வருவான் -18

 வருவான் -18


பூவினா, ரகுநந்தனை சந்திக்கத் தயாரானாள். 


வேலுவிற்கும், ராஜனுக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. 


"என் கண்பார்வை படும் தூரத்துலதான் நீ இருக்கனும் வினி. மறந்தும் ரொம்ப தூரம் போயிடாத... ரகு நல்ல நண்பனாகவே இருக்கட்டும்... அதுக்காக என்னை விட்டுத் தனியாப் போயிடாத... நீ ரகுமேல பிரியமா இருக்கிறதால பொறாமையில பேசுறேன்னு நினைக்காத... சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன். நான் சொல்றதையும் கொஞ்சம்  கேட்கலாம்." என்ற வேலுவிடம்,


"இதோட நூறு தடவை சொல்லிட்டீங்க... நானும் சரி!சரி! ன்னு ஒத்துக்கிட்டேன்." என்று பூவினா சிரித்தபடி கூற, 


அவளைப் பார்க்கும்போது வேலுவிற்கு மனம் கொஞ்சம் கலங்கியது…


'தெரிந்தே இவளை ஆபத்தான இடத்துக்கு அனுப்புறேனோ? சாதாரண மனிதனா இருந்தா என்னை மீறி இவளை நெருங்க முடியாது... என்னால இன்னுமே நம்பமுடியாத ஒரு இடத்துக்கு, எப்படி அனுப்பத் துணிஞ்சேன்?' என்று நினைத்தவனாகப் பூவினாவைப் பார்த்தான். 


அவள் என்னவோ, ரொம்ப நாளாகப் பார்க்காதத் தோழனைப் பார்க்கப் போவது போல சந்தோஷமாக இருந்தாள்.


'இவ புரிஞ்சுதான் இப்படி இருக்காளா? இல்லை விளையாட்டுப் பொண்ணா இருக்காளா?' என்று நினைத்த வேலு, 


'உயிரைக் கொடுத்தாவது இவளைக் காப்பாத்திடுவேன்.' என்று உறுதி எடுத்துக் கொண்டான்.


இரவு 8 மணியளவில் பூவினாவின் வீட்டில் அனைவரும் இருந்தனர்.


 ரகுநந்தனால், பூவினாவிற்கு ஆபத்து  வந்துவிடாது என்று இதுவரை இருந்த  நம்பிக்கை,  அனைவருக்குமே சுத்தமாக இல்லாமல், 'இந்த விஷப்பரிட்சை தேவையா?' என்று தோன்றியது. 


பயம் இருந்தாலும், 'ரகுநந்தனைப் பற்றித் தெரிந்துவிடுவது.' என்ற முடிவில் இருந்தது பூவினாவும், வேலுவும் மட்டுமே.


இரவு எட்டு பதினைந்து ஆனதும், பூவினா தன் விரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்தாள். மனதில் ரகுநந்தனை நினைத்து, 'உங்களை நான் பார்க்க வேண்டுமே' என்று நினைத்தாள். 


அனைவரும் மாடி பால்கனியில் நிற்க, பூவினாவும், வேலுவும் வீட்டு வாசலுக்கு வந்தனர். எப்பொழுதும் நிற்கும் இடத்தில்  ரகுநந்தன் நின்றிருந்தான்...



மற்றவர்களுக்குக் கலங்கலாகவும் பூவினாவிற்குத் தெளிவாகவும் தெரிந்தான். 


செந்தில், ரகுநந்தனைப் பார்த்ததும், 


"ரகு!..." என்று சப்தமாக அழைக்க,


பால்கனியை நிமிர்ந்து பார்த்தான் ரகுநந்தன். 


செந்தில் அழுததும், அவரையேப் பார்த்த ரகுநந்தன், "அழாதே செந்தில்" என்று அதட்ட, 


செந்தில் வேகமாகக் கீழே இறங்கினார். அவருடன் ஜெயராமும் வீட்டு வாசலை நோக்கி ஓடினான். 


பூவினா ரகுநந்தன் அருகில் செல்வதற்காகச் சாலையைக் கடக்கவும், ரகுநந்தன் நடக்கத் தொடங்கினான்.


பூவினா, வேலு, ஜெயராம், செந்தில் நால்வரும் வேகமாக ரகுநந்தனைப் பின்தொடரந்தனர். 


"ரகுநந்தன்! நில்லுங்க!" என்று பூவினா சப்தமாகக் கத்தினாள்.


திரும்பிப் பார்த்துவிட்டு நடந்து கொண்டிருந்த ரகுநந்தன், சட்டென்று காணாமல் போக, அனைவரும் திகைத்தனர்.


"ரகுநந்தன்! உங்களுக்கு உதவத்தான் வருகிறோம்… எங்கே போனீங்க?" என்று பூவினா மீண்டும் கத்த,


சட்டென்று அவள் முன் தோன்றிய ரகுநந்தன், "நீயும், வேலுவும் மட்டும் ஆஸ்பத்திரிக்கு வாங்க." என்று கூறி மறைந்தான். 

திடீரென்று பூவினாவின் முன் ரகுநந்தன் தோன்றியதிலேயே

பின்தொடர்ந்து வந்த அனைவருக்குமே தூக்கிவாறிப் போட, "வேண்டாம்!" என்று தடுத்தனர்.


ஆனால் வேலுவும், பூவினாவும், "போய்ப் பார்த்துவிட்டு வருகிறோம்." என்று கூறிவிட்டு, வேலுவின் புல்லட்டில் ஏறிச்சென்றனர். 


"எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசியிருக்க வேண்டியதுதானே? எதற்கு ஆஸ்பத்திரிக்குக் கூப்பிடுகிறார்? அதுவும் அவங்க ரெண்டு பேர மட்டும்?" என்று பயந்த அனைவரும், 


“இவங்க ரெண்டு பேரையும் தனியா விட வேண்டாம்.” என்று கூறிவிட்டு அனைவரும் செவ்ரோலேட் காரில் ஏறி, வேலுவின் புல்லட்டைச் சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தனர்.


ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்ததும் புல்லட் பஞ்ச்சர் ஆனது! பூவினா, வேலு இருவரும் இறங்கி நடந்தனர். 


இரவு நேர அரசு மருத்துவமனை. மனித நடமாட்டமே இல்லை… ஆங்காங்கே ஒருசில இடங்களில் மட்டும் பிரகாசமாக விளக்கு எரிந்தது. மற்ற இடங்களில் விளக்குகள், 'நாங்களும் இருக்கிறோம்' என்று பெயரளவில் அழுது வடிந்து கொண்டிருந்தது.


இருள்நிறைந்த விசாலமான வெற்றுவெளிப் பகுதிகளில் ஆங்காங்கே இருந்த மரங்களும் வினோதமான ஒலியை எழுப்பி பயத்தை உருவாக்க, சுற்றிலும் பார்வையை ஓட்டியவாறு பூவினா மெல்ல வேலுவை நெருங்கி, அவன் கைகளைப் பிடித்தாள். பயத்தில் பூவினாவின் கைகள் சில்லிட,  வேலுவின் கைகளை இறுகப் பற்றினாள். அவன் கைகளோ ஐஸ்கட்டியைப் போன்று சில்லிட்டிருந்தது. 


"எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு வேலு... திரும்பிப் போய் விடுவோம்? பகலில் வருவோம்." என்றாள். 


"பின்னே எப்படி என்னைப் பற்றித் தெரிந்து கொள்வாய்?" என்று கேட்டான்.


"உங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கவா இங்க வந்தேன்?" என்று கூறி விட்டுத் திரும்பிப் பார்த்த பூவினா, அரண்டு இரண்டடி தள்ளி நின்றாள். 


"ர ர ரகுநந்தன்! நீங்களா?! !! வ்வ்வேவேலு எங்க?" என்று கேட்டபடி சுற்றிலும் தேடினாள். 


இருட்டில் வேலு எங்கே? என்று தெரியவில்லை. பயத்தில் வியர்த்துக் கழுத்தெல்லாம் நனைய, 




"ரகுநந்தன்... " என்று திரும்பிப் பார்த்தவள் அதிர்ச்சியடைந்தாள். அவளருகில் யாருமே இல்லை!!! அரண்டு போனவள் மருத்துவமனை கட்டிடத்தை நோக்கி ஓடினாள்.


சட்டென்று அவளுக்கு எதிரே வந்து நின்ற ரகுநந்தன், "என்னுடன் பேசவந்துவிட்டு இங்க ஓடிவர்ற? அப்போ என்னைப் பார்க்க வரலையா?" என்று கேட்க,

"ரகுநந்தன் என்னை ஏன் பயமுறுத்துறீங்க?" என்று எச்சிலை முழுங்கக்கூட முடியாமல் பூவினா  தவிக்க, 


"நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்... நீதான் வித்யாசமா நடந்துக்குற." என்றான் ஒருமாதிரியான குரலில்.


"வேலு எங்கே?" என்று தைரியத்தை வரவழைத்துக் கேட்டாள்.


"எங்கிட்ட கேட்கிற? எனக்கு எப்படித் தெரியும்?" என்று சிரித்தபடி கேட்ட ரகுவிடம்,


"என் கூட வந்தார்... அவர் கையைப் பிடிக்கிறதா நினைச்சுத்தான், உங்க கையைப் பிடிச்சேன்.... நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கத்தான். ..." என்று பூவினா பேசிக் கொண்டிருக்கும் போதே,


"ஏய்! என்ன இங்கே நின்னு தனியா பேசிக்கிட்டு இருக்க? நான் கூப்பிடக் கூப்பிட இந்தப் பக்கம் ஏன் ஓடிவந்த?" என்று வேலு கேட்டதும், அவனைப் பார்த்தவள் ஓடி வந்து வேலுவை  இறுக்கி அணைத்துக் கொண்டாள்.


"எங்கே போனீங்க? என்னை மட்டும் தனியா விட்டுட்டு..." என்று பயந்து  கேட்டவளை, 


"லூசாடி நீ? என் கூட நடந்துக்கிட்டிருந்தவள்,  திடீர்னு இந்தப் பக்கமா ஓடிவந்துட்டு, நான் எங்கே போனேன்னு கேட்கிற? உன்னை விட்டுட்டுப் போவேனா?" என்று கேட்டவன், பூவினாவை, பயப்படாதே நான் இருக்கிறேன்.என்பது போல  இதமாக அணைத்தபோது, 


"நிஜமாவே நீ அவளைவிட்டுப் போக மாட்ட... ஆனா அவ உன்னை விட்டுப் போயிட்டா என்ன செய்வ? " என்ற ஆண்குரல் கேட்டுத் திரும்பியவன், கையெட்டும் தூரத்தில் ரகுநந்தன் நடந்து செல்வதைப் பார்த்தான்.


"நில்லு! உனக்காகத்தான் இங்கே வந்தோம்... ரகு நில்லு!" என்று ரகுவை அழைத்தபடி சென்றவனுக்கு, உள்ளுணர்வு எச்சரித்த பிறகுதான் பூவினா அவனருகில் இல்லாததை உணர்ந்து, அதிர்ச்சியடைந்தான்.


"வினி!.... வினி!...எங்க இருக்க?.... பயப்படாதே... நான் இருக்கேன்ல.... வா வினி! என் கிட்ட வா!”  என்று கத்தியவன் கண்களுக்கு, பூவினா தூரத்தில் ஓடுவது தெரிய, அவளை நோக்கி ஓடினான். 




     ஓடிக் கொண்டிந்தவளின் கையைப் பிடித்துக் கொண்டு ரகுநந்தன் பிரேத பரிசோதனைக் கூடத்தை நோக்கி ஓடினான்.


"நில்லுங்க ரகுநந்தன்! வேலு வந்துடட்டும்." என்று பூவினா பதற,


"ஏன் என்கூட வரமாட்டியா?" என்று கேட்டான் ரகுநந்தன்.


"என்னை ஏன் தனியா இழுத்துக்கிட்டுப் போறீங்க? நான் வேலு வராம தனியா வரமாட்டேன்." என்று கூறி வம்படியாக நின்றுகொண்டாள். 


"அவன் யார் உனக்கு?" என்று கோபமாகக் கேட்டான் ரகுநந்தன.


"அவரத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்."


"நல்லா யோசி! போலிஸ்க்காரனை கட்டிக்கிட்டு உன்னால் நிம்மதியா வாழ முடியுமா? அவன் உயிருக்கு உத்தரவாதம் இருக்கா? தேவையில்லாமல் உன் மனசக் கெடுத்துக்காத... போலீஸ்க்காரனுக்கு காதல்உணர்ச்சியெல்லாம் ரொம்ப நாளைக்கு இருக்காது... அதிலும் வேலு, அவனுடைய வேலையை உயிராய் நினைக்கிறவன்... இவன மாதிரி ஆட்கள் எல்லாம், சட்டத்துக்கு முன்னாடி பொண்டாட்டி பிள்ளைன்னெல்லாம் பார்க்கமாட்டாங்க... உன் மேல இருக்கற ஈர்ப்பு போனதும், நீயும் வீட்ல இருக்கிற ஜடப்பொருள் மாதிரிதான்... " என்றவனை இடைமறித்து,


"ரகுநந்தன்! உங்களுக்கு என்ன ஆச்சு? ஒரு நல்ல ஃப்ரண்ட் பேசுற மாதிரி இல்லை, நீங்க பேசுறது. எப்ப என் மனசுக்குள்ள வேலு வந்துட்டாரோ, இனி நான், அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்." என்றாள் பிடிவாதமாக,


"இப்ப இப்படித்தான் சொல்வ... கல்யாணம்ங்கிறது சாதாரண விஷயமில்ல... ஒரு தடவை அந்த பந்தத்துக்குள்ள போயிட்டா திரும்பி வரக் கூடாது... அது ஒருவழிப் பாதை... நல்லா யோசி… உன் தோழி கிரேசா சொன்னது ஞாபகமிருக்கா?... நம்மைப் போன்றவர்களுக்குப் போலீஸ்க்காரரைத் திருமணம் செய்றதெல்லாம் சரிப்படாதுன்னு சொன்னாளே... " என்று கூறியபடி பூவினாவின் கண்களைக் கூர்ந்து பார்க்க,


"அது அவ எண்ணம்... "


"ஆனா அவ அதையே திரும்பத் திரும்பச் சொல்லும்போது உனக்கு மனசு மாறும்." 


"எனக்கு மாறாது... ஒரு தடவ நெனச்சுட்டேன்னா கடைசி வரை அவன்தான்..."


"அவன் போலீஸ்காரன், குடிப்பழக்கம் இருக்கும், புகை பிடிப்பான்! இன்னும் ஏதேதோ... குற்றவாளிகளுடன் பழகுறவன்கிட்ட நீ மிருதுவான உறவை எதிர்பார்க்க முடியாது. முரட்டுத்தனமாகத் தானிருப்பான். சீக்கிரமே உன்னைக் கைநீட்டி அடிக்கக் கூட செய்யலாம்..."


"நிறுத்துங்க... உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன்... ஏன் இப்படி பேசுறீங்க... நீங்க இப்படியெல்லாம் சொல்லிட்டா நான் அவனை விட்டு விலகிடுவேனா? அவன் எப்படி இருந்தாலும் எனக்காக மாற்றிக்கொள்ளுவான். நானும் அவனை அனுசரித்து, புரிஞ்சு நடந்துக்குவேன்."


"பெரும்பாலும் கெட்டவங்க நிறைந்த உலகம் இது... வேலு மாதிரி நேர்மையான போலீஸ்க்காரனை வாழவிடமாட்டாங்க....  அவன் உயிருக்கு உத்தரவாதம் இருக்கா?"


"அதுக்காக?!!!.... ஒருநாள் வாழ்ந்தாலும் அவன் கூடத்தான் வாழுவேன். போதுமா?"


"நல்லா யோசி! உனக்கு நல்லது நெனச்சுத்தான் பேசுறேன். புரிஞ்சுக்க"


"உங்களுக்குத்தான் புரியல ரகுநந்தன்... உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் காரணங்கள் இருக்காது... காரணங்கள் இருக்குமிடத்தில், உண்மையான அன்பு இருக்காது."


"நான் அவனப் பற்றிச் சொல்றதால நீ வீம்புக்கு இப்படிச் சொல்ற... இதையே உன் தோழி யாராவது சொன்னா ஒத்துக்குவ."


"ஒரு உண்மை சொல்லவா?... உங்களைவிட எனக்கு நெருக்கமான உயிர்த்தோழி யாருமில்லை... நீங்க சொல்லிக் கேட்காத ஒரு விஷயத்தை வேற யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்." என்றவளைக் கண்கலங்க பார்த்தான்.


"என் மேல இவ்வளவு பிரியம் வைக்காதே பூவினா. இந்த உருவம் அழிந்துபோய்விட்டது." என்றான் தழுதழுத்த குரலில்.


"அப்படியெல்லாம் சொல்லாதீங்க ரகுநந்தன்." என்று அவள் பதறவே, 


"எனக்காக நீ பதறுவது பிடிச்சிருக்கு... எனக்காக, நான் யார்னு தெரிஞ்சும் என்னைப் பார்க்க வந்திருக்க... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னை, நான்  பயமுறுத்தியும் என்மேல அன்பு காட்டுற... உன்னைப் போல ஒருபெண்ணின் காதல் கிடைக்க வேலு குடுத்துவச்சிருக்கான்... உன்னை மாதிரி ஒரு சினேகிதி  நான் உயிரோட இருக்கும்போது எனக்குக் கிடைக்கல..." என்றவனின் கண்களிலிருந்த வலியைப் பார்த்தவள், 


"ஏன் உங்க வைதேகி இல்லையா?" என்று கேட்டவளைப் பார்த்தான்.


"சரி! வேலு வந்துடுவான். உன் விரலிலிருக்கும் என் மோதிரத்தைக் கொடு." என்று ரகுநந்தன் கூறியதும்,


 பூவினாவின் விரலில் இருந்த மோதிரம் ஈஸியாகக் கழண்டு வந்தது. ஆச்சர்யப்பட்டவள், மோதிரத்தை ரகுநந்தனிடம் கொடுக்க, 


அவன் அந்த மோதிரத்தைச் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த வேலுவை நோக்கி எறிய, வேலு அதைப் பிடித்தான்.


"வேலு! இந்த மோதிரம் வைதேகிக்குச் சொந்தமானது... நீதான் வைதேகிக்கு..." என்று கூறி முடிக்காமலேயே, ரகுநந்தன் பூவினாவிற்கு டாட்டா காட்டியவாறே பின்னோக்கி நகர, 


"ரகுநந்தன்! என்ன சொல்றிங்க? முழுசா சொல்லுங்க" என்று பதற,


"நீ இப்ப கேட்டக் கேள்விக்கான விடை வேலுவின் தாத்தா எழுதிய டைரியில் இருக்கும்…” என்று கூறும்போதே மறைந்து விட்டான்.


பூவினாவிடமிருந்த மோதிரத்தை, வேலுவிடம்,  ரகுநந்தன் ஏன் கொடுத்தான்?


வேலுவின் தாத்தா டைரியில் என்ன  இருக்கிறது? 


  அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம். . . 


         💍💍💍💍💍💍💍💍💍








Post a Comment

0 Comments