வருவான்-19

 வருவான்-19


"வேலுவின் தாத்தா டைரியில் பூவினா கேட்ட கேள்விக்கான பதில் இருக்கிறது." என்று கூறிவிட்டு மறைந்து விட்டார் ரகுநந்தன்.


வேலு ஓடிவந்து பூவினாவின் அருகில் நின்றான். அவள் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளைப் பார்த்தவன்,


"என்னாச்சு வினி? ரகுநந்தன் எங்கிட்ட மோதிரத்தை குடுத்துட்டார்?!! அதை எடுத்துக்கிட்டு போயிடுவார்னு நினைச்சேன்... அதை ஏன் என் கையில் கொடுத்தார்?... உங்கிட்ட ஏதாவது சொன்னாரா?" என்று கேட்டான்.


"எனக்கும் ஒன்னும் புரியல வேலு... உன்னோட நான் சந்தோஷமா வாழ முடி..." என்று 'வாழ முடியாது ன்னு ரகுநந்தன் சொன்னார் னு' கூற வந்த பூவினா, தான் பேசுவதை நிறுத்திவிட்டு, எதையோ யோசித்தவள்,


"நீங்க என்னை விரும்புறீங்களா?" என்று கேட்டாள்.


"ஹேய்! என்னடி? இங்கே வந்து இப்படி கேட்கிற? நான், ரகுநந்தன் என்ன சொன்னார்?னு கேட்டேன்." என்று வேலு கேட்டதும்,


"முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..." என்றாள் தவிப்பாக.


அவளுடைய தவிப்பை பார்த்தவன், 'போகிற போக்கில் வில்லங்கமா எதையும் சொல்லிட்டானா அந்த ரகு?' என்று நினைத்து,


"உன்னைத்தான் நான் விரும்புறேன்..." என்றான் அழுத்தமாக


"என்னைத்தானே கல்யாணமும் பண்ணிப்பீங்க?"


"பின்னே உங்க ஆயாவையா கல்யாணம் பண்ணிக்குவேன்? இதெல்லாம் ஒரு கேள்வியா? என்னாச்சு உனக்கு? உன் நண்பன் பெருசா கொழுத்திப் போட்டுட்டுபீ போயிட்டான் போலயே?" என்றான் வேலு கவலையுடன்.


பூவினா ஒன்றும் சொல்லாமல் மருத்துவமனை வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.


"என்ன பிரச்சனை வினி? எதுவாக இருந்தாலும் சொல்லு... நான் உன் பக்கம்தானிருப்பேன்." என்றான் வேலு.


வேலுவைத் திரும்பிப் பார்த்த பூவினா, எதையோ சொல்ல வாயெடுத்தவள் மறுபடியும் அமைதியாக,


"ஏய்! எதையோ சொல்ல வந்துட்டு சொல்லாம வர்ற?.... என்னென்னவோ கேட்கிற?" என்றவன்... "என் தலையெழுத்து அரசு மருத்துவமனையில் வச்சு, உன் மனசை நானும். என் மனசை நீயும் தெரிஞ்சுக்கிட்டோம்... என்னதான் நினைக்கிற? அப்படி என்ன சொல்லிட்டான் உன் உயிர்ர்ர் நண்பன்." என்று கடுப்பான குரலில் கேட்டான் வேலு.


"அவர் ஏன் திட்டுறீங்க? அவரே பாவம்."


"அவன் பாவமா? எதையோ கொழுத்தி போட்டுட்டுப் போயிருக்கான்... அது பத்தாதுன்னு உன்னிடம் இருந்த மோதிரத்தை என்னிடம் குடுத்துட்டுப் போயிட்டான்..."


"அவர் ஒன்றும் கொழுத்திப் போடல... எனக்குத்தான் குழப்பமா இருக்கு." 

"அதுதான் என்ன?" என்றவனை யோசனையாகத் திரும்பிப் பார்த்தாள். அதற்குள் பூவினாவின் அப்பா, ஜெயராம், செந்தில், கிரேசா அனைவரும் இவர்கள் இருவரையும் நெருங்கி விட்டனர்.


"எங்கே ரகுநந்தன்? அவர் என்ன சொன்னார்?" என்று அனைவருமே ஒரே குரலில் கேட்க,


"சொன்னான் சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு." என்றான் வேலு கடுப்பாக.


அனைவரும் திகைக்க,


"என்ன வேலு ஒரு மாதிரி பேசுற?" என்று கேட்ட ஜெயராமிடம்,


"பின்னே? அவ கையிலிருந்த மோதிரத்தை வாங்கி, எங்கிட்ட கொடுத்துட்டான். அவகிட்ட எதையோ போட்டுக் கொடுத்துட்டு வேற போயிட்டான்... இவ, அது என்னன்னு சொல்லாம, என் கழுத்தை அறுக்கிறா." என்றான் நொந்து போய்.


'உன்மேல் இருக்கும் ஈர்ப்பு குறைந்துவிடும்' என்று ரகுநந்தன் கூறியது அசரீரி போல, பூவினாவின் காதுக்குள் கேட்டது. 


"என்னம்மா சொன்னார்? சொன்னா தானே தெரியும்?" என்று கேட்டார் ராஜன்.


அவள் கண்கள் கலங்க தன் அப்பாவைப் பார்த்தாள். 'அவள் மனம் கலங்கும்படி எதையோ கூறியிருப்பாரோ?' என்று ராஜனுக்கு தோன்ற, 


"வாங்க வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம்." என்று கூறி அனைவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.


வரும் வழியெல்லாம் கிரேசா, பூவினாவைத் திரும்பிப் பார்ப்பதும், பிறகு ஜன்னலுக்கு வெளியே பார்ப்பதுமாக வந்தாள். யாருமே எதுவும் கேட்காமல் பூவினா முகத்தைப் பாவமாகப் பார்த்தனர்.


வீட்டு வாசலில் விஜய்யும், வள்ளியும் இருப்பு கொள்ளாமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தவர்கள், செவரலெட் காரைப் பார்த்ததும் நிம்மதியாக மூச்சு விட்டனர். கார் நிற்கும்முன் ஓடிவந்து பூவினாவை பார்த்த வள்ளி,


"மோதிரத்தை கொடுத்துட்டியாடா? உனக்கு ஒன்னும் இல்லையே? பயத்தில் உயிரே போயிடுச்சு டா..." என்று கூறி காரிலிருந்து இறங்கியவளை இறுக அணைத்து முத்தமிட்டார். 


விஜய்யும் ஓடிவந்து பூவினாவைக் கட்டிக் கொண்டான். அவன் கண்களிலும் நிம்மதி இருப்பதைப் பார்த்தவள், வீட்டிற்குள் வர,


"எல்லோரும் கொஞ்சம் நில்லுங்க இதோ வர்றேன்." என்று கூறி விட்டு, வள்ளி உள்ளே போயி ஆரத்தி கரைத்து எடுத்து வந்து, எல்லோரையும் நிற்க வைத்து ஆரத்தி சுற்றிவிட்டு,


"உள்ள போங்க." என்றார். 


ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்திருந்த பூவினாவிற்கும், ஜெயராம் அருகில் அமர்ந்திருந்த வேலுவிற்கும், பூஜையறையிலிருந்து எடுத்து வந்த திருநீரை பூசிவிட்டு, பூவினாவின் அருகிலேயே அமர்ந்து கொண்டார் வள்ளி.


'உன்னைப் போல அன்பான சிநேகிதி நான் உயிருடன் இருக்கும் வரை எனக்குக் கிடைக்கவில்லை.' என்று ரகுநந்தன் கண்கலங்க சொன்னது ஞாபகம் வர, தன் மேல் தன்னுடைய குடும்பமே அன்பை போழிவதை பார்த்தாள்.



'எனக்காவது அன்பு காட்ட என் குடும்பம் இருக்கிறது. ஆனால் இறந்தபிறகும் அன்புக்காக ஏங்குகிறாரே ரகுநந்தன். அவருடைய உண்மையான தோழியாக, அவருடைய விருப்பத்தை நிறைவேத்துவதுதானே, அவர் என்மேல் வைத்த நம்பிக்கையைக் காப்பாத்துவதாகும்?... அவர் விருப்பத்தை நிறைவேத்தலைனா, நான் துரோகியாகிவிடுவேன்... நான் என் காதலை இழந்தாலும் பரவாயில்லை... ரகுநந்தன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.' என்று முடிவெடுத்தவளுக்கு ஒரு நப்பாசை இருந்தது. 


'ரகுநந்தன் என் காதலைப் பிரிப்பாரா?... ஒருவேளை நானாக, வேலுவை விட்டு விலகிவிடனும்னுதான் என்னென்னவோ காரணங்கள் சொன்னாரோ?' என்று குழம்பித் தவித்தவள், இறுதியாக, 


'ரகுநந்தனுக்கு உதவுவதுதான் சரி.' என்ற முடிவுக்கு வந்தாள். 


அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராஜன்,


"எம் பொண்ணு நம்மகிட்ட சொல்லிடலாம்னு முடிவெடுத்துட்டா." என்று கூறிச் சிரித்தார். 


"பெரிய ஆராய்ச்சி! இப்படி அடிக்கடி நடக்குமோ வேலு?" என்று வேலுவின் காதைக் கடித்தான் ஜெயராம்.


"நீயுமா?" என்பது போலப் பார்த்தான் வேலு.


"எங்கிட்ட இருந்த மோதிரத்தை கழட்டி, வேலுவிடம் கொடுத்து விட்டு, இந்த மோதிரம் வைதேகியோடது, நீதான் வைதேகிக்கு..." என்று ஏதோ சொல்ல வந்தார் ரகுநந்தன்.


"ப்ச் இதுதான் எனக்குத்

 தெரியுமே! " என்றவனை வலியுடன் கூடிய பார்வை பார்த்தாள் பூவினா.


'இவ ஏன் இந்த மாதிரி பார்த்து வைக்கிறா?' என்று நினைத்தான் வேலு.


"எனக்கு அவர் சொன்னது புரியலைனு சொன்னேன்.... என்றவள் மீண்டும் வேலுவை பார்க்க, 


'ஏதோ வில்லங்கம் வரப்போகுதோ?!!' என்று பயந்தவன், கண்களைக் கூட இமைக்காமல் பூவினாவைப் பார்க்க,


"வேலுவோட தாத்தா டைரியில் பதில் இருக்குன்னு சொன்னார்."


"ஃபூ இவ்வளவு தானா? இதுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்த?" என்ற வேலுவை, 


மீண்டும் பூவினா அதே பார்வை பார்த்து வைக்க,


'இவ மண்டைக்குள்ள என்ன இருக்கு?' என்று நினைத்தவன் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.


"ஓகே அங்கிள் நாங்க வீட்டுக்குப் புறப்படுறோம்." என்று கூறி விட்டு எழுந்தவனிடம், 


"உங்க தாத்தா டைரியை எடுத்து வைங்க வேலு. நாங்க அங்கே வர்றோம்." என்று கூறினார்கள் ராஜனும், செந்திலும்.


"சரி!" என்று கூறிப் புறப்பட்டவன், பூவினாவிடம் வந்து,


"நீ எதைப் போட்டுக் குழப்பிக்கிறன்னு தெரியல... நிம்மதியாத் தூங்கு... நாளைக்குப் பேசிக்கலாம்." என்று கூறி விட்டு, யாரும் அறியாவண்ணம் கண்ணடித்துவிட்டுச் சென்றான்.


வேலுவின் புல்லட் போனபிறகும், பூவினா ரோட்டைப் பார்த்து, டாட்டா காட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த வள்ளி,


"இன்னும் அங்கே என்ன பண்ணிகிட்டு இருக்க? இப்பத்தான் ஒரு ரகுநந்தனை வழியனுப்பிட்டு வந்திருக்கோம்... இப்ப வெறும் காத்துக்கு டாட்டா காட்டி, இன்னொரு ரகுநந்தனை கூட்டிட்டு வந்துடாத உள்ளே வா!" என்று அதட்டினார், பூவினா வீட்டினுள் வந்ததும், கதவைப் பூட்டினார்.


வீட்டிற்குள் வந்ததுமே வேலு தன்னுடைய அம்மாவிடம்,


"அம்மா! தாத்தாவோட டைரி எங்கே இருக்கும்?":என்று கேட்டவாறு, முன்பு தாத்தா இருந்த அறைக்குச் சென்றவனிடம், 


"தாத்தா டைரியா? அப்படி எதுவும் இல்லையேடா! என்ற அம்மாவின் குரல் தடுத்து நிறுத்தியது.


"என்னம்மா சொல்றீங்க?"


"நீ டைரி எழுதுறியா?"


"இல்லை!"


"உன் தாத்தா மட்டும் எப்படி எழுதுவார்?"


"அம்மா, அம்மா என் செல்ல அம்மா ல்ல? கொஞ்சம் யோசிச்சு சொல்லும்மா"



"எனக்குத் தெரிஞ்சு, நம்ம வீட்ல டைரி வச்சுக்கிற பழக்கமே, யாருக்கும் கிடையாது." என்று அம்மா கூறினாலும்,


தாத்தாவின் அறை முழுவதும் அலசியவனுக்கு, டைரியின் அட்டை கூடக் கிடைக்கவில்லை.


 

'பூவினா சும்மா சொல்லியிருப்பானோ?' என்று நினைத்தவன்,


'பூவினா எதையோ மறைக்கிறான்னு தெரியுது...ஆனா இல்லாத ஒன்றை சொல்வாளா? ரகுநந்தன் மேல் பிரியம் வைத்திருப்பவள், அவனுக்காகவாவது பொய் சொல்லமாட்டா... ஆனா தாத்தாவுக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லைங்கிறாங்களே அம்மா' என்று நினைத்துக் குழம்பியபடியே தூங்கிப் போனான்.


ஆனால் பூவினாவிற்குத் தூக்கமே வரவில்லை.


காலையில் எழுந்ததும் பூவினா வேலுவிற்கு ஃபோன் செய்து, 


"உங்க தாத்தா டைரியில் என்ன எழுதியிருக்கிறாங்க?" என்று கேட்டாள்.


"எங்க தாத்தாவுக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லையாம் அம்மா சொல்றாங்க.... நானும் வீடு முழுதும் தேடி பார்த்துட்டேன். பரண்ல கூட ஏறிப் பார்த்துட்டேன். கிடைக்கல வினி... ரகு, எங்க தாத்தாவோட டைரின்னுதான் சொன்னாரா?" என்று மீண்டும் கேட்டான் வேலு.


"ஆமா! அது மறக்கக்கூடிய வார்த்தைகள் இல்லை." என்றாள் சோகமாக.


'இவ வேற நெத்துலயிருந்தே வயலின் வாசிக்கிறா... ஏன்னு தான் புரிய மாட்டேங்குது. ஒருவேளை, ரகு அவளிடமிருந்து மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்ததை நினைத்துக் கஷ்டப் படுறாளோ? ' என்று நினைத்துக் கொண்டிருந்தவனிடம்,


"நான் பேசுறது காதுல கேட்குதா இல்லையா?" என்று கத்திக்கொண்டிருந்தாள் பூவினா.


"ம்ம் கேட்குது சொல்லு."


"நீங்க உங்க அப்பாகிட்ட கேட்டுப் பாருங்க." என்றாள். 


வேலுவும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு அப்பாவிடம் கேட்க, 


அவரும், அம்மா சொன்னதையேத்தான் சொன்னார். 


'இது என்ன புது குழப்பம்?' என்று வேலு நினைத்துக் கொண்டிருந்தபோது, 


பூவினா, வேலுவின் அப்பாவிடம்,


"தாத்தா எந்தப் பொருளையாவது, மிகவும் பத்திரப்படுத்தி யிருக்காங்களா? பத்திரமாக அவர் வைக்கும் இடம் தெரியுமா? " என்று கேட்டாள். 


சாதரணமா எல்லாரையும் போலத்தான், வீட்டுப் பத்திரங்கள். குடும்ப நகைகளை, லாக்கரில் வைத்தார். அப்புறம் பழைய ரூபாய், காசுகள் சேகரிச்சார், அவங்க தாத்தா காலத்திலிருந்து எடுத்த, ஃபோட்டோக்களைப் பத்திரப்படுத்தினார்... அவரோட தாத்தா, அப்பா, அம்மா உபயோகப் படுத்திய மூக்கு கண்ணாடி, கைகடிகாரம், புத்தகங்கள், வளையல், அந்த மாதிரி சில பொருட்கள் பத்திரப்படுத்தியிருந்தார்." என்றார் வேலுவின் அப்பா.


"அதெல்லாம் எங்கே இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமாப்பா?" என்று கேட்டான் வேலு.


"தெரியும்... ஆனா அவருக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லையே டா..."


"நீங்க தாத்தா சேகரித்த பொருட்கள் எங்கே இருக்குன்னு சொல்லுங்களேன்." என்று கேட்டான்.


"சரி! கொஞ்ச நேரத்துல எல்லா விபரங்களையும், உன் மெயிலுக்கு அனுப்புறேன்." என்று கூறி விட்டு ஃபோனை வைத்து விட்டார். 


"பரவாயில்லை உங்கப்பா புத்திசாலித்தனம், உங்கிட்டயும் இருக்கு ஒத்துக்கிறேன்." என்று கூறி சிரித்தான் வேலு.


"என்னைக் கிண்டல் பண்றது இருக்கட்டும், உங்க தாத்தாவோட டைரியைக் கண்டுபிடிங்க... அதுல ஏதோ ரொம்ப முக்கியமான விஷயம் இருக்கணும்... இல்லைனா பத்திரப்படுத்தி வச்சிருக்க மாட்டார்." என்று கூறினாள் பூவினா. 


"டைரியை, அவர் உபயோகப் படுத்திய டேபிள், அலமாரி மரபீரோ இதுல தான வச்சிருப்பார்னு நெனச்சு, நான் அங்கேயே தேடினேன். அந்த டைரியை இவ்வளவு பாதுகாப்பா வச்சிருப்பார்னு நினைக்கல. ம்ம் அப்பா மெயில் அனுப்பிட்டார். டைரி எடுத்துட்டு ஃபோன் பண்றேன்."


"நான் அங்கே வரலாமா?" என்று தயங்கியபடி கேட்டாள் பூவினா. 


"இதென்ன கேள்வி? வா!" என்று கூறி விட்டு மெயிலை திறந்து, அதில் அப்பா அனுப்பிய தகவல்களை சேமித்துக் கொண்டான்.


அம்மாவை வங்கியிலிருக்கும் லாக்கரில், டைரியைத் தேடுமாறு கூறி அனுப்பிவிட்டு, வீட்டின் ஸ்டோர் ரூமிற்கு சென்றான். 


அங்கே இருந்த அலமாரியில் தாத்தா சேகரித்த பொருட்கள் இருந்தது. தேடினான்... டைரி இல்லை... பழைய டிரங்க் பெட்டியிலும் இல்லை. அம்மாவிற்கு ஃபோன் பண்ணும்போது, பூவினா, கிரேசா, விஐய் முவரும் வந்தனர்.


"அவ மட்டும் வர்றான்னு நினைச்சேன், கும்பலா வர்றா?!!' என்று நினைத்தவன்,


"இன்னும் கிடைக்கல. ஏன் எல்லோரையும் அலையவிடுற?" என்று பூவினாவிடம் கேட்டான் வேலு. 


"என்னை மட்டும் தனியா வெளியே விடமாட்டாங்க."


"ஆமா! ஆமா! ஆவியோட தனியா பேசவிடு வாங்க. ஒரு அப்பாவி மனுஷன் வீட்டுக்குத் தனியா விடமாட்டாங்க." என்று கிண்டலடித்தவனை,


"யார் அப்பாவி? நீங்களா?" என்று பூவினா, திருப்பிக் கிண்டல் செய்யவும்


"சரி! டைரியை தேடுவோமா? " என்று கேட்டாள் கிரேசா.


"உங்கப்பா பிரேக் இன்ஸ்பெக்டரா கிரேசா?" என்று வேலு கேட்டதும், அவன் என்ன நினைத்துக் கேட்கிறான் என்பது புரிந்த கிரேசா,


"எங்கப்பா பிரேக் இன்ஸ்பெக்டர் இல்ல. பிரேக் கைக் கண்டுபிடிச்சதே எங்க முன்னோர்தான்."


"நல்லாத் தெரியுது." என்று கூறியவனிடம் எங்கெல்லாம் தேடினான் என்பதைக் கேட்டார்கள்.


சிறிது நேரத்தில் ஷோபியா ஃபோன் செய்து லாக்கரில் டைரி இல்லை என்று கூறினார்.


"வாங்க! புக் ஷெல்ஃப் லத் தேடிப்பார்ப்போம்... அங்கே இருக்க வாய்ப்பில்லை... அடிக்கடி நான் புக் எடுத்திருக்கேன். இதுவரை பார்த்ததில்லை. இருந்தாலும் பார்ப்போம்." என்று கூறி, படிக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான்.


அங்கே ஒரு சுவர்முழுவதும் புத்தக அலமாரியாக இருந்ததைப் பார்த்த விஜய்,


"இவ்வளவு புத்தகமா? நிஜமாவே இதெல்லாம் படிக்கவா? இல்லை அலங்காரத்துக்கா?" என்று கேட்டான்.


"இதில் உள்ள எல்லா புக்ஸ்ஸையும், எல்லோரும் படித்ததில்லை... அவக்கவங்களுக்குத் தேவையான புக்ஸ் எடுத்துப் படிப்போம்." என்று சிரித்தான்.


"இதுல தேடுறதுக்குள்ள விடிஞ்சுடும்." என்றான் விஜய்.


அப்பொழுது அங்கே ஜெயராமும், செந்திலும் வந்தனர்.


"எல்லாபுக்ஸையும் ஏன் பார்க்கனும்? நீங்க தானே சொன்னீங்க அவக்கவங்களுக்குப் பிடிச்ச புத்தகத்தை எடுத்துப் படிப்போம்னு. அப்போ உங்க தாத்தா விரும்புற புத்தகத்தைப் பார்ப்போம்." என்று பூவினா கூற, 


அனைவருக்கும் தாத்தா உபயோகப் படுத்திய பகுதியில் தேடினர். 


ஏதோ உள்ளுணர்வு, வேலு படிக்கும் பகுதிக்குப் போகச்சொல்ல, பூவினா அந்தப் பகுதிக்குச் சென்று தேடினாள். 


"அது என்னோட புக்ஸ், அங்கே இல்லை." என்றான் வேலு.


தாத்தா படிக்கும் புத்தகம் இருந்த பகுதியில் டைரி கிடைக்கவில்லை. அனைவருக்குமே நம்பிக்கை போய்விட்டது.


"நல்லா யோசிச்சுச் சொல்லுமா வினி... எங்க தாத்தாவோட டைரின்னு சொன்னாரா? இல்லை பொதுவா தாத்தா டைரினு சொன்னாரா?" என்று கேட்டான் வேலு. 


"இல்லை! வேலுவின் தாத்தா என்றுதான் கூறினார். என்னால் மறக்க முடியுமா?" என்று பூவினா கூற,


"நல்ல வேளை! பொதுவா தாத்தாவோட டைரினு சொல்லியிருந்தால், எங்க போயி தேடுறது? காந்தி தாத்தா வீட்லயா?" என்று கிண்டலடித்த விஜய்யை, 


"சும்மா இருடா" என்று அதட்டியவள்,


"எதுக்கும் மறுபடியும் நீங்க தேடிய இடங்களில் தேடிபார்ப்போமா?" என்று வேலுவிடம் கேட்டாள் பூவினா.


அனைவருக்குமே நம்பிக்கை இல்லையென்றாலும், வேறு வழி இல்லாமல், ஸ்டோர் ரூமை நோக்கி நடக்க, 


வேலு படிக்கும் புத்தகங்களில் "உன் தேடல்" என்று ஒரு புத்தகம் இருந்ததைப் பார்த்த பூவினா, அதை எடுக்கக் கையை நீட்ட, 


"போதும்! புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து எனக்கு எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது." என்று கூறியபடி பூவினாவை தடுக்கிறேன் பேர்வழி என்று அவளைப் பிடித்து விஜய் இழுக்க, 


அவளோடு நான்கைந்து புத்தகங்களும் சேர்ந்து, கீழே விழுந்தது. 


"என்ன விளையாட்டு இது? என்று விஜய்யை அதட்டி விட்டு, கீழே விழுந்த புத்தகங்களை எடுத்த, கிரேசாவின் கையில் புத்தகங்களோடு ஒரு டைரியும் இருந்ததைப் பார்த்து விட்டான் வேலு.


அனைவருமே மிகவும் ஆவலாக அந்த டைரியைப் பார்க்க, அந்த அறையில் இருந்த, படிப்பதற்கான மேஜையில் அமர்ந்தான் வேலு ஆச்சரியமாக டைரியை பார்த்தபடி.


பிறகு, அனைவருக்கும் கேட்கும்படி சப்தமாக வாசித்தான் வேலு. 


"வேலு! நான் உன் தாத்தா வேலாயுதம்.


இந்த டைரியை பத்திரமாக வைத்துக்கொள். உனது இருபத்து ஐந்தாவது வயதில் எடுத்துப் படி... அப்போழுதுதான் உனக்கு இந்த டைரி உபயோகப்படும். இதை நீ படிக்க வேண்டும் என்றுதான் உன் புத்தகங்கள் இருக்கும் பகுதியில் வைக்கிறேன்.


எனக்காக, உன் தாத்தாவிற்காக நீ மிகப்பெரிய உதவி செய்ய வேண்டும்.


வேலு, பல வருடங்களுக்கு முன் நான் தொலைத்த வைரத்தைக் கண்டேன். எப்படி தெரியுமா?...


வைரமா?!!!


பூவினா, ஏன் தாத்தாவின் டைரியை பற்றிக் கூற தயங்கினாள்? 


அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...

💍💍💍💍💍💍💍💍💍









Post a Comment

0 Comments