வருவான்-17

 வருவான்-17


"வைதேகி யார் ஜெய்?" என்று டாக்டர் செந்தில், ஜெயராமிடம் கேட்க, ஜெயராம் திருதிருவென முழித்தான்...


"உங்களுக்கு வைதேகி யார்னேத் தெரியாதா டாக்டர்?" என்று பூவினா டாக்டர் செந்திலிடம் ஆச்சர்யமாகக் கேட்க,


'இவ இருக்காளே... வைதேகியை விடமாட்டா போல' என்று நினைத்தான் வேலு.


"தெரியலையே ம்மா..." என்று தன்னுடைய முன் மண்டையைச் சொரிந்தபடி யோசித்தார் டாக்டர் செந்தில்.


'இவருக்கு ஏன் முன் மண்டையில் சொட்டை விழுந்துடுச்சுன்னு எனக்கு இப்ப தான் புரியுது... கிட்டதட்ட 25 வருஷத்துக்கு மேல யோசிச்சிருக்கார் பாவம்' என்று ஆராய்ச்சியில் இறங்கிவிட்டான் விஜய்... 


"நிச்சயதார்த்தம் வரை போயிருக்காங்க... உங்களுக்கு எப்படி டாக்டர் தெரியாமப் போச்சு?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் வேலு. 


"நான்தான் ஏற்கனவே சொன்னேனே... ரகுவை எல்லோருக்குமே பிடிக்கும்... அதனாலயே, எனக்குத் தெரிஞ்சு எல்லா பொண்ணுங்ககிட்டயும் மரியாதையான தூரம் வச்சுதான் பழகுவான்... அவன் யாரையும் நெருங்க விட்டதில்லை... 


நாங்க கூட ரகுட்ட அடிக்கடி, "உனக்கு நாங்களா கல்யாணம் செஞ்சுவச்சாத்தான் உண்டு... தானாக வரும் பொண்ணையெல்லாம், நீ உனக்குத் தங்கை ஆக்கினால், கடைசிவரை கட்டப்பிரம்மச்சாரியாகத்தான் வாழப்போகிறாய்." என்று கூறிச் சிரிப்போம். அவனும் சேர்த்து சிரித்தான். பிறகு,



"எனக்கு வர வேண்டிய பொண்ணு, என்னை நல்லா புரிஞ்சுக்கனும் செந்தில்... என் திறமையையும் முகத்தையும் மட்டும் பார்த்து வரும் பொண்ணுக்கு... என் சமுதாய அக்கறை, என் வேலையில், எனக்கு இருக்கிற ஈடுபாடு இதெல்லாம் புரியலைனா, ரெண்டு பேருக்குமே கஷ்டம்." என்றான்.


"கல்யாணம்ங்கிறது, சின்ன சின்ன விஷயத்துல விட்டுக் கொடுக்கிறதுலதான் வேறூன்றி வாழவைக்கும். எல்லா விஷயத்திலும், நம்மைப் புரிஞ்சவங்களைத் தேடினா கடைசிவரை ஆஞ்சனேயராத்தான் இருக்கனும். புரியுதா?" என்று நான் கேட்டபோது, 


"அதான் நீயே சொல்லிட்டியே... எனக்கு நீங்க பார்த்து வச்சாதான் கல்யாணம்னு... பொண்ணு பாருங்க..." என்று கூறி சிரித்தான். இப்படியொரு நிலையில இந்த  வைதேகியை எப்படி ரகுவுக்குத் தெரிஞ்சிருக்கும்? " என்று முடித்தார் செந்தில்.


"இந்தப் பேச்சுவார்த்தையெல்லாம் நடக்கும்போது, ரகு, வைதேகியைச் சந்திக்கல செந்தில்." என்றான் ஜெயராம்.


"ஆயிரமிருந்தாலும் டாக்டரைப் பேர் சொல்லிக் கூப்பிடாதீர்கள் ஜெயராம்." என்று கூறினாள் பூவினா.


ஜெயராம் மீண்டும் திருதிருவென முழித்தான்.


"ப்ச்! அவன சுதந்திரமாகப் பேசவிடு வினி... பேச்சு சுவாரசியத்துலதான், அவன் நடந்ததைச் சொல்றான்னு உனக்குப் புரியலையா? " என்றான் வேலு நொந்த குரலில்.


"சாரி! சாரி! இனி அப்படிப் பண்ணல சரியா?" என்று மன்னிப்பு கேட்டாள் பூவினா. 


"சரி! சரி! எங்கேயோ ஆரம்பிச்சு, எங்கேயோ வந்துட்டோம்... இந்த ரகுநந்தனோட மோதிரம் சம்மந்தமா கண்டுபிடிக்க முடியுமான்னு பார்க்கலாம்." என்றாள் கிரேசா.


"ஓகே நமக்கு இருக்கும் ஒரே வழி இந்த மோதிரம் தான். இந்த மோதிரம் எப்படி உன்னிடம் வந்தது விபரமாகச் சொல்லு." என்று கேட்டான் வேலு.


"டிரைனிங் முடிஞ்சு கிளம்பும்போது எங்க புரபசர் கீழே விழுந்துட்டார்... அந்த அதிர்ச்சியில் எல்லோருமே சற்று பின்னாடி நகர்ந்தோம். அப்போ அங்கிருந்த அலமாரியில் நான் பின்பக்கமாகப் போயி முட்டிக்கிட்டேன். ஏதோ ஒன்று, என் கோட் பாக்கெட்டில் விழுந்தமாதிரி இருந்துச்சு. கையைக் கோட் பாக்கெட்டில் விடும்போது, எதிலயோ என் விரல் பட்டு, சுண்டி இழுக்கவும் மறுபடியும் தடுமாறி, பின்பக்கமாக விழப் போனபோது, யாரோ நான் விழுந்து விடாமல், பிடித்ததை உணர்ந்து பார்க்கும் போதுதான், ரகுநந்தனைப் பார்த்தேன்... அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு வரும்போது, மறுபடியும் அவரப் பார்க்கனும்னா எப்படிப் பார்க்கலாம்னு கேட்டேன்." என்று பூவினா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வள்ளி,


"நான் சொல்லலை? இவதான் ஒரண்டை இழுத்து விட்டிருப்பான்னு. அவனை எதுக்கு திரும்பவும் பார்க்கனும்னு சொன்னா? அதான் வந்துட்டான்... வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்திருப்பா..." என்று கூறிக் கொண்டிருந்த வள்ளியை இடைமறித்து,


"நான் ஒன்னும் முகவரி கொடுக்கல." என்ற பூவினாவிடம்,


"பின்னே எப்படி வந்தான்?" என்று வள்ளி கேட்க,


"அவர் ஆவியில்லையா பறந்து வந்திருப்பார்." என்ற விஜய்யை முறைத்த பூவினா,


"நான் மறுபடியும் பார்க்கனும்னு சொன்னதும், நீ நினைத்தால் போதும் வருவேன்னு சொன்னார்." என்ற பூவினாவிடம்,


"என்ன? நினைச்சா வந்துடுவாரா?" என்று கேட்டான் வேலு.


வேலுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததைப் பார்த்த பூவினா, 'இவன் ஒருத்தன்... நண்பனா பழகுறேன்னு சொன்னாலும் முறைப்பான்.' என்று நினைத்தவள், 'மேலும் தொடரலாமா?' என்பதுபோல் வேலுவைப் பார்க்க, 


'சொல்லு' என்பதுபோல் தலையசைத்தான் வேலு.


"அவர் சொன்ன மாதிரியே, நான் நினைத்ததும் வந்தார். அப்பதான் அவரோட மோதிரம் என் கோட் பாக்கெட்டில் இருக்குன்னும், அதுதான் என் வீட்டுக்கு வர்ற வழியை, அவருக்குக் காட்டுச்சுன்னும் சொன்னார்... அப்போ அதைக் கேட்டு நான் சிரித்தேன். ஒருவேளை அது உண்மையா இருக்குமோ?" என்று பூவினா கேட்க,


"அதான் உண்மை... சரி, அந்த மோதிரத்தை அவர்கிட்டயே கொடுத்து விட்டிருக்க வேண்டியதுதானே?" என்று கோபமாகக் கேட்டார் வள்ளி.


"இந்த மோதிரத்தைக் கழட்ட முடியல ம்மா."


"எங்கே விரலைக் காட்டு!" என்ற வள்ளி எவ்வளவு முயற்சி செய்தும், அந்த மோதிரத்தைக் கழட்ட முடியவில்லை.


"என்னங்க இது?" என்று ராஜனிடம் முறையிட்டார் வள்ளி.


ராஜனும் முயற்சி செய்து பார்த்தவர், யோசனையாகப் பூவினாவைப் பார்த்தார். 


"அந்த மோதிரத்துக்காகவா இங்கே வந்தார் ரகுநந்தன்? " என்று கேட்ட ராஜனிடம்,


"அது மட்டும் காரணமா இருக்காதுன்னு தோணுது அங்கிள்!." என்று கூறினான் வேலு.


"நீ வேற ஏன் ப்பா? மோதிரத்தைக் கொடுத்துட்டா பிரச்சனை தீர்ந்ததுன்னு நினைச்சேன்." என்று கவலையுடன் வள்ளி கூற,


"சுயநலமா யோசிக்காத வள்ளி! அவர் என்ன காரணத்துக்காக வந்திருந்தாலும், நம்மால முடிஞ்சத செய்யலாமே." என்றார் ராஜன்.


"இது வேண்டாத வேலை... என்னைப் பொறுத்தவரை, என் குடும்பம் நல்லா இருக்கனும் அவ்வளவுதான்." என்ற வள்ளியை சிரித்தபடி பார்த்தார் ராஜன். பிறகு வேலுவைப் பார்த்து,


"மிஸ்டர் சரவணவேலு உங்க கையில் போட்டிருக்கிற மோதிரம் அப்படியே பூவினா… இல்லையில்லை அந்த ரகுவோட மோதிரம் மாதிரியே இருக்கே!  எங்கே வாங்கினீங்க?" என்று கேட்டார் ராஜன். 


தன் விரலிலிருந்த மோதிரத்தைப் பார்த்தவன், "இது எங்க தாத்தா போட்டிருந்த மோதிரம்னு எங்கப்பா சொன்னார்." என்றான். 


"உங்க தாத்தாவை நாம பார்த்துப் பேசலாமா?" என்று கேட்டாள் பூவினா.


"அது ஏன் ஆவி, பேய், பிசாசு கூடவே பேச நினைக்கிற?" என்று கோபமாகக் கேட்டான் வேலு.


"என்னது உங்க தாத்தாவும் ஆவியா அலையிறாரா? " என்று அரண்டு போய்க் கேட்டாள் கிரேசா.


"உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்? எங்க தாத்தா உயிரோட இல்லைனு சொல்லவந்தேன்." என்றான் வேலு, கிரேசாவிடம்.


"ஒரே டிசைனில் மோதிரம் இருக்கிறது பெரிய விஷயமில்லைதான்… ஆனா நமக்கு இப்போதைக்கு இதைத்தவிர வேற வழி தெரியவில்லை வேலு. உங்க அம்மாகிட்ட பேசுவோம்... வேற ஏதாவது க்ளூ கிடைக்குமான்னு பார்ப்போம்." என்று கூறினார் ராஜன்.


புல்லட்டில் செல்லும் போதே நடந்தவைகளை சுருக்கமாக, தன் அம்மா ஷோபியாவிடம் கூறினான் வேலு.


வள்ளி, விஜய் தவிர அனைவரும் வேலுவின் அம்மா ஷோபியா  முன்னால் அமர்ந்து, அவர் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தனர்.



"இந்த மோதிரம் என் மாமனாருடையது. நான் இவனுக்குக் கர்ப்பமா இருந்தபோது, அவர்தான் எனக்குப் பையன் பிறப்பான் என்றார்... அவர் சொன்னது போலவே இவன் பிறந்தான். அதனால் மாமனார் பெயரான 'வேலு'வை என் கணவர் இவனுக்கு வச்சார். என் மாமனார், இவனுக்குச் சரவணன்னு பெர் வைக்கச் சொன்னதும், நாங்க, ரெண்டையும் சேர்த்து சரவணவேலுன்னு பெயர் வச்சோம்.  


என் பிறந்த வீட்டில் பிரசவம் முடிந்து மூன்று மாதம் கழித்து சரவணனுடன் இங்கு வந்தேன்… அப்போ என் மாமனார், சரவணாவைக் கையில் தூக்கிப் பார்த்ததும், என் வீட்டுக்காரரிடம், ‘இவன் பெரியவன் ஆனதும், இந்த மோதிரத்தை எப்பொழுதும் அவனைக் கையோடு போட்டுக்கொள்ளச் சொல்,’ என்று கூறி, தன் விரலிலிருந்த இந்த மோதிரத்தை கழட்டிக் கொடுத்தார். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். 


இப்போ இது விசயமா நீங்க பேச வர்றீங்கன்னு என் வீட்டுக்காரரிடம் ஃபோன் பண்ணிச் சொன்னேன். மேலும் எதாவது தெரிஞ்சுக்க விரும்பினா அவரிடம் பேசுங்க" என்று கூறி வேலுவின் அப்பாவிற்கு ஃபோன் செய்தார்.

உடனே ஃபோனை எடுத்த வேலுவின் அப்பா,


"அந்த மோதிரம் எங்க பரம்பரை மோதிரம் இல்ல. வேலு பிறப்பதற்கு பத்து நாள் முன்னாடிதான் எங்கப்பா அந்த மோதிரத்தைப் போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். எங்கே வாங்கினீங்க?ன்னு கேட்டதற்கு, அப்பா எதுவும் சொல்லவில்லை..." என்று கூறினார்.


"உங்களுக்கு ரகுநந்தனைத் தெரியுமா?" என்று கேட்டார் செந்தில்.


"இல்லை! எனக்குத் தெரியாது. என் மனைவி, வாட்ஸ் அப்ல அனுப்பிய ரகுநந்தன் ஃபோட்டோவை, இப்பத்தான் பார்த்தேன்… சாரி! அவர நான் எங்கேயும் பார்த்ததில்லை..."


"மோதிரம் சம்பந்தமாக வேறு யாருக்காவது தெரிய வாய்ப்பிருக்கா?"

என்று செந்தில் கேட்டார்.


"இல்லை டாக்டர்... எனக்கு அந்த மோதிரத்தை ரொம்பப் பிடிச்சிருந்தது. அதே மாதிரி எனக்கும் வாங்கலாம்னு நினைச்சு, இந்த மோதிரத்தை அப்பா எங்க வாங்கினார்?னு தெரிஞ்சுக்க கொஞ்ச நாள் அவருடைய நண்பர்களை சந்திச்சுக் கேட்டேன்… இங்குள்ள நகைக்கடையில் கூட விசாரித்தேன், ஆனா யாருக்குமே அப்பா இந்த மோதிரத்தை எங்கே வாங்கினார்னு தெரியல... மறுபடியும் எங்கப்பாகிட்ட கேட்டபோது, இந்த மோதிரம் என் பேரனுக்கு... என்று கூறி முடித்துவிட்டார்." என்றார் வேலுவின் அப்பா.


'மறுபடியும் ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கிறோம். எல்லா பக்கமும் அடைபடுதே?' என்று அனைவருமே கவலையுடன் அமர்ந்திருந்தபோது, 


வேலு, "எனக்கு ஒரு ஐடியா தோணுது. ஆனா அதப் பண்றதுக்கு உங்க வீட்ல எல்லோரும் சம்மதிக்கனும்." என்றான் ராஜனைப் பார்த்து.


'எனக்கு உங்கள் பொண்ண கட்டிவச்சுடுங்கன்னு சொல்லப் போறானா?' என்று நினைத்த ராஜன்,


"சொல்லுங்க வேலு... முடிஞ்சா செய்யலாம்." என்றார்.


"பூவினா நினைச்சா ரகு வருவார்ல? இன்னைக்கு ராத்திரி பூவினா ரகுநந்தனை நினைக்கட்டும்... அவர் வந்தா தான், என்ன நடந்துச்சுன்னு நமக்குத் தெரியும்... நாம எதுக்குத் தலையைச் சுத்தி மூக்கைத் தொட னும்? ரகுவிடமே கேட்டுவிடலாம்... ஆனா அதுக்கு நீங்க சம்மதிக்கனும்." என்று வேலு தயங்கியபடி கூற,


இந்த யோசனையைச் செயலாக்க அனைவருக்குமே பயமாக இருந்தது.


"நான் ரெடி! எனக்கு ரகுநந்தன் கிட்ட பயமில்லை... அவர் என்னை எதுவும் செய்யமாட்டார்." என்று கூறினாள் பூவினா.


"எனக்கென்னவோ ரொம்ப பயமாயிருக்கு. இதுவரை ரகுநந்தன் யார்னு நமக்குத் தெரியாது... அதனால அவர் அமைதியா இருந்திருக்கலாம்... இப்ப அவர் யார்னு? அதாவது அவர் உயிரோட இல்லைங்கிற விஷயம் நமக்குத் தெரிஞ்சிருச்சு. ஒருவேளை அவரோட சொந்த விஷயங்களை நாம தோண்டுறதை அவர் விரும்பலைனா? அந்தக் கோபத்தை நம்ம கிட்ட தானே காட்டுவார்." என்ற கிரேசாவின் கண்களில் பயம் ருத்ரதாண்டவமாடியது. 


'அடிப்பாவி கெடுத்துட்டியே...' என்று நினைத்த வேலுவிடம்,


"அவங்க சொல்றதுலயும் ஒரு நியாயமிருக்கு வேலு... இன்னைக்கு சூழ்நிலையில ரகு, என்ன நினைக்கிறார்னு தெரியாம, அவரப் பார்க்க நினைக்கிறது கொஞ்சம் ஆபத்தான விஷயம்தான்." என்றான் ஜெயராம்.


"ஜெய்! ரகு நம்ம நண்பன்!" என்றார் செந்தில் உணரச்சிவசப்பட்டு.


"ஆனா... ரகு விரும்பாத எதையும், நாம செஞ்சுடக்கூடாதேங்கிறதுதான் என் கவலை." என்றான் ஜெயராம். 


"எனக்கு ரகு மேல முழு நம்பிக்கை இருக்கு. நான் உனக்குத் துணையா வர்றேன் மா. பயப்படாதே." என்றார் செந்தில்.


"இதுவே வில்லங்கமா ஆயிடாம இருக்கனும்... ஏன் சொல்றேன்னா இதுவரை ரகு உங்களை வந்து பார்க்கல. ஏன்?" என்று செந்திலிடம், ஜெயராம் கேட்டான்.


"சும்மா பயமுறுத்தாதீங்க ஜெய்! இன்னைக்கு நான் ரகுநந்தனைப் பார்க்கிறேன்." என்றாள் பூவினா.


"கவலைப்படாதே! நாங்களும் உன்னுடன் இருப்போம்." என்றார் ராஜன்.


பூவினா எடுத்த முடிவு சரிதானா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும்?


அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...


💍💍💍💍💍💍💍💍💍



Post a Comment

0 Comments