வருவான் -24
"சரி! இப்பயாச்சும் பேட்டிய ஆரம்பிக்கலாமா?" என்று ரகுநந்தன் முன் அமர்ந்தாள் வைதேகி.
"அதுக்காகத்தான் தானே காத்திருக்கிறேன்!!!" என்றான் ரகுநந்தன் சிரித்தபடி.
அறிமுகக் கேள்விகள் முடிந்த பிறகு,
"நீங்க ஏன் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீங்க டாக்டர் ரகுநந்தன்?" என்று வைதேகி கேட்க,
"நான் ஒரு டாக்டர்கிட்ட வேலை கத்துக்கிட்டிருந்தபோது, அவர் சொன்ன விஷயம் இது!... டாக்டர் தொழிலும், ஆசிரியர் தொழிலும்தான் மிகவும் உன்னதமான தொழில்!! இன்றைய சூழ்நிலையில் இந்த இரு தொழில்களிலும் பணப்பேய்கள் ஊடுருவிடுச்சு... ஆனா நீ கடைசிவரை இந்தத் தொழிலுக்கு உண்மையா இரு ரகு… எந்தச் சூழ்நிலையிலும் ஒரு உயிரோட விளையாடக் கூடாது... உயிர இழந்தே வந்தாலும் அவங்க நம்பிக்கையைக் காப்பாத்தனும் ரகு." என்பார் அடிக்கடி... பல நல்லவங்களுக்கு, இறப்புக்குப் பிறகும் நியாயம் கிடைக்கிறதில்லை... அட்லீஸ்ட் அவர்களுடைய உடலையாவது நியாயத்தின் சாட்சியாக்கி விடனும்னு தோணுச்சு." என்றான் ரகு தீவிர முகபாவத்துடன்.
இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத வைதேகி, தன் கண்களை அகல விரித்து ரகுநந்தனைப் பார்க்க,
'ஆஹா ஒரே பதிலில் கவுத்திட்டான்!!!' என்று நினைத்தபடி ஜெய்சஞ்ஜீவ்வும் ஆச்சரியமாக ரகுவைப் பார்க்க,
"ம்ம் அடுத்துக் கேளுங்க. " என்றான் ரகுநந்தன் வைதேகியின் எண்ணங்களை ரசித்தவாறு.
"உங்களுக்கு உயிரற்ற உடலைப் பார்க்கும்போது, பயமோ, தயக்கமோ, வேறு ஏதேனும் விரும்பத் தகாத உணர்வுகள் ஏற்படுவதுண்டா?"
" நீங்க பார்க்கும் கோணத்தில், நான் பார்ப்பதில்லை... அங்கே இறந்து கிடந்தவனுக்கு என்ன நடந்திருக்கிறது? எதனால் இறந்தான்? என்ற உண்மையைக் கண்டறியும் நோக்கத்தோடு செயல்படுவதால், நீங்க சொல்ற மாதிரி விரும்பத் தகாத உணர்வு எதுவும் ஏற்பட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால், உயிரற்ற அவன் உடலால் அவனுக்கோ அவனுடைய குடும்பத்துக்கோ ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்துவிட வேண்டும் என்ற உணர்வே அதிகம் இருக்கும்." என்றான் ரகு.
'இதில் இவ்வளவு இருக்கா?' என்று வியந்து போனவளாக அடுத்தக் கேள்வி கேட்கும் எண்ணமே இல்லாமல் ரகுநந்தனையே பார்த்துக்கொண்டிருந்தாள் வைதேகி.
"ஹுஹ்ஹூம்... என்று ஜெய் செருமியும் தன்னுணர்வு வராமல் பார்த்துக் கொண்டிருந்த வைதேகியை,
கண்கள் முழுவதும் தன் மனதிலிருந்த பேரானந்தத்தைப் பிரதிபலிக்கப் பார்த்தான் ரகுநந்தன். அவனுடைய கண்கள், அவன் உள்ளம் வைதேகியின் காதலை எதிர்பார்க்கிறது என்பதை வெளிப்படையாக உணர்த்தியது. அது புரிந்தும் வைதேகி புரியாததுபோல முகத்தை வைத்துக் கொள்ளப் பெரும்பாடு படவேண்டியிருந்தது.
இதைக் கவனித்த ரமேஷ், "வைதேகி! அடுத்து..." என்று சப்தமாகக் கூற,
"இந்த மருத்துவமனையில், எந்த சர்ஜரி நடந்தாலும் உங்களத்தான் அழைப்பார்களாமே? அதெப்படி?" என்று கேட்ட வைதேகி, ரகுநந்தன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்...
வைதேகியின் மனமும் தன்னை நாடுவதை உணர்ந்த ரகுநந்தனுக்கு, மனம் பூரித்தது. தான் விரும்பும் ஒரு பெண்ணுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதே மனதுக்கு இதமாக இருந்தது. இவ்வளவு சீக்கிரத்தில் தன் மனதிற்குரியவளின் சம்மதம் கிடைக்கும் என்று ரகுநந்தன் எதிர்பார்க்கவில்லை...
இதுவரை ரகுநந்தனிடம் நெருங்கிய பெண்களை, ஏனோ அவனுக்கு மனைவியாக ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை... இத்தனை வருடங்களில் தனக்கென்று ஒரு உறவை ரகுநந்தன் தேடிக்கொள்ள மனம் பயந்தது…
என்ன காரணம் என்றே தெரியாமல், சில பெண்கள் தங்கள் காதலை ஜாடையாகக் கூறும்போது, ஒரு வித பய உணர்வே வந்தது...
கல்லூரியில் படித்த சமயங்களில், உடன் படித்த நண்பர்கள், 'ரகுநந்தன், மத்த பொண்ணுங்களைத்தான் உன் அருகில் நெருங்க விடமாட்ட. சரி! நம்ம காலேஜின் இளவரசி உன்னை விரும்புறான்னு தெரிஞ்சும், தங்கச்சி! தங்கச்சி! ன்னு உருகுறியாமே? என்னதான் பிரச்சனை உனக்கு? காவிகட்டி இமயமலைக்குப் போகப்போறியா என்ன? பெரிய ரிஷ்யசிருங்கரா என்ன? என்று பலவாறு கிண்டல் செய்ததும்,
ரகுநந்தனுக்குத் தன் மீதே சந்தேகம் வந்து, 'ஏன் பெண்களிடம் தனக்கு ஈர்ப்பு வரவில்லை?' என்று தோன்றியதுமே தனக்கு உதவும் டாக்டரிடம் சென்று முறையிட்டான்.
அவரும் ரகுநந்தனை முழுவதும் பரிசோதனை செய்து விட்டு, "உன் உடம்பில் எந்தப் பிரச்னையும் இல்லை ரகு... உன் மனதில் தான் ஏதாவது பிரச்சனை இருக்கலாம்... எனக்குத் தெரிந்த டாக்டரைப் போய்ப் பார்! "என்று கூற,
அதன்படியே மனநல மருத்துவரைச் சந்தித்தபோது,
"உன் ஆழ் மனதில், நீ யாரிடமாவது நெருங்கிப் பழகினா அவர்கள் உன்னை விட்டுப் பிரிஞ்சு போயிடுவாங்கன்னு ஆழமா பதிஞ்சிருக்கு... ஒரு வயசுப் பையனாக ஆஸ்ரமத்திற்கு வரும் முன், மிகப் பிரியமானவர்களை நீ பிரிஞ்சு வந்திருக்கனும்... அந்த ஒரு வயது பாலகனுக்குத் தன் முகவரி சொல்லத் தெரியலையே தவிர, மனதளவில் வெகுகாலமாக உன் உறவுகளை, அவர்களுடன் இருந்த தருணங்களை நினைத்து ஏங்கியிருக்க வேண்டும்... இப்பொழுது கூட உனக்கு, உன் நெருங்கிய உறவு சிலரின் நிழல் உருவங்கள்... அவர்களின் ஸ்பரிசம் ஞாபகத்தில் இருக்க வேண்டும்... அல்லது கனவிலாவது வருகிறாதா? என்று கேட்டார்.
"ஆமாம்!" என்று ரகுநந்தன் தவிப்புடன் கூற,
"இந்தத் தவிப்புதான் புதிய உறவை நெருங்கவிடாமல் செய்யுது... போனது போகட்டும். இனிவரும் காலமாவது உனக்கு இனிமையா இருக்க வேணும்னா... நீ மாறனும்... உன் மனம் புதிய உறவை ஏற்கத் தயாராகனும்... உன் ஆஸ்ரமத்துல இருக்கும் எல்லோருமே உறவினர்களைப் பிரிந்தவர்கள் தானே? அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லையா? உன்னாலும் முடியும்... நான் சொல்வது போல நடந்து வந்தால் சரியாகிடும்." என்று கூறி அனுப்பியும்,
வைதேகியைத் தவிர வேறு பெண்களின், பெயர்கூட ரகுநந்தனின் மனதில் பதிவதில்லை...
"ரகுநந்தன்!... ரகு!.... என்னாச்சு?... டாக்டர்?... என்ன ஒன்னும் பேசாம இருக்கீங்க?" என்ற வைதேகியின் பதற்றமான குரலில் தன் தாயின் உணர்வு எழ, பழைய நினைவுகளிலிருந்து மீண்டவன், வைதேகியைப் பார்த்துச் சிரித்தான்.
ரகுநந்தனின் சிரிப்பில் இருந்த உயிர்ப்பைக் கண்ட ஜெய்சஞ்சீவ்வுக்கு முதன் முதலாக, பயம் வந்தது... இவர்கள் இருவரையும் சந்திக்க வைத்தது நல்லதா? கெட்டதா?...
'இந்தப் பெண்ணை உயிராக நினைக்கிறானே? !! கடவுளே என் நண்பனின் காதலைக் காப்பாற்றுங்கள் என்று மனமுருகி வேண்டினான்.
அதேநேரத்தில், ரகுநந்தனின் காதலை முழுமையாக உணர்ந்த வைதேகி, இதுவரை கேட்ட கேளிவியின் திசையை மாற்றி,
"நீங்க யாரையாவது விரும்புறீங்களா ரகுநந்தன்?" என்று ரகுநந்தனின் கண்களைப் பார்த்துக் கேட்டாள் வைதேகி.
இப்பொழுது வைதேகியின் மனதிலும் தவிப்பு அதிகமானது... வைதேகியின் தவிப்பைப் புரிந்துகொண்ட ரகுநந்தன்,
"ஒரு பெண் கொஞ்ச நாளாவே என்னைப் பாடாய் படுத்துறா... நான் அவளை என் உயிரைவிட மேலா விரும்புறேன். அவளும் என்னை விரும்புறா... ஆனா ரெண்டு பேருமே சொல்லிக்கலை. பார்வை பரிமாற்றம்தான்...." என்று ரகுநந்தன் கூறியதும்,
வைதேகிக்கு ரகுநந்தன் தன்னைத்தான் கூறுகின்றானா? என்று உறுதிபடுத்திக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அதனால்,
"அந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லமுடியுமா?" என்று தயங்கித் தயங்கிக் கேட்க, வைதேகியின் நடவடிக்கை ரமேஷுக்கு வித்யாசமாகத் தெரிந்தது…
"அவள் ஒரு தேவதைன்னு சொல்லமாட்டேன்... அவள் ஒரு அணுகுண்டு!"
"என்ன? அணுகுண்டா?" என்று அதிர்ச்சியும், செல்லக் கோபமுமாக வைதேகி கேட்க,
"வைதேகி போதும்!" என்று ஜாடையாகக் கூறினான் ரமேஷ்.
"ஆமா! பாறைபோல் இறுகியிருந்த என் இதயத்தின் காதல் கதவுகளைக் குண்டுபோட்டு உடைத்து உள்ளே வந்தவளாயிற்றே..." என்று ரகுநந்தன் கூறியதும், வைதேகிக்கு சிரித்துவிட்டாள்.
"அப்படியா? பயங்கரமான பொண்ணா இருப்பாளோ?" என்ற வைதேகியின் கேள்விக்கு,
"அதுல எந்தச் சந்தேகமும் வேண்டாம். அம்மாடி! கொஞ்ச நேரம் வாயைமுடிக்கிட்டிருந்தா... ஒரு வழி பண்ணிடு வா ...ங்க."என்று ஜெய்சஞ்சீவ், வைதேகியின் சந்தேகத்தை முழுவதும் தீர்த்துவைத்தான்.
அனைவரும் சிரிக்க, ரமேஷ் மட்டும் வைதேகியைக் கூர்ந்து கவனித்தான். அவனுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது... வைதேகியை, ரகுநந்தனும், ரகுநந்தனை வைதேகியும் விரும்புகிறார்கள் என்று. ஆனாலும் ரமேஷால் இன்னும் நம்பமுடியவில்லை... வைதேகியிடம் காதல் சொல்ல ஒருத்தனுக்கும் துணிவு வந்ததில்லை... அப்படியே சொன்னாலும் ஒரு பிரயோஜனமும் இருந்ததில்லை... வரிந்துகட்டிக் கடிதமே எழுதிக் கொடுத்தால் கூட, முற்றுபுள்ளியைக்கூட விட்டுவிடாமல் படித்துவிட்டு,
"உங்களுக்கு எழுதும் திறமை அபாரம்... எழுத்துக்களில் உணர்வுகளைப் பிரதிபலிப்பது கடினம்." என்று பாராட்டிவிட்டு, எதுவுமே நடக்காதது போல சக ஊழியரைப் போலப் பழகுவாள்!!! அப்படிபட்டவள் இன்று!! சற்றுப் பொறாமையுடன் வைதேகியையும், ரகுநந்தனையும் நோக்கினான்.
'இப்போதைக்கு இங்கிருந்து புறப்படுவோம்.' என்று நினைத்தவன்,
"வைதேகி நாம வந்து ரொம்ப நேரமாச்சு... புறப்படலாமா?" என்று கேட்டான் ரமேஷ்.
"இதோ! இதோ!" என்று கூறியபடி இருந்தாளே தவிர, புறப்படக்காணோம்...
‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவனுக்கு, பிரசாத் ஞாபகம் வர,
"வேற யாருக்குப் பதில் சொல்லவேண்டிவருமோ இல்லையோ, பிரசாத் விடும் ஜொள்லிருந்து தப்பிக்கனும் வைதேகி." என்றான்.
'பிரசாத் பெயரைச்சொன்னால், திட்டிக்கொண்டேயாவது கிளம்புவாள்' என்று நினைத்ததற்கு மாறாக,
"யார் அது வைதேகி?" என்று ரகுநந்தன் கேட்டான்.
"அது ஒரு திருந்தாத ஜென்மம்... டெலிஃபோன் ஆப்பரேட்டர்னு சொல்லிக்கும்... ஆனா வேவு பார்க்கும் வேலைதான் அதிகமா செய்து, சம்மந்தப்பட்டவங்கக் கிட்ட வத்தி வைக்கும்... பொம்பளையையே பார்க்காத மாதிரி இளிக்கும்... இல்லைனா பச்சை பச்சையா பேசும்... "
"இழுத்து நாலு அரை விடவேண்டியதுதானே?" என்று கேட்டான் ரகுநந்தன்.
"அதெல்லாம் பண்ணியாச்சு... சொரணை கெட்ட ஜென்மம். நேரடியா பேசாது. ரெட்டை அர்த்தத்தில் பேசும். நீங்க ஃபோன் பண்ணியதை பத்தி கேட்கப் போனபோது கூட," என்று நடந்ததைக் கூறிய வைதேகியிடம்,
"எனக்கு அவரை அறிமுகப் படுத்திவைக்கிறாயா?"
"ஏன்?"
"சும்மா தெரிஞ்சுக்கத் தான். "
"அவனத் தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க?"
"நிச்சயமா மசாஜ் பண்ணிவிட மாட்டோம். ஜஸ்ட் சின்ன அட்வைஸ்தான்." என்று சிரித்தான் ஜெய்.
"அடேங்கப்பா! நீங்க அறிவுரை சொன்னதும் அப்படியே கேட்டுடப்போறான். நீங்கல்லாம் வந்து பேசுற அளவுக்கு அவன் வொர்த் பீஸ் இல்ல ஜெய்! "
"நாங்க அறிவுரை சொன்னா அவன் கேட்டுதான் ஆகனும் வேற வழியில்ல வைதேகி..." என்று நமுட்டுச் சிரிப்புடன் ரகுநந்தன் கூற,
‘இவங்க ரெண்டு பேரும் ஏதோ திட்டம் போட்டுட்டாங்க... சரி! நடக்கிறத வேடிக்கை பார்ப்போம்...' என்று நினைத்த வைதேகி,
"சரி! வாங்க!" என்று கூற இதை சுத்தமாக எதிர்பார்க்காத ரமேஷ்,
"வைதேகி! இது சரிவராது... எதாவது பிரச்சனை ஆயிடப்போகுது." என்றான்.
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது சகோ... நீங்க ஏன் ஜெர்க் ஆகுறீங்க?" என்று ரமேஷிடம் கேட்டான் ஜெய்.
பத்திரிக்கை ஆபீசுக்குள் நுழைந்ததும், ரகுநந்தனையும், ஜெய்யையும் தனது கேபினுக்கு அழைத்துச் சென்றாள் வைதேகி.
"ஏதாவது குடிக்கிறீங்களா?" என்று வைதேகி இருவரிடமும் கேட்க,
"பிரசாத் அறைக்குப் போய்ப் பார்த்துக்கலாம்." என்றான் ரகுநந்தன்.
பிறகு, நால்வரும் பிரசாத் கேபினுக்குச் செல்ல,
'என்ன இவ மூணு தடிப்பயலுகளோட வர்றா?' என்ற யோசனையுடனே,
"வாங்க வைதேகி! யார் இவங்க? நம்ம ரமேஷுக்குத் தெரிஞ்சவங்களா?" என்று கேட்டான்.
"எல்லாம் வைதேகிக்குச் சொந்தக்காரங்க தான் சகோ." என்றான் ஜெய்.
வைதேகி, ரகுநந்தனையும் ஜெய்யையும் மருத்துவர்கள் அறிமுகப்படுத்த,
"என்ன சகோ? குடிக்கிறதுக்குக் காபி, டீ கூடக் கொடுக்க மாட்டீங்களா?" என்று ஜெய் கேட்டதும்,
ஆபீஸ் பையனை வரச்சொல்லி காபி வாங்கி வரச் சொன்னான் பிரசாத்.
'என்ன இவனுங்க? காபி குடிக்கவா இங்கே வந்தாங்க?' என்று நினைத்த வைதேகி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
சிறிது நேரத்தில் எழுந்த ஜெய், "காபி குடிக்கிறதுக்கு முன்னாடி, எனக்குத் ‘தம்’ அடிக்கிற வழக்கம் இருக்கு. கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடுறேன்." என்று கூறிச் சென்றான்.
காபி வரவும், எல்லோரும் குடிக்க சிறிது நேரத்தில் உள்ளே வந்த ஜெய்யும் காபியைக்குடித்துவிட்டு,
"சரிங்க சகோ! நாங்க கிளம்புறோம். இனி வைதேகியை மேடம்னு கூப்பிடுங்க... இல்லைனா நாங்க மறுபடியும் வரவேண்டி வரும்." என்று ஜெய் கூற,
"எதுக்கு? காபி குடிக்கவா?" என்று நக்கலாகக் கேட்டான் பிரசாத்.
"நக்கலு?!! இன்னும் கொஞ்ச நேரத்துல நீ என்னைத் தேடி வருவ... நான் வைதேகி கேபின்ல வெயிட் பண்றேன்." என்று கூறி விட்டு, வைதேகியின் கேபினுக்குச் சென்றான் ரகுநந்தன்.
'என்ன நடக்கிற'தென்று வைதேகிக்கே புரியவில்லை. சிறிது நேரத்தில் அரக்க பரக்க ஓடிவந்தான் பிரசாத்.
"என்னை என்ன பண்ணீங்க? " என்று கேட்டவன், ரகு பதில் கூறும் முன் எங்கோ ஓடினான்.
மீண்டும் வந்தவன், "நீங்க டாக்டர்னு சொன்னதும் நான் உஷாராயிருக்கனும்…" என்று கூறிவிட்டு மீண்டும் ஓடினான்.
"இவனுக்கு என்ன ஆச்சு?" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
"அவன் திரும்பி வரப் பதினஞ்சு நிமிஷம் ஆகும். நாங்க எதிரில் இருக்கும் காபிஷாப்பில் இருக்கோம். அவனுக்குச் சரியாகனும்னா என்னை வந்து பார்க்கச் சொல்." என்று கூறிவிட்டு நடந்த ரகுநந்தனை,
"இங்கே என்ன நடக்குது? அதச் சொல்லிட்டுப் போங்க" என்று வைதேகி ரகுவிடம் கேட்க,
"என்ன வைதேகி இன்னுமா புரியல? அவனுக்குக் காபியில் பேதிக்கு கொடுக்கும் ஆயுர்வேத மருந்த கலந்துட்டோம்... மாத்து மருந்து ரகு கையில் இருக்கு... அந்த மருந்தக் குடிக்கும்வரை இவனுக்குப் பேதி நிக்காது."என்று கூறி சிரிக்க ஆரம்பித்தான் ஜெய்!
"என்னது? பேதி மருந்த காபில கலந்துட்டீங்களா ?" என்று அலறினான் ரமேஷ்.
"டேய்! அடங்குடா. உனக்குக் குடுக்கலைல? பின்ன ஏன் அலறுற?" என்று கேட்டான் ரகுநந்தன்.
"டாக்டர்! நானும் அதே காபி தானே குடித்தேன். "
"எந்தக் காபியை? பிரசாத் கப்பில் இருந்த காபியையா?"
"இல்லையில்லை..." என்று அவசரமாக மறுத்தான் ரமேஷ்.
"அப்ப விட்டுத் தள்ளுங்க!" என்று கூறிவிட்டு வெளியேறினான் ரகு.
அவர்கள் இருவரும் வெளியே சென்ற இரண்டே நிமிஷத்தில் மீண்டும் வந்த பிரசாத் மிகவும் களைத்து இருந்தான்.
அவனைப் பார்த்ததும் ரமேஷுக்குச் சிரிப்பு அடக்கமுடியவில்லை. சுவர் இருந்த பக்கம் திரும்பிக் கொண்டான்.
"வைதேகி!" என்றவனை, வைதேகி கண்கள் சுருக்கிப் பார்க்க,
"மே...மேடம்! உங்க கூட வந்தவர் எதையோ கலந்து கொடுத்துட்டார். எனக்கு உதவச் சொல்லு... ங்க... வைதே...மேடம்!"
"எதிரில் இருக்கும் காபிஷாப்பில் இருக்கிறார்." என்றாள் வைதேகி.
"அங்கே வரை போக முடியுமா உன்னால?" என்று கிண்டலாகக் கேட்ட ரமேஷை முறைத்துவிட்டு. வெளியே சென்றான்.
"இந்த மருந்த கலக்கிக் குடி, உடனே நின்னுடும்... ஆனா இதுவே கடைசி முறையா இருக்கனும்... நான் அறுவைசிகிச்சை பண்றதுல கெட்டிகாரன்னு சொல்வாங்க... எங்கே என்ன நரம்பு இருக்குங்கறது எனக்கு அத்துபடி.... இனி உன் தப்பான பார்வை பெண்கள் பக்கம் திரும்பினா அங்க நான் இருப்பேன்.... புரியுதா?" என்று சீரியஸாக மிரட்டி அனுப்பினான்.
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments