சிம்டாங்காரன்: அத்தியாயம் -20

20

நிறைவேறாத காதலும்

நினைவலைகளில்

கல்யாணத்தில் முடிகிறதே

சிம்டாங்காரா

🌹🌹🌹🌹🌹🌹

 

இரவு முழுவதும் மேகனுக்கு தூக்கம் வரவில்லை.. ‘மிருத்திகா வருவதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறதே? இந்த ஆச்சி நாளைக்கே ஹோமம் என்று கூறி விட்டு வந்திருக்கக் கூடாதா!’ என்று நினைத்தவன், ‘ச்சே என்ன நான் இப்படி நினைக்கிறேன்... ஆச்சி மட்டும் மிருத்திகாவை சந்திக்கப் போகாமலிருந்தால், இந்நேரம் ஆஸ்திரேலியா போக ஆயத்தமாகி இருப்பேன். மிருத்திகா பற்றி தெரியாமலே போயிருக்கும்..’

 

மணியைப் பார்த்தான்... ரெண்டு மணி இருபத்து ஐந்து நிமிடம் ஆகியிருந்தது... கண்களில் ஒரு பொட்டு தூக்கமில்லை. .. எழுந்து பால்கனியில் இருந்த மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து, இருட்டிலும் ஒரு ஆனந்தம் தெரிவதை, சிறிது நேரம் ரசித்து விட்டு மீண்டும் தன் அறைக்குள் வந்தவனுக்கு மிருத்திகாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. மொபைல் ஃபோனை எடுத்து, சிபி நம்பருக்கு டயல் செய்து கட் பண்ணி விட்டான். பிறகு மீண்டும் சிபி நம்பருக்கு டயல் செய்தான்... மறுமுனையில்,

 

"ஹஅஅலோஓஓ" என்றான் தூக்கத்தோடு சிபி.

 

"சிபி! தூங்கிட்டருக்கியா?" என்று மேகன் அறிவுத்துவமான கேள்வியைக் கேட்டான்.

 

தூக்கம் கலைந்த சிபி, ஃபோன் மானிட்டரை பார்த்தான். மேகன் நம்பர் ஒளிர, ஆச்சர்யத்துடன் மணியைப் பார்த்தான் மூன்று மணியாகி ஐந்து நிமிடம் ஆகியிருந்தது... ‘இவன் இந்த நேரத்தில ஃபோன் பண்ணறவனில்லையே!...’ என்று பதறி எழுந்தவன்,

 

"சொல்லுடா.." என்றான்

 

"தூக்கமே வரமாட்டேங்குது சிபி!"

 

"அடப்பாவி இத சொல்றதுக்காடா தூங்கிக்கிட்டிருந்தவனை எழுப்பின?"

 

"தூங்கிட்டிருந்தியா ஸாரிடா"

 

"உன் ஸாரி யைக் கொண்டு போயி உடப்பில் போடு! நீ இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்க?"

 

"உனக்கு ஃபோன் பண்ணி பேசிக்கிட்டிருக்கேன்.

 

"நீயா டா இது? உன்னை பார்த்தா ஆஸ்திரேலியாவின் பிரபல ஏற்றுமதி நிறுவனத்தை நடத்துறவன் மாதிரியா இருக்கு?"

 

"சரி! ஃபோன வை"

 

"டேய் உனக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது? இப்ப எதுக்கு ஃபோன் பண்ணின? இப்ப எதுக்கு ஃபோன கட் பண்ண சொல்ற?"

 

"அதான் சொன்னேன் ல டா தூக்கம் வரல... உன்னோட பேசலாம்னு ஃபோன் பண்ணினேன். இப்ப தூக்கம் வந்துடுச்சு..." என்று கூறி ஃபோனை வைத்தே விட்டான் மேகன்.

 

கையிலிருந்த ஃபோனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிபியிடம், அவன் அண்ணி,

 

"ஏன்டா லூசு! ஊரையே எழுப்பிவிட்டுட்டு ஃபோனை வெறிச்சு பாத்துக் கிட்டிருக்க?. .. ராத்திரில எந்திரிச்சு உக்காந்து எருமையா மேய்க்கிற? படுத்து தூங்கி தொலடா எரும..."

 

"நீ எப்பலயிருந்து அண்ணி இவ்வளவு அன்பா பேச பழகின? "

 

"ம்ம் கும்பகர்ணனோட டூயட் பாடுற நீ, நடுராத்திரியில பேயோட கூத்தடிச்சுக் கிட்டு இருக்கியே... இத பாத்த பிறகு தான்... " என்று கூறி விட்டு அவள் அறைக்கு போகும் வரை,

“பேய் மாதிரி தின்னுட்டு, எருமை மாதிரி துங்குவான்னு பார்த்தா... ஃபோன கட்டி... ..." அதற்கு மேல் சிபியின் காதில் விழ வில்லை.

 

"எத்தனை எருமை! !!.... எல்லாம் மனசுக்குள்ள இருந்திருக்கு...." என்று நினைத்தவாறு படுக்கையில் படுத்தான். சுத்தமாக தூக்கம் வரவில்லை... டைட் குளோசப்பில் அவனுடைய அண்ணியும், மேகனும் வந்து. வந்து போனார்கள்... எழுந்து உட்கார்ந்தே விட்டான்.

 

"டேய் இன்னுமா தூங்கிக்கிட்டிருக்க?" என்று அதட்டியபடி யாரோ தன்னை உலுக்குவதைப் போல தோன்ற, மெல்ல கண்விழித்துப் பார்த்தான் சிபி,

மேகன் நின்றுகொண்டிருந்தான்.

 

"டேய் ஏன்டா என் கண்ணுக்குள்ளேயே நிக்கிற?" என்று கேட்டபடி மீண்டும் தூங்க முயற்சி செய்ய,

 

"இவன் என்னங்க்கா இப்படி தூங்குறான்?" என்று அப்பாவியாக கேட்டான் மேகன்...

 

"நீ வேற ராத்திரி பூரா ஒரே பெனாத்தல்... எந்திரிச்சு உக்காந்து திரு திரு ன்னு முழிச்சுட்டு இருந்தான்." என்று சிபியின் அண்ணியும் பேசுவது கேட்க,

 

'ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ?' என்று எழுந்து அமர்ந்தவனுக்கு கண்களைத் திறக்க முடியவில்லை... கண்களைக் கசக்கி விட்டு பார்த்தான். எதிரில் அவனையே பார்த்தபடி மேகன் நின்றுகொண்டிருந்தான். நன்றாக உடையணிந்து பளிச்சென இருந்தான்.

சிபி எழுந்து உட்கார்ந்ததும்,

 

"சீக்கிரம்! சீக்கிரம்! கிளம்புடா" என்று கூறி மேகன், சிபியை நடத்திக் கொண்டு போய் பாத்ரூமில் விட்டான்.

 

குளித்து விட்டு வந்து கடிகாரத்தைப் பார்த்தவனுக்கு மயக்கமே வந்து விட்டது. ஐந்து மணி பத்து நிமிடங்களே ஆகியிருந்தது!! வேகமாக ஹாலுக்கு வந்து பார்த்தால், மேகனின் குரல் அடுப்படியிலிருந்து வந்தது!!?

‘அடுப்படிக்குள் மேகனா? அங்க என்ன பண்றான்?’ என்று நினைத்தபடி அங்கே சென்ற சிபி, கண்ணிமைக்க மறந்து நின்றான். ஏனென்றால், ‘அடுப்படி எப்படி இருக்கும்?’ என்று இதுவரை மேகனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை... ஆனால் இன்று!! அண்ணி காபி போட, அடுப்படி மேடை மேல் அமர்ந்து. எதையோ பேசிக் கொண்டிருந்தான். ‘இவனுக்கு என்ன ஆச்சு?' என்று நினைத்தவாறு மேகன் அருகில் சென்ற சிபி,

 


"டேய்! மணி என்னடா? இந்த நேரத்தில என்னைய ஏன்டா எழுப்பி குளிக்க வச்சு?!!! "

 

"சரி வா! நல்லா அழகா உடை உடுத்திட்டு வா பாக்கலாம்..." என்றான் மேகன்.

 

"இவ்வளவு சீக்கிரமா எங்க போறோம்?" என்று கேட்டான் சிபி.

 

"பொண்ணு பார்க்க போறோம்."

 

"யார? அந்த நாலாவது பொண்ணா?"

 

"வாயக் கழுவுடா... "

 

"ஏன்டா?"

 

"மிருத்திகா வ பார்க்க போறோம்.."

 

"இப்பவேயா? ஹாஸ்டலுக்கா போறோம்? "

 

"இல்ல! ஸ்கூலுக்கு போறோம்."

 

"ஸ்கூலுக்கா? இப்ப போனா வாட்ச்மேன் மட்டும் தானே இருப்பார்!!!

 

"எட்டு மணிக்கு போறோம்?"

 

"எட்டு மணிக்கு போறதுக்கு அஞ்சு மணிக்கே வந்து நிக்கிற?"

 

"போடா!"

 

"!!!"

 

ஏழு மணிக்கெல்லாம் வந்து ஸ்கூல் எதிரில் வண்டியுடன் மேகனும், சிபியும் நின்றனர்.

 


"மேகா நம்ம ரெண்டு பேருமே சின்ன பசங்க இல்லடா... டீன்ஏஜ் பசங்க மாதிரி ஸ்கூல் வாசல்ல காத்திருக்க... எட்டு மணிக்கு வருவோம்டா. ..."

 

"எட்டு மணியாகப்போகுதுல?"

 

"அதுக்கு இன்னும் ஒரு.. மணி நேரம் இருக்கு"

 

"ஒரு மணி நேரம் தான்டா இருக்கு."

 

"சரிடா! இப்ப நாம என்ன செய்ய இங்க வந்திருக்கோம்?"

 

"ம்ம் பொடலங்கா பறிக்க... எதாவது அம்னீஷியா நோயாளியாடா நீ?"

 

"விளையாட்டு பேச்சு போதும் மேகா... சீரியஸா பேசுவோமா?"

 

 "நான் ஆரம்பத்துலருந்தே  சீரியஸா தான் பேசிட்டு இருக்கேன். .."

 

 "மிருத்திகா வ பார்த்து. என்ன பண்ண போற?"

 

 "என்னது?"

 

 "மிருத்திகா ட்ட என்ன பேச போற? "

 

      "அவ என்ன மாதிரி மன நிலையில இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு தகுந்த மாதிரி பேச்ச ஆரம்பிக்க வேண்டியதுதான்..."

 

  "அதுக்கு ஏத்த இடம் ஸ்கூல் இல்ல.. "

 

  "பின்ன? கடற்கரைக்கா வரச் சொல்ல?

 

      "நீ சொல்லுவ!. ..தெரியாமத்தான் கேக்கிறேன்,  நிஜமாவே, எந்த ஐடியாவும் இல்லாமலா டா  இங்க வந்து நிக்கிற?"

 

      "ஐடியா பண்ணி பேச நான் என்ன தொழில் சம்மந்தப்பட்ட மீட்டிங் க்கா வந்திருக்கேன்?"

 

      "அடேய்! அதுல கூட தப்பாயிட்டா சரி பண்ண முடியும். இது ரொம்ப சென்சிடிவ் விஷயமில்லையா டா? இத்தனை வருட பிரிவு எத்தனை மாற்றங்களை உண்டாக்கியிருக்கோ?"

 

  "என்ன டா பயமுறுத்துற?"

 

  "நிஜமாவே பயப்படுறேன் டா." என்ற சிபியின் அக்கறை புரிந்தது மேகனுக்கு.

 

  "சரி! அவள பார்த்துட்டு மட்டுமாவது போவோம்." என்று மேகன் கூறவும்,

 

      'என்னது?!!... பாத்துட்டு மட்டும் போறதா? இதுக்கு, என்னை எதுக்கு இழுத்து கிட்டு வந்தான்?' என்று யோசித்தான் சிபி.

 

      சிறிது நேரத்தில் மிருத்திகா வருவது தெரிந்தது. அவளும் பார்த்துக்கொண்டே வருவது மாதிரி தான் தெரிந்தது. ஆனால் பள்ளியை நெருங்கும் பொழுதே அவளோட பார்வையை பள்ளியை நோக்கித் திருப்பி அவள் பள்ளிக்குள் செல்ல, இரு நண்பர்களுமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை... மரம் செடியைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு உள்ளே போய் விட்டாள். திடீரென்று சிபியின் கண்களில் மின்னல்! மறுபடியும் திரும்பிய மேகன் அவள் போன வழியைப் பார்க்க,  மிருத்திகா பள்ளி வாசலில் நின்று இவர்கள் இருவரையும் பார்த்தாள்.

 

      "பாக்குறாடா" என்று மேகன் சொல்லி முடிப்பதற்குள், மூன்று வாண்டுப் பெண்கள், மேகனையும், சிபியையும் காட்டி, மிருத்திகா விடம் ஏதோ கூறுவது தெரிந்தது.

 

"அந்த வாண்டுக யாருடா? நம்மள காட்டி பேசுது?" என்ற சிபியிடம்,

 

      "இந்த ஜென்மத்தில் இந்த மோகரையை  எல்லாம் பாத்த மாதிரியே தெரியலயே? நம்ம கிட்ட தான் வருதுக. . !!" என்றான் மேகன்.

 

      பாதி தூரம் வந்ததும் மிருத்திகா அந்த  பெண்களிடம் ஏதோ கூறவும், அவர்கள், நண்பர்கள் இருவரையும் பார்த்து சிரித்து விட்டு பள்ளியை நோக்கி ஓடினார்.

 

      ‘அங்கே என்ன நடக்கிறது?’ என்று இரு நண்பர்களும் புரிந்து கொண்ட நிமிடத்தில் மிருத்திகா அவர்களை நெருங்கிவிட்டாள்.

 

இரு நண்பர்களையும் முதல் முறையாக பார்ப்பது போல் ஒரு அந்நிய பார்வை ஒன்றை வீசி, முகத்தில் கடுகளவு சிரிப்பே இல்லாமல்,

 

      "இங்க எதுக்கு நின்னு ஸ்கூலுக்கு வர்றவங்க,  போறவங்கள பாத்துகிட்டு இருக்கீங்க சார்... இங்கெல்லாம் நிக்கக் கூடாது. தயவுசெய்து கிளம்புங்க... " என்று   கறாராக பேசினாள்.

 

  "மிருத்திகா!" என்று மேகன் ஏதோ கூற வர,

 

      "கிளம்புங்க சார் பிள்ளைகள் பயப்படுறாங்க. .." என்று கூறி விட்டு பதிலை எதிர் பாராமல் அவள் திரும்பி நடக்க,

 

      "ஏய்! நில்றி!  பெரிய இவ மாதிரி பேசிட்டு போற? என்னை யார் னு மறந்துடுச்சோ?" என்று மேகன், மிருத்திகாவை வழிமறித்து நிற்க..

 

      "டேய்! டேய்! என்னடா பண்ற?" என்று மேகனை அவள் வழியிலிருந்து விலக்கி,

 

  "ஸாரி சிஸ்டர்! நீங்க போங்க!"

 

  'ம்ம்ம் அந்த பயம் இருக்கனும்' என்பது போல பார்த்துவிட்டு,

 

      "உங்க நண்பருக்கு அறிவுறுத்தி கூட்டிட்டு போங்க" என்று கூறி விட்டு விடு விடென்று பள்ளியை நோக்கி நடந்தாள்.

 

      "விடுடா! என்ன டா நடக்குது இங்க?" என்று எகிறிய மேகனை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் சிபி.

 

      ஹாலில் மரகதம் ஆச்சி, ஷோபனா இருவரும் அடுத்த நாள் ஹேமத்திற்கான ஏற்பாடுகள் பற்றி பேசியபடி இருக்க, நண்பர்கள் இருவரும் சோபாவில் அமர்ந்தனர். இருவரின் முகமும் சரியில்லாமல் இருக்கவே,

 

  "என்னங்கடா பேயறஞ்ச மாதிரி இருக்கீங்க?" என்று ஷோபனா  கேட்டார்.

 

அதே நேரத்தில் பிறைசூடனும் தாத்தாவும் வாசலில் செருப்பைக் கழட்டிவிட்டு அருகில் இருந்த குழாயில் கால்களைக் கழுவி விட்டு வீட்டின் உள்ளே வந்து எதிர் சோபாவில் அமர்ந்ததும்,

 

      "குடிக்கத் தண்ணீர் கொண்டு வரவா?" என்று கேட்டுக்கொணடே டைனிங் ரூமிற்கு சென்றார் ஷோபனா.

 

       'வெளியே போயிட்டு வர்ற ஆம்பள கிட்ட, 'குடிக்க என்ன வேணும் கேட்டு, கொண்டு வர மாட்டியாம்மா? ' என்று நினைத்தபடி,  இந்த விஷயத்தில் அப்படியே அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கும் மகளைப் பார்த்த தாத்தா, அருகில் அமர்ந்திருந்த பிறைசூடனைப் பார்த்தார்.

 

      "இன்னும் அப்படியே தான் இருக்கா. மாத்தமுடியல... அவ கொண்டு வரத குடிச்சு பழகிக்கிட்டேன்..." என்று சிரித்தார்.

 

      அனைவரும் சேர்ந்து சிரிக்க,... நண்பர்கள் மட்டும் அமெரிக்கா, சீனா விற்கிடையான பொருளாதாரப் பிரச்சனையை விட பெரிதான சிந்தனையில் இருந்தனர்.

 

  "என்னய்யா யோசனை?" என்று மேகனைப் பார்த்து கேட்டார் தாத்தா.

 

நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

      "டேய்! என்னடா முழிச்சுக்கிட்டு இருக்கீங்க?" என்று பிறைசூடன் சத்தமாக கேட்டதும்,

 

  "தப்பு நடந்துடுச்சு ப்பா" என்றான் சிபி.

 

  "என்னடா பண்ணிங்க?" என்று ஷோபனா கேட்க, நடந்ததைக் கூறினர்.

 

      "ஏன்டா நாளைக்குதான் அந்தப் பொண்ணு வரும் ல... அப்புறம் ஏன்டா இப்படி பண்றீங்க?" என்று ஷோபனா கேட்டார்.

 

      இருவரும் அமைதியாக இருக்க, மேகன்,சிபி, ஷோபனா தவிர மற்ற மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

 

புரியாமல் அவர்களைப் பார்த்த ஷோபனா விடம்,

 

      "என்னம்மா எங்கள பாக்குற? இவங்க பண்ண கூத்தை நெனச்சு இந்நேரம் ஒருத்தி புரையேறும் அளவு சிரிச்சுக்கிட்டிருப்பா... இவ்வளவு ஏற்பாடு பண்றோம், மிருத்திகா வருவாளான்னு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு... இப்ப எனக்கு அந்த கவலை இல்லை.. கண்டிப்பா வந்துடுவா..." என்று கூறி சிரித்தார் பிறைசூடன்.

 

      "என்னப்பா சொல்றீங்க? இவன் என்னென்னவோ சொல்லி பயமுறுத்திட்டான்." என்று மேகன் கூறவும்.

 

      "வெளியே சொல்லலையே தவிர, மிருத்திகா மேல் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது... மோதிரம் மாத்தி கல்யாணம்  நடந்ததா சொல்லிடுவாளோ ன்னு....  எப்ப திரும்பி வந்து உங்கிட்ட பேசினாளோ அப்பவே நிம்மதியாயிடுச்சு...   அவளுக்கும், நம் வீட்டிற்கு  போகலாமா? வேண்டாமா? னு ஒரு உறுத்தல் இருந்திருக்கும்... அது உன் சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும்... அந்த உறுத்தலை உடைத்தெறிஞ்சுட்ட... கவலை படாமல் இரு... இந்நேரம் அவளும் உன்னை நினைத்து தான் சிரித்துக் கொண்டிருப்பாள்." என்று தாத்தா கூறினார்.

 

  ஆம்!! மிருத்திகா ஐந்து வருடங்களுக்குப் பிறகு சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

      "உனக்கு சிரிக்கக் கூட தெரியுமா?" என்று உடன் வேலை பார்ப்பவர்கள் வியந்து கேட்டனர்.

 

      ஸ்டாஃப் ரூமிற்கு சென்று அமர்ந்தவளுக்கு,  மிருத்திகா யாரையோ அழைப்பதைப் போல மேகனை 'சார்' என்று அழைக்கவும் அவன் முகம் போன போக்கை நினைத்ததும், வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள். அருகில் இருந்த செண்பகம், மிருத்திகா வை கைகளால் சுற்றி திருஷ்டி கழித்து  

 

      "என்ன்ன?  வாயெல்லாம் பல்லா இருக்கு? எங்கிட்ட சொன்னா நானும் சந்தோஷ படுவேனே!... என்றாள்.

 

      நிஜம்தான் பெண்களின் சிரிப்பில் உண்மையாக கலந்து கொள்ளும் தோழிகள் கிடைப்பது அரிதாகிவிட்டது... ஆனால் எனகென்று ஆண்டவனால் அனுப்பி வைக்கப் பட்டவள், இந்த செண்பகம்...

 

  "ஒன்னுமில்லை." என்றாள் மிருத்திகா.

"நான் சொல்லவா?"என்று செண்பகம் கேட்டதும்,

 

‘இவளுக்கு என்ன தெரியும்?’ என்று யோசித்தவாறே

 

 "ம்ம்" என்றாள் மிருத்திகா.

 

 "உன் வீட்டுக்காரர் வந்துட்டார் சரியா?" என்று குண்டைத்தூக்கி போட்டாள்.

 

 "என்ன சொல்ற?" என்று அதிர்ந்து போய்க் கேட்டாள் மிருத்திகா.

 

 "மறைக்காதே! நான் பாத்தேன்... உன் கணவரிடம் நான் முந்தாநாள் பேசினேன்."

 

 "எப்ப? எனக்கு தெரியாதே?"

 

      "உன்னைக் கேட்டு ரிசப்ஷனில் பேசிக்கிட்டிருந்தார். ..  அப்பப்போ உன்னையும் மீறி உன் கணவரைப் பற்றி நீ சொன்ன அடையாளங்கள் அப்படியே இருந்தது... நான் அவரிடம் பேசினேன். 'அவர் உனக்கு திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டதும், எனக்கு பயமாகி விட்டது. ஓடி வந்து உன்னிடம் சொல்ல வந்தேன்... ஆனால், நீயும் மாடியிலிருந்து அவரை மறைந்து நின்று  பார்ப்பதைப் பார்த்த பிறகு தான்... அவர் தான் உன் கணவர் என்று உறுதியாக நம்பினேன்..."

 

      "...." இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக மிருத்திகா இருக்கவும்,

 

      "உனக்கும் உன் கணவருக்கும் என்ன பிரச்சனை யாக இருந்தாலும் பேசி தீர்க்கப் பார்... பார்ப்பதற்கு நல்லவராக தெரிந்தார். மனதில் இருப்பதை பளீர்னு பேச தயங்குறவர் னு நினைக்கிறேன்... அப்போ நீ தான் வெளிப்படையா  பேசனும்....  உன் கணவர்தானே. .. உங்களுக்கிடையே இருப்பது சின்ன பிரச்சனையாகத் தான் இருக்கும்...    சின்ன விஷயங்களுக்காக மனஸ்தாபப்பட்டு நல்லவரை பிரிவது ரொம்ப தப்பு... இத்தனை வருடங்கள் மனதை இறுக்கி வாழ்ந்தது போதும்... நிறைய துன்பங்களைக் கடந்து, வந்து விட்டாய்

...போதும்... இப்போ அவரே தேடி வந்து விட்டார்... உங்களுக்கிடையே இருக்கும் எல்லா கட்டுகளையும் உடைத்தெறிந்து விட்டு, அவருடன் சேர்ந்து வாழு... மனம் விட்டு பேசு... அவர் பக்க நியாயத்தையும் அவருடைய மனைவியா இருந்து, கவனமாக கேளு... அவரைப் பார்த்தால் உன்மேல் ரொம்ப பிரியம் உள்ளவராக தெரிந்தது...உன் வாழ்க்கைய பத்தி,  என்னிடம் நீ எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்ல... நீ என் உயிர்த்தோழி.... அவரை பேச விட்டு கேளு... அவர் மேலுள்ள உன் காதலைப் புரியவை. ... மறந்து விடாதே. .. அவர்மேல் உனக்கிருக்கும் காதலை சொல்லி விடு. .. கண்ணீர் வழிகிறது பார்... துடைத்து விட்டு, சிரி... " என்று கூறி மிருத்திகாவின் கண்களைத் துடைத்து விட்டாள் செண்பகம்...

 

      அடுத்தவர் விஷயத்தை அறிய ஆளாய் பறப்பவர்கள் மத்தியில், ‘எனக்கு விளக்கம் சொல்லாதே! ... சிரி’... என்று கூறும் செண்பகம் போன்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

 

 மிருத்திகா தோழியின் வார்த்தைகள் படி நடந்தாளா?  

 

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம். ..

 

                                                        ❤❤❤❤❤❤❤❤ 

Post a Comment

0 Comments