ரெட்டை ஜடை
' நாளைக்கு காலையில் ஏழு மணிக்கெல்லாம் எழுந்து விடவேண்டும்'… என்று தினமும் அதே வாக்கியத்தை சலிக்காமல் தனக்குள் முணுமுணுத்தவாரே இறங்கிய ஆதி, கோபத்தை சம்மந்தமே இல்லாமல் காலைநேர பரபரப்பில் இருந்த தன் தாயிடம் காட்டினான்.
"அம்மா!... அம்மா!... ஏழு மணிக்கு எழுப்பி விடச் சொல்லி எத்தனை தடவ சொல்றது?"
"அடிய்ய்! நல்லா வரும் வாயில....எருமை மாட்டில மழை பேஞ்ச கணக்கா தூங்கிட்டு… எரும...எருமை எத்தனை தடவ கத்துறது?..." என்று வார்த்தைகளாலேயே நாறடித்த அம்மா, தன் வேலையை பார்க்க,
"ஆமா…துரை காலையில் எந்திரிச்சு எந்த கலெக்டர் ஆபீஸ்ல கையெழுத்து போடப் போறாராம்?"என்று கோபத்தில் கிண்டலை கலந்து கொட்டிய அப்பாவைக் கண்டதும் "சட்" டென் மறைந்தான்.
சரியாக எட்டு நாற்பத்தைந்துக்கெல்லாம் வந்துவிட்டான்…
"இருந்தாலும் உன்னை மாதிரி டைம் கீப்அப் பண்ற பசங்க இல்லடா" என்று கூறிய ஜெராக்ஸ் கடை வச்சிருக்கும் ரகுபதி அண்ணனிடம்,
"போங்கண்ணே சும்ம்மா… சரி தள்ளுங்க நான் ஜெராக்ஸ் எடுக்கிறேன்…" என்னவனை,
"இன்னும் உன் ஆள் வரலயேப்பா!" என்ற ரகுபதியின் கண்கள் கூட சிரிப்பில் விரிய...
"அண்ணே…"
"இன்னும் எத்தனை நாள் இப்படி பார்த்துகிட்டு இருக்கப் போற? அந்த பொண்ணு இப்ப பன்னெண்டாவதுதானே படிக்குது? பொம்பளப்பிள்ளை..., கட்டிக்குடுத்துறப்போறாங்க… சீக்கிரம் உன் மனசுல இருக்கிறத சொல்லிடு…"
"காதலா? இல்ல ஈர்ப்பா? ன்னு தெரியாம எப்படி பேசுறது?" என்ற ஆதியின் வார்த்தையில் அதிர்ந்த ரகுபதி,
"லூசாடா நீ?; கிட்டதட்ட நாலுவருசமா இங்க வந்து அந்த பொண்ண பார்க்கிற? இப்ப காதலா என்னன்னு தெரியல ன்ற? அந்த புள்ளைய பார்க்கவர்ற, இந்த நேரத்துல என் கடையிலும் சம்பளமில்லாத வேலைக்காரனா எல்லா வேலையையும் செஞ்சுட்டு, உன் ஆபீசுக்கு போற… சாயந்தரமும் இதே கதைதான்… ஒருத்தன் நாலு வருசமாவாடா முடிவெடுக்காம இருப்பான்?"என்று புலம்பிய படி ஆதியை நிமிர்ந்து பார்க்க, அவனோ எதிரில் இருக்கும் பள்ளிவாசலில் நுழைந்து கொண்டிருந்த அந்த இரட்டை ஜடை பின்னல் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"சுத்தம்!!!" என்றவர் அந்த பெண் பள்ளிக்குள் சென்றபிறகும் அப்படியே நின்றுகொண்டிருந்தான்…
வழக்கமாக நடப்பதுதான் இருந்தாலும் வழக்கம்போல, 'போதும்டா ஆள் போயாச்சு!" என்று கூற அவனும் வழக்கம்போல,
"என் ஆள பாத்தீங்களா அண்ணே! இந்த நாலு வருஷத்துல ஒருதடவையாவது நிமிர்ந்து பார்த்து இருக்குமா?" என்று தினமும் கூறும் அதே வார்த்தைகள்…. விட்டத்தைப் பார்த்துப் பேசும் அதே பாணி…
"டேய் டயலாக்கையாவது மாத்தி பேசேண்டா... ஒரே டயலாக் க நாலு வருஷமா கேட்கிறேன்…."
"என்னதான் சொல்லுங்கண்ணே. எத்தனை விதமான ஹேர் ஸ்டைல் வந்தாலும் பொம்பளபிள்ளைக்கு இந்த ரெட்ட ஜடை போட்டு, அதுல ஒரு பூ வெச்சுட்டு வந்தா சும்மா ராணி மாதிரி இருக்குண்ணே…"
'ம்ம் ஆரம்பிச்சுட்டான்… இனி ஒவ்வொரு பேப்பரா எடுத்து எடுத்து பக்கத்துல வச்சிக்கிட்டு பேசுவான்.'
அதேபோல் அவனும் செய்ய,
'நாலு வருஷமா வேடிக்கை பார்க்கிற எனக்கே தெரியுது, இந்த பய அந்த பிள்ளைமேல பைத்தியம்புடிச்சு அலையுறான்னு… ஆனா இவனுக்கு இன்னும் புரியலையாம்?!! இவனையெல்லாம் என்ன பண்ணலாம்?'என்று நினைத்தவாறே இன்னமும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனைக் கவனிக்க,
"அவ ஜடையை பாதி மடித்து ரிப்பன் வச்சு கட்டினாலும் அழகுதான்… ஜடையை மடிக்காமல் தொங்கவிட்டு…. ம்ம்... அதென்ன? ஹான் அரைஜடை போட்டாலும் அழகுதான்…. அவளுக்கு ரெட்டஜடையும் பூவும் அழகுசேர்க்குதில்ல?!!... பெண்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டுறதுல கூந்தல் பெரும்பங்கு வகிக்குதுண்ணே…. பெண்களின் கூந்தலை அள்ளி எடுத்து பின்னல் போடுவது ஒரு தனிஈஈஈக் கலை, அது எல்லா பெண்களுக்கும் வராது…." என்று ஆதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
"ஜடையில் ஒரு பக்கம்மட்டும் பூ வச்சாலும், இரெண்டு பக்கமும் வச்சாலும் அழகு அள்ளுதுண்ணே….' இது தானே சொல்ல போற?" என்று ரகுபதி, ஆதி போல பேசி காட்டவும் சிரித்து விட்டு,
"சரிங்கண்ணே! ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க. பண்ணி கொடுத்துட்டு ஆபீஸ் கிளம்புறேன்!" என்று கூறினான்.
"நாளைக்காவது அவட்ட பேசுற மாதிரி வா!" என்று கூறி அனுப்பி வைத்தார் ரகுபதி.
அலுவலகத்திலும் சரி, வீட்டிற்கு வந்த பிறகும் சரி 'அந்தப் பெண்ணிடம் எப்படி பேசுவது?' என்பதைப் பற்றியே யோசித்த வண்ணம் இருந்தான் ஆதி…
எல்லா பசங்களையும் போல் அவனும் விதவிதமான டயலாக்குகள் பேசிப் பார்த்தான்…
ஒரு வழியாக அந்த பெண்ணிடம் பேசுவதற்கு தயாராகி அடுத்தநாளை எதிர்பார்த்து தூங்கினான்.
இன்று அவளுடைய யூனிஃபார்ம் க்கு இணையான கலரில் ஷர்ட் அணிந்து கொண்டு அவளுக்காக காத்திருந்தான்.
அவள் தூரத்தில் வருவதை பார்த்தவன் ரகுபதியிடம் கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு, அந்த பெண்ணை நோக்கி நடந்தான்.
ஆதியை பார்த்தும் சிறிது அதிர்ச்சி அடைந்தாலும் அவள் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு இருந்ததை கவனித்தான்.
அவளின் இரு பக்கமும் வந்து கொண்டிருந்த தோழிகள், "சரி நீ பேசிட்டு வா! நாங்க கேட் டு கிட்டே நிற்கிறோம்.' என்று கூறி, அவனைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்றனர்.
'இந்த என்னடா இது? சினிமா நடக்கிற மாதிரியே இருக்கு!! இதெல்லாம் பார்த்தா… நாம தினமும் வந்து நின்னு பார்த்துக்கிட்டு இருக்கிறத, இவளும் இவ தோழிகளும் கவனிச்சு இருப்பாங்க போல இருக்கே? என்ற ஆச்சரியத்துடன்,
"என்னை உனக்கு தெரியுமா?" என்று கேட்டான்.
அவனை நிமிர்ந்து பார்க்காமல், " ம்" என்று தலையாட்டினாள்.
"எப்படி?"
தினமும் அந்த ஜெராக்ஸ் கடை வாசலில் நின்னுகிட்டு, எங்களையே பார்த்துட்டு இருப்பீங்க."
"நீ ஒரு தடவை கூட நிமிர்ந்து என்னைப் பார்த்தது இல்லையே?"
"நான் தூரத்தில் வரும்போதே உங்களை பார்த்து விடுவேன்! அருகில் நெருங்கவும் நான் பார்க்க மாட்டேன் என் தோழிகள் உங்களை பார்ப்பார்கள்." என்று கூறினாள்.
'ஆஹா இந்த பொண்ணுங்க இருக்காங்களே, பயங்கரமான ஆளுங்க போலப்பா!!" என்று நினைத்து சிரித்தவன்,
"அதான் தினமும் வரேன்னு தெரியுதுல்ல? ஒரு நாளாவது என் கிட்ட வந்து பேசி இருக்கலாம்ல"
"ஆம்பள நீங்களே வந்து பேசாத போது நாங்க இப்படி வந்து பேசுவோம்?"
"அதுசரி!" என்றவன், "கடைசி வரை இப்படியே பார்த்துட்டு போயிடலாம் நினைச்சீங்களா?"
"இல்ல... ரிவிஷன் எக்ஸாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி உங்க கிட்ட வந்து பேசுறதா முடிவெடுத்திருந்தேன்." என்ற வார்த்தையில் குதூகலமானவன்,
"என்ன பேசலாம் நினைச்சீங்க?"
"நீங்க இப்ப என்ன பேச வந்தீர்களோ அதை பேசலாம்னு இருந்தேன்…"
'அடேங்கப்பா பயங்கரமான ஆளுங்க நீங்க!!!"
"அதெல்லாம் இருக்கட்டும் என்ன பேச வந்தீங்களோ, அத சீக்கிரம் சொல்லுங்க… ஸ்கூல் பக்கத்திலிருந்து நான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்க முடியாது." என்று அவசரபடுத்தினாள்.
அவள் சொல்வதும் நியாயம்தான் ஸ்கூலுக்கு வருபவர்களும் எங்கள் இருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு சென்றனர்.
உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. பிளஸ் 2 முடிச்சதும், நான், எங்க அம்மா அப்பாவுடன் வந்து பொண்ணு கேட்கட்டுமா?" என்று கேட்டான்.
நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தவள், "ம்..ம்.." என்று கூறிவிட்டு அவளின் ஒரு ஜடையை தூக்கி ஸ்டைலாக பின்னாடி போடும்போது, அந்த ஜடை, ஆதி மேல் பட்டு உரசியது…
ஏதோ ஒரு புதுவிதமான உணர்வில் ஆதிக்கு உடம்பெல்லாம் வேர்த்து கொட்ட, சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்….
அவனைச் சுற்றிலும் ஒரே இருட்டாக இருக்க சுற்று முற்றும் பார்த்தவள் கண்களை கசக்கி விட்டு பார்த்தான்…
"கடவுளே மயக்கம் போட்டு விழுந்துட்டனா? கண்ணே தெரியலையே?"என்று பயந்து மறுபடியும் கண்களை கசக்கி பார்க்க, அவன் அவனுடைய படுக்கை அறையில் உட்கார்ந்து இருப்பது புரிந்தது!!! சிறிது நேரத்திலேயே நடந்தவை அனைத்தும் கனவு என்பது புரிய,
"ஷ்ஷட்!" என்றுவிட்டு தலைமாட்டில் இருந்த மொபைல் போனை உயிர்ப்பித்து மணி பார்த்தான்.
மணி மூன்று பதினைந்து என்று காட்டியது.
அதற்குபின் ஆதிக்கு தூக்கம் வரவில்லை... புரண்டு, புரண்டு படுத்தான்... 5 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து ரெடி ஆகி கீழே இறங்கி வந்துவனைப் பார்த்த அவனுடைய அம்மா,
"ஆதீய்ய்!!! என்னடா இது அதிசயம்? காலங்காத்தால எந்திரிச்சிட்ட… மழை வரப்போகுதா? என்று வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
"அம்மா சாப்பாடு வச்சா, என்ன நான் கிளம்புவேன்" என்று தன் தாயின் கிண்டலை கவனிக்காதவனாய் கேட்டான்.
"மணி ஆறரை தான் ஆகுது அதுக்குள்ள சாப்பாடு ரெடியா இருக்கும்?".என்று கேட்டவர், "இன்னைக்கு ஏதாவது முக்கியமான விஷயம் எதுவும் இருக்கா? எங்கேயாவது வெளியூருக்கு போக போகிறாயா? என்று கேட்டார்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. ஆபீஸ்க்கு புது மேனேஜர் வருகிறார், அதான் சீக்கிரமாவே போறேன்." என்று பொய் கூறினான்.
என்றுமே பிள்ளைகளின் பொய்யை முழுதும் நம்பும் ஒரே ஜீவன் அம்மாதான். அவன் அம்மாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று நினைப்பது போல் வேகவேகமாக அடுப்படிக்கு சென்று பலகாரம் ரெடி செய்தாள்.
ரகுபதி அண்ணன் கடைக்கு வந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இன்னும் அவளை காணவில்லை!! கையை திருப்பி வாட்சில் மணி பார்த்தான் ஒன்பது நாற்பத்தைந்து என்று காட்டியது.
'மணியடிக்க போகுதே? இன்னைக்கு வரலையா அவள்? தோழிகள் வந்திருக்க வேண்டுமே? அச்சச்சோ அவளுடைய தோழிகளின் முகம் ஞாபகத்தில் இல்லையே!!! யாரிடம் கேட்பது?' என்றவாறு பள்ளியின் வாசலையே பார்த்தவாறு நின்றிருந்தான்.
"என்ன ஆதி அந்த பொண்ணு இன்னைக்கு வரலையா"என்று ரகுபதி கேட்க,
"ஆமாம் போல் அண்ணே."
"அதோ அவ கூட படிக்கிற பொண்ணுங்க வராங்க... அவங்ககிட்ட போயி என்ன விஷயம்? னு கேளு."
அந்தப் பொண்ணுங்க தான் அவளோட தோழிகளா அண்ணே?"என்றவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, ரகுபதி, "ஆமா சீக்கிரம் போய் கேளு!" என்று கூறினான்.
ஆதி அந்தப்பெண்ணின் தோழிகளை நெருங்கினான்.
கனவில் வந்தது போலவே அந்தப் பெண்களும் ஆதியை தெரிந்தது போல் காட்டிக் கொண்டனர்.
'ஹப்பா!!! அப்போ ஈஸியா பேசலாம் என்று நினைத்தவன்,
"அவன் எங்கே?"என்று கேட்க,
"இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இன்னைக்கு தான் உங்களுக்கு பேசணும்னு தோணுச்சா? ஏற்கனவே எங்களுக்கு ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு... மணி அடிக்கப் போகுது... அவ புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு போய் இருக்கா... சீக்கிரம் போய் பாருங்கள்... என்று கூறிவிட்டு பள்ளியை நோக்கி வேகமாக நடந்தனர்.
ஒரு நிமிடம், 'அவர்கள் என்ன கூறுகிறார்கள்?'' என்று புரியவில்லை ஆதிக்கு. புரிந்ததும், அவர்களை நோக்கித் திரும்பி, "புற்றுநோய் ஆஸ்பத்திரிக்குன்னா சொன்னீங்க? யாருக்கு என்ன ஆச்சு?" என்று கேட்டான்.
பள்ளியின் கேட் அருகே சென்ற தோழிகள், திரும்பி அவனை ஒரு சோக பார்வை பார்த்துவிட்டு சென்றனர்.
உலகமே சுற்றுவது போல் தோன்ற ரகுபதியின் கடைக்கு வந்தவன் அப்படியே ஒரு சேரில் அமர்ந்தான்…
அவன் நிலையைப் பார்த்த ரகுபதி, "என்னடா ஆச்சு?" என்று கேட்டதற்கு அவரிடம் விஷயத்தை கூறினான்.
ரகுபதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆதியை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது... ஆதியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது.
"அவளுக்கு ஒன்றும் இருக்காது ஆதி... வேற யாருக்காவது இருக்கலாம்.." என்று சமாதானமாக கூறினான் ரகுபதி.
ரகுபதியின் வார்த்தைகள் ஒன்றும் ஆதியின் காதில் விழுந்ததாக தெரியவில்லை…
"சரி வா நானும் வரேன்! ரெண்டு பேருமே ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்துட்டு வருவோம்!" என்று கூறி கடையை பூட்டிவிட்டு, ஆதியை அழைத்துக்கொண்டு புற்றுநோய் ஆஸ்பத்திரியை நோக்கி சென்றனர்.
ஆஸ்பத்திரிக்குள் போவதற்குள் ஆதிக்கு பாதி உயிர் போன நிலையில் இருந்தான்…. எதுவும் பேசும் நிலையில் அவன் இல்லை. எனவே அவனை வரவேற்பறையில் அமரச் செய்துவிட்டு, ரிஷப்ஷனில் ரகுபதி போய் விசாரித்தான்.
"அந்தப் பொண்ணுக்கு தான் ஏதோ பிரச்சனை போலயே?" என்று கூறிய ரகுபதி, ஒன்றும் பேசாமல், ஆதி இலக்கில்லாமல் வெறித்தவனாய் இருந்ததைப் பார்த்துவிட்டு,
ஆதி கவனித்தாலும் சரி! கவனிக்கவில்லை என்றாலும் சரி! என்பதுபோல் பேசத் தொடங்கினான் ரகுபதி. "உள்ளதான் இருக்கா அந்த புள்ள. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும். பார்த்துட்டு போவோம்." என்று கூறினான்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் முடியும் தருவாயில், அந்தப் பெண்ணின் இருபுறமும் அவரின் பெற்றோர்கள் வர, நடுவில் வந்தாள்… சற்று களைப்பு இருந்தாலும், அவள் முகத்தில் ஏதோ ஒரு தேஜஸ் இருந்தது.
"என்ன ஆதி இது? இந்த ஆஸ்பத்திரில ஃபேசியல் பண்றாங்களா என்ன? அந்த பிள்ளைக்கு என்னாச்சோ ன்னு அடிச்சு புடிச்சு வந்து பார்த்தா, முகம் இவ்வளவு பளபளங்குது?"என்று கூறும் போது தான் கவனித்தார்கள்... அந்தப் பெண்ணின் தலையில் ஏதோ துணியை வைத்து கட்டியிருந்தார்கள்…
பதறிப் போன ஆதி, எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்தப் பெண் முன்னால் சென்று நின்றான்.
"என்னாச்சு?" என்ற ஒரு வார்த்தையில் ஆதியின் மனம் மட்டுமல்ல, அவனுடைய பயமும் தெரிந்தது.
அவனுடைய முகத்தை பார்த்தவாறே தன் தலையிலிருந்த துணியை எடுக்க,
அந்தப் பெண்ணின் இரட்டை ஜடையை காணவில்லை… கூந்தல் தோள்வரை வெட்டப்பட்டிருந்தது…
ஆதியின் கண்களில் அவளுடைய இரட்டை ஜடை அவன்மேல் மோதிய கனவின் தாக்கம் தெரிய,
"என்னாச்சு?" என்றான் புரியாதவனாய்,
"இங்கே புற்றுநோய் வந்த பெண்களுக்கு முடி கொட்டிவிடும்.,. அதனால் என் முடியை அவர்களுக்கு கொடீத்துவிட்டு வருகிறேன்." என்றாள் ஆதியின் முகத்தை ஆராய்ந்தவாரே,
ஆதி ஆரம்பத்தாலிருந்தே அவளின் இரட்டை ஜடை க்கு ரசிகன்… இன்று?...
அவன் முகத்தில் ஆயிரம் உணர்ச்சிகள் மாறிமாறி தெரிய இறுதியில்,
"நான் எப்போ பொண்ணு கேட்டு வரட்டும்?" என்று ஆனந்தமாக கேட்டவன், "உன் பேர் என்ன?" என்று கேட்டவை ஆச்சரியமாக பார்த்தவளின் கண்களில் குறும்பு தெறிக்க,
"பூங்குழலி"
சுபம்!
------******-----
0 Comments