வருவான் 22
அந்தப் பயங்கரக் கனவிலிருந்து வெளிவர பூவினாவிற்குச் சிறிது நேரம் பிடித்தது.
யாரோ ஒரு பெண் ஓடுவதுபோலவும், யாரோ ஒருவன் சிரிப்பது போலவும், பிரேத பரிசோதனைக்கூடத்தில் ஒடியவள் மயங்கிச் சரிவதுபோலவும், அந்த வாலிபன் அவளையே கண்ணெடுக்காமல் பார்ப்பது போலவும் கலங்கலாகத் தோன்ற, அதே கனவு!!
ரகுநந்தனைச் சந்திக்கும்முன்னர், அதாவது இன்டஸ்ட்ரியல் விசிட்க்காக அரசு மருத்துவமனைக்குச் செல்லுமுன் வந்த அதே கனவு…
இப்பொழுதும் அந்தப் பெண் யாரென்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் சிரிப்பது, கண்ணெடுக்காமல் பார்க்கும் வாலிபன், ரகுநந்தன் தான் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.
எவ்வளவு முயற்சி செய்தும், அந்தப் பெண்ணின்முகம் எங்கோ பார்த்தது போலத்தான் இருந்தது...
'இதற்கு என்ன அர்த்தம்? அந்தப் பெண்தான் வைதேகியோ? அவளை எங்கேயோ பார்த்திருக்கிறேனே? இன்னும் கொஞ்சம் காட்சிகள் தெளிவாகத் தெரிந்தால் வைதேகியை கண்டுபிடித்து விடலாம்...' என்று தோன்றும் பொழுதே பூவினாவின் மனம்,
"வைதேகியை கண்டுபிடிச்சு! என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்டது.
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லக்கூட முடியவில்லை. தொண்டை அடைத்தது...
'வேலுவின் மீதுள்ள காதலுக்கும்... ரகுநந்தனின் நட்புக்கும் இடையே எப்படி சமாளிக்கப் போகிறேன்?' என்று நினைக்கும் போதே பூவினாவின் கைபேசி அலறியது. கைபேசியின் திரையில் ஜெயராம் என்றிருக்க,
'இவர் ஏன் இந்த நேரத்தில் ஃபோன் பண்றார்? கடவுளே எந்த வில்லங்கமான விஷயத்தையும் ஜெயராம் சொல்லிவிடக் கூடாது.' என்று மனதிற்குள் வேண்டியபடியே கைபேசியை பூவினா எடுத்த நேரத்தில் இணைப்பு துண்டிக்கப் பட்டது.
கைபேசியையே வெறித்துப் பார்த்தவள், மறுபடியும் கைபேசி ஒளிர, எடுத்து "ஹலோ!" என்றாள்.
அவள் குரலில் இருந்தது, தயக்கமா? பயமா? என்று விளங்கவில்லை வேலுவிற்கு.
"இனிய காலை வணக்கம் வினி!" என்ற வேலுவின் உற்சாகமான குரலைக் கேட்டவள்,
'ஜெயராம் நம்பர்ல இருந்து வேலுவா? " என்று நினைத்த பூவினா, சுவர்க்கடிகாரத்தைப் பார்க்க, மணி நாலு-பத்து !!
"ஜெயராம் வீட்லயா இருக்கீங்க?" என்று யோசனையுடன் கேட்டாள் பூவினா.
"அவன்தான் நடுராத்திரினு கூடப் பாக்காம நம்ம வீட்டுக்கு வந்து நிக்கிறான்." என்று சிரித்தபடி கூறினான் வேலு.
"நம்ம வீட்டுக்கா?!!... எங்கே?... நடுராத்திரிக்கே வந்துட்டாரா?" என்று பூவினா பதட்டத்தை மறைத்துக் கேட்க,
"ஆமா! நான் இருக்கும் வீடுதான் இனி நம்ம வீடு." என்று வேலு சிரித்தபடி கூற,
'இவனுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை?' என்று நினைத்தாள் பூவினா.
அது தெரியாமல் வேலு, "எனக்கெல்லாம் நாலு மணிதான் நடுராத்திரி." என்றான்.
"எதுக்கு வந்தாராம்?" என்று கேட்டாள் பூவினா.
"நேத்து ராத்திரி அவன் வீட்டுக்குப் போகும்போது, ரகுநந்தன், பஸ் ஸ்டாப்பில் நின்னுக்கிட்டிருந்த பஸ்ஸில் ஏறுவதைப் பார்த்திருக்கிறான்.
அந்த பஸ்சை பைக்கில் பின்தொடர்ந்து, அடுத்து வந்த, பஸ் ஸ்டாப்பில், ரகுநந்தன் ஏறிய பஸ் நிற்கவும், இவன் ஏறிப் பார்த்திருக்கிறான். ரகுநந்தன் பஸ்ஸில் இல்லையாம்.
ஒவ்வொரு இருக்கையாகக் கூர்ந்து பார்த்தபோது, ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த பொண்ணப் பார்த்தானாம். இவனுக்கு, அந்தப் பொண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்திருக்கு... இந்தப் பய, ரகுநந்தனை மறந்துட்டு, அந்தப் பொண்ணுக்கிட்டப் பேசுறதுக்காகப் பக்கத்துல போன நேரத்துல
டிராஃபிக் போலீஸ் வந்து,
"உங்க பைக்கை நடுரோட்டுல விட்டுட்டு வந்திருக்கீங்க? போய் எடுங்க சார்! " னு சொன்னதும்,
வேறு வழியில்லாம பஸ்ஸிலிருந்து இறங்கி, அவனுடைய பைக்கை எடுத்து ஓரமாக நிறுத்துறதுக்குள்ள பஸ் வெகுதூரம் போயிடுச்சாம்.
என்ன செய்றதுன்னு தெரியாமல் அந்த பஸ்ஸையே பார்த்தபடி பைக்கை ஸ்டார்ட் பண்ண, அந்த பஸ்ஸின் படிகளில் ரகு நின்றகொண்டு இவனையே பார்த்திருக்கிறான்.
மறுபடியும் பைக்கை வேகமாக ஓட்டுறேன்னு ஒரு நாய் மேல மோதி, நல்லவேளையா நாய்க்கும் அடிபடல. ஆனா பஸ் கண்ணுக்கே தெரியாத தூரம் போயிடுச்சாம்...
அப்புறம் வீட்டுக்குப் போயி படுத்தபிறகும், அந்தப் பொண்ணு முகம்தான் ஞாபகத்திற்கு வந்து, போயிருக்கு. 'ஒருவேளை ரகுநந்தன், அந்தப் பெண்ணை அடையாளம் காட்டத்தான் இப்படிச் செஞ்சிருப்பானோ?'ன்னு ஜெயராமுக்குத் தோணவும்,
ஜெயராம் நம்ம வீட்டுக்கு வந்துட்டான். நாங்க இன்னைக்கு ராத்திரி அந்த பஸ்ஸப் பிடிச்சு, அந்தப் பெண்ணைப் பார்க்கப் போறோம்." என்று கூறி முடித்தான்.
"அந்தப் பெண்ணை அடையாளம் காட்டுறதா இருந்தா ரகுநந்தன், ஜெயராமிடம் நேரடியா சொல்லியிருப்பாரே வேலு." என்று பூவினா கூற,
"ஆமா! ஆமா! உன்கிட்ட நிறைய சொல்லிட்டான். ஜெயராம் கிட்ட சொல்லிடப் போறான். ஏன் வினி நீ வேற..." என்று கூறினான்.
"என்கிட்ட இருந்த மோதிரத்தை வாங்குறது மட்டுமே அவரோட நோக்கமா இருந்திருக்கலாம்... அவருடைய முந்தைய வாழ்க்கையில், நான் இல்லாததால், என்னிடம் சொல்லி என்ன பிரயோசனம்னு நினைச்சிருக்கலாம்... ஆனா ஜெயராம் அப்படி இல்லையே? அந்தப் பெண்ணை இதுக்கு முன்னாடி எங்கே பார்த்தார்னு யோசிக்கச் சொல்லுங்க... எந்த இடத்துக்குப் போற பஸ் அது?... ரகுநந்தன் ஏன் ஓன்னும் பேசாம போகனும்?" என்று பூவினா கேட்டதும்,
"என் கிட்டேயும், முதல்நாள் இப்படிதான் செய்தான். "என்றவன், ஜெயராமிடம் விசாரித்துவிட்டு,
"அரசு மருத்துவமனைக்குப் போகும் பஸ்சாம் வினி." என்று கூறினான்.
"ஒருவேளை மருத்துவமனைக்கு வரச்சொல்கிறாரோ?" என்று கேட்டாள் பூவினா.
"சரி! ரெடியா இரு! நாங்க வர்றோம்... மருத்துவமனைக்கே போய்ப் பார்ப்போம்." என்று கூறி ஃபோனை வைத்து விட்டான் வேலு.
....சிறிது நேரத்தில் மருத்துவமனையில், செந்திலின் எதிரில் அமர்ந்து ஜெயராம் அனைத்தையும் கூற,
"சரி! வாங்க அவன் அறையைத் திறந்து பார்ப்போம்... நமக்கு ஏதாவது க்ளூ கிடைக்கலாம்." என்று கூறி சாவியை எடுத்துக் கொண்டு பிரேதபரிசோதனை கூடத்துக்குச் சென்றனர்.
ரகுவின் அறையில், வேலு, பூவினா, கிரேசா, ஜெயராம், செந்தில் அனைவரும் ஒவ்வொரு இடமாக, ஏதாவது கிடைக்கிறதா என்று தேட,
ஜெயராம் மட்டும் ரகுநந்தனின் அறைக்கு வெளியே இருந்த பரிசோதனைக் கூடத்தின் அலமாரியில் எதையோ அவசரமாகத் தேடினான்...
வேலு, ஜெயராமின் நடவடிக்கைகளைக் கவனித்தபடியே, ரகுநந்தனின் மேஜை டிராயரை ஆராய, அதில் ஒரு சாவி இருந்தது.
'அது எதோட சாவியா இருக்கும்?' என்று நினைத்து, சுற்றிலும் அந்தச் சாவிக்குப் பொருத்தமாக எதாவது இருக்கிறதா? என்று தேடியவனின் கண்களில் படுக்கைக்குக் கீழே, ஒரு சூட்கேஸ் இருந்ததைப் பார்த்து விட்டான். வேகமாகச் சென்று அந்த சூட்கேசை எடுத்துக் கட்டிலுக்கு மேலே வைத்துத் திறக்க முயற்சி செய்ய,
"ஏய்! இதை ஏன் திறக்கிற?" என்று வேலுவிடம் கேட்ட ஜெயராம், செந்திலைப் பார்த்து,
"ரகுவைத் தேடி வந்தீங்களா டாக்டர்?" என்று கேட்டதும்,
ஜெயராம், ஜெய்சஞ்சீவ் ஆக மாறியிருப்பது புரிந்தது அனைவருக்கும்.
அதைக் காட்டிக் கொள்ளாமல் டாக்டர் செந்தில், "ஆமா ஜெய்! ரகு எங்கே?" என்று இயல்பாகக் கேட்டார்.
"ஆபரேஷன் தியேட்டருக்குப் போயிருக்கார்... வருவதற்கு அரைமணிநேரம் ஆகும்... என்ன விஷயம்?"
"அது... வந்து... வைதேகின்னு ஏதோ சொல்லவந்தான், அந்தநேரம்பார்த்து, டீன் என்னைக் கூப்பிடவும், 'அறைக்கு வாங்க சொல்றேன்' னான். அதனாலதான் வந்தேன்." என்றார் ஆர்வத்தைக் கட்டுபடுத்தியவாறு.
"வைதேகியைப் பத்தி சொல்லிட்டாரா? உங்ககிட்ட இப்ப சொல்ல வேண்டாம். சஸ்பென்ஸாக வச்சிருப்போம்... நிச்சயதார்த்த அன்னைக்கு சொல்லிப்போம்னு எங்கிட்ட சொன்னாரே?" என்று சிரித்தபடி கேட்டான் ஜெயராம்.
"அப்போ உனக்கு வைதேகியைத் தெரியுமா?"
"ம்ம்ம்! ஐயாவுக்குத் தெரியாம இருக்குமா?" என்றான் தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டு.
"யார் அந்தப் பொண்ணு?" என்ற சாதாரணமாகக் கேட்பதுபோல செந்தில் கேட்க,
"நம்ம ரகுவோட ஆளு..." என்ற ஜெயராம், வேலு, பூவினா, கிரேசாவைப் பார்த்துச் சற்று தயங்கியவன், செந்திலிடம்,
"இவங்க யாரு?"என்று கேட்க,
"என் சொந்தக்காரங்க. ரகுவிற்கு இவங்க வீட்டுப் பொண்ண கல்யாணம் பண்ணிவைக்கலாம்னு நெனச்சு, ரகுவைப் பார்க்கக் கூட்டிட்டு வந்தேன்." என்று கூறினார் செந்தில்.
"இனி அந்த வேலையே உங்களுக்கு வேண்டாம் டாக்டர்… ரகு கமிட் ஆயிட்டான்... அதுசரி! இவர் எதுக்கு ரகு சூட்கேசைத் திறக்க முயற்சி செய்தார்?" என்று வேலுவைப் பார்த்து ஜெயராம் கேட்க,
"ரகுதான் சூட்கேஸில் பொண்ணோட போட்டோவ வைக்கச் சொன்னான்... சரி அதவிடு, நீ வைதேகி பத்தி சொல்லு." என்று பேச்சை மாற்றிய செந்திலிடம்,
"பொதுவா இவங்க இருக்கும்போது, நாம ரகுவோட சொந்த விஷயங்களைப் பத்திப் பேசக் கூடாது. ஆனாலும், பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு தெரியிறதுல தப்பில்லை... ரகு, வைதேகியை விரும்புறான். அவங்களுக்கும் ரகுவைப் பிடிக்கும்."
"அடப்பாவிகளா! இது எப்படா நடந்தது?"
"அது நடந்து ஆறுமாசமாகுது..."
"கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன். " என்று செந்தில் கேட்டார்.
"வைதேகி, சர்க்கார் பத்திரிகையில நிருபரா வேலை பார்க்கிறாங்க. ஒரு நாள் இங்கே எதோ கொலைகேசு சம்மந்தமா பேட்டி எடுக்க வந்தாங்க. அன்னைக்குத்தான் ரகு, வைதேகியைப் பார்த்திருக்கார். பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு, அத எங்கிட்ட சொல்லி, வைதேகி கிட்ட பேசுறதுக்கு ஐடியா கேட்டார். ஒரு சூப்பர் ஐடியாவோட சர்க்கார் பத்திரிகை ஆபீசுக்கு ஃபோன் பண்ணினேன்....
"ஹலோ! கவர்ண்மெண்ட் ஹாஸ்பிட்டல் டாக்டர் ஜெய்சஞ்சீவ் பேசுறேன். ரெண்டு நாள்முன்னாடி, டாக்டர் ரகுநந்தனோட பேட்டி வேணும்னு உங்க பத்திரிகை நிருபர் கேட்டிருந்தாங்க. நான் டாக்டர் கிட்டப் பேசிச் சம்மதம் வாங்கிட்டேன். நீங்க பேட்டியெடுக்க வர்ற தேதி சொன்னீங்கன்னா அவர் நேரம் ஒதுக்க வசதியாக இருக்கும்..." என்று கேட்டதும்,
"நிருபரோட பேர் சொல்லமுடியுமா? என்ன காரணத்துக்காகப் பேட்டி கேட்டாங்கன்னு சொன்னீங்கன்னா, அந்த நிருபர் கிட்டப் பேசிட்டு சொல்ல முடியும்."
"அவங்க பேரு..." என்ற ஜெய்சாஞ்சீவை,
" வேண்டாம் சொல்லாத!" என்று ஹஸ்கி வாய்சில் கூறியபடி ஃபோன் ரிசீவரை பறிக்க முயன்றான் ரகுநந்தன்.
"அவங்க பெண் நிரூபர், பேரு தெரியல! விசிடிங்க் கார்டு குடுத்தாங்க… மிஸ்சாயிடுச்சு. 'வித்யாசமான மனிதர்களும் அவர்களின் உத்யோகமும்"னு தலைப்பு சொன்னாங்க."
"இதுல எது வித்யாமானது? டாக்டரா? அவர் தொழிலா?"
"வை டா ஃபோனை! அசிங்கப்படுத்தாத." என்று மீண்டும் ரிசீவரை பறிக்க முயன்ற ரகுநந்தனுக்கு முதுகு காட்டி நின்றபடி,
"ரெண்டும்தான், எங்க டாக்டரும், தொழிலும்தான். அதாவது டாக்டர் ரகுநந்தன், பிரேதபரிசோதனையில் வல்லவர்... ஆனால் பார்ப்பதற்கு ஐஸ்கிரீம் கம்பனி முதலாளிபோலக் குளு குளுன்னு இருப்பார். அவர், சர்ஜரி பற்றி நீங்கள் கேட்கும் எந்த சந்தேகத்திற்கும் அள்ள அள்ளக் குறையாமல் பதில் கொடுக்கக் கூடியவர். விளக்கம் போதுமா. என் ஃபோன் நம்பரைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நிருபர்கிட்ட பேசிட்டு கால் பண்ணுங்க நன்றி!" என்று கூறி ஃபோனை வைத்த ஜெய்சஞ்சீவை விரட்டிப் பிடிக்க முயன்றான் ரகுநந்தன்.
அவன் கைகளில் மாட்டாமல் இருக்க, ஓடிச்சென்று எதிரில் வந்த மருத்துவமனை டீன் மீது மோதி நின்றான் ஜெய்சஞ்சீவ்.
கண்கள் இரண்டும் கோபத்தில் கோவைப்பழமாகச் சிவந்திருக்க, ஜெய்சஞ்சீவை உறுத்து பார்த்துக்கொண்டிருந்தார் டீன்.
'எதிலோ மோதிவிட்டோமே?' என்று நினைத்து நிமிர்ந்து பார்த்த ஜெய்சஞ்சீவ், டீன் ஐக் கண்டதும், 'அடக்கடவுளே! இவர் மீதா மோதிட்டேன்? இந்தக் கொடுமைக்கு மணல் லாரிமேல மோதியிருக்கலாமே... பார்க்கிறாரே! பார்க்கிறாரே!... 'என்ன…? என்னை மட்டும் முறைக்கிறார்! துரத்திவந்த ரகுவை முறைக்கவில்லையே?' என்று நினைத்தபடி திரும்பிப் பார்க்க,
பத்தடி தூரத்தில், ஜெய்சஞ்சீவ் விற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாதது போல, ஒரு டாக்டரிடம் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைச் சுற்றுப்புறம் மறந்து விவாதித்துக் கொண்டிருந்தான் ரகுநந்தன்!!
"அங்கே என்ன பார்வை? அவர் கூடதானே பழகுறீங்க டாக்டர் ஜெய்சஞ்சீவ்? கொஞ்சமாவது அவரிடம் கத்துக்கோங்க..."
'எதைக் கத்துக்கச் சொல்றார்?'
"இது என்ன உங்க வீடா? இல்லை, நீங்கதான் குழந்தையா? கண்டபடி ஓடிக்கிட்டிருக்கீங்க?"
'யோவ்! துரத்துனது யார்னு பார்யா... தனியா எவனாவது ஓடிவந்து மோதுவானா?'
"நாள் ஆக ஆகப் பொறுப்பு வரணும்... இங்கே எதுக்கு வந்திருக்கீங்கன்னு கொஞ்சமாவது ஞாபகமிருக்கா?”
'நிச்சயமா உங்க மேல மோத வரல.'
"... நோயாளிகள் போறவர்ற இடம்…"
"பிரேதபரிசோதனை கூடத்துக்கு எந்த நோயாளி வர்றான்?... வர்றவனும் முழுசா போகமுடியாதே? '
"என்ன? நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டிருக்கேன்... நீங்க என் முகத்தையே பார்த்துக் கிட்டிருந்தா என்ன அர்த்தம்?" என்று டீன் அன்பைப் பொழிந்து கொண்டிருந்தபொழுது,
"என்னாச்சு சார்? ஏதாவது பிரச்சினையா?" என்று மிகவும் பொறுப்பாக வந்து கேட்டான் ரகுநந்தன்...
'ஏன் ரகு? ஏன்?... 'பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலும் ஆட்டுவாங்க' ன்னு கேள்விப்பட்டிருக்கேன்... பிள்ளையைக் கிள்ளிவிட்டதுமில்லாம, பூச்சாண்டிகிட்ட புடிச்சு குடுக்கிறவரை இப்பத்தான் நேர்ல பார்க்கிறேன்.' என்று நினைத்தபடி ரகுநந்தனைப் பார்த்தான் ஜெய்சஞ்சீவ்.
"நீங்க சொல்லிப் புரிய வைங்க ரகுநந்தன்... " என்றதோடு எதையோ ஒருமுழ நீளத்துக்கு வசனம் பேசிட்டுப் போய்விட்டார் டீன்.
டீன் தலை மறையும் வரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தன், அவர் போனதும், வயிற்றைப் பிடித்துக் கொண்டு, முகமெல்லாம் சிவக்க, சிரிக்க ஆரம்பித்தான்.
வைதேகி ரகுநந்தனைப் பேட்டி எடுக்க வந்தாளா?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments