வருவான்-30
கதவைத் திறந்த பெண்மணியிடம், "நான் தான் ஜெய். " என்று ஜெயராம் கூறவும், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்மணி, அதே இடத்தில் அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டார்.
"பத்மா! தயவு செய்து அழாதீங்க... என்ன இப்படி ஆயிட்டீங்க? உங்க அண்ணா, வைதேகியெல்லாம் எங்கே?" என்று கேட்டான் ஜெய் என்ற ஜெயராம்.
இன்னும் அதிர்ச்சி விலகாமல், ஜெயராமைப் பார்த்த பத்மா, (நம்ம வைதேகியின் அத்தை தான்)
"ஜெய் நீயா? உன்னைப் பார்த்தால், நாற்பது வயதுகளில் இருப்பவன்போலத் தெரியலையே?!!" என்று சந்தேகமாக பத்மா கேட்க,
"பத்மா! நான் ஜெய்சஞ்சீவ் தான்! கடைசியா இங்க வந்து வைதேகியையும், உங்களையும் பார்த்துட்டுப் போகும்போது எனக்கு விபத்து நடந்துருச்சு... அந்த விபத்துல ஜெய்சஞ்சீவ்வா வாழ்ந்த நான் இறந்து, ஜெயராமா மறுபடியும் பிறந்திருக்கிறேன்." என்று ஜெயராம் கூறியதைக் கேட்ட வேலுவிற்கு அதிர்ச்சி,
"ஜெயராம்!" என்று அழைக்க, திரும்பிப் பார்த்த ஜெயராம்,
"வேலு! இவங்கதான் பத்மா! வைதேகியின் அத்தை! எனக்கு எல்லாம் ஞாபகத்துக்கு வந்துருச்சு வேலு." என்று கண்கலங்க கூறியபடி ஓடிவந்து தன் நண்பனைக் கட்டிக்கொண்டான்.
ஜெயராம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைப் பார்த்த வேலு.
"சரி! சரி! முதல்ல பதட்டம் இல்லாமப் பேசு... ரொம்ப உணர்ச்சி வசப்படாதே..." என்று தன் நண்பனை அசுவாசப்படுத்திய வேலு.
பத்மாவிடம், "கொஞ்சம் தண்ணீர் கொடுங்களேன்." என்று கேட்கவும்,
அதிர்ச்சியிலிருந்து மீண்ட பத்மா வேகமாக வீட்டினுள்ளே செல்லத் திரும்பியவர், ஞாபகம் வந்தவராக, அனைவரையும் பார்த்து,
"எல்லாரும் வீட்டுக்குள்ள வாங்க!" என்று வரவேற்று அனைவரையும் அமரவைத்து விட்டு, ஜெயராமிற்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்தார்.
ஜெயராம் தண்ணீர் குடித்து வைக்கும் வரை, அனைவரும் அமைதியாக ஜெயராமையே பார்த்தவண்ண மிருந்தனர்.
ஒரு வழியாகப் பதட்டம் குறைந்த ஜெயராம், பத்மாவைப் பார்த்து,
"வைதேகி எங்கே? வைதேகியைப் பார்ப்பதற்காகத்தான் நாங்க வந்திருக்கோம்." என்றான்
"உனக்கு நடந்தது எதுவும் தெரியாதா ஜெய்? நீ வந்து எங்களிடம் பேசிவிட்டுப் போன கொஞ்சநேரத்துலயே உங்க ஆஸ்பத்திரிலருந்து, ரகுநந்தன் உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கிறதா ஃபோன் வந்துச்சு... அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட என்னால தாங்க முடியல... எனக்குன்னு அவன்தான் இருந்தான்... அவனையும் இழந்து விடுவேனோன்ற பயத்துல எனக்கு மயக்கம் வந்து விழுந்ததுட்டேன்...
ஆனால் வைதேகி உங்க மருத்துவமனைக்குப் போயிருக்கா அங்கே...
அன்று...
ஆட்டோ, அந்த அரசு மருத்துவ மனைக்குள் நுழைந்ததுமே ரூபாயை ஆட்டோக்காரரிடம் கொடுத்து விட்டு வைதேகி ஓடினாள்.
பிரேதபரிசோதனை கூடம் என்ற போர்டைப் பார்த்தவளுக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தது.
உள்ளே...
வைதேகியைப் பார்த்துச் சுற்றிலும் இருந்தவர்கள் விலக, கட்டிலில் துடித்துக் கொண்டிருந்த ரகுநந்தனின் கண்களில் வைதேகி தெரியவும்,
"வந்துட்டியா?... நான்தான் சொன்னேன்ல... என்னால உன்னைப் பிரிஞ்சு இருக்க முடியாதுனு... எப்பவும் உன்னைப் பார்த்துக் கிட்டே..." என்ற ரகுநந்தனின் கண்கள் வைதேகி முகத்திலேயே நிலைத்தது....
வைதேகி வேகமாக எல்லோரையும் தாண்டி ரகுநந்தன் அருகில் சென்று,
"ரகு!!! நான் உங்களை நம்புறேன்.... தெரியாமப் பண்ணிட்டேன்... என்னை மன்னிச்சுடுங்க... தயவுசெஞ்சு என்னைப் பாருங்க... ரகு!!!" என்று ரகுவை உலுக்க,
அவன் அசையாமலிருந்தான்…
"ரகு!! நான் வந்துட்டேன்... இனி எந்தக் காரணத்துக்காகவும் உங்களை விட்டுப் போகமாட்டேன்... முழிச்சுப் பாருங்க... என் கூடப் பேசுங்க... தயவுசெஞ்சு எந்திரிங்க... என்னாலயும் உங்களை விட்டு வாழ முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்... எந்திரிங்க..." என்று அழுது துடித்தவள்,
"ஜெய்!... ஜெய்! எங்க இருக்கீங்க?... ரகு கிட்ட நான் சொன்னது எதையும் சொல்லலையா? ஜெய்ய்ய்!" என்று வைதேகி கத்த, அங்குக் கூடியிருந்தவர்கள்,
"ஜெய் இங்கே இல்லையேம்மா... நீ யாரு?" என்று கேட்க,
'ஜெய் புறப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு மேலயே இருக்குமே? இன்னுமா வரல?' என்று நினைத்த வைதேகி,
சுற்றி இருந்தவர்களைப் பார்க்க, அங்கிருந்த யாரையும் வைதேகிக்குத் தெரியவில்லை…
'சுதா!' நினைவிற்கு வரவும் "சுதா எங்கே?" என்று கேட்டாள்.
"அந்தப் பொண்ணு, டீன் கூட மருத்துவ முகாமுக்காகப் பக்கத்துக் கிராமத்துக்குப் போயிருக்கு. " என்று யாரோ பதில் கூறினர்...
"செந்தில்?"
"அவர் லீவு போட்டுட்டு ஊருக்குப் போயிருக்கார்." என்றாள் ஒரு நர்ஸ்.
'யாருமே தெரிஞ்சவங்க இல்லையே?' என்று நினைத்தவள், அருகில் இருந்த டாக்டரிடம்,
"தயவுசெஞ்சு இவரைக் காப்பாத்துங்க... உங்களில் எத்தனை பேருக்கு உதவியிருப்பார்? எத்தனை உயிரைக் காப்பாத்தியிருப்பார்? உங்களைக் கடவுளா நினைச்சுக் கையெடுத்துக் கும்பிடுறேன்... இவரைக் காப்பாத்துங்க..." என்று வைதேகி கதற,
"நாங்க டாக்டர் ரகுநந்தனுடன் வேலை செய்றவங்க தான்… டாக்டர் ரகுநந்த்னைக் காப்பாத்த எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டோம். ரொம்ப மோசமான விஷ ஊசியைப் போட்டிருக்கார்... இவ்வளவு நேரம் தாங்கினதே பெரிய விஷயம்... இதுவரை கண்ணைக்கூடத் திறந்து பார்க்காமல் கிடந்தவர், உங்களைப் பார்த்ததும்தான் பேசினார்." என்று ஒரு டாக்டர் சோகமாகக் கூறினார்.
வைதேகிக்கு என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் எல்லாம் நடந்துமுடிந்து விட்டது.
'ரகு எவ்வளவு நல்லவர்... அவர் பேச வேண்டும் என்று சொன்னபோது பேசியிருக்க வேண்டும்.... இந்த மாதிரி பண்ணிக்குவார்னு கனவுலயும் நினைக்கவில்லையே... ஜெய் வந்து அழைக்கும் போதாவது அவருடன், நான் வந்திருக்கனும்.' என்று நினைத்தவள்,
ரகுநந்தன் முகத்தைப் பார்த்தாள்... அவன் முகத்தில் எல்லையில்லா வேதனை இருந்தது...
அதற்குக் காரணம் நிச்சயமா நான்தான்!... "பாவி! பாவி! " என்று தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டு அழுதவளைத் தடுத்தனர் கூடியிருந்தவர்கள்...
"பெரியவங்க சொல்லிக்கிட்டிருக்கும்போது இடையில கேட்கிறதுக்கு மன்னிச்சுடுங்க... அப்படி என்ன நடந்துச்சு ரகுவுக்கும், வைதேகிக்கும் இடையில?" என்று கேட்டாள் பூவினா.
பூவினாவைப் பார்த்த பத்மா, 'இந்தப் பெண்ணை எங்கோ பார்த்து இருக்கிறேனே?' என்று நினைத்தவாறு,
"இப்படி அருகில் வந்து உட்காரும்மா." என்று தனது அருகில் அமரச்சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்...
"விதி... விதி... ன்னு சொல்வாங்கல்ல அதுதான் அவர்களுக்குள் வந்தது. என் திருமண வாழ்க்கையில் நடந்த விபரீதங்கள் வைதேகியின் பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது...
அது வைதேகிக்கு ஆழ் மனதில் பயமாக உருவெடுத்து இருந்திருக்கிறது. அதாவது, என்னதான் உருகி உருகிக் காதலித்தாலும், பெண்களோட தைரியமான சுபாவம், கணவனாக ஆனபின் ஆண்களுக்குப் பிடிப்பதில்லை.
பெண்கள் என்றால், சப்தம் இல்லாமப் பேசி, சிரிக்கனும்... முகம் சுளிக்காம வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யனும்... கணவரோ, கணவர் குடும்பத்தினரோ என்ன பேசினாலும் தலையாட்டனும்... நிமிர்ந்து கூடப் பார்க்கக் கூடாது... என்று எழுதிவைக்கப்படாத சட்டத்தை மீறிப் பெண்கள் இருந்துட்டா, அந்தப் பெண்களைக் கொன்றுவிட்டுதான் மறுவேலை பார்க்கும், கணவன் குடும்பம்...
அதனாலேயே கல்யாண வாழ்க்கையை வெறுத்தாள் வைதேகி. இது வைதேகியின் மனதைப் பாதித்ததாலேயே பத்திரிகை நிருபராக வேலைக்குச் சேர்ந்தாள்....
என் வாழ்க்கையில் எந்த ஆணும் கணவனாக வேண்டாம்... தன் சுய மரியாதையை விட்டு வாழும் வாழ்க்கை வேண்டவே வேண்டாம் என்று உறுதியாக இருந்தாள்.
ஆணுடன் இணைத்துக் கொள்ளும் வாழ்க்கையை விடத் தனித்திருப்பது நல்லதென்று நினைத்திருந்தாள்…
ஆனால் அவளே எதிர்பாராதது ரகுநந்தன் மேல் அவளுக்கு இருந்த ஈர்ப்பு. எவ்வளவு முயன்றும் ரகுநந்தனை அவளால் விலக்க முடியவில்லை...
ரகுவுடனான திருமண வாழ்வு தனக்கு நிலைக்குமா? அவனும் திருமணத்திற்குப் பிறகு வேலையைவிடச் சொல்லி வற்புறுத்துவானோ? என்ற உறுத்தல் ரகுநந்தனை நெருங்கும் போதெல்லாம் வைதேகிக்குத் தடையா இருந்திருக்கு.
வைதேகியின் இந்த உறுத்தல் அவளுக்கும் ரகுவிற்கும் தோழியான சுதாவிற்குத் தெரிந்து, அதைப் பக்குவமாக ரகுவிடம் தெரியப்படுத்தினாள்.
அன்று...
"இதை மனதில் வைத்துக் கொண்டு தான் என் உயிரை வாங்குகிறாயா? " என்று சிரித்த ரகு,
"வைதேகி! யாரோ ஒருத்தர் அப்படியிருந்தால் எல்லோரையும் சந்தேகப்பபடக் கூடாது. முக்கியமாக நம் வாழ்க்கையில் உன் தைரியம்தான் என் நிம்மதி... ஏன்னா... நான் ஒரு டாக்டர், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எனக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரும்... நீ தைரியமாக இருந்தால்தானே நான் இரவு பகல் பாராமல் மருத்துவம் செய்ய முடியும்? அதுமட்டுமில்ல, உன்னை என் உயிரைவிட மேலா நினைக்கிறேன்... உன்னை விட்டு என்னால் வாழவே முடியாது... உன்னைவிட இந்த உலகத்தில் எனக்கு எதுவுமே பெரிசில்ல... நீயே என்கூடப் பிரச்சனை பண்ணினாலும், நீதான் எனக்கு முக்கியம்... உனக்காக எதையும் விட்டுக்கொடுப்பேன்... " என்று தன் மனதிலிருந்த காதலின் ஆழத்தை புரியவைத்து, வைதேகிக்கு இருந்த பயத்தை ரகு முற்றிலும் அகற்றினான்...
அதற்குப் பிறகு இருவரும் ரொம்ப சந்தோஷமாக இருந்தாங்க. கல்யாணம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டாங்க. கல்யாணத்துக்குப் பிறகு குடியிருக்கிறதுக்கு வீடெல்லாம் பார்த்தனர்.
அந்த வீட்டை எப்படி அழகு படுத்தனும்லாம் திட்டம் போட்டாங்க.
நாங்க எல்லாரும் மிகவும் சந்தோஷமாக இருந்த காலம் அது.
நாங்க எதிர்பார்த்ததை விட நல்ல மாப்பிள்ளை, நல்ல வாழ்க்கை வைதேகிக்கு அமைந்ததில் எங்க எல்லோருக்குமே உலகத்துல இருக்கிற எல்லா சந்தோஷமும் எங்களுக்கே கிடைச்சது போலிருந்துச்சு.
மாப்பிள்ளை முறுக்குந்னு சொல்வார்களே! அதல்லாம் இல்லாமல், ரகு என் மகனாகவே மாறியிருந்தான்...
என் அண்ணனைத் தன் சொந்தத் தாய்மாமனை நடத்துவதைப் போல, நடத்தினான்.
எப்பொழுதுமே என் அண்ணன்தான் குடும்பத்தலைவரா இருந்து எங்களை வழிநடத்துற மாதிரிப் பார்த்துக்கிட்டான்.
எது செய்தாலும் எங்கள் மூவரிடமும் கலந்து பேசிதான் செய்தான்…
எங்கள் வீட்டுப் பிள்ளையாகவே மாறியிருந்தான்.
அவனும் தனக்கென்று ஒரு குடும்பம் வரப்போவதை எண்ணி மகிழ்ந்தான்... தன் தாயுடன் எப்படியெல்லாம் இருக்க ஆசைப்பட்டானோ அப்படியெல்லாம் என்னுடன் இருந்தான்.
என் அண்ணனே ஒரு நாள் என்னிடம், உனக்கே பிறந்திருந்தாலும், இவனைப் போல உன்மேல் பிரியம் வைத்திருக்கமாட்டான்." என்று கூறினார்.
திருமணத்திற்கு முன்பே எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தோம்... " என்று கூறிய பத்மாவின் முகத்தில் அன்றைய நாளில் அவர்கள் நால்வரும் எந்த அளவு சந்தோஷமாக வாழ்திருக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது...
சிறிது நேரம் அந்த ஆனந்தமான நினைவுகளில் மூழ்கியிருந்தவர், மீண்டும் தொடர்ந்தார்.
“ஆனா அடுத்து வந்த நாட்கள்ல நாங்க எதிர்பாராததெல்லம் நடந்துச்சு... யார் கண்பட்டதோ? திடீர்னு வைதேகி, ரகுநந்தனைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டாள்.
எனக்கும் என் அண்ணனுக்கும் பெரிய அதிர்ச்சி... எத்தனை முறை கேட்டாலும் காரணத்தைச் சொல்ல மறுத்துவிட்டாள்.
எங்களைவிட மிகவும் மனம் உடைந்து போனது ரகுநந்தன் தான். அவனையும், அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைங்கிறதை எங்கள்ட்ட சொல்லவிடாமல, உன்மேல் ஆணை! என்மேல் ஆணைனு ஏதேதோ சொல்லித் வைதேகி தடுத்துட்டாள்.
அப்பவே பெரியவங்க எங்கள்ட்ட சொல்லியிருந்தா இப்படிலாம் நடந்திருக்காது…
வைதேகி புத்திகெட்டுபோய்த் தன் வாழ்க்கையைக் கெடுத்துக்கிறாள்னு நன்றாகப் புரிந்த நானும், என் அண்ணனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், எங்க பேச்சை அவள் கேட்கவேயில்லை...
ரகுநந்தன்கிட்ட கேட்டபோது, அவனால் பேசக்கூட முடியவில்லை...
"என் தலையெழுத்து சித்தி! விபரம் தெரியும்முன்னாடியே குடும்பத்த விட்டுப் பிரிஞ்ச பாவி நான். இப்பவும் அதே தான்… இந்தக் குருடனுக்குக் கண் தெரிஞ்சு, மறுபடியும் குருடனாகிட்டேன்." என்ற கூறிய ரகுநந்தன்,
அதுக்கப்புறம் என் மகன், எங்க வீட்டிற்கு வர மறுத்து மறுபடியும் ஆஸ்பத்திரிலயே தங்கிடுறேன்னதும், அவனைத் தேற்றும் வழி தெரியாம, நானும் அழுது விட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
ஆனால் வைதேகியோட முட்டாள் தனத்திற்கு என் மகனை இழக்க நான் தயாராக இல்லை… அதை என் அண்ணங்கிட்ட சொன்னேன்.
என் அண்ணனுக்கும் அதுவே விருப்பமாக இருந்துச்சு. அந்த வாரத்திலேயே ஒரு நல்ல நாள் பார்த்து ரகுநந்தன் வாங்கிய புது வீட்டுக்குப் பால் காய்ச்சி, அவனோட அம்மாவா, அவங்கூட சேர்ந்து வாழ முடிவெடுத்தேன்.
என் அண்ணனும் அதுக்கு ஒத்துக்கிட்டார். மறுநாள் காலைல சமையல் முடிச்சுட்டு என் மகங்கிட்ட அந்த நல்ல செய்தியைச் சொல்றதுக்குக் கிளம்பினேன்.
ஆனால் காலைல பத்து மணியிருக்கும்போது ஜெய் வந்தான். ரகுநந்தன் பக்க நியாயத்தை வைதேகிட்ட சொன்னான்.
என்ன பேசிக்கிட்டாங்கன்னு சரியாத் தெரியல. ஆனா வைதேகி மனம் கொஞ்சம் இறங்கி, அன்னைக்கு சாயந்தரம் ரகுநந்தனை சந்திக்க வர்றதா சொன்னாள்.
உடனே அதை ரகுநந்தங்கிட்ட தெரிவிக்க ஜெய் போயிட்டான்…
வைதேகி தான் மனசு மாறிட்டாளே? இனி எதுக்காக நான் என் மகன்கூட தனியாப் போகனும்னு முடிவெடுத்து, அரைமணிநேரம் கூட நிம்மதியாக இருந்திருக்க மாட்டோம்.
ஆஸ்பத்திரிலருந்து ஃபோன் வந்துச்சு... ரகுநந்தன் தற்கொலை செஞ்சுக்கிட்டு உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கிறதா…” என்று கூறி நிறுத்தியவரின் முகத்தில் பலவித பாவங்கள்...
அவர்களின் வேதனை புரிந்து குடிக்கத் தண்ணீர் கொடுத்து, யாரும் அவரைத் தொந்தரவு செய்யாமல் கவனித்தனர்.
சிறிது நேரம் கழித்து செந்தில், "அப்புறம் என்ன ஆச்சு? வைதேகி எங்கே?" என்று கேட்டதும்,
பத்மா கூற ஆரம்பித்தார்...
அன்று…
செல்வமும், பத்மாவும் மருத்துவ மனையில் எவ்வளவோ போராடியும், ரகுநந்தனின் உடலை அவர்களிடம் தர மறுத்தனர்.
இறுதியில் டாக்டர் செந்தில், வந்தபிறகு அவரிடம் ஒப்படைத்தனர்...
வைதேகியும், பத்மாவும் யாரோ போல நின்றனர்... அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல், வைதேகி, பத்மா, செல்வம் மூவரும் வீடு வந்தனர்.
ஒரு மாதமாகியும் வைதேகி குடும்பத்தில் யாரும், யாருடனும் பேசிக்கொள்ளவில்லை...
வைதேகிக்கு, தன்னுடைய முட்டாள்தனத்தால் ஒரு நல்லவனைப் பலி கொடுத்துவிட்ட குற்றக் குறுகுறுப்பு...
'அவர் என்னோட அன்பைத்தானே எதிர்பார்த்தார்... அவரைப் போல நல்லவரைச் சந்தேகப்பட்ட பாவத்திற்கு எனக்கு இனி நிம்மதியே கிடைக்கப் போறதில்ல.' என்று நடந்ததையே நினைத்து நினைத்து வருத்திக்கொண்டாள்...
பத்மாவைப் பற்றிச் சொல்லவேத் தேவையில்லை... தன்னுடைய துரதிர்ஷ்டம்தான் ரகுநந்தனைப் பலிவாங்கி விட்டதாக நினைத்து மருகினாள்...
இரு பெண்களும் பிரம்மை பிடித்தார்போல இருப்பதைப் பார்த்தும், எதுவும் செய்யமுடியாதவராகத் தவித்தார் செல்வம்.
மூன்று வருடங்கள் கழிந்தும் வைதேகியும், பத்மாவும் மாறவேயில்லை... வீட்டுவேலைகளைச் செய்து விட்டுத் தனது அறையில் ஒடுங்கினாள் பத்மா...
வைதேகி, வீட்டை விட்டு எங்கும் செல்வதில்லை... வைதேகியும் பத்மாவும் வீட்டுப் படியைத்தாண்டி மூன்று வருடங்கள் கழிந்த நிலையில், செல்வம் தான் எல்லாமாக இருந்தார்.
"இன்னைக்கு ரகுநந்தன் இறந்தநாள்! இன்நைக்காவது கோயிலுக்குப் போயி அவனுக்காக வேண்டிக்கோ வைதேகி...
அவனுக்காக யாருமில்லை... உன்னையும், பத்மாவையும்தான் தனது உறவா நினைச்சான்... நம்ம கூடச் சேர்ந்து வாழத்தான் அவனால முடியல. அவனுக்குச் செய்யவேண்டிய காரியங்களையாவது செய்வோம். கிளம்புங்க!" என்று ஏதேதோ எடுத்துக் கூறி கோயிலுக்கு அழைத்துச் சென்றார் செல்வம்.
மூவருமே கோயிலில் ரகுநந்தனுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.
பிறகு பிரகாரத்தைச் சுற்றி வந்து கோயில் குளக்கரையில் இருந்த படிகளில் அமர்ந்து இருந்தனர்.
மூவருக்குமே ரகுநந்தனுடன் பழகிய நாட்கள் ஞாபகத்திற்கு வர, அமைதியாக அமர்ந்திருந்தனர்...
'இப்படி உட்காருவதற்காகவா இங்கே கூட்டிட்டு வந்தேன்?' என்று நினைத்தார் நினைவுகளிலிருந்து மீண்ட செல்வம்.
"வீட்டுக்குப் போவோம் ண்ணா" என்று மெல்லிய குரலில் பத்மா கூறவும், மூவரும் எழுந்து குளத்தின் படிகளைத் தாண்டிச் செல்லும்போது,
யாரோ ஆணும், பொண்ணும் அமர்ந்து யாருக்கோ திதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்...
அதை கவனித்த செல்வம், வைதேகியிடமும் பத்மா விடமும்,
"ரகுநந்தனுக்கும் வருஷாவருஷம் திதி குடுக்கனும்... யார் குக்கிறதுன்னு விசாரிக்கனும்" வருத்தமாகக் கூறினார்.
அதைக்கேட்ட பத்மா ஒரு மூச்சு அழுதுவிட்டு,
"ஆமாண்ணா! ரகு என் மகன்... அவனுக்கு நான்தான் செய்யனும்... அங்கே உக்கார்நதிருக்கும் ஐயர்கிட்டயே விசாரிப்போம். வாங்கண்ணா" என்று கூறிவிட்டு,
பதிலைக்கூட எதிர்பார்க்காமல், அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வைதேகியும் செல்வமும் பின்தொடரந்தனர்.
அவர்களிடம் தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, விபரங்கள் கேட்டார் செல்வம்.
இது எதிலும் கலந்து கொள்ளாமல், எதையோ வெறித்தவண்ணம் இருந்த வைதேகியின் செவிகளில், அந்த அம்மா அழுவதும், அருகிலிருந்தவர் தேற்றுவதும் விழவே,
'பாவம் இவர்கள் யாரை இழந்து விட்டு இப்படிப் பரிதவிக்கின்றனரோ?' என்று நினைத்தவாறு எதார்த்தமாக 'யாருக்கு திதி கொடுக்கிறார்கள்?' என்று புகைப்படத்தைப் பார்த்தவள்,
அதிர்ச்சியில் கண்கள் விரிய, மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் தடுமாறி பத்மாவின் கைகளைப் பற்றினாள்.
யாருடைய புகைப்படம் அது?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
💍 💍 💍 💍 💍 💍
0 Comments