வருவான்-25
வைதேகியைப் பார்த்து இரண்டு நாட்களாகிறது. ரகுநந்தனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
'மறுபடியும் ஜெய் யிடம் ஐடியா கேட்கலாமா?' என்று யோசித்தவனை,
பார்த்துக் கொண்டிருந்த சுதாவிற்கு, ரகுநந்தனின் மனநிலை புரிந்தது. ஆனால் ரகுவிடம் கேட்கப் பயந்தவளாக அமைதியாக இருந்தாள்.
வேலை சம்மந்தப்பட்ட பேச்சு தவிர வேறு என்ன பேசினாலும் ரகுநந்தன் பதில் பேசமாட்டான்... இதில் அவரைப் பற்றிய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைந்தால்... மூக்கை அறுத்துக் கையில் கொடுத்து விடுவான்...
சிறிது நேரத்திற்குப் பிறகும் ரகுநந்தன் எதையோ யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது.
"டாக்டர்!" என்று ரகுநந்தனை அழைத்தாள் சுதா.
நிமிர்ந்து பார்த்தான் ரகுநந்தன்.
"வைதேகி எப்படி இருக்காங்க?" என்று கேட்டாள்.
"எனக்கெப்படி தெரியும்?" என்று அமைதியாகக் கூறினான்.
"அடுத்த வாரம் மார்கழி மாத 'பாவை நோன்பு' முடியுது. வழக்கமா தோழிகளை வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்போம். வைதேகியும் எனக்குத் தோழி தானே அவங்களை விருந்துக்கு அழைக்கலாம்னு...."
ரகுவிடம் திட்டுவாங்கப் போகிறோம் என்று தெரிந்தே கேட்டும் விட்டாள். ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக நிதானமாக,
"அதென்ன நோன்பு?" என்று கேட்டான்.
"பாவை நோன்பு...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பகவான் கண்ணனை திருமணம் செய்ய நினைத்து மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்ததில் கண்ணன், அதாவது... ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கமன்னார், ஆண்டாளை ஏற்றுக்கொண்டார்... நாமும் அதேபொல் பாவை நோன்பிருந்தால் நல்ல கணவன் கிடைப்பான்னு பெரியவங்க சொல்லிவச்சிருக்காங்க."
"நிறுத்துங்க! என்ன நீங்க? விட்டா கதாகாலட்சேபம் பண்ணிடுவீங்க போல?!! இப்ப நீங்க அந்த விரதத்தைத் கடைபிடிக்கிறீங்களா என்ன?" என்று ஆச்சர்யமாகக் கேட்டான் ரகுநந்தன்.
"ஆமாம்."
"விரதம் இருந்தா கல்யாணம் நடக்குமாம்! இதெல்லாமா நம்புவாங்க?"
"உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா டாக்டர்?"
"நமக்கு மேல ஒரு சக்தி இருக்கிறது உண்மை. அதுக்காக?!!"
"எந்த ஒரு விஷயத்தையும் உணர்வுப்பூர்வமாகப் பார்த்தால் மட்டும் புரியும் டாக்டர்."
"ஓகே! இப்ப என்ன?"
"எனக்கு வைதேகி ஃபோன் நம்பர் வேணும்."
முதலில் யோசித்தவன், 'வைதேகியை சந்திக்க நல்ல சந்தர்ப்பம்!'என்று நினைத்து, வைதேகியின் ஆபிஸ் நம்பரைக் கொடுத்தான்.
வைதேகிக்கு அழைப்பு விடுத்தாள் சுதா. வைதேகி, விருந்துக்கு வருவதாகச் சொன்னதும், சுதாவிற்குத் தலைகால் புரியவில்லை. அந்த சந்தோஷத்தை ரகுநந்தனிடம் பகிர,
"எப்ப விருந்து? எனக்கெல்லாம் அழைப்பு இல்லையா? " என்று கேட்டான் ரகுநந்தன்.
"பொதுவா ஆண்களை அழைப்பதில்லை...பரவாயில்லை உங்களுக்கும் நல்ல பொண்ணு கிடைக்கட்டும்... நீங்களும் வாங்க !" என்றாள் எதுவும் அறியாதவளைப் போல.
ரகுநந்தன், ஜெய்சஞ்சீவ், செந்தில் மூவரும் சுதா அழைத்ததால் விருந்துக்குக் கிளம்பினர். செந்தில் வழி முழுவதும் ஒரே புலம்பல்...
"உங்களுக்கு என்னப்பா நினைச்சா எங்கே வேண்டுமானாலும் போகலாம்... நான் அப்படியா? எங்கே போறேன்னு? எப்ப வருவேன்? என்று பல கேள்விகளுக்குப் பதில் சொன்னா தான் வர முடியும். இந்தக் கல்யாணத்தை ஏன்டா பண்ணிக்கிட்டோம்னு இருக்கு... எதாவது சொல்லிட்டா ஒரே அழுகை. அவ விரும்பின எல்லாத்தையும் எனக்காக விட்டுக்கொடுத்துட்டாளாம்... நிஜம்தான்... புரியுது... ஆனாலும் நிக்கிறதுக்கு நடக்குறதுக்கெல்லாம் அனுமதி கேட்கனும்கிறபோதுதான் கடுப்பாகுது..." என்றார் செந்தில்.
"இதோட குறைஞ்சது நூறு தடவை சொல்லிட்ட... இதுல என்னைய கல்யாணம் பண்ணிக்கச் சொல்ற! என்ன மாதிரி நியாயம் இது?" என்று ரகுநந்தன் சிரித்தான்.
"வாழ்றதுக்கு ஒரு அர்த்தம் வேணும் ரகு."
"நீ என்ன திடீர்னு பல்டி அடிக்கிற? கல்யாணம் பண்ணிக்க மாட்டாயா?" என்று ரகுநந்தனிடம் கேட்ட ஜெய் யிடம்,
"கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எப்ப சொன்னேன்?" என்று சிரித்தபடி கேட்டான் ரகுநந்தன்.
"உன்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது ரகு... " என்ற செந்திலைப் பார்த்து,
"அப்படி என்ன மாற்றத்தைக் கண்டுட்ட?" என்று புருவங்களைத் தூக்கி தோள்களைக் குலுக்கியவாறு கேட்டான் ரகுநந்தன்.
"இதோ இந்த மாதிரி ஸ்டைலா தோளகுலுக்குற... உடை, உருவத்தில் நேர்த்தியாக இருப்ப... இப்ப இதிலெல்லாம் கூடுதல் கவனம் செலுத்துற, எங்க வீட்டுக்கு வரவே பலதடவை யோசிக்கிறவன், சுதா விருந்துக்கு அழைச்சான்னு அவ வீட்டுக்கே கிளம்பி வர்ற... சுதாவை விரும்புறியா என்ன?"
"செந்தில்!!!.... சுதா எனக்குத் தங்கை மாதிரி...." என்று பதறித் தடுத்தான் ரகுநந்தன்.
"அதானே பார்த்தேன். நீயாவது காதலிக்கிறதாவது? !!" என்ற செந்திலிடம்,
"இல்லை செந்தில்!.... நான்... ஒரு...." என்று ரகுநந்தன், தன் காதலை செந்திலிடம் சொல்ல வரும் பொழுதே சுதாவின் வீடு வந்துவிட அத்தோடு அந்தப் பேச்சு முடிந்தது.
ரகுவிற்கு அந்த வீட்டில் நடந்த எல்லாமே புதியதாக இருந்தது. ஆனால் அந்த வீடு முழுவதும் வரும், சந்தனம், பூ, சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற கலவையான வாசம்... ஏற்கனவே அறிந்ததைப் போல இருந்தது.
சிறு குழந்தையைப் போல, ஆழ்ந்த முச்செடுத்து அந்தச் சுகந்த நறுமணத்தை அனுபவித்தவனின் காதில் அடிக்கடி கேட்கும் பெண்குரல் சிரித்தபடி, "இவன் என்ன பண்றான்னு பாருங்களேன்." என்று கேட்டதும், வியர்த்துக் கண்கலங்கினான்...
'யார் குரல் இது? என் அம்மாவின் குரலாக இருக்கும்." என்று வழக்கம்போலத் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
"வைதேகிஈஈஈ!!" என்று கேட்ட சுதாவின் குரலில் வாசலைப் பார்த்தவன் மலைத்தான்...
பட்டு ரோஜா கலரில் நேவி புளூ பார்டர் கொண்ட பட்டுசேலை வைதேகியின் மாநிறத்திற்கு அவ்வளவு அழகாக இருந்தது. தலையில் பூ, முகத்தில் லேசாகப் பூசிய மஞ்சள் அவள் முகத்திற்கு மெருகூட்டியது. நெற்றி நிறையக் குங்குமம், அதற்கு மேல் சின்னக் கீற்றாய் திருநீறு என மங்களகரமாக வந்திருந்தாள் வைதேகி...
அருகில் இருந்த ஜெய்யிடம், "ஜெய்! பட்டுப்புடவை வைதேகிக்கு ரொம்ப நல்லாயிருக்குடா...!" என்றான் ரகுநந்தன்,
"இவ்வளவு நேரம் நானும் அதே மாதிரி தானே டாக்டர் பட்டு உடுத்தியிருக்கேன்? நான் உங்க கண்ணுக்குத் தெரிந்திருக்க மாட்டேனே?" என்று கிண்டலடித்த சுதாவைப் பார்த்துச் சிரித்தான் ரகுநந்தன்.
அவன் மனம்புரிந்த சுதா சிரித்தபடியே வைதேகியை அழைத்துக் கொண்டு, உள்ளே சென்றாள்.
வைதேகியும் திரும்பி, ஒருமுறை ரகுநந்தனை பார்த்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.
"என்னடா அவ உள்ளே போயிட்டா...?" என்று ஜெய்யிடம் ஏமாற்றதுடன் கேட்டான் ரகுநந்தன்.
"என்னை என்ன பண்ண சொல்ற ரகு? வருவா பொறு" என்றான் ஜெய்.
சுதா, வைதேகியை கவனித்தாள்... அவள் மனம் ஒருநிலையில் இல்லை என்பது புரிய,
"நாமும் திண்ணைக்குப் போய்விடுவோமா வைதேகி?" என்று கண்களில் குறும்பு மின்னக் கேட்டாள் சுதா.
வைதேகிக்கும் ரகுநந்தன் அருகில் இருக்கத்தான் விருப்பம் ஆனால்....
"என்ன யோசனை? வா!" என்று வைதேகியை கையைப்பிடித்து சுதா தூக்க,
"வேண்டாம் சுதா! வீட்டில் தவறாக நினைத்துவிடப் போகிறார்கள்" என்று கூறினாள் வைதேகி.
வைதேகியின் முகத்தில் பயம் தெரியவில்லை ஆனால் ஏதோ இருந்தது...
அதைக் கவனித்த சுதா, வைதேகியிடம், 'அவள் மனதில் ரகுநந்தன் இருக்கிறாரா?னு நேரில் கேட்டுவிடலாமா?' என்று ஒரு கணம் யோசித்தவள்,
"ஏதோ இப்போழுதுதான் பழக ஆரம்பிச்சிருக்கோம்.... அதுக்குள்ள தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிக் கேட்கிறேன் என்று என்னிடமிருந்து விலகிவிட்டால்? ! ' என்று நினைத்தபடி வைதேகியையே பார்க்க,
சுதாவைப் பார்த்த வைதேகி சிரித்துவிட்டாள். பிறகு, இருவரும் எழுந்து ஹாலுக்கு வந்து, ரகுவிற்கு எதிரில் அமர்ந்து கொண்டனர்.
ரகு, வைதேகியைப் பார்த்து,
"பட்டுப்புடவை கட்டினால் பெண்களுக்குப் பேசத் தெரியாமல் போய் விடுமா வைதேகி?" என்று கேட்க,
வைதேகி ரகுநந்தனை அமைதியாக நிமிர்ந்து பார்த்தாள்.
"என்னாச்சு? புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிற? ஒரு வாரத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டேனா என்ன?" என்று கேட்டான்.
வைதேகியின் அமைதி, ரகுவை பாதித்தது.
வைதேகி தலையை மட்டும் 'இல்லை' என்பதைப் போல அசைத்தாள்.
"பின்னே?" என்று கேட்டவன் மனம் துடித்தது.
'இவ ஏன் என்னை இதற்கு முன் பார்க்காத மனிதரிடம் நடந்துகொள்வதைப் போலப் பண்றா? ஒருவேளை இவ என்னுடன் ஒரு பத்திரிக்கையாளராகத் தான் பேசினாளோ? நான்தான் என்னைப் பிடித்துவிட்டது என்று தவறாகப் புரிந்து கொண்டேனோ?' என்று நினைக்கும் போதே ரகுவிற்கு என்னவோ போலாகிவிட்டது.
அவன் வைதேகியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
மறுபடியும் நிமிர்ந்து ரகுநந்தனைப் பார்த்தவள்,
"அன்னைக்கு உங்களைப் பார்க்க வந்தேன்... அதனால் உங்ககிட்ட பேசினேன். இன்னைக்கு சுதா வீட்டுக்கு வந்திருக்கேன்..." என்று ஏதோ உளறிகொட்டினாள் வைதேகி.
"இன்னைக்கு என்னை இங்கே நீ எதிர்பார்க்கவில்லையா?" என்று கேட்கும்போதே ரகுவிற்குக் குரல் நடுங்கியது.
"நீ வருவேன்னு தெரிஞ்சு, உன்னைப் பார்த்துப் பேச மட்டும்தான் இங்கே நான் வந்திருக்கேன்." என்று மிகவும் வேதனையாக ரகுநந்தன் கூற.
அவன் வேதனைப்படுவதைக் காண பொறுக்காத வைதேகி,
"இல்லை! நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை! நீங்க இங்கே வருவீங்கன்னு எனக்குத் தெரியும். நானும் உங்களைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன்.... ஆனால்..."
"ஆனால்?" என்றவன் மனம் குளிர்ந்து. 'இவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது... என்ன நம்பிக்கையுடன் வைதேகி பேசுவதைக் கவனிக்க,
"சுதா வீட்டுக்கு வந்துட்டு உங்ககூடப் பேசினா..." என்று வைதேகி இழுக்க.
"பேசினா?" என்று வைதேகி தனக்காக வந்திருக்கிறாள் என்ற துள்ளல் குரலில் தெரிய, கண்களில் காதல் வழிய, வைதேகியின் கண்களுக்குள் பார்த்துக் கேட்டான்.
"யாரவது தப்பா எடுத்துக்க மாட்டாங்களா?" என்று தயங்கி, சுற்றிலும் பார்வையை ஓடவிட்டபடி கேட்டாள் வைதேகி.
"புரியல" என்றான் ரகு, அவள் மனதை அறியும் ஆவலோடு.
"அது! நாம வேலை பார்க்கும் இடம்... உங்களைப் பார்க்க வந்துவிட்டு, சுதாவுடன் பழகினாலும், யாரும் தப்பா எடுக்கமாட்டாங்க. ஆனால் இது சுதாவோட வீடு!... வந்து..." என்று மீண்டும் வைதேகி தயங்க...
"புரியுது" என்று சிரித்தான் ரகுநந்தன்.
அதுவரை சுதாவிடம், சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டிருந்த செந்தில், ரகு, வைதேகி பேசிய கடைசி வாக்கியங்களை மட்டும் கவனித்துவிட்டு,
"இங்க பாரும்மா! எங்க ரகுவிற்கு நீ சொல்ல வர்றது புரியும்... நீ... மனச போட்டுக் குழப்பிக்காத. " என்றார் செந்தில்.
"இவர் என்ன சொல்றார்?" என்று சுத்தமாகப் புரியாமல் கேட்டாள் வைதேகி.
"புரியாத வரை சந்தோஷம்" என்று சிரித்தான் ரகுநந்தன்.
"என்ன ரகு சொல்ற? நீ பேசுறத வச்சு அந்தப் பொண்ணு மனசுல ஆசை வளர்த்துக்கக் கூடாதேன்னு சொல்றேன்...நீ என்னைக் கிண்டல் பண்ற?" என்ற செந்திலைப் பார்த்து,
'பிறகு சொல்றேன்.' என்று ஹஸ்கி வாய்சில் கூறினான் ரகுநந்தன்.
பேச்சு தொடர நேரம் போனது தெரியவில்லை யாருக்கும்...
ஆனால் சுதாவிற்கு மட்டும் வைதேகி கூறும் சமாதானங்களைத் தாண்டி வேறு ஏதோ ஒன்று வைதேகியின் மனதில் உள்ளது... அந்த விஷயம்தான் ரகுநந்தன் மேல், வைதேகிக்கு காதல் இருந்தும், அதை ஒத்துக்கொள்ளத் தயங்குகிறது.' என்று தோன்றியது.
'அதை எப்படிக் கண்டுபிடிப்பது? இதைப் பற்றித் தெரியாம ரகுநந்தன் விரும்புராறே?' என்று சுதா மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள்.
அனைவரும் சுதாவிடம் விடைபெற்று புறப்பட, ரகுநந்தன் வைதேகியிடம், "நாம மறுபடியும் எப்ப பார்க்கலாம்?" என்று கேட்டான்.
அவன் மனம் புரிந்து வைதேகி, "நீங்களே சொல்லுங்க." என்றாள்
"என்னை உன் வீட்டிற்கு அழைக்கமாட்டாயா? "என்று கேட்டான்.
"நிச்சயம் என் வீட்டுக்குக் கூட்டிட்டு போறேன்... ஆனா எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்க" என்றாள்.
"சரி! உன் முகவரியாவது குடு. உன் வீடு இருக்கும் தெரு வரைக்குமாவது உன் கூட வர்றேன்." என்றான் ரகு.
"ரகு நமக்கு ஆஸ்பத்திரில வேலை இருக்கு. இப்பவே தாமதமாயிடுச்சு." என்றார் செந்தில்.
"நீங்க முன்னாடி போங்க... நாங்க ரெண்டு பேரும் வைதேகி வீடுவரை துணைக்குப் போறோம்." என்று ஜெய் கூறியதும்,
செந்தில் ஆஸ்பத்திரியை நோக்கி வண்டியைவிட, ரகுநந்தனும், ஜெய்சஞ்சீவ்வும் வைதேகியை முன்னே விட்டு, சற்று தள்ளி பின் தொடர்ந்தனர்.
ரகுவிற்கு நடப்பதை நம்பவே முடியவில்லை.... அவனை வைதேகிக்குப் பிடித்து இருந்தது கடவுளே வரம் தந்ததைப் போல மனமெல்லாம் சந்தோஷத்தில் கூத்தாடியது…
அதற்குள் அவன் மனம் திருமணக் கனவுகளில் மிதந்தது...
எனக்கே எனக்கென்று ஒரு குடும்பம் உருவாகப்போகிறது. நான், வைதேகி, எங்கள் குழந்தைகள் என்று அற்புதமான வாழ்க்கை வாழப்போகிறேன்...
அப்படியொரு வாழ்க்கையை வாழ எங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட வேண்டும்.... இதே தெருவில் உன் கையைப் பிடித்து, நான் நடந்துவர வேண்டும்' என்று எண்ணியபடி, வைதேகியைப் பின்தொடர்ந்தான்.
வைதேகியின் மனமும் குதூகலித்தது...
ரகுநந்தனின் காதல் வைதேகியை, பெண் என்ற உணர்வைக் கொடுத்தது...
புதிதாக வெட்கமெல்லாம் வருகிறது...
ரகு எனக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் என்னைப் புது மனுஷியாக்குகிறது.... அவன் எதிரில் எனக்குப் பேச்சு வர மாட்டேன்கிறது. அவன் பார்வை தூண்டில் போட்டு என்னை அவன்வசம் இழுக்கிறது... என்று ஏதேதோ நினைவுகள் வைதேகிக்கு இன்பம் தந்த அதேவேளையில் தன் நிலை அவளுக்கு விஸ்வரூபம் எடுத்துப் பயமுறுத்தியது...
அதுவரை வந்த இன்பக் கனவுகள் மாயமாகியது. அவள் முன் இரு பாதைகள் விரிந்தன. ஒன்று ரகுநந்தனுடன் இன்ப வாழ்வு... மற்றொன்று வெறும் இருள் நிறைந்ததாக...
மனதில் குழப்பம் எழ, 'அடுத்த சந்திப்பில் ரகுநந்தனிடம் என் பிரச்சனையைக் கூறி விட வேண்டும்…' என்று முடிவெடுத்தாள் வைதேகி.
ஒரு தெரு திரும்பும் இடம் வந்ததும் நின்ற வைதேகி,
"போதும் வீடு வந்து விட்டது. அதோ அந்த மஞ்சள் கலர் வீடு." என்று கூறி விட்டு நடந்தாள்.
அவள் வீட்டிற்குள் செல்லும் வரை பார்த்திருந்து விட்டுத் திரும்பினர் ரகுநந்தனும், ஜெய்சஞ்சீவ்வும்.
"அப்போ உங்களுக்கு வைதேகி வீடு தெரியுமா? இது போதுமே? வாங்க போய்ப் பார்க்கலாம்." என்று உணர்ச்சி வசப்பட்டுக் கத்தி ஜெயராமைத் தன் பக்கம் திருப்பி கிரேசா கேட்க,
கிரேசாவைத் திரும்பிப் பார்த்த ஜெயராம் மயங்கிச் சரிந்தான்.
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் !
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments