வருவான்-16
ஜெயராம், அவன் பிறந்த கதையைத் தன்னுடைய அப்பா கூறியதைக் கேட்டு ஆடிப்போனான்.
"நான் ஜெய்சஞ்சீவ்வின் மறுபிறவியா ப்பா?" என்று தன் அப்பாவிடம் கேட்டான் ஜெயராம்.
"தெரியலையே... நம்பாம இருக்கவும் முடியலயே டா..." என்று அப்பா கூற,
"அப்போ ரகுநந்தனும் மறுபிறவி எடுத்திருக்கான் ப்பா நான் பார்த்தேன்." என்றான் ஜெயராம்.
"அவரும் மறுபிறவி எடுத்துட்டார்னு எப்படி சொல்ற ஜெயராம்? அவருக்கு ஆக்ஸிடன்ட் ஆகலையே? அவர் ஏன் உயிருடன் இருக்கக் கூடாது?" என்று கேட்டான் வேலு.
"ரகு உயிரோட இருந்திருந்தால் அவருக்கும் செந்தில் டாக்டரோட வயசு ஆகியிருக்கும் இல்லையா? ரகு, என் வயசுப்பையன் மாதிரி தானே இருக்கார்…"
"ஆனா… அவருக்கு… அவர் உயிரோட இல்லைனு சொல்றாங்களே டா"
"அப்பா நீங்கலாம் நினைக்கிற மாதிரி இருக்காது… என்னைப் பார்க்க வந்தபோது என்னைத் தொட்டு வைத்தியம் பண்ணினார்... தொட்டுப் பேசினார். இதெல்லாம் எப்படி முடியும்?" என்று ஜெயராம் சொன்னதும்,
"எங்க கண்ணுக்கு ரகுநந்தன் தெரியலையே அண்ணா..." என்றாள் கிரேசா.
"அண்ணா வா? ஏன்மா? நான் இன்னும் உன்னுடன் பேசவே ஆரம்பிக்கலையே? மறுபிறவின்னதும் பயந்துட்டியா?"
"ஆவியவே...," என்று ஆரம்பித்தவளுக்கு பூவினாவின் நெற்றிக்கண் சூடு முதுகில் உணர, "வந்து... ரகுநந்தனைப் பற்றித் தெரிஞ்சுக்கவே தைரியமா, உங்க கூட நான் வந்திருக்கேன். நீ பொடியன்! உன்னைப் பார்த்தா பயந்துடுவேன்? " என்று மேலும் கலாய்த்தாள் கிரேசா.
"பொடியனா? " என்று கத்திவிட்டான் ஜெயராம்.
"வாயக்கொடுத்து வாங்கிக் கட்டிக்காத." என்று சிரித்தான் வேலு.
"அப்போ ரெண்டுமே உனக்கா." என்று காண்டு ஆன ஜெயராம்,
கிரேசாவிடம் நறுக்கென்று கையில் கிள்ளு வாங்கினான்.
"எத்தனை தடவ சொல்றது சுமி? தொட்டு பேசாதேன்னு." என்று ஜெயராம் கத்த,
"அது யார்டா சுமி? முழுப்பெயர் என்ன?" என்று சிரித்தபடி கேட்ட வேலுவிடம்,
"அதைத் தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்? " என்று காட்டமாகக் கேட்டாள் பூவினா.
'அட! கோபம் வருது...!!" என்று மனதில் ஜில் ஆனான் வேலு.
"சுமியோ, உமியோ, போலிடாக்டரோட அப்பா சொன்ன விஷயத்தை, செந்தில் டாக்டர்கிட்ட, யாராவது ஃபோன் பண்ணி சொல்லுங்க." என்றாள் கிரேசா.
"போலிடாக்டரா? நா...னா?" என்று கேட்டான் ஜெயராம்.
"ஆமா! போலிஸ்+டாக்டர் = போலிடாக்டர்." என்று சிரித்தாள் கிரேசா.
"ஊமை மாதிரி இருந்தாள்... இப்ப என்னஅஅ... வாயி? அம்மாடி...யோ!!!" என்று சிரித்தான் ஜெயராம்.
"ஆமா? சுமி யாரு உன் பிக்அப் பா? என்று கேட்டாள் கிரேசா பின்விளைவுகள் தெரியாமல்...."
"அப்படி யாருமே இல்ல, திடீர்னு வாய்க்குவந்த பேரைச் சொன்னேன்."என்றான் சாதாரணமாக.
மற்றவர்களும் அந்தப் பெயரைக் காதில் வாங்கவில்லை.
விதி சில நேரங்களில் இப்படித்தான் விளையாடும்.
மாலை ஆறு மணிக்கெல்லாம் செந்தில், பூவினாவின் வீட்டிற்கு வந்தார்.
அவருக்கு முன்பாக, வேலு, ஜெயராம், கிரேசா மூவரும் வந்து காத்திருந்தனர். அறிமுகப் படலம் முடிந்தது.
"இதோட நிறுத்திடுவோமே எனக்கு ரொம்ப பயமாயிருக்கு." என்றார் வள்ளி அனைவரையும் பார்த்து.
"என்னவோ நாம வலிய போய் மாட்டுற மாதிரி பேசாத வள்ளி. நம்ம பொண்ணு கண்ணுக்கு முன்னாடி ஒருத்தன் அடிக்கடி வந்து நின்னா, என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கிறதுதான நல்லது?" என்றார் ராஜன் கவலையாக.
"அவன் ஏன் நம்ம பொண்ண தேடி வரனும்? அத்தனை பேர் டிரைனிங் போயிருக்கும்போது, இவள மட்டும் ஏன் பின்தொடர்ந்து வந்தான்?... இவ ஏதாவது பண்ணியிருப்பா." என்று பூவினாவைத் திட்டினார் வள்ளி.
நானும் மத்தவங்க மாதிரி கிளாஸைத் தான் கவனிச்சுக்கிட்டிருந்தேன்மா." என்றாள் பூவினா பாவமாக,
"உனக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாதேன்னுதான் பயப்படுறேன். புரியுதா இல்லையா?"
"தப்பா எடுத்துக்காதம்மா, ரகு ரொம்ப நல்லவன்! அவனால உங்க பொண்ணுக்கு பிரச்சனை வராது... " என்று டாக்டர் செந்தில், வள்ளிக்கு தைரியமளித்தார்.
"முதல்ல உங்க நண்பன் எங்கே இருக்கார்? அதச் சொல்லுங்க..." என்றார் வள்ளி அரண்டுபோனவராக.
ஒரு நிமிடம் ஜெயராமைப் பார்த்த டாக்டர் செந்தில், பொதுவாக அனைவரையும் பார்த்து,
"எங்க ரகு இப்ப உயிரோட இல்லை!" என்றார்.
"டாக்டர்!... எவ்வளவு பெரிய வார்த்தை… நான் ரகுவைப் பார்த்தேன்." என்றான் ஜெயராம்.
"ஆனா உன் வயசு பையனா இருந்தான்னு தானே சொல்ற? நம்ம ரகு என்னைவிட அஞ்சு வருஷம்தான் இளையவன். அது மட்டுமில்ல... அவன் நம்ம ஆஸ்பத்திரிலதான் இறந்திருக்கான்... அவன் இறந்து விடுவான்னு உனக்கு முன்கூட்டியே தெரிஞ்சிருக்கும் போல, அதனாலதான், உனக்கு ஆக்ஸிடன்ட் ஆனபோது, அவனைக் காப்பாத்த சொல்லி அழுதிருக்க..." என்று கவலைதோய்ந்த முகத்துடன் கூறினார் டாக்டர் செந்தில்.
"அவருக்கு என்ன ஆச்சு?" என்று பதட்டமாகக் கேட்டாள் பூவினா.
"ரகு தற்கொலை செஞ்சுக்கிட்டான்."
"என்ன?!!!" என்று அனைவருமே அதிர்ச்சியடைந்தனர்.
"உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று போலிஸாக கேட்டான் வேலு.
"விஷயம் கேட்டு நான் ஊரிலிருந்து வந்தபோதுதான், அவன் உடல் போஸ்ட்மார்ட்டம் முடித்துப் பிணவறையில் வச்சிருந்தாங்க." என்று
அன்று, ரகுநந்தனை அந்தநிலையில் பார்த்த அதிர்ச்சி விலகாமல் கண்கலங்க கூறினார் டாக்டர் செந்தில்.
"பிணவறையில் வச்சிருந்தாங்களா?!!! ஏன் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லையா?" என்று கேட்டார் ராஜன்.
"அவனுக்குப் பெத்தவங்க இல்லை!"
"அடக்கடவுளே! அவங்க எப்ப இறந்தாங்க? " என்று வள்ளி கவலையுடன் கேட்டார்.
"அது.... அவனுக்கேத் தெரியாது... அவனுக்கு ஒரு வயசு இருக்கும்போது, யாரோ, ஒரு கடிதம் எழுதி, இவன் பாக்கெட்ல வச்சு, ஒரு ஆஸ்ரமத்துக்குள்ள அனுப்பி வச்சிருக்காங்க. ஆஸ்ரமத்துல வளர்ந்து, ஏழாம் வகுப்பு படிக்கும் போதே, வேலைக்கும் போயி படிச்சிருக்கான்... பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ஆஸ்ரமத்திற்கு வரும் டாக்டர்கிட்டயே எடுபிடி வேலைக்குச் சேர்ந்திருக்கான்... அந்த டாக்டரைப் பார்த்துதான் இவன் டாக்டராக ஆசைபட்டிருக்கான். அந்த டாக்டரும் இவன் படிக்க உதவிசெஞ்சிருக்கார். M.B.B.S., படிச்சதுமே ஆஸ்ரமத்துல இருந்து அனுப்பிட்டாங்க... அந்த டாக்டரோட வீட்ல, பேயிங் கெஸ்ட்டாத் தங்கி, அவருடைய ஆஸ்பத்திரிலயே டாக்டராக வேலை பார்த்துக் கொண்டு, MD பண்ணினான். அப்போதான் எனக்கு அறிமுகமானான். அவன் பார்ப்பதற்கு இளவரசன் மாதிரி இருப்பான்.
எல்லோரிடமும் ரொம்ப ஃபிரண்ட்லியா பழகுவான். அவனை நல்லவங்க எல்லோர்க்கும் பிடிக்கும்... அவனைப் பெண்களுக்கும் பிடிக்கும். படிக்கிற காலத்தில் மட்டுமில்ல, வேலைக்குப் போனபிறகும் அவன் பின்னாடி எப்பவுமே ரெண்டு பொண்ணு சுத்தும்... ஆனா அவன், அவங்க கிட்ட மரியாதையான இடைவெளி இருக்கும்படி பழகியே, அந்தப் பெண்களின் எண்ணத்தை மாத்திடுவான். இப்படியே அவனுக்கு நிறைய தங்கைகள் கிடைத்தனர். MD படிச்சு முடிச்சதும் அவனுக்கு அரசு மருத்துவமனையில் வேலை கிடைச்சுடுச்சு... ரகுவோட வழிகாட்டுதலால் தான் எனக்கு அந்த ஆஸ்பத்திரில வேலை கிடைச்சது... அங்கே தான் எங்களுக்கு ஜெய்சஞ்சீவ் அறிமுகமானான். மூணுபேரும் நெருங்கிய நண்பர்களா இருந்தோம்… ரகு பிரேதபரிசோதனை செய்றதுல கில்லியா இருந்தான்.... ஒரு பாடியை முழுசா பார்த்த மாத்திரத்தில் ஆக்ஸிடன்ட்டா தற்கொலையா, கொலையா?ன்னு கண்டுபிடிச்சுடுவான். நாங்க அரைமணிநேரம் செய்ற ஆபரேஷனை கால்மணிநேரத்துல பெர்ஃபெக்ட்டா பண்ணி முடிச்சுடுவான். எங்க ஆஸ்பத்திரி டாக்டர்ஸ், எந்த ஆபரேஷனா இருந்தாலும் ரகுவையும் அவங்க ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. நேரங்காலம் பார்க்காம, அவன் வேலை பார்த்ததால, ஆஸ்பத்திரியிலேயே ரகுவுக்குன்னு ஒரு தனியறை குடுத்தாங்க. பிரேதபரிசோதனை கூடத்துக்குள்ளேயே இருந்த அறையைக் கொடுத்தார் எங்க டீன். அவன் பெரும்பாலும் ஆஸ்பத்திரில அவனுக்குன்னு கொடுத்த அறையில்தான் இருப்பான்... அந்த அளவு அவனுடைய வேலையை ரொம்ப விரும்பினான். அதுமட்டுமில்ல முன்னே பின்னேத் தெரியாதவங்களுக்குக் கூட உதவுவான். அவன் வளர்ந்த ஆஸ்ரமத்துல இருந்தவங்களுக்கு மட்டுமில்ல, யார் படிக்க உதவி கேட்டாலும், அவங்களுக்கு நிஜமாவே உதவி தேவைப்படுதான்னு விசாரிச்சுட்டு, உதவுவான்... ஒரு கட்டத்துல நான், ஜெய்சஞ்சீவ், ரகு மூவரும் ஒரே வீட்டில் தங்கி வேலைக்குச் சென்றோம்... எனக்குக் கல்யாணம் ஆனதும், ஜெய்யும் ரகுவும் தனியாக இருந்தாங்க... மருத்துவ சம்மந்தப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறது அவனுக்கு ரொம்ப பிடிக்கும்." என்று கூறிக்கொண்டே வந்த செந்திலுக்கு ரகுநந்தனின் சிரித்த முகமும், அதே அழகு முகத்தைக் கடைசியாகக் கண்ட நிலையும் நினைவிலாட அதற்குமேல் கூற முடியாமல் துக்கத்தில் தொண்டை அடைத்தது.
எல்லோருக்குமே மனம் பாரமானதால் அமைதியாக இருந்தாலும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக ரகுநந்தனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தனர்...
பூவினாவின் மனமோ உலைக்கலமாய் கொதித்துக் கொண்டிருந்தது... கண்கள் கலங்கிய நிலையிலேயே இருந்தது. 'நல்ல தோழன், பெற்றவர்கள் இல்லாமல் வளர்ந்து, நல்ல நிலைக்கு வர எவ்வளவு போராடினானோ? இவ்வளவு தூரம் தனியாக வாழ தைரியமிருந்தவன், எதற்காகத் தற்கொலை செய்து கொண்டான்?' என்ற எண்ணம் எழவே, எவ்வளவு கஷ்டப்பட்டு அடக்கினாலும் அடங்காமல் கண்ணீர் வழிய,
"அவர் ஏன் தற்கொலை செஞ்சுக்கிட்டார்?" என்று டாக்டர் செந்திலிடம் கேட்டாள்.
"அதுதாம்மா எனக்கும் தெரியல... எனக்குக் கல்யாணம் ஆனதற்கப்புறம், ஆஸ்பத்திரில ட்யூட்டி முடிஞ்ச பிறகு, என்னால கொஞ்ச நேரம்தான் ஃபிரண்ட்ஸோட பேச நேரம் ஒதுக்க முடிஞ்சது, அந்த நேரத்திலும் ஆஸ்பத்திரி சம்மந்தப்பட்ட பேச்சுக்கள்தான் பேசமுடிந்தது... அது மட்டுமில்ல பொதுவாகவே ரகு அவனோட பிரச்சனைகளைப் பெரும்பாலும் மறைச்சுடுவான்... "
"ஜெய்சஞ்சீவ் எதுவும் சொல்லலையா?" என்று வேலு கேட்டான்.
"அவன் எப்பவுமே ரகுவிற்கு வலது கை மாதிரி. ரகு கூடவேதான் இருப்பான்... ரகு பேசுறத தான் அவனும் பேசுவான்... ரகுவிற்காக உயிரையும் கொடுப்பான்னு சொல்வோம். .. அவனை எங்க ஆஸ்பத்திரில ரகுதாசன்னே கிண்டல் பண்ணுவாங்க." என்று அந்த நாள் நினைவில் சிரித்தார் டாக்டர் செந்தில்.
பிறகு, "ஆனா அந்த அசம்பாவிதம் நடந்த அன்னைக்கு ஜெய் ஏன் ரகுவை ஆஸ்பத்திரில விட்டுட்டு வெளியே ரொம்ப தூரமா போனான்?னு எனக்கு இன்னைக்குவரை ஒரு உறுத்தல் இருக்கு. விசாரிச்சதுல வேலை சம்மந்தமா போகல... சொந்த விஷயமாகவும் ஜெய், அவ்வளவுதூரம் போகலைன்னு அவன் அம்மா சொல்லி அழுதாங்க... இதுவரை அந்த அசம்பாவிதம் சம்மந்தமா எனக்குப் புரியாத விஷயங்கள்ல இதுவும் ஒன்று..."
"அப்போ இந்த மாதிரிச் சந்தேகங்கள் நிறைய இருக்கா?" என்று கேட்டான் வேலு.
"ஆமா! ரகு ஏன் தற்கொலை செய்தான்ங்கிறதே பெரிய சந்தேகம்..."
"போலீஸ் என்கொயரி பண்ணும்போது நீங்க எதுவும் சொல்லலையா?" என்று வேலு கேட்டான்.
"எத்தனைவிதமான புகார் கொடுத்தேன்.... ஆனா ரகு தற்கொலை செய்துகிட்டது அரசு மருத்துவமனைக்குள்ள ங்கிறதாலயா? வேற காரணத்துனாலயான்னு தெரியல, போலீஸ், கேசை முடிக்கத்தான் அவசரப்பட்டாங்க... எனக்கும் பெரிய இடத்துல யாரையும் தெரியல... அப்போ இருந்த எங்க ஆஸ்பத்திரி டீன் னும் போலீஸ் கேசெல்லாம் வேண்டாம்னு பிரஷர் கொடுத்தார்..."
"ஒருவேளை ரகுநந்தன் தற்கொலை செஞ்சுக்கிட்டதுக்கு, அந்த டீன் காரணமா இருப்பாரோ?" என்று பூவினா கேட்டாள்.
"இயல்பாகவே அந்த டீன் ரொம்ப நல்லவர்தான்... ஆனாலும் அவர், கேஸைத் திருப்பி வாங்கச் சொல்லி என்னைக் கம்பல் பண்ணதால... எனக்கும் டீன் மேல சந்தேகம் வந்து விசாரிச்சேன்... அவர் அந்த அசம்பாவிதம் நடந்த முதல் நாளிலிருந்தே பக்கத்து கிராமத்துக்கு, மருத்துவ முகாம் போடுவது சம்மந்தமான லீகல் வேலைகளைக் கவனிச்சுக்கிட்டிருந்ததுல ரொம்ப பிஸியா இருந்திருக்கிறார்… ம்ஹூம்... என்னால ஆனவரைக்கும் முயற்சி செஞ்சேன். ரகு ஏன் தற்கொலை செஞ்சுக்கிட்டான்கிற சந்தேகத்திற்கும் இன்று வரை விடை தெரியல."
"எனக்கும் வேற எதுவுமே ஞாபகமில்லையே டாக்டர்?!!" என்று மிகுந்த மன வருத்தத்துடன் கூறினான் ஜெயராம்.
"இவருக்கு ஞாபகம் வர ஏதாவது வழி இருக்கா டாக்டர்?" என்று பூவினா கேட்டாள்.
"அப்படியெல்லாம் பலவந்தமா எதுவும் செய்யக்கூடாதும்மா... எதிரிவினையாக மாற வாய்ப்பிருக்கு... எனக்கு இவன் திரும்பி வந்ததே போதும்மா... அப்படியே ரகுவையும் பார்த்து விட்டால் ரொம்ப சந்தோஷபடுவேன் ஹும்ம்... என்னிடம் மட்டும் அவன் ஏன் வரலை'ன்னு எனக்குத் தெரியல." என்று தனக்குத் தானே புலம்ப ஆரம்பித்தார்.
"நீங்க சொல்றதையெல்லாம் கேட்கும்போது, அந்த நல்ல மனுஷனுக்கு இப்படியொரு முடிவு வந்திருக்கக் கூடாதுன்னு தான் தோணுது... ஆனா அவர் ஏன் எங்க பொண்ண பார்க்க வர்றார்னு மட்டும் தெரியல... நீங்க சொன்ன எந்த விஷயத்துக்கும், இவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே... என்னாகுமோன்னு எனக்குப் பயமா இருக்கு..." என்றார் வள்ளி.
"அவர் நல்லவர் ம்மா... நீங்க ஏன் பயப்படறீங்க?" என்று கேட்டாள் பூவினா.
"வினி! ஆன்ட்டி சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்கு. அத்தனை பேர் போயிருக்கும்போது, உன்னை மட்டும் ரகு ஏன் வந்து பார்க்க வேண்டும்? இதுல ஏதோ இருக்கு... யோசித்துப் பார்... உனக்கு அங்கே ஏதாவது வித்யாசமா நடந்ததா?" என்று வேலு கேட்டதும்தான்,
பூவினாவிற்குத் தன் விரலிலிருந்த மோதிரம் ரகுநந்தனுடையது என்பது ஞாபகம் வந்தது.
சட்டென்று தன் விரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்தவள்,
"நான் பரிசோதனைக் கூடத்துக்குப் போன கொஞ்ச நேரத்துலயே எனக்கு அவர் பேசுனது கேட்டுச்சு... ஆனா திரும்பிப் பார்க்கும்போது அவர நான் பார்க்கல... ரெண்டு தடவ இந்த மாதிரி நடந்தது. பிறகு எல்லாரும் புறப்பட்டோம்... அப்போ நான் தடுமாறி விழப் போனபோது, ரகுநந்தன் என்னை விழாமல் தடுத்தார். அதுக்கப்புறம் தான் அவரிடம் நான் பேசினேன். வீட்டிற்கு வந்த பிறகுதான் என் கோட் பாக்கெட்டில் இந்த மோதிரத்தைப் பார்த்தேன்... இது ரகுநந்தனோடதுன்னு சொன்னார்.
"ஹேய்! இத நான் முதல்முதலா உன்னைப் பார்த்தபோதே உன் விரலில் பார்த்தேன்." என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான் வேலு.
"நானும் உங்க விரலில் என்னிடமிருக்கும் அதே டிசைன் மோதிரத்தைப் பார்த்தேன்." என்றாள் பூவினா.
"இது வைதேகிக்காக ரகு வாங்கியது... உங்கிட்ட எப்படி வந்துச்சு" என்று பூவினாவிடம் கேட்டான் ஜெயராம்.
"அது உனக்கெப்படித் தெரியும்? " என்று வேலு ஜெயராமைக் கேட்க,
"அவங்க கல்யாண நிச்சயதார்த்தத்துக்காக ஒரே டிசைன்ல, ரகுவிற்கும், வைதேகிக்கும் மோதிரம் வாங்க நானும்தானே ரகு கூடப் போனேன்."
"நிச்சயதார்த்தமா?!!... வைதேகி யார் ஜெய்?" என்று டாக்டர்செந்தில் கேட்டதும், திருதிருவென முழிக்க ஆரம்பித்தான் ஜெயராம்.
வைதேகி யார்?
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments