் சூழ்நிலையிலும் விலகினேனா? மனதைத்தொட்டு சொல்லுங்க, என்னால் உங்களுக்கு மனக்கஷ்டம் வந்திருக்கா? ஆனா வைதேகி?!! ஆரம்பத்துல இருந்தே உங்களைப் பாடாபடுத்துறா... நீங்க கவலைப்படுறது பொறுக்காமதான் உங்க ரெண்டு பேரையும் என் வீட்டில் சந்திக்க வைத்தேன்... வைதேகி விலகுறதுக்கான காரணத்தைக் கேட்டு வந்து சொன்னேன்... ஆனாலும் மறுபடியும் விலகுகிறாள்... நிச்சயதார்த்த மோதிரம் கூட வாங்கியாச்சு இப்பப் போய் ஏன் இப்படிப் பண்றா? நான் சொன்னா உங்களுக்குத் தப்பாதான் தெரியும்... உண்மையான காதல் இருந்தால், பிரிவதற்குக் காரணம் இருக்காது... காரணம் இருந்தால் அது உண்மையான காதலா இருக்காது... என்னதான் நடந்திருந்தாலும் உயிருக்குயிரானவங்களைப் பிரிந்து வாழ முடியும்னா! அது எந்த மாதிரிக் காதல்? உங்கள மாதிரி நல்லவர் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கனும்...
ஆனா உங்களுக்கு? உங்க மேல உயிரையே வச்சிருக்கிற என்னைப் பிடிக்காது... ஆரம்பத்திலிருந்தே உங்களை அவாய்ட் பண்ற வைதேகியைத் தான் பிடிக்கும்... கேட்டால், நான் வலிய வந்து காதல் சொன்னவ... வைதேகி உங்களைக் கண்டுகொள்ளாதவள்... அப்படிதானே?
தெரியாமல்தான் கேட்கிறேன், சந்தோஷமாக வாழுவதற்குக் காதல் வேண்டுமா? கண்டுகொள்ளாதவர்கள் வேண்டுமா?
காலம்பூராவும் உங்க அன்பை அவளுக்குப் புரியவச்சுக்கிட்டே இருக்கப் போறீங்களா?
நாம விரும்புறவங்கள விட, நம்மை விரும்புறவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நல்லதுன்னு, அனுபவம் வாய்ந்த பெரியவங்க சொல்லியிருக்காங்க... " என்று ஏதேதோ கூறிய சுதா,
என் அருகில் வந்து, "அவதான் வேண்டாம்னு போயிட்டாளே? இப்பவாவது என் காதலை ஏத்துக்கக் கூடாதா?" என்கிறாள்!!!
"நானே நொந்து போயிருக்கேன் நீ வேற... போ ம்மா! காதல்னா எனன நினைச்ச? அவ விலகிட்டா? அவளைவிடச் சிறந்ததைத் தேடி போறதா? அவளைவிடச் சிறந்தவள்னு இன்னொரு பொண்ண நினைச்சுட்டாலே, என் காதல் அசிங்கமானதாகிவிடும்... கடைசியில் சின்னப் பொண்ணுனு காட்டிட்டியே? நீ கிளம்பு... நாம ரெண்டு பேரும் நல்ல மனநிலையில் இருக்கும்போது பேசலாம். போ!" என்று கூறி சுதாவை அனுப்பி வைத்தேன்... "
என்ற வரிகளைப் படித்த வைதேகியின் கண்கள் கோபத்தில் சிவக்க, ரகுநந்தன் அமர்ந்திருந்த நாற்காலியை நிமிர்ந்து பார்த்தாள்.
"சுதா சின்னப் பெண் இல்லை ரகு.... அவ நம்மகிட்ட நடிச்சிருக்கா... நாமதான், குறிப்பா, நான்தான்! அவளை முழுசா நம்பிட்டேன்... அவளுக்கு உங்க மேல விருப்பம் இருக்கிறதை என்னிடம் முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா? அவ பேசுனதை நம்பியிருக்க மாட்டேன்.
உங்களைவிட அவளை நம்பியது என் தப்புதான்... ஆனாலும் என்னோட விலகலுக்கு சுதா தான் காரணம் ரகு.
நிச்சயதார்த்த சேலை எடுக்கப் போனோமே? அன்னைக்கு, உங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் நாள்ல கொடுக்க ஒரு வாட்ச் பரிசா வாங்கினேன். உங்களுக்குப் பொருத்தமா இருக்கனும். அதே நேரம் உங்களுக்குப் பிடிச்சதா இருக்கனுமேனு ஏழெட்டு கடை ஏறி இறங்கினேன்...
அப்ப சுதா என்கிட்ட, "நீ இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை வைதேகி... நீ பார்க்கும் வேலையைப் போலத்தான் உன் எண்ணங்களும் இருக்கு. இல்லையா?" என்று கேட்டாள்.
எனக்கு, 'அவள் என்ன சொல்ல வர்றா?'னு புரியல. அவளிடமே விளக்கம் கேட்டதற்கு,
"உன் வேலை, உண்மையுடன் கற்பனை கலந்தது. அலங்காரம் இருக்க வேண்டும். அதை அழகுபடச் சொல்ல வேண்டும்... படிப்பவரை ஈர்க்க வேண்டும்... மீண்டும், மீண்டும் உங்கள் ஆக்கங்களை மக்கள் தேட வேண்டும்… இதல்லாம் செய்யக் கற்பனை உணர்ச்சி மிகவும் முக்கியம். அதாவது உணர்வுபூர்வமாக இருக்கும். இல்லையா? என்று என்னிடம் கேட்டாள்.
நானும் "ஆமாம்!" என்றேன்.
"நீ பரிசுப் பொருள் தேடும் விதத்திலேயே தெரிகிறது. இதுவே நான் வாங்கியிருந்தால் உபயோகமாக இருக்குமா? என்று மட்டும் தான் பார்ப்பேன்... ஏன் னா? என் வேலை அப்படி! அதாவது டாக்டர்!
எங்கள் வேலையில் கற்பனை கிடையாது... அதனால் நாங்கள் கற்பனை செய்வதே இல்லை எதற்காகவும்.
டாக்டர் தொழிலில் அலங்காரம் செய்வதில்லை... அதனாலேயே எங்களுக்கு அலங்காரத்தின் மேல் பிடிப்புக் கிடையாது.
எங்கள் தொழிலில் அழகாகச் செய்ய வேண்டும், பிறரை ஈர்க்க வேண்டும் என்பது கிடையவே கிடையாது... அதனால எங்கள் கண்களுக்கு அழகான விஷயங்களில் ஆர்வமுமில்லை, மற்றவரை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை...
எங்களை மக்கள் ஆசையுடன் தேடிவரமாட்டார்கள்... அதனால் எங்களை மற்றவர்கள் அன்புக்காகக் கூடத் தேட வேண்டும் என்று எதிர்பார்க்கிறதில்லை.
மொத்தத்துல எங்கள் வேலையை நாங்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதில்லை... அதேபொல் தான் எங்களுடன் இருப்பவர்களையும் உணர்வுப் பூர்வமாகப் பார்க்கமாட்டோம்... எங்களுக்கு மற்றவர்களின் அன்பினால் வரும் துடிப்பு கூடச் சாதாரண விஷயம் தான்..." என்று சொல்லிக் கொண்டு போனவளை நிறுத்தி,
"என்ன சுதா ஏதேதோ சொல்ற? நிஜமாவே சொல்றியா? இல்ல என்கூட விளையாடுறியா? " என்று கேட்டேன்.
ஏன்னா அவ சொன்ன ஒவ்வொரு வார்தையையும் எனக்கு நம்பமுடியாத தாக இருந்தது. 'அடுத்தவர் உணர்வுகளைப் புரியாமல் சாதாரணமாக ஒரு மனிதனால் இருக்க முடியுமா?' என்று அசந்து போனேன்...
"இதில் விளையாட என்ன இருக்கு?"
"நீ என்ன வேற்றுக் கிரக வாசியா?"
"நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லைனா, வேற யாராவது டாக்டர்கிட்டக் கேளு." என்றவள்,
"ஜெய்! நல்லவர்தானே? உன்னைப் பாதிக்குற மாதிரி எதுவும் செய்யமாட்டார் தானே? அவரிடமே கேட்டுப்பார்." என்றாள்.
ஏனொ 'இதைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்' என்று தொன்றியது.
நான் ஜெய்யிடம் நேரில் கேட்கச் சங்கடபட்டு, கேமரா ரமேஷ்சை ஜெய்க்கு ஃபோன் பண்ணிக் கேட்கச் சொன்னேன்...
ரமேஷும், ஜெய்யிடம் பேசி, அதை ரெக்கார்ட் பண்ணியும் என்னிடம் கொடுத்தான்...
அதில் சுதா என்ன சொன்னாளோ அதையே ஜெய்யும் சொல்லியிருந்தார்.
எனக்கு பயமாகிவிட்டது. டாக்டர் தொழிலில் இருப்பவர்கள் எல்லோருமே இப்படியா? உணர்வுகள் இல்வாமல் காதல் எப்படி வரும்? காதல் இல்லாமல் இல்லறம் எப்படி இருக்கும்? என்று பலவிதமான குழப்பங்கள்... உங்களிடம் கேட்கச் சங்கடபட்டு மீண்டும் சுதாவையே சந்தித்துப் பேசினேன்.
"டாக்டர் வாழ்க்கையில் உணர் இல்லைனா காதல் எப்படி வரும்?" என்று கேட்டேன்.
"அதற்குப் பதில் 'தேவை' தான் என்றாள்.
அதைக் கேட்ட எனக்குப் பாதி உயிர் போய் விட்டது... இருந்தாலும் உங்கமேல இருக்கிற நம்பிக்கையில்,
"ஒரு சிலர் அப்படி இருக்கலாம்... ரகு மாதிரி டாக்டர்களும் இருக்கிறார்கள்." என்று நான் சொன்னதும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவள்,
"சாரி!.... வேண்டாம் என்கிட்ட ரகு பத்தி எதுவும் கேட்காத. கல்யாணம் பண்ணிக்கப் போற நேரத்துல வந்து கேட்கிற? ஆரம்பத்துல கேட்டிருந்தா உண்மை சொல்லலாம்... இப்போ நான் சொன்னாத் தப்பா ஆயிடும்... ஓகே! விட்டுடு...
நான் ஜஸ்ட் என்னைப் பத்திதான் உங்கிட்ட சொன்னேன்... எல்லா டாக்டரும் அப்படியா?னு நீ கேட்டதால் தான் ஜெய்யிடம் கேட்கச் சொன்னேன்...
அப்பக்கூட உன்னை ரகு கிட்ட கேட்கச் சொல்லலை. இதெல்லாம் போட்டுக் குழப்பிக்காம கல்யாண வேலையைப் பார்." என்று கூறி சிரித்தாள்.
அவள் வார்த்தையில் இருந்த அக்கரை என்னை மேலும் பயமுறுத்தி, சுதாவிடம் உண்மையை சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தினேன்.
"நீ தப்பா எதுவும் எடுத்துக்கலைனா சொல்றேன் னா.
நானும் "சரி" என்றதும்,
"ரகுகிட்ட காதல் சொல்லாத பெண்களே இல்லை... ரகுவைப் பார்த்ததும் காதல் சொன்னப் பெண்களைத்தான், இதுவரை ரகு பார்த்திருக்கார்.
நீ அப்படி இல்லாம, அவரைக் கண்டுக்காம இருக்கவும், அவருடைய ஈகோ பாதிக்கப்பட்டுருச்சு. உன்னையும் அவரைக் காதலிக்க வைக்க நினைச்சார் முடிச்சுட்டார். தட்ஸ் ஆல்!" என்றதும், மீதி உயிர் போன நிலையில் நான் இருக்கும்போது,
அப்பொழுது எங்கள் அருகில் வந்த உங்களிடம்,
"ரகு! உங்க பின்னாடி நிறையப் பெண்கள் சுத்துனாங்க, வைதேகி அப்படி இல்லாததால தான, அவகிட்ட நீங்க காதல் சொன்னீங்க?" என்றதும்,
நீங்களும் "ஆமாம்!" என்றீர்கள்.
'அது எப்படி முகத்திலடித்தது போல உங்களால சொல்லமுடிஞ்சது'ன்னு தோணவும், எனக்குத் தலைவலிக்குதுன்னு சொல்லி வீட்டுக்குக் கிளம்பினேன்...
உங்களால் வர முடியலைன்னு, சுதாவையே எனக்குத் துணையாக அனுப்பி வைத்தீர்கள். எனக்குக் கண்கலங்கிக் கண்ணீர் வரவே,
"இதுக்குத்தான் நான் சொல்லமாட்டேன்னேன்... இப்படியே வீட்டுக்குப் போனா பயந்துடப் போறாங்க. வா! ஒரு காபி குடிச்சுட்டு, முகத்தை சரி பண்ணிட்டுப் போகலாம்." என்று கூறி அருகில் இருந்த காபி ஷாப்க்குப் போனோம்.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது... 'உங்களுக்கு என்மீது காதல் இல்லைனா என்ன? அரேன்ஜ்டு மேரேஜ்னு நினைச்சுக்கிறேன்.' என்று, என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்ட நேரத்தில்,
"உன்னை மாதிரி அனுசரிச்சுப் போகும் பெண்கள்தான் எங்களை மாதிரி டாக்டர்களுக்குச் சரிபட்டு வரும்... என்னைக்கேட்டா கல்யாணத்துக்கு முன்னாடி, நீ கற்பனைகளோட தயாராவதைவிட, எங்களைப் போல மாறிடு...
அதுவும் ரகுவுடன் வாழ்வதற்கு நீ இன்னும் மாற வேண்டியிருக்கும். என்னைப் போல டாக்டருக்கே இப்படி ஆயிட்ட? ரகு மாதிரி சர்ஜனை எப்படி சமாளிப்ப?
அதுவும் ரகு! பிரேத பரிசோதனையில் சிறந்தவர். அவரைப் பொறுத்தவரை மனித உடல் என்பது ஜஸ்ட் 'ஆப்ஜக்ட்'.
அது பிணமாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி. புரியும்னு நினைக்கிறேன்.
சோ! கற்பனைகளோட கல்யாணம் பண்ணிக்காத. தேவையில்லாத கற்பனைகளைத் தூக்கி எறிஞ்சுட்டு எதார்த்தமான வாழ்க்கை வாழப் பழகு. நீ நினைப்பது போல உணர்வுகள் சேர்ந்தால் மட்டுமே உடல் சேரனும்கிற எண்ணத்தை..."
"போதும்!" என்று கத்திவிட்டு வீட்டுக்குப் போயிட்டேன்.
என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அரேன்ஜ்டு மேரேஜ் ஆக இருந்தாலும், உணர்வுகள் ஒன்று சேராமல் பிணம்போல் கிடக்க என்னால் முடியவே முடியாதுன்னு எனக்குத் தெளிவான பிறகுதான் நாம பிரிஞ்சுடலாம்னு சொன்னேன்.
கடைசியா ஒரு தடவை மனம் விட்டுப் பேசிப் பார்க்கலாம்னு அப்பப்ப தோணுச்சு... ஆனா இந்தப் பிணம் மாதிரி கிடக்கனும்ங்கிற வார்த்தையைத் தாண்ட, என்னால முடியல.
கடைசியில் என் பத்மா அத்தை உங்க கூட உங்க வீட்டுக்கு வந்துடுறதா முடிவுக்கு வந்தாங்க... அப்ப என் அத்தைகிட்ட, "என்னைவிட உனக்கு ரகு தான் முக்கியமா?"ன்னு கேட்டேன். அப்ப என் பத்மா அத்தை சொன்னது,
"நீ எதுக்காக ரகுவைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன்னு தெரியல. ஆனா ரொம்பத் தப்பான முடிவு. அவன் நல்லவன். அவன் கண்களில் உண்மையான பாசத்தைப் பார்த்தேன்... மறுபடியும் பாசத்துக்கு ஏங்கி அவன அனாதையாக்க விரும்பல. எனக்கு அவனுடைய பிள்ளைப் பாசம் வேணும்." என்று சொல்லிட்டு தூங்கப் போயிட்டாங்க.
அப்ப எனக்கு ஒன்று தோன்றியது. தாய்ப் பாசம் புரிந்த உங்களுக்கு மனைவியின் காதலும் புரியும்னு முடிவுக்கு வந்தேன்.
அதனால்தான் அடுத்தநாள் ஜெய் வந்து, ஒரு முறை ரகுவுடன் பேசிப் பாருங்கன்னு சொன்னதும் ஒத்துக்கொண்டேன்.
மறுபடியும் நான் செய்த தவறு, நான் கடைசியா வந்து பார்க்கலைனா நீங்க தற்கொலை பண்ணிக்குவீங்கன்னு ஜெய் சொன்னதை நான் நம்பல. சும்மா பயமுறுத்துறீங்கன்னு நெனச்சேன். இல்லைனா ஜெய் கூடவே வந்திருப்பேன். உங்களைத் தற்கொலை பண்ணவிடாம தடுத்திருப்பேன்." என்று வைதேகி சொன்ன செகண்ட் டில் சட்டென்று நாற்காலி பின்புறமாக விழுந்தது... வைதேகியின் கையிலிருந்த டைரி பறிக்கப்பட்டுக் குறிப்பிட்ட பக்கத்தில் நின்றது.
அந்தப் பக்கத்தில் என்ன இருந்தது?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments