சிம்டாங்காரன்: அத்தியாயம்- 21

21

காண இயலா தூரம் சென்றவன் – இன்று

கண்முன் நின்றும் தூரத்திலேயே

நிற்பதேன் சிம்டாங்காரா?...

🌹🌹🌹🌹🌹🌹

 

மேகன் வீட்டில் நடக்கும் ஹோமத்திற்காக கிளம்பித் தயாராகி விசிட்டர்' ஸ் ஹாலில் ஹேண்ட்பேக்கை வைத்து விட்டு, வாசலுக்கும், விசிட்டர்'ஸ் ஹாலுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தாள் மிருத்திகா.

 

மிருத்திகாவின் செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஹாஸ்டல் வரவேற்பு பகுதியில் வேலை செய்யும் பெண்,

 

"என்ன மிருத்திகா அண்ணன் வீட்டுக்கா?" என்று கண்களை ஊடுருவி பார்த்தவாறு கேட்டாள்.

 

'என்னிடமிருந்து உனக்குத் தேவையான பதிலை பெறவே முடியாது' என்பது போல பார்த்துவிட்டு, வழக்கம்போல சிரிப்பை பதிலாக கொடுத்தாள் மிருத்திகா.

 

"அதானே பதில் சொல்லிட்டா வாயிருந்து முத்து உதுந்துடும்... புருஷன் வெளிநாட்டுல இருக்கான்... கொஞ்சமாவா சம்பளம் வாங்குவான்? வீட்டுல அடங்கி இருக்க முடியாம... வேலைக்கு போறேன்னு சொல்லிக் கிட்டு ஊர் சுத்துதுக. .. " என்று பொருமினாள் வரவேற்பு.

 

‘வரவேற்பு என்ன நினைப்பாள்?’ என்று மிருத்திகாவிற்கு நன்கு தெரியும். நான்கு வருடங்களுக்கு முன்னர் இதற்கெல்லாம் அழுதவள்... மிருத்திகா அழுதவரை குத்தி குத்தி பேசியவர்கள், அழுகையை நிறுத்தவும் வேறுவிதமாக பேசினார்கள்... பேச்சைக் குறைத்து இறுக இறுக எதிரில் இருந்தவர்கள் பயந்தார்கள்... பின் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்கவே... இவள ஒன்னும் பண்ண முடியலயேன்னு அவர்களுக்கு அவர்களே குத்திக் கொண்டனர்... இவளுக்கும் சுடு சொற்கள் பழகிவிட்டது.

 

தூரத்தில் செண்பகம் வருவது தெரியவும், தன் பேக் கை எடுத்துக் கொண்டு ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தாள்.

 

தனியே மேகன் வீட்டிற்கு செல்ல ஏதோ போல இருந்தது... அண்ணியை துணையாக அழைத்துச் செல்ல விரும்பவில்லை... ‘ஐந்து வருடங்களுக்கு முன்பு அண்ணி செய்த உதவியால் இன்றும் தன் தாயிடமும் உறவினர்களிடமும் திட்டு வாங்குகிறார்கள். இத்தனைக்கும், "அண்ணிக்கு விஷயமே தெரியாது. கோயிலுக்கு சென்றபோது, "இயற்கையின் அழைப்பு" என்று நான் தான் பொய் கூறிவிட்டு சென்று விட்டேன்" என்று எத்தனை யோ முறை எத்தனையோ விதமாக கூறியும் அவர்களிடம், அண்ணி திட்டு வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.’

 

அதனால் தான் செண்பகத்தை துணையாக அழைத்தாள்.

 

மேகனின் வீடு நெருங்கவும், செண்பகத்தின் கையைப் பிடித்தாள் மிருத்திகா.

 

"கணவர் வீட்டுக்குத் தான போற?... ஏதோ காண்டாமிருகத்த பாக்க போற மாதிரி கை ஜில்லுனு ஆயிடுச்சு? உன் மாமியாரும், இன்னொரு பெரியம்மாவும் வந்ததா ஸ்கூலில் சொன்னாங்க... பிறகு ஏன்?.... உனக்கு அந்த வீட்டில வில்லங்கம் பண்றவங்க இருக்காங்களா? பயப்படாதே! நீயும் பழைய மிருத்திகா இல்ல... நானும் வேடிக்கை பாக்க வரல...வா!" என்று செண்பகம் அழைத்தாள்.

 

"நீ தப்பா எடுத்துக்கலைனா நான் ஒன்னு சொல்லவா?" என்று மிருத்திகா தயங்கி கேட்டதும்,

 

"ஒன்னு என்ன? ஓராயிரம் கேளு... நீ தப்பே செஞ்சிருந்தாலும் அதுல இருந்து எப்படி வெளி வரணும்னு பாப்போம். .. " என்று கூறியும் மிருத்திகா தயங்கவே, "அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீ சின்ன பொண்ணு... சப்ப மேட்டரையெல்லாம் பெருசா நெனச்சு ஏதாவது பண்ணும் வயது. .. அப்படி எதுவும் பண்ணி தொலச்சிட்டியா?" என்று கேட்டதும், 'இல்லை' என்று மிருத்திகா தலையாட்டினாள்.

 

"பிறகு?" என்று செண்பகம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, எதார்த்தமாக வீட்டின் பால்கனிக்கு வந்து, மிருத்திகா வருகிறாளா? என்று பார்த்த சிபி,

 

"ஹலோ!" என்று சப்தமாக அழைத்து கையசைக்கவே,

 

'கொன்னுடுவேன்' என்பது போல் ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி, விரலை ஆட்டி காட்டினாள் செண்பகம்.

 

ஒருநிமிடம் ஆடிபோய் நின்றவனிடம் வந்த மேகன்,

 

"என்னடா?" என்று கேட்க,

 

மிருத்திகாவை காட்டி, "சிஸ்டர் தனியா வரல டா! ரௌடி பேபி கூட வந்திருக்கா..." என்று சொல்லி விட்டு நண்பனைப் பார்த்த சிபி திடுக்கிட்டான். சிபி அருகில் இருந்த மேகன் மாயமாகி இருந்தான். திடீரென்று வாசலில் தாத்தாவுடன் மிருத்திகாவை நோக்கி சென்று கொண்டிருந்தான். இதில் அண்ணாந்து பால்கனியைப் பார்த்த மேகன்,

 

"அங்க என்னடா பண்ணிக்கிட்டிருக்க? கீழ வாடா" என்று அழைக்க வேறு செய்தான்.

 

சிறிது நேரத்தில் வீடு பரபரப்பானது. வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று அமர சொல்லிக் கொண்டிருந்தான் சிபி. அக்கம்பக்கத்தினரையும் அழைத்திருந்தனர்.

 

ஹோமம் நடத்த வந்த வேதியர்கள் அதற்கு தேவையான வேலகளைச் செய்ய, கூட்டத்தோடு அமர்ந்திருந்த மிருத்திகாவைப் பார்த்த மரகதம் ஆச்சி,

 

"என்னம்மா விருந்தினர் மாதிரி அங்க உக்காந்துட்ட? ரூமுக்குள்ளதான் தீபி இருக்கா வா!" என்று அழைத்துச் செல்ல, செண்பகமும் உடன் வந்தாள்.

 

தீபிகா, தனக்காகத்தான் இரண்டு மேம் வந்திருப்பதாக நினைத்து மிகவும் சந்தோஷமாக பெற்றோருக்கு அறிமுகப் படுத்தினாள்.

 

மிருத்திகா எங்கே சென்றாலும் அந்த பக்கமாகவே மேகனுக்கும் சிபிக்கும் வேலை இருந்தது!!

 

"இவன் யாரு மிருத்திகா? உன் ஆளை தனியா விடாம ஒட்டிகிட்டு அலையறான்?" என்று சிபியைப் பார்த்து செண்பகம் கேட்க,

 

அதே நேரத்தில் "அவ என்னடா என் ஆள்கூடவே திரியுறா? " என்று மேகன் கேட்டதும்,

 

"கொஞ்சம் பொறு ரௌடி பேபிய தனியா கூட்டிட்டு போயிடுறேன்." என்று சிபி கூறவும்,

 

"என்னது?" என்று மேகன் அதிர்ச்சியானாள்.

 

"உனக்காக இதுகூட பண்ண மாட்டேனா மேகா?"

 

"எது?? ஒரு பொண்ண தனியா தள்ளிட்டு போறதா?"

 

"ஏன்டா இப்படி தப்பு தப்பா பேசுற?" என்று கூறி விட்டு செண்பகத்தை நோக்கி நடந்தான்.

‘எப்படியும் அடி வாங்காம வர மாட்டான்... என்ன நடக்குதுன்னு பாப்போம்.' என்று நினைத்து சிபியைப் பார்த்தவாறு அருகில் இருந்த நாற்காலியில் மேகன் அமர்ந்தான்.

 

தன்னைப் பற்றி பேசிவிட்டு, தன்னை நோக்கி வரும் சிபியை செண்பகமும் பார்த்துக் கொண்டுதானிருந்தாள்.

 

செண்பகத்தின் அருகில் வந்தவனுக்கு அவள் பெயர் மறந்து விட்டது... எனவே

 

"உங்க பேர் என்ன? " என்று கேட்டான்

 

"எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு."

 

"இத எதுக்கு என்னிடம் சொல்றாங்க?" என்று முழித்தவன்,

 

"என்கூட கொஞ்சம் தனியா வரீங்களா? அப்பத்தான் என் ஃபிரண்ட் க்கு வசதியா இருக்கும்... " என்று சிபி உளற,


 

செண்பகம் முறைத்தாள்... விஷயத்தைப் புரிந்து கொண்ட மிருத்திகா சிரிக்க,

 

"இப்ப எதுக்கு சிரிக்கிற?" என்று மிருத்திகா விடம் செண்பகம் கேட்க,

 

"அவர் என்ன சொல்ல வர்றார்னு நிஜமாவே உனக்குப் புரியலையா? " என்று கேட்டு சிரித்தாள் மிருத்திகா.

 

"இந்த தொரை பேசின வார்த்தைக்கு நீ அகராதி எழுத போறியா?" என்று கடுப்படித்து விட்டு, சிபியிடம்,

 

"உனக்கு ஒழுங்கா பேசவே வராதா?"

 

"என்னங்க கூப்பிட்டா வர வேண்டியது தானே? உங்க ஃபிரண்ட் க்காக இதுகூட பண்ண மாட்டீங்களா? மரியாதை இல்லாம வேற பேசுறீங்க? மேகனுக்காகவாவது வாங்க... அவன் கஷ்டம் உங்களுக்கு புரியலையா?"

 

"டேய்! நிறுத்துடா! உன் ஃபிரண்ட் ட கூப்பிடு... எங்கிட்ட அடிவாங்காம ஓடிடு..."

 

"என்னங்க இப்படில்லாம் பேசுறீங்க? ஆஸ்திரேலியாவுல பிறந்து வளந்தாலும் எனக்கு நீங்க பேசுறது புரியாது ன்னு நெனக்கிறீங்களா?

 

"நான் பேசுறது புரியிறது இருக்கட்டும்.. நீ பேசுறது உனக்கு புரியுதா? "

 

"விடு செண்பகம்... அவருக்கு புரியாது.." என்று மிருத்திகா சிபிக்கு சப்போரட் செய்ய,

 

"அப்படியா? இங்க பாரு குட்டி! அதோ அங்க ஒரு அண்ணா இருக்கார்ல? அவர கூட்டிட்டு வாங்க... அப்பத்தான் சாக்லெட் தருவேன்" என்று சிபியை செண்பகம் கலாய்க்க.

 

அவளை முறைத்துவிட்டு ஏதோ சொல்லப் போனவன், 'சிபி கண்ட்ரோல் யுவர்செல்ஃப்! உன் செயல்கள், உன் நண்பனை பாதித்துவிடக் கூடாது.' என்று நினைத்தவன்,

 

வேகமாக மேகனை நோக்கி சென்று, "என்னை கிண்டல் பண்றாடா ரௌடி பேபி." என்றான்.

 

"அடி வாங்கிட்டு வருவேன்னு நினைச்சேன்!... பரவாயில்லயே நல்ல பொண்ணா தான் இருக்கா." என்று மேகன் சிரிக்க,

 

சிபி மேகனை முறைத்தான்... அதேநேரம், இவர்களை நோக்கி மிருத்திகாவும், செண்பகமும் வந்தனர். அவர்கள் இருவரும் வந்து நிற்கும் முன்பே அங்கு வந்த மரகதம் ஆச்சி,

 

"அங்க அவ்வளவு வேல கிடக்கு, அது தெரியாம இவனுங்க தான் விளையாடிக் கிட்டு இருக்கானுங்க ன்னா, பொறுப்பான பொண்ணுங்க நீங்களுமா இப்படி மசமசனு நிப்பிங்க?" என்று உரிமையுடன் அழைத்து சென்று, அந்த வேதியரிடம்,

 

"இவ உங்களுக்கு தேவையானத எடுத்துக் குடுப்பா." என்று மிருத்திகா வைக் காட்டிவிட்டு, "நீ உன் தோழிக்கு உதவியா கூடவே இரும்மா!" என்று செண்பத்திடமும் கூறி விட்டு, அடுப்படியில், ஹோமத்திற்காக வந்தவர்களுக்கு, சாப்பாடு ஆகிவிட்டதா? என்பதை கவனிக்கச் சென்று விட்டார்.

 

வேதியர்கள் கேட்டதை எடுத்து கொடுத்த படியே,

 

"இந்தம்மா நல்லவங்களா? இல்லையா?" என்று கேட்டாள் செண்பகம்.

 

"ரொம்ப நல்லவங்க... ஏன்? "

 

"இல்ல.... நீ உன் ஆள்கிட்ட பேசலாம்னு போனபோது, இடையில புகுந்துட்டாங்களோன்னு ஒரு சந்தேகம் அவ்வளவு தான்..."

 

"வேலை இருக்குல? அதான்... எதார்த்தமா தான் கூப்பிட்டிருப்பாங்க..." என்றாள் ஆச்சி அங்கும் இங்கும் போவதைப் பார்த்தபடியே...

 

'இவ என்ன எங்க ஆச்சிய சைட் அடிச்சுக்கிட்டு இருக்கா?' என்று கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் மேகன்.

 


'இவன் என்ன! அந்த பொண்ண காதலோட பாக்காம, மொறச்சு பார்த்து கிட்டு இருக்கான்? இவன் சரிப்பட்டு வரமாட்டான்." என்று மேகனைப் பார்த்து, தாத்தா வருந்தினார்...

 

‘அப்பா ஏன் இன்னும் வருத்தப்படறார்! அந்த பொண்ணு தான் வந்துடுச்சே. .." என்று தந்தையைப் பார்த்து கண்கலங்கினார் ஷோபனா.

 

‘அவ அப்பா வ மட்டும் பாசம் பொங்க, பொங்க பார்ப்பா. இத்தனை வருஷத்துல ஒரு தடவையாவது, என்னை! கண்ணு கலங்குற அளவுக்கு பாசத்தோட பாத்திருக்காளா?’ என்று ஷோபனாவை பொறாமையுடன் பார்த்தார் பிறைசூடன்.

 

"இங்க பாரு டா அப்பா வ!!... வீடு பூரா ஆள் இருப்பது கூட மறந்து, அம்மா வ சைட் அடிச்சுக்கிட்டு இருக்கார்." என்று பிறைசூடனை ரசித்து பார்த்தான் சிபி.

 

அப்பொழுது தற்செயலாக அங்கே வந்த மரகதம், சிபியைப் பார்த்து,

 

‘இவன் என்ன? என் மருமகனை பார்க்கும் பார்வையே சரியில்லையே’ என்று கவலைப்பட்டார். 'அதுசரி, மாப்பிள்ளை ஏன் இப்படி நிக்கிறார்' என்று அவர் பார்வை போன திசையைப் பார்த்தவர், ஷோபனாவைப் பார்த்து, ' இவ என்ன அவ அப்பா வ பாத்து அழுது கிட்டு இருக்கா...? ' என்று தாத்தா வைப் பார்க்க, அவர் மேகனை பார்த்து தலையை தலையை ஆட்டிக் கொண்டிருந்தார், 'மேகனை பார்த்து இவர் என்ன பண்றார்?' என்று மேகனைப் பார்க்க, அவன் மிருத்திகா வை பார்த்துக் கொண்டிருந்தான்!,,,

 

"டேய்! இங்க என்ன டா நடக்குது? என் தலை கொஞ்சம் மறைஞ்சுட்டா போதுமே. . வேலை ல கவனம் வைங்கடா... " என்று அதட்டினார் மரகதம்.

 

அனைவரும் சுயஉணர்வுக்கு வந்து ஹோமத்திற்கான வேலைகளில் இறங்கினர்.

 

ஹோமத்திற்கான வேலைகளில் மிருத்திகாவே பெரும் பங்கு வகிப்பதைப் பார்த்த விருந்தினர்,

 

"யார் இந்த பொண்ணு? இந்த அம்மாவுக்கு நெருங்கிய உறவு போலிருக்கே? உரிமையோட பொறுப்ப கொடுக்குறாங்களே?!!" என்று சிலர் கேட்க,

 

"வேற யாரா இருக்கப் போகுது?! பேரனுக்கு கட்டி வைக்கப் போற மருமக பொண்ணா இருக்கும்" என்று அவர்களுக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கும் வந்தனர்.

 

'இதற்காக தானே தெரிஞ்சவங்களை அழைச்சு விருந்து வைக்கிறேன்.' என்று நினைத்த மரகதம் தன் கணவனைப் பார்த்தார்.

 

அங்கே தாத்தாவும், பேரனும் வைத்த கண் வாங்காமல், மரகதம் ஆச்சியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

சிபி அவர்கள் அருகில் சென்று, "என்ன ஆச்சி யை ரெண்டு பேரும் சேர்ந்து சைட் அடிச்சுக்கிட்டு இருக்கீங்க?" என்று கிண்டல் அடிக்க.

 

"ஆச்சி ய பாருடா... என்ன ஒரு புத்திசாலித்தனம்... யாரிடமும் மிருத்திகா வ அறிமுகப் படுத்தாமலே 'இவள் எங்கள் குடும்பத்து மருமகள்... ' என்று வந்த விருந்தினர்களையே சொல்ல வைத்து விட்டார்களே?" என்று புல்லரித்துப் புலங்காகிதம் அடைந்தான் மேகன்..

 

சிபியும் தன்னை மறந்து ஆச்சியை பார்க்க,

 

"என்னங்கடா அடிக்கடி சிலையாயிடுறீங்க?!! " என்று மரகதம் ஆச்சி அதட்ட வும் தான் மீண்டும் அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.

 

‘மிருத்திகா வை தன் வீட்டு மருமகள் என்று புரிய வைத்த ஆச்சியால், மருமகளாக அழைத்து வர முடியுமா?’

 

அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம். ..

 

❤❤❤❤❤❤ 

Post a Comment

0 Comments