வருவான்-31

 வருவான்-31


ரகுநந்தனுக்கு வருடத்திற்கு ஒரு முறை திதி கொடுக்க நினைத்த செல்வம், குளக்கரையில், யாருக்கோ திதி கொடுப்பதற்கான காரியத்தில் இருந்த ஐயரிடமே,  விபரம்  கேட்டார். 


இது எதிலும் கலந்து கொள்ளாமல், எதையோ வெறித்தவண்ணம் இருந்த வைதேகி, 'பாவம் இவர்கள் யாரை இழந்து விட்டுப் பரிதவிக்கின்றனரோ?' என்று நினைத்தவாறு எதார்த்தமாகத் திரும்பிப் பார்த்தவள், கண்கள் விரிய மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவள், தடுமாறி பத்மாவின் கைகளைப் பற்றினாள்.


  "என்னம்மா? என்ன ஆச்சு? இப்படி ஓரமா உட்காரு." என்று பதறிய பத்மா, தன் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வைதேகியிடம் கொடுக்க, 


பத்மாவின் கையை விலக்கிவிட்டு, அந்தத் தம்பதியர் அருகில் சென்று பார்த்ததும், அவர்களை அடையாளம் கண்டு கொண்ட வைதேகி, 


  "நீங்க சுதாவோட அப்பா, அம்மா தானே? நான் வைதேகி! சுதாவின் தோழி! ஒரு முறை மார்கழி விருந்துக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தேனே?" என்றதும், வைதேகியை உற்றுப் பார்த்த தம்பதியர்,


  "அப்படியாம்மா?  ஆனா எங்களுக்கு அடையாளம் தெரியலை..." என்று கூறியதைக் காதில் வாங்காத வைதேகி, 


அந்தத் தம்பதிக்கு எதிரே போட்டோவில் மாலை அணிவித்து இருந்த சுதாவின் புகைப்படத்தைப் பார்த்தவாறு, 


  "சுதாவுக்கு என்ன ஆச்சு? " என்று அவசரமாகக் கேட்டாள்.


  "மூன்று வருஷத்துக்கு முன்னாடி சுதா, விபத்து ஒன்றில் பலியாயிட்டாம்மா," என்று கூறி அழுதனர்.


 ஒரு நிமிஷம் வைதேகிக்கு அதிர்ச்சியாகி விட்டது... 'இது என்ன? அதே வருஷத்தில் ரகுநந்தனும் அவனுடனிருந்த, ஜெய், சுதா மூவரும் இறந்துவிட்டனர்!!!' என்று நினைத்தவளுக்கு முதன்முறையாக சந்தேகம் வந்தது. 


'இது எதார்த்தமாக நடந்ததா? இல்லை, இவர்கள் மூவரின் மரணத்தில் வேறு ஏதேனும் வில்லங்கம் இருக்கா?' என்று நினைத்தவள், 


சுதாவின் பெற்றோரிடம்,  "சுதா எப்படி இறந்தாள்?" என்று கேட்க, 


அவர்கள் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து விட்டாள்.  என்றனர்.


  வைதேகியின் உள்ளுணர்வு, "இந்த மரணங்கள் இயற்கையானதில்லை." என்று அறிவுறுத்த, 


  "அவ என்ன குழந்தையா? தவறி விழ? தற்கொலை செய்து கொண்டாளா?" என்று வைதேகி கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சுதாவின் பெற்றோர்,


  "கொஞ்சம் வெயிட் பண்ணும்மா... இதோ வந்துடுறோம்." என்றவர்கள் சுதாவிற்கு செய்யவேண்டிய அனைத்தையும் செய்து முடித்து ஐயரையும் அனுப்பிவிட்டு, வைதேகி குடும்பத்தினர் அருகே வந்தனர்.


  "எங்களுக்கும் நிறைய சந்தேகம் இருந்துச்சும்மா.  ஆனால் அது தற்கொலை இல்லை... தவறிதான் விழுந்துட்டான்னு போலீஸ்காரர்கள் சொன்னாங்க." என்றனர் சோகமாக,


  "உங்களுக்கு ஏன், சுதா தற்கொலை செய்திருப்பாளோன்னு சந்தேகம் வந்துச்சு?" என்று வைதேகி கேட்டாள். 


அதற்கு சுதாவின் அம்மா, "அவ ஒரு பையனை விரும்பினா. அவன் இறந்துட்டானாம்... அவன் இறந்து இரண்டே நாளில் இவ மாடியிலிருந்து விழுந்துட்டா, எனக்கு சந்தேகம் வருமா? வராதா?" என்று கேட்டார்.


 இதைக் கேட்ட வைதேகிக்கு ஆச்சர்யமாகி விட்டது.  


'சுதா விரும்பினாளா? யாரை?' என்று நினைத்தவளுக்கு, 


சுதா எப்பொழுதும் ஜெய் அருகிலேயே நின்றது, அவனை வம்பிழுத்தது, அவனைத் தொட்டுத் தொட்டுப்‌ பேசி,  அவனிடம் திட்டு வாங்கியது ஞாபகத்திற்கு வந்தது. 


'ஒரு வேளை சுதா, ஜெய்யை விரும்பினாளோ?' என்று நினைத்த வைதேகி, சுதாவின் அம்மாவிடம், 


   "சுதா யார விரும்பினான்னு உங்ககிட்ட சொன்னாளா?" என்று கேட்டாள்.


"இல்லம்மா! ஆனா நான் அவ நடவடிக்கைகளைக் கவனிச்சத வச்சுச் சொல்றேன். நாங்க இருந்த பழைய வீட்டுல, மார்கழி விருந்துக்குக் கூட அந்தப் பையன் வந்திருந்தான்." என்றதும், 


'சுதா ஜெய்யைத்தான் விரும்பியிருக்கிறாள்' என்று உறுதியாகப் புரிந்தது. 


'ஜெய்யும், ரகுநந்தன் இறந்த அன்று தானே இறந்தான்? !!... ஆனால் சுதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று போலீஸ்காரர் சொல்லியிருக்கிறாரே?' என்று நினைத்தவள், 


'இன்னும் ஏதாவது விஷயம் கிடைக்குமா?' என்று எண்ணி,


 சுதாவின் அம்மாவிடம் பேசியும், அவங்க அம்மாவிற்கே எதுவும் சரிவரத் தெரிந்திருக்கவில்லை என்றதும், 


சுதாவின் பெற்றோர்களிடம் அவர்களின் புதிய வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு, சுதாவின் பெற்றோரிடமிருந்து விடைபெற்றனர்.


     பஸ் ஸ்டாப் வந்ததும், "நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போங்க, நான் இதோ வர்றேன்." என்று  கூறிய வைதேகியிடம்,


"ஏதாவது பிரச்சினைனு நினைக்கிறாயாம்மா?" என்று கேட்டார் செல்வம்.





"ஆமாம்ப்பா! ஏதோ தப்பாத் தோணுது. நான் ஒரு நிருபராகப் போலீஸ் ஸ்டேஷன் வரை போயி, சுதா, ஜெய் மரணத்தப் பத்தி விசாரிச்சுட்டு வர்றேன் நீங்க கிளம்புங்க." என்றாள் தீவிரமாக,


  "நான் துணைக்கு வரட்டுமாம்மா?" என்று செல்வம் கவலையுடன் கேட்டதும், அவரைப் பார்த்துச் சிரித்த வைதேகி,


  "நான் உங்க பொண்ணுப்பா... பயம்னாலே என்னனு தெரியாது எனக்கு... அதோட நான் பத்திரிக்கை நிருபரா போனாதான் போலீஸ்காரர்களிடமிருந்து விபரங்களைப் பெற முடியும். நீங்க என்கூட வந்தா, நாம எதுக்காக இந்த விஷயத்தைப் பத்திக் கேட்கிறோம்னு, பிரச்சனை ஆயிடும்." என்று கூறி விட்டு வைதேகி, வேறு பஸ்ஸில் ஏறிச் சென்று விட்டாள்.


  "நிருபருக்கான அடையாள அட்டை இல்லாம போறாளே பத்மா?" என்று பத்மாவிடம் கேட்ட செல்வத்திடம்,


  "அவ ஹேண்பேக்ல எப்பவுமே அடையாள அட்டை இருக்கும்ண்ணே. நாம வீட்டுக்குப் போவோம்... " என்று வைதேகி சென்ற பாதையைப் பார்த்தவாறே கூறினாள் பத்மா.


  ஜெய்க்கு விபத்து நடந்த பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கேட்டதுவரை ஜெய்க்கு விபத்துதான் நடந்திருப்பது ஊர்ஜிதமானது. 


ஜெய் பைக்கில் வேகமாகச் சென்று, திடீரெனத் திரும்பிய பஸ்ஸில் சிக்கி, பஸ் பிரேக் போட்டதும், பிரேக் போட்ட வேகத்தில் பிளாட்பாரத்தில் தலை மோதியதால் இறந்திருக்கிறார் என்று தெளிவாக  ஆய்வு அறிக்கையில் இருந்தது.


  அடுத்து சுதா இருந்த பகுதி ஸ்டேஷனுக்குச் சென்று, சுதா இறந்ததில் உள்ள சந்தேகங்களைக் கேட்க, சம்பவம் புதிய வீட்டிற்குச் சென்றபிறகு நடந்தது தெரியவர,  அந்தப் பகுதி சப்இன்ஸ்பெக்டர்,  


  "அந்தப் பொண்ணு தற்கொலை செய்துக்கலை... தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள்,  மாடியிலிருந்து நேராகக் கீழே தரையில் விழும்படியான இடத்தைத்தான் தற்கொலை செய்து கொள்ளத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அந்தப் பொண்ணு, மாடியிலிருந்து கீழ்வீட்டுத் திண்ணைப் பகுதிக்கு மேல் உள்ள ஓட்டில் விழுந்து,  உருண்டு கீழே இருந்த மாட்டுத் தொழுவத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து, மயக்கத்தில் தண்ணீர் அதிகம் பருகியதால் உயிரிழந்து இருக்கிறாள். யாராவது இப்படியொரு இடத்தைத் தற்கொலை செய்து கொள்ளத் தேர்ந்தெடுப்பார்களா? 


மேலும், சுதா விழுந்த விதம்! எதிர்பாராமல் விழுந்ததால் கோணல் மாணலாக, கண்டபடி விழுந்திருக்கிறாள். 


அதோடு உயிர்தப்புவதற்காக முயற்சி செய்திருக்கிறாள் என்பதற்கான அடையாளங்கள் இருந்தது." என்று கூறி, 


சுதா விழுந்த ஓடுகளை, தண்ணீர் தொட்டிலில் சுதா கிடந்த நிலையை எடுத்த புகைப்படங்களைக் காட்டினார். 


அந்தப் புகைப்படங்களைப் பார்த்த வைதேகிக்கு சுதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது தெளிவானது.


'இதுவும் எதார்த்தமாக நடந்ததா?' என்று நினைத்தவள், மீண்டும் அந்தப் புகைப்படங்களை மற்றும் பிரேத ப‌ரிசோதனை‌ அறிக்கையைப் படித்துப் பார்த்தவளுக்கு, அறிக்கையில் இருந்த ஒரு விஷயம் வினோதமாகப் பட்டது. 


 சுதா கீழே விழும்போது அவளுடைய மோதிர விரல் எதிலோ மாட்டி இழுபட்டதில், மோதிரவிரலில் நிறையக் கீரல்கள் இருந்ததாக எழுதப்பட்டிருக்கவும், 


சுதாவின் புகைப்படத்தைக் கூர்ந்து பார்த்தாள். சுதாவின் மோதிர விரல் சேதபட்டிருப்பது தெரிந்தது. 


  'மாடியிலிருந்து விழும்போது,  அதெப்படி மோதிர விரல் மட்டும் மாட்டும்?' 


அந்த விரலில் இருந்த காயத்தைப் பார்த்தால் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து விடுபட்டால் ஏற்படும் கீரல்கள் அதுவும் சீராக இருந்தது... சிறு பகுதியில் விரல் எப்படி மாட்டும்? என்று நினைத்தவளுக்கு, 


பத்திரிக்கைக்காரியின் மூளை விழித்துக்கொண்டது. 


'யாராவது சுதாவை தள்ளிவிட்டார்களா? அப்பொழுது அவள் விரல்?!!! சிறுபகுதி?!!! மோதிரம்!! சுதாவின் மோதிரம் எதிலோ மாட்டி இழுபட்டு விழுந்திருக்கிறாள்.' என்று தோன்ற அதை சப்இன்ஸ்பெக்டர்டம் கேட்டாள். 



அவர்களும் அதே சந்தேகத்தில் தேடியபோது, மோதிரம் எதுவும் கிடைக்கவில்லை. அதோடு "சுதா மோதிரமே அணியவில்லை என்று சுதாவின் பெற்றோர் அடித்துக்கூறினார்கள்." என்றார்.  


  ஆனால் சுதாவின் விரலில் மோதிரம் இருந்திருக்க வேண்டும் என்று வைதேகிக்குத் தோன்ற,


மேலும் சில விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, சுதாவின் புதிய வீட்டிற்குச் சென்றாள். 


சுதாவின் பெற்றோர், சுதா தன் வேலைக்குத் தொந்தரவாக இருக்கும்  என்று  நிச்சயமாக மோதிரம் அணியவில்லை என்றனர். 


சுதா விழுந்த மாடியில் ஏறி, அவள் விழுந்து கிடந்த கோலத்தை நினைத்தவாறு பார்த்தாள்.


எல்லாமே வினோதமாக இருந்தது. 'மாடியின் கைப்பிடிச்சுவரைத் தாண்டி விழுவது எப்படி சாத்தியம்?' என்று அந்தக் கைப்பிடிச்சுவரை உற்று பார்த்தாள். 


சுதாவின் பிரேத ப‌ரிசோதனை‌ அறிக்கையில் குறிப்பிட்டவாறு, மோதிர விரல் மட்டும் மாட்டிக்கொள்ள வழியே இல்லை. 


"மோதிரமும் போடாத நிலையில், அந்த விரல் இழுபட்டுக் கீரல்கள் விழுந்தது எப்படி?" என்ற சந்தேகத்துடன், சுதா விழுந்த பகுதிகளில், வைதேகி இறங்கி கூடப் பார்த்துவிட்டாள். ஆனால்  எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.


   அடுத்தநாள் ரகுநந்தன் வேலை பார்த்த மருத்துவமனைக்குச் சென்று, ரகுநந்தன், ஜெய், சுதா பற்றி விசாரித்தாள். 


அங்கு, சுதா, ஜெய்யை விரும்பியதே யாருக்கும் தெரியவில்லை. 


ஜெய் தவிர வேறு யாரையேனும் விரும்பியிருப்பாளோ? என்ற கோணத்தில் விசாரித்தாள். அதற்கும் ஆதாரமில்லை.   


பிறகு மரூத்துவமனையில் ரகுநந்தனின் தனியறைக்குச் செல்ல அனுமதி கேட்டபோது, 


அங்கிருந்த டாக்டர் முதல் நர்ஸ் வரை, "வேண்டாம் அங்கே போகாதீர்கள். " என்றனர். 


"ஏன்?" என்று வைதேகி கேட்டதும்,


 பூட்டியிருக்கும் அந்த அறையில் ஆள் நடமாடும் சப்தம் வருவதாக அனைவருமே கூறினர். 


"அதாவது, ரகுநந்தன் அந்த அறையில் இருக்கிறார் என்கிறீர்களா? பரவாயில்லை... அவர் என்னை ஒன்றும் செய்துவிட மாட்டார்... அதோடு, எனக்கும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கு" என்று கூறி விட்டு,


பிரேதபரிசோதனை கூடத்தில் இருந்த ரகுநந்தனின் அறையைத் திறந்தாள். 


யாரும் அவளுடன் வரத்தயாராக இல்லை. பரிசோதனை கூடத்தின் வாசலிலேயே நின்று கொண்டனர்.


   ரகுவின் அறை! வைதேகிக்கு வித்யாசமான உணர்வைத் தந்தது... உண்மையிலேயே ரகு அருகில் இருப்பது போல் உணர்ந்தாள்... 


தன்னால் இறந்தவனுக்குத் தன்மீது கோபம் இருக்கும் என்று தோன்றினாலும், "ரகு!" என்று வைதேகி அழைத்ததும்,


 வெளிவாசலில் 'தடதட'வென வென்று சப்தம் கேட்டு, வேகமாக அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது, வைதேகிக்குத் துணையாக வந்த ஆயா ஓடிக்கொண்டிருந்தார்.


  "ச்சே இந்த ஆயா பயந்து, என்னையும் பயமுறுத்தி விட்டதே?!!" என்று தனக்குத் தானே கூறியவள், மீண்டும் ரகுநந்தன் அறைக்குள் சென்று,


  "ரகு! நீங்கள் என்னைக் கொன்றாலும் பரவாயில்லை! உங்கள் மூவருக்கும் என்னதான் நடந்தது? தயவுசெய்து  எனக்குத் தெரியப்படுத்துங்கள்... " என்று பேசியவாறு ரகுவின் அறை முழுவதும் பார்வையை ஓடவிட்டாள். 


மற்றவர்கள் கூறியதைப் போல ஆள் நடமாட்டம் இருப்பது போலத் தெரியவில்லை. 


அந்த அறை வைதேகியின் மனதை கஷ்டபடுத்த, அறையைவிட்டு வெளியேறத் திரும்பினாள்.


  சட்டென்று தன் பின்னால் ஏதோ சப்தம் கேட்க, பயத்தில் தூக்கி வாரிபோட்டாலும், தைரியமாகப் பின்னால் திரும்பிப் பார்த்தாள். அதுவரை மூடியிருந்த மேஜை டிராயர் திறந்திருந்தது. 


'இது எப்படி சாத்தியம்?' என்று நினைத்தவள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த மேஜையருகில் சென்றாள். 


அதில் ஒரு சாவி இருந்தது. ‘அந்தச் சாவி, எதற்குப் பொருத்தமானது?’ என்று அறையைச் சுற்றிலும் தேடினாள். 


எதுவும் தெரியவில்லை. அலமாரிகளும் கதவுகள் இல்லாதவைகளாக இருந்தன. மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட வைதேகி,


  "ரகு! நீங்க இங்கே இருக்கீங்கன்னு தெரியும்... இந்தச் சாவி எதற்கானது?" என்று கேட்டாள்.


உடனே கட்டிலின் அடியில் ஏதோ அசைவது போலக் கேட்க, பயத்தில் வைதேகிக்குத் தொண்டை வறண்டது... 


இருந்தாலும் கீழே குனிந்து பார்த்தாள். அங்கே ஒரு பெட்டி இருந்தது. அதை வெளியே எடுத்துக் கட்டிலின் மேல் வைத்து, கையிலிருந்த சாவியால் பெட்டியைத் திறந்து பார்த்தாள். 


அதில் ரகுவின் டாக்டர் கோட், மற்றும் தேவையான பொருட்களுடன் ஒரு டைரியும், சிறிய மோதிரப் பெட்டியும் இருந்தது... 


அதைப் பார்த்தவள் கைகள் நடுங்க, மோதிரப் பெட்டியை எடுத்துத் திறக்க, அதில் இரு மோதிரங்கள் வைக்கும் அமைப்பு இருந்தும் ஒரே ஒரு  ஊதா கலர் கல் வைத்த மோதிரம் மட்டும் இருந்தது. 


மற்றொரு மோதிரம் வைக்கும் இடம் காலியாக இருந்தது.  அதில் இருந்த ஒரு மோதிரம், பெண்கள் அணியும் மோதிரம் என்பது தெரிந்தது. 


அந்த மோதிரத்தை எடுத்துத் தன் விரலில் மாட்ட நினைத்து, மோதிரத்தை எடுக்க, 


வைதேகியின் பின்னால் இருந்த நாற்காலியில் யாரோ சட்டென்று அமர்வது போல சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். 


நாற்காலியில் யாரும் இல்லை... 'ஒருவேளை ரகுநந்தன் அதில் அமர்ந்திருக்கிறானோ?' என்று நினைத்தவள், கண்களைக் கசக்கிப் பார்த்தாள்... ம்ஹூம் எதுவும் தெரியவில்லை.  இருந்தாலும் ரகுதான் அங்கு இருக்கிறான் என்று நம்பி,




  "ரகு! உங்கள என்னால பார்க்க முடியல... இந்த மோதிரம் எனக்காக வாங்கியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்... அது நிஜம்னா, உங்க  கையால எனக்கு மோதிரம் போடும்வரை காத்திருக்கேன்." என்று கூறியவள்,  



   அந்த மோதிரபெட்டியை எடுத்துத் தன் ஹேண்பேக்கில் வைத்துக்கொண்டு, அருகில் இருந்த டைரியைப் புரட்ட, அதில்....


   என்ன இருந்திருக்கும்?


    வைதேகி எடுத்து வைத்த மோதிரம் எப்படி அந்த அறையிலேயே இருந்து, பூவினா கையில் கிடைத்தது?


      நண்பனாகப் பார்த்த  பூவினா கண்களுக்குத் தெரிந்த ரகுநந்தன், தன் உயிர் காதலி வைதேகி கண்களுக்குத் ஏன் தெரியவில்லை?


   அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...


  💍💍💍💍💍💍💍💍💍


   


  



Post a Comment

0 Comments