7
என் கண்கள் மட்டுமல்ல
என் ஒவ்வொரு அணுவும்
உன் முகம் பார்த்தே
உயிர்க்கின்றன...
வருவாயா சிம்டாங்காரா...
🌹🌹🌹🌹
நிறைமதியும் அவள்
அண்ணியும் மணப்பெண்ணை அழைத்து வந்து பெண்வீட்டாருக்கு நடுவில் அமரவைத்து விட்டு,
தன் குடுபத்தினர் அருகில் அமர்ந்தனர்.
அதே வேளையில்
அவர்களை நோக்கி வந்த மேகனை பார்த்த நிறைமதிக்கு, இளஞ்சாரல் மழையில் நனைந்ததைப்
போன்று சிலுசிலு வென்று மனம் குளிர்ந்தது. அவளையும் அறியாமல் முகம் மலர்ந்து
சிரித்தாள். பின் சூழ்நிலை புரிய, தன் அப்பாவிடம் மேகன் வந்திருப்பதை கூறினாள்.
அவர் விரைந்து
சென்று மேகனை வரவேற்றார். தங்களின் குடும்பத்துடன் சேர்ந்து அமருமாறு கேட்க, “பரவாயில்லை,
இன்னும் சிறிது நேரத்தில் என்னுடைய தாத்தா வந்து விடுவார்கள்... நீங்கள் உங்கள்
சம்பிரதாயங்களை ஆரம்பியுங்கள், நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்." என்று
கூறிவிட்டு சற்று தள்ளி நின்றபடி இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
'இவன்தான் கோயில்
நிர்வாகியா? இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே!' என்று நிறைமதியின் இரு அண்ணன்களும்
யோசித்தபடியே மேகனைப் பார்த்தனர்.
மேகன் வந்ததிலேயே,
'அவனும் விரும்புகிறானோ?' என்று, மனம் சிறகடித்து பறக்க ஆரம்பித்ததால்,
நிறைமதியின் முகம் இன்னும் பொலிவடைந்தது. தோழிகளும் அதையே நினைத்தபடி, மேகனையே
பார்த்துக் கொண்டிருந்தனர்.
இன்னொரு ஜோடிக்
கண்களும் நிறைமதியையே பார்த்துக் கொண்டிருந்தது. அது மணப்பெண்ணின் ஒன்று விட்ட
அண்ணன்.
மேகன்
நின்றுகொண்டிருந்த இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது, நிறைமதி மணப்பெண்ணாக நாணம்
கலந்த சந்தோஷத்தில் தலை குனிந்து இருக்க, அவளுக்கு எதிரில் மணமகன் (மணப்பெண்ணின்
ஒன்று விட்ட அண்ணன்) அமர்ந்து பெண் பார்ப்பது போல இருந்து தொலைத்தது.
ஒன்று விட்ட அண்ணனின்
பார்வையை கவனித்த மணப்பெண்ணின் அத்தை, "என்னடா அந்த பொண்ண உனக்குப்
புடிச்சிருக்கா? " என்று கேட்டார்.
அவனும் சிரித்தபடியே, "யார் அத்தை அந்தப் பெண்?" என்று
ஆர்வமாக கேட்ட விதத்திலேயே அவன் மனம் அறிந்து கொண்டார்.
'கடைசிவரை
இப்படியே பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாளா?’ என்று நினைத்த தோழிகள், நிறைமதியை
தனியே அழைத்துச் சென்று, மேகன் அவர்களைத் தொடர்ந்து வருவான் என்று நினைத்து, அவன்
வரவிற்காக அடுத்த பிரகாரத்தில் காத்திருந்தனர்.
நிறைமதி எழுந்து
செல்வதைப் பார்த்த, மணப்பெண்ணின் ஒன்று விட்ட அண்ணனும் எழுந்து அவளைத் தேடிச்
சென்றான்.
இவனும் எழுந்து
செல்லவும், 'பொண்ணும் மாப்பிள்ளையும் தனியே பேசப் போகிறார்கள் போல' என்று தவறாக
புரிந்து கொண்ட மேகன், அவனைத் தொடர்ந்தான்.
சிறிது நேரம், ‘மேகன்
வருவான்’ என்று காத்திருந்த தோழிகள், அவன் தொடர்ந்து வராததால், “நாங்கள் இரண்டு
பேரும் போய் மேகனை அழைத்து வருகிறோம்” என்று கூறி சென்றனர்.
நிறைமதியும்
மற்றொரு தோழியும் அங்கேயே நின்றிருந்தனர்.
நிறைமதியைப்
பார்த்து விட்ட அந்த ஒன்று விட்ட அண்ணன், வேகமாக நிறைமதியை நோக்கிச் சென்றான். அவனைத்
தொடர்ந்து வந்த மேகனும் நிறைமதியைப் பார்த்து விட்டான். நிறைமதியும் மேகனைப்
பார்த்து விட்டு ஒரு விதமான டென்ஷனில் சிரித்தபடி தலையைக் குனிந்து கொண்டாள்.
அந்த ஒன்று
விட்ட அண்ணனைப் பார்த்துதான் நிறைமதி இவ்வாறு நாணிக் குனிகிறாள் என்று நினைத்த
மேகன், ஒரே எட்டில் அந்த ஒன்று விட்ட அண்ணனை நெருங்கி,
"அவ என்
மனைவி! ஒழுங்கா திரும்பி ஓடிரு... பொண்ணா பார்க்க வர்ற?" என்று கோபத்துடன்
உறும,
"நீங்க
யாரு சார்? அவ என் முறைப்பெண் .. நாங்கதான் கல்யாணம் பண்ணிக்க போறோம்" என்று
நேரங்காலம் தெரியாமல் அவன் எகிற,
ஓங்கி ஒரு அடி!
அவன் பிடறியிலேயே மேகன் அடிக்க, பதறி ஓடிவந்தாள் நிறைமதி.
'இவன் யாரு?
இங்க வந்து மேகனிடம் அடிவாங்குறான்! என்று நினைத்தபடி ஓடிவந்தவள்,
"என்ன சார்?
என்ன பிரச்சனை?" என்று மொட்டையாக நிறைமதி கேட்க,
"ஏன்டி!
இங்க ஒருத்தன் உன்னையே நெனச்சுக்கிட்டு இருக்கேன்... நீ ஒன்னுமே தெரியாத மாதிரி
எவன் கூடயோ கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிடுவியோ? பல்லு மொத்தத்தையும்
கலட்டிடுவேன்."
மேகன் தன்னை
விரும்புகிறான் என்பதைத் தவிர ஒன்றும் புரியாமல் 'திருதிரு’ வென்று முழித்த
நிறைமதி,
"நீங்களும்
என்னை விரும்புறீங்களா?!!" என்று முகம் முழுவதும் ஆச்சரியத்தில் திளைக்க
கேட்டாள்.
"உன்னை
விரும்பாமல்? இதோ இவனையா விரும்பி, தலைதெறிக்க ஓடிவந்தேன்?" என்று வாங்கிய
அடியில் மறை கலண்டு நின்றுகொண்டிருந்த ஒன்று விட்ட அண்ணனைக் காட்டி மேகன் கேட்க,
மேகன் ஜோக்
அடிக்கிறான் என்று நினைத்து கலகல வென்று சிரித்தபடி, " ஆமா.... இவர்
யார்?" என்று கேட்டேவிட்டாள்.
ஒரு நிமிடம்
ஒன்றும் புரியவில்லை மேகனுக்கு, 'இவளுக்கு என்ன ஆச்சு? !! இவன் யாருன்னு என்கிட்ட
கேக்குறா?' என்று நினைத்தவனுக்கு, "நீங்களும் என்னை விரும்புறீங்களா?"
என்று நிறைமதி கேட்டது சட்டென்று நினைவில் வர, மேகனின் கண்களில் ஆயிரம் வாட்ஸ்
பல்பு எரிந்தது.
"ஹேய்!
உனக்கு என்ன ஆச்சு? இவன் யாருன்னு எங்கிட்ட கேட்குற? இவன்தானே உன்னை பெண் பார்க்க
வந்தவன்?" என்று மேகன் கேட்டதும்,
"அய்ய்யே!!...
இவனா?!! .... உங்களுக்கு யாரு சொன்னா?" என்று கேட்ட நிறைமதியின் முகம்போன
போக்கை பார்த்த மேகனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
"ஏன்டி
குழப்பத்துக்கு பிறந்தவளே! நீ தானே குடும்பத்தோட வந்து, உன்னை, பெண் பார்க்க
வர்றாங்கன்னு, என் தாத்தாவை விஷேசத்துக்கு அழைச்ச?”
"கடவுளே!
நான், என் அண்ணனுக்கு பொண்ணு பார்க்கப் போறோம் னு தானே சொன்னேன்...."
"அப்போ இவன் உன்னை பொண்ணு பார்க்க
வரலையா?"
"இல்ல!"
"ஆமா! இங்க என்ன நடக்குது?"
என்று ஒன்று விட்ட அண்ணன் கேட்டதும்,
"டேய்! நீ
இன்னும் போகலையா? நானே மண்டை காஞ்சு போயிருக்கேன், வந்துட்டான்.... போடா
டேய்!" என்ற மேகன், அவர்களைப் பார்த்துக் கொண்டே உறவினர் கூட்டத்தை நோக்கி
நடந்த, ஒன்று விட்ட அண்ணன் தலை மறையும் வரை பார்த்திருந்து விட்டு அருகில் இருந்த திண்டு மேல் அமர்ந்தான் மேகன்.
"ஷ்ஷ்ஹப்பா!
பார்த்தாலும் பார்த்தேன் உன்னை போல ஒருத்திய பார்த்ததே இல்லை! ஆமா! தெரியாம தான்
கேட்கிறேன், எனக்கு கிறுக்கு புடிக்க வைக்கிறதுக்குன்னே பிறந்தியா?"
"நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டதுக்கு
நான் என்ன பண்ணுவேன்?"
ஒன்றும்
சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்... சிரிக்க ஆரம்பித்தான்.
"கிண்டல்
பண்றீங்களா?" என்று நிறைமதி கேட்கும்போதே,
"ஏய்!
எங்கடி போன?" என்று நிறைமதியின் அம்மா குரல் கேட்டதும், "அம்மா
தேடுறாங்க, வர்றேன்..." என்று மேகனிடம் கூறிவிட்டு, அவளுடைய அம்மாவை நோக்கி
ஓடினாள்.
"ஹேய்! உன்
பேர் சொல்லிட்டு போ!" என்று மேகன் கேட்டதும், நின்று குறும்பாக பார்த்த
நிறைமதி,
"அகிலாண்ட
கோடி பிரம்மாண்ட நாயகி" என்று விழிகளை விரித்து, கூறி விட்டு சிரித்தபடியே
ஓடிவிட்டாள்.
அவள் செல்வதையே
பார்த்துக் கொண்டிருந்தவன், 'அவள் மீண்டும் பொய் பெயர் தான் சொல்கிறாள்' என்று நினைத்து, 'எங்க போயிட போறா.. எங்கிட்ட
தானே வருவா... அப்ப பார்த்துக்கறேன்' என்று சிரித்துக் கொண்டான்.
அதேவேளையில் இங்கே நடந்த
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தோழிகளும் "ரெண்டு பேருமே காதல
சொல்லிட்டாங்கடி! " என்று சந்தோஷத்தில் சிரித்தனர்.
விதியும் அவர்களைப் பார்த்து சிரிப்பதை
அறியாமல்!
அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம். ...
❤❤❤❤❤❤❤
0 Comments