வருவான்-20
வேலு தன்னுடைய தாத்தாவின் டைரியை சப்தமாகப் படிக்க, பூவினா, கிரேசா, விஜய், ஜெயராம், செந்தில் அனைவரும் ஆர்வமாகக் கவனித்தனர்.
அந்த டைரியில்...
"எனக்காக, உன் தாத்தா விற்காக நீ மிகப்பெரிய உதவி செய்ய வேண்டும்.
வேலு, பல வருடங்களுக்கு முன் நான் தொலைத்த வைரத்தைக் கண்டேன். எப்படி தெரியுமா?...
அவன் என்னோட தலைப்பிள்ளை! உன் அப்பாவிற்கு இரண்டு வயது மூத்தவன், அவ்வளவு அழகான ஆண்குழந்தை அதுவும் முதல் குழந்தை! அவன் பிறந்ததை ஊரையே கொண்டாட வைத்தார் என் அப்பா. ஊரையே அழைத்து விருந்து வைத்தார்.
அந்தக் காலத்துல ராஜ குமாரன் அப்படி வாழ்ந்திருப்பானான்னு தெரியாது... ஆனா என் மகன் சரவணன் ராஜகுமாரனாக வலம்வந்தான்.
மிகவும் அதிர்ஷ்டமான குழந்தை அவன்... சரவணன் பிறந்த வருடம் எங்கள் ஊரில் முப்போகமும் விளைந்து, ஊரே செழிப்பானது... அதனால் ஊருக்கே செல்லப்பிள்ளையாய் வலம்வந்தான்... அப்படியொரு அழகான, சுட்டியான பிள்ளையை எங்க ஜில்லாவே கண்டதில்லை... எல்லோரிடமும் ஒட்டிக்கொள்வான்…
அவனுடைய, முதல் பிறந்தநாளை மிகப் பெரிய அளவில் கொண்டாடினோம்... வந்தவர்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டுக் கொண்டே இருந்தோம்....
அந்தச் சமயத்தில் நம் ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டுவதற்கான டெண்டர் வந்தது... என் மகனை அழைத்துச் சென்றால், நிச்சயம் டெண்டர் எனக்குக் கிடைத்துவிடும் என்று, என்னுடன் உன் அப்பத்தாவையும், உன் பெரியப்பாவையும் அதாவது என் மனைவியையும், சரவணனையும் அழைத்துக் கொண்டு மெட்ராஸுக்குச் சென்றேன்...
நினைத்ததைப் போல டெண்டர் எனக்கேக் கிடைத்தது... அன்று மாலை மெரினா பீச்சுக்குச் சென்று சந்தோஷமாக இருந்தோம்.
என் சரவணனுக்கு ஐஸ் கிரீம் வாங்க நான் சென்றுவிட்டேன். அந்த நேரத்தில் உன் அப்பத்தாவிற்கு வலிப்பு வந்திருக்கிறது. கூட்டம் கூடி அவளைக் காப்பாற்றி, ஒரு வழியாக வலிப்பு கட்டுப்பட்ட நேரத்தில் நான் ஓடிவந்து பார்த்தேன். உன் அப்பத்தாவிற்கு சுய உணர்வு வந்த பிறகே சரவணனைத் தேடினோம்... பீச் முழுதும் போலீசும் தேடினார்கள்... எங்கும் காணவில்லை...
காதில் கடுக்கன், கைகளில் தங்க காப்பு, இடுப்பில் தங்க அருணாக்கொடி, கால்களில் வெள்ளி தண்டை அணிந்திருந்தான். அந்த நகைகளுக்கு ஆசைப்பட்டு குழந்தையை யாரோ தூக்கிட்டு போயிட்டான்...
ஒரு மாதம்... நான் மட்டும் மெட்ராஸிலேயே இருந்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அலையோ அலையென்று அலைந்தேன். என் பையன் கிடைக்கவில்லை...
ஊரே அழுது துடித்தது... ஆனால் அவன் எங்கிருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியவே இல்லை....எங்கோ உயிருடன் இருப்பான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தேன்…
ஆனால் மகனை உயிரோடு பறிகொடுத்த என் மனைவி, அடுத்து உன் அப்பாவைப் பெற்ற கையோடு, படுக்கையில் விழுந்தவள்தான் எந்திரிக்கவே இல்லை... சரவணன் என்றாவது ஒருநாள் என்னைத் தேடி வருவான் என்று நம்பிக் காத்திருந்தேன்...
என் நம்பிக்கை வீண் போகாமல் சரவணனும் என்னைத் தேடி வந்தான்... ஆனால்...
என் தலையில் இடியை இறக்கியதைப் போல, எனக்குக் கொள்ளி போட வேண்டிய சரவணன், ஆத்மாவாக வந்து நின்றான்...
எனக்கு எப்படி இருந்திருக்கும்? எனக்கு உயிரே போய் விட்டது என்றே நினைத்தேன். அப்படியொரு உயிர்வலி... என் உயிர், என் கனவாக இருந்தவன்... இப்படி வந்து நிற்பான்னு நினைக்கல வேலு.
நான் நினைத்ததைக் காட்டிலும், சரவணன் ராஜா மாதிரி இருந்தான். என் பிள்ளை, வேலையும் பார்த்துக்கிட்டு, டா...க்டருக்கு படிச்சிருக்கான் வேலு... நாலு ஊரு தள்ளித்தான் அவன் வளர்ந்த இடம் இருந்திருக்கிறது.
நாம் இந்த ஊருக்கு வந்தபிறகு தேடியிருந்தால் நிச்சயம் அவன் எனக்குக் கிடைச்சிருப்பான் வேலு... என் பிள்ளை ரொம்ப கஷ்டபட்டிருக்கான் வேலு... நான் இருக்கும் போதே, கடைசிவரை உண்மையான அன்புக்கு ஏங்கியிருக்கான்....
அவன் பேரை உனக்கு நான்தான் வச்சேன்... ஆனா இந்த நிமிஷம் வரை உன்னை நான் சரவணானு கூப்பிட்டதில்லை வேலு... ஏன் தெரியுமா? நீயும் என்னை விட்டுப் போயிடுவாயோன்னு பயந்தேன் யா...
வேலு, எனக்கு ஒரு உதவி செய்து தா ய்யா...
என் மகனோட வாழத்தான் குடுத்து வச்சிருக்கல... அவன் கடைசி ஆசையையாவது நிறைவேத்துவோம்... அவன் ஆசை...
இப்பொழுது உன் கையில் இருக்கும் மோதிரத்தைக் என்னிடம் கொடுத்தான்... அவன் வைதேகின்னு ஒரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்டானாம்... அந்தப் பொண்ணும் இவனை விட்டுப் போயிடுச்சாம் வேலு.
இந்த மோதிரம், வைதேகியோடு நடத்த நினைத்த, அவனுடைய நிச்சயதார்த்தத்துக்காக, அவனுக்கு வாங்கினானாம்...
இதே மாதிரிப் பொம்பளைப்பிள்ளைங்க போடுற மாதிரி மோதிரம் ஒன்னு இருக்காம்... அந்தப் பொண்ணு மறுபிறப்பு எடுத்து வந்தால்... அந்தப் பெண் மோதிரத்தை உன் கையில் கொடுத்துடுவானாம்... நீ அந்த மோதிரத்தை அந்தப் பொண்ணுகிட்ட சேர்த்துடு வேலு... அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடு வேலு...
என் மகன் வாழ முடியாத என் வீட்டில், அவன் விரும்பிய பொண்ணாவது வாழட்டும். அதுதான் நாம் அவனுக்குச் செய்யுற உதவி... செய்வ தானே?" என்று எழுதி முடித்திருந்தார்.
"அந்தப் பொண்ணு மறுபிறப்பு எடுத்திருச்சா சரவணா?"என்று அம்மாவின் குரல் கேட்டுத்திரும்பிய வேலு,
"இதோ தாத்தாவோட டைரி ம்மா... இதை மட்டும்தான் எழுதியிருக்கார்... நீங்க எப்பம்மா வந்தீங்க? " என்று கேட்டான் வேலு.
"நீ டைரிய படிக்க ஆரம்பிக்கும் போதே வந்துட்டேன் சரவணா..."
"இப்படியொரு மகன் தாத்தாவுக்கு இருந்ததா, என்கிட்டே யாருமே சொல்லலையே ம்மா?"
"எனக்கேத் தெரியாது டா... என்னை உங்கப்பாவுக்கு, கல்யாணம் பேசறப்ப சொன்னாங்க, உங்க அப்பத்தா அவங்க மகனை நெனச்சு தான் காலமானதாக... மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது... ஆனா நீ பிறந்ததும் சரவணவேல்னு பேர் வச்சது உங்க தாத்தாதான்."
"நீங்களும் அப்பாவும் மட்டும்தானே என்னைச் சரவணான்னு கூப்பிடுறீங்க?"
"அது... உங்க தாத்தா பேரைக் கூப்பிடக் கூடாதுன்னு நான் சரவணானு கூப்பிட்டேன்... என்னைப் பார்த்து உங்கப்பாவும் கூப்பிட்டார்."
"அதுசரி அந்த வைதேகியை நாம எப்படி தேடுறது?" என்று செந்தில் கேட்டதும்,
எதார்த்தமாகப் பூவினாவைப் பார்த்த வேலு, அவள் கண்கள் கலங்கி வேறுபுறம் திரும்பியதைப் பார்த்தவனுக்கு பூவினா மனதில் அழுத்திய விஷயம் தெளிவாக,
"வினி! என்ன ஆச்சு? இந்த டைரியில் இப்படி எழுதியிருப்பது உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்
"இல்லை!" என்று தலையாட்டினாள்.
"ரெண்டுநாளா உன் மனச கொடையிற விஷயம் இதுதானே?" என்று வேலு கேட்டதும்,
"எது வேலு?" என்று ஜெயராம் கேட்டான்.
"உனக்குப் புரியலையா ஜெயராம்? வினி போட்டிருந்த மோதிரத்தைத்தான் ரகு என்னிடம் கொடுத்து, வைதேகி கிட்ட கொடுக்கச் சொன்னார்... அதாவது, நான் வைதேகியை கல்யாணம் பண்ணனும்னு நினைத்துத்தான் ரகு மோதிரத்தைக் கொடுத்தான்னு வினி நினைச்சிருக்கா... அந்த நிமிஷமே, என் தாத்தா அந்த வைதேகியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி, இப்படித்தான் இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கக்கூடும்னு வினிக்குத் தொணிடுச்சு. அதான் டைரி பத்தி சொல்லத் தயங்கியிருக்கா... பிறகு ரகுவிற்காக உண்மையைச் சொல்லியிருக்கா." என்று பொதுவாகக் கூறியவன்,
பூவினாவைப் பார்த்து, "அப்படித்தானே?" என்று கேட்டான். அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக வேலுவைபா பார்த்தாள்.
"ஆக, அதேதான்..." என்றவன், "உன்னை விரும்பிட்டு வேற பொண்ண எப்படி கல்யாணம் பண்ணிப்பேன்?" என்று கேட்டான்.
"அது வந்து, அந்த வைதேகி உங்களையே நினைச்சு வாழ்ந்துகிட்டிருந்தால்... என்ன பண்ண முடியும்?" என்று கேட்ட பூவினாவிடம்
"ஏங்க! அந்த வைதேகி இறந்து போனதா யாருமே சொல்லலையே? ஒருவேளை அவங்க உயிரோட இருந்தா, அம்மா வயசு இருக்குமே? அவங்களுக்கு, கல்யாணம் ஆகாம இருந்தாலும், இப்ப வேலுவால அவங்கள எப்படிங்க கல்யாணம் பண்ணிக்க முடியும்? " என்று ஜெயராம் கேட்டபடி சிரித்தான்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை எனக்கும் அந்த நம்பிக்கை இருந்தது... ஆனா... தாத்தா டைரியில் எழுதியிருக்கும், ஒரு விஷயத்தை முழுசா கவனிக்கலையா? வைதேகி மறுபடியும் பிறந்திருந்தால் மட்டும் தான் ரகுநந்தன், வைதேகிக்காக வாங்கிய மோதிரத்தை, வேலு கிட்ட கொடுப்பதா சொல்லியிருக்கிறார். அப்படினா வைதேகி மறுபடியும் பிறந்தாச்சு... "
"நான் சொல்லல? அவன் எனக்கு ஆப்பு அடிச்சுட்டான்னு." என்று கூறிய வேலு,
"அந்த மோதிரத்தை வைதேகியிடம் கொடுப்பது மட்டும்தான் என் கடமை. வேண்டுமானால் அந்த வைதேகியை என் வீட்டிற்கு அழைத்து வந்து, ராணிபோல் பார்த்துக் கொள்கிறேன்.... ரகுவுடைய சந்தோஷத்துக்காக நான் என்ன வேணும்னாலும் செய்யத் தயார்... ஆனா கல்யாணம்ங்கிறது என் வாழ்க்கை சம்மந்தப்பட்டது. ரகுநந்தன் பாவம்தான்... ஒரு வயதுவரை பெத்தவங்க கிட்ட சீராட்டி வளர்ந்த குழந்தை, திடீரென எங்கோ தனித்து விடப்படுவது மகா கொடுமைதான்... தன் பெயர்கூட சொல்லத் தெரியல போலிருக்கு... அதை நினைத்தால் மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கு... அவர் வாழ்நாளில் ரொம்ப கஷ்டம் பட்டிருக்கிறார்... அதற்காக நான் என் வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது. " என்றான்.
"அப்புறம் உங்க தாத்தாவோட ஆசை?"
"ஹேய்! லூசாடி நீ? அவர் ஆசைபட்டா நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?"
"ஏன் நீ வைதேகியோட மறுபிறவியா இருக்கக் கூடாது?" என்று கிரேசா, பூவினாவிடம் கேட்க,
"அப்படியிருந்திருந்தால், ரகுநந்தன், என்னிடமிருந்து மோதிரத்தை வாங்கி, வேலு கிட்ட கொடுத்திருக்க மாட்டார்." என்றாள் பூவினா.
"இது என்ன புது வில்லங்கம்?" என்று கிரேசா கேட்க,
"இதில் என்ன வில்லங்கம் இருக்கு? தன்னோட மோதிரத்தை வேலுவை போடச்சொல்லிட்டு, வைதேகியோட மோதிரத்தை கையில் கொடுத்திருக்கிறார். ஏன்?.... இவருக்காக அந்த வைதேகி காத்திருக்காங்கன்னு தானே அர்த்தம்?"
"அந்த ஜென்மத்திலேயே, ரகுநந்தனை விட்டுட்டு போயிட்டாங்க... இப்ப அவருக்காகக் காத்திருப்பாங்கன்னு சொல்றது நம்புற மாதிரி இல்லை... அதேசமயம், சரவணா ஒன்றும் ரகுநந்தனோட மறுபிறவி இல்லையே? பின்னே எப்படி வைதேகி, சரவணனை கட்டிக்க நினைப்பாங்க?" என்று வேலுவின் அம்மா கேட்டதும்,
"வேலு, ரகுநந்தனோட மறுபிறவி இல்லைங்கிறதும் நமக்குத் தெரியாதில்லையா? அதோட, வைதேகி, ரகுநந்தனை விட்டு விலகியும், அந்தப் பொண்ணு க்காக, ஆத்மாவான பிறகும் ரகுநந்தன் பிரியம் வைத்திருக்கிறார்னா... அவங்க விலகிப் போனதுக்கு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கனும்.னு நினைக்கிறேன்" என்றாள் பூவினா.
"நீ என்னைக் கழட்டிவிடத் திட்டம் போடுறியா என்ன?" என்று பூவினாவை முறைத்தபடி கேட்டான் வேலு.
"அந்தப் பொண்ணு சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு வேலு. ஜெய் மறுபடியும் உன்கிட்ட தானே ஒட்டிக்கிட்டே இருக்கான்." என்றார் செந்தில்.
"ஒரே ஜீன் என்பதுகூட காரணமாக இருக்கலாம்... எனக்கும், ரகு விற்கும் ஒரே மாதிரி அங்க அசைவுகள், பேசும் முறை, பார்க்கும் விதம்கூட ஒரே மாதிரி இருக்கலாம்.
"முதல்ல வைதேகி எங்கே இருக்காங்கன்னு பார்ப்போம்... பிறகு மற்ற விஷயங்களைப் போட்டுக் குழப்பிக்கலாம்." என்றாள் கிரேசா.
"ஏன்? வைதேகியைத் தேடாமலே விட்டுட்டாதான் என்ன?" என்று கேட்டார் ஷோபியா.
"அது வேற விதமான வில்லங்கத்தை கொண்டு வந்துடாம இருந்தா சரி!" என்று கூறினாள் கிரேசா.
"ஆமா சரவணா, இதுநாள்வரை ரகுநந்தன், மோதிரத்தை வாங்குவதற்காக, பூவினாவை சுத்தி வந்த மாதிரி, அந்த மோதிரத்தை, வைதேகி கிட்ட கொடுக்கச் சொல்லி, உன்னைச் சுத்தி வராம இருந்தா சரி!" என்றார் ஷோபியா.
"எனக்கென்னவோ, வைதேகியைத் தேடுறதுதான் நல்லதுன்னு தோணுது." என்றாள் பூவினா.
"நீ இன்னும் அந்த ரகுநந்தனுக்குத் தான் சப்போர்ட் பண்ற வினி." என்று குற்றம் சாட்டும் குரலில் கூறினான் வேலு.
"ரகுநந்தன், உங்க குடும்பத்துல சந்தோஷமா வாழ்ந்திருக்க வேண்டியவர் வேலு, அவர் உயிருடன் இருக்கும்போது தான் அன்பான உறவுக்கு ஏங்கினார்... ஒரு நிமிஷம் அவரை நினைச்சு பாருங்க வேலு... வைதேகியை கண்டுபிடிச்சு மோதிரத்தை கொடுக்கிறதுதான் உங்க கடமை... சுயநலமா யோசிக்காதீங்க வேலு... அவரைப் பற்றிக் கேட்க, கேட்க எனக்கு அவர்மேல் பிரியம் அதிகமாகத்தான் ஆகிறது... இத்தனைக்கும் அவர் உங்க ரெத்த சொந்தம் வேலு." என்றாள்பூவினா.
"நீ முடிவு பண்ணிட்ட... பார்ப்போம்... ஆனா வைதேகியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்." என்றான் வரும் விளைவுகளை அறியாமல்.
அப்போ! வேலு, வைதேகியைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டியதாகி விடுமா?
பூவினா?!!
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments