வருவான்-8
வேலுவிடம் மாட்டாமலிருக்க ஜெயராம், வாசலை நோக்கி ஓட, அந்த நேரத்தில் ஸ்டேஷனுக்குள் வந்த ஜீப் பில் மோதி,
'ரகு' என்று கத்தியபடி மயங்கிச் சரிந்தான் ஜெயராம்.
வேலு ஓடிவந்து ஜெயராமை நெருங்க, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த போலீஸ்க்காரர்கள் ஓடிவந்து பார்த்தார்கள். பெரிய அடி இல்லை. ஆனால் ஜெயராம் மூர்ச்சையாகி இருந்தான்.
வேலு, அருகில் நின்ற கான்ஸ்டபிளைப் பார்க்க, அவர் முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தார்.
அதற்குள் வண்டியிலிருந்து இறங்கிய போலீஸ் டிரைவர், தண்ணீர் எடுத்து வந்து ஜெயராமின் முகத்தில் தெளிக்க, ஜெயராம் முன் நெற்றியை பற்றியவாறு கண்களை மெல்லத் திறந்தான்.
வேலு, ஜெயராம் நெற்றியில் வழியும் ரத்தத்தைத் துடைத்து மருந்து போட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்த ஜெயராம்,
"ஸார்! ஸார்! ரகுவைக் காப்பாத்துங்க... நான் பிழைக்கமாட்டேன்... ப்ளீஸ் ரகுவை…" என்று கதறியபடி கூறியவனைத் தடுத்து,
"ஜெயராம் உனக்கு ஒன்னும் இல்லை. சின்ன அடிதான்... இதோ மருந்து வச்சு கட்டுப் போட்டுட்டேன். ரத்தமும் நின்னுடுச்சு பாரு." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே,
"ஸார்! ப்ளீஸ்! ரகு உயிருக்கு ஆபத்து, காப்பாத்துங்க." என்றவனிடம்,
"ஓகே!... ஓகே!... ரகு எங்கே இருக்கார்? " என்று வேலு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் மயங்கிவிட்டான் ஜெயராம்.
ஜெயராமை, அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்றான் வேலு.
ஜெயராமிற்குச் சிகிச்சை அளித்துவிட்டு வெளியே வந்த டாக்டர்,
"அவர் கண் முழிச்சுட்டார்… இப்ப எந்தப் ப்ரச்சனையும் இல்ல. அதிச்சியால ஏற்பட்ட மயக்கம்தான்... இப்பவே அவர வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம். மறுபடியும் இந்த மாதிரி மயக்கம் வந்தா மட்டும் ஸ்கேன் பண்ணிப் பார்க்கலாம்." என்று கூறி விட்டு நகர்ந்தார்.
கட்டிலில் அமர்ந்திருந்தான் ஜெயராம். எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
"என்னடா? எப்படி இருக்க? கொஞ்ச நேரத்துல பதறடிச்சுட்டியே ராஸ்கல்." என்று வேலு சிரிக்க,
"வேலு! எனக்கு என்னாச்சு?" என்று கேட்டான் ஜெயராம்.
"எங்கிட்ட ரெண்டு அடி வாங்க பயந்து ஓடி, சிவனேன்னு வந்துகிட்டிருந்த நம்ம ஸ்டேஷன் ஜீப்பை முட்டி, நீ சாஞ்சுட்ட! அவ்வளவுதான்..."
"இல்ல வேலு, எனக்கு ரொம்ப பெரிய அடி மாதிரி..., பிழைக்க மாட்டேன்னு தோணுச்சே?" என்று கலங்கியவனை லேசாக அணைத்து,
"ச்சில்! நண்பா! நீங்க பயந்துட்டீங்க அவ்வளவுதான். ரொம்ப குழப்பிக்காத... டாக்டர், வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டார்... என்ன? கிளம்புறீங்களா?" என்று கேட்ட வேலுவைக் கூர்ந்து பார்த்தான் ஜெயராம்.
"அடேய்! இன்னும் என் முகத்தை ஏன் பார்த்துக்கிட்டு இருக்க? நீ நல்லாதான்டா இருக்க." என்று வேலு கூறியும், கட்டிலை விட்டு இறங்காமல் திருதிருவென ஜெயராம் முழிக்க, கவலையுடன் பார்த்த வேலு,
"இங்கேயே இரு." என்று ஜெயராமிடம் கூறிவிட்டுச் சென்று, டாக்டரை அழைத்து வந்தான்.
டாக்டர் மீண்டும் பரிசோதனை செய்துவிட்டு, ஜெயராமிற்குத் தைரியம் கூறி அனுப்பி வைத்தார்.
ஜெயராமின் வீடு வந்து சேரும் வரை இருவருமே எதுவும் பேசவில்லை. பயந்து அழுத ஜெயராமின் அம்மாவிடம் விபரம் கூறிவிட்டு, ஸ்டேஷனுக்குச் சென்றான் வேலு.
வேலு, நடந்தவைகளைக் கொஞ்சம் யோசித்திருந்தால் பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டிருக்கலாம்... ஆனால் விதி!
கிரேசாவின் காதலுக்கு அப்பாவின் உதவிகிடைத்த சந்தோஷத்தோடு, இரவு உணவு முடிந்ததும், அம்மாவுக்கு உதவிவிட்டு, தன் அறைக்கு உறங்க வந்த பூவினா, வழக்கம்போல ஜன்னலின் வழியாக ரகுநந்தன் வந்திருக்கிறானா?' என்று பார்த்தாள். இன்று அவன் வந்ததும் கல்லூரிக்குத் தேடி வரவேண்டாம்னு சொல்லிடனும்.' என்று நினைத்தவளாகத் தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள்...
வெகுநேரம் ஆகியும் ரகுநந்தன் வரவில்லை.
‘அந்தப் போலீஸ்க்காரர், ரகுநந்தனிடம் என்ன பேசினார் என்று தெரியவில்லையே... ஒருவேளை மிரட்டியிருப்பாரோ? அதனால்தான் வரவில்லையோ?' என்று நினைத்துக் கவலைப்பட்டாள். தூக்கத்தில் கண்கள் சொருக சிறிது நேரம் பார்த்திருந்து விட்டு, ஜன்னலை விட்டு எழுந்தவள், தெரு திரும்பும் இடத்தில் சரவணவேல் புல்லட் வருவதைக் கண்டாள்.
சரவணவேலும் பூவினாவை பார்த்துவிட்டான்.
'அவனிடம் நாமே போய், அவனுடைய மொபைல் நம்பரைக் கேட்டுவிடலாமா?' என்று நினைத்தவள், வேலுவை நிற்கச்சொல்லி கையை அசைத்தாள்.
வேலுவிற்கு ஆச்சர்யமாகி விட்டது…
‘என்னைப் பார்த்துதான் கையசைக்கிறாளா?' என்று ஆச்சர்யப்பட்டு சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். தெருவில் ஈ, காக்கா கூட இல்லை. மீண்டும் பூவினாவைப் பார்க்க, அவள் ஜன்னலருகே இல்லை!
'இவ என்ன பண்றா? அன்னைக்கு அந்த ரகுவைப்பார்த்து கையசைத்து விட்டு மறைந்து நின்று கொண்டாள். இன்று எனக்கு?!! பொழுதுபோகாமல் விளையாடுகிறாளா?.... இவள் செய்வாள்... வீட்டுக்கு வர்றவங்களுக்குக் கஷாயம் கொடுக்குறவதானே? இதையும் செய்வாள்... இதுக்கு மேலயும் செய்வாள்' என்று மீண்டும் ஜன்னலைப் பார்க்க, ஆள் அரவமே இல்லை... சிரித்துக் கொண்டு புல்லட்டை வேகப்படுத்திச் சென்று விட்டான்.
பூவினா கையசைத்ததைப் பார்த்து, வேலு புல்லட்டின் வேகத்தைக் குறைக்கவும், "தன்னைப் பார்த்துவிட்டான், நிற்பான்' என்று நினைத்து, வீட்டினர் எழுந்து விடாமல், மெல்ல மெல்ல பூனைபோல் நடந்து, வாசல் கதவைத் திறந்து பார்த்தாள்.
வேலு தூரத்தில் செல்வது தெரிந்தது.
"ம்ப்ச் ஓடிட்டான்... ' என்று கடுப்பாகி ஒரு காலால் தரையை ஓங்கி மிதித்தாள். மீண்டும் படியேறி பூவினா மாடிக்குச் செல்ல,
இந்தக் கூத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ராஜன், ‘வேலுவைப் பற்றி விரைவில் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.
வேலு, வீட்டிற்குச் சென்று காக்கா குளியல் போட்டு விட்டு, படுக்கையில் அமர்ந்து கொண்டு, மெல்லிசைப் பாடலை, குறைந்த சப்தத்தில் வைத்துக் கேட்டபடி, நாவல் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தான்.
தினப்படி செயல்தான் இது. பெரும்பாலும் அப்படியே உறங்கிவிடுவான். இன்று என்னவோ உறக்கம் வரவில்லை. 'ஜெயராமிற்கு என்னால்தான் அடிபட்டுவிட்டதுங்கறது ஒரு காரணமாக இருக்கலாம்.' என்று வருந்தியவன், கண்களை மூடி உறங்க முயற்சித்தவனுக்கு, பூவினா கண்களில் வந்து சிரித்தாள்.
"ஹேய்! என்ன கண்ணுக்குள்ள வந்து நிக்கிற?" என்று சிரித்தவன், இவ இன்னைக்கு என்னைப் பார்த்துதான் டாட்டா காட்டினாள். பிறகு எங்கே போனா? எனக்காகக் காத்திருந்தாளோ?... நம்பமுடியலையே!!!... வேலு என்ன தான்டா நடக்குது? அன்னைக்கு ரகுவைப் பார்த்து டாட்டா காட்டினாளே? ஒருவேளை தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருக்கோ? நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேனா? அப்போ அன்று, ரகு காலேஜுக்கும் வந்தானே? வேறுயாரையோ பார்க்க வந்தவனைத் தேவையில்லாமல் சந்தேகப் பட்டு விரட்டி விட்டேனா?’ என்று வேலு கவலைப்பட்டான்.
வீட்டில் ஜெயராம் நன்கு உறங்கிக்கொண்டிருந்தான்...
சிறிது நேரத்தில் குளிர்வது போலத் தோன்ற, கண்ணைத் திறக்க முடியாமல், கைகளால் போர்வையைத் தேட, கழுத்துவரை போர்வையால், தான் முடப்படுவதை உணர்ந்தவன்,
‘இந்த அம்மா என் பக்கத்துலேயே உட்கார்ந்து இருக்காங்க போல' என்று நினைத்தவன், மருந்தின் வலிமையால் மீண்டும் உறங்க…
தன்னுடைய கைகளை யாரோ பிடித்து நாடித் துடிப்பைப் பார்ப்பதை உணர்ந்த ஜெயராம், 'அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாதே?'என்று கண்களை மிகவும் கஷ்டப்பட்டுத் திறந்தான்.
அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தவாறு ஜெயராமின் நாடித்துடிப்பை கவனித்துக் கொண்டிருந்தான் ரகுநந்தன்!!!
சட்டென்று எழுந்த ஜெயராம், "ரகு நீங்க எப்படி இங்கே?" என்று கேட்டான்.
"நீ இப்படி இருக்கும்போது நான் வராம இருப்பேனா? சரி! அப்புறம் பேசிக்கலாம் தூங்கு!"
"நீ நல்லா இருக்கியா ரகு? உனக்கு ஒன்னும் ஆகலையே?" என்று, ‘எதற்காக இவ்வளவு பதறுகிறோம்’ என்று தெரியாமலேயே, ரகுவிடம் கவலையோடு கேட்டான்.
ரகுநந்தன், ஜெயராம் முகத்தையே உற்றுப் பார்த்தவன்,
"உனக்கு ஞாபகங்கள் வருகிறதா ஜெய்?" என்று கேட்டான்.
"தெரியல ரகு... ஆனா உன்னைப் பார்த்ததுல என் மனசு ரொம்ப சந்தோஷப்படுது… இன்னைக்கு நெத்தியில அடிபட்டதுலருந்து ஏதேதோ கற்பனையா தோணுது ரகு... விபத்துல அடிபட்டு நான் விழும்போது, எனக்கு நல்லாத் தெரிஞ்சுது நான் பிழைக்க மாட்டேன்னு.... ஆனா பாரு! சின்னக் கட்டுதான்.....அதே மாதிரி, அந்த நிலையிலும், உன்னைக் காப்பாத்தனும்னு துடிச்சேன்... ஆனா நிஜத்துல நீ நல்லாத்தான் இருக்க... எனக்கு என்ன ஆச்சு ரகு?" என்று ஜெய் கேட்டதும், அவன் அருகில் வந்து, ஜெய்யை இறுக அணைத்து,
"ஒன்னுமில்லை... பழைய ஞாபகங்கள் லேசா டிஸ்டர்ப் பண்ணுது அவ்வளவுதான்.... சரி அதவிடு! இப்ப நாம ரெண்டு பேரும் நல்லாதானே இருக்கோம்?... மற்றதை அப்புறம் பேசிக்கலாம்... தூங்கு..." என்று ரகு சமாதானப் படுத்தவே,
ஜெயராமின் ஞாபகங்கள், நிழல் உருவங்களாகக் குழப்ப, அவன் கண்களை இறுக்கி முடி தலையை உலுக்கினான்.
ஒரு டாக்டராக ஜெயராமின் நிலை புரிந்த ரகு,
"நான் சொன்னா நம்புவேல? நீ கவலைப்படுற அளவுக்கு எதுவும் தப்பாயிடலை... நிம்மதியாத் தூங்கு... இப்பத்தான் உடம்பு சரியாகிட்டு வருது... இந்த நேரத்துல எதைபத்தியும் யோசிக்காமத் தூங்கு..." என்று கூறி ரகு ஆறுதலாக ஜெயராமின் கையைப்பிடிக்க, அதில் ஒரு பாதுகாப்பான உணர்வு எழவும், மீண்டும் தூங்க ஆரம்பித்தான் ஜெயராம்.
இரண்டு நாட்கள் கழிந்தது.
விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் பூவினாவிற்கு விழிப்பு வந்து விட்டது. ஆனால் என்ன செய்வதென்று தான் அவளுக்குத் தெரியவில்லை.
ஜன்னல் கதவுகள் படபடவென்று அடிக்க, 'கதவை மூடாமல் தூங்கிவிட்டேனே?' என்று நினைத்தவள், எழுந்து சென்று ஜன்னல் வழியாகத் தெருவைப் பார்க்க,
அங்கே யாருமே இல்லை.
‘ரகுநந்தனைப் பார்த்து மூன்று நாட்கள் ஆகிறது... அவன் மூன்றாவது நாளாக நேற்று இரவும் வரவில்லை…’ முகத்தில் ஜில்லென்று காற்று மோத, ஜன்னலிலிருந்து விலகி கம்ப்யூட்டர் டேபிளில் வந்து அமர்ந்தாள்...
‘ரகுநந்தனுக்கு என்னவாயிற்று? அவரை எப்படிப் போய்ப் பார்ப்பது?' என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
மூன்று நாட்களாக வேலுவைத்தான் பார்க்கிறாள்...
இதில் என்ன கொடுமை என்றால், தினமும் பூவினா 'நில்' என்று கை காட்டிவிட்டு கீழே இறங்கிச் சென்று பார்ப்பதும், அவன் தொலைதூரம் சென்றிருப்பதும்தான் நடந்தது…
இப்பொழுது கிரேசாவிற்காக மட்டுமல்லாமல், தனக்காகவும் வேலுவிடம் பேச முயற்சி செய்தாள்…
ஏனென்றால், காலேஜில் வைத்து, ஜெயராம், ரகுநந்தனிடம் என்ன பேசினார்? என்று தெரிந்து கொள்வதற்காகவும் தான்… அவளுடைய அப்பாவும் இதுவரை, வேலுவைப் பற்றி எதுவும் கூறவில்லை... மொத்தத்தில் இரண்டு நாட்களும் சுத்த வேஸ்ட் ஆகத் தெரிந்தது பூவினாவிற்கு.
காலேஜ் வந்த பூவினா, கிரேசாவிடம், "வேலுவைப் பார்க்கப் போகலாம் வர்றியா?" என்று கேட்டாள்.
இரண்டு நாட்களில் கிரேசா, வேலுவைக் கொஞ்சம் மறந்து விட்டிருந்தாள்... இந்த நேரத்தில் பூவினா ஆர்வமாகக் கேட்க, ‘இவள் ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்கா?' என்று நினைத்த கிரேசா,
"ம்ப்ச்! வேணாம் வினு... போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் நாம போகக் கூடாது. எனக்குமே அன்னைக்கு இருந்த அளவு, இன்னைக்கு அவரைப் பார்க்கனும்னு தோணல... ஜஸ்ட் அட்ராக்ட் ஆயிருக்கேன் அவ்வளவுதான்... யோசித்துப் பார்க்கயில் போலீஸ்லாம் நமக்குச் சரிபட்டு வராதுந்னு புரிஞ்சுக்கிட்டேன்... விட்டுடு வினு... " என்றாள் கிரேசா.
"ஏய்! என்னப்பா இப்படி பேசுற? அதுக்குள்ளயா மனசொடிஞ்சு போயிடுவ?... கவலைப்படாதே! எங்கப்பா உனக்கு உதவுவார். கொஞ்சம் பொறு." என்று ஆறுதல் கூறினாள் பூவினா.
"இல்லை, இல்லை! அப்பாக்கிட்ட, அவரப் பத்தி விசாரிக்க வேணாம்னு சொல்லிடு வினு... நேற்று முழுவதும் நல்லா யோசிச்சுப் பாத்துட்டுத்தான் பேசுறேன். போலீஸ்னாலே எனக்குப் பயம் வினு. இதுல போலீஸ் ஆபிசரக் கட்டிக்கிட்டு, காலம்பூரா பயந்து வாழமுடியுமா? அதான் சொன்னேனே விட்டுடுன்னு. விட்டுடு..." என்றாள் சிரித்துக் கொண்டு,
'இவ என்ன இப்படி பேசுறா? ஒரே நாளில் முடிந்து விட்டதா? ம்ஹூம்! அம்மா சொல்றது சரிதான்... அவசரமா வர்ற காதல்... அவசரமாகத் தான் ஓடும் னு சொல்வாங்க..... " என்று நினைத்தவள்,
"கிரேசா நிஜமாத்தான் சொல்றியா?" என்று மீண்டும் கேட்டாள்
"ஆமா வினு. நிச்சயமாவே சொல்றேன்."
"எப்படி இவ்வளவு சீக்கிரத்தில்? "
"போலீஸ் ஆபிசரை விரும்புறதெல்லாம், சினிமாலதான் நல்லா இருக்கும். ... நடைமுறைக்குச் சரிப்பட்டு வராது. இதோட இந்தப் பேச்சை விட்டுடுவோமே." என்றாள் தெளிவாக.
அதன்பிறகும் பூவினா யோசனையில் இருப்பதைப் பார்த்த கிரெசா,
"உனக்கு என்ன ஆச்சு?" என்று கேட்டாள்.
"ஒன்னுமில்லை!"
"என்ன ஒன்னுமில்லை? நான் உன்கிட்ட எவ்வளவு வெளிப்படையா பேசினேன்... நீ ஏன் மறைக்கிற?" என்று கிரேசா சற்று கோபமாகக் கேட்க,
"நீ என்ன நினைப்பியோன்னு ..." என்று தயங்கினாள் பூவினா.
"நீ அந்த ஐ.பி.எஸ் ஐ விரும்புறியா?" என்று தன் சந்தேகத்தை கிரேசா கேட்க,
"சேச்சே! இது வேற" என்று சிரித்தாள் பூவினா.
"வேற என்ன? என்கிட்ட சொல்லக்கூடாதா? என்று கிரேசா கேட்டதும்,
ரகுநந்தனைப் பார்த்ததிலிருந்து நடந்தது அனைத்தையும் கூறினாள் பூவினா.
பூவினா கூறியதைக் கேட்ட கிரேசா, "ஓ! இவ்வளவு நடந்திருக்கு! என்கிட்ட மூச்சு விட்டியா? சரியான அழுத்தக்காரிடி நீ! நான்தான் மனசுல தோணுறதையெல்லாம் உங்கிட்ட சொல்றேன்." என்று கோபப்பட்டாள்.
"ஏய்! உங்கிட்டச் சொல்லாம வேற யார்கிட்டச் சொல்லப் போறேன்... என் ஒரே ஃபிரண்ட் நீதானே கிரேசா?"
"ஓ! அதெல்லாம் சரிதான்... சரி விடு... நீ ரகுநந்தன் கிட்ட உன் காதலை எப்ப சொல்லப்போற? "
"காதலா? அதெல்லாம் ஒன்னுமில்லை. "
"மறுபடியும் மறைக்கிற பாத்தியா? தினமும் இரவு, இந்தம்மா காத்திருப்பாங்களாம்... அவரும் நடுராத்திரின்னு கூடப் பார்க்காம வந்து நிப்பாராம்... அவர் வரலைன்னு இந்தம்மா தவிப்பாங்களாம்... ஆனா காதல் இல்லையாம். நம்புங்க மக்களே!" என்று சுற்றிலும் பார்த்தவாறு கூற,
"புரிஞ்சுக்க கிரேசா... எனக்கு ரகுநந்தன் மேல இருக்கறது ஏதோ ஒரு வகை அன்பு... "
"அதுதான்டி காதல்!!" என்று சிரித்தாள் கிரேசா.
"இல்ல! காதல்னா கல்யாணம் பண்ணிக்கத் தோணனும். இல்லையா? எனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்கத் தோணலை..."
"என்னப்பா குழப்புற? முதல் தடவை பார்த்தபொது, ஆஸ்பத்திரியில அவர விட்டு வரப் பிடிக்கலைன்னு சொன்ன?"
"ஆமா! எனக்கு அவரப் பிடிச்சிருக்கு... ஆனா அது காதல் இல்லை... ஒரு பையனை நமக்குப் பிடிச்சுட்டாலே அது காதல்னு நினைக்கிறீங்க... ஒருத்தனோட அழகோ, நீ சொன்ன மாதிரி ஸ்டைலோ இல்ல, ஏதோ ஒரு வகையில் டேலணட்டா இருக்கிறவங்களைப் பிடிக்கும்... அது… நம்ம வாழ்க்கை முழுவதும் அவரோட வாழ, வெறும் பிடிக்கும்கிறது பத்தாது... அதையும் தாண்டியதுதான் காதல்!... நாம காதலிப்பவரை எதுக்காகப் பிடிக்குதுன்னே நம்மால சொல்ல முடியாது.... அவரைத் தவிர வேறு யாரும் அழகா, டேலணட்டா இருக்கிறதாத் தோணாது. அவர விடத் திறமையான ஆட்களைச் சந்திக்கும்போது கூட... 'ம்ம் இவர் திறமையானவர்தான் ஆனா, இவர் என் காதலர் மாதிரி ஆக முடியாதுன்னு தோணனும். அந்த மனிதன் நம் மனதில் இறங்கி, நம் உயிரோடு கலந்துவிட வேண்டும்... "
"புரியற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு..." என்றாள் கிரேசா.
அவளைப் பார்த்துச் சிரித்தபடியே, "சரி உனக்குப் புரியற மாதிரி சொல்றேன்.... நீ ஐ.பி.எஸ் வேலுவை எப்படியெல்லாம் வர்ணிச்ச... ஆனா அது காதல் இல்லை.... அது காதலா இருந்தா, இது நமக்குச் சரிபட்டு வராதுன்னு உனக்குத் தோணியிருக்காது... வேலுவைத் தவிர என் வாழ்வில் எதுவும் பெருசில்லைனு தோணும்... யாருக்காகவும், எதுக்காகவும் வேலுவை விட்டுக் கொடுக்கத் தோணாது. ஒருவேளை பிரிந்தே இருந்தாலும்... உன் மனதில் வேலு இனிய உறவாகத்தான் தோன்றும்."
"பூவினா!!! நிஜாமாவே இப்படியெல்லாமா தோணும்? "
"தோணும்! யாராவது ஒருத்தர் கிட்ட மட்டும் தோணும்... அவரை நீ இன்னும் சந்திக்கவில்லை... அவ்வளவுதான்..."
"இவ்வளவு தெளிவா இருக்க! பிறகு ரகுநந்தன்?"
"அவரிடம் எனக்கு இருப்பது உயிர் தோழி மாதிரியான பந்தம்னு வச்சுக்கயேன்... எனக்குச் சரியா சொல்லத் தெரியல... ஆனா அது காதல் இல்லை."
"அப்பறம் என்ன? அவர் வரலைனா ஏன் தேடுற?"
"உன் நெருங்கிய தோழியைக் காணோம்னா தேட மாட்டியா? என்ன ஆச்சோன்னு பதறாதா? அப்படித் தான் இதுவும்."
"சரிடி! அவரப் பார்க்க, நாம ஏன் ஐ.பி.எஸ் ஆபிசரத் தேடனும்... நேரா ரகுநந்தன் வேலை செய்யும் மருத்துவமனைக்குப் போயிடுவோம்.... "
"சூப்பர் கிரேசா! வர்றியா இப்பவே கிளம்புவோம்."
"இப்பவா? அப்பக் கிளாஸு..."
"ப்ச்சு விடு! நம்ம ரெண்டு பேரும் இன்னைக்கு அரைநாள் லீவு..."
பூவினாவும், கிரேசாவும் மருத்துவமனை செல்லும் பஸ்ஸில் ஏறினர். அதே நேரத்தில் அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த வேலு பார்த்து விட்டான்.
'ஆஹா! காலேஜைக் கட் அடிச்சுட்டு எங்கேயோப் போறா... நாமும் பின்னாடியேப் போவோம்... நமக்கு வேற என்ன வேலை இருக்கு?...' என்று நினைத்து பஸ்ஸைப் பின் தொடர்ந்தான்.
அரசு மருத்துவ மனைக்குள் இரு தோழிகளும் செல்லவே, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த வேலுவிற்கு, ரகுநந்தனைப் பார்க்கத்தான் பூவினா செல்கிறாள் என்பது புரிய, கடுப்பாகி திரும்பிப் போய் விட்டான்.
தோழிகளை, பிரேத பரிசோதனைக் கூடத்துக்குச் செல்ல அனுமதிக்காததால், மருத்துவமனை ரிசப்ஷனுக்குச் சென்றனர்.
ரிசப்ஷனில் இருந்தவர், கம்ப்யூட்டரில் சரி பார்த்து, "இன்று அந்த பிளாக்கில் வேற டாக்டர்ஸ்க்கு டியூட்டி போட்டிருக்காங்க." என்றார்.
"அவர் வேற எங்காவது இருப்பாரா?"
"வாய்பில்லை... எதற்கும் சர்ஜன் பண்ற டாக்டர்ஸ் ஓய்வு அறைக்குச் சென்று பாருங்கள்." என்று கூறி, அந்த அறைக்குச் செல்லும் வழியும் சொல்லி அனுப்பினான்.
ஆனால், அந்த அறைக்கு வெளியே இருந்த நர்ஸ், தோழிகள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை… பூவினா கெஞ்சிக்கேட்கவும் காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே போன நர்ஸ்,
"அவர் இங்கே இல்லையாம்மா! நீங்க கிளம்புங்க...." என்று கூறி விட்டு அவளுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
தோழிகள் இருவரும் திரும்பி நடக்க, டாக்டர்ஸ் அறையிலிருந்து இரு கண்கள் இவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தது.
பார்த்துக் கொண்டிருந்தது யார்?
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்!
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments