வருவான்-23

 வருவான்-23


பதினொன்று மணியளவில், சமூகச் சேவகர் ஒருவரின் பேட்டி முடித்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க வைதேகி, ஆபிசுக்குள் சென்றதுமே, கேமரா ரமேஷ், டெலிஃபோன் ஆப்பரேட்டர் கூப்பிடுவதாகச் சொல்ல, 


"சரி!" என்று கூறியவள், கொண்டு வந்த டேப்ரெக்கார்டர், நோட் பேட், மற்றும் அனைத்தையும் தனது மேஜை டிராயரில் வைத்து மூடிவிட்டு, முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டு, தண்ணீர் குடித்தபடி தனது நாற்காலியில் அமர்ந்தாள். 


மின்விசிறியைப் போட்டு சற்று இளைப்பாறியவளிடம், கேமரா ரமேஷ், 


"வைதேகி! டெலிஃபோன் ஆப்பரேட்டரை போய்ப் பார்க்கலையா?" என்று கேட்க,


"ரெண்டு நிமிஷம் ஆகட்டும் ரமேஷ்... அவங்க கிட்ட பேசத் தெம்பு வேணாமா? கொஞ்சம் சக்தியை சேகரிச்சுக்கிறேன்..." என்று கூறிச் சிரித்தாள்.


"ஏதோ விவகாரமான விஷயம் போலிருக்கு... மதியஉணவு இடைவேளைக்குள் நீங்க போகலைனா, ஆசிரியர் கிட்டதான் சொல்வேன்னு' சொன்னார் பிரசாத்."


"விவகாரமெல்லாம் நமக்குப் புதுசா என்ன? விடுங்க. நான் பார்த்துக்கிறேன்... " என்றவளை பெருமூச்சுடன் பார்த்தான் கேமரா ரமேஷ்.


"எப்படித்தான்... இவ்வளவு அமைதியா விஷயங்களைக் கையாளுறாங்களோ? கொஞ்சம் கூடப் பதட்டமில்லையே! !!" என்று ஆச்சரியமாகப் பார்த்தபடி, தனது இருக்கைக்குச் சென்றான்.


"என்னவாக இருக்கும்?" என்று நினைத்தபடி, டெலிஃபோன் ஆப்பரேட்டர் அறைக்குள் சென்று,


"என்ன பிரசாத் கூப்பிட்டு அனுப்புனீங்களா? "என்று கேட்ட வைதேகியை மேலும் கீழும் பார்த்த பிரசாத்,


"ஏதாவது பணப் பிரச்சனையா வைதேகி? நான் உதவட்டுமா?" என்று கேட்டதும்.


"உங்களைவிட எனக்குத் தானே சம்பளம் அதிகம்? உங்ககிட்ட உதவி கேட்கிற அளவு எனக்குப் பிரச்சினை வராது...நீங்க இதைக் கேட்கத்தான் கூப்பிட்டீங்கன்னா நான் கிளம்புறேன்... இன்னைக்கு நைட் பிரிண்ட் போட வேண்டிய தகவல்கள் நிறைய இருக்கு." என்று கூறி நகர்ந்தாள், 


'திமிரு! பெரிய அழகின்னு நெனப்பு மனசுல' என்று நினைத்தவன்,


"ஆமா!ஆமா! டாக்டர்களையே வளைக்கத் தெரிஞ்சவங்களுக்குப் பணக் கஷ்டம் ஏது? உங்களக் கேட்டு ரெண்டு ஆண்கள் ஃபோன் பண்ணாங்க... சந்திக்க நேரம் கேட்டிருந்தீங்களாமே? இப்பெல்லாம் பெரிய பார்ட்டியாதான் பிடிக்கிறீங்க போல?!! அதான் நாங்கல்லாம் கண்ணுக்கே தெரியமாட்டேங்குறோம்!!!" என்று பிரசாத் இளிக்க, 


'அத்தனையும் தவறான வார்த்தைகள்!!! இவனுக்கு ஒருநாள் பூஜை போட்டுடனும்... மூஞ்சிய பாரு? விளக்கெண்ணை குடிச்சக் குரங்கு மாதிரி... கேவலமான இளிப்பு வேற,' என்று மனதிற்குள் திட்டியபடி,


"புரியற மாதிரி பேசவே தெரியாதா? உங்களை எப்படி இந்த வேலைக்குத் தேர்ந்தெடுத்தாங்க?" என்று நக்கலாகக் கேட்டாள் வைதேகி.


"நீ சொல்லிக்கொடு கத்துக்கறேன்..."


"மரியாதை! ... பேச்சுல மரியாதை இருக்கனும்... ஒருமைல பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்... பின்னே நானும் ஒருமையில் கூப்பிட வேண்டிவரும் பரவாயில்லையா?"


"இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி பொங்குறீங்க?" என்று 'ங்க' வை அழுத்திச் சொன்னவனை, ஒரு பார்வை பார்த்து விட்டு, தனது இருக்கையை நோக்கி நடந்தாள்.


"வைதேகி! நில்லுங்க!" என்று பிரசாத் கூப்பிடக் கூப்பிடக் காதில் வாங்காமல் சென்று விட்டாள் வைதேகி.


"இவளையெல்லாம். ... அது என்ன கான்செப்ட்னு வேற தெரியல.... முக்கியமானதாக இருந்தால் எல்லோரும் சேர்த்து என்னைக் காய்ச்சி எடுத்துடுவானுங்களே...' என்று திட்டியபடி யே இன்டர்காமில் வைதேகியை அழைத்தான்...


"சொல்லுங்க பிரசாத்!" என்று கேமரா ரமேஷ் கேட்க,


"வைதேகிகிட்ட குடுங்க சார். அவங்கள கேட்டுத்தான் ஃபோன் வந்தது."


"எங்கிட்டயே சொல்லுங்க... நான் சொல்லிக்கிறேன்." என்று ரமேஷ் கூறியதும் விபரங்களைக் கூறினான் பிரசாத்.


ரமேஷ் கூறிய விபரங்களைக் கேட்டவளுக்கு, ரகுநந்தன் ஞாபகம் வந்தது... 


'சரியான மைனரா இருப்பார் போலிருக்கே? என்ன ஒரு திட்டம்? நான் அப்படியெல்லாம் அப்பாயின்மென்ட் கேட்கவில்லைனு சொல்லிட்டா என்ன பண்ணுவார்? ' என்று நினைக்கும் போதே,


"நல்ல ஐடியா வைதேகி! உங்களுக்கு எப்படி இந்த மாதிரி ஐடியாவெல்லாம் வருதுன்னு தெரியல... அந்த டாக்டர் பேட்டி குடுத்தா நல்லா போகும்... இந்தப் படிப்புக்கு நிறைய ஆஸ்பத்திரில வேலை காலியா இருக்குன்னு சொன்னா பத்திரிகை இன்னும் நிறைய விற்கும்... எப்ப போகலாம்னு சொல்லுங்க." என்று ஆர்வமாகப் புறப்பட்டவனிடம், 


"கொஞ்சம் பொறுங்க ரமேஷ்! இந்த விஷயம் நல்லா போகும்னு நினைக்கிறீங்களா?" என்று கேட்டவளுக்கு மனம் படபடத்தது...


'இப்ப என்ன பண்றது? அவன் கூப்பிட்டதும், இதுதான் சந்தர்ப்பம்னு நான் ஓடிவந்ததா நினைக்கமாட்டானா?... அந்தப் பொறுக்கி பிரசாத், நான் கேட்டபோதே விஷயத்தைச் சொல்லியிருந்தான்னா, அப்படியே மறைச்சிருப்பேன். ரமேஷ் வேற ரொம்ப ஆர்வமா இருக்கானே?!! என்று நினைத்தபடி ரமேஷைப் பார்க்க,


"ஆமாம் வைதேகி! எப்பொழுதுமே வித்யாசம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா லே, அதில் என்ன இருக்கும்னு ஆர்வம் வந்துடும்ல... உங்களுக்குத் தெரியாததா?"


"ம்ம்ம்..." இருந்தாலும், ஆசிரியரிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டு வர்றேன்." என்று கூறி விட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தவள்,


"சரி! டாக்டருக்கு ஃபோன் செய்து, பேட்டி எடுக்க நேரம் கேளுங்க." என்றாள் வைதேகி.


"நீங்களே கேளுங்க... எங்கிட்ட ஏதாவது அவங்க கேட்டா, என்ன பண்றது?" என்று ரமேஷ் சொன்னதும்,


"பரவாயில்லை! நான் பக்கத்துல தானே இருக்கேன்." என்ற வைதேகியை,


'எப்பொழுதும் இவங்க தானே பேசுவாங்க? இன்னைக்கு என்ன ஆச்சு? நான் பேசினா அவங்க சந்திக்க நேரம் குடுப்பாங்களா?’ என்று நினைத்தபடியே ஃபோன் பண்ணச் சென்றான்.


அரசு மருத்துவமனை, டாக்டர்கள் அறையில் வைதேகியும், ரமேஷும் ரகுநந்தனுக்காகக் காத்திருந்தனர். 


எதிர்பாராத விதமாக, ஒரு ஆபரேஷன் வந்துவிட்டதால் ஜெய்சஞ்சீவை அவர்களுடன் இருக்கச் சொல்லிவிட்டு, செந்திலுடன் சென்று விட்டான்.


"என்ன சாப்பிடுறீங்க?" என்று கேட்ட ஜெய்சஞ்சீவ்வை, 


'எனன இவன்? மருத்துவமனைக்குப் பேட்டி எடுக்க வந்தவங்ககிட்ட, என்னவோ அவங்க வீட்டுக்கு வந்த விருந்தாள் மாதிரி உபசரிக்கிறான்?!!!' என்று நினைத்த வைதேகி, 


"ரெண்டு இட்லி, ஒரு பொங்கல்," என்றாள்.


வைதேகி, தன்னைக் கலாய்க்கிறாள் என்று நன்றாகத் தெரிந்தது ஜெய்சஞ்சீவிற்கு. 


'எங்கிட்டயேவா? என்று இல்லாத வேட்டியை மடித்துக் கட்டி, வைதேகியை கலாய்க்க வாயைத் திறந்தவனுக்கு, ரகுநந்தன் டைட் குளோசப்பில் தெரிந்தான்.

'வேண்டாம் ஜெய்! நீ ஏதாவது சொல்லி இந்தப் பொண்ணு புறப்பட்டுப் போயிட்டா... ரகு உன்னைக் கொத்துப்பரோட்டா போட்டுடுவார். அடக்கி வாசி! அதோடு, நண்பனின் மனைவி, தங்கை உறவாகும்... நல்லபிள்ளையாய் இரு.' என்று எச்சரிக்கை செய்தது ஜெய்சஞ்சீவின் மனம்.


வைதேகியை, பாசமலர் ரேஞ்சுக்குப் பார்த்து வைத்தான் ஜெய்சஞ்சீவ்.


'இது என்ன லுக் கு?!!' என்று ஆச்சர்யப்பட்டவள்,


"என்ன? இப்பத்தான் இட்லிக்கு மாவு அரைக்க, கிரைண்டர் வாங்க போயிருக்காங்களா?" என்று வைதேகி கேட்டதும்,


"வாங்க கேன்டீனுக்குப் போகலாம்." என்று ஜெய்சஞ்சீவ் அழைக்க,


"இல்லை வேண்டாம். எனக்கு ஆஸ்பத்திரி வாடையே பிடிக்காது... இங்கே என்னால் தண்ணி கூடக் குடிக்க முடியாது." என்று தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு, குமட்டுவதைப் போலப் பாவனை செய்ய,


'ஆஹா! ரகு... மாட்டினே... உனக்கு இருபத்து நாலுமணிநேரமும் மருத்துவமனையில் இருந்தா பிடிக்கும்.. ஆனா உன் ஆளுக்கு? ஆஸ்பத்திரி வாடையில் தண்ணிகூடக் குடிக்கமுடியாதாம்!!! கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் நம்ம செந்தில் மாதிரி ஆஸ்பத்திரிக்கு, நேரத்துக்கு வந்து போகப்போற... " என்று நினைத்தவன், குனிந்தபடி சிரிக்க,


"இவன் என்ன லூசா? தனியா சிரிக்கிறான்?" என்று வைதேகியும் ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


சிறிது நேரத்தில் வேகமாக அறைக்குள் வந்த ரகுநந்தனிடம், வைதேகி சொன்ன ஆஸ்பத்திரி வாடை அப்பட்டமாக வர, ஜெய், மன்னிப்பு கேட்கும் விதமாகச் சிரித்தபடி, ரகுவைத் தள்ளிக் கொண்டு குளியலறையில் கொண்டுபோய் விட்டான். 


"ஏற்கனவே இவ்வளவு நேரம் காக்க வச்சுட்டேன்... இப்ப இங்கே என்ன பண்ண சொல்ற? நான் வேணும்னே பந்தா காட்டுதா நினைக்கப் போறா..." என்று கடிந்து கொண்டான் ரகுநந்தன்.


"நான் சொல்றதக் கேளு முதல்ல. உன் ஆளுக்கு ஆஸ்பத்திரி வாடையே பிடிக்காதாம்... போ! வேகமா உடம்பு கழுவிட்டு வா..." என்று குளியலறையில் தள்ளிக் கதவைச் சாத்திவிட்டு, அதே சிரிப்புடன் வந்து வைதேகி எதிரில் அமர்ந்தான்.


"ம்ம் அப்புறம்?" என்றான் ஜெய்சஞ்சீவ் பொதுவாக ரமேஷ், வைதேகி இருவரையும் பார்த்து.


'இது என்ன கேள்வி? ஏதாவது பேசனும்னே பேசுறதா இருந்தாலும்... கொஞ்சமாவது சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி பேசவேண்டாமா?' என்று நினைத்த வைதேகி,


"உங்க நண்பரைத்தான் பேட்டி எடுக்க வந்தோம்... உங்களுக்குப் பேட்டி குடுக்க வரல... " என்றாள் வரவழைத்த சிரிப்புடன்.


'கிண்டலு?!! ம்… ம்… என் நேரம்... ரகுவோட ஆள்ங்கிறதால வாயைக் கட்டி வச்சிருக்கேன்... இல்லைனா... ' என்று நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். 


"வாங்க! ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேன்... சாரி! 'என்று கூறியபடி வந்து அமர்ந்த ரகுவைப் பார்த்த ஜெய் அசந்து விட்டான். 


பத்து நிமிஷத்துல தலைவர், பொண்ணு பார்க்கப் போற அளவுக்குத் தயாராகி வந்துட்டாரே? அடடா ஏதோ வாசம் கூட வருதே!! இதென்ன பெர்ஃபியூம்? எங்கே இருந்துச்சு?' என்று ஜெய் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும்போது,



"முதல் முதலாக வந்திருக்காங்க... குடிக்க ஏதாவது வாங்கிக் கொடுத்தாயா?" என்று ரகு கேட்க, 


ஜெய், வைதேகியை, 'இப்ப சொல்றது?' என்பது போல் பார்க்க, 


அவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி, "இல்லை டாக்டர்... நானே சாப்பிட வாங்கித் தாங்கன்னு சொல்லியும் இதுவரை பச்சத்தண்ணி கூடக் குடுக்கல." என்றாள் வைதேகி அப்பாவியாக,


"ஜெய்? இதுதான் நீ கவனிக்கிற லெட்சணமா?" என்று எகிறி விட்டு, 


"வாங்க நாம கேன்டீனுக்குப் போகலாம்." என்றதும் மறுப்பேதும் கூறாமல் எழுந்தவளை ப் பார்த்த ஜெய்,


'அடிப்பாவி!! என்ன நடிப்பு? பயங்கர தில்லாலங்கடியா இருப்பா போலிருக்கே? என் ரகு பாவம். இப்படி மாட்டிக்கிட்டானே?!!' மிகவும் வருத்தப்பட்டான் ஜெய்சஞ்சீவ்.


எல்லோரும் எழுந்து கேன்டீனுக்குச் செல்ல, அறை வாசலில் வந்து நின்றாள் பயிற்சி மருத்துவரான சுதா!



சுதா


"எல்லோரும் இங்கேயே இருங்க... உங்களுக்குத் தேவையான சாப்பாடு இங்கே வரும். " என்றாள் சுதா சிரித்தபடி.


"என்ன சொல்றீங்க?" என்று ஜெய், சுதாவிடம் கேட்க,


"டாக்டர் ரகுநந்தனைப் பேட்டி எடுக்கப் பத்திரிகை ஆபீஸிலிருந்து வந்திருக்காங்கன்னு சொன்னாங்க... அதான் சாப்பிட ஏதாவது கொண்டு வரலாம்னு ஏற்பாடு செஞ்சேன்." என்று சுதா கூறியதும், 


"பார்த்தாயா? நீயும் இருக்கிறாயே..." என்று ஜெய்சஞ்சீவ்விடம், ரகுநந்தன் பற்களுக்கிடையே உறுமிவிட்டு, 


"நன்றி சுதா!" என்று கூறியவன். வைதேகியிடம்,


"இங்கே உட்கார்ந்து சாப்பிடுவதில் உங்களுக்குப் பிரச்சனைனா சொல்லுங்க... வெளியே போய் விடலாம். " என்று கூறவும்,


"உங்க வசதி எப்படியோ அப்படியே இருக்கட்டும்... நாங்க உங்கள பேட்டி எடுக்கத்தான் வந்திருக்கிறோம்... சாப்பிட இல்ல..." என்று சிரித்தபடியே அந்த அறையிலேயே சாப்பிட வைதேகி ஒத்துக்கொள்ளவும்,


ஜெய்க்கு மயக்கம் வராத குறையாக ரகுநந்தனைப் பார்க்க, அவன் தன் நண்பனின் நிலையைப் புரிந்து மென்மையாகச் சிரித்தான்.



'ஹப்பா... புரிஞ்சுக்கிட்டான்.' என்று நினைத்து நிம்மதி பெருமுச்சு விட்டான் ஜெய்சஞ்சீவ்.


அதற்குள் டேபிளில் பலகாரத்துடன் காபியும் பரிமாறப்பட்டது. அதைவிட ஆச்சரியமாக சுதாவும், வைதேகியும் தோழிகளாகியிருந்தனர்.


"பரவாயில்லையே உங்களுக்கு இந்த ஆஸ்பத்திரில ஒரு தோழி கிடைத்துவிட்டாள். வசதிதான்." என்று ஜெய் கலாய்க்க... 


அவன் அருகில் எதையோ எடுக்க வந்த சுதா, யாரும் அறியாவண்ணம் ஜெய்யின் கையில் நறுக்கென்று கிள்ள, 


"உன்னிடம் எத்தனை முறை சொல்றது என்னைத் தொட்டுப் பேசாதேன்னு" என்று அனைவருக்கும் கேட்கும்படி ஜெய்சஞ்சீவ் கத்த, 


'தலையெழுத்து' என்று தலையில் அடித்துக்கொண்டு வைதேகி அருகில் நின்றாள் சுதா.


நீங்க ஏன் நிற்கிறீங்க... வாங்க நாம எல்லோரும் சேர்த்து சாப்பிடலாம்." என்று வைதேகி கூற,


"உங்களோட சேர்ந்து சாப்பிடறேன் ஆனா ஒரு கண்டிஷன்... என்னை வா! போ!" ன்னே கூப்பிடனும் சரியா?" என்று சுதா கேட்க,


"ம்ம்… ரொம்ப சந்தோஷம்! அதே மாதிரி நீயும், என்னைப் போ!, வா! ன்னு கூப்பிடனும். ம்ம்?" என்று வைதேகி கேட்டதும், 


இருவரும் ஒருவர் கையை ஒருவர் தட்டி தங்கள் சந்தோஷத்தைப் பரிமாறிக்கொண்டது மட்டுமில்லாமல் ஒருவர்க்கொருவர் இனிப்பை ஊட்டிவிட்டுக்கொண்டனர்... 


"இங்க என்ன நடக்குது ரகு? அவங்க ரெண்டு பேரும் தோழிகள் ஆவதற்கா இங்க வந்தாங்க?” என்று மேடை ரகசியமாக ஜெய் கேட்க, 


ரகுநந்தன், செந்தில், ரமேஷ், சுதா, வைதேகி அனைவரும் மிகவும் சந்தோஷமாக சிரித்தனர்... 


என்னைத் தொட்டுப் பேசாதேன்னு ஜெயராம் கிரேசாவைத்தானே கூறினான்? ! ! 


அப்போ கிரேசாவின் தோழி பூவினாதான் வைதேகியா? 


வைதேகியை கனவில் கண்ட மஞ்சு யார்?


          💍💍💍💍💍💍💍💍💍





Post a Comment

0 Comments