வருவான்-9
இரவு உணவு முடித்து மாடி அறைக்குச் சென்ற பூவினா, ஜன்னல் பூட்டியிருக்கவே, திறக்க மனமில்லாமல், படுக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் ஜன்னல் கதவுகளின் கண்ணாடியில் ஏதோ வெளிச்சம் வந்து விழுந்தது.
"என்னவாக இருக்கும்?' என்று யோசித்தவள், எழுந்து சென்று ஜன்னல் கதவுகளை லேசாகத் திறந்து பார்க்க, அங்கே ரகுநந்தன் நின்றுகொண்டிருந்தான்.
ஜன்னலை வேகமாகத் திறந்தவள், 'நில்லுங்க வர்றேன்' என்று சைகை செய்து விட்டுக் கீழே இறங்கப் போனவளுக்கு, வேலு இதே நேரத்தில் இந்தச் சாலைவழியாக வருவது ஞாபகம் வர, மீண்டும் ஜன்னல் அருகே போய்ப் பார்த்தாள்.
ரகுநந்தன் அவளிடம் 'என்னாச்சு? ' என்பது போல் சைகையில் கேட்க,
பூவினா தன்னுடைய மொபைல் ஃபோனைக் காட்டிப் பேசச் சொன்னாள்.
ரகுநந்தன் தோள்களைக் குலுக்க,
அதே சமயம் வேலுவின் புல்லட் வரும் சப்தம் கேட்டதும், வெளியே தெரியாதவாறு ஜன்னல் ஓரமாக மறைந்து நின்று கொண்டாள்.
புல்லட்டின் வேகத்தைக் குறைத்து, ‘பூவினா நிற்கிறாளா? ' என்று ஜன்னலைப் பார்த்தான்.
அவள் ஜன்னல் அருகே இல்லாததைக் கண்டு, புல்லட்டை வேகப்படுத்திச் சென்றவன், தெருமுனையில் திரும்பும்போது பூவினா வீட்டிற்கு எதிரில் ரகுநந்தன் நின்று கொண்டிருந்தது தெரிந்தது. புல்லட்டை நிறுத்தித் திரும்பிப் பார்த்தான்.
சரவணவேல் பார்க்கவும், ரகுநந்தன் நடக்கத் தொடங்கினான்...
'வரும்போது இவனைப் பார்க்கவில்லையே? எதுவாக இருந்தாலும் இந்த நேரத்தில் இவன் ஏன் இங்கே நிற்கிறான்? இன்றைக்கு, ஆஸ்பத்திரிக்கே தேடிப் போனாளே... பகலில் காலேஜ் கட் அடிச்சுட்டு சந்திக்கிறது பத்தாதுன்னு ராத்திரி வேற சந்திப்பா…’ “இருடா வர்றேன்” என்றவன், புல்லட்டைத் திருப்பிவிட்டுப் பார்த்தால், ரகுநந்தன் தெரு முக்கு அருகே சென்று விட்டான்.
புல்லட்டை வேகமாக ஸ்டார்ட் பண்ணி வண்டி நகர, சட்டென்று பூவினா வண்டியின் குறுக்கே வந்து நின்றாள்.
சரவணவேல், ரகுநந்தனைப் பார்க்க, அவன் தெரு திரும்பும் இடத்தில் நின்று கொண்டு இவர்களையே பார்த்தவண்ணம் இருந்தான்.
"நீங்க இங்க என்ன பண்றீங்க? " என்று கோபமாகக் கேட்டாள் பூவினா.
"அத நான் கேட்கனும்." என்றான் வேலு கடுப்பான குரலில்.
"நீங்க யாரு என்னைக் கேட்க?" என்றாள்.
"ஒரு பொண்ணு, ராத்திரி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துல தனியா நின்னா, நான், அதாவது சரவணவேல் ஐ.பி.எஸ் கேட்கலாம்." என்றான் கோபமாக.
" எங்க வீட்டு வாசலில் தானே நிற்கிறேன்?... சரி! நீங்க எதுக்கு ரகுநந்தனை விரட்டுறீங்க?"
"நான் எப்ப விரட்டினேன்? "
"இப்போ எதுக்கு வண்டியத் திரும்பி இந்தப் பக்கம் போறீங்க? " என்றாள் கண்டுபிடிதுதுவிட்ட மிதப்பில்.
பூவினாவின் மிதப்பான குரல் வேலுவை உசுப்ப,
"ஆமா, அவன் யாரு? உங்களுக்குள்ள என்ன கருமமா இருந்தாலும், இந்த நேரத்தில் என்ன பண்றீங்க? உங்க அப்பாவுக்கு டிபார்ட்மெண்ட்ல நல்ல பேரு... நீ என்ன இப்படி இருக்க?" என்றான் கோபம் குறையாமல்.
"நீங்க யாரு அதக் கேட்க? எங்க அப்பாவைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? என் ஃபிரண்ட் காதலுக்கே உதவுவார்... நான் காதலிச்சா தடுப்பாரா?"
"ஹெஹ்ஹே! காதலா?!! உங்கப்பாகிட்ட இவன அறிமுகப் படுத்தியிருக்கியா? அவன் யாருன்னாவது உனக்குத் தெரியுமா?"
"அதப் பத்தி உங்களுக்கு என்ன?"
"பல்லத்தட்டிக் கையில கொடுத்துடுவேன். அவன் ஏன் என்னைக் கண்டா ஓடி ஒளியிறான்? நல்லவனா இருந்தா போலீஸ்க்கு ஏன் பயப்படனும்?"
"அவர் டாக்டர்... எவ்வளவு பெரிய டேலண்டட் தெரியுமா? எங்க காலேஜுக்கு, அவர் என்னைப் பார்க்க வந்தப்ப, உங்ககூட இருந்த போலீஸ்க்காரரை அனுப்பி, என்ன சொல்லி மிரட்டுனீங்க? அதுக்கப்புறம் இன்னைக்குத்தான் வந்தார். நான் இன்னும் அவர்கிட்ட பேசவே இல்லை... கரெக்ட்டா மூக்கு வேர்த்து வந்துட்டீங்க... இதுவரை என்னை அதட்டிக் கூடப் பேசாத, அவர் கெட்டவர். சம்மந்தமே இல்லாத பொண்ண அரட்டுற நீங்க நல்லவர். அப்படித்தானே? "
"இந்தக் கெட்டவனுக்கு நீ ஏம்மா ரெண்டு நாளா டாட்டா காட்டின?" என்று கேட்டான் கிண்டலாக.
"டாட்டா காட்டினேனா?!!... நினைப்புதான்… கொஞ்சம் நிற்கச் சொன்னேன்."
"சரி! ராத்திரி நேரத்தில ஒரு வயசுப் பையனை, நீ ஏம்மா நிற்கச் சொன்ன?" என்றான் குசும்புக் குரலில்
'அடக்கடவுளே! இப்ப என்ன சொல்றது... கிரேசாவுக்காகன்னு சொன்னா, அவகிட்டப் போயி கேட்டுடுவானே. அந்தப் பயந்தாங்கொள்ளி பாவம். நாமளே சமாளிப்போம்'
"என்ன பதிலயே காணோம்? இவ்வளவு நேரமா எகிறின" என்று சீண்ட,
"ம்ம்ம் ... அது... வந்து... " என்று கூறியவாறு பூவினா வேலுவைப் பார்க்க, அவன் நின்ற ஸ்டைலும், பார்வையும், வேலுவைப் பற்றிய கிரேசாவின் வர்ணனையை ஞாபகப் படுத்த, சட்டென்று வேறுபுறம் திரும்பியவள்,
"என்னைப் பேச விடுறீங்களா?" என்றாள்.
பூவினாவின் முகம் காட்டிய விஷயத்தில், 'என்னை சைட் அடிக்கிறாளா?' என்று நினைத்தவாறு,
"நான் என்ன பண்ணினேன்?" என்றான் அப்பாவிபோல.
"இப்படிக் குறுகுறுன்னு என்னையேப் பார்த்தா எப்படி பேச முடியும்?" என்று பூவினா வெடித்தாள்.
'அப்படி போடு! நான் பார்த்தா இவளுக்குப் பேச்சு வராதாமா?' என்று நினைத்தவன்,
"இங்கே நீயும் நானும்தான் நிற்கிறோம். நான் உன்னைப் பார்த்துப் பேசாம, அந்த மரத்தைப் பார்த்துப் பேசினா நல்லாவா இருக்கும்?"
"கொஞ்சம் கூட நல்லாவே இருக்காது மிஸ்டர் சரவணவேல்..." என்ற பூவினாவின் அப்பா குரல் கேட்டு, வேலு, பூவினா இருவருக்குமே தூக்கிவாரிப் போடத் திரும்பிப் பார்த்தனர்...
இப்படியொரு சூழ்நிலையை எதிர்பார்க்காததால் இருவருக்குமே தொண்டை வறண்டது.
"ஓகே மிஸடர்சரவணவேல். நாளைக்கு காலையில் வீட்டுக்கு வாங்க பேசுவோம்." என்றார் ராஜன்.
"அது... வந்து... அப்பா இவர்..." என்று பூவினா திக்கித்திணற,
"எனக்கு எல்லாம் தெரியும்... நீ மாடில நின்னு கையாட்டுறது... இவரப் பார்க்க ஓடோடி வந்தது... எல்லாம்..."
'அட இதுவேறயா?' என்று நினைத்தான் வேலு.
"அப்பா! அது... அப்பாஆஆ" என்று பூவினா சொல்லவும் முடியாமல், முடிக்கவும் முடியாமல் திணற,
"ஒரு பொண்ணு, ஒரு வயசுப்பையனோட மொபைல் நம்பர், அட்ரஸ்லாம் எதுக்கு கேட்பான்னு கூடவா எனக்குத் தெரியாது?" என்று பூவினாவிடம் கேட்டார் ராஜன்.
"இது எனக்குத் தெரியாதே!!!!' - வேலு
சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பதென்று தெரியாமல் பூவினா முழிக்க,
"இவங்க காலேஜுக்கு ஒரு செமினார் கிளாஸ்க்கு போனேன் ஸார்... அப்பதான்..." என்று வேலு ஆரம்பிக்க,
'சோழியை முடிச்சுட்டான்.' என்று தலையில் கை வைத்து விட்டாள் பூவினா.
"இது எப்பமா நடந்தது? எங்கிட்ட சொல்லவே இல்லையே?"
‘இந்த அப்பாவேற'
'என்னைக் காலேஜில் பார்த்த விஷயத்தையே அப்பாகிட்ட இவ சொல்லலையா?’
'இனி பேசி ஆகப்போறதில்லை.' என்று நினைத்த பூவினா அமைதியாக இருக்கவும்,
"எங்கிட்ட இவர் அட்ரஸ், மொபைல் நம்பரெல்லாம் கேட்டியே, அன்னைக்குத்தான் வேலு உங்க காலேஜுக்கு வந்தாரா?" என்று அப்பா அழுத்தமாகக் கேட்டதும்,
"ஆமா" என்பது போல மேலும் கீழும் தலையை ஆட்டியவள், சட்டென்று "இல்லை" என்பது போல இடவலமாகத் திரும்பினாள். பிறகு, 'இவர்கள் இருவரும் பேசினால் தன் கதை முடிஞ்சுடும்.' என்று நினைத்தவள், வேலுவைப் பார்த்து,
"எங்கேயோ அவசரமா போகனும்னு சொன்னீங்களே கிளம்புங்க." என்று கண்களால் கெஞ்சிப் போகச் சொன்னாள்.
அவள் மனம் புரிந்து, "ஓகே ஸார் நான் கிளம்புறேன்... எங்களுக்குள்ள சின்ன ஊடல் இருக்கு. அத சரி பண்ணிட்டு, உங்களை வந்து சந்திக்கிறேன்." என்று அப்பாவிடம் கூறிவிட்டு,
பூவினாவைப் பார்த்து, 'உன்னை அறிந்துகொண்டேன்' என்பதைப் போல, கண்களில் சந்தோஷம் மின்ன, உதடுகளை மடித்தபடி சிரித்து, “வருகிறேன்” என்று தலையசைத்தான்...
பூவினா ஒன்றும் செய்ய இயலாமல் அப்படியே நின்றாள்.
அன்று இரவு முழுவதும் பூவினா, வேலு இருவருமே தூங்கவில்லை.
தனது அப்பாவை எப்படி நம்பவைப்பது என்று பூவினா கவலையில் விழித்திருக்க,
வேலு, செம குஷியில் துக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான்.
வேலு, 'நம்பவே முடியலையே? நேர்ல சிடுசிடுங்கிறா!! ஆனா அவ அப்பாகிட்டப் போயி என் மொபைல் நம்பரைக் கேட்டிருக்கா... என் அட்ரஸை எங்கிட்ட கேட்டா, மேளதாளத்தோட கூட்டிட்டு வந்திருப்பேனே. ... யார்கிட்ட எதக் கேட்கிறதுன்னு இல்லையா?... எனக்குன்னு வந்து அமையுது பார்..." என்று நினைத்தவன்,
'எதுக்குடாஆ குழப்பிக்கிற வேலு, நம்ம ஜெயராம் கிட்ட கேட்டா, காதலைப் பத்தி புட்டு புட்டு வச்சிடுவானே!!' என்று ஜெயராமிற்கு ஃபோன் செய்தான்.
மணி பத்து ஐம்பது... "இந்த நேரத்துல வேலு ஃபோன் பண்றான்னா... ஏதோ அவசர கேஸ்' என்று நினைத்த ஜெயராம், "நான் தான்... சொல்லுடா வேலு." என்று கூறியபடியே யூனிபார்ம் பேண்டை எடுத்துப் போட்டான்.
"ஜெயராம் எனக்கு ஒரு முக்கியமான விஷயத்துல சந்தேகம்... நான் நினைக்கிறது, சரியா, தப்பான்னு நீதான் சொல்லனும்." என்று தயங்கித் தயங்கிக் கேட்டான்.
"வேலு நீ நினைக்கிறது என்னைக்குத் தப்பாயிருக்கு? இதுக்கு ஏன் இவ்வளவு தயங்குற? புதுக் கேஸா?” என்று கேட்பதற்குள் ஷூ ரேக்கிற்குச் சென்று விட்டான்.
"இது பர்ஸனல் விஷயம் ஜெயராம்."
ஷூ மாட்டப் போனவன் நின்று, "யார்டா அந்தப் பொண்ணு?" என்று கேட்டான்.
"இது!... இதுதான் ஜெயராம்!! நண்பேன்டா"
"போதும்! நீ விஷயத்துக்கு வா!" என்று கூறியபடி தன் அறைக்குள் சென்று தாளிட்டான்.
பூவினாவைப் பற்றிச் சொல்லாமல், வேலு நடந்த விஷயங்களைக் கூறி, தனக்கு வந்த சந்தேகத்தைக் கேட்டான் வேலு.
அதற்குள் இரவு உடைக்கு மாறி கட்டிலில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தவன், வேலு சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
"இத ஆராய்ச்சி பண்ணத் தேவையே இல்லை... அவ உன்னை..." என்று ஜெயராம் சொல்லும்போது, நெற்றி பொட்டில் 'வின்' என்று வலித்தது.
வலியைப் பொருட்படுத்தாது, "அவ உன்னை விரும்புறா வேலு." என்று சொல்லி முடிக்கும்போது, யாருடைய கண்களிலிருந்தோ கண்ணீர் வழிவது போலத் தோன்ற, தலையைப் பிடித்துக் கொண்டு உலுக்கினான். அது தெரியாத வேலு நன்றி நவிழ, ...
ஜெயராமிற்கு ஏதோ உள்ளுணர்வு தூண்ட,
"காதல் வேணாம் வேலு." என்று கூறும்போது, ஃபோனை வைத்து விட்டிருந்தான் வேலு.
'எத்தனையோ பேருக்கு ஐடியா குடுக்குறதுதான்... இன்னைக்கு ஏன் தப்பா தோணுது?' என்று குழம்பினான் ஜெயராம்.
அடுத்தநாள் காலேஜுக்குச் சென்ற பூவினா, கிரேசாவைத் தனியே அழைத்துச் சென்று, முதல்நாள் இரவு நடந்தது அனைத்தையும் கூறினாள்.
வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்த கிரேசா, பூவினா முறைக்கவும், கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிவிட்டு,
"இப்போ என்ன பண்ண போற வினு?"
"அது தெரியாமத்தானே உங்கிட்ட கேட்கிறேன்."
"நீ அப்பாவிடம் உண்மையைச் சொல்லவிட வேண்டியதுதானே?"
"நேத்து நடந்த களேபரத்துல, இது விஷயமா நான் என்ன சொன்னாலும் அப்பா நம்பமாட்டார்."
"நான் வந்து உங்கப்பாகிட்ட சொல்றேன்." என்று கிரேசா கூறியதும்,
"நல்ல ஐடியா! தேங்க்யூ! தேங்க்யூ!" என்று கூறி கிரேசாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சுற்றினாள்.
"வா! இப்பவே போவோம்!" என்றாள் பூவினா.
"கிளாஸு."
"கட் டு..." என்று கூறி கிரேசாவை அழைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்க்கு வந்தவள், பொது தொலைபேசியைப் பார்த்ததும்,
"அப்பா வீட்ல இருக்காரா கிளம்பிட்டாரான்னு கேட்டுடுறேன்." என்று கூறிய பூவினா, பொதுத் தொலைபேசியில் வீட்டுக்கு ஃபோன் பண்ண, அப்பா கிளம்பி போய் விட்டதாகவும், சாயந்தரம் தான் வருவார் என்றும் அம்மா கூற, இரு தோழிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்கள்.
பூவினாவிற்கு, ரகுநந்தன் ஞாபகம் வர,
"கிரேசா! ரகுநந்தனைப் போய்ப் பார்த்து, இனி வீட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லிடலாம் வா!. நீ உண்மை கூறி, எங்கப்பா புரிஞ்க்குறதுக்கு முன்னாடி ரகுநந்தனை அப்பா பார்த்தால் ரொம்ப தப்பாகிவிடும்... வா! கட் அடிச்சதுக்கு உருப்படியா ஒரு வேலை பார்ப்போம்." என்று கூறி மருத்துவமனை செல்லும் பஸ்ஸில் ஏறினர்.
பூவினாவை சந்திக்க நினைத்த வேலு, "பூவினா காலேஜை விட்டு வெளியே வந்தால், எனக்குச் சொல்லு' என்று கூறி ஒரு நண்பனைக் காலேஜ் வாசலில் நிறுத்தியிருந்தான். அந்த நண்பன், பூவினா பஸ்ஸில் ஏறுவதைப் பார்த்து விட்டு, பஸ்ஸைப் பின் தொடர்ந்தபடி, வேலுவிற்கு ஃபோன் செய்து விஷயத்தைக் கூறினான்.
'இவ ரகுநந்தனைத் தான் பார்க்கப்போறா... ஆனா ஏன்?!! இன்னைக்கு தெரிஞ்சே ஆகனும்' என்று நினைத்த வேலு,
"நீ அவங்கள விட்டுடாத." என்று கூறி விட்டு புல்லட்டை எடுத்தான்.
மருத்துவமனைக்குள் சென்று, சர்ஜன் டாக்டர்ஸ் அறைக்குச் சென்றனர். அறை வாசலுக்கு வெளியே அமர்ந்திருக்கும் நர்ஸ்சைக் காணாததால், அறைக்குள் சென்றனர்.
அங்கே அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஐந்தாறு டாக்டர்ஸ்களில் ஒரு டாக்டர் எழுந்து வந்து,
"யார் நீங்க? டாக்டர்ஸ் தவிர யாரும் இந்த அறைக்குள் வரக் கூடாது." என்று சொல்லி அறைக்கு வெளியே அழைத்துவந்து,
"சொல்லுங்க! என்ன வேணும்?" என்று கேட்டதும்,
"டாக்டர் ரகுநந்தனைப் பார்க்கனும்." என்று பூவினா கேட்டுக்
கொண்டிருக்கும்பொழுது, அந்த டாக்டரின் மொபைல் அழைக்க,
"ஒன் மினிட்! " என்று கூறியவர், ஃபோனை காதில் வைத்து,
"சொல்லுங்க டாக்டர்!" என்று கூறியதும், அந்தப் பக்கம் பெசியவர்கள் என்ன சொன்னார்களோ? தெரியவில்லை.
"இப்ப வந்துடுறேன். இந்த நாற்காலியில உக்காருங்க." என்று கூறி விட்டு டாக்டர்ஸ் அறைக்குள் சென்றார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர்,
"நீங்க யாரு? அவர ஏன் தேடி வந்திருக்கீங்க?" என்று கேட்டார்.
"என் பேரு பூவினா. ரகுநந்தன் என்னோட ஃபிரண்ட்... ஒரு முக்கியமான விஷயம் அவர்கிட்ட சொல்லனும்." என்றாள்.
"அவர் இன்னைக்கு வரல." என்றான் வந்தவன்.
"எப்போ வருவார்?"
"அது எப்படி எனக்குத் தெரியும்?" என்று அவன் கூறியதும், அவருக்கு நன்றி கூறிவிட்டு, வெளியே வந்தனர் பூவினாவும், கிரேசாவும்.
இரு தோழிகளும் வெளியே வருவதற்கும், வேலு மருத்துவமனையின் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.
"இவனை எதுக்கு அடிக்கடி பார்க்க வர்ற?" என்று வேலு உறுமினான்.
"தலவிதி! எங்கப்பா ரகுவைப்பார்த்து விட்டால் தாப்பாயிடும்னு....,"
"எச்சரிக்க வந்தியா?" என்று கேட்டான்.
"ஆமா! எங்கப்பா அவரப் பார்த்ததே இல்லை... நேற்று நடந்த ஒரு குழப்பமே போதும்... இவர் நல்லவர்... நான் சொன்னா புரிஞ்சுக்குவார்.... அவர் என் நண்பன்னு, நான் எங்கப்பா கிட்ட நானாகச் சொல்லும் வரை, என் வீட்டுக்கு...."
"என்ன? ரகு உன் நண்பனா?" என்று கத்தியேவிட்டான் வேலு.
"ஆமா! உயிர்த்தோழன். உங்களை மாதிரி இல்லை." என்றாள் வெடுக்கென்று.
"வேண்டாம்... அவர் என்னைமாதிரி இருக்கவே வேண்டாம். நண்பராவே இருக்கட்டும்... ஓகே! உன் நண்பரை எனக்கு அறிமுகப் படுத்தமாட்டாயா?" என்றான் குதூகலமாக.
"அவர் இன்னைக்கு வேலைக்கு வரல."
"ஆஹா! உன் நண்பரைச் சந்திக்கவே முடியலையே?!!" என்று போலியாகக் கவலைப்பட்டான்.
அதேநேரத்தில், பூவினாவிடம் பேசிய டாக்டர், நமக்கு முதுகு காட்டி நின்ற மற்றொரு டாக்டரிடம்,
"ஏன் ஸார் அந்தப் பொண்ணுங்க கிட்ட, ரகுநந்தன் ஸார் வரலைனு பொய் சொல்லச் சொன்னீங்க?" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
யார் அந்த டாக்டர்? அவர் ஏன் பொய் சொல்லச் சொன்னார்.
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்!
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments