வருவான்-6

வருவான்-6


ஜெயராமைப் பார்த்த ரகுநந்தன், உணர்ச்சி மிகுதியில் ஜெயராமின் கையைப் பிடித்துக்கொண்டு கலங்கினான். 


ரகுநந்தன் இவ்வாறு நடந்து கொள்ளவும், ‘யாரு இவர்? என்னை இவருக்குத் தெரியும் போல இருக்கே?' என்று நினைத்த ஜெயராம்,



ஜெயராம் 


"என்னை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். 


"என்னை உனக்கு அடையாளம் தெரியலையா ஜெய்?"


‘இவ்வளவு உரிமையா பேசுறார். டீசண்ட் டாவும் இருக்கார். ஆனா எனக்கு இவரை எங்கே பார்தேன்னு ஞாபகம் இல்லையே?' என்று நினைத்த ஜெயராம், ரகுநந்தனை மேலும் கீழும் பார்த்தான். 


"ஸாரி! எனக்கு ஞாபகம் இல்லை.... நீங்க இங்கேதான் வேலை பார்க்கிறீங்களா?" என்று ரகுநந்தனிடம் கேட்டான். 

ரகுநந்தன் கண்களில் அப்பட்டமாக வலி தெரிந்தது. ‘தன்னை ஜெயராமுக்குத் தெரியவில்லையே’ என்ற வலி அது.


ஜெயராமையே உற்று பார்த்த ரகுநந்தன், 


"பரவாயில்லை ஜெய்! ரொம்ப முன்னாடி நாம நண்பர்களா பழகினோம்... உங்களுக்கு ஞாபகமில்லைனா என்ன? இப்ப நண்பர்களா இருப்போம். நான் ரகுநந்தன். அரசு மருத்துவமனையில் சர்ஜனா இருக்கேன்." என்று கூறியபடி ஜெயராமின் கண்களைப் பார்த்தவாறு பேசினான் ரகுநந்தன்.


ரகுநந்தன் ஏன் தன் கண்களைக் கூர்ந்து பார்த்துப் பேசுகிறான் என்று புரிந்தது ஜெயராமிற்கு.


 'அவரைப் பற்றிய விபரங்கள் சொன்னபிறகாவது எனக்கு, அவர் யார்னு ஞாபகம் வந்துருச்சான்னு பார்க்கிறார்.... ஆனால் ரகுநந்தன் சிரிப்பையும், அவர் பார்க்கும் தோரணையையும் எங்கோ பார்த்தது போலிருந்தது. மற்றபடி எதுவும் ஞாபகமில்லை. ஒருவேளை படிக்கிற காலத்தில் ஒரே வகுப்பில் இருந்திருப்போம். நண்பனா இருந்தோம்கிறாரே? ஒருவேளை இவர் என்னிடம் நண்பனா பழகியிருக்கலாம், நான் ஜஸ்ட் வகுப்புத் தோழனாகப் பழகியிருப்பேன் போலிருக்கு. இவரைப் பார்த்தால் நல்லா படிக்கிறவர் மாதிரி இருக்கு... நான் எந்தக் காலத்தில் படிச்சேன்... ஒருவேளை இவரைப் பார்த்துக் காப்பி அடித்திருப்பேன்.' என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான்.


ஜெயராமின் முகபாவங்களைப் பார்த்த ரகுநந்தன், "அடையாளம் தெரியலைனா விடு ஜெய்..." என்று சிரித்தான்.


இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கும்பொழுது, வகுப்பறையில் இரு ஜீவன்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. 


'நான் என்ன சொல்லி அனுப்பினேன். இவன் என்ன பண்ணிகிட்டு இருக்கான்?....' என்று கடுப்பாக ஜெயராமையே உற்றுப் பார்த்தான் சரவணவேல். 




ஆனால் சரவணவேலுக்கு, ஜெயராமின் முழு உருவம் மட்டுமே நன்றாகத் தெரிந்தது. ரகுநந்தன் முகம் சுத்தமாகத் தெரியவில்லை... 


‘இயல்பாக நடக்கிறதா? அல்லது வேண்டுமென்றே எனக்கு முதுகு காட்டியபடி நிற்கிறானா? அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லையே?' என்று வேலு அப்படி இப்படி நகர்ந்து பார்த்தும், ரகுநந்தனின் முகம் தெரியவில்லை சரவணவேலுக்கு.


அதே போலப் பூவினாவிற்கு பயம், 'இந்தப் போலீஸ்காரர் ரகுநந்தன்கிட்ட என்ன பேசுறார்னு தெரியலையே. ரொம்ப நேரமா பேசுறார்.... ரகுநந்தன் முதுகுகாட்டி நிற்பதால் என்ன நடக்குதுன்னு வேற தெரியல. இதுல இந்தப் போலீஸ் வேலு (நம்ம ஐ.பி.எஸ் க்குத்தான் இப்படியொரு செல்லபெயர்) வேற அங்கேயே பார்த்துக் கிட்டிருக்கார். பேசாம எழுந்து போய் ரகுநந்தனை அனுப்பி வச்சிடுவோமா? இந்தப் போலீஸ் வேலு அப்பாகிட்ட போட்டுவிட்டுட்டா என்ன பண்றது?’ என்று பலவாறு யோசித்தவண்ணம், கையைப்பிசைந்தவாறு அமர்ந்திருந்தாள் பூவினா. 


அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெயராமிடம் ஏதோ கூறிவிட்டு, பூவினாவைப் பார்த்து, 'போயிட்டு வரேன்னு’ சொல்வது போல் தலையாட்டி விடைபெற்ற ரகுநந்தன், திரும்பி சரவணவேலை ஒருமுறை பார்த்து விட்டுக் கிளம்பினான். 


ரகுநந்தன் தன்னை பார்ப்பது சரவணவேலுக்குத் தெரிந்தது. ஆனால் ரகுநந்தனின் கண்களும் நெற்றியும் மட்டுமே சரவணவேலுக்குத் தெரிந்தது. 


சரவணவேல் பூவினாவைப் பார்க்க, 


அவள், ரகுநந்தனுக்குப் பிரியாவிடை கொடுத்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில், ரகுநந்தன் போகிறானே என்ற கவலை தெரிந்தது... அதற்குள் அவளும் திரும்பி சரவணவேலைப் பார்த்து முறைத்தாள்.


'என்னை ஏன் முறைக்கிறா? நானா அவன விரட்டி விட்டேன்.' என்று எரிச்சலாகப் பார்த்தான் சரவணவேல். ‘நான் ஏன் இப்படி நடந்துக்கிறேன்? இவ யாரு எனக்கு? இவ யார்கூட பழகினா எனக்கென்ன வந்தது?' என்று தன்னையே மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்கும்பொழுது ஜெயராம் வந்துவிட்டான்.


கிளாஸ்சை, பானுவைக் கவனிக்க சொல்லிவிட்டு, ஜெயராம் அருகில் வந்த சரவணவேல்,


"வாங்க ஸார்! நான் அவரைக் கூட்டிட்டு வரச் சொன்னேனா? இல்லை, அவரை அனுப்பி வைக்கச் சொன்னேனா?" என்று பல்லைக்கடித்துக் கொண்டு வார்த்தைகளை மென்று துப்பினான். 


"சார்! அவர் ரகுநந்தன்! என்னோட பள்ளி தோழன்." என்று வேகமாகவும் சந்தோஷமாகவும் கூறினான் ஜெயராம். 


"ஓ! அதான் வழியனுப்பி வச்சுட்டு வந்தீங்களா?" என்று நக்கலாகக் கேட்டான்.


"ஹி!ஹி! " என்று தலையைச் சொரிந்தான் ஜெயராம். பிறகு அவசரமாக,


"வேலு! ரகுநந்தன் டாக்டரா இருக்கார்." என்றான் பெருமையாக.


"உன் ஃபிரண்ட் எப்படிடா டாக்டர் ஆகிருப்பான்?... படிப்புக்கும் உனக்கும்தான் குமரிக்கும், காஷ்மீருக்கும் உள்ள தூரமாச்சே?" என்று சரவணவேல் கிண்டலடிக்க, 


அவனிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுவதாக நினைத்து, "அவர் நல்லா படிப்பார்... நான் அவரைக் காப்பி அடிச்சு பரிட்சை எழுதுவேன்." என்றான் பெருமையாக.


"காப்பியடிக்கிறதுல ஒரு பெருமையா?"


"அது இல்ல வேலு... எனக்கு டாக்டர் ஃபிரண்ட் டும் இருக்கார்ன்ற பெருமை."


"ஆமா! ஆமா! ரொம்ப முக்கியம். பழைய நண்பனைப் பார்த்ததும், நான் என்ன சொன்னேன்னே மறந்துடுச்சுல?" என்று ஆதங்கத்துடன் கேட்டான் சரவணவேல்.


"அப்படிச் சொல்லாத வேலு! நீ என் உயிர் நண்பன்."


"அப்படியா? அப்ப நான் என்ன சொன்னேன்? நீ என்ன பண்ணியிருக்க?” 


“அவரைக் கூட்டி வரத்தான் போனேன் வேலு... அவரை நீ கூப்பிடுறேன்னு சொன்னேன். ஏன்?னு கேட்டார். கிளாஸை டிஸ்டர்ப் பண்ணாதிங்கன்னு சொன்னேன். அதுக்கு எதுக்கு நான் அங்க வரனும்? நான் இங்கிருந்து கிளம்புறேன்னு சொன்னார். எப்படியோ கிளாஸ் டிஸ்டர்ப் ஆகாது இல்லையா? சரின்னுட்டு வந்துட்டேன்… ஹி ஹி!" என்றான் ஜெயராம்.


"ரொம்ப சந்தோஷம்." என்று கூறி விட்டுப் பூவினாவைப் பார்த்தான்.


 அவள், போலீஸ் பானு பேசுவதைக் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் திரும்பி சரவணவேலைப் பார்த்தும், சிரித்தான். 


அவள் புருவங்களை நெறித்துப் பார்த்தாள். பின் எதுவும் நடக்காதது போல் கிளாஸை கவனிக்க ஆரம்பித்தாள்.


மதியஉணவு இடைவேளையில், டிபன் பாக்ஸ்சை எடுத்துக் கொண்டு வேப்ப மர நிழலுக்குச் சென்றனர் கிரேசாவும், பூவினாவும். 


"என்ன கிரேசா இன்னைக்குக் கிளாஸ் பசங்களை விட்டுட்டுத் தனியா சாப்பிட கூட்டிட்டு வந்திருக்க? " என்று சிரித்தபடி கேட்டாள் பூவினா.


"உனக்கு அந்த ஐ.பி.எஸ் ஆபிசர் தெரிந்தவரா?" பூவினாவின் கண்களையே பார்த்தவாறு கேட்டாள் கிரேசா.


"சேச்சே! அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பா... இத விசாரிக்கத்தான், மரத்தடியில் சாப்பிட்டா நல்லதுன்னு, கதை சொல்லிக் கூட்டிட்டு வந்தியா? அங்கேயே கேட்டிருக்க வேண்டியதுதானே?" என்று அசால்ட்டாகப் பேசுவது போல் பேசினாள் பூவினா.


"எங்கிட்ட எதுக்கு மறைக்கிற வினு? அவர் வந்ததும், 'இவன் போலீஸ் ஆபிசரா?' ன்னு கேட்டியே? அப்போ.... 'அவன், இவன்' னு சொல்ற அளவுக்கு நெருக்கமா தெரிஞ்சவர்ன்னு தானே அர்த்தம்?"


"ஆமா… நீ எதுக்கு அவரப் பத்தி கேட்கிற?" என்று தலை சாய்த்து கேட்டாள் பூவினா.


"நீ உண்மையச் சொன்னா... நானும், அவரப் பத்தி ஏன் கேட்கிறேன்னு சொல்றேன்." என்றாள் கிரேசா.


"எனக்கு அவரப் பத்தி எதுவும் தெரியாது கிரேசா. ஒருநாள் எங்கப்பாவைத் தேடி வந்தார்..." என்று, பூவினா அன்று நடந்த விஷயத்தை, அவள் மயங்கிவிழுந்த வரை கூறினாள்...


"அவ்வளாவுதானா?... இதுக்குதான் காலையில அவரப் பார்த்துட்டு, அப்படிக் கத்தினியா?" என்று கிரேசா சிரிக்க,


"ம்ம்ம்" என்று தலையசைத்தாள் பூவினா.


"நீ அவரப் பத்தி என்ன நினைக்கிற?" என்று கிரேசா கிசுகிசுத்தாள். 


"எவரப் பத்தி?" என்று ஆர்வமில்லாமல் கேட்டாள் பூவினா.

"அந்த ஐ.பி.எஸ்..." என்று இழுத்தாள் கிரேசா.


"ஆமா!... நீ ஏன் அவர பத்தியே விசாரிக்கிற? ம்ம்?" என்று இரு புருவத்தையும் ஏற்றி இறக்கிக் கிண்டலா சிரித்தபடி கேட்டாள் பூவினா.


"ஒன்னுமில்லை." என்று கிரேசா வித்தியாசமாக நெளிய, 


"என்ன்ன கிரேசாஆஆ… ஒரு மாஆஆதிரி பேசுற? என்ன விஷயம்?" என்று கிரேசாவின் கண்களை ஆர்வமாகப் பார்த்தபடி கேட்டாள் பூவினா.


"அது...."


"அது?"


"அவர எனக்குப் பிடிச்சிருக்கு வினு... நீ அவர விரும்பவில்லையே?"


"சேஏஏச்சே..."


"நீ ஒன்னும் சொல்லலையே?"


"எதப்பத்தி?"


"எனக்கு அவர பிடிச்சிருக்குன்னு சொன்னேனே?"

"அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்ற?" என்று எதுவும் புரியாததுபோல் பூவினா கேட்டாள். 


"என்ன வினு இப்படிச் சொல்ற? எனக்கு இந்த விசயத்துல உதவி செய்யமாட்டியா?"


"இப்ப உனக்கு என்ன பிரச்சனை கிரேசா? என்கிட்ட உதவி கேட்கிற?" என்று பதற்றமாக இருப்பது போல் நடித்தாள் பூவினா.


பூவினா நடிப்பதைப் புரிந்து கொண்ட கிரேசா,


"உனக்கு விளையாட நான் தான் கிடைச்சேனா? " என்று பூவினாவின் முதுகில் ரெண்டு மொத்து மொத்தினாள். 


கிரேசாவிடமிருந்து சிரித்தபடி விலகி, "நீதானே என்னைத் தனியா கூட்டிட்டு வந்த? பின்னே யாரோட விளையாடுறது?" என்றாள்.


"வினு ப்ளீஸ் எனக்கு அவரப் பாக்கனும் போல இருக்குது."


"இப்ப வரைக்கும் பாத்துகிட்டுதானேமா இருந்த?" 



"தினமும் பாக்கனும்."


"அதுக்காகத் தினமும் அவர இங்கே வரவழைக்க முடியுமா?"


"எதாவது ஐடியா குடுப்பேன்னு பார்த்தா... இப்படிப் பேசுறியே? போ!" என்று சிணுங்கினாள் கிரேசா.


"ஏய்! ஏய்! என்னடி பண்ற? திடீர்னு இப்படியெல்லாம் பண்ணாத... இரு ஒரு ஐடியா பண்ணலாம்... ம்ம்ம்" என்று யோசித்தவள், கிரேசாவிடம், "போலீஸ்காரரைப் பாக்கனும்னா, எதையாவது தொலைச்சுட்டேன்னு தான் போய்ப் பாக்கனும்." என்றாள்.


"போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போக வேண்டாம் வினு?"


"பின்னே? தெருத் தெருவாகப் போயி, 


"ஓ...ராஜாஆஆஆஆ.....

ராஜா !

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்

வரும் வழிதோறும் உந்தன் முகம் பார்த்தேன்

காலம் கடந்தால் என்ன ராஜா ?

காதல் கவிதை சொல்லு ராஜா."


என்றா பாட முடியும்?" என்று கேட்டாள் பூவினா.


"உங்க அப்பாவைப் பார்க்க வந்தார்னு சொன்னேல... உங்க அப்பாவுக்கு, அவரோட வீட்டு அட்ரஸ் தெரிய வாய்ப்பிருக்கு... அட்லீஸ்ட், அவரோட பெர்சனல் மொபைல் நம்பராவது இருக்கும். ப்ளீஸ்! ப்ளீஸ்! எனக்காக இந்த உதவி செய்யமாட்டியா?" என்று கிரேசா கெஞ்சுவது போல் கேட்க, 


அவள் முகம் பார்த்த பூவினாவிற்கு கிரேசாவின் மனம் புரிந்தது. 


"லூசு! இதுக்கு ஏன் இப்படிக் கேட்கிற? கவலையேப் படாத... அவரோட ஜாதகத்தையேக் கொண்டு வந்து கொடுக்கிறேன்… உனக்காக இதுகூட பண்ண மாட்டேனா? "என்று பூவினாவின் வீராவேசமான பேச்சில், உருகிப்போனவளாய் பார்த்தாள் கிரேசா.


"சரி! சரி! விடு... இன்னைக்குத் தான் அவன முதல் முதலா பார்த்த? அதுக்குள்ள அவன் மேல அப்படி என்னம்மா காதல்?" என்று கேட்டாள் பூவினா.


"அவர நீ கவனிக்கலையா வினு... என்ன ஒரு அழகான, கம்பீரமான நிறம்..." என்று வானத்தைப் பார்த்து சிரித்தபடிக் கூறினாள்.


‘எங்கே பார்க்கிறாள்?’ என்று தன் தோழியின் பார்வையைத் தொடர்ந்த பூவினா, "நிற…மா? மாநிறமாத் தானே இருந்தான்?" என்று கேட்டாள். 


"ஆம்பளைக்கு மாநிறம்தான் கம்பீரமான அழகைக் கொடுக்கும்... சிவப்பா இருந்தா ஒரு கம்பீரம் இருக்காது வினு. லேசா பெண் சாயல் அடிக்கும்"


"பெரிய ஆராய்ச்சி டி. இனி நானும் கவனிக்கிறேன்." என்று பூவினா கூறியதையும் கவனிக்காமல் சரவணவேலைப் பற்றிக் பேசிக்கொண்டிருந்தாள் கிரேசா.


"அவர் நடந்து வரும் போதே எவ்வளவு கம்பீரமா இருந்துச்சு. நின்ன ஸ்டைல பார்த்தாயா? நின்னது, சட்டுன்னு திரும்பிப் பார்த்தது... சிரித்தது... கவனித்தது...னு ஒவ்வொரு அசைவிலும் ஸ்டைல்... அந்தக் கண்ண பார்தாயா? அவர் பார்க்கும் பார்வையே போதும் வினு ஒரு பொண்ணு விழுந்துடுவா... கண்ணுல என்ன ஒரு ஈர்ப்பு... சிரிக்கும்போது மனசை அள்ளிக்கிட்டு போச்சு... நல்ல சுருட்டை முடி... எவ்வளவு அழகா இருந்துச்சு பார்த்தாயா? அப்படியே அவர் முடியைக் கலைத்து விடனும்னு என் கையெல்லாம் பரபரத்தது. அவர் மீசையப் பார்த்தாயா? செல்லமா இழுத்து விடனும்போல இருந்துச்சு..."


"நிறுத்து! அந்த மனுஷன் பாடம் பாடம் னு ஒன்னு நடத்தினாரே அத மேடம் கவனிக்கவே இல்லையா?" என்று பூவினா கண்களைச் சுருக்கிக் கேட்க,


"ஆங்! அத விட்டுட்டேனே? அவர் இஷ்டபட்டு ஐபிஎல் படித்திருப்பார் போல வினு... என்ன ஒரு டேலணட்... அப்படியே, நம்ம மண்டையை திறந்து, பாடங்களை உள்ளே வைத்த மாதிரி, ஒவ்வொரு வார்தையையும் மூளைக்குள் பதிஞ்சது... இன்னைக்குப் பூராவும் அவர் பாடம் எடுத்தாலும் கேட்டுக்கிட்டேஏ இருக்கலாம்... அவர் குரல்... ஹப்பா... மெஸ்மரைசிங் வாய்ஸ்... காதுக்குள் போயி இதயத்தைத் தொட்டுச்சு. ......"


கிரேசா, சரவணவேலை விரும்புகிறாள்...வேல் பூவினாவை சைட் அடிக்கிறான் .... பூவினா ?... 


அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம் 


💍💍💍💍💍💍








Post a Comment

0 Comments