வருவான்-7
கிரேசா, தன்னுடைய காதல் பிதற்றல்களையும், சரவணவேல் புராணத்தையும், சாயந்தரம் காலேஜ் முடியும்வரை நிறுத்தவே இல்லை.
'ஒரேநாளில், இத்தனை ஆழமான காதல், சாத்தியப்படுமா?' என்று ஆச்சர்யப்பட்டுப் போனாள் பூவினா... இவ்வளவு காதலை மனதில் வைத்துக் கொண்டு புலம்பும் தன் உயிர்த் தோழிக்கு நிச்சயமாக உதவி செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டாள்.
பூவினா, காலேஜ் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய அப்பா அலுவலக அறையைப் பார்த்தாள்.... பூட்டியிருந்தது.
'அப்பா இன்னும் வரவில்லையே?... எப்ப வருவார்?... அம்மாகிட்ட, அப்பா எப்ப வருவார்னு கேட்கலாம்னு பார்த்தா, அம்மாவையும் காணோமே! ' என்று தன் அம்மாவைத் தேடினாள்.
சமையலறையில் அம்மா இல்லை. தம்பி விளையாடப் போயிருந்தான். தன் அறையில் இருந்த கட்டிலில் காலேஜ் பேக்கைப் போட்டு விட்டு, முகம் கழுவி, மாற்று உடைகூட உடுத்தாமல், வீட்டின் பின்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றாள். அவள் எதிர்பார்த்தது போல், பூவினாவின் அம்மா வள்ளி, அங்கே இருந்த, மரம் செடி, கொடிகளிடம் குசலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.
"அம்ம்மாஆ!"
"பிசாசே! எத்தனை தடவை சொல்றது... திடீர்னு பின்னாடி வந்து சத்தம் போடாதேன்னு... வரும் போதே அம்மான்னு கூப்பிட்டுகிட்டு வர்றதுக்கென்ன?... தனியா நின்னுக் கிட்டிருக்கேன்ல... ஒரு நிமிஷம் பயத்துல இதயமே நின்னுடுச்சு... அறிவுகெட்டவளே! எருமை! பிசாசு..."
"முடிஞ்சிருச்சா? இப்ப நான் பேசலாமா?"
"பேசித்தொலை! "
"அம்ம்மா!.... என்ன பயம் உங்களுக்கு? வெளியே கேட் பூட்டியிருக்கு... யார் வர முடியும்?... நம்ம எல்லார்கிட்டயுமே சாவி இருக்கிறதால நாங்கதானம்மா உள்ளே வர முடியும்?" என்று செல்லமாகத் தன் தாயை பின்புறமிருந்தவாறு கழுத்தைக் கட்டிக்கொண்டு, சமாதானம் செய்தாள் பூவினா.
வள்ளிக்கு, தன் பெண்ணின் அணைப்பில் தன்னுடைய பயம், கோபம் இரண்டும் சட்டெனப் பறக்க, மகளின் கண்ணத்தைத் தடவியவாறு,
"தம்பி, அப்பாவையெல்லாம் பாரு... நிலைக்கதவைத் திறக்கும் போதே ‘அம்மா... நான் வந்துட்டேன்’னு கத்திகிட்டேதான் வர்றாங்க... இதெல்லாம் இங்கேயே பழகிக்கனும்... நாளைக்கு மாமியார் வீட்டுக்குப் போகும்போது..." என்று வள்ளி முடிக்குமுன்,
"ஏம்மா ... ஏன்? அஞ்சாங் கிளாஸ் (ஐந்தாம் வகுப்பு) பச்சை பாலகன்கிட்ட போய், ‘இந்த வருஷம் அரசுதேர்வு (பப்ளிக் எக்ஸாம்) உனக்கு.’ ன்னு பயமுறுத்துற மாதிரி, மாமியார் வீட்ல... மாமியார் வீட்லன்னு பயமுறுத்துறீங்க? அதுவும் வீடுதானம்மா... அடர்ந்த காடா? இல்லை பாலைவனமா? பயப்படுறதுக்கு?"
"இந்த வாய்தான் என்னை பயமுறுத்துது."
"அவ்வளவு கோரமாவா இருக்கு? கோரப்பல் இரண்டும் (canine) வெளியே நீண்டுருக்கோ?" என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு பூவினா கேட்டதும் வள்ளி சிரித்துவிட்டார்.
"சேட்டை!... வா! பால் சுடவச்சு தாரேன்." என்ற போதுதான், பூவினா, உடைகூட மாற்றாமல் வந்திருப்பதை வள்ளி கவனித்தார்.
"பேக் கைத் தூக்கி கட்டில்ல எறிஞ்சுட்டு அப்படியே கீழ இறங்கி வந்துட்டியா? உனக்கு எத்தனைத் தடவ சொல்றது?...." என்று வள்ளி பேசிக்கொண்டிருக்கும் போதே பூவினா,
"அறிவில்ல? காலேஜ் விட்டு வந்ததும் உடை மாத்தி, முகம், கை, கால் கழுவி விட்டுதான் கீழே இறங்கனும்னு தெரியாதா? ஏழுகழுதை வயசாகுது! இதையும் நானே சொல்லனுமா? நாளைக்கு மாமியார் வீட்டுக்குப் போயும் இப்படித்தான் பண்ணுவியா? பொண்ண வளர்த்த லெச்சணத்த பாருன்னு என்னைத்தான் திட்டுவாங்க..." என்று வள்ளி பேசுவது போலவே பேசிக்காட்டியவளின் காதைச் செல்லமாகத் திருகி,
"போ! மாடிக்குப் போய்த் துணி மாத்திட்டு வா!" என்று கண்டிப்புடன் கூறிவிட்டு, மகள் தன் அறையை நோக்கி ஓடுவதைப் பார்த்தாள்.
'இன்னும் சிறு பெண்ணாகவே இருக்கா' என்று நினைத்துச் சிரித்துக் கொண்டு, பூஜையறைக்குள் நுழைந்தார்.
அம்மாவிடம் செய்த கலாட்டாவில், வீட்டிற்கு வந்ததும் எதற்காக அம்மாவைத் தேடிப்போனோம் என்பதை மறந்துவிட்டுத் தன் அறைக்குள் சென்றாள் பூவினா.
இரவு 7 மணிக்கு அப்பா ராஜன் வந்தார்.
அப்பாவைப் பார்த்ததும்தான் பூவினாவிற்கு, 'எதற்காகவோ அப்பாவைத் தேடினோமே?' என்று யோசித்தாள்....
‘கிரேசாவிற்காக, வேலு பற்றிய விபரங்களைத் தெரிந்துகொள்ளத்தான் தேடினாள்’ என்ற ஞாபகம் வந்ததும், தன் அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
பூவினா, ராஜனின் அருகில் வந்து அமர்ந்து, ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தால், அவளுக்கு ராஜனிடம் ஏதோ தேவைப்படுகிறது என்று அர்த்தம். அப்படி எதுவும் தேவை இல்லை என்றால், அருகில் அமர்ந்ததுமே ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள், என்று பொடியன் விஜய்க்கே தெரியும்... ராஜனுக்குப் புரியாதா என்ன? மனதிற்குள் சிரித்தபடி மகளைப் பார்த்தார். பூவினா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்... பதினைந்து நிமிடங்கள் கடந்தும் பூவினா பேசுவதாகத் தெரியவில்லை.
"என்னடா? என் பொண்ணுக்கு என்ன வேணும்?" என்று சிரித்தபடி ஆரம்பித்தார்.
அவர் முகத்தில் இருந்த சிரிப்பு பூவினாவை சீண்ட,
"ஓன்னுமில்லையே!" என்றாள் கடைக்கண்ணால் ராஜனைப் பார்த்தவாறு.
"அச்சச்சோ அவ்வளவு பெரிய விஷயமாடா இந்தப் பிஞ்சு மண்டையக் குடையுது. " என்று ராஜன் கேட்க,
"நான் தான் ஒன்னுமில்லைனு சொன்னேனே ப்பா..." என்றவளிடம்
"நீ ஒன்னுமில்லைனு சொன்னாத்தான் ஏதோ பெரிய விஷயம் இருக்குன்னு அர்த்தம்." என்று மேலும் சிரித்தார்.
'எப்படி ஆரம்பிக்கிறது?' என்று தீவிரமாக யோசித்த பூவினா அமைதியாக அப்பாவைப் பார்க்கவே,
'இவ ஏன் இவ்வளவு தயங்குறா? ஒருவேளை யாரையும் விரும்பித் தொலைக்கிறேன்னு சொல்லப் போறாளோ? ' என்று நினைத்தவர், டீவி பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்தார்.
ம்ம்ஹூம் வள்ளி இந்த வீட்டிலேயே இல்லை.... அந்த சீரியலில் மூழ்கியிருந்தார். இந்த மட்டும் ராஜன் சொன்னபிறகு, அழுவாச்சி சிரியலாகப் பார்க்காமல்..... ஓரளவு நல்ல சீரியல்களைப் பார்த்தார்.
'இனி தைரியமாகப் பூவினாவிடம் பேசலாம். வள்ளி, சின்னப் பிரச்சனைக்கே பயந்துடுவா. இதுல இந்தப் பொண்ணு காதல் கீதல்னு சொல்லிட்டா அவ்வளவுதான் புலம்பியே என் அரை ஆயுசக் குறைச்சுடுவா. ' என்று நினைத்தவர்,
"யார்டா அந்தப் பையன்?" என்று கேட்டார்.
'ஆஹா அப்பாவே ஆரம்பிச்சுட்டாரே?' என்று சந்தோஷப்பட்டவளின் கண்களில் தெரிந்த ஒளி ராஜனுக்கு, அவருடைய சந்தேகத்திற்கு வலு சேர்த்தது.
"அது வந்து அப்பா... நீங்க என் மேல கோபப்படக் கூடாது ஓகே வா?" என்று தன் தந்தையைப் பார்த்தாள்.
‘பூவினா யாரையோ விரும்புகிறாள்’ என்று முடிவுக்கே வந்தவர்,
"இல்லை... சொல்லுடா." என்றார்.
"அது .... அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தாரே, ஐ.பி.எஸ் சரவணவேல் அவர உங்களுக்கு எவ்வளவு தூரம் தெரியும்ப்பா? "
'அன்னைக்கேத் தோணுச்சு. இந்தப் பொண்ணு, "இல்லை'னு சொன்னத நம்பிட்டேன். வேலு, ஐ.பி.எஸ் ஆபிசரா இருக்கார்னு கூடப் பூவினாவிற்குத் தெரிஞ்சிருக்கு ... இப்ப என்கிட்ட என்ன எதிர்பாக்குறான்னு தெரியலையே' என்று நினைத்தவர்,
"வேலை சம்மந்தப்பட்ட விஷயங்கள் தெரியும். ஏம்மா அவரப் பார்த்தாயா?"
'காலேஜுக்கு வந்தார்னு சொன்னா, அவர்கிட்டயே நேர்ல பேசிக் கேட்டிருக்க வேண்டியதுதானம்மா என்பாரோ?' என்று யோசித்தவளைப் பார்த்தவர்,
"சரி! அவரைப்பத்தி உனக்குத் தெரியனுமா?" என்று கேட்டார்.
அவ்வளவுதான் நம்ம ஹீரோயின் முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பே எரிந்தது....
அதைக் கவனித்த ராஜன்... ஓ! இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை போலிருக்கு... ஆனா இவ்வளவு சந்தோஷப்படுகிறாளே... இவ மனச விடுறதுக்குள்ள வேலுவைப் பற்றித் தெளிவாகக் கேட்டுத் தெரிஞ்சுக்கனும்.'
என்று முடிவுக்கு வந்தார்.
அவரை மேலும் யோசிக்க விடாத பூவினா,
"ஆமாம் ப்பா அவரோட வீடு எங்கப்பா இருக்கு? அவங்க வீட்ல யார் யார் இருக்காங்க ப்பா? "
'வீடா?!!' என்று அதிர்ந்தவர், "தெரியலையே ம்மா. "
'தெரியலையா?!' என்று அதிச்சியடைவது பூவினா முறையானது. இருப்பினும்,
"ஓகே வீடு தெரியலைனா பரவாயில்லை, அவரோட மொபைல் நம்பர் உங்ககிட்ட இருக்காப்பா?" என்று ஆர்வமாகக் கேட்டாள்
மகளின் ஆர்வம் தந்தையைப் பதறடித்தது.
"எனக்குப் பர்சனல் விஷயங்கள் தெரியாது டா... ஒரு ஐ.பி.எஸ் ஆபீசரா, நேர்மையான, தைரியமான பையன்னு தெரியும். மத்தபடி பர்சனலா அவர் யாரு? எப்படிப்பட்டவர்னு தெரியாது. மொபைல் நம்பர் கொடுத்தார். அன்னைக்கு நீ பண்ணிய கலாட்டாவில நம்பரை சேவ் பண்ண மறந்துட்டேன். " என்று ராஜன் கூறியதும்,
பூவினாவிற்கு புஸ்ஸ்ஸுன்னு ஆயிடுச்சு... அவள் முகம் உடனே சோர்ந்து... அதைப் பார்த்த ராஜன்.
"நான் விசாரிச்சுச் சொல்லவாடா?" என்றதும், துள்ளி எழுந்து அப்பாவின் முன் தரையில் அமர்ந்து, அவர் முகத்தை ஏகத்துக்கு ஆர்வமாய்ப் பார்த்தவாறு,
"அப்பா! ப்ளீஸ்… எனக்காக... ம்ம்? கொஞ்சம் சீரியஸாக விசாரிங்கப்பா. .. ப்ளீஸ்!"
"நீ இவ்வளவு சொல்லும்போது நான் செய்ய மாட்டேனா? ஆனா டைம் குடு... வேலை சம்மந்தப்பட்ட விபரங்களை ஈஸியா தெரிஞ்சுக்கலாம்... சொந்த விபரங்களை விசாரிக்கும்போது கொஞ்சம் கவனமாத்தான் விசாரிக்கனும். புரியுதா?" என்று கேட்டார்.
"ம்ம்ம். புரிஞ்ச்சுக்குவேம்ப்பா. உங்களை மாதிரி அப்பா கிடைக்கக் குடுத்து வச்சிருக்கனும் ப்பா. .. தேங்க்யூ." என்று கூறி விட்டுத் துள்ளிக்கொண்டு மாடிக்கு ஓடினாள்...
அவளின் இந்தச் செயல் ராஜனைக் கவலைப்பட வைத்தது.. விஷயம் கைமீறுவதற்குள் வேலுவைப்பற்றி முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.' என்று ஃபோனை எடுத்தவர், யாரையோ அழைத்து, சரவணவேலைப் பற்றி ரகசியமாக விசாரிக்கச் சொன்னார்.
மாடிக்கு வந்தவள், கிரேசாவிற்கு ஃபோன் செய்து, விபரம் கூற, அவளுக்கு, வேலு கிடைத்தே விட்டதைப் போல சந்தோஷமாக இருந்தது.
இது எதையும் அறியாத சரவணவேல், பிஸியான வேலைகளுக்கு நடுவிலும் ‘ரகுநந்தனை எப்படி சந்திப்பது?' என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
வேலுவிற்கு பூவினாவை ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் அவள் மனதில் என்ன இருக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தான். குறிப்பாக, ரகுநந்தனுக்கும் பூவினாவிற்கும் இடையே என்ன நடக்கிறது. என்பதை தெரிந்து கொண்ட பிறகே பூவினாவை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தவனாய், ஜெயராமை அழைத்தான்.
"ஜெய் உன் ஃபிரண்ட் ரகுநந்தன் எங்கே வேலை பார்க்கிறார்னு சொன்ன?" என்று கேட்டான்.
"அத நான் சொல்லவே இல்ல வேலு. நீதான் என்னைச் சொல்லவே விடலையே. "
"நான் கேட்டதுக்கு இதுதான் பதிலா?"
"ஹி...ஹி... அவர் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். " என்றான்.
"அப்படியா? ரொம்ப நல்லதாப் போச்சு... நமக்கு அங்கே ஒரு வேலையிருக்கு... உன் பால்ய நண்பன், நமக்கு உதவுவானா, இல்லையா?" என்று அஃபிசியலாக விசாரிப்பது போல் கேட்டான்.
"எந்தக் கேஸ் க்காக வேலு?" என்று கேட்டான் ஜெயராம்.
"புது கேஸ்... கொஞ்சம் ரகசியமா செய்யச் சொல்லியிருக்காங்க..." என்று மழுப்பினான் வேலு.
"அப்படியா... சரி வா போய்ப் பார்ப்போம்... நிச்சயம் நமக்கு உதவுவார்."
"அவர் எப்படி ஜெயராம்?"
"எப்படி ன்னா?"
"கேரக்டர்?"
'இப்படி பொசுக்குன்னு கேட்டா என்ன சொல்றது... ஏற்கனவே, எக்ஸாம்ல காப்பி அடிச்சேன்... அது... இதுன்னு வாய்க்கு வந்ததை உளறித் தொலைச்சுட்டேனே... இப்ப அவரப் பத்தி தெரியாதுன்னு எப்படிச் சொல்றது?' என்று பலமாக யோசிக்கும் ஜெயராமை உலுக்கிவிட்டான் ரகுநந்தன்.
"என்னடா சிலையாயிட்ட?" என்று சிரித்தான் சரவணவேல்.
"அ...ஆங்… நீ என்ன கேட்ட?"
"ம்ம்ம்... மதுரை மங்கம்மா சத்திரம் என்ன விலைன்னு கேட்டேன்."
"விளையாடாத வேலு... என்ன கேட்ட?
"அடப்பாவி! நான் உன் ஃபிரண்ட். அதாவது ஞாபகம் இருக்கா? "
"நீ இதையா கேட்ட?" என்று குழப்பத்துடன் பார்த்த ஜெயராமை அடிக்கத் துரத்தினான் சரவணவேல். அவனிடம் பிடிபடாமல் இருக்க ஸ்டேசனை விட்டு வெளியே ஓடிவந்த ஜெயராம், அப்பொழுது ஸ்டேஷனுக்குள் நுழைந்த ஜீப்பில் மோத,
"ரகுஊஊஊ!" என்று அலறி மயங்கிச் சரிந்தான்.
ஜெயராமிற்கு என்ன ஆகும்? அவன் ரகு என்று ஏன் அலறினான்?
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்!...
💍💍💍💍💍💍
0 Comments