வருவான்-11

 வருவான்-11


   கிரேசா மயங்கி விழவும், பூவினா பதறி எழுந்து, கிரேசா அருகில் செல்ல விஜய்யும் வேகமாக ஓடிவந்து,


  "அக்கா… அக்கா... என்னாச்சு?" என்று கத்தி எழுப்ப முயன்றவன், அருகில் இருந்த டேபிளின் மேல் இருந்த ஜக்கை எடுத்து வந்து அதிலிருந்த தண்ணீரை கிரேசாவின் முகத்தில் தெளிக்க, மெல்ல கண்விழித்தவள்,  


  "வினு! அங்கே...அங்கே..." என்று ஜன்னலைக் காட்டினாள் கிரேசா. 


உடனே அங்கு சென்று பார்த்த விஜய், 


  "இங்கே என்ன அக்கா இருக்கு?" என்று அந்தத் தெரு முழுவதும் கண்களால் துழாவினான். 




  அதற்குள் சப்தம் கேட்டு மாடிக்கு வந்த ராஜன், வள்ளி இருவரும், கிரேசா, பூவினாவின் மடியில் படுத்திருப்பதை பார்த்தவர்கள்,


  "என்ன ஆச்சு பூவினா?" என்று பதறிக் கேட்டனர்.


'இவர்களிடம் எப்படிச் சொல்வது? எனக்கே ஒன்னும் சரியா தெரியலையே!' என்று நினைத்த பூவினா,


  "ஒன்னுமில்லை ப்பா எதையோ பார்த்துப் பயந்துட்டா." என்று  பாதி உண்மையை மட்டும் கூறினாள். 


பூவினாவிற்கு ரகுநந்தன் மேல் சந்தேகம் வந்தாலும், அவனைக் காட்டிக் கொடுக்க மனம் தயங்கியது. அதோடு ரகுநந்தனைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில், தவறாக எதையும் சொல்லி,  குடும்பத்தினரையும் பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்தாள் பூவினா.


  அக்காவின் முகத்தைப் பார்த்த விஜய்க்கு அவள் என்ன நினைக்கிறாள் என்பது புரிய, அவனும்,


  "நான் இங்கே தானப்பா இருக்கேன். நீங்க ஏன் தூக்கத்தைக் கெடுத்துட்டு ஓடி வர்றீங்க?" என்றான்.


 பூவினாவும், விஜய்யும் நடந்த விஷயத்தைப் பெற்றோர்களிடம் மறைப்பதை நன்றாகப் புரிந்துகொண்ட கிரேசா, 


‘வீட்டுப் பெரியவங்க கிட்ட மறைக்கலாமா?’ என்று குழம்பிப் போய் அக்கா, தம்பி இருவரின் முகத்தையும் பார்த்தாள்.


"இதுக்குதான் சீக்கிரமா தூங்கிடுங்கன்னு தலையால அடிச்சுக்கிறேன். ராத்திரி பத்தரை மணிக்கு வயசுப் பொண்ணுங்க முழிச்சுக்கிட்டிருந்தா இப்படிதான் இல்லாத கற்பனையெல்லாம் வரும்." என்று திட்டினாள் வள்ளி.


  "இப்ப என்ன? அதான் ஒன்னுமில்லைனு சொல்றாங்கல்ல..." என்று வள்ளியை சமாதானப்படுத்தியவருக்கு,


பூவினா, கிரேசா, விஜய் மூவரும் எதையோ மறைப்பது புரிந்தது. விஜய்யும் அவர்களுடன் இருப்பதால், பயப்படும்படி எதுவுமிருக்காது... அவனால் சமாளிக்க முடியற விஷயமாக இருந்தால் மட்டுமே என்னிடம் மறைப்பான். என்று நம்பிய ராஜன்,


"விளையாடினது போதும். மூணுபேரும் தூங்குங்க..." என்று பிள்ளைகளிடம் கண்டிப்புடன் கூறி விட்டு, வள்ளியைப் பார்த்து "வா!" என்று தலையசைத்து விட்டுக் கீழே இறங்கினார்.


  ராஜன் கீழே இறங்கவும்,


  "அப்பா நாங்களும் உங்க ரும்லயே படுத்துக்கவா?" என்று பூவினா கேட்டதும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியாக, ராஜனும், விஜய்யும் பூவினாவைப் பார்த்தனர்.


 இரண்டு படி இறங்கியவர், "ஏன்டாம்மா? என்ன ஆச்சு?" என்று கேட்டபடி பூவினாவின் அருகில் வந்து அமர்ந்தார்.


"என்னக்கா? நான்தான் இங்கேயே இருக்கேன்னு சொன்னேன்ல? " என்ற விஜய்,


  "நீங்க போங்க ப்பா நான் பார்த்துக்கறேன்." என்றான் விஜய்.


'எதைப் பார்த்து, அக்கா இருவரும் பயப்படுகிறார்கள் என்று தெரிந்து அந்த பயத்தைப் போக்க நினைத்தான் விஜய்... கீழே சென்று விட்டால் பெற்றவர்களையும் பயமுறுத்தி விடப் போகிறாள் என்று நினைத்தான். 


  ஆனால் ராஜன், பூவினாவின் முகத்தில் தெரிந்த குழப்பத்துடன் கூடிய பயத்தைக் கவனித்தார்.


  "சரி! வாங்க எல்லோரும் ஒரே ரூமில் படுத்துக்குவோம். எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்." என்று கூறி அனைவரையும் தங்களுடைய பெட்ரூமிற்கு அழைத்துச் சென்றார்.


    காலையில் எழுந்து விஜய் பள்ளிக்கும், பூவினா, கிரேசா இருவரும் காலேஜுக்கும் புறப்பட்டனர். 


காலை உணவை வள்ளி பரிமாற, பூவினா, கிரேசா, விஜய் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.


'முதல்நாளிரவு என்ன நடந்தது?' என்று கேட்கலாமா?' என்று  யோசித்த விஜய், 


பூவினா எந்தச் சலனமும் இல்லாமல் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு, 'அக்காவே மறந்து இருக்கிறாள்... நாம போய்க் குழப்ப வேண்டாம்.' என்று முடிவுக்கு வந்தவனாக, காலை உணவை முடித்து, மதியஉணவு இருந்த லன்ச் பேக் கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.


பேப்பர் படித்தாலும் பூவினாவின் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தார் ராஜன். 


அவள் யாருடனும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தைப் பார்த்தவருக்கு,  'அவள் மனதில் ஏதோ ஒடிக்கொண்டிருக்கிறது.' என்பது தெளிவாகப் புரிந்தது. ஆனால் நேற்று இரவில் பூவினாவின் முகத்தில்தெரிந்த குழப்பத்துடன் கூடிய பயம் இப்ப இல்லை... 'ஒரு முடிவுக்கு வந்துட்டா போல' என்று ராஜனும்

"கண்ட கண்ட பயங்கர கதைகளைப் படித்து விட்டு ராத்திரி நம்மையும் கலங்கடிச்சுட்டாளுகளே.... காலேஜ் போயிட்டு வரட்டும் பேசிக்கிறேன்.' என்று வள்ளியும் நினைத்துக் கொண்டனர்.


வீட்டை விட்டுத் தாண்டும் வரை எதுவுமே நடக்காதது போலிருந்த பூவினா, பஸ் நிறுத்தம் வந்ததும் கிரேசாவிடம்,


  "நீ காலேஜுக்கு போ! நான் வேலுவைப் பார்க்கப்போறேன்." என்றாள்.


"நீ அமைதியா இருக்கும் போதே நினைச்சேன்.... நீ ஒரு முடிவுக்கு வந்துட்டேன்னு. ஆனா இப்ப  ஐ.பி.எஸ் ஆபிசரை எதுக்குப் பார்க்கப்போற?  யாரோ நம்மைச் சும்மா பயமுறுத்துறாங்கன்னு நினைக்கிறியா வினு?" என்று கேட்டான் கிரேசா.


  "அப்படியில்லை கிரேசா, ரகுநந்தனை  உன்னாலும்,  என் தம்பியாலும்தான் பார்க்க முடியவில்லை. வேலு பார்த்தார்... அவர் கண்ணுக்கு ரகுநந்தன் தெரிந்தாரான்னு? தெரிஞ்சுக்கனும்." என்றாள் பூவினா யோசனையுடன். 


"ஐ.பி.எஸ் பார்த்திருக்காரா? என்ன வினு சொல்ற?"


  "ஆமாம்!" என்றவள், காலேஜுக்கு வேலு வந்த அன்று, ரகுநந்தனும் வந்ததையும், அவரைப் பார்த்த வேலு, ஜெயராமை அனுப்பி பேசச் சொன்னதையும் கூறினாள்.


  "அப்போ! அந்த இன்னொரு போலீஸ்காரரும் அந்த ஆவி..." என்று  கிரேசா கூறும்போதே, பூவினா குறுக்கிட்டு, 


  "ரகுநந்தன்னு சொல்லு கிரேசா! எப்படி இருந்தா என்ன? அவர் நல்லவர்... " என்றாள்.


  "இன்னுமா அவர நம்புற?"


 "எப்படி இருந்தாலும் ரகுநந்தன் என் உயிர்த்தோழன்... யார் கண்ணுக்கும் தெரியாதவர் என் கண்ணுக்கு மட்டும் தெரிந்தார்... இன்னும் சொல்லப்போனா முதல்நாள், என் கண்ணுக்கு அவர் தெரிஞ்சதை, அவர் குரல் எனக்குக் கேட்டதை, அவரே நம்பல... என் முகத்தை உற்று உற்று பார்த்தார். அவர் என்னை எதாவது செய்தாரா? இல்லையே..." என்றாள்.


  'ஆனா என்னை வச்சு செஞ்சுட்டாரே' என்று அரண்ட கிரேசாவிற்கு,  பூவினா கூறியது உண்மை என்றாலும், ரகுநந்தனை நினைத்தால்  பயமாகத்தானிருந்தது. எனவே,


  "நீ மட்டும் தனியா எங்கேயும் போக வேண்டாம் வினு. நேத்தே உங்கப்பாகிட்ட சொல்லியிருக்கலாமே?"


  "முதல்ல ரகுநந்தன் யார்னு தெரிஞ்சுக்கிறேன். தேவைபட்டால் அப்பாகிட்ட சொல்றேன்."


  "இப்போ ஐ.பி.எஸ் ஆபிசரத் தானே பார்க்கப் போற? நானும் வரேன். எனக்கு உன்னைத் தனியா விட பயமாயிருக்கு. புரிஞ்சுக்க."


  "இங்கே பாரு கிரேசா... நானே திக்குத் தெரியாம போயிட்டிருக்கேன். நேத்தே, உன்னையும் இழுத்து விட்டுட்டேனோ? னு பயந்தேன். போதும்... இது எங்க போய் முடியும்னு தெரியாது... அதனாலதான் எங்க வீட்லயே யார்கிட்டயும் இதைப்பத்திச் சொல்லலை... இதுல உன்னைக் கஷ்டபடுத்த முடியாது. நீ காலேஜ் போ!"


  "இது நமக்குத் தேவையா வினு? கஷ்டபடப்போறோம்னு தெரிஞ்சே இறங்கலாமா? பெரியவங்க கிட்ட சொன்னா எதாவது செய்து 'அதை' ஸாரி 'அவரை'  வரவிடாமல் பண்ணுவாங்க வினு."


  "ஏன் வரவிடாமல் செய்யனும்? அவர் ஏன் வந்தார்னு முதல்ல தெரிஞ்சுக்கிறேன்."  என்ற பூவினாவை ஒரு விதமாகப் பார்த்த கிரேசா,


  "சரி! என்ன ஆனாலும் பரவாயில்லை. உன்னைத் தனியா விட முடியாது என்னால. நானும் வரேன்." என்று உறுதியாகக் கூறியவளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள்,  


  "சரி! வா. ஐ.பி.எஸ் எங்கே இருப்பார்னு தெரியுமா?" என்று கேட்டாள் பூவினா. 


  "உங்கப்பாகிட்ட கேளேன்." என்ற கிரேசா, பூவினா முறைக்கவும், "ஓகே!.. ஓகே!.. வா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி விசாரிப்போம்." என்றாள் கிரேசா.


  "அடடா! ஒரே நாளில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போற அளவு தைரியமாயிட்டயா கிரேசா?"


  "குதிரைக்கு வாக்கப்பட்டா கொள்ளு திங்க பயப்படலாமா?" என்று சிரித்தாள் கிரேசா.


  இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து விட்டனர். ஆனால் உள்ளே போகப் பூவினாவிற்குமே தயக்கமாக, 


  "நாம இங்கேயே இருப்போம் அவர் வெளியே வந்தபிறகு பேசலாம்." என்றாள்.


  "கோஞ்சமாவது புரிஞ்சுதான் பேசுறியா வினு?"


  "வேற வழி?"


  "ஒரு ஐடியா!" என்ற கிரேசா, அவளுடைய மோபைல் போனை எடுத்து, ஏதோ ஒரு நம்பரை அழுத்தி  


  "ஹலோ! அட்வகேட் சண்முகராஜன் இருக்காரா?" என்று குரலை மாற்றி கிரேசா பேச, பூவினா தலையில் கை வைத்து விட்டாள்.


  "சொல்லு மா கிரேசா... என்ன வேணும்?" என்று கேட்டார் ராஜன்.


  அதிர்ந்து போனவள் லைனை கட் செய்து விட்டு, 


  "வினு! அங்கிள் கண்டு புடிச்சுட்டார்!"


  "பின்னே?... குரல் மாத்துறேன்னு ஏன்டி காமடி பண்ற? எத்தனை தடவை எங்கப்பா என் ஃபோனை அட்டெண்ட் பண்ணியிருக்கிறார்...  நீயும் பசங்க குரல்ல பேசி, எனக்கு ஷாக் குடுக்கிறதா நினைச்சு, பல தடவை எங்கப்பாவுக்கு ஷாக் குடுத்திருக்க... அப்படியிருக்கும்போது, உன் குரல் தெரியாதா? இல்லை, உன் நம்பரைத்தான் எங்கப்பா ஸ்டோர் பண்ணிவச்சிருக்க மாட்டாரா? எதையும் செய்ய முன்னாடி எங்கிட்ட ஒரு வார்த்தை கேளு... இன்னும் கொஞ்ச நேரத்துல எங்கப்பா எனக்கு ஃபோன் பண்ணி, 'போலீஸ் ஸ்டேஷன் எதிர்ல ஏம்மா நிக்கிறீங்க. ..." என்று பூவினா முடிக்கும் முன்பே அவள் மொபைலில் ராஜனின் நம்பர் ஒளிர்ந்தது. 

  "சொல்லுங்க அப்பா?"


  "வேலு அந்த ஸ்டேஷனில் இல்லம்மா... ஒரு மீட்டிங்க்கில் இருக்கார். உன் வாட்ஸ் அப் க்கு வேலுவோட மொபைல் நம்பர் அனுப்பியிருக்கேன்... என் மானத்தை வாங்காம அங்கிருந்து கிளம்புங்க ரெண்டு பேரும்." என்று அதட்டினார்.


 பூவினாவின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த கிரேசா,


 "என்னப்பா? அங்கிள், நீ சொன்ன மாதிரி கண்டுபிடிச்சுட்டாரா?" என்று கேட்க,


 "அதுக்கும் மேலே போய் வேலு வோட நம்பரே  அனுப்பிட்டார்."


"நிஜமாவா வினு? உங்கப்பாகிட்ட பொய் சொல்லச் முடியாது போலயே? எப்படித் தாக்குபிடிக்கிற?"


"அத விடு! 'இந்த இடத்தை விட்டுப் போங்க' ன்னு சொன்னார்.  நாம கிளம்புவோம்."


காலேஜ் அருகில் உள்ள கோயில் வெளிப்பிரகாரத்தில் அமர்ந்தபடி, வேலு நம்பரை அழுத்தி விட்டு, 


  "ஹலோ! " என்று பூவினா கூறியதும்,


  "என்ன உன் கண்ணுக்குள்ள நின்னுட்டேனா?" என்றான் வேலு குஷியாக.


  'நான்தான்னு எப்படி கண்டுபிடிச்சான்? ' என்று நினைத்தவள்,

  "என் நம்பர் எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்றாள் கேட்க நினைத்த விஷயத்தை மறந்து.


  "என் நம்பர்  உனக்கெப்படி தெரிஞ்சுதுன்னு நான் கேட்டேனா?" என்று கேட்ட வேலுவைப் பார்க்க முடியாவிட்டாலும் மொபைல் ஃபோனைப் பார்த்தாள். 


  "நான் விளையாடுற மூடுல இல்ல!... ரொம்ப முக்கியமான விஷயம் ரகுநந்தனைப் பற்றிப் பேசனும். எப்போ? எங்கே  பார்க்கலாம்னு சொல்லமுடியுமா?"


  "என்ன? எங்கிட்டயே அவனபத்தி விசாரிக்கச் சொல்லப்போறியா?" என்று ஒரு மாதிரி குரலில் வேலு கேட்டதும்,


  "அச்சோ! நீங்க நினைக்கிற மாதிரி இல்ல... இது சீரியஸான விஷயம்... ஃபோன்ல சொன்னா நல்லாயிருக்காது... ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்..."


"இந்தக் கடைசி வாக்கியத்தை மட்டும் நீ அடிக்கடி எங்கிட்ட சொன்னா... 'ஸ்விக்கி' மாதிரி உடனே உன் இடத்துக்கு வந்துடுவேன்." என்று வேலு சிரிக்க,


  கடைசி வாக்கியமா? என்றவளுக்கு புரிந்ததும், "இவன் மட்டும் போலீஸ் ஆபிசரா இல்லாம இருந்திருந்தா..." என்று  பற்களைக்கடித்தபடி வேலுவுக்காகக் காத்திருந்தாள் பூவினா. 


   வேலு வந்ததும் முதல் நாள் இரவு நடந்த விஷயங்களைக் கூறினாள் பூவினா. 


அதைக்கேட்ட வேலு சிரிக்க ஆரம்பித்தான்.


  "நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசுறேன், உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?" என்று பொங்கியவன் பூவினாவை, 


நம்பாத பார்வை பார்த்த வேலு, "என்னைப் பார்க்கனும்னு சொன்னா நானே வந்திருப்பேனே? அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய கதை?" என்று பூவினாவின் கண்களுக்குள் பார்க்க,


"நேரங்காலந் தெரியாம விளையாடாதீங்க." என்றாள் பூவினா. 


"காலங்காத்தல யார் விளையாடுறது?  நான் என்னவோ ஏதோன்னு ஓடிவந்ததுல, என் முகத்தைக் கூடக் கண்ணாடியில் பார்க்காம வந்துட்டேன்..." என்றவன், புல்லட்டின் ரியர்வியூ கண்ணாடியில் பார்த்து, கலைந்த தலையை சரி செய்ய, மிகவும் கடுப்பாகிப் போன பூவினா,


"முடியெல்லாம் நல்லாத்தான் இருக்கு... நான் என்னதான் சொல்லவர்றேன்னு கொஞ்சம் கேட்க முடியுமா?" என்று பொரிந்தாள்.


"ஆஹா! இதைக் கேட்கத்தான் அரக்கப் பறக்க ஓடிவந்தேன் டார்லிங்!" என்றான் வேலு.


  "வேலு!"  


  'இவளப் பார்த்தா போலீஸ் ஆபிசர் கிட்ட உதவி கேட்டு வந்த மாதிரி தெரியலையே?' என்று யோசிக்க ஆரம்பித்தாள் கிரேசா.


"நானேதான்!"


  "ரகுநந்தன் உயிரோட இல்ல" என்று போட்டு உடைத்தாள்,  வேலுவின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாமல்.


ஒரு நிமிஷம் ஷாக் ஆன வேலு,




  "என்ன ஆச்சு? எப்ப?" என்றுகேட்டான் சீரியஸாக.


"அது எனக்குத் தெரியாது." என்றாள் கண்கள் கலங்க.


"தெரியலையா? இது விளையாட்டு சமாச்சாரமில்லை வினி" என்றான் சீரியஸாக.


"நான் சொல்றது அத்தனையும் உண்மை!" என்ற பூவினாவைக் கூர்ந்து பார்த்த வேலுவிற்கு அவள் விளையாடவில்லை என்பது புரிந்தது.


  "நீ விளையடல... ஆனா அவன் விளையாடுறான்."


ரகுநந்தன் விளையாடத்தான் செய்கிறானோ? ஆனா ஏன்?


அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம். 

   💍💍💍💍💍💍💍💍💍


  


  



Post a Comment

0 Comments