வருவான் 26
போன ஜென்மத்தில் நடந்த விஷயங்களை 'ஜெய்சஞ்சீவ்'வாக மாறி, சொல்லிக்கொண்டிருந்தான் 'ஜெயராம்'...
அவனும் ரகுநந்தனும், வைதேகிக்குத் துணையாக அவள் வீடு இருக்கும் தெருவரை சென்றதை சொல்லிக்கொண்டிருந்த 'ஜெய்சஞ்சீவ்' வை, கிரேசா தொட்டு தன் புறம் திருப்பி,
"வைதேகி வீடு உங்களுக்குத் தெரியுமா?" என்று உணர்ச்சி வசப்பட்டுக் கேட்க,
கிரேசாவைத் திரும்பிப் பார்த்த 'ஜெய்சஞ்சீவ்'விற்கு 'ஜெயராமின்' நினைவும் சேர்த்து, குழப்பத்தை ஏற்படுத்தி, மூளை தன் வேலையை நிறுத்த, மயங்கி விழுந்தான் ஜெயராமாக மாறிய ஜெய்சஞ்சீவ்.
அனைவரும் பதறி ஜெயராமை நெருங்க, பூவினா மட்டும் கிரேசாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.
"என்ன வினு? என்னையே பார்த்துக்கிட்டிருக்க? " என்று வெகுளித்தனமாகக் கேட்டாள் கிரேசா.
"லூசாடி நீ? அவனே அரையும் குறையுமாத்தான் ஞாபகம் வச்சுக்கிட்டு அலையறான்... ஏதோ இன்னைக்குத்தான் கோர்வையா சொல்லிக்கிட்டிருந்தான். கெடுத்துட்டியே... இதுல உன்னை யாரு இடையில புகுந்து கேட்கச் சொன்னது?" என்று பூவினா எகிற.
"என்ன வினு? என்மேல ஏன் கோபப்படுற? வைதேகி வீடு தெரிஞ்சுட்டா பிரச்சினை எல்லாம் முடிஞ்சுரும்ல?" என்றாள் கிரேசா நம்பிக்கையுடன்.
"வைதேகி வீட்டுக்கும் நம்ம பிரச்சினைக்கும் என்ன சம்மந்தம்?"
"கதை கேட்ட சுவாரசியத்துல எல்லாத்தையும் மறந்துட்டியா வினு?"
"நீ விஷயத்துக்கு வா!"
"வைதேகி வீடு தெரிஞ்சுட்டா, நேரா போய், ரகுநந்தன் மோதிரத்தை குடுத்துட்டு வந்துட வேண்டியதுதானே?" என்ற கிரேசாவை,
எந்த ஒரு சலனமும் இல்லாமல் பார்த்தாள் பூவினா.
"இப்ப எதுக்குப் பார்க்கிற?"
"இல்ல... இதுவரை நல்லாதானே இருந்த? திடீர்னு உனக்கு என்ன ஆச்சுன்னு பார்த்துக் கிட்டிருக்கேன்." என்றாள் பூவினா சற்றுக் கேலியாக.
"எனக்கென்ன நல்லாதானிருக்கேன். நீதான் சரியில்லை. இப்ப நான் என்ன தப்பா செஞ்சுட்டேன்?" என்று கிரேசா கேட்கவும்,
"எல்லாமே தப்புதான்... வைதேகி வீடு ஜெய்க்குத் தான் தெரியும். ஜெயராமுக்குத் தெரியாது. அடுத்து, வைதேகிக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம நாம என்ன பண்ண முடியும்? மூணாவது, வைதேகியோட பிரச்சினை என்னனு தெரிஞ்சாலாவது ஏதாவது யோசிச்சிருக்கலாம்...." என்ற பூவினா கிரேசாவைப் பார்த்து,
"இப்பவாவது புரியுதா? உன்னை என்ன செஞ்சா தகும்?" என்று கேட்டாள்.
'அடக்கடவுளே தப்பு பண்ணிட்டேனே!' என்று நினைத்தபடி ஜெயராமை பார்த்தாள் கிரேசா.
ஒரு வழியாக ஜெயராமை மற்றவர்கள் சரி செய்து விட்டனர்.
ஆனாலும் அவன் முகத்தில் தெளிவு வரவில்லை...
பிறகுதான் கவனித்தாள் அனைவருமே தன்னை முறைத்துக் கொண்டிருந்ததை. ...
'அடடா ஒன்னு கூடிட்டானுங்களே?' என்று பயந்து, கிரேசா அப்பாவிப் போல முகத்தை வைத்துக்கொண்டாள்.
கிரேசிவின் முகத்தைப் பார்த்ததும் வேலுவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவன் சிர்ப்பதைப் பார்த்து மற்றவர்களும் சிரிக்க,
'யப்பா...' என்று நிம்மதி மூச்சு விட்டாள் கிரேசா.
"இனி என்ன பண்ண போறோம்?" என்று செந்தில் கேட்டார்.
"உங்களுக்கு வைதேகி வீடு தெரியுமா டாக்டர்?" என்று கேட்டான் வேலு.
"எனக்கு வைதேகி முகமே ஞாபகத்தில் இல்லப்பா... ரகு உயிரோட இருந்த காலத்துல மட்டுமில்ல, அவன் எங்களைவிட்டு போனபிறகும், அவனுடைய திறமையைக் கேள்விப்பட்டு, "ரகுவை விரும்புறேன்"ன்னு சொல்லிக்கிட்டு வந்த பொண்ணுங்க நிறைய.... ஜெய் சொன்ன பிறகுதான் ரெண்டு மூணு தடவ வைதேகியை பார்த்திருக்கேன்னே ஞாபகத்துக்கு வருது... ரகு விரும்புனது தெரிஞ்சிருந்தா நல்லா பேசிப் பழகியிருப்பேன்... என்கிட்ட தான் யாரும் சொல்லலையே?" என்று வருத்தப்பட்டார் செந்தில்.
"உங்களிடம் சொல்லத்தான் முயற்சி செய்தார் ரகுநந்தன்... அதோட ரகுநந்தன் சொல்லாம, அவருடைய காதலை நாம் சொல்றது சரியில்லைனு ஜெய்சஞ்சீவ் நினைச்சிருக்கலாம்." என்று ரகுநந்தனிற்கு வக்காலத்து வாங்கினாள் பூவினா.
'இவ.... சும்மாவே ரகுநந்தன்! ரகுநந்தன்னுவா. ... இந்த லட்சணத்துல அவன் கதைய வேறு கேட்டுட்டா. இப்போ என் நிலமைதான் சரியில்லை." என்று நினைத்தவனாக வேலு, பூவினாவையே பார்த்தான்.
பிறகு செந்திலிடம், "சுதா வீட்டுக்குப் போனிங்களே? அவங்க வீடு எங்கே இருக்குன்னு தெரியுமா? அவங்களுக்கு வைதேகி பற்றித் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கே!" என்று கேட்டான் வேலு.
"அது நல்லாதெரியும். ஆனா அந்தப் பொண்ணு ஹௌஸ்சர்ஜன். பயிற்சி காலம் முடிஞ்சதும் போயிடுச்சு... இப்ப எங்கே இருக்குன்னு தெரியல." என்று யோசித்தவரிடம்,
"எதற்கும் அவங்க வீட்ல போய்ப் பார்க்கலாமா?" என்று வேலு கேட்டதும், ஒத்துக்கொண்டு அனைவரும் சுதா இருந்த வீட்டிற்குச் சென்றனர்.
சுதா வீடு மட்டுமல்ல. தெருவே மாறியிருந்தது. அந்தத் தெருவில் வேறு யாரையும் செந்திலுக்கோ... மற்றவர்களுக்கோ தெரியவில்லை. கொஞ்சம் தேடியலைந்து, சுதா வீட்டைக் கண்டுபிடித்தனர். சுதா வீடும் மொத்தமாக மாறியிருந்தது.
வீட்டின் அழைப்பு மணியை அழுத்திக் காத்திருந்தனர். யாரோ வந்து கதவைத் திறந்தனர். அவர்களிடம் சுதாவை பற்றிக் கேட்டனர் நம்மவர்கள்.
அந்த வீட்டிலிருந்தவர்களுக்கு சுதாவைத் தெரியவில்லை.
'சுதா வீட்டின் சொந்தக்காரர்கள் பத்து வருஷத்திற்கு முன்னரே விட்டை விற்று விட்டனர்' என்ற செய்தியைத் தாண்டி வேறு எதுவும் தெரியவில்லை.
அக்கம்பக்கத்தினருக்கும் சுதா குடும்பத்தினர் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
"பத்து வருஷத்துக்கு முன்னாடி தானே வீட்டை வித்திருக்காங்க? அதுக்கு முன்னாடியே சுதாவுக்குக் கல்யாணம் ஆகியிருக்குமே? சுதாவை எந்த ஊர்ல கட்டிக்கொடுத்தாங்க?" என்று வேலு கேட்டதும்,
"சுதா குடும்பத்துக்கு இது சொந்த வீடு இல்ல... இந்த வீட்ல வாடகைக்கு இருந்தாங்க... சுதா குடும்பம் அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ண முன்னாடியே வீட்டைக் காலிபண்ணிட்டுப் போயிட்டாங்க." என்று கூறினர்.
"என்ன இது? யாருக்குமே தெரியல..." என்றாள் பூவினா. எல்லோருக்குமே இதேதான் தோன்றியது.
"வேறு எப்படி வைதேகியை கண்டுபிடிக்கிறது?" என்று கேட்டாள் கிரேசா.
"ம்ம்... நீ மட்டும் உன் திருவாயை மூடியிருந்தாய்னா இன்னேரம் தெரிஞ்சிருக்கும் ..." என்று பூவினா சலிக்க,
"எருமை! நீயும் தானே இப்படிப் பண்ணின? நான் உன்னை ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா? தப்புதான் இல்லைனு சொல்லல... வேணும்னேவா பண்ணேன்?"
"சரி! சரி! விடுங்க. இனி என்ன பண்ணலாம்னு யோசிப்போம்." என்று வேலு கூறியதும், கிரேசா ஜெயராமிடம்,
"ஜெயராம், கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்களேன்... ஏதாவது ஞாபகத்துக்கு வருதான்னு." என்று பாவமாகக் கேட்டாள்.
"இதெல்லாம் நீ சொல்லித்தான் செய்வேனா என்ன கிரேஸ்? நானும் நிறைய நேரம் யோசித்திருக்கிறேன்... எனக்கு ஒன்னுமே தெரியல கிரேஸ்..." என்று ஜெயராம் சொல்லி முடிக்கும்போது தான்,
ஜெயராம் தன்னை கிரேஸ் என்று அழைப்பதை கவனித்த கிரேசா,
"நீ என்ன என் தாத்தாவா? பேரல்லாம் சுருக்கிக் கூப்பிடுற? ஒழுங்கா கிரேசான்னே கூப்பிடு ஆமா..." என்றாள்.
"இப்ப இது ரொம்ப முக்கியமா?" என்று இடைவெட்டிய வேலு.
"வைதேகி உயிரோட இருக்காங்களா? இல்லையாங்கிறதே நமக்கு நிச்சயமா தெரியல... அவங்களையும் ரகுநந்தனையும் தெரிஞ்சவங்க நீங்க மூணுபேரும் மட்டும்தானா? வேற யாராவது இருக்காங்களா? ரகு தற்கொலை செஞ்சுக்கிட்டார். அவர் தற்கொலைக்குக் காதல் மட்டும்தான் காரணமாத் தெரியுது... ஏன்னா ரகுவைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல ஏதோ தடை வைதேகிக்கு இருந்திருக்கு... அது என்னன்னு சுதா கண்டுபிடிக்கிறதா சொல்லியிருக்காங்க... கண்டுபிடிச்சாங்களா?... இல்லையா? இப்ப சுதா கிடைச்சா, வைதேகி பத்தித் தெரிஞ்சுக்கலாம்... இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தவங்களைக் கண்டுபிடிக்கிறது இவ்வளவு சிரமமா?!!" என்று அடுக்கிக் கொண்டே போன வேலு...
அனைவர் முகமும் சோர்ந்து இருப்பதைக் கண்டான். அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே,
"நேரமாயிடுச்சு... இன்னைக்கு இது போதும்... நாளைக்குப் பார்த்துக்கலாம்." என்றான்.
"ஒரு வழியும் தென்படவில்லையே வேலு. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்தில்தானே நிற்கிறோம்? இதே நினைப்போட போனா சாப்பாடும் இறங்காது, தூக்கமும் வராது." என்றான் ஜெயராம்.
"நீங்க சொல்றது சரிதான்... ஆனா நாம ஒன்னும் ஆரம்பிச்ச இடத்தில அப்படியே நின்னுடல... நான் இத்தனை சந்தேகங்கள் சொல்லியிருக்கேன்ல? அதை மனசுக்குள்ள ஓட்டிப் பாருங்க. நிச்சயம் ஏதாவது ஒரு ஐடியா கிடைக்கும்." என்று கூறியதோடு,
செந்திலையும் கிரேசாவையும் அவரவர் வீட்டில் விட்டுவிட்டு, பூவினா வீட்டை நோக்கி வண்டியைக் கிளப்பினான்.
"கொஞ்ச நேரம் வேற எங்காவது ரிலாக்ஸ் பண்ணிட்டு வீட்டுக்குப் போகலாமா?" என்று கேட்டான் வேலு.
பூவினாவிற்கும் வேலுவுடன் இருக்க வேண்டும் போலிருந்தது.
ரகுநந்தனைப் பற்றித் தேடத் தேட, தான் வேலுவை விட்டு வெகுதூரம் செல்வதைப் போலிருந்தது.
வைதேகி பற்றி ஜெயராம் கூறும்போதே தனக்கும் வைதேகிக்கும் சம்மந்தம் இருக்க வாய்பில்லாதது போலிருந்தது…
நிச்சயம் நான் வைதேகி கிடையாது... அவள் எங்கே இருக்கிறாளோ? அவளைப் பார்த்ததும், வேலு மனம் மாறிவிட்டால்?!!! இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்..." என்று பலவாறாகக் குழம்பிக் கொண்டிருந்த பூவினாவைப் பார்த்த வேலு.
"உனக்கு சோர்வா இருந்தா உன் வீட்டுக்கே போய் விடுவோம்." என்றான்.
இதைக்கேட்ட பூவினாவிற்கு மேலும் வேதனையாக இருந்தது... 'உடனே என்னை வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிட்டான்?!! அவனுடன் இருக்கச் சொல்லி அடம்பிடித்திருக்க வேண்டாமா?' என்று நினைத்தவள்,
"இல்லை! எனக்கும் வீட்டுக்குப் போக இஷ்டமில்லை..." என்றாள் சோர்வாக.
"அதைச் சிரிச்சுக்கிட்டே சொல்லலாமே?" என்றான் குஷியாக.
வேலுவின் குஷி பூவினாவையும் தொற்றிக்கொள்ள,
"சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டா என்ன நடந்துடப் போகுது? அங்கேயும் போயி உங்க சித்தப்பாவைப் பத்திதான் பேசப்போறோம்." என்றாள் சலிப்பாக.
"சித்தப்பா?.... ஓ!.... ரகு? ஹாஹாஹா... அவனைப் பத்தி நான் நினைக்கிறேனா? இப்ப சொல்லு அவனைப் பற்றித் தேடுவதை உடனே நிறுத்திடுறேன்.... உனக்காகத்தானே அவனுக்கு உதவப் போறேன்?" என்றவனைக் கூர்ந்து பார்த்தாள்.
அவன் பூவினா தன்னுடன் நேரம் செலவிட வந்த சந்தோஷத்தில் குதித்துக் குதித்து நடந்தான்... மரக்கிளைகளைத் தட்டினான்... ஸ்டைலாக நின்றான்... நடந்தான்...
அவனுடைய சந்தோஷம் பூவினாவையும் தொற்றிக்கொள்ள, வேலுவின் அருகில் சென்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
இதை எதிர்பார்க்காத வேலுவின் கண்களில் சந்தோஷம் கூத்தாடியது...
அவனும் அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான். இருவரும் கைகோர்த்தவாறு எதுவும் பேசாமல் நடந்தனர்.
"வைதேகி..." என்று ஏதோ பேச வந்த பூவினாவின் வாயைத் தன் கைகளால் மூடி,
"நம்மைப் பற்றி மட்டும் நினைப்போமே! என்று கெஞ்சலாகக் கேட்டான்.
"சரி!" என்று கூறியவள்,
"வேலு... வேலு"
"ம்ம்"
"எதாவது பேசேன்..."
"பேசிட்டா போச்சு. என்றவன், அவன் கல்லூரி காலத்தில், வேலைக்குச் சேர்ந்த பிறகு நடந்த வேடிக்கையான நிகழ்ச்சிகளைக் கூறிக்கொண்டே வர, பூவினா சிரித்துக் கொண்டே வந்தாள்.
பூவினா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, அவளை வைத்தகண் வாங்காமல் வேலு பார்த்தான்.
அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று பூவினாவை மயக்க, தானாகச் சிரிப்பு நின்றது.
அவள் மனம் புரிந்த வேலு, பூவினாவை நெருங்கி,
"வினி நாம கல்யாணம் பண்ணிக்குவோமே..."
"கல்யாணம் பண்ணிக்காம வேற என்ன பண்றதா உத்தேசம்?"
"எந்த உத்தேசமும் இல்லை... காலா காலத்துல கல்யாணம் பண்ணி, எங்கம்மா கையில் ரெண்டு, உங்கம்மா கையில் ரெண்டு, எங்கப்பா கையில் ரெண்டு..."
"என்னதது?"
"குட்டிவேலு, குட்டி வினிதான் வேறென்ன? பிள்ளகுட்டியா பெத்துபோடுவோம்..." என்று வேலு சொன்ன விதத்தில் மீண்டும் சிரிக்கத் தொடங்கியவளை,
மெல்ல இழுத்து, மென்மையாக அணைத்தான் வேலு.
அவன் அணைப்பில் உலகம் மறந்து பிரச்சினை மறந்து இருந்த நேரத்தில்,
"வைதேகி!" என்று யாரோ அலறும் சப்தம் கேட்டு, திடுக்கிட்டு வேலு விடமிருந்து தள்ளி நின்றாள்.
கூச்சப்பட்டு விலகி நிற்கிறாள் என்று நினைத்தவன், மீண்டும் பூவினாவை நெருங்க,
அவள், "வீட்டுக்குப் போகலாம் வேலு." என்றாள்.
"இப்பத் தானே வந்தோம்? இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாமே?" என்றவனை ஏக்கத்துடன் பார்த்தவளின் கண்கள் அலைப்புறுவதைக் கண்ட வேலு.
'மறுபடியும் முருங்கை மரம் ஏறிட்டா_ என்று நினைத்தவன்,
"இங்கே பாரு வினி! திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்க முடியாது... எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு. கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா அது உன்னைத்தான்... ரகு காதலுக்காக என்ன வேணும்னாலும் பண்றேன். ஆனா வைதேகியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அவர் அவரோட காதலுக்காக உயிரையே விட்டார்... என் காதல் மட்டும் எதில் கொறஞ்சது? என் உடம்பிலும் அவர் ரெத்தம்தான் ஓடுது. என்னால் எந்தக் காரணத்துக்காகவும் உன்னை விட்டு வாழ முடியாது வினி." என்று கூறியவன்,
கனத்த மனதுடன், பூவினாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு, தன் வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.
வேலுவின் காதல் நிறைவேறுமா?
வைதேகி எங்கே இருக்கிறாள்?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் !
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments