வருவான்-29
வைதேகியின் அத்தை பத்மா, ரகுநந்தனைத் தன் மகனாக முழுமனதுடன் ஏற்றுக்கொண்டதில் வைதேகிக்கு இரட்டை சந்தோஷம்...
அதில் ஒன்று, இனி அப்பா! ரகுநந்தனைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்துவிடுவார்... அடுத்தது, அவளின் பிரியமான ரகுநந்தனுக்கு ஒரு அம்மா கிடைத்துவிட்டார்... அதனால் திருமணம் முடிந்த பிறகு அத்தையையும், அப்பாவையும் பிரிய வேண்டியதில்லை. எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கலாம்... நினைக்க நினைக்க வைதேகிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.
வீடு வந்து சேர்ந்தனர் மூவரும். பத்மா, வைதேகியின் அப்பா செல்வத்திடம், ரகுநந்தனை தனது மகன்! என்று அறிமுகம் செய்து வைக்க, அதிர்ச்சியில் செல்வம் எழுந்தே விட்டார்.
"பைத்தியம் பிடிச்சுடுச்சா பத்மா உனக்கு? கிட்டத்தட்ட உன் வயசுல ஒருத்தனை கூட்டிவந்து மகன்னு சொல்ற? யார் இந்தப் பையன்?" என்று கேட்டார்.
"இவன் பெயர் ரகுநந்தன். அரசு மருத்துவமனையில் சர்ஜனா இருக்கான். ஒருவயதிலிருந்து ஆஸ்ரமத்தில் வளர்ந்து, வேலை கிடைத்ததும் தன்னோடு வேலை செய்றவங்களோட தங்கியிருக்கான்... எனக்கு ரகுவைப் பிடிச்சிருக்கு. பெருமாள் சாட்சியா என் மகனா தத்து எடுத்துக்கிட்டேன்." என்று கூறினாள் பத்மா.
செல்வத்தால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"உனக்கு நாங்கல்லாம் இல்லையா? சரி! உனக்குன்னு ஒரு குழந்தை வேணும்னு ஆசைபட்டால், இந்தப் பையன் வளர்ந்த ஆஸ்ரமத்துலயே சின்னப் பையனையோ, பொண்ணையோ தத்து எடுத்துக்குவோம்." என்றார்
"சின்னக் குழந்தையைத் தத்து எடுத்து என்னால வளர்க்கத்தான் முடியுமா? அப்படியே வளர்த்தாலும், ரகு என்மேல் வைத்திருக்கும் பிரியம் போல, அந்தக் குழந்தை என்மேல் அன்பு காட்டுமா? எனக்கு ரகுதான் அண்ணா, மகன். ஏன் உனக்குப் பிடிக்கலையாண்ணா?" என்று பத்மா கேட்டதும் விதத்திலேயே,
பத்மாவிற்கு ரகுநந்தனை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பது தெரிய, மீண்டும் ஒரு முறை ரகுநந்தனைப் பார்த்த செல்வம், பத்மாவிடம்,
"உனக்குப் பிடிச்சா எனக்கு மட்டும் பிடிக்காமப் போயிடுமா? அதுவும் என் காலத்திற்குப் பிறகு உன் நிலை என்னனு நான் பயப்படாத நாளில்லை... அதற்காக... இவ்வளவு பெரிய மகனா? கொஞ்சமாவது வயசு வித்தியாசம் வேணாமா பத்மா?" என்று பத்மாவிடம் கேட்டவர், பத்மாவிற்குப் பினனால் நின்ற வைதேகியைப் பார்த்து,
"என்ன வைதேகி நீயாவது பத்மாவிற்கு சொல்லக்கூடாதா? இதெல்லாம் எப்படி சரிபட்டு வரும்? பெத்தெடுத்த பசங்களே கல்யாணம் முடிஞ்சுட்டா பொண்டாட்டி பின்னாடி போயிடுறானுங்க... " என்றவரிடம்,
"வேற பொண்ண கல்யாணம் பண்ணினாதானே என்னை விட்டுப் போயிடுவான்? என் மகனுக்கு நீ பொண்ணு குடு... வைதேகியை என் மகனுக்குக் கொடு." என்று பத்மா கேட்டதும்,
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார் செல்வம்.
"என்ன அண்ணா பேசாம உட்கார்ந்திருக்க? என் பையனை உனக்குப் பிடிக்கலையாண்ணா?" என்று மிகவும் கவலையாகக் கேட்கவே,
"பத்மா! நீ என்ன சொல்ற? புரிஞ்சுதான் பேசுறியா? ரகுநந்தனை, உனக்கு மகனாகவே என்னால நினைச்சுப் பார்க்க முடியல... இதுல வைதேகியை பெண் கேட்கிற? இந்தப் பையனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? ஏற்கனவே உனக்குப் புடிச்சிருக்குன்னுதான் ஒருத்தனை கல்யாணம் பண்ணிவச்சேன்... ஆனால் நடந்தது என்ன?... இன்னும் அந்தக் கவலையிலருந்தே நான் மீளல... அதுமட்டுமல்ல
வைதேகி கல்யாணம் பண்ணத் தயாரான மனநிலையில் இருக்காளா?" என்று சொல்லிக் கொண்டு போனவரைத் தடுத்த பத்மா.
"ஒருதடவை பண்ணிய தப்பை மறுபடியும் நான் பண்ணமாட்டேன்னு உனக்கே நல்லாத் தெரியும் அண்ணா... அதுவும் வைதேகி வாழ்க்கையில யோசிக்காம முடிவெடுப்பேனா? ரகுநந்தனை எனக்கு அறிமுகப்படுத்தியதே வைதேகி தான். அவ ரகுநந்தனை கல்யாணம் பண்ண ஆசைபட்டு என்னிடம் வந்தாள். எனக்குப் பையனைப் பிடிச்சுபோச்சு. அவன் என்னை வாய்நிறைய சித்தினு கூப்பிடுறான். என்னைத் தாயா ஏத்துக்கிட்டான். இதைவிட வேறென்ன வேணும் அண்ணா?" என்ற பத்மாவையும் வைதேகியையும், ரகுநந்தனையும் மாறி மாறிப் பார்த்தார் செல்வம்,
"என்னால எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவெடுக்க முடியாது தம்பி, எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க... நீங்க வளர்ந்த ஆஸ்ரம முகவரி, வேலை பார்க்கும் இடம், இப்ப தங்கியிருக்கும் வீட்டு முகவரி குடுங்க விசாரிச்சுட்டு சொல்றேன்." என்று செல்வம், ரகுநந்தனிடம் கேட்க,
ஏதோ பேச வந்த பத்மாவை தடுத்தான் ரகுநந்தன்.
"அவர் கேட்கிறது நியாயம்தானே சித்தி? எல்லா விபரங்களையும் எழுதிக் கொடுத்துடுறேன். பார்த்துட்டே சொல்லட்டும் சித்தி." என்ற ரகுநந்தன் வைதேகியிடம் ஒரு நோட்டை எடுத்துவரச்சொல்லி,
எல்லாவிபரங்களையும், அவன் படித்த பள்ளி, கல்லூரி முகவரி உட்பட, எழுதிக்கொடுத்து நிமிரும்போது, பத்மா ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
இதுவரை கடைகளில் மட்டுமே வாங்கிக் குடித்த ஜூஸ்சுக்கும், இன்று பத்மா கலந்து கொண்டு வந்த ஜூஸ் சுக்கும் நிறைய வித்யாசம் இருந்தது.
பத்மாவைப் பார்த்துக் கண்கள் பனிக்க அமர்ந்திருந்தவனைப் பார்க்கும்பொழுது செல்வத்திற்கே மனம் இளக,
"மதியம் உணவு முடித்துப் புறப்படுப்பா... " என்று உபசரித்தார்.
மூன்று நாட்களாக யாரிடம் விசாரித்தாலும், ரகுநந்தன் நல்லவன், இளகிய மனம் கொண்டவன், கெட்டிக்காரன்... பயங்கரப் புத்திசாலி... இதையே மாற்றி மாற்றிச் சொன்னார்கள்.
செல்வத்திற்கும் ரகுநந்தனைப் பிடித்துத்தான் இருந்தது... இருந்தாலும், தன் பெண்ணையே கொடுக்கும் முன் பலமுறை யோசிக்க வேண்டியதாகிவிட்டது…
அவன் நல்லவன் என்றவரை சரி! ஆனால் அவன் குடும்பம், உறவினர்கள்பற்றித் தெரியாமல் எப்படிக் கல்யாணம் செய்து வைப்பது? என்று குழம்பிப்போனவர்,
இந்தச் சூழ்நிலையில் தன்னுடைய அறிவை மட்டும் பயன்படுத்தி யோசிக்காம, மூன்றாம் மனிதரின் எண்ணங்களை அறிய நினைத்து, தனக்குத் தெரிந்த மருத்துவர், வக்கில், ஆஸ்ரமம் நடத்துபவர்களிடம் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை தேடினார்.
"ஒரு வயசு பையனை ஆஸ்ரமத்துல விடுறதுன்னா, என்ன காரணம் இருக்க முடியும்?" என்று கேட்டார்...
நிச்சயமாகத் தவறான வழியில் பிறந்த பையனாக இருக்க முடியாது. அப்படிபட்ட குழந்தைகளைப் பிறந்ததுமே ஆஸ்ரமத்துல சேர்த்து விட்டிருப்பார்கள்... ஒரு வருடம் வளர்த்துவிட்டு, ஆஸ்ரமத்தில் கொண்டு வந்து விடமாட்டார்கள். " என்றும்,
"குடும்பத்தோடு பயணம் செய்தபோது விபத்து நடந்து, அந்தக் குழந்தையின் பெற்றோர் இறந்திருக்கக்கூடும்... " என்பதே தொண்ணூறு சதவீதமானவர்களின் பதிலாக இருந்தது.
ரகுநந்தனுடன் பழகிப் பார்த்து, அவன் குணம், பழக்க வழக்கங்களைப் பார்த்து அவன் நல்ல குடும்பத்தில் பிறந்தவனாகத்தானிருப்பான் என்ற முடிவுக்கு வந்திருந்தார் செல்வம்.
ஒரு வழியாக வைதேகியை ரகுநந்தனுக்குத் திருமணம் செய்துவைக்க செல்வம் ஒத்துக் கொண்டார்...
அதுவரை சொல்லிக் கொண்டிருந்த பிரசாத்,
"அப்புறம் வைதேகி எங்க ஆபீசுக்கு வந்து எல்லோருக்கும் விருந்து வச்சாங்க... ரெண்டு நாள் கழிச்சு வந்து வேலையை ராஜினாமா பண்ணிட்டு போயிட்டாங்க... அதுக்கப்புறம் நான் அவங்களப் பார்க்கவே இல்லை..." என்று நடந்தது அனைத்தையும் கூறி முடித்தான் பிரசாத்,
"நான் கிளம்பவா? " என்று பிரசாத் வேலுவிடம் கேட்டான். அதற்கு ஜெயராம்,
"கொஞ்சம் பொறு..." என்றவன் சிறிது நேரம் யோசித்து,
"காமரா ரமேஷ்னு ஒருத்தன் வைதேகி கூடவே இருப்பானே? அவன் எங்கே?" என்று கேட்டான்.
"அவனும் நாலஞ்சு வருஷம் கழிச்சு வேலையை விட்டுவிட்டு எங்கேயோ போயிட்டான்... ஒருவேளை அவனுக்கு வைதேகி இருக்குமிடம் தெரிஞ்சிருக்கலாம்..." என்ற பிரசாத், ஜெயராமை பார்த்து,
"ரகுநந்தனைத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க வைதேகி?... அவர் உங்க நண்பர்தானே அவர்? அவரைக் கேட்கலாமே" என்ற பிரசாத்திடம்,
"வைதேகிக்கும், ரகுநந்தனுக்கும் கல்யாணம் முடிஞ்சுருச்சா? நீங்க கல்யாணத்துக்குப் போனீங்களா? " என்று தவிப்புடன் கேட்டாள் பூவினா.
"இல்லை! நான் மட்டுமில்ல. எங்க ஆபீசிலும் யாருமே போகல… எங்க யாருக்குமே வைதேகி பத்திரிகை வைக்கல… அவங்க வேலையை விட்டுப் போனதோட சரி!"என்று கூறினான் பிரசாத்.
"பின்னே ரகுநந்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு சொன்னீங்க?" என்று கேட்டாள் பூவினா.
"அவரதானங்க கல்யாணம் பண்ணிக்கப் போறதா விருந்தெல்லாம் வச்சாங்க?..." என்று பிரசாத் கூறியதும்,
"போதும் வினி! இவருக்கு இதுக்குமேல தெரியல." என்ற வேலு, பிரசாத்திடம்,
"காமரா ரமேஷையாவது பார்த்தீர்களா?" என்று கேட்டான்.
"இல்லை அவன் ஊரைவிட்டே போய்விட்டதாகக் கேள்விபட்டேன்."
"உங்களுக்கு யார் சொன்னா?"
"அப்போ அவன் கூடப் பழகினவங்க பேசிக்கிட்டாங்க."
"அவங்க யாரையாவது எங்களுக்கு அறிமுகப்படுத்த முடியுமா?."
"பிழை திருத்துனரா இருந்த கணேசன் சார் வீடு ரெண்டு தெரு தள்ளிதான் இருக்கு. அவருக்கு ஏதாவது தெரிஞ்சிருக்கலாம்." என்று கூறிய பிரசாத்திடம் கணேசன் முகவரி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
கணேசன் வீட்டை எளிதில் கண்டுபிடித்து விட்டனர்.
கணேசனுக்கு அறுபது வயதிருக்கும்... கண்களில் ஏற்பட்ட பிரச்சனையால் வேலையைவிட்டுவிட்டார்.
அவருக்கு வைதேகியையும், காமரா ரமேஷையும் நன்கு பழக்கம் இருந்திருக்கிறது...
உணவு இடைவேளை மற்றும் ஓய்வான நேரங்களில் அலுவலகப் பேச்சுக்கள் தவிர பிற விஷயங்களைப் பேசிக்கொள்வது வழக்கம் என்றார்.
ஆனால், அவரும் வைதேகி வேலையைவிட்டுப் போனபிறகு, வைதேகியைப் பார்க்கவில்லை என்றார்.
ஆனால் வைதேகி வேலையைவிட்டு சென்றபிறகு, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கேமரா ரமேஷுடன் பேசியிருக்கிறாள் என்றும் கணேசன் கூற,
"கல்யாண பத்திரிகை கூட உங்களுக்குக் கொடுக்க வில்லையா? என்று வேலு கேட்டான்.
"போலீஸ் ஆபிசர்னு சொல்றீங்க... ஆனா வைதேகி பத்தி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை போலிருக்கே? ஆனா இப்ப எதுக்கு விசாரிக்கிறீங்க? வைதேகிக்கோ, காமரா ரமேஷுக்கோ ஏதாவது பிரச்சனையா? " என்று கவலையுடன் கணேசன் கேட்டார்.
"அதைப் பற்றி எதுவும் சொல்லமுடியவில்லை... ரகசியமான விசாரணை என்பதால்தான் நானே நேரடியாக வந்திருக்கிறேன்... எங்களுக்கு வைதேகி பற்றி உங்களுக்குத் தெரிஞ்சதை சொன்னா, எங்களுக்கு உதவியாக இருக்கும்." என்று கேட்டான் வேலு.
"வைதேகிக்குக் கல்யாணம் நின்றுபோய்விட்டதாகவும், அதற்குக் கேமரா ரமேஷும் காரணம்னு, ரமேஷ்தான் சொன்னான். ஆனால் நடந்தவிபரங்கள் சொல்ல மறுத்துவிட்டான்." என்று கூறினார்.
"ரமேஷ் ஏன் வேலையை விட்டுநின்றார்? இப்ப எங்கே இருக்கார்?" என்று வேலு கேட்டதும்,
"வைதேகி கல்யாணம் நின்றபிறகு வைதேகியின் நிலை மிகவும் மோசமானதாக இருந்ததாகவும், வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டதாகவும் கூறி தன்னைத்தானே வருத்திக்கொண்டான்... அதன்பிறகு யாருடனும் பேசுவதில்லை... நாலஞ்சு வருஷம் கழிச்சு பெங்களுர் பக்கம் போயிட்டான்... அதன்பிறகு அவனையும் நான் சந்திக்கவில்லை… அவன் இருப்பிடமும் தெரியாது." என்று கூறி முடித்தவரிடம்,
மேலும் விசாரித்தும் எந்தப் பலனும் இல்லை. கடைசியாக வைதேகியின் முகவரியை, பத்திரிகை ஆபீசிற்கு போன் செய்து குறித்துக் கொடுத்தார்.
அவருக்கு நன்றி கூறிவிட்டு வைதேகியின் வீட்டை நோக்கி விரைந்தனர்.
ஊரின் வட எல்லைக்கு அருகே வைதேகி வீடு இருந்தது... கிட்டத்தட்ட கிராமம்போல ஒருவீட்டிற்கும் மற்றொரு வீட்டிற்குமிடையே நிறைய இடைவெளி இருந்தது...
"இப்பவே இப்படி இருக்கே இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும்?" என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் கிரேசா.
"இது கிராமம்... அப்பொழுதும் இப்படித்தான் இருந்திருக்கும் என்றாள் பூவினா.
"ஆமா... நீ ரொம்பக் கண்ட..." என்று கிண்டல் செய்தாள் கிரேசா.
"இங்கே என்ன விஷயம் கிடைக்கப்போகிறதோ?" என்று பலவித எண்ணங்களுடன் அனைவரும் வைதேகியின் வீட்டில் காலடி எடுத்து வைக்க,
ஜெயராமிற்குத் தலைவலிப்பது போலிருந்தது. எப்பொழுதும் பழைய விஷயங்களைச் சொல்லும்போது சுயநினைவற்றவனாகி விடுவான்... மற்றவர்கள் சொல்வதைக் கேட்டே நடந்த விஷயங்களை அறிந்து கொண்டான்.
ஆனால் இன்று... 'நான் இந்த வீட்டிற்கு ஏற்கனவே வந்தது போலிருக்கே.' தலை மேலும் வலிக்க,
"வேலு... எனக்கு ஒரு மாதிரித் தலை வலிக்குது..." என்று கூறவும் அனைவரும் பதறிப்போய் ஜெயராமை நெருங்க,
வைதேகியின் வீட்டுக் கதவைத் திறந்தார் ஜம்பத்தைந்து வயதொத்த பெண்.
காலிங்பெல்லை அழுத்தி விட்டு அனைவரும் வேறுபுறம் திரும்பி நிற்கவும்,
"உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டார் அப்பெண்மணி. குரல்கேட்டு அனைவரும் அப்பெண்மணியைப் பார்க்க,
ஜெயராம் சட்டென்று எழுந்து சென்று அப்பெண்மணியின் முன் நின்று,
"நீங்கள் இங்கேதான் இருக்கீங்களா? நான் யார் என்று தெரிகிறதா? நான்தான் ரகுநந்தனின் நண்பன் ஜெய்." என்று கூற,
அதிர்ச்சியில் நான்கடி பின்னே சென்ற அப்பெண்மணி, தன் கண்களை நம்பமுடியாமல், கண்ணாடியைக் கழட்டி ஜெயராமை பார்த்தவர்,
"ஜெய் நீயா?" என்று கத்தி, அப்படியே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தார்...
யார் இவர்?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments