வருவான்-10

 வருவான்-10



மருத்துவமனையை விட்டு வெளியே வந்த தோழிகளை, அருகில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்தான் வேலு. பூவினா மறுக்கவே,


"ஏய் ஹோட்டலுக்கு போகலாம் பா… இன்னைக்கு எங்கம்மா லெமன் ரைஸ்தான் குடுத்துவிட்டிருக்காங்க.... ஓசில வெட்ட, சான்ஸ் கிடைச்சிருக்கு மிஸ் பண்ணவேணாம் வினு." என்று கிரேசா, பூவினாவின் காதில் கிசுகிசுத்தாள்.


"ப்ச்சு! வா எங்க வீட்டுக்குப் போய் நல்ல சாப்பாடே சாப்பிடலாம்." என்றாள் பூவினா.


"ஸிஸ்டர் என்ன சொல்றாங்க?" என்று வேலு கேட்டதும், 


"ம்ம்... வீட்ல போய்ச் சாப்பிடலாம்னு சொல்றாங்க." என்று நீட்டி முழங்கினாள் பூவினா.


அவர்கள் இருவரும் பேசியதை கவனித்திருந்த வேலு சிரித்தபடி.


"உனக்குத் தான் என் கூட வந்து சாப்பிட பயம்..." என்றான் கிண்டலாக.


"பயமா? எனக்கா? ஹ! அதுக்கு வேற ஆள பாருங்க." என்று அசால்ட்டாகப் பதில் கூறினாள் பூவினா.


"என்ன செய்யறது? உன்னைப் பார்த்துத் தொலைச்சுட்டேனே..."


"என்ன நக்கலா?"


"இல்ல டார்லிங்.... ஒன்லி சறுக்கல்"


"என்னது?!!"


"சறுக்கல் மா.... மனசு சறுக்கிடுச்சு..."


"எங்க அப்பா சொன்னத வச்சு அட்வான்டேஜ் எடுத்துப் பேசாதீங்க... அவரே தப்பா புரிஞ்சுக்கிட்டு என் உயிரெடுக்கிறார்.... இதுல நீங்க வேற,"


"உங்கப்பா பேசியத மட்டும் வச்சு உன் முன்னாடி வந்து நிக்கல... நேத்து உன் கண்ணு சொல்லுச்சு..."


"ஹாங்! அப்புறம்? வீணா மனச கெடுத்துக்கிட்டு திரியாதீங்க... எனக்கு எவன் மேலயும் காதலும் இல்ல...மோதலும் இல்ல..."


" ஹப்பா! இது போதுமே! இது… போ...துமே..."


"நான்தான் உங்க மேல காதல் இல்லைனு சொல்லிட்டேன்ல பின்ன என்ன?"

"ஆனா... எங்கூட மோதல் இருக்குல? உன் மனசாட்சியை தொட்டு சொல்லு... வேற எவங்கூட இப்படி சண்டை போடுற? ம்ம்? எங்கூட மட்டும்தானே?!! நீ சொன்ன மாதிரி இப்ப மோதல். .... அப்புறம்?!! உன் மனசுல நான் வந்து ரொம்ப நாளாச்சு டார்லிங்... நீ உணரல அவ்வளவுதான்... இப்ப நீ என் கண்ணுக்குள்ள நிக்கிற மாதிரி... ஒருநாள் நான் உன் கண்ணுக்குள்ள நிப்பேன். ..."


"இங்க பாருங்க! இவ கேட்டான்னுதான், நான் எங்கப்பாகிட்ட உங்களப் பற்றிய விவரங்களக் கேட்டேன்... மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. போதுமா?"


"இது போதுமே! தெரியாம கேட்கிறேன்... உன் ஃபிரண்ட்ஸ் இதுவரை யாரையும் விரும்பினதா சொன்னதே இல்லையா? அவங்க சொன்ன பசங்களோட விபரங்களை நீ சேகரிச்சியா?"


"அது என்ன தேவைக்கு?"


"அதையேதான் நானும் கேட்கிறேன்.... இப்ப மட்டும் ஏன்?... அதுவும் உங்கப்பாகிட்டயே போய்... உன் மனசுல நான் இருக்கேன்... என்னைப் பற்றித் தெரிஞ்சுக்க உனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கல... கிரேசா சொன்னதும், அவளக் காரணமாக்கிட்ட..." என்று வேலு கூறவும், 


இவன் திருடன்! இவன் மனசில் இருப்பதை என் மனசுக்குள் திணிக்கப் பார்க்கிறான்... இங்கேயே நின்னா, என் வார்த்தையை வச்சே என்னை மடக்கிடுவான்.' என்று நினைத்த பூவினா,


"நாங்க கிளம்புறோம்." என்று நடக்க ஆரம்பித்தாள்... 


"உண்மைய ஒத்துக்கோ... " 




"வா! கிரேசா!" என்று கூறி கிரேசாவை இழுத்துக் கொண்டு செல்ல, எதிரில் ராஜன் நின்றுகொண்டிருந்தார். 


வேலு, பூவினா, கிரேசா மூவரும் அதிர்ச்சியில் பேச்சு வராமல் நின்றனர்.


ராஜன், பூவினாவைக் கோபமாகப் பார்த்தார் ... 


வேலு, ராஜன் அருகில் வந்து,


"ஸார் நாங்க எதார்த்தமாகத் தான் பார்த்துக் கொண்டோம்... நிஜமாக ஒருவரை ஒருவர் சந்திக்க வரல." என்று கூற,


"உங்களுக்குள் பிரச்சினை தீர்ந்ததும், நீங்க என்னை வந்து பார்க்கிறதா சொன்னீங்க... ஆனா உங்களுக்குள் பிரச்சினை தீர்ந்தமாதிரி தெரியலயே?" என்று கேட்டார் ராஜன்.


"ஸார்! தப்பா எடுத்துக்காதீங்க! நிச்சயம் நான் உங்களப் பார்க்க வரேன்."


"சந்தோஷம்!" என்று கூறியவர் முன்னால் நடக்க அவரை இரு தோழிகளும் பின்தொடரந்தனர்.


இருவரையும் வீட்டின் வாசலில் இறக்கிவிட்டு ராஜன் கிளம்ப,


"அங்கிள்! நான் உங்க கூடப் பேசனும்னு வந்தேன். எப்ப வருவீங்க?"


'தன்னுடைய காதல் விஷயமாகப் பேசத்தான் பூவினா, கிரேசாவை அழைத்து வந்திருக்கிறாள்' என்று நினைத்த ராஜன்,


"ஏன் அத உன் ஃபிரண்ட் எங்கிட்ட நேரடியாகச் சொல்லமாட்டாங்களா? எதுவாக இருந்தாலும் சாயந்தரம் பார்த்துக்கலாம். நான் கோர்ட்டுக்கு அவசரமா போயிட்டிருக்கேன். ஏற்கனவே லேட்டாயிடுச்சு... போயிட்டு வரேன்." என்று இருதோழிகளிடமும் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.


வீட்டிற்குள் வந்த பூவினாவையும் கிரேசாவையும் பார்த்த வள்ளி,


"என்ன காலேஜ் ஸ்ட்ரைக்கா?" என்று கேட்ட அம்மாவை சமாளித்துவிட்டு பூவினாவின் அறைக்குள் சென்றனர் தோழிகள்.


"உங்க அப்பாகிட்ட, நல்லா கையும் களவுமாக மாட்டிக்கிட்டோம். இப்ப நான் சொன்னா உங்கப்பா நம்புவாங்களா வினு பயமாயிருக்கே?" என்று கேட்டாள் கிரேசா.


"எனக்கும் அதே சந்தேகம்தான் கிரேசா... ஆனா இனி என்ன பண்றது?"


"வேற வழி எதாவது இருக்கானு பார்ப்போம் வினு."


"எனக்கு மூளை வேலைசெய்யல. உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா? ரகுநந்தனை வேற பார்க்க முடியல... அது வேற எனக்குப் பயமாயிருக்கு. ரெண்டு நாளாவே எங்கப்பா கிட்ட வசமா மாட்டுறேன். " என்று புலம்பியவளைப் பார்த்த கிரேசா,


"அப்பா தானே வினு... என்ன செஞ்சிடப் போறார்? மிஞ்சி மிஞ்சிமப் போனா அடிப்பாரா? அந்த பயத்தை விட்டுட்டு யோசிச்சோம்னா எதாவது வழி கிடைக்கும்."


"அடிக்கலாம் மாட்டார்..."


"பின்ன என்ன?"


"...."


சிறிதுநேரம் இரு தோழிகளும் யோசனையில் இருக்க...


"ரகுநந்தன் வீடு தெரியுமா?" என்று கேட்டாள் கிரேசா.


"ம்ஹூம் தெரியாதுப்பா. "


"ஐ.பி.எஸ் ஆபிசர் சொல்றது சரிதான் போலயே?!! ரகுநந்தனைப் பற்றி அப்பாவிடம் கூறி விசாரிக்கலையா?"

என்று கிரேசா கேட்டதும் சுர்ர்ரென்று கோபம் ஏற,


"அவர் எனக்கு ஃபிரண்ட். அதனால் அவர பத்தித் தெரிஞ்சுக்கல. .. நீயும் எதையாவது உளராம ஏதாவது உருப்படியாச் சொல்லு." என்று பூவினா எகிற,


"சரி விடு! நாமே கண்டு பிடிப்போம். அவர நீ எங்க முதல்முறையாப் பார்த்தே? என்ன பேசினே?ன்னு சொல்லு எதாவது கிடைக்குமான்னு பார்க்கலாம்."


"லூசா நீ? நாம இன்டஸ்ட்ரியல் விசிட் போனோமே! அன்னைக்குத்தான் முதல்முதலாகப் பார்த்தேன். நீயும் தானே வந்த."


"ஆனா அன்னைக்கு அங்கே இருந்தவங்கள்ள யாரு ரகுநந்தன்னு எனக்குத் தெரியாதே வினு. அதைவிடு! நீ நடந்ததைச் சொல்லு."

இன்டஸ்ட்ரியல் விசிட் அன்று நடந்தவைகளை பூவினா கூறத்தொடங்கினாள்.


"விசிட் முடிஞ்சு நீ போகும்போது, என்னைச் சீக்கிரம் வா ன்னு சொன்ன, அப்பதான் அவர் என்கிட்ட முதன்முதலாகப் பேசினார்."


"அப்போ அவர்கூடவா நீ பேசிக்கிட்டிருந்த?" என்ற கிரேசா, நெற்றியை அழுந்தத் தடவியபடி ரகுநந்தன் முகத்தை ஞாபகத்துக்குக் கொண்டு வர முயற்ச்சித்தாள். பூவினா அடுத்து நடந்ததைத் தொடர்ந்தாள்...


"ரகுநந்தனின் தனி அறையில் நான், அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது நீயும், மஞ்சுவும் வந்து என்னைக் கூப்பிட்டீங்க.. அப்பவும் எனக்கு அவர விட்டு வர... என்று சொல்லிக் கொண்டிருந்தவளை,


"நிறுத்து! நீ எதைச் சொல்ற? பரிசோதனை கூடத்தின் உள்ளே போய் நின்னுகிட்டு இருந்தியே அதையா சொல்ற?"


"ஆமா!"


"அப்ப நீ ரகுநந்தனோட பேசிகிட்டு இருந்தியா? நான் வந்து பார்த்தப்ப நீ மட்டும் தானே நின்னுகிட்டு இருந்த?.... அந்த அறைக்குள்ள வேற அறை இருந்துச்சா என்ன? " என்று யோசனையும், குழப்பமாகவும் கிரேசா கேட்க,


"கண்ணும் போச்சா? அப்போ அவர் என் முன்னாடி தான நின்னுகிட்டு இருந்தார்?" என்று பூவினா கலாய்க்க,


கிரேசாவிற்கு குழப்பம் அதிகமாகியது. கிரேசா யோசிப்பதைப் பார்த்த பூவினா,


"அன்னைக்கு இருந்த மனநிலையில் நீ சரியா கவனிக்கலையா?... அப்புறம் நான் அவர்கிட்ட பேசிட்டு..." என்று அனைத்தையும் கூறி முடித்தாள் பூவினா. 


பூவினா பேசுவதைக் கூர்ந்து கவனித்த கிரேசாவிற்கு எவ்வளவு யோசித்தும் ரகுநந்தனை அந்த அறையில் பார்த்தது போலத் தோணவே இல்ல... 


அடுத்தடுத்து பூவினா பேசியதை கவனித்தாலும், 'எவ்வளவு அவசரமா இருந்தாலும் ஒரு மனுஷன் நிக்கிறது கூடவா தெரியாது?' என்று தோன்ற, அதைப் பூவினாவிடம் கிரேசா கேட்க,


"சில நேரம் அப்படிதான் இருக்கும் கிரேசா... நான் ரோட்டுல நடந்து போகும்போது, 'நான் போகவேண்டிய இடத்தைப் பத்தியே நினைச்சுகிட்டுப் போவேன்... அப்போ எதிரில் எங்கப்பாவே வந்தாலும் என் கண்ணுக்குத் தெரியாது... என் யோசனை எல்லாம் வேற இடத்தில் இருப்பதால், எங்க அப்பாவை நேருக்குநேரா பார்த்தாலும் எனக்குத் தெரியாது... இதுமாதிரி நிறையதடவை நடந்து, ஃபிரண்ட்ஸ் என்மேல கோபப்படக்கூட செஞ்சிருக்காங்க." என்று கூறினாள் பூவினா. அதோடு,


"இப்ப, உனக்கு அவரத் தெரியுறதா முக்கியம்? அவர எப்படி பார்க்கிறதுன்னு யோசி!" என்று கூறியும் கிரேசாவின் மனம் சமாதானம் அடையவில்லை.

 

'இது இவ அனுபவம்... எனக்கு இந்தமாதிரி அனுபவமில்லையே?' என்று அதிலேயே முரண்டிக்கொண்டிருந்தது கிரேசாவின் மனம்.


"ஒன்னு செய்வோம்... இன்னைக்கு ரகுநந்தன் வந்ததும், நாம ரெண்டு பேரும் சேர்ந்து போயி பேசிவிடுவோம். உங்கப்பா பாத்துட்டாலும், ஏதோ நோட்ஸ் கேட்டிருந்தேன்... அவருக்கு ராத்திரி தான் ட்யூட்டி முடியும்... எங்க வீட்ல வச்சு அவர்கிட்ட நோட்ஸ் வாங்க முடியாது அதனால இங்கே வரச்சொன்னேன்னு சொல்லிடலாம். எப்படி?" என்று கிரேசா பெருமிதமாகக் கேட்க, 


பூவினாவிற்கும் யோசனை சரியாகப் பட்டது.


"கிரேசா இன்று இரவு எங்க வீட்ல தங்கட்டும்" என்று கிரேசா வீட்டில் அனுமதி வாங்கிவிட்டு இரவுக்காகக் காத்திருந்தனர்.


மாலைநேரம் வந்த ராஜனிடமும், "ஒரு நோட்ஸ் வாங்குவதற்காக இங்கே வந்தேன்" என்று கூறி சமாளித்தனர்.


இரவு மணி ஒன்பது முப்பது ஆகவும், வேகமாக ஜன்னல் அருகில் சென்றாள் பூவினா. 


அங்கே ரகுநந்தன் நின்றுகொண்டிருந்தான். பூவினா ரகுநந்தனை நிற்கும்படி கூறிவிட்டு, கிரேசாவை அழைக்க, அவள் வந்து ஜன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தாள். 


கிரேசாவை எதிர்பார்க்காத ரகுநந்தன் திடுக்கிடுவது பூவினாவிற்கு தெரிந்தது. 


"இவ என்னோட நெருங்கிய தோழி!"என்றாள் பூவினா. ரகுநந்தன், கிரேசாவையே உற்றுப் பார்க்க,


"எங்க நிக்கிறார் ரகுநந்தன்?" என்று கேட்டாள் கிரேசா.


"அந்தப் பூவரசமரத்துக்குப் பக்கத்துல." என்று பூவினா கைநீட்டி காட்டினாள்.


அந்த மரத்தடியில் யாரும் நிற்பது போலத் தெரியவே இல்லை கிரேசாவிற்கு. 


நன்றாகக் கண்களைக் கசக்கி விட்டு மீண்டும் பார்த்தாள்... 


மரத்தின் நிழல் கூட அங்கே இல்லை. கிரேசா, பூவினாவைப் பார்க்க, அவள் அந்த மரத்திற்கு அருகிலேயே பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.


கிரேசாவிற்கு லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்தது. மீண்டும் மரத்தைச் சுற்றிலும் பார்த்தாள் கிரேசா. எதுவும் தெரியவில்லை. 


ஆனால் பூவினா சைகையில் பேசிக்கொண்டிருந்தாள். பூவினாவின் கையைப்பிடித்து ஐன்னலுக்கு இந்தப்புறம் இழுத்த கிரேசா,


"எனக்கு அங்கே யாருமே தெரியல வினு. நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்க?" என்று கூறிய கிரேசாவிற்கு வேர்த்து விறுவிறுத்தது... 


கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிய, பூவினா, கிரேசாவை ஒரு முறை பார்த்து விட்டு, மீண்டும் ரகுநந்தனைப் பார்க்க, 


அவன், அங்கு நின்று கொண்டு சிரித்தான். அவனிடம், 'நில்லுங்க இதோ வரேன்' என்று சைகையில் கூறியவள். கிரேசாவிடம், 


"நீ இங்கேயே நின்னு பாரு. நான் ரகுநந்தன் கிட்ட போய் நிக்கிறேன் அப்பவாவது சரியா பாரு!" என்று கூற,


"வேண்டாம் வினு... நீ தனியா போக வேண்டாம்." என்று பதறினாள் கிரேசா.


"அப்போ நீயும் கூட வா!" என்றாள் பூவினா.


"வேண்டாம்! சொன்னா கேளு வினு அங்க யாருமே இல்லை." என்ற கிரேசாவை ஒரு மாதிரி பார்த்தாள் பூவினா.


"என்ன பயம் உனக்கு? நான் அங்கே போறேன். அப்பா பார்த்து விட்டாலும் நீ இங்கிருந்து கையாட்டு, அப்பாவை சமாளிச்சுடலாம். என்று கூறிய பூவினா நடக்க, 


"நில்லு வினு... இதே நேரத்தில தானே ஐ.பி.எஸ் வருவார். அவர் வரும்வரை பொறுப்போம்... " என்று கிரேசா கூறியதும், 


"நீ என்னை எங்கப்பாகிட்ட மாட்டிவிட வழி சொல்ற... வேலு வரும்போது நான் வெளியே போனா, வேற வினையே வேண்டாம்." என்று பூவினா தலையில் கைவைக்க,


"வினை எது? ன்னு உனக்குத்தான் தெரியல வினு. கொஞ்சம் பொறு நான் நிருபிக்கிறேன்." என்றவள், ஒரு துப்பட்டாவை இறுக்கி சுருட்டி பந்துபோல் செய்து, ஜன்னல் வழியாக வீச எத்தனிக்க, 


"நீ என்ன பண்றேன்னு கொஞ்சம் சொல்லிட்டு செய்றியா?" என்று பூவினா கேட்டாள்


"நான் இந்தத் துப்பட்டாவை நீ சொல்லும் இடத்தில் குறிபார்த்து எறிகிறேன். அந்த இடத்தில்தான் ரகுநந்தன் நிற்கிறானானு மட்டும் சொல்லு... மத்ததை அடுத்து சொல்றேன்." என்றவள், பால்கனிக்கு வந்து, துப்பட்டாவை வீச, அது சரியாக ரகுநந்தன் முன்னால் விழுந்தது. 


"சரியா போட்டிருக்கேனா? என் கண்ணுக்கு அங்க யாருமே தெரியல." என்று கிசுகிசுத்தவள் மிரண்டு போனாள். 


ஏனென்றால் அந்தத் துப்பட்டாவை எடுக்க, பூவினாவின் தம்பி விஜய் சென்றுகொண்டிருந்தான். 


"ஐய்யோ! விஜய்! அங்கே போகாத!" என்று கத்திவிட்டாள் கிரேசா.

மேலே இருவரையும் பார்த்த விஜய்,


"என்ன பந்து விளையாடுறீங்களா? இருங்க அப்பாகிட்ட சொல்றேன்." என்றவன் சென்று ரகுநந்தன் காலடியில் கிடந்த துப்பட்டாவை எடுத்துக்கொண்டு வர,


பூவினாவிற்கு முதல்முறையாக சந்தேகம் வந்தது. ஏனென்றால், துப்பட்டாவை எடுக்கச் சென்ற விஜய், ரகுநந்தனிடம்,


"யார் நீங்க? இங்க என்ன பண்றீங்க?" என்று கேட்காமல் வந்துகொண்டிருந்தான்.... 


அட்லீஸ்ட், 'யார் இது?' என்பது போல் ரகுநந்தனை விஜய் பார்க்கவேயில்லை... 


ரகுநந்தனின் காலடியில் இருந்த துப்பட்டாவை எடுக்க, 'கொஞ்சம் தள்ளிக்கோங்க, இதை எடுத்துக்கிறேன்.' என்றாவது கூறியிருப்பானே?!!!'


       விஜய் மாடிக்கு வர, 


பூவினா ரகுநந்தனைப் பார்த்தாள். அவன் மென்மையான சிரிப்பொன்றை சிந்தியவாறு நின்றுகொண்டிருந்தான். 


கடைசி நம்பிக்கையில், "ஏண்டா அங்கே யாரோ நிக்கிறாங்க என்ன? ஏதுன்னு கேட்காம வர்ற?" என்று பூவினா விஜயிடம் கேட்டாள். 




"எங்கே?" என்று கேட்டவாறு வந்த விஜய், பூவினா காட்டிய இடத்தைப் பார்த்துவிட்டு,


"அங்கே யார் இருக்கா? என்ன கலாய்க்கிறியா? அங்க என்ன உன் தலையா இருக்கு? போ! ராத்திரி நேரத்தில விளையாடிகிட்டு, போ! போய்த் தூங்கு. இல்ல அப்பாகிட்ட சொல்லிக்கொடுத்துவிடுவேன்." என்று மிரட்டி விட்டு மீண்டும் அக்கா சொன்ன இடத்தில் யாரும் இருக்கிறார்களா? என்று உற்று பார்த்தான்.


விஜய் மீண்டும் உற்று பார்க்கும்போது அவன் முகத்தில் தெரிந்த குழப்பமே, அவன் பொய் சொல்லவில்லை என்பதை உறுதி செய்ய, 


அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமல், கிரேசாவையும், விஜய்யையும் இழுத்துக் கொண்டு பால்கனியிலிருந்து அறைக்குள்   ஓடி வந்துவிட்டாள் பூவினா.


"விஜய் இன்னைக்கு இங்கே எங்கூட படுத்துக்கிறியா? என்று பூவினா கேட்பதற்குள் குரல் தந்தியடிக்க, அவள் பயத்தைப் பார்த்தவன், 


"சரி" என்று கூறி லேயர் கட்டிலின் மேலே ஏறினான், 


பூவினா கட்டிலில் அமர்ந்தவள், ஜன்னல் திறந்து இருப்பதை பார்த்து விட்டு, பயத்தில் கண்கள் விரிய, அவள் பயத்தை புரிந்து கொண்ட கிரேசா, ஜன்னல் கதவை அடைக்கப் போனவள், மீண்டும் மரத்தடியில் பார்க்க, 


சட்டென்று அந்த இடத்திலிருந்து ஒரு வெண்புகை வந்து கிரேசாவின் முகத்தில் மோத, பயத்தில் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.


ரகுநந்தன் யார் கண்ணுக்கும் தெரியவில்லையா? அல்லது மறைந்து கொள்கிறானா? 


அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்! 


💍 💍 💍 💍 💍 💍 💍 💍 💍 



Post a Comment

0 Comments