வருவான் 21

 வருவான் 21


  "அத்தை நான் கிளம்புறேன் நேரமாச்சு.... நீ நிதானமா சமையலைப் பாரு... நான் ஆபீஸ் கேன்டீனில் சாப்பிட்டுக்கிறேன்..." என்றவள், ஹாலில் அமர்ந்திருந்த தன் அப்பாவிடமும்,  


  "நான் போயிட்டு வரேன் ப்பா... உங்களுக்கு, உடம்புக்கு முடியலைனா வேலைக்குப் போக வேணாம்ப்பா... என்று கூறியபடி டி.வி.எஸ் ஃபிப்டியை ஸ்டார்ட் செய்து வீட்டைவிட்டு கிளம்பியவளை,


   "வைதேகி!.. நில்லு! மதியம் சாப்பிட வந்துடு." என்று சப்தமாக அழைத்த பத்மாவின் குரல் கேட்காத தொலைவுக்குச் சென்றுவிட்டாள் வைதேகி!!.


"பாரு அண்ணே சாப்பிடாம கூட ஓடிட்டா." என்று தன் அண்ணனிடம் புகார் அளித்தாள் இளம் விதவையான பத்மா.


   "அவ வேலை அப்படி... என்ன பண்ணச் சொல்ற? ஏதாவது அவசர வேலை வந்திருக்கும் ஆபீஸிலிருந்து கூப்பிட்டுவிட்டாங்க... " என்றார் சிரித்தபடி செல்வம்.


  "இவளுக்காகத்தானே விதவிதமா சமைக்கிறேன். இப்படிச் சாப்பிடாமக்கூட ஓடுறா... " என்று வருத்தப்பட்ட பத்மாவிடம், 


  "இதுக்குத் தான் அவளை வேலைக்குப் போகாதன்னு சொல்றேன்... அவ என்னடான்னா! என்னை வேலைக்குப் போகாதன்னு சொல்றா..." என்று மீண்டும் சிரித்தார்.


  "நீ ஆரம்பிச்சுட்டியா... பொம்பளை பிள்ளை வேலைக்குப் போகட்டும்ணே... அவ கால்ல நிக்கட்டும்... என்னைப் பாரு! மறுபடியும் உனக்குப் பாரமா வந்து நிக்கிறேன்..." என்றாள் கலங்கியபடியே. 


    அவளைப் பார்த்த செல்வத்திற்கு அடிவயிறு கலங்கியது... 

‘இருபத்தெட்டு வயசுதான் ஆகுது.... அதற்குள் விதவை பட்டத்தைச் சுமந்து கொண்டு பிறந்த வீடு வந்துவிட்டாள்...  


பனிரெண்டாம் வகுப்பு முடிச்சு எனக்குப் பாரமா இருக்கூடாதுன்னு போலீஸ் வேலையில் சேர்ந்தவள், எவனையோ, திருட்டு பயலுகள்ட்ட இருந்து காப்பாத்த, 


திருடர்களிடம் மாட்டி, பத்மாவால் காப்பாத்தப்பட்டவனுக்கு, பத்மாவைப் பிடிச்சு போச்சுன்னு பொண்ணு கேட்டு வந்தான்… 


ஆளும் நல்லா இருந்தான் பேங்க்ல கிளர்க்கா இருந்தான். குடும்பமும் நல்ல குடும்பமா இருக்கவும், பார்த்துப் பார்த்துத் தான் திருமணம் செஞ்சு வச்சேன்... 


  கல்யாணத்துக்கு முன்னாடி பத்மா, எந்த வேலை பார்த்ததால் பத்மாவை அவ புருஷனுக்கு பிடிச்சதோ, அதே வேலை கல்யாணம் ஆன சில நாட்களிலேயே புருசங்காரனுக்கு பிடிக்காம போயிடுச்சு...  திருடனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய, பத்மாவின் தைரியமும் பிடிக்காமல் போனது...  


ஏற்கனவே போலீஸ்காரியை, மகனுக்குத் திருமணம் செய்து வைக்க  விருப்பம் இல்லாமல், மகனுக்காக பத்மாவை கல்யாணம் செய்து வைத்த அவனது குடும்பமும் பத்மாவிற்கு எதிராகத் தூண்டிவிட... 


நாள் ஆக ஆகப் புருஷன், பொண்டாட்டிக்கு இடையில் பிரச்சனை வர ஆரம்பித்தது... 


பத்மாவிற்குத் தன்னுடைய புருஷனின் வெகுளித்தனம் பிடித்துப் போகவே, அவனிடம் வேலைக்குப் போவதற்காகத் தர்க்கம் பண்ணாமல், அவனைச் சமாதானப்படுத்தினாள். அவனும் பத்மா மேல் இருந்த பிரியத்தில் சமாதானமானான்... 


குடும்தினர் தூண்டிவிடுவதும், பத்மா சமாதானம் செய்வதுமாகக் காலம் சென்றது.  பின்னர் இதுவே தொடர்கதையானது… 


இந்தச் சமயத்தில் பத்மாவிற்குக் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக விடுமுறையில் இருந்தவளிடம் நச்சரிக்க ஆரம்பித்தான் கணவன். 


விடுமுறை முடியும் தருவாயில், போலீஸ் ஆபீசரை சந்தித்து, ஒரு வருட, நீண்ட கால விடுப்புக்கு, மனு கொடுத்து விட்டு வந்தாள். 


'இந்த ஒரு வருடத்தில் கணவன் மனம் மாறினால் வேலைக்குச் செல்லலாம்... இல்லையென்றால், வேலையை விட்டுவிடுவது.' என்று முடிவுக்கு வந்து கணவனுக்காகக் காத்திருந்தாள். 


அன்று மாலை வீட்டுக்கு வந்தவனிடம், வீட்டார் அனைவரும் சேர்ந்து, "நீ இவ்வளவு சொல்லியும் கேட்காம, மறுபடியும் வேலைக்குப் போக லெட்டர் கொடுத்துட்டு வந்துட்டா டா." என்று மேலும் மேலும் தூண்டிவிட, 


"நான் போய்ப் பேசுறேன்" என்றவனிடம், 


"அவ உன்னைச் சமாதானம் பண்ணிடுவா... இதுதானே இத்தனைநாளா நடக்குது... அவளை வேலைக்குப் போகாம தடுக்க என்ன பண்ணலாம்?" என்று அனைவரும் யோசித்து, வில்லங்கமான ஐடியா கொடுத்தனர்... 


பத்மா தன் கணவன்மீது மிகவும்  பாசம் வைத்திருப்பதால், கணவன் தற்கொலை செய்து கொள்வதாக நடித்தால், அவள் வேலையை விட்டுவிடுவாள் என்று சொல்ல, 


அவர்கள் சொன்ன மாதிரி நடிக்கிறேன் பேர்வழி  என்று உண்மையிலேயே இறந்து விட்டான்... 


அவன் குடும்பத்தினரும், ‘இதுதான் வாய்ப்பு’ என்று குழந்தையைப் பறித்துக் கொண்டு பத்மாவைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.’ 


  "அண்ணே! அண்ண்…ணே!" என்ற பத்மாவின் குரலில் நினைவுகளிலிருந்து மீண்ட செல்வம்,


  "சொல்லும்மா." என்று கூற


  "வா சாப்பிட. அடிக்கடி கனவு காண ஆரம்பிச்சுட்ட நீ." என்று புலம்பியவாறே காலைச் சிற்றுண்டியை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.


பத்திரிகை ஆபீசுக்குள் வந்த வைதேகியிடம், "முருகன் கோயில் ரோட்டுல, இரு கோஸ்டிக்கிடையே சண்டை நடக்குதாம். நீ, நம்ம கேமராமேன் குமாரையும் கூட்டிட்டுப் போய், கடைசிவரை இருந்து நியூஸ் கலக்ட் பண்ணிட்டு வா."   என்று பத்திரிக்கை ஆசிரியர் கூற, சம்பவ இடத்துக்கு விரைந்தாள் வைதேகி. 


   இவர்கள் இருவரும், சம்பவம் நடந்த இடத்திற்குப் போன சிறிது நேரத்தில், ஒரு ஆளை மற்றொரு ஆள் கத்தியால் குத்தி விட, குத்துபட்டவனை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அரசு ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தனர் சிலர். 


வைதேகியும் கேமராமேன் குமாரும், ஆம்புலன்சைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். 


அங்கிருந்த சூழ்நிலையைப் படம் எடுத்து, சிலரிடம் பேசி, ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தவளை,


  "ஏம்மா! இப்படிப் பண்றீங்க? பேட்டி எடுக்குற நேரமா இது? நோயாளியின் உறவினர்களிடம் நாங்க பேசனுமா வேண்டாமா?" என்று கோபமான குரல் பின்னாலிருந்து கேட்க,


  "சொன்னா தள்ளி நின்னுட்டுப் போறேன்... இதுக்கு எதுக்கு நீங்க டென்ஷன் ஆகுறீங்க?" என்று சிரித்த முகமாகக் கூறிய வைதேகியை, நிமிர்ந்து பார்த்தான் ரகுநந்தன்.



  அழகான வட்ட முகம்... சிரித்தபோது,  படபடக்கும் வண்ணத்துப் பூச்சிபோல, சிமிட்டும் கண்கள்... எள்ளுப்பூ போன்ற மூக்கு, கரு கருவென்று சுருண்ட கூந்தல் பின்னப்பட்டு இடைவரை தொங்கியது. மாநிறமாக இருந்தாலும் அவளின் அழகு ரகுநந்தனைக் கட்டிப்போட,  வந்த வேலையை மறந்து விட்டு, வைதேகியிடம், 


   "எந்தப் பத்திரிகை?" என்று கேட்டான். 


  "சர்க்கார்" என்றாள் சிரித்தமுகமாக.


  "உங்களப் பாத்தா பத்திரிக்கையாளர் மாதிரி தெரியல." என்ற ரகுநந்தனை,


  "பின்னே காய்கறி விக்கிறவங்க மாதிரி தெரியுதா டாக்டர்?" என்று கிண்டலாகக் கேட்டாள் வைதேகி.


  "இல்லையில்லை. வாயாடி  மாதிரி தெரியுது." என்று ரகுநந்தனும் கலாய்க்க,

  "வாயாடியா? யாரு? நானா?" என்று எகிற,


  "பின்னே நானா?" என்ற ரகுநந்தனிடம்,


  "டாக்டர்! நாம இவங்களோட பேசத்தான் இவ்வளவு அவசரமாக வந்தோமா?" என்று கேட்டாள் பயிற்சி மருத்துவர்  சுதா.


  "நாம பிறகு பேசலாம்" என்று வைதேகியிடம் கூறிவிட்டு, ரகுநந்தன், கத்திகுத்து பட்டவனின் உறவினரிடம், 


  "உள்ளே இருக்கிறவரோட பெத்தவங்க யாரு?" கேட்க,


  "அதெல்லாம் நான் விசாரிச்சு, தேவையான விபரங்களையெல்லாம் வாங்கிட்டேன் டாக்டர். இந்தாங்க ரிப்போர்ட்." என்று முகவரியுடை கடிதத்தாள் கற்றை (லெட்டர் பேட்) ஐ ரகுநந்தனின் கையில் கொடுத்தாள் சுதா.


   சிறிது தூரம் சென்ற ரகுநந்தன், சுதாவிடம் ஏதோ கூறிவிட்டு வைதேகியிடம் வந்தான்.


  "உங்க பேரத் தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்க, 


அவன் கண்களைப் பார்த்த வைதேகி, "எதுக்கு?" என்று கேட்டாள். 


இந்தக் கேள்வியை ரகுநந்தன் எதிர்பார்க்கவில்லை... இதுவரை அவன் சந்தித்த பெண்கள், தானாக வலிய வந்து, ரகுநந்தனிடம் அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் கூறுவார்கள். 


இவன்தான் கேட்டும் கேளாததுபோல் நடித்து, பேச்சை முடித்துவிட்டு நகர்வது வழக்கம். ஆனால் இன்று முதன் முறையாக, தன்னிடம் ஒரு பெண் அவளுடைய பெயரைக்கூடச் சொல்ல யோசிக்கிறாள்! !!


  'இன்ட்ரஸ்ட்டிங்!' என்று தனக்குள்  கூறி சிரித்த ரகுநந்தன், 


  "என் பேர் ரகுநந்தன். இந்த ஆஸ்பத்திரில சர்ஜனா இருக்கேன்." என்று, முதன்முறையாகத் தன்னைத்தானே ஒரு பெண்ணிடம், சிரித்தபடியே அறிமுகம் செய்து கொண்டான்.


  ரகுநந்தனின் வசீகர முகமும், சிரிப்பும் தன்னை ஈர்ப்பதை உணர்ந்த வைதேகி, 


  "ஓ!" என்று கூறி விட்டு, சம்பிரதாயமாக, 


  "ஓகே உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்... நான் தொந்தரவு பண்ண விரும்பல. அப்புறம் பார்க்கலாம்." என்று கூறி நகர,


  ஏனோ தன்னைப் புறக்கணிக்கும் வைதேகியின் பின்னால், ரகுநந்தன் மனம் சென்றது.


  'யார் இவள்?' என்று நினைத்தவன்,


  "உங்கள ராணின்னு கூப்பிடவா? " என்று கேட்டான் ரகுநந்தன்.


   "ராணியா?"


   "ஆமாம்! சர்க்கார்ல இருக்கும் பெண், ராணியாக இருக்கலாமே." என்றான் சிரித்தபடி.


  "இவன் விளையாடுறான்...' என்று நினைத்த வைதேகி, 


  "என் பேர் உங்களுக்கு எதுக்கு டாக்டர்? ஏன் பேர் தெரியாமப் பேசமுடியாதா? நாம என்ன அடிக்கடியா பார்த்துக்கப் போறோம்?" என்று படபடவெனப் பொரித்து விட்டு, செல்பவளையே பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தனின் அருகில் வந்தான் ஜெய்சஞ்சீவ்.


  "என்ன ரகு?" என்று கேட்டவனிடம்,


  "அந்தப் பொண்ண பிக்அப் பண்ணனும் டா"

சட்டென்று வியர்வை பெருக, கசகசப்பாக உணர்ந்த மஞ்சுவிற்குத் தூக்கம் கலைந்தது. மின்வெட்டு வேறு ஆகியிருந்ததால் மின்விசிறி நின்றுவிட்டிருந்தது. 


எழுந்து அமர்ந்த மஞ்சுவிற்குத் தாகம் எடுக்க, அருகில் இருந்த செம்பை எடுத்துத் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தாள். தண்ணீர் உள்ளே இறங்கியதும் தூக்கம் சுத்தமாகக் கலைந்து இன்னும் அதிகமாக வியர்க்க, அறையைவிட்டு வெளியே வந்து பால்கனியில் நின்றாள். 


  'வைதேகி, ரகுநந்தன் இருவரும் யார்? ஏன் என் கனவில் அடிக்கடி வருகிறீர்கள்? இன்னைக்கு புதுசா கனவுல வந்த ஜெய்சஞ்சீவ்வை எங்கோ பார்த்திருக்கிறேனே?.. சினிமா?.. சீரியல்?.. எதுன்னு தெரியலயே? ஆனா ரகுநந்தன்!  உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... இதுவரை நேரில் பார்க்காத உங்களை, எப்படி எனக்குப் பிடிச்சிருக்குன்னு தெரியல... இதுவரை என் மனசயாரும் இந்த அளவு சலனப்படுத்தியதில்லை... உங்களுடைய தீர்க்கமான பார்வை... நீங்கள் பார்க்கும் விதம், பேசும் முறை... நிற்கும் ஸ்டைல்... நடையின் வேகம்... அனைத்தையும் ரசிக்கிறேன்... எங்கே இருக்கீங்க? எப்பதான் உங்களை நேரில் பார்ப்பேன்... விபரம் தெரிந்த நாளிலிருந்து இதே கேள்வியைத்தான் இந்த இயற்கையிடம் கேட்கிறேன்... அது உங்கள் செவியை எட்டவில்லையா?'



  சட்டென்று பறந்த வௌவ்வால் கூட்டத்தைப் பார்த்த, ரகுநந்தனின் கண்கள் கலங்கியது...


   அதே நேரத்தில், ஏதோ கெட்ட கனவு கண்டு அலறி எழுந்தாள் பூவினா...


 யார் இந்த மஞ்சு?


  அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் 


         💍💍💍💍💍💍💍💍💍


   


  



Post a Comment

0 Comments