வருவான்-15

 வருவான்-15



  டாக்டர் செந்தில், 'ரகுநந்தனும், ஜெய்சஞ்சீவ்வும் உயிருடன் இல்லை.' என்றதும், முழுமையாக அதிர்ச்சிக்கு ஆளானது ஜெயராமும், விஜய்யும் மட்டுமே... பூவினாவிற்கும், கிரேசாவிற்கும் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தீர்ந்தது. 


    வேலுவிற்குதான் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 


அவன் மட்டும் ரகுவைப் பார்க்காமலிருந்திருந்தால் சுத்தமாக நம்பியிருக்க மாட்டான். ரகுவின்  முகத்தைச் சரியாகப் பார்த்ததில்லை என்றாலும், தூரத்தில் பார்த்த பிம்பம் ரகுநந்தன்தான் என்று நன்றாகத் தெரிந்தது. 


  "இப்பவாவது எதற்காக ரகுநந்தனைத் தேடுறீங்கன்னு சொல்றீங்களா?" என்று அமைதியாகக் கேட்டார் செந்தில்.


  "டாக்டர்! நான் நிஜமாகவே ரகுநந்தனைப் பார்த்தேன். அன்று டிரைனிங் வந்தபோது என் பின்னால் நின்று, நிறைய டெக்னிகல் விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார்... " என்றாள் பூவினா.


  "ஓ! அன்னைக்கு நிறைய விபரங்கள் சொல்லி என்னைப் பதறடிச்ச, அந்தப் பெண் நீயாம்மா?"


  "ஆமா டாக்டர்! நீங்கள் எல்லோரும் அந்த அறையைவிட்டுப் புறப்பட்டுப் போன பிறகுதான் நான் ரகுநந்தனைப் பார்த்தேன், அவர் என்னுடன் பேசினார். அந்த அறைக்குள் இருக்கும் ரகுநந்தனுடைய ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றார்." என்றாள் பூவினா. 


  "நீ அந்த அறைக்குள் போனாயா? " என்ற செந்தில், 


பூவினா "ஆமாம்" என்றதும், சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். 


  "என்ன டாக்டர் இன்னும் நம்பவில்லையா?" என்று பூவினா கவலையுடன் கேட்க,


  "அங்கே ஒரு அறை இருப்பது, பிரேதபரிசோதனைக் கூடத்துக்குச் செல்லும் டாக்டர்ஸ், நர்ஸ், க்ளீன் பண்றவங்க தவிர  இந்த ஆஸ்பத்திரியிலிருப்பவர்களுக்கே பலருக்குத்தெரியாது… வெளி ஆட்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை...  அதோடு அந்த அறையின் சாவி என்னிடம் இருக்கிறது. அப்படியிருக்க, நீ இவ்வளவு சரியாகச் சொல்லும்போது நம்பாமல் எப்படியம்மா இருக்க முடியும்? நம்புறேன்மா நம்புறேன்." என்றவர் கண்களில் கண்ணீர் பெருக, ஜெயராமை அழைத்து, அருகில் உள்ள நாற்காலியில் அமரச் சொன்னவர், 


  "உன்னை எங்கே  ரகு பார்த்தான்?" என்று ஜெயராமிடம், செந்தில் கேட்டார்.


  ரகுநந்தனை, பூவினாவின்  காலேஜில் சந்தித்தது, வீட்டிற்கு வந்து வைத்தியம் பார்த்தது என்று அனைத்தையும் சொன்னான். 


  "உனக்கு அவனை,  அடையாளம் தெரியலயா ஜெய்?" என்று கேட்டார் செந்தில்.


  "இல்ல டாக்டர் எனக்கு முழுசா எதுவும் தெரியல. ஆனா ரகுவைப் பார்க்கும்போது, ஒரு சில நேரங்களில், அவ்வளவு ஏன்?!! இப்ப, ஆஸ்பத்திரிக்குள்ள வரும்போது கூட, நான் இந்த ஆஸ்பத்திரில  இருந்திருக்கேன்னு நல்லா உணர்றேன். எனக்கு ஆக்ஸிடன்ட் ஆகி உயிருக்குப் போராடுற மாதிரி உணர்றேன்...  ரகுவைக் காப்பாத்தனும்னு அடிக்கடி என் மனம் கிடந்து தவிக்கிறது. ஆனா எதுவுமே முழுசா விளங்கவில்லை..." என்றான்.


  "நீங்க  தப்பா எடுத்துக்கலைனா எனக்குத் தெரிஞ்ச சைக்யாட்ரிஸ்ட்ஐ வரச் சொல்றேன்… ஜெயராமுக்கு டெஸ்ட் பண்ணி, என்ன ஏதுன்னு பார்த்துடலாமா?" என்று செந்தில் பொதுவாக எல்லோருடைய அபிப்ராயத்தையும் கேட்டார்.


  "ருபாய் கேட்கமாட்டாரே? " என்று ஜெயராம் சிரிக்கவும், செந்திலும் சிரித்தபடி,


  "உன்னை நானும் பழையமாதிரி ஜெய்னு கூப்பிடலாமா?" என்று ஏக்கம் நிறைந்த பார்வையுடன் செந்தில்  கேட்கவும், 


  "தாராளமா" என்றான் சந்தோசமாக, அவனையுமறியாமல் செந்திலின் மேல் ஒரு பிரியம் வருவதை ஜெயராம் நன்றாகவே உணர்ந்தான்.


  "ரகுநந்தனுக்கும், ஜெயராமிற்கும் என்ன ஆனது?" என்று வேலு, செந்திலிடம் கேட்டான்.


  "என்ன நடந்ததுன்னு தெரியுமே தவிர, ஏன் ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்துல இப்படியானதுன்னு எனக்கும் தெரியாது… அந்த சமயத்துல முதல் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குச் சென்றிருந்த என் மனைவியிடமிருந்து குழந்தை பிறந்தவிட்டதாக ஃபோன் வந்தது. ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கிட்டு, என் மாமியார் ஊரான கொடைரோடுக்குப் போயிட்டேன். நான் அங்கே இருந்த போதுதான் அந்த  அசம்பாவிதம்  நடந்துவிட்டது... நான் இங்கே வர்றதுக்குள்ள எல்லாமே முடிஞ்சிருச்சு...  என் உயிர் நண்பர்கள் இருவருமே ஒரே நேரத்தில்  என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாங்க..." என்றவர் கர்ச்சீப்பில் கண்களைத் துடைத்துவிட்டு, மீண்டும் பேசினார் டாக்டர் செந்தில்.


  "வாழ்க்கையிலேயே ரொம்ப கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? ஒன்னாவே ஊர் சுத்தி, ஒன்னா சேர்த்து சாப்பிட்டு, தூங்கி, நம்ம கூடவே இருந்த ஃபிரண்ட்ஸ் திடீரென மாயமா மறைஞ்சு போன மாதிரி, காணாம போகவிட்டுட்டு, நாம தனியா  நிற்கிறதுதுதான்... அன்னயிலிருந்து நான் ஆஸ்பத்திரில சாப்பிடுறதே இல்லை... இங்கே தூங்குறதும் இல்லை.... இன்னைக்கும் என்னால மறக்க முடியல... .... .... மூணுபேரும் சேர்ந்து கொடைரோடு போறதா தான் ப்ளான் பண்ணினோம்... ஆனா  மூணுபேருக்கும் சேர்ந்து லீவ் கிடைக்காததால் நான் மட்டும் கொடைரோடு போகவேண்டியதாயிருச்சு... அன்னைக்கே அவங்க ரெண்டு பேரையும் நிரந்தரமா பிரியிற மாதிரி  எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு... ரகு தான் என்னைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வச்சான்... அன்னைக்கு ரயில்ல ஏறும்போது அவங்க ரெண்டு பேரையும் பார்த்தது..." என்றவர், மீண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டு, தண்ணீர் எடுத்துக் குடித்தார்... சிறிது நேர அமைதிக்குப் பிறகு, 


ஜெயராமையும், பூவினாவையும் பார்த்து, "உங்களைத் தேடி வந்தவன், ஏன் என்னைத் தேடி வரல?..." என்று கவலை தோய்ந்த குரலில் கூறிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். 


பிறகு, "அஞ்சு நிமிஷத்துல  சைக்யாட்ரிஸ்ட் வந்துடுவார்... அதற்குப் பிறகு நாம விவரமா பேசுவோம்." என்று டாக்டர்  செந்தில்  சொல்லிக் 

கொண்டிருக்கும் போதே,


  "என்ன டாக்டர் செந்தில் மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சாச்சா?"  என்று கலாய்த்தபடி வந்தார், ஐம்பது வயதில் இருந்த ஒருவர்.


  "வாங்க கங்காதரன்! இன்னைக்கு எனக்காக கூப்பிடல. இந்தப் பையன் எனக்கு வேண்டியவன், கொஞ்ச நாளாவே இவனுக்கு...." என்று ஜெயராமிற்கு நடந்தவைகளை, ரகு, ஜெய் பற்றிக் கூறாமல் சொல்லி முடித்தார். 


  "அவ்வளவுதானே வாங்க, டெஸ்ட் பண்ணிடலாம்." என்று ஜெயராமை மட்டும் தனியாக அழைக்க,


"எங்களுக்கும் என்ன ஆச்சுங்கிற விபரம் தெரியனும் கங்காதரன்..."  என்று செந்தில் கூறவும்,


  "முதல்ல இவர என் அறைக்குக் கூட்டிட்டு போயி சாதரணமா இவரோட தினசரி  நடவடிக்கைகளைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்... பரிசோதனை பண்ணும்போது நீங்க வந்தால் போதும்... நீங்கள் என்னுடைய வெளியறையில் இருக்கும் மானிட்டரில், உள்ளே இவர் என்ன பேசுறார்னு பார்க்கலாம். ஓகேவா? ஒரு டாக்டரா  உங்களுக்குத் தெரியாததா? இந்த மாதிரிப் பரிசோதனை எல்லாம் தனியாவச்சுத்தானே பண்ணனும்?" என்று கூறிவிட்டு ஜெயராமை அழைத்துக் கொண்டு போனார். 

 

அதுவரை நடப்பவற்றை அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்த பூவினா, "அவருக்கு என்ன செய்யப்போகிறார்கள்? ஜெயராம்  எங்களுக்கு உதவிக்கு வந்தவர் டாக்டர்." என்று கவலைப்பட,

  "உன்னைவிட எனக்கு, அந்தப் பையன்மேல் அக்கறை அதிகம்மா...  நான் நினைக்கிறது சரியா இருந்தா... நீங்க தேடிவந்த விஷயம், நான் தெரிஞ்சுக்க நினைக்கும் விஷயம் எல்லாம் தெரிஞ்சுடும்." என்றார் செந்தில்.


  "ஜெயராம், உங்க நண்பன் ஜெய்யோட மறுபிறவின்னு நினைக்கிறீங்களா? இதெல்லாம் சாத்தியமா?" என்று வேலு கேட்டான்.


  "அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்ட விஷயம் இது... ஆனா ஒரு டாக்டராக நாங்க அதை மறுப்பதுபோல நடிக்கிறோம். ஏன்னா  அது நிஜம்னு சொல்லிட்டா தெருவுக்கு மூணுபேர் வந்துடுவாங்க, 'நான்தான் காந்தி, நேரு, மதர் தெரஸான்னு சொல்லிக்கிட்டு.' ....என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே டாக்டர் செந்திலின் மொபைல் அதிர, எடுத்துப் பார்த்தவர்,


  "என் பின்னாடி வாங்க!" என்று கூறி விட்டு டாக்டர் செந்தில்  வேகமாக முன்னே நடந்தார்.


        அவரை வேகமாகப் பின்தொடர்ந்த வேலுவின் கைகளை, சற்றே நடுங்கும் தன் கைகளால் பற்றிய பூவினா, 


  "என்னவோ கொஞ்சம் பயமா இருக்கு வேலு... நமக்கு உதவ வந்த உங்க நண்பருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது." என்றவளைச் சிரித்தபடி பார்த்த வேலு, ஏதோ பேச வாயெடுக்கும் முன்,


  "அவருக்கெல்லாம் எதுவும் ஆகாதுக்கா.... இன்னும் எத்தனை உண்மையான காதலுக்குத் தூது போகவேண்டியிருக்கு..." என்று விஜய்  கலாய்க்க, 


  "சும்மா வாடா! நானே உன்னை ஏன்டா கூட்டிட்டு வந்தேன்னு பயந்துகொண்டிருக்கிறேன். இதுல கிண்டல் பண்ணிகிட்டு வர்றான்..." என்று பூவினா செல்லமாக அதட்ட,


  "சரி அவர் கையை விடு! நான் தான் உன் பயத்தைப் போக்கிட்டேன்ல?... என்னை அதட்டுற மூடுக்கு கொண்டுவந்துடேன்ல? அப்புறமும் ஏன் அவர் கையைப் புடிச்சுக்கிட்டு நடக்கிற?" என்று பூவினா, வேலு கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கூற, சட்டென்று வேலுவின் கையை விட்டாள் பூவினா.



   "ஏன்டா?... ஏன்?... அவளே இப்பத்தான் ஏறெடுத்துப் பார்க்கிறா? அது உனக்குப் பொறுக்கலையா?" என்று பதறினான் வேலு. 


  "காலம் பூரா உங்க கையைத் தானே பிடிக்கப் போறா? அதுவரை என் கூட வரட்டுமே?" என்றான் விஜய் அசால்ட்டாக.


  "அவ என் கையத்தான் காலம் பூரா புடிக்கப் போறான்னு? உனக்கெப்படித் தெய்வமே தெரிஞ்சது?"


"இதுநாள்வரை, அக்காவுக்குப் பயமா இருந்தா, எங்கப்பா கையைதான் பிடிப்பா. இப்ப உங்க கையைத்தானே பிடிச்சா... இதிலிருந்தே தெரியல? அதோட இவ்வளவு நேரமா விளக்கம் கொடுத்துக் கிட்டிருக்கேன்... இந்நேரத்துக்கு, அவ மனசுல நீங்க இல்லைனா, என்னை உண்டு இல்லைனு ஆக்கியிருப்பா... பொது இடம்னு கூடப் பாக்காம என்னோடக் கட்டி ஏறியிருப்பா..." என்று விஜய் கலாய்க்க,


  "வீட்டுக்குப் போகும்போது மறக்காம புளி வாங்கனும் ஞாபகப்படுத்துடா..." என்றாள் பூவினா.


  "என்னவோ சொன்ன? பார்த்தாயா? அவ மனசெல்லாம் சாப்பாட்டுலதான் இருக்கு." என்றான் வேலு.


  "உங்களுக்கு ஒரு தங்கை இருக்காங்கனு சொன்னீங்க? உண்மை தானா?" என்று கேட்டான் விஜய் சந்தேகமாக.


  "அவள ஏன்டா இப்ப இழுக்கிற.... அவளுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு." என்றான் கிண்டலான குரலில் வேலு.


  "உங்க தங்கை எனக்கு செட் ஆகாது சார்... நீங்களே இப்படி இருக்கீங்க! உங்க தங்கை எப்படி இருப்பாங்க?" 


  "நீ நேரா விஷயத்துக்கு வர்றியா?"


  "எங்கக்கா மனசுல, நீங்க தான் இருக்கீங்கன்னு உங்களுக்குப் புளி போட்டு விளக்கனுமாம்...  அதான் புளி வாங்கனும்கிறா." என்றான் விஜய்.


  "தலைவா! புரிஞ்சுடுச்சு..." என்று வேலுவும், விஜய்யும் கலாய்த்துக் கொண்டு வரும்போதே, ஒரு அறைக்குள் டாக்டர் செந்தில் செல்ல, அங்கிருந்த நர்ஸ்,


  "இப்படி உட்காருங்க... இந்த மானிட்டர் ல, டாக்டர் சிகிச்சை பண்றது தெரியும்." என்று கூறி ஐவரையும்  அமரவைத்து விட்டு, வெளியே சென்று கதவை மூடிவிட்டார்."


  உள்ளே இருந்த டாக்டர் கங்காதரன், டாக்டர் செந்திலைப் பார்த்து, "ஓகே?" என்று கூறிவிட்டு, கட்டிலில் படுத்திருந்த ஜெயராமை நோக்கி, பேச ஆரம்பித்தார். சிறிது நேரம் ஆன நிலையில்,


  "உங்களுக்கு ஆக்ஸிடன்ட் எப்படி நடந்தது?"


"என் நண்பன் வேலு என்னைத் துரத்த, அவனிடமிருந்து தப்பி ஸ்டேஷனுக்கு வெளியே வந்தேன்... அப்போ திடீரென ஜீப் உள்ளே வர... அது... அது… ஐயோ  அந்த பஸ்  என் பைக்கை இடிச்சு... என் பைக் அந்த பஸ்ஸில் சொருகி... ஆ...ஆ…ஆ..."


  "ஜெயராம்! ஜெயராம்!"


  "ம்…ம்… "


  "நீங்க ஓடித்தானே போனீங்க? எதிர்ல ஜீப் தானே வந்தது?" 


  "இல்ல நான் பைக்ல வந்தேன்... எதிர்ல பஸ். என் பைக்கோட  என்னையும் இழுத்துக் கிட்டு... என் கால் மாட்டிக்கிச்சு... எடுக்கவரல... எல்லாரும் கத்துறாங்க... பஸ் நிக்கப்போகுது...ஆ...ஆ… என் தலை பிளாட்பாரத்தில் மோதி.... ஆ...ஆ...ஐயோ... ரகுஊஊஊ…”


“ஓகே! ஒகே ஜெயராம்” என்று ஜெயராமை அமைதி படுத்திய டாக்டர், ஜெயராம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து சாதாரண நிலைக்கு வரவும், “அப்புறம் என்னாச்சு?” என்று கேட்டார்.

 

     யாரோ  என் முகத்துக்குப் பக்கத்துல "உங்க பேர் என்ன? னு கேட்கிறார்... எனக்குத் தலையில் பயங்கர வலி... மூக்கு காதெல்லாம் ஈரமாகுது... ரத்தம் வருதுன்னு நினைக்கிறேன். கண்ணு இருட்டுது... என்னை அவர் பக்கத்துல, அவர் மடியில படுக்க வச்சு காரை ஓட்டுறார்...  கண்ணை மூடாமல் கஷ்டப்பட்டுத் திறந்து வச்சுக்க முயற்சி பண்றேன்... ஐயோ! எனக்கு சுய உணர்வு இல்லையா?... எனக்கு ஓன்னுமே தெரியல, பின்னாடி ஒரு  

 பொண்ணு அலறிக்கிட்டே இருக்கிற சத்தம் என்னை சுய உணர்வுக்கு.... இல்லை என்னால முடியல... இனி பிழைக்க மாட்டேன்... ரகுவையாவது காப்பத்துறேன்…


  "சார் நான் இனி பிழைக்கமாட்டேன்.... ரகுவைக் காப்பாத்துங்க ப்ளீஸ்! " னு கத்துறேன்... 


அவர் பேசுவது எனக்குக் கேட்கல அந்தப் பொண்ணு கத்துற சத்தம். ... ஆ... ஸ்ஸ்.... ஆ...." என்று ஜெயராம் துடிக்க வலிப்பு போல் வெட்டி இழுக்க ஆரம்பித்தது...


  "ஜெயராம்!  உங்களுக்கு  ஒன்னுமில்லை...  கனவுதான் ஜெயராம்... ஜெயராம்!..." என்று டாக்டர் ஆசுவாசப்படுத்தினார்.


  "என் பேரு ஜெய்... ஜெய்...ச…சஞ்..." என்று கூறியவனின் தலை தொய்ய!  பார்த்துக் கொண்டிருந்த ஐவரும் பதறி எழுந்தனர்... ஏற்கனவே பயத்தில் இரு கைகளாலும் தன் முகத்தை  மூடியபடி பார்த்துக் கொண்டிருந்த பூவினா,


  "போதும்! அவர விட்டுடுங்க... எனக்கு எதுவுமே தெரிய வேண்டாம்... " என்று அழ ஆரம்பித்தாள்.


  "அவனுக்கு ஓன்னுமில்லையே?" என்று பதட்டத்துடன் டாக்டர் செந்தில் தன் மொபைலில், டாக்டர் கங்காதரனிடம் கேட்க,


   "இதெல்லாம் சகஜம் டாக்டர் செந்தில். ஒரு டாக்டரான நீங்களே இப்படிப் பயந்தா என்ன அர்த்தம்?" என்று கூறியவர், ஜெயராம் அசையவும்,


  "ஜெயராம்! எப்படி இருக்கீங்க?" என்று கேட்டார்.


  "என் பேரு ஜெய் சஞ்சீவ்..."


  "ஜெய்சஞ்சீவா?" அது யாரு?"


  "நான்தான்..."


  "ரகு யாரு? "


  "என் நண்பன்."


  "அவருக்கு என்ன ஆச்சு?"


  "அவருக்கென்ன?"


  "இல்லை... அவரலக் காப்பாத்துங்கன்னு சொன்னீங்க?"


  "அவர... நீங்க காப்பாத்தப் போறீங்களா?  அவரே நூறு பேரக் காப்பாத்துவார்... ஏன் சார் ஜோக்கடிக்கிறீங்க? ஒருவேளை செந்திலைச் சொல்றீங்களோ? அவர்தான் எலிக்கே பயப்படுவார்..."


  "டாக்டர் செந்தில்... ஒரு சர்ஜன்!!! அவரையா சொல்றீங்க?"

'அவனே என் மானத்தை வாங்குறான்... இதுல இவர் வேற, அவன் என்னைத்தான் சொல்றானானு உறுதிபடுத்திக்கிறார்.' என்று நினைத்த செந்தில், அதிர்ச்சியாக ஜெயராம் பேசுவதைக் கவனித்தார்.


"நான் சொன்னேன்னு  செந்தில்ட்ட சொல்லிடாதீங்க... அவர் வீட்ல கட்டாயப்படுத்துனதால தான், செந்தில்  டாக்டருக்கே படிச்சார். ... அவர் ரகுவுக்குத் துணை டாக்டர்ன்ற பேர்ல பக்கத்தில் நிற்பார்... ஆனா ரகுநந்தன் என்ன பண்றார்னு வேடிக்கைதான் பார்ப்பார்....  செந்தில்  வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் கத்தியையே எடுத்தார்... ரகுதான் செந்திலுக்கு. ...  ஆ...ஆ... வலிக்குது..." 


  'இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? எங்க முணு பேருக்கு மட்டும் தெரிஞ்ச விஷயமாச்சே? ... அப்படினா, இவன் ஜெய்யின் மறுபிறவிதானா?' என்று உணரச்சி ததும்ப, ஜெயராமைப் பார்த்தார் செந்தில்


  "ஜெயராம்!.... ஜெயராம்!...."


  "ம்...ம்"


  "ரகுநந்தனை எப்பக் கடைசியா பார்த்தீங்க?"


  "டுயூட்டி முடிஞ்சபோது."


  "வைதேகி யாரு?"


  "தெரியல."


  "வைதேகியை எப்ப கடைசியா பார்த்தீங்க?"


   "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி... ஆ...ஆ "


'என்ன இவன் மாத்தி மாத்தி  பேசுறான்?' என்று நினைத்தான் வேலு.


  அடுத்தடுத்து எத்தனையோ கேட்டும். ஜெயராமிற்கு இதற்கு மேல் எதுவும் தெரியவில்லை... எது சொன்னாலும் அதன் முடிவில் அந்த ஆக்ஸிடன்ட்டிலேயே அவன் முடித்தது அனைவருக்குமே கஷ்டமாக இருந்ததால்... அத்துடன் சிகிச்சையை முடித்து ஜெயராமை ரிலாக்ஸ் செய்யச் சொல்லிவிட்டு வெளி அறைக்கு வந்த டாக்டர் கங்காதரன்,


  "இந்தப் பையனுக்கு நீங்க நினைக்கிற மாதிரி பூர்வஜென்மம்னு நிச்சயமாக சொல்ல முடியாது... ஏதோ ஆக்ஸிடன்ட்ல சிக்கியிருக்கான் அது ஒன்றுதான் நிச்சயமாக சொல்ல முடிந்தது... நீங்க அந்த பையனைப் பெத்தவங்க கிட்ட விசாரிங்க... அதன்பிறகு என்ன செய்யலாம்னு பார்க்கலாம்." என்று முடித்தார்.


   அந்த அறையைவிட்டு வெளியே வந்த ஜெயராமை, ஒடிச்சென்று கட்டிப்பிடித்தார் செந்தில்.


  "இவன் எங்க ஜெய் தான். எனக்கு சந்தேகமே இல்லை. " என்று அனைவரிடமும் சந்தோஷமாக கூறினார் டாக்டர் செந்தில். 


  சிறிது நேரத்தில் ஜெயராமின் வீட்டில் இருந்தனர். 


   "ஜெயராமுக்கு பெரிய ஆக்ஸிடன்ட் எதுவும் நடந்ததா அம்மா?" என்று ஜெயராமின் அம்மாவிடம் வேலு கேட்டான்.


  "இல்லையேப்பா... அவன் பைக்கைக்கூட எந்த அவசரத்திலும் உருட்டத்தானே செய்வான்." என்று கூற, 


அவனுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி வேலு கூறவும்,


  "என்ன பெயர் சொல்றான்?" என்று ஜெயராமின் அப்பா கேசவன் கேட்டார்.


  "ஜெய்சஞ்சீவ், வைதேகி, ரகு ன்னு மூணு பேர் சொல்றான்."


  "நான் சொல்லப்போற விஷயம் எந்த அளவுக்குப் பயன்படும்னு தெரியல... இருந்தாலும் சொல்றேன்... என் மனைவி இவனுக்கு மாசமா இருந்தபோது, இடுப்பு வலி எடுத்தது... நான் என் மனைவியைக் காரின் பின் சீட்டில் படுக்க வைத்துக்கொண்டு, வண்டியை முழு வேகத்தில் பறக்க விட்டேன். அந்த நேரத்தில், நாங்க போன வழியில், ஒரு பெரிய ஆக்ஸிடன்ட் நடந்து ஒரு பையன் உயிருக்குப் போராடிக்கிட்டிருந்தான்... நான் அவனையும் என் காரில் முன்சிட்டில் எனக்கருகே படுக்க வைத்து, அருகில் இருக்கும் மருத்துவமனைக்குப் போனபோது, அது பிரைவேட் ஆஸ்பத்திரிங்கிறதால அந்தப் பையனை அட்மிட் பண்ணுவதற்கு, ஆயிரம் ஃபார்மாலிட்டிஸ் செய்ய வேண்டி இருந்தது... அதற்கு முயற்சி செய்யும்போதே அந்தப் பையனின் உயிர் பிரிந்தது. அதே நேரத்தில் என் மனைவிக்குப்  பார்வையாளர்கள் அறையிலேயே சுகப்பிரசவமாக என் மகன் பிறந்து விட்டான். கண்முன்னாடி, ஒரு வாழ வேண்டிய வயசுப் பையனின் உயிர் போனத நெனச்சு, பலநாள் என் தூக்கம் கெட்டது... அதனால் எங்கள் மனதிருப்திக்காக அந்தப் பையனின் பெயரையே, எங்க பையனுக்கு வச்சுட்டோம்… அவன் உயிருக்குப் போராடிக்கிட்டு வந்தபோது, நான் அந்தப் பையனின் வீட்டுக்குத் தகவல் சொல்வதற்காக அந்தப் பையனின் பெயர் கேட்டதற்கு,  "ஜெய் னு சொன்னான். நாங்க என் அப்பா பேரான ‘ராம்’ ஐயும் சேர்த்து ஜெயராம்னு பேர் வச்சோம்.

  ஐந்தாம் வகுப்புவரை நல்லாத்தான் படிச்சான். அதன் பிறகு அவனுக்கு  அடிக்கடி காய்ச்சல் வந்தது. சாதாரண சளி காய்ச்சலுக்கு பெருசா பயந்து சத்தம் போடுவான். குறிப்பா சயின்ஸ் எக்ஸாம் அன்றுதான் காய்ச்சல் வரும். இவனுக்கு சயின்ஸ் சப்ஜெக்ட் படிக்கவே இஷ்டமில்லை போலன்னு நெனச்சோம். எங்களைப் பொறுத்த வரை இவனோட ஆக்டிவிடீஸ் எங்களுக்குப் பழக்கமான விஷயம்தான். ஆனா இதுவரை ரகுன்னு அவன் யார் பேரும் சொன்னதில்லை." என்று முடித்தார்.


  ஜெயராம் தான் ஜெய்சஞ்சீவ்னு தெரிகிறது.... ஆனா ரகு?


  அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…


        💍💍💍💍💍💍💍💍💍

  



Post a Comment

0 Comments