சிம்டாங்காரன்: அத்தியாயம் - 8

 

8

 

     கலங்கி நின்றேன்

     காதலுடன்....

     காண வந்தாயே

     சிம்டாங்காரா...

               🌹🌹🌹🌹

   

நிறைமதி, அவளுடைய அம்மாவின் குரல் கேட்டு சென்றதும் ,

 

"நான் சொன்னேன்ல இவன்தான்ப்பா. அன்று கடற்கரையில், இவன் பின்னால் தான் தங்கச்சி மறைந்து கொண்டாள்!" என்று தன் அப்பாவிடம் மேகனை அடையாளம் காட்டினான் மூத்த அண்ணன்.

 

"அப்போ ஏற்கனவே ரெண்டு பேருக்கும் பழக்கம் இருக்குன்னு சொல்றியாடா?" என்று கலங்கிப் போய் அப்பா கேட்டார்.

 

"ஆமாம் ப்பா! தம்பிட்ட கூட கேட்டு பாருங்க. அம்மா சொன்னது சரி தான் ப்பா. நல்லா கவனிச்சுப் பார்த்திருந்தா, உங்களுக்கே சந்தேகம் வந்திருக்கும். இவ, கொஞ்ச நாளாவே திடீர்னு சிரிப்பா, திடீர்னு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு திரிவா. இவங்களுக்குள்ள பழக்கம் இருக்குப்பா. .. இப்பக்கூட இவன், நம்ம குடும்ப விஷேசத்தில் கலந்துக்க வேணும்னு தான், ‘கோயில் நிர்வாகி.... அது... இதுன்னு கதை பண்ணி நம்மை அவர்கள் வீட்டுக்கு போயி அழைப்பு வைக்க சொல்லியிருக்கா.’ எனக்கு அப்ப, இவ யாரு கூட பழகுறான்னு தெரியாது. தெரிஞ்சிருந்தா போகவேண்டாம்னு தடுத்திருப்பேன். நீங்க குடுக்குற செல்லம் தான் இவளுக்கு இவ்வளவு தைரியத்தைக் கொடுத்திருக்குப்பா..."

 

"என்னடா என்னென்னவோ சொல்ற? என்னால எதையும் நம்ப முடியவில்லையே..."

 

"என்னப்பா நீங்க! கண்ணால பார்த்தும் இப்படி சொல்றீங்க? எனக்கு மட்டும் நம் வீட்டு பெண்ணை தப்பா சொல்லனும்னு எண்ணமா?"

 

"அது இல்லடா! நம்ம தங்கச்சி சின்னப்பொண்ணு... அந்தப் பயபுள்ளைக்கு இவ்வளவு விவரமா பேசதெரியாது. இந்தப் பயதான் சின்னப்பிள்ள மனசை கலைச்சிருக்கான். இன்னொரு நாள் இவனை சந்தித்து மிரட்டி வை போதும். அப்புறம் அம்மாகிட்ட இங்க நடந்த எதையும் சொல்லாதே, பிள்ளையை போட்டு அடி பிச்சுடுவா. அதோட நின்னா பரவாயில்லை, சொந்தக்கார்களில் ஆரம்பித்து எல்லார்கிட்டேயும் புலம்பி, உன் தங்கச்சி வாழ்க்கையையே கெடுத்துடுவா. .. ஏன்டி இப்படி பண்றன்னு கேட்டா, இவ பண்ற அக்கிரமத்தை என் அண்ணன், தம்பிட்ட சொல்லி அழக்கூட இந்த வீட்டில எனக்கு உரிமை இல்லையான்னு அதுக்கும் ஒரு பிரச்சனைய கிளப்பிவிட்டுடுவா. .. பெரியவன் நீ! பொறுப்பா இரு. ஆயிரம் இருந்தாலும் அவ உன் கூடப் பிறந்தவ. அவளை அசிங்கப் படுத்திட்டு நாம தெருவுல தலைநிமிர்ந்து நடக்க முடியாது. புரியுதா டா? இனி நாம என்ன செய்யனுமோ அத செய்வோம்." என்று கூறி விட்டு மகனையும் அழைத்துக் கொண்டு உறவினர்களை நோக்கி சென்றார்.

 

இவர் சென்று அமர்ந்ததும்,

 

"பொண்ணுக்கும், நம்ம பையனுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்காம். இனி மேற்கொண்டு என்ன செய்யலாம் னு கேட்கிறாங்க. எங்க போனிங்க அப்பாவும், மகனும்?" என்று கேட்டாள் நிறைமதியின் அம்மா.

 

"சரி! எல்லாம் நல்லபடியா நடந்திருச்சு, இனி புறப்படுவோம். என் பெண்ணிற்கு நல்ல வரன் அமைஞ்சதும் சொல்லி அனுப்புறோம்." என்று கூறி எழுந்தார் நிறைமதியின் அப்பா.

 

"கொஞ்சம் உட்காருங்க! இனி என்ன செய்யலாம்னு பேசிடுவோம்." என்று பெண் வீட்டு பெரியவர் ஒருவர் கூற,

 

"அதான் சொல்லிட்டேனே! என் பொண்ணுக்கு நல்ல வரன் வரட்டும்."

 

"சொந்தத்துல மாப்பிள்ளை யாரும் இருக்காங்களா?" என்று ஒருவர் கேட்க,

 

"இதுவரை எம்பொண்ணு கல்யாணம் சம்மந்தமா எதுவும் பண்ணல. படிச்சு முடிச்சதும் பாத்துக்கலாம்னு இருந்துட்டேன். இனிதான் சொந்தகாரங்கட்ட கேட்கனும்."

 

"எங்க உறவுல ஒரு பையன் இருக்கான். உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா பேசலாம்."

 

"இதுக்கு தான் முதல்லயே சொன்னேன். என் பொண்ணு விஷயத்துல நான் அவசரப்பட முடியாது. உங்க சொந்தத்துல பையன் இருந்தா, முறைப்படி எங்க வீட்டுக்கு வந்து ஜாதகத்தைக் கொடுங்கள். பொருத்தம் பார்த்துட்டு சொல்றோம்." என்று முடித்தார்.

 

“இருங்க... உங்கள அவசரப்படுத்துறதா நினைக்காதீங்க... பையன் இங்கே வந்திருக்கான் பாருங்க... பொண்ணும், பையனை பார்த்துக் கட்டும். .." என்று அவர் கூறி முடிக்கும் முன்பே,

 

"ஐயா! ஜாதக பொருத்தம் பார்க்காம பொண்ண யார் முன்னாடியும் நிறுத்த முடியாதுங்க... என் அக்கா மகனா இருந்தாலும் இதே தான். ஜாதகம் கொண்டு வாங்க. தயவுசெய்து தப்பா எடுத்துக்காதீங்க." என்று முடித்தார் நிறைமதியின் அப்பா. அவர் பிரகாரத்தை விட்டு வெளியேறவும்,

 


இவர் ஒத்துவர மாட்டார் என்று புரிந்து கொண்ட பெண் வீட்டார், நிறைமதியின் அம்மாவையும் சின்ன அண்ணனையும் நெருங்கி, அந்த ஒன்று விட்ட அண்ணனைக் காட்டி,

 

"இந்த பையன்தாம்மா நாங்க சொன்ன பையன். பொண்ணுக்கு ஒன்று விட்ட அண்ணன் முறை. இங்கே வந்து உங்க பொண்ண பார்த்து விட்டு, புடிச்சிருக்கவும் வீட்டு பெரியவங்க கிட்ட சொல்லியிருக்கான். இதுல இருந்தே தெரியலையா இந்த பையன் எவ்வளவு நல்ல பையன்னு. உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசுங்க... கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட படிச்சுக்கட்டும்... எங்களுக்கு இஷ்டம்... நீங்க உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசுங்க. நாளைக்கே ஜாதகத்தைக் குடுத்து விடுறோம்." என்று கூறினர்.

 

பையனைப் பார்த்ததும் நிறைமதியின் அம்மாவிற்கு பிடித்து விட்டது.

 

வீட்டிற்கு வந்ததும் அந்த ஒன்று விட்ட அண்ணனைப் பார்த்ததைக் கூறி, "படிப்பக் கூட கல்யாணம் முடிஞ்சபிறகு படிச்சுக்கட்டும் னு சொல்லிட்டாங்க... நீங்க ஏன் யோசிக்கிறீங்க?"

 

"உனக்கு மூளையே இல்லையா? இன்னும் அஞ்சு மாதம்தான் இருக்கு படிப்பு முடிய, அதுக்குள்ள என்ன அவசரம்? எனக்கென்னவோ அந்தப் பையனையும் தயார் பண்ணிதான் கூட்டி வந்திருப்பாங்கன்னு தோணுது. முதல்ல ஜாதகம் வரட்டும்." என்று கூறி விட்டு நகரப்போனவரை,

 

"அதுக்குள்ள உங்க பொண்ணு வேற எவனையும் புடிச்சுருக்குன்னு வந்து நிக்கப்போறா!..." என்று மனைவி சொன்னதும் கோயிலில் நடந்தது ஞாபகத்திற்கு வந்தது. 'அப்படி எதுவும் நடக்காது.' என்று திடமாக கூறமுடியாமல் திணறினார்.

 

அவருடைய அமைதியைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் பேசினாள். நேரம் ஆக ஆக அவருக்கும் நிறைமதியின் படிப்பை விட குடும்ப கௌரவம் மிகவும் முக்கியமாக பட்டது.

 

"நீ சொல்றதும் சரி! ஜாதகம் வரட்டும் பொருந்தி இருந்தா முடிச்சிடலாம்." என்று கூறியவர் நிறைமதியை அழைத்து, "ஒரு வாரம் காலேஜுக்கு லீவ் சொல்லிடும்மா." என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

 

வேகமாக அண்ணியின் அறைக்கு வந்தவள், "அண்ணி! மொபைல் ஃபோன் குடுங்களேன். என் தோழி கிட்ட ஒரு வாரம் லீவ்னு சொல்லிடுறேன்."

 

"எதுக்கு லீவ்னு தெரியுமா?" என்று அண்ணி கேட்டாள்.

 

"தெரியல அண்ணி! அப்பாதான் லீவு போடச் சொன்னார்." என்று நிறைமதி கூறவும் கதவைத் தாளிட்டு வந்து, "இப்படி உட்கார்" என்று அருகில் இருந்த நாற்காலியைப் காட்டினாள்.

 

"அந்தப் பையன் யாரு? கோயில் நிர்வாகியுடைய பேரன்னு சொன்னாங்க."

 

"ஆமாம் அண்ணி!"

 

"எத்தனை நாளா பழக்கம் உங்களுக்குள்ள?"

 

"அண்ணி! அப்படியெல்லாம் இல்லை!"

 

"நான் நேத்து உன்னைத் தேடி வந்த போது எல்லாத்தையும் பார்த்து விட்டேன்."

 

"அண்ணி!"

 

"நான் மட்டுமில்ல, உங்க அப்பாவும் பெரிய அண்ணனும் கூட பார்த்துட்டாங்க. அதனாலதான் இந்த அவசர கல்யாணம்."

 

"என்ன அண்ணி சொல்றீங்க? அப்பா எங்கிட்ட ஒன்னுமே கேட்கல? அம்மா கூட சொல்லல?"

 

"அத்தைக்கு தெரியவேண்டாம்னு மாமா சொல்லிட்டாங்களாம்."

 

"அந்த கோபத்துலதான் லீவு போடச்சொல்லிட்டாங்களா அண்ணி? இனி காலேஜுக்கு அனுப்ப மாட்டாங்களா அண்ணி?"

 

"காலேஜுக்கு போகமுடியலைனு பயப்படுறியா? இல்ல அந்தப் பையனைப் பார்க்க முடியாதுன்னு பயப்படுறியா?"

 

"அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி! எனக்கு அவர் எங்கே இருக்கிறார்னே தெரியாது மொபைல் நம்பர் கூட தெரியாது."

 

"பின்ன எப்படி உன்னை வேறொருத்தருக்கு கட்டி வைக்கப் போறாங்க ன்னு சொல்லுவ?"

 

"என்ன அண்ணி சொல்றீங்க? எனக்கு கல்யாணமா? படிப்பு முடியனும்னு அப்பா சொன்னாங்களே?"

 


"உன் ஆள்கிட்ட அடி வாங்கினானே, அவனுக்குத் தான் உன்னைக் கட்டி வைக்கப் போறாங்க. நாளைக்கு ஜாதகம் வந்துடும். பார்ப்போம்."

 

"அண்ணி!"

 

"என்னைப் பார்த்தா? அந்தப் பையனின் நம்பர் கூட தெரியாதுன்னு சொல்ற... அவசரப்பட வேண்டாம். மாமாவே லீவு தானே போட சொல்லி இருக்கார். ஜாதகம் பொருந்தினாதானே கல்யாணம்? பார்ப்போம்..." என்று யோசித்த அண்ணி, "அந்தப் பையன் பேர் என்ன?"

 

"மேகன்" என்று முகம் மலர கூறினாள்.

 

"மேகனைப் பார்க்கயில் நல்லவனாகத்தான் தெரிகிறது. நீ வந்த பிறகு யாரோ போல, அந்த பையங்கிட்ட பேச்சுக் கொடுத்தேன். நல்ல மரியாதையான பையன்தான் ஆனால் திடீரென்று போயி நின்னா, அவன் வீட்டுக்கு கூட்டிப்போவானா?"

 

"ம்ம்ம்" என்றாள் நிறைமதி.

 

"எனக்கும் உன் அண்ணனுக்குமே அந்த ஒன்று விட்ட அண்ணனைப் பிடிக்கவில்லை. ‘இவனுக்கு தங்கச்சியை திருமணம் பேசுவார்கள் என்று நினைக்கவில்லை. தெரிஞ்சிருந்தா அவளை அப்பாவிடம் காட்டிக் கொடுத்திருக்க மாட்டேன்’ என்று வருத்தப்பட்டார்... மாமா சொன்ன மாதிரி ஏற்கனவே பேசி வச்சு கூட்டிவந்திருப்பதைப் போல தான் தெரிகிறது. என்னவோ அவன்தான் பொண்ணு பார்க்க வந்தவனைப்போல கொஞ்சம் கூட இது இல்லாம வெறிச்சு, வெறிச்சு உன்னைப் பார்த்த பார்வை சகிக்கலை. ஜாதகம் பொருந்தி விடக்கூடாது என்று வேண்டிக் கொள்." என்று கூறிய அண்ணி, "சரி! நீ உன் ரூமுக்குப் போ! உனக்கு என்னால் ஆன உதவி பண்றேன் கவலைப்படாமல் போய்த்தூங்கு. எதையும் வெளிக்காட்டி அத்தைகிட்ட மாட்டிக்காதே. ... " என்று கூறி அனுப்பி வைத்தாள்.

 

இரண்டு நாட்களாக நிறைமதி எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள்.

 

மூன்றாம் நாள் ஜாதகம் பொருந்தியிருக்கிறது" என்று சந்தோஷமாக கூறினார் நிறைமதியின் அம்மா!

 

ஏனோ அவள் அப்பாவிற்கு, இவ்வளவு அவசரமாக நிறைமதிக்கு திருமணம் பேசுவது பிடிக்கவில்லை. "இந்த முட்டாள் பெண் தப்பு செய்யாமலிருக்கக் கூடாதா" என்று நினைத்தார். ஆனால் ‘அவளை நினைத்து பயமாவும் இருந்து தொலைக்குது.’ என்று இருதலைக் கொள்ளி எறும்பாக துடித்தார்.

 

அவர் மனைவி, " பெண் பார்க்க வரச் சொல்லுங்க." என்றதும், "பொறு! அந்த பையனைப் பற்றி விசாரித்துக் கொள்கிறேன்" என்றார்.

 

அத்தை அவசரப்படுவதை கவனித்த அண்ணி, நேராக நிறைமதியிடம் வந்தாள்.

 

"மேகனை எப்படி சந்திப்பாய்?" என்று கேட்டாள்.

 

"சாயந்தரம் கடற்கரைக்கு வருவார் அண்ணி"

 

"நிச்சயமா தெரியுமா?"

 

"இல்லை! ஆனால் காதலை சொன்னபிறகு நாங்கள் சந்திக்கவே இல்லை. அவரும் நிச்சயமாக என்னைப் பார்க்க விரும்புவார். அதனால் கடற்கரைக்கு வருவார்."

 

"இன்று சாயந்தரம் கோயிலுக்குச் செல்வதாக கூறி உன்னை வெளியே அழைத்துச் செல்கிறேன். நீ மட்டும் போயி அவரை சந்தித்து விஷயத்தைச் சொல்லு. ஒருவேளை இப்பவே என்னோட வா! என்று கூறினால் போய்விடு. இல்லை என்றால் கோயிலுக்கு திரும்பி வந்து விடு உனக்காக இரண்டு மணிநேரம் கடற்கரையில் இருக்கும் கோயிலில் காத்திருப்பேன். புரியுதா?" என்று அண்ணி கேட்கவும்,

 

"நன்றி அண்ணி! நீங்க நிஜமாகவே என் உடன் பிறந்த அக்கா தான். உங்களுக்கு இருக்கும் பிரியம் நம் வீட்டில் யாருக்கும் இல்லையே அண்ணி!" என்று கூறி அழுதாள்.

 

"எல்லோருக்குமே பிரியம் இருக்கு, ஆனால் அத்தை பேச்சை மீற முடியவில்லை. மாமாவிற்குமே இந்த சம்மந்தம் பிடிக்கவில்லை, ஆனால் அத்தை? சரி!சரி! அழுது காட்டிக் கொடுத்து விடாதே! ஜாக்கிரதை! " என்று கூறி சென்று விட்டாள்.

 

"அடுத்த நாள் என்ன நடந்தது?

 

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...

❤❤❤❤❤❤❤


Post a Comment

0 Comments