45
மனதில்
நின்ற காதலனே
கணவனாக
வரும்போது
சோகம்
கூட சுகமாகும்
வாழ்க்கை
இன்ப வரமாகும்...
-பூவே உனக்காக
🌹🌹🌹🌹🌹🌹
கோயில் மண்டபத்தில் மேடை அமைக்கப்பட்டு
ஐயர் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
மேடை அருகில் தாத்தா, மரகதம் ஆச்சி,
பிறைசூடன், ஷோபனா ஆகியோர் ஒரு புறமும், மிருத்திகாவின் குடும்பத்தினர், சிபியின்
குடும்பத்தினர், செண்பகத்தின் அம்மா மறுபுறமும் நின்று, ஐயர் சொன்னதைக் கேட்டு,
செய்து கொண்டிருந்தனர்.
மேகனும், சிபியும் திருமணத்திற்கு
ரெடியாகிக் கொண்டிருந்தனர்.
உறவினர்கள் சுற்றம் சூழ வந்து மணமேடையைப்
பார்த்தவாறு அமர்ந்து கொண்டிருந்தனர்.
செண்பகத்தைக் காணும் ஆவலில் மெல்ல நழுவி
வந்த சிபி, மணமகளுக்கான இடத்தில் மிருத்திகா, செண்பகம் இருவரையும் காணாமல்
திகைத்தான். அங்கே அமர்ந்திருந்த பியூட்டீஷியன்ஸ்,
"நேரமாகுது ஸார், கல்யாணப் பொண்ணுங்க
எப்ப ஸார் வருவாங்க?" என்று கேட்டார்கள்.
"மேகா! செண்பாவும், மிருத்திகாவும் இன்னும்
வரல." என்றான் மேகன் இருக்கும் இடத்திற்கு வந்த சிபி.
"டென்ஷன் ஆகாத நண்பா! ரெண்டு பேரும்
பியூட்டி பார்லர் போயிருப்பாங்க."
"டேய் பியூட்டீஷியன்ஸ் இங்கே வந்து
காத்திருக்காங்கடா. அவங்க சொல்லித்தான் நானே தேடுறேன்." என்று பதட்டமாக சிபி
கூறவும், மேகன் தனது மொபைலில் மிருத்திகா நம்பரை அழுத்தினான்.
"ரெண்டு பேரோட மொபைல் ஃபோனும்
ஸ்விட்ச் ஆஃப் னு வருதுடா. . ஃபோன் பண்ணி பார்த்துட்டேன்." என்றான் சிபி.
இருவரும் மணமேடை அருகில் மிருத்திகாவின்
அம்மா இருக்கிறார்களா? என்று பார்த்தனர். பாலசௌந்தரி ஐயர் சொன்னபடி சின்சியராக
செய்து கொண்டிருந்தார்.
'இந்த அம்மாவை நம்ப முடியாது மேகா, கதிரை
கூப்பிடு." என்றான் சிபி.
கதிரை அழைத்து விபரம் சொல்ல,
"இங்க தான் இருப்பாங்க... நமக்கு
கெடுதல் பண்ணியவன் எவனும் இப்ப இல்லையே. ஆக்ஸிடன்ட்ல அழகுவுக்கு ஒரு காலோட
சேர்ந்து ஆண்மையே போயிடுச்சு... ஈஸ்வரிக்கு தலையில அடிபட்டு, பைத்தியம் பிடிச்சு,
பைத்திய ஆஸ்பத்திரில இருக்கா. ஈஸ்வரியின் அப்பா, கோமாவில் கிடக்கார். அழகுக்கு
இப்படி ஆனதால, அழகு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து படுக்கையே கதின்னு
கிடக்கார். இவங்களுக்கு ஆன கதியை பாத்துட்டு எங்கம்மா அடுத்தவங்களோட பேசுறதையே
நிறுத்திட்டாங்க. வேற யார் இருக்கா? நமக்குக் கெடுதல் பண்ண? இங்கதான் எங்காவது
இருப்பாங்க... வாங்க தேடி பார்ப்போம்.” என்று கூற மூவரும் ஆளுக்கொரு பக்கமா தேடிச்
சென்றனர்.
நேரம் ஆக ஆக மூவருக்குமே பயம் வந்தது.
"இவளுக யார்கிட்டயும் சொல்லாம எங்க போனாளுங்க? " என்று திட்ட
ஆரம்பித்தவனிடம், மேகன் வீட்டு, தோட்டக்காரன் ஓடிவந்து ஏதோ சொல்ல,
"என்ன மணியண்ணா சொல்றீங்க?" என்று
மேகன் அதிர்ந்து போய் கேட்டான்.
"ஆமாங்க தம்பி! சின்னம்மாவும் அவங்க
தோழி பொண்ணும் முருகன் கோயிலுக்கு போறத பார்த்தேன்."
"இதுக்கு ஏன்டா நீ அலறுற?
கோயிலுக்குத் தானே போயிருக்காங்க? வா போயி கூட்டிவந்துடுவோம்." என்றான் சிபி.
"மணி அண்ணா சொல்றத முழுசா கேட்டுட்டுப்
பேசுடா அவசத்துக்குப் பிறந்தவனே."
"என்னண்ணா ஆச்சு?" என்று கதிர்
அந்த மணியண்ணனிடம் கேட்டதும்.
“கல்யாணப் பொண்ணு ரெண்டு பேரும் காவி
சேலை கட்டிக்கிட்டு, முருகன் கோயிலுக்கு போறத பார்த்தேன் தம்பி, கல்யாணம் நம்ம
கோயில்ல நடக்க இருக்கும் போது, இவங்க ரெண்டு பேரும், இங்க எங்க போறாங்க? ன்னு
பின்னாடியே போனேன். அவங்க சன்னதிக்குள் போயிட்டாங்க. உள்ள போக என்கிட்ட காசு
இல்லாததால கோயில் ஐயர்கிட்ட அவங்கள கூப்பிட சொன்னேன். 'அவங்க ரெண்டு பேரும்
சன்னியாசம் வாங்கிட்டு பூஜையில் உட்கார்ந்து இருக்காங்க அவங்கள தொந்தரவு பண்ண
கூடாது'ன்னு சொல்லிட்டார் தம்பி,"
"என்னது சன்னியாசம் வாங்கிட்டாங்களா?
என்ன அண்ணா சொல்றீங்க?" என்று சிபி கேட்டதும் மறுபடியும் ஆரம்பத்தில இருந்து
சொல்ல வந்த மணி அண்ணனிடம்,
"இத பத்தி இங்க யாருக்கும்
சொல்லாதீங்க நாங்க போயி பார்த்துட்டு வர்றோம்." என்று கூறி மூவரும் முருகன்
கோயிலை நோக்கி ஓடினர்.
"என்ன கதிர் இதெல்லாம் உனக்கு
ஏதாவது தெரியுமா?" என்று மேகன் கதிரிடம் கேட்க,
"எனக்கும் ஒன்னும் தெரியாது
மேகன்... இருங்க நான் அண்ணா அண்ணிக்கு ஃபோன் பண்ணி கேட்கிறேன்." என்று கூறி
ஃபோன் செய்த கதிர்,
"என்னண்ணா சொல்ற?... அவங்க ரெண்டு
பேரும் சன்னியாசம் வாங்கிட்டாங்களாம். இவ எப்படி சன்னியாசம் வாங்க முடியும்?"
என்று பதற,
"என்னன்னு சொல்லுங்க கதிர்"
என்றான் மேகன் பொறுமை இழந்தவனாக,
"நித்யாவும் அவங்க கூடதான்
போனாளாம். " என்று கதிர் கூற,
"மணி அண்ணன் அப்படி சொல்லலையே?"
என்று சிபி கேட்டான்.
"அவருக்கு நித்யா யாருன்னு தெரிந்திருக்காது
சிபி. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆகாதவர்கள் சன்னியாசி ஆகுறதுல ஒரு நியாயம்
இருக்கு. நித்யாவுக்கு என்ன ஆச்சு? என்னை தனியா தவிக்க விட்டுவிட்டு போயிட்டா. ..
என் நிலமை என்னாகும்னு ஒரு நிமிஷம் யோசித்துப் பார்த்தாளா?" என்று ஏகத்துக்கு
புலம்பியபடி வந்தான் கதிர்.
"இவனை பார்த்தாயாடா! இதுவரை நமக்குத்
தைரியம் சொன்னவன்,,. அவன் பொண்டாட்டியும் சன்னியாசம் வாங்கிட்டானு தெரிஞ்சதும்
அழுது புலம்புறான்... அவனுக்கு வந்தா ரத்தம்! நமக்கு வந்தா மிளகாய் சட்னியா?"
என்று மேகன் ஆத்திரத்துடன் கேட்க,
"அது தக்காளி சட்னி. " என்று
சிரித்த சிபியை மேகன் பார்த்த பார்வைக்கு எந்த மொழி டிக்ஷனரியிலும் வார்த்தையே
இல்லை...
"நானே புலம்பிக்கிட்டிருக்கேன்
நீங்க ரெண்டு பேரும் காமெடி பண்ணிக்கிட்டு வர்றீங்களா? உங்களுக்கு கொஞ்சமாச்சும்
மனசாட்சி இருக்கா?" என்று கதிர் கேட்டதுதான் தாமதம்...
"எங்களுக்காடா மனசாட்சி
இல்லை..." என்று கூறிவிட்டு கதிரை ரெண்டு பேரும் சேர்ந்து மொத்து மொத்துனு
மொத்தினர்.
முருகன் கோயிலுக்குள் ஓடிய மேகனைப்
பார்த்த கோயில் அர்ச்சகர் ஒருவர்,
"வாங்கோ! வாங்கோ! நன்னா இருக்கேளா?
உம்ம தாத்தா. ..." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,
"அவர் கல்யாண மணவரையில்
உக்காந்திருக்கார். .. நாங்க அவசரத்துல இருக்கோம்..." என்று மேகன்
பதற்றத்துடன் கூறியதை கவனிக்காத அர்ச்சகர்,
"என்ன சொல்றேள்? உம்ம தாத்தாவுக்கு கல்யாணமா?
கடவுளே! இத்தனை வயசுக்கப்புறம்...."
"இவரை கவனிடா" என்று சிபியிடம்
கூறிவிட்டு மேகனும் கதிரும் கோயிலுக்குள் செல்ல,
"அவா ஏன் ஓடுறா?" என்ற
அர்ச்சகரிடம்,
"ம்ம்ம்? உங்க மாமி சன்னியாசம்
வாங்கிட்டாங்களாம்." என்று கூறி விட்டு மேகனைத் தொடர்ந்தான் சிபி.
"பெருமாளே!"
"யோவ்! இது முருகன் கோயில்யா."
என்று யாரோ கூறியதைக்கூட கவனிக்காமல் தன் வீட்டை நோக்கி ஓடினார் அர்ச்சகர்.
மேகன் கோயிலுக்குள் அங்கும் இங்கும் தேடி
அலைவதைப் பார்த்த அந்தக் கோயிலின் பெரிய குருக்கள்,
"யாரை தேடுறேள்! " என்று
கேட்டார்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மூன்று
பெண்கள் வந்து, சன்னியாசம் வாங்கினாங்களாம். அவங்களைத் தேடி வந்தோம்." என்று
மேகன் கூற,
"அவங்க மூணு பேருல ஒருத்தி கல்யாணம்
ஆனவ ஐயரே!" என்று கதிர் கதற, மேகன் கதிரின் கழுத்தைப் பிடித்து விட்டான்.
"நீ ஏதாவது பேசுன... மவனே கொன்னு
தொலைச்சுடுவேன்.... இவன் வாயை மூடுறா. ." என்று சிபியிடம் கூறிய மேகனிடம்,
"நீங்க என்ன கேட்கிறீங்கன்னு
புரியல... இங்கே எந்த பெண்ணுக்கும் சன்னியாசம் கொடுக்கலையே..." என்று
குருக்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அவர் அருகில் நின்ற அர்ச்சகர்,
"இன்று, ரெண்டு ஆண்கள்தான்
குருஜியிடம் சன்னியாசம் வாங்கினாங்க. .. பொண்ணுங்க யாரும் வரலையே?" என்றதும்
ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்ட மேகன், நடந்ததை விளக்க,
"ஓ! மணியா? எங்கிட்ட தான், 'அந்த
காவி உடை போட்டுட்டு போறவங்கள கூப்பிடுங்க'ன்னு சொன்னார்... ஆனா அவர் கேட்ட போது,
சன்னியாசம் வாங்கிய இரண்டு ஆண்கள்தான், கோயில் சன்னதிக்குள் போனதைப் பார்த்தேன்.
அவங்களைத்தான் கூப்பிடச் சொல்றார்னு நினைச்சு, தப்பா சொல்லிட்டேன்..." என்று
கூறினார்.
"ஹப்பா!!" என்று மூவரும்
நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்
"அப்போ அவங்க மூணு பேரும் எங்க?"
என்று ஆண்கள் மூவருமே ஒருவரைப் பார்த்து ஒருவர் கேட்க,
"மேகன் மொபைல் ஃபோனை எடுத்து
மிருத்திகாவை அழைக்க, அவள் ஃபோன் இன்னும் சரியாகவில்லை. அடுத்து, நித்யாவிற்கு
ஃபோன் பண்ணும் போதே, மேகன் மொபைலில் செண்பகத்தின் கால் வந்தது.
"செண்பா! ...."
"மேகன்! சீக்கிரம் ராஜி
ஹாஸ்பிடலுக்கு வாங்க." என்று கூறி வைத்து விட்டாள். ஃபோன் ஸ்பீக்கர் மோடில்
இருந்ததால், மூவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு வேகமாக முருகன்
கோயிலை விட்டு வெளியே வந்து காரில் ஏறி ராஜி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
‘இவளுக கல்யாண மண்டபத்த தவிர மத்த
இடங்களுக்கு போறதுமில்லாம, எங்களையும் இழுத்தடிக்கிறாள்கள் ...’ என்று நினைத்தான்
மேகன்.
மருத்துவமனை ரிசப்ஷனில் நின்றிருந்த
பெண்ணிடம்,
"மிருத்திகா ன்ற பேரில் யாரும்
அட்மிட் ஆயிருக்காங்களா?" என்று மேகன் பதற்றத்துடன் கேட்க,
"ஆமா ஸார்! இருபத்தி ஏழாம் நம்பர்
அறைக்குப் போங்க..." என்றதும்,
மூவரும் வேகமாக ஓடினர்.
அறை வாசலில் யாரும் இல்லாமல் போகவே,
முவருமே அறை வாசலில் காத்திருந்தனர். ஐந்து நிமிடத்தில் உள்ளேயிருந்து வந்த லேடி
டாக்டரிடம்,
"மிருத்திகாவுக்கு என்னாச்சு
டாக்டர்?" என்று கேட்டனர்.
"நீங்கல்லாம் யாரு?" என்று
டாக்டர் கேட்க,
"நான் மிருத்திகாவோட கணவன்."
என்று மேகன் கூறினான்.
"கங்ராஜுலேஷன்ஸ்! நீங்க அப்பா ஆகப்
போறீங்க!" என்றதும் மூவருக்குமே மயக்கம் வந்தது.
"மேகா! அன்னைக்குத் தப்பு
நடக்கலைன்னு சொன்ன?" என்று கதிர் எகிற,
"லூசாடா நீ! அது நடந்து ஒரு வாரம்
தானடா ஆகுது?!! நானே மண்ட காஞ்சு போயிருக்கேன்." என்றான் மேகன் நொந்த
குரலில்.
"இதுக்கு என்னடா அர்த்தம்?"
என்று சிபி கேட்டான்.
"எனக்கு தெரிஞ்சு எதுவும் நடக்கலடா.
.. என்னை மீறி எதுவும் நடக்கவிடமாட்டா டா ரித்தி..."
"பின்ன எப்படி?"
"இரு வர்றேன்." என்று கூறி
விட்டு மீண்டும் ரிசப்ஷனுக்கு சென்று, இருபத்து ஏழாம் அறையில் யார் அட்மிட்
ஆயிருக்காங்க? யார் அவங்களை அட்மிட் பண்ணியது?" என்று கேட்டான்.
"மிருத்திகா என்ற பெண் பெயர்தான்
ஸார் குடுத்திருக்காங்க." என்று கம்ப்யூட்டரில் சரி பார்த்துக் கூறினாள்.
மேகனை மற்ற இருவரும் குற்றவாளியைப் போல
பார்க்க, வெளியே இருந்து அரக்க பரக்க ஓடிவந்த செண்பகம்,
"வந்துட்டீங்களா?"
"ஏய்! நீ என்ன வெளியேயிருந்து
வர்ற?" என்று சிபி கேட்டதும்,
"மெடிக்கல் ஷாப்ல ஊசி வாங்கிட்டு
வர்றேன். வாங்க என் பின்னாடி.. " என்று கூறியபடி வேகமாக இருபத்து ஏழாம் அறையை
நோக்கி ஓடினாள்.
"என்னாச்சு? காலையிலிருந்து என்ன
பண்ணிக்கிட்டிருக்கீங்க முணு பேரும்?" என்று மேகனை முறைத்த படியே
செண்பகத்திடம் கேட்டான் கதிர்.
ஊசியை நர்ஸிடம் கொடுத்து விட்டு வந்து
அமர்ந்தவள்,
"மிருத்திகா, மேகன் இல்லாம கஷ்டபட்ட
காலங்கள்ல, முருகங்கிட்ட வேண்டுதல் வச்சாளாம். மேகனுக்கும் மிருத்திகாவுக்கும்
கல்யாணம் நிச்சயமாயிட்டா, திருமணத்துக்கு முந்தயநாள் விரதமிருந்து, காவி உடை
தரித்து, முருகன் கோயிலுக்கு நடந்து வருவதா வேண்டிக் கொண்டாளாம். நேத்து வரை,
நமக்கு இருந்த பிரச்சனையில, உங்கள்ட்ட சொல்ல வந்து, தட்டிக்கிட்டே போயிடுச்சாம்...
நேத்துதான் என்னிடம் சொன்னா. அதான் விரதமிருந்து முருகன் கோயிலுக்கு போனோம்...
அவளோட நானும் விரதமிருந்து காவி உடை உடுத்தினேன். இன்னைக்கு காலையில, கல்யாண
மண்டபத்திற்கு, எங்களை கூட்டிட்டு போக வந்த நித்யாவும், எங்களோட கோயிலுக்கு
வந்தாங்க. நாங்க கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டு விட்டு. .."
"அட்லீஸ்ட் ஃபோன் பண்ணி
சொல்லியிருக்கலாம்ல?" என்று சிபி இடையில புகுந்து கேட்டதும்,
"வேகமா கோயிலுக்கு போயிட்டு
முகூர்த்த நேரத்துக்கு ரொம்ப முன்னாடியே கல்யாணம் நடக்கும் கோயிலுக்கு வந்துடலாம்னு
நெனச்சோம். இப்படி ஆயிடுச்சு."
"மிருத்திகா எப்படி இருக்கா? எதாவது
சொன்னாளா?" என்று மேகன் கேட்டான்.
"அவ நல்லா இருக்கா... அவ எங்கிட்ட
ஒன்னும் சொல்லலையே?"
எப்படி? கேட்பது? என்று தெரியாமல் மூன்று
ஆண்களுமே திரு திருக்க,
அவர்கள், ‘கல்யாண முகூர்த்தத்துக்குள்ள
கோயிலுக்குப் போக முடியுமான்னு பயந்து விட்டார்கள்' என்று நினைத்து செண்பகம்,
"ஒன்னும் பயமில்லை... இந்த ஊசியை
குத்தியதும் வீட்டுக்கு போகச் சொல்லிடுவாங்க... நாம கிளம்பிடலாம்... எதுக்கும்
நீங்க கல்யாண மண்டபத்தில இருக்கிறவங்ககிட்ட, இப்ப வந்துடுவோம்னு
சொல்லிடுங்க." என்றாள் கூலாக,
அதே நேரம் அறைக்கதவைத் திறந்து வெளியே
வந்த நர்ஸ்,
"ஊசி போட்டாச்சு... இதோ
வந்துட்டாங்க. நீங்க கூட்டிட்டு போகலாம். பரவாயில்லையே! ஆம்பளைங்க துணைக்கு
வந்துட்டாங்களா? நல்லது... கல்யாண பொண்ணுங்க தனியா அல்லாடுறீங்களேன்னு
நினைச்சேன்." என்று சிரித்தபடி கூறி சென்றார்.
மீண்டும் கதவு திறக்க, மிருத்திகாவை
எப்படி எதிர்கொள்வதென்று மூன்று ஆண்களுமே வெவ்வேறான உணர்ச்சிகளின் தத்தளிக்க...
"செண்பா ஆட்டோ பிடிச்சுட்டு
வந்துட்டேன்." என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்ப, பட்டு சேலையில் வேர்க்க
விறு விறுக்க வந்து கொண்டிருந்தாள் 'மிருத்திகா'!!
அப்போ இங்க யாரு? என்று மூன்று ஆண்களும்
திரும்பி அறையின் வாசலைப் பார்க்க,
அங்கே சிறு வெட்கம் கலந்த புன்னகையுடன்
நின்றிருந்தாள் 'நித்யா'!!.
டேய்!!! என்று மேகனும் சிபியும் கதிரைத்
தூக்க, அனைவரும் சிரித்தனர்.
கல்யாண மண்டபத்தில் மேள சப்தம் கேட்க,
மிருத்திகாவின் கழுத்தில் மாங்கல்யம் சூட்டினான் மேகன். கண்கள் கலங்க சிரித்தபடி
அவனை ஏறிட்டாள் மிருத்திகா. எத்தனை வருட கனவு!!!
மீண்டும் மேளச்சப்தம் முழங்க, சிபி,
செண்பகத்தின் கழுத்தில் மாங்கல்யம் சூட்டினான்.
பாரதியார் பூங்காவில், ஒரு பெண் குழந்தை
ஓட, அதை விளையாட்டாய் துரத்திக் கொண்டிருந்தான் மேகன். அவர்களின் விளையாட்டை
ரசித்தபடி, ‘சின்னவன் விஜய் எங்கே?' என்று கண்களால் தேடிய மிருத்திகா கண்களில்,
அவளின் இளைய மகன் விஜய் யாரோ ஒரு பொண்ணுடன் சீரியஸாக பேசிக் கொண்டிருப்பது தெரிய,
நிறைமாத கர்ப்பிணியான மிருத்திகா கைகளை ஊன்றி எழுந்து விஜயை நோக்கி நடக்க,
அவளருகில் தன் பெண்ணைத் தூக்கியவாறு, வந்த மேகன், மிருத்திகாவை மென்மையாக
அணைத்தவாறு இளையவன் விஜய்யை நோக்கி நடந்தான்.
"நாளைக்கும் இங்கே விளையாட வருவியா?
உன் பேர் என்ன?" என்று அந்தப் பெண் குழந்தை விஜய்யிடம் கேட்க,
"கிருபாகர்!" என்றான் விஜய்!
அடப்பாவி அப்படியே உங்கம்மா மாதிரி
வந்துட்டியேடா!! என்று மேகன் திகைத்து விழிக்க... அதைப் பார்த்து சிரித்தாள்
சிம்டாங்காரனின் மனைவி மிருத்திகா....
❤❤ இனிதே நிறைவடைந்தது❤❤
4 Comments
Super super sis... Was waiting for your story for a long time...super twist and turns... Climax kooda simple ah sollama.... really super
ReplyDeleteSemmmmaaa athuvum vilunthu vilunthu sirichen last epi la,sibi paavam,but semmmaaaa storyyy
ReplyDeletenext story ku lead kuduthachi pola sema story super clomax அருமை
ReplyDeleteSuper..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ReplyDelete