வருவான்-12

 வருவான்-12


நடந்ததைக் கேட்ட வேலு, ரகுநந்தன் விளையாடுவதாகக் கூற, 


"அவர் ஒன்றும் உங்களைப் போல் இல்லை. என்னிடம் இந்த மாதிரி விளையாடமாட்டார்." என்று வேகமாகக் கூறினாள் பூவினா. 


"அப்போ! கிரேசாவுடன் விளையாடுறான்... உன்னைத் தனிமையில் சந்திக்க விடாமல் செய்துவிட்ட கோபமாக இருக்கலாம்." என்றான் அமைதியாக.


"அப்படியெல்லாம் செய்யமாட்டார்."


"அப்போ நடந்ததை, நீ எப்படி பார்க்கிற?"


"நீங்க சிரிக்கலைன்னா சொல்றேன்."என்று பூவினா கூறியபிறகுதான், வேலுவிற்கு சிரிப்பு வந்தது... 


அவன் வாய் மூடிச் சிரித்தபடி "ம்ம் சொல்லு" என்பது போலச் சிரித்தபடி தலையாட்ட,


பூவினா, வேலுவை முறைத்தாள்.


'இவ மனசுல நான் இல்லையாம்... ஒரு ஐ.பி.எஸ் ஆபீசரை இவ இப்படிதான் முறைப்பாளாமா?' என்று நினைத்தவனிடம்,


"இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க? நான் பேசலாமா ? வேண்டாமா? " 


"மேனுஃபேக்சர் டிஃபெக்ட் மா... சரி! நீ விஷயத்துக்கு வா!" என்றான் சிரிப்பை மறைத்துக்கொண்டு. 


"நான் என்ன சொன்னேன்?" என்று வேலுவிடமே பூவினா கேட்க, வேலுவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.


"நான் கிளம்புறேன்..." என்றாள் சீரியஸாக,


"சரி! ... சரி!... ரகு உயிரோட இல்லை... உன்னைத் தவிர யார் கண்ணுக்கும் தெரியலன்னு சொன்ன." என்று ஞாபகப் படுத்தினான் வேலு சீரியஸாக,


"ஆமா! என் தம்பியும்தான் பார்க்கல."


"ரகு மறைந்து நின்றிருப்பான் வினி."


"இல்லை! நான் பார்த்துக்கிட்டு தான் இருந்தேன். ரகுநந்தன் காலடியில் தான் கிரேசா தூக்கி எறிந்த துப்பட்டா இருந்தது. விஜய் போயி துப்பட்டாவை எடுக்கும்போது ரகுநந்தனும் நகராம அப்படியேதான் நின்னுகிட்டிருந்தார்."


"நீ பார்க்கும் திசையில், இருவரும் அருகருகே இருப்பதுபோலத் தெரிஞ்சிருக்கலாம்... ஆனா விஜய்க்கு மறைவா ரகு நின்றிருக்கலாம்."


"இல்லை சார்! துப்பட்டா கிடந்த இடத்தில், எதுவும் மறைக்கிற மாதிரி இல்ல... நீங்க, அங்கே வந்து பாருங்களேன்." என்றாள் கிரேசா. 


"நீ காலையிலிருந்து, எங்கப்பாகிட்ட என்னை மாட்டிவிடுற ஐடியாவா குடுக்கிற கிரேசா... வேலுவை எப்படி எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியும்?" என்று கிரேசாவிடம் பாய்ந்தாள் பூவினா. 

"உனக்கு, என்னோட மொபைல் நம்பர, உங்கப்பா தானே கொடுத்தார்? இந்நேரம் நாம் இங்கே பேசிக்கிட்டிருப்பதும் உங்கப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கும்." என்றான் வேலு கூலாக,


"எப்படி?" என்று பதறினாள் பூவினா. 


"கொஞ்ச நாளாவே உங்கப்பாவோட அசிஸ்டெண்ட் என்னை ஃபாலோ பண்றான். இப்பக் கூட என் கண்பார்வை படும் தூரத்துல தான் அவன் நிக்கிறான்."


"அச்சச்சோ! எங்கே?" கூறி பூவினா சுற்றிலும் திரும்பிப் பார்க்க,


"உண்மையிலேயே உன்னை உங்க அப்பாதான் பெத்தாரா? இல்ல... தவிட்டுக்கு எங்கேயாவது வாங்கிட்டு வந்தாரா?" என்று கேட்டான் சீரியஸாக.


"ஏன்?"


"இப்படித் திரும்பித் திரும்பி நீ தேடினா உன் அப்பா வோட அசிஸ்டெண்ட்க்குத் தெரிஞ்சு போயிடாதா?"


"நான் வேற யாரையாவது தேட மாட்டேனா?"


"அந்த வித்யாசம் கூடத் தெரியாதவனையா உங்கப்பா, என்னைப் பற்றித் தெரிஞ்சுக்க அனுப்பினார்?!!... நீ எதுக்கும் உங்க அப்பாகிட்ட விசாரி... உண்மையிலேயே தவிட்டுக்குத்தான் வாங்கினாரான்னு." என்று சிரித்தான் வேலு.


"சும்மா, சும்மா அப்படியே சொல்லாதீங்க." என்று பூவினா கலங்க.

"இதை ஆராய்ச்சி பண்ணத்தான் இங்கே வந்தோமா? " என்று கேட்டாள் கிரேசா.


  பூவினாவின் வீட்டிற்கு வந்து, ரகுநந்தன் நின்ற இடத்தில் பூவினா நின்று கொண்டு, கிரேசாவை, விஜய், துப்பட்டா எடுக்கும்போது நின்ற  இடத்தில் நிற்கவைத்துவிட்டு, வேலுவை, மாடி பால்கனியில் நின்று பார்க்கச் சொன்னாள் பூவினா.


பால்கனியில் நின்று பார்த்த வேலுவிற்கு, பூவினா பயப்படுவதின் காரணம் தெளிவாகப் புரிந்தது. ஆனால் எப்படி இது சாத்தியம்? என்று யோசித்தான். 


"வாங்க வேலு! என்ன நடக்குது இங்க? என்று கேட்டார் ராஜன். 



'ம்ம் வந்துட்டார்...!' என்று நினைத்த வேலு, 


"நேற்று இரவு யாரோ இங்க நின்னுகிட்டிருந்தாங்கலாம் சார். இவங்க ரெண்டு பேரும் பயந்திருக்காங்க. அதான் நான் வந்து..." என்று வேலு மழுப்பிக் கொண்டிருக்கும் போதே, 


பூவினாவும், கிரேசாவும் மாடிக்கு வந்துவிட்டனர். அவசரமாக மாடிப்படிகளில் ஏறி, மூச்சு வாங்க நின்ற பூவினாவைப் பார்த்த ராஜன்,


"கொஞ்ச நாள் முன்னாடி வரை, எம் பொண்ணு எதுவாயிருந்திலும், எங்கிட்ட தான் சொல்வா... இப்ப..." என்றபடி வேலுவைப் பார்த்தார்.


ராஜனின் கண்களில் பொறாமை அப்பட்டமாகத் தெரிந்தது. 

'இவர் வேற, இப்ப எதுக்கு என்னை இந்தப் பார்வை பார்க்கிறார்? முதல்ல உங்க பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு பாருங்க... அப்புறம் வந்து என்னைப் பார்க்கலாம்' என்று நினைத்தவாறு வேலு, ராஜனைப் பார்த்து விட்டு, 


'என்ன வேடிக்கை பார்த்துக் கிட்டிருக்க? சமாளி.' பூவினாவைப் பார்த்தான்.


"அப்பா ப்ளீஸ்! அவர் எனக்கு உதவி செய்ய வந்திருக்கார்." என்று பூவினா கெஞ்ச,


"ஏன்மா? போலீஸ் ஆபிசர் கிட்ட கேட்கிற உதவிய, உங்கப்பாகிட்ட கேட்கமாட்டாயா?"


"அப்பா! நேத்து நடந்த விஷயத்துல எனக்கே ஒன்னும் புரியல. அப்புறம் எப்படி உங்ககிட்ட உதவி கேட்பேன்?" என்று கேட்டாள். 


'வேலு கிட்ட மட்டும் கேட்பாயாம்மா? ' என்பது போல் பூவினாவை, ஒரு பார்வை பார்த்து விட்டு, கீழே இறங்கிச் சென்றார்.


அப்பா செல்வதையே வருத்ததுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் பூவினா.


'ரகுநந்தன் யார்னு நான் தெரிஞ்சுக்கிறேன் பா. ... அவர நான் பார்த்ததுல பிரச்சனை எதுவும் வருமான்னு தெரியல. அப்படியிருக்கும்போது உங்களை எப்படிப்பா இந்த விஷயத்துல உதவி கேட்பேன்... நல்லதோ, கெட்டதோ என்னோட போகட்டும். என்னை மன்னிச்சுடுங்கப்பா..." என்று நினைத்தவாறு கலங்கிய பூவினாவிடம்,


"போதும்! போதும்! எமோசனை கண்ட்ரோல் பண்ணிட்டு, வந்த வேலையைப் பார்ப்போமா?" என்று கேட்டாள் கிரேசா.


திரும்பி கிரேசாவைப் பார்த்த பூவினா, "இப்பகூட மோசம் போயிடல கிரேசா! நீ கிளம்பு!... என் பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன்." என்றாள்.


"ஓ!... உன் பிரச்சனை வேற, என் பிரச்சனை வேறன்னு பேசுற அளவுக்கு, ரோம்ப தூரம் விலகிப் போயிட்டமா வினு?" என்று கோபப்பட்டாள் கிரேசா. 


"சேச்சே! அப்படியெல்லாம் இல்லைப்பா..." என்ற பூவினாவிடம்,


"எனக்கு ஒரு விஷயம் புரியல வினு. எங்களை எல்லாம் பாதுகாப்பா இருக்கச் சொல்ற? இவரை மட்டும், நீயா துணைக்கு கூப்பிட்டது ஏன் வினு? அவர் கஷ்டப்பட்டா பரவாயில்லையா?" என்று வேலுவைக் காட்டி கிரேசா கேட்க,


 'பூவினா என்ன சொல்லப்போகிறாள்?' என்று ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் வேலு. 


கண்களில் சிரிப்புடன், வேலுவை குறும்பாகவும், அர்த்தமுடனும் பார்த்த பூவினா,


"என்னை விரும்புறேன்னு சொன்னார்ல. ... அப்போ என்னோட இன்பத்துலயும், துன்பத்துலயும் கடைசிவரை துணைக்கு வந்துதானே ஆகனும்" என்றாள்.


பூவினா மறைமுகமாகத் தன் காதலை சொல்லியதும், வேலுவிற்கு தலைகால் புரியவில்லை....


"எஸ்… ஸ்ஸ்...!!! " என்று சப்தமாகத் தன் சந்தோஷத்தை வேலு வெளிப்படுத்த, பூவினா சிரித்தபடி வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.


இதைப் பார்த்த கிரேசாவிற்கும், பூவினா சம்மதம் சொன்னது புரிய, வேலுவைப் பார்த்து, தனது இரு கைக் கட்டைவிரலையும் தூக்கிகாட்டி... "சக்ஸஸ் ப்ரோ!" என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியவள், வேலுவின் முகம்போன போக்கைப் பார்த்து விட்டு, அவன் கண்கள் போன திசையைப் பார்க்க, 


அறை வாசலில், ராஜனும், விஜய்யும் 'என்ன்...ன?' என்பதைப் போல் பார்த்துக்கொண்டிருந்தனர். 


வள்ளி, 'இங்க என்னப்பா நடக்குது?' என்று அப்பாவியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.


ஜன்னலைப் பார்த்தபடி ஃபீல் பண்ணிக் கொண்டிருந்த பூவினாவை, "ஷ்... ஷ்" என்று என்று யாருக்கும் தெரியாத வண்ணம் லேசாக இடித்த கிரேசா, தன் கண்களால் அறை வாசலைக் காட்ட, திரும்பிப் பார்த்த பூவினாவிற்கு முகத்தில் ஈ ஆடவில்லை... 


     அப்படியே ஸ்தம்பித்து நின்ற பூவினாவைப் பார்த்த வேலு, "சுத்தம்! இவ என்ன இப்படி நிக்கிறா?!! நான்தான் சூழ்நிலையைச் சமாளிக்கனுமா?" என்று நினைத்த வேலு, பொதுவாகப் பார்த்து,


"வந்து, பயப்படுற மாதிரிப் பிரச்சனை எதுவும் இல்லைனு சொல்லவந்தேன்... அந்த சந்தோஷத்துல கொஞ்சம் சத்தமா... கத்திட்டேன் ஸாரி!" என்றான் ஒரு வழியாக.


ராஜன், வள்ளி, விஜய் மூவரும் கேள்விக்குறியான பார்வையை பூவினாவின் புறம் திருப்ப, அவள் சட்டென்று  சுயஉணர்வு பெற்று,


"ஆமா. ஆமாஆ. ...! ஆ....மா!"


'எத்தனைவிதமான ஆமா?" என்று அசந்து போனாள் கிரேசா.


'ம்ஹூம் அக்கா சரியில்லை... இருந்தாலும் காப்பாத்துவோம்.' என்று நினைத்த விஜய், வேலுவைப் பார்த்து,


"அக்கா பயந்தது எதனாலனு தெரிஞ்சுதா ஸார்?... பயந்தாங்கொள்ளி. அவளோட நிழலைப் பார்த்தே பயந்திருப்பா... அப்படிதானே ஸார்?" என்று எடுத்துக் கொடுத்தான் விஜய்...


அவனின் புத்திசாலிதனத்தைப் பார்த்துச் சிரித்த வேலு, பூவினாவைப் பார்க்க, 


அவள் நெற்றிக்கண்ணை திறக்காத குறை... 'சொன்னது உன் தம்பி கோபம் என்மேல யா? ' என்பது போல் வேலு  சிரித்தான். 


"சரி! வாங்க சாப்பிடலாம்." என்று அனைவரையும் பொதுவாக அழைத்தார் வள்ளி.


"இதுதான் எங்க அம்மா! ஊர்ல என்ன பிரச்சனைனா எனக்கென்ன? எல்லாரும் வாங்க!  வயிறு நிறைய சோறு போடுறேன்... அப்படிதானேம்மா?" என்று பேச்சை மாற்றினான் விஜய்.


எல்லோரும் சாப்பிடும்போதும் வேலு யோசித்தபடியே சாப்பிட,

"தட்டைப் பார்த்துச் சாப்பிடுப்பா. .. எதுவா இருந்தாலும் அப்புறம் யோசிக்கலாம்." என்றார் வள்ளி வேலுவைப் பார்த்து.


"நான் சொல்லல?" என்று விஜய் சிரிக்க,


"வாய மூடிட்டு சாப்பிடுடா வாலு." என்று கூறிய வள்ளி, 'விஜய் என்ன பதில் சொல்லப் போகிறான்?' என்று ஆர்வமாக அவன் முகத்தையேப் பார்க்க,


"வாய மூடிட்டு எப்படி ம்மா சாப்பிடுவேன்' னு கேட்பேன்னு பார்க்கிறீங்களா ம்மா? அதெல்லாம் பழய மொக்கை... புதுசா எதாவது டிரை பண்ணுவோம்." என்று விஜய் மீண்டும் வள்ளியைக் கலாய்க்க, அனைவரும் சிரித்தனர்.


  வேலு, பூவினா, கிரேசா, விஐய் நால்வரும் மீண்டும் கோயிலில் வந்து அமர்ந்தனர்.


  விஜய், பூவினாவின் பேச்சைக் கேட்காமல் கூடவே வந்து விட்டான். "நீ ஏதோ பிரச்சனையில் இருக்கன்னு தெரியுது. அப்படியிருக்கையில் நான் எப்படி நிம்மதியா வீட்ல இருக்க முடியும்? என்னைபத்திக் கவலப்படாத. என்னால என்னையும் காப்பாத்திக்க முடியும்... உன்னையும் காப்பாத்த முடியும்.... யார்னு நினைச்சே?" என்று காலரைத் தூக்கிவிட்டபடி சிரித்தான்.


  'மவனே வீட்டுக்குத் தெரிஞ்சு நான்  வந்ததால கூட வர்ற… நான் தெரியாம வந்தா உன்னால எப்டி வர முடியும்?...' என்று நினைத்து நிம்மதியடைந்தாள் பூவினா. 


  வேலுவிற்கு, இன்னும் ரகுநந்தன் பற்றிப் பூவினா கூறிய விஷயங்களை நம்பமுடியலை...


  "நீங்க ரகுவைப் பார்த்தீங்களா அண்ணா?" என்று பேச்சை ஆரம்பித்து வைத்தாள் கிரேசா.


  "பார்த்தேன்… ஆனால் தூரத்துல நின்றுதான் பார்த்தேன்... முகம் பார்க்க முடியல..." என்றான் யோசனையுடன்.


  "எங்க காலேஜுக்கு நீங்க வந்தப்ப, உங்ககூட வந்த போலீஸ்காரரும் ரகுநந்தனுடன் பேசினாரே?!!" என்றாள் பூவினா. 


  "பார்த்தாயா? அவனை சுத்தமாக மறந்து விட்டேன்." என்ற வேலு ஜெயராமிற்கு ஃபோன் செய்து, வேலுவின் வீட்டிற்கு உடனே வரும்படி கூறிவிட்டு, அருகில் இருந்த மூவரையும் அழைத்துக் கொண்டு, தன்னுடைய வீடு நோக்கிப் பறந்தான்...  விளைவுகளை அறியாமல்...





   நால்வரும் வண்டியில் ஏறிச் செல்வதைச் சற்று மறைவாக நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தான் ரகுநந்தன்!!!


   ரகுவைப் பற்றிய விபரங்களைக் கண்டுபிடித்து விடுவார்களா? எப்படி?


  அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...


      💍💍💍💍💍💍💍💍💍

   


   


  


  



Post a Comment

0 Comments