வருவான் 27
காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விடும் மஞ்சு இன்னும் கீழே வராமல் போகவே அவளுடைய அம்மா பவானி,
"மஞ்சு! மஞ்சு! காலேஜ் போகலையா?மணி ஏழு ஆகப்போகுது." என்று சப்தமாக அழைத்தும் மஞ்சுவிடமிருந்து பதில் வராமல் போகவே,
தனது இரண்டாவது பெண்ணாகிய ரதியை, மாடிக்குப் போய் மஞ்சுவை எழுப்பி விடச் சொல்லிவிட்டு, அடுப்படியில் பாதியில் விட்ட சமையல் வேலையைத் தொடர்ந்தார் பவானி.
இரவு தாமதாகத் தூங்கியதன் விளைவு... காலை எழுந்திருப்பது மிகவும் கஷ்டமாகி விட்டது மஞ்சுவிற்கு...
இப்பொழுதெல்லாம் மஞ்சுவின் ஓய்வுநேரங்கள் எல்லாம் 'வைதேகி, ரகுநந்தனை'ப் பற்றி யோசிப்பதிலும், தேடுவதிலுமே கழிகிறது.
கனவுகள் தவிர வேறு எந்த ஆதாரமும் மஞ்சுவிடமில்லை என்றாலும், தினமும் ரகுநந்தனை தேடிக்கொண்டிருந்தாள்.
ரதி, மஞ்சுவை எழுப்ப மாடிக்கு வந்தவள், மஞ்சு கட்டிலில் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு,
"முழிச்சிட்டியா? அம்மா அந்தக் கத்துக் கத்திக் கூப்பிட்டாங்கள்ல ஏன்னு கேட்க மாட்டியா? கொஞ்ச நாளாவே நீ சரியில்லை... ராத்திரியில எழுந்து நடமாடுற. ... விடிஞ்சபிறகும் தூங்குற!!! என்னாச்சு?னு கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குற... இப்படியேப் பண்ணிக்கிட்டிருந்தா அம்மாகிட்ட சொல்லிடுவேன் ஆமா. சீக்கிரம் குளிச்சுட்டு சாப்பிட வா! " என்று மிரட்டிவிட்டு கீழே இறங்கிப் போய்விட்டாள் மஞ்சுவின் தங்கை ரதி.
'இவளிடம் எப்படிச் சொல்வது? "கனவில் வருபவனையா காதலிக்கிற?" என்று கூறி ஒரு வாரத்துக்குக் கிண்டல் செய்து சிரிப்பாளே!...
இன்டஸ்ட்ரியல் விசிட்க்குப் போயிட்டு வந்ததிலிருந்து இரவு தூக்கம் வரவில்லை...
அதற்கே "தொடைநடுங்கி! தொடைநடுங்கி!" என்று கூறி ஒருவழி செய்தவளாயிற்றே! இப்ப ஒரு வாரமா ஒரே மாதிரியான ஆட்கள் கனவில் வர்றாங்கன்னு சொன்னா நம்புவாளா? இயல்பில் அக்காமீது பாசம் கொண்டவள் தான்... ஆனால் வாய் ஜாஸ்தி...' என்று நினைத்த மஞ்சு, முதல்நாள் கனவை நினைத்துப் பார்த்தாள்.
வைதேகியிடம், ரகுநந்தன் தன் காதலை சொல்ல முடிவெடுத்து, அவளுடைய ஆபீஸிற்கு ஃபோன் செய்து, "வைதேகியிடம் பேச வேண்டும்" என்று கேட்டான்.
புதிதாகத் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் சம்பத் என்பவரைப் பேட்டி எடுப்பதற்காக அந்தத் தொழிலதிபர் வீட்டுக்கு வைதேகி சென்றிருப்பதாகக் கூறினான் பிரசாத்...
அதைக்கேட்ட ரகுநந்தன்,
"அவர் வீடு எங்கே இருக்கு?" என்று கேட்டான்.
முதலில் தயங்கிய பிரசாத், பிறகு ரகுநந்தனுக்குப் பயந்து, தொழிலதிபர் சம்பத் வீட்டு முகவரியைப் பிரசாத் கூற,
அடுத்த இருபது நிமிடத்தில் ரகுநந்தனும் ஜெய்சஞ்சீவ்வும் அங்கே இருந்தார்கள்.
அவர்கள் இருவரும், தொழிலதிபர் சம்பத் வீட்டிற்கு எதிரில் இருந்த சிறிய டீக்கடையில் அமர்ந்து, வைதேகிக்காகக் காத்திருந்தனர்.
அதே நேரம் உள்ளே பேட்டி ஆரம்பமாகி இருந்தது.
சம்பத் வெகு இயல்பாக, ரொம்ப நாள் பழகிய நண்பனைப் போலப் பேசினான்... பேட்டிபோல இல்லாமல்... தன்னைப் பற்றி, தான்பட்ட கஷ்டங்கள்பற்றி, தொழில் தொடங்கிய புதிதில் ஏற்பட்ட சறுக்கல்கள்... அதிலிருந்து மீண்டது... என்று ஒளிவு மறைவு இல்லாமல் வைதேகியிடம் கூறினான். எனவே பேட்டியும் மிகவும் சுலபமாக நிறைவடைந்தது.
பேட்டி முடிந்ததும் மதிய உணவு, தன்னுடன் சேர்த்து சாப்பிட சம்பத் அழைக்க,
வைதேகியின் உள்ளுணர்வு, ரகுநந்தன் தனக்காக இந்நேரம் வந்திருப்பான் என்று கூற,
வைதேகி, சம்பத் மதிய உணவுக்கு அழைத்ததை மறுப்பு தெரிவிக்க, ரமேஷ் உணவருந்த ஒத்துக்கொண்டான்...
ஒரு வழியாக விரதம், அது, இது என்று சமாளித்து வைதேகி சம்பத்திடம் விடைபெற,
"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறாயா?" என்று பட்டென்று கேட்டுவிட்டான் சம்பத்.
பேட்டியில் சம்பத்துக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாக அவன் கூறியது வைதேகியின் ஞாபகத்துக்கு வர, வைதேகிக்கு குமட்டிக் கொண்டு வந்தது.
அதைச் சாக்காக வைத்து வெளியேறிவிட்டாள்...
அந்தப் பதட்டத்தில் ரகுநந்தனை சுத்தமாக மறந்து போனவளாகத் தனது இரு சக்கர வாகனத்தில் ஆபீசை நோக்கிப் பறந்தாள்.
வைதேகி வெளியே வருவதை கவனித்த ரகுநந்தன், அவசரமாக டீக்குப் பணம் செலுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்.
வைதேகி அவள் வண்டியில் ஏறி, ரகுநந்தன் இருந்த பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் பறந்துவிட்டாள்.
ரகுநந்தனுக்கு மிகவும் ஏமாற்றமாகிவிட்டது. 'தன்னைப் பார்க்காமல் வைதேகி சென்றிருக்க முடியாது... பிறகு ஏன் இவ்வளவு அவசரமாகச் சென்றுவிட்டாள்?' என்று தோன்ற ரகுநந்தன் முகம் வாடியது.
ரகுநந்தனின் மனதை அறிந்த ஜெய்சஞ்சீவ்,
"வைதேகி நம்மைப் பார்க்கவே இல்லை ரகு... நீ இங்கே வந்து காத்திருப்பதாகச் சொன்னாயா?" என்று கேட்க,
"இல்லை." என்று தலையை இடவலமாக ஆட்டினான் ரகுநந்தன்.
"ஆபீசுக்குத்தான் போயிருப்பா... வா போகலாம்." என்று ஜெய்சஞ்சீவ் கூற,
"வேண்டாம் ஜெய்! நாம் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவோம். அவள் மனம் புரியாமல், அவளிடம் என் காதலை சொல்லப்போவதில்லை." என்று உறுதியாக ரகுநந்தன் கூற,
அவன் மனதிலிருந்த உறுதி ரகுநந்தனின் முகத்தில் பிரதிபலிக்க, சட்டென்று உறக்கம் கலைந்து எழுந்தாள் மஞ்சு...
இன்னும் கனவை நினைத்தால் மஞ்சுவிற்குப் படபடவென்று மனம் அடித்துக்கொண்டது.
"ச்சே! வைதேகி கொஞ்சம் நிதானமாக இருந்திருந்தால், ரகுநந்தன் தன் காதலை வைதேகியிடம் சொல்லியிருப்பாரே." என்று நினைத்தவளுக்கு மனம் கசந்தது.
மீண்டும் பவானியில் குரல் மஞ்சுவை அழைக்க, பதறியடித்துக் குளியலறையில் புகுந்து கொண்டாள் மஞ்சு.
காலையில் எட்டுமணிக்கெல்லாம் பூவினாவின் வீட்டிற்கு அனைவரும் வந்துவிட்டனர்.
ஏற்கனவே நடந்தது அனைத்தையும் பூவினா தன் வீட்டினரிடம் கூறியிருந்ததால், அடுத்துப் பேச வசதியாக இருந்தது அனைவருக்கும்.
ரகுநந்தன் இறந்ததுவரைதான் நிச்சயமாகத் தெரிகிறது... அதற்குப் பிறகு வைதேகி என்னவானார்? என்று தெரியவில்லை. என்பதே அனைவரின் பேச்சாக இருந்தது.
"பேசாம கார்ப்பரேஷன் ஆபீசுக்குப் போய் வைதேகிங்கிற பேரில் இந்த ஊரில் யாராவது இருக்காங்களான்னு பார்க்கலாமே?" என்று அற்புதமான ஐடியாவைக் கொடுத்தான் பொடியன் விஜய்விஷ்வா.
"டேய்! எப்படிடா தங்கம்?" என்று கேட்ட வேலுவிடம்,
"ரொம்பப் புகழாதீங்க சார்... தளபதி விஜய் படம் "கண்ணுக்குள் நிவவு" படத்தில் இப்படித்தான், தளபதியோட காதலியைத் தேடுவாங்க. " என்றான் விஜய் அசால்ட்டாக...
"என்ன இருந்தாலும் இந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வரணுமே? சூப்பர் டா ராஜா... பேசாம நீயும் ஐபிஎஸ் ஆயிடு." என்றான் வேலு மிகவும் சந்தோஷமாக.
"போலீஸ்லாம் வேண்டாம் சார்... அமைதியான பொண்ணுங்க போலீஸ்சைப் பார்த்தா பயப்படுவாங்க..." என்ற விஜய்யை,
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து அனைவரும், "அடேய்!" என்பதைப் போலப் பார்க்க,
"பொண்ணுங்க பயப்படுவதற்கெல்லாமா ஐபிஎஸ் ஆகமாட்டேங்குற?" என்று கேட்டான் ஜெயராம் புரியாமல்.
"உனக்கு என்னாச்சு ஜெய்? பொண்ணுங்க இவனைப் பார்த்து பயந்தா எப்படிக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு யோசிக்கிறான்." என்று கூறி சிரித்தார் செந்தில்.
"கல்யாணம் வரை ஏன் டாக்டர் யோசிக்கிறீங்க? முதல்ல லவ் பண்ணுவாங்களா? " என்று கேட்டான் விஐய் மிகவும் கவலையாக.
அவன் முகத்தில் தெரிந்த பாவனையில் அனைவரும் சிரித்தனர்.
பிறகு கார்ப்பரேசன் ஆபீசுக்கு ஃபோன் செய்து விபரம் சேகரித்துத் தரச் சொன்னான் ஜெயராம்.
"எப்படியும் அந்த விபரங்கள் வரக் குறைந்தது அரைமணிநேரம் ஆகும். அதற்குள் அனைவரும் சாப்பிட வாங்க..." என்று கூறியபடி அடுப்படிக்குள் நுழைந்தார் வள்ளி.
அவரைப் பின்தொடர்ந்து பூவினாவும் கிரேசாவும் செல்ல, விஜய் பள்ளிக்குப் புறப்பட்டான்.
ராஜனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அன்று விடுப்பு எடுத்துக்கொண்டார்.
அனைவரும் சாப்பிட்டு முடிந்ததும், வைதேகி என்ற பெயரில் இருப்பவர்களைப் பற்றித் தகவல் வர, அதில் வைதேகியின் வயதை மனதில் கொண்டு மூன்று பெண்களைத் தேர்ந்தெடுத்தான் வேலு.
இப்பொழுதே போய்ப் பார்த்து விடலாமா? அல்லது நீங்க காலேஜுக்கு போகனுமா?" என்று பூவினாவிடமும் கிரேசாவிடமும் கேட்டான் வேலு.
"இல்லை! நான் ஒருமுடிவு தெரியாமல் காலேஜுக்குப் போகல." என்றாள் பூவினா.
"நான் இதுவரை வேலைக்கு விடுப்பு எடுக்காததால, இப்போ பதினைந்து நாட்கள் மெடிக்கல் லீவு எடுத்துட்டேன்." என்றார் செந்தில்.
"சரி! நாம புறப்படுவோம்." என்று செந்தில் கூறியதும்,
"அதுக்கு முன்னாடி ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு... நாம பார்க்கப் போகும் மூணுபேருமே பெண்கள்.... அவங்க கிட்ட எப்படிப் பேசனும்கிறத அதாவது கேட்கக்கூடிய கேள்விகள், கேட்கக்கூடாத கேள்விகளைப் புரிஞ்சு பேசனும்... ரகுநந்தனுக்குப் பின்னாடி வைதேகி வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்காமலா இருந்திருப்பாங்க? அப்படி இன்னொருவரை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டிருக்கிறவங்ககிட்ட, அவங்களோட பழைய காதலைப் பற்றிப் பேசுவது ரொம்ப ரிஸ்க்கான விஷயம்... அதைவிட மோசம், நாம சந்திக்கும் பெண், தேடிப்போற வைதேகி இல்லாத பட்சத்துல ரகுநந்தனைப் பற்றிப் பேசுவதே தவறு... கொஞ்சம் கவனமாதான் பேசனும்... சரியா?" என்று தன்னுடன் வரும் ஜெயராம், கிரேசா, பூவினா மற்றும் செந்திலைப் பார்த்து வேலு கேட்டான்.
"இதுகூடத் தெரியாதா வேலு அதெல்லாம் கவனமா நடந்துப்போம்." என்றான் ஜெயராம்.
"இப்படிக் கும்பலா போகனுமா?" என்று கேட்டார் வள்ளி.
"நான் மட்டும் போனா போலீஸ் விசாரணை ஆயிடும் அத்தை... இதுனா, விஷேசம் வச்சிருக்கோம் நண்பர்களை அழைக்க வந்திருக்கிறோம்னு சொல்லிக்கலாம்." என்ற வேலு,
செந்திலைப் பார்த்து, "உங்களுக்கு வைதேகியை அடையாளம் தெரிய வாய்ப்பிருக்கா?" என்று கேட்டான்.
"இல்லப்பா! நிச்சயமா சொல்ல முடியாது... அந்தப் பொண்ணுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சா சந்தோஷம்..." என்றார் நெற்றியை தடவியபடி,
"பரவாயில்லை! பார்த்துக்கலாம். யாருக்காவது வேற ஏதாவது சந்தேகம் இருக்கா?" என்று கேட்டான் வேலு பொதுவாக.
அனைவரும் "இல்லை" என்று தலையாட்ட, செவரலெட் டவேரா புறப்பட்டது
காலேஜில் அட்டன்டன்ஸ் எடுத்தார் வகுப்பு ஆசிரியை. இன்றும் பூவினாவும் கிரேசாவும் காலேஜுக்கு வரவில்லை. வகுப்பு ஆசிரியை மஞ்சுவைப் பார்த்து,
"மஞ்சு! உன் தோழிகள் எங்கே?" என்று கேட்டார்.
"தெரியலையே மேம்..." என்று கவலையாகக் கூறினாள் மஞ்சு.
"அவர்கள் உன்னைத் தொடர்பு கொள்ளவில்லையா?" என்று கேட்டார் ஆசிரியர்.
"இல்லை மேம்! இன்று காலேஜ் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் ஃபோன் செஞ்சு கேட்டுட்டு வர்றேன்" என்றாள் மஞ்சு.
"இந்தா! என் மொபைலில் இப்பவே ஃபோன் பண்ணிக் கேளு!" என்று கூறித் தன்னுடைய மொபைல் ஃபோனை மஞ்சுவிடம் ஆசிரியை கொடுக்க,
பூவினாவின் வீட்டிற்கு ஃபோன் செய்தாள் மஞ்சு.
எதிர்புறம் பூவினாவின் அம்மா ஃபோனை எடுத்தார்.
பூவினா பற்றி மஞ்சு கேட்டதும், பூவினாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் காலேஜுக்கு வரமுடியவில்லை என்றும், அடுத்து வரும் திங்கட்கிழமை காலேஜுக்கு வந்து விடுவாள் என்றும் கூறி ஃபோனை வைத்து விட்டார் வள்ளி.
கிரேசா வீட்டில் அவள் வெளியூர் சென்று இருப்பதாகவும் அடுத்த நாள் காலேஜுக்கு வந்து விடுவாள் என்றும் கூறினர்.
ஒரே பென்ச்சில் அமர்ந்திருக்கும் தன் தோழிகள் இருவரும் வராமல் மஞ்சுவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது... அவர்கள் இருவரில் ஓருவர் வராவிட்டாலும் அன்று மாலையே ஃபோன் செய்து கேட்கும் மஞ்சு... இந்தக் கனவுகள் தினமும் வந்ததால், ஏற்பட்ட குழப்பத்தில் தோழிகளுக்கு ஃபோன் செய்து கேட்க மறந்து போனாள். எப்போது இருவரும் வருவார்கள் என்று காத்திருந்தவளுக்கு, நாளையே கிரேசா மட்டும் வருவது சற்று ஆறுதலாக இருந்தது.
'இனியும் மனதிற்குள் வைத்துப் புழுங்குவது சரிப்படாது. பூவினாவும் காலேஜுக்கு வந்ததும், பூவினாவிடமும், கிரேசாவிடமும், கனவைப் பற்றி, கனவில் வரும் ரகுநந்தனை தனக்குப் பிடித்திருப்பதையும் சொல்ல வேண்டும்.' என்று முடிவெடுத்து, தோழிகள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் மஞ்சு.
"இந்த மஞ்சுவை ஞாபகமிருக்கிறதா சகோதர, சகோதரிகளே? ரகுநந்தனை, பூவினா பார்த்த அன்று, ரகுநந்தனின் தனியறையில் ரகுநந்தனுடன் பூவினா பேசிக்கொண்டிருந்தபோது, கிரேசாவுடன் வந்து, அழைப்பாளே! ! அதே மஞ்சு தான். (அத்தியாயம் 4.)
"மஞ்சுவின் கனவில் ரகுநந்தனும் வைதேகியும் வருகிறார்களே ஏன்?"
அடுத்தடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!
💍 💍 💍 💍 💍 💍 💍 💍 💍
0 Comments