வருவான்-5

வருவான் -5


இரு சக்கர வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ரகுநந்தன் நிற்பது, பூவினாவின் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் புல்லட் ஓட்டிக் கொண்டு வந்த சரவணவேல் ஐ.பி.எஸ்- ஐ பார்த்துவிட்டாள். 


பூவினா, தன்னைப் பார்க்காமல் சரவணவேல் ஐ.பி.எஸ் ஐ பார்ப்பதை, ரகுநந்தனும் பார்த்து விட்டான்.


'இவனைப் பூவினாவிற்குத் தெரியுமா? இவனையே பார்க்கிறாளே?!! ' என்று நினைத்தவாறு பூவினாவையே பார்த்தான் ரகுநந்தன்.


புல்லட் பூவினாவின் வீட்டைக் கடக்கும்பொழுது எதார்த்தமாகப் பூவினாவின் வீட்டைப் பார்த்தபடி சென்றான் சரவணவேல். 


அங்கே பூவினா யாருக்கோ 'டாட்டா' காட்டுவது போலக் கையசைத்தபடி, கண்களால் தன்னைத் தொடர்வதைப் பார்த்தவன், புல்லட்டின் வேகத்தை மேலும் குறைத்து, இவ நம்மளத்தான் பார்க்குறா. ... ஆமா, இந்த நேரத்தில் இவள் யாருக்கு டாட்டா காட்டுகிறாள்?' என்று திரும்பிப் பார்த்தான். 


அதற்குள் ரகுநந்தன் சாலையின் வளைவில் திரும்பி விடவே, யாரோ போகிறார்களோ?' என்று நினைத்த சரவணவேல், புல்லட்டை நிறுத்தி, மீண்டும் நிமிர்ந்து பூவினாவைப் பார்க்க, அவளும் ஜன்னலருகே இல்லை. 


சிறிது நேரம் ஜன்னலையே பார்த்தவனுக்கு, தன்னை யாரோ பார்பதுபோல் தோன்ற, திரும்பி சாலையைப் பார்த்தவனுக்கு, ரோடு திரும்பும் இடத்தில் நின்றபடி யாரோ தன்னையே உறுத்து பார்ப்பது தெரிய, வேகமாக புல்லட்டைத் திருப்பி, வந்த வழியே ஓட்டினான். 


சரவணவேல் புல்லட்டைத் திருப்பவும், அவனையே பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தன் மெல்ல நடந்தான். 


சரவணவேலும் புல்லட்டின் வேகத்தை அதிகப்படுத்தி, ரோட்டின் வளைவுக்கு வந்தான். அதற்குள் ரகுநந்தன் அடுத்த வளைவில் திரும்பிப் போய்க்கொண்டிருந்தான். அவனைப் பின்தொடர்ந்து வந்த சரவணவேலை பார்த்தபடியே அங்கு வந்த பஸ்ஸில் ஏறினான்.


'இவன் ஏன் என்னையே பார்த்தபடி போறான்? இவனுக்குத்தான் பூவினா கையசைத்து விடைகொடுத்தாங்களா? எப்படி தெரிஞ்சுக்கிறது?' என்று நினைத்த சரவணவேல், ரகுநந்தன் ஏறிய பஸ் புறப்பட்டுச் செல்வதைப் பார்த்து, 'பஸ்சைத் தொடரலாமா?' என்று நினைத்தவனுக்கு, தனக்கு இருந்த அவசர வேலை ஞாபகத்திற்கு வர, புல்லட்டை மீண்டும் பூவினா வீடு இருக்கும் ரோட்டிற்குத் திரும்பினான். 


சரவணவேல் புல்லட்டைத் திருப்பி ஓட்டுவதைப் பார்த்த ரகுநந்தன், 


"ஷிட்!" என்று பஸ்ஸைத் தனது கை முஷ்டியால் குத்தினான். 'அவன் என்னைப் பின்தொடர்ந்து வருவான் என்று நினைத்தேனே... ஆனால் திரும்பிச் சென்றுவிட்டானே?' என்று நினைத்தவாறு சரவணவேலையே பார்த்துக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.


"அப்பாடி! நல்லவேளை, அவன் (சரவணவேல்) என்னைப் பார்க்கவில்லை." என்று நிம்மதியுடன் ஜன்னல் கதவை மூடிவிட்டு வந்து படுத்து உறங்கினாள் பூவினா. 

அடுத்த நாள்

வழக்கம்போலக் காலையில் ஹரிபரியாகக் கிளம்பி, காலேஜுக்கு வந்தாள் பூவினா. அவளை எதிர்கொண்டு அழைக்க வந்த கிரேசா,




"வா! வா! யாரோ போலீஸ் ஆபிசர் நம்ம காலேஜுக்கு வராராம். அடுத்த ஓரியண்டேசன் புரக்ராம்க்கு கெஸ்ட் டா வந்திருக்கிறார்ன்னு சிலர் சொல்றாங்க… இல்லை... நம்ம டிபார்ட்மெண்ட்க்குதான் ஏதோ ஸ்பெஷல் டிரைனிங் கொடுக்க வரார்னு சிலர் சொல்றாங்க... இன்னைக்குன்னு பார்த்து நீ லேட்டா வந்துடுவியோன்னு பயந்து போயி காலேஜ் கேட்டையே பார்த்துக்கிட்டிருந்தேன்." என்றாள்.


"நான் சரியான நேரத்துக்கு வந்துடுவேன்னு உனக்குத் தெரியாதா?" என்று இருவரும் பேசியபடியே அவர்கள் வகுப்பு அறைக்குள் சென்றனர்.


சிறிது நேரத்தில் வகுப்பறைக்குள் வந்த, அவர்கள் துறைத் தலைவர் (ஹெட் ஆஃப் தி டிபார்ட்மெண்ட் பா.) 


"ஸ்டூடெண்ஸ்! இன்னைக்கு நம்ம கிளாஸ்க்கு, நம் துறை சம்பந்தப்பட்ட டிரைனிங் கொடுப்பதற்காக, ஒரு போலீஸ் ஆபிசர் மற்றும் மூன்று போலீஸ்காரர்கள் வந்திருக்கிறார்கள். எல்லோரும் நல்லவிதமாக அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவீங்கன்னு நம்புகிறேன்... உங்க வாலையெல்லாம் சுருட்டிக் கொள்ளுங்கள்... சேட்டை செய்து நம்ம டிபார்ட்மெண்ட் மானத்தை வாங்கிடாதீங்க... அவரிடம் நல்லவிதமான, நம்ம டிபார்ட்மெண்ட் சம்மந்தப்பட்டக் கேள்விகளை, சந்தேகங்களை மட்ட்ட்டும் கேளுங்கள்... பேசுவது போலீஸ் ஆபிசரிடம் என்பதை மனதில் வைத்து அதற்குத் தகுந்தபடி பேசுங்க." என்றார்.

"அவரிடம் நாங்கள் கேள்விகள் கேட்கலாமா ஸார்?"


"கேட்கலாம்... இன்று அவர் பேசும் தலைப்பிலிருந்து கேட்கலாம்... நம்ம டிபார்ட்மெண்ட் சம்மந்தமாக மட்ட்டும் கேள்விகளைக் கேட்கலாம்." என்று, மீண்டும் மட்டும் ல் அழுத்தம் கொடுத்து, துறைத்தலைவர் பேச,


"வேற என்ன சார் கேட்டுடுவோம்னு நீங்க நினைக்கிறீங்க?"


"அத என் வாயால சொல்ல முடியுமா?" என்று, அனைத்து மாணவ, மாணவிகளையும் ஒரு பயப்பார்வை பார்த்தார்.


"நம்ம ஹச்.ஓ.டி மெரண்டுட்டாரு டா" என்று கூறி மாணவர்கள் சிரிக்க,


'சொல்லவேண்டிய கடமை சொல்லிட்டேன்.' என்பதுபோல் பார்த்து விட்டுச் சென்றார்.


சிறிது நேரத்தில் டிபார்ட்மெண்ட் ஹச்.ஓ.டி., புரபசர்கள் முன்னே வர, சரவணவேல், ஐ.பி.எஸ்., மற்றும் இரு பெண் போலீஸ், ஒரு ஆண் போலீஸ் உள்ளே வந்தனர். சரவணவேலைப் பார்த்த பூவினாவிற்குத் தூக்கிவாரிப் போட்டது. 


தன்னை மறந்து, மனதிற்குள் பேசுவதாக நினைத்து, "இவன் போலீஸ் ஆபிசரா?" என்று வாய் விட்டுக் கொஞ்சம் சப்தமாக உளற, 


அவளைச் சுற்றியிருந்த மாணவ மாணவிகள் பூவினாவை திரும்பிப் பார்க்க, மாணவர்களைப் பார்த்தபடி வந்த சரவணவேலும் பூவினாவை பார்த்துவிட்டான். "நீயா?" என்பது போல அவன் கண்களிலும் அதிர்ச்சி. பூவினாவைப் பார்த்ததும், ஏனோ சரவணவேலுக்கு பூவினா வீட்டிற்கு சென்றிருந்தபோது, அவளைத் தூக்கிச் சென்றது ஞாபகத்திற்கு வந்தது... கண்களில் சிரிப்பு மின்ன,


"குட்மார்னிங் ஃபிரண்ட்ஸ்! உங்களை சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்." என்று, பார்வையை, மற்ற மாணவர்களில் ஆரம்பித்து, பூவினாவைப் பார்த்தபடி முடித்தான்.



"இவன் என்னிடம் தான் சொல்கிறானா?" என்று யோசித்தாள் பூவினா.


"ஃபிரண்ட்ஸ்?!!!... எங்களையா ஃபிரண்ட்ஸ்னு கூப்பிடீங்க!! என்ன சார் சொல்றீங்க?" என்று ஏதோ ஒரு ஆர்வக்கோளாறு மாணவன் கேட்க,


"ஆமா! நீங்க என்னை உங்களுக்கு ஃபிரண்ட்டாவும், நான் உங்களிடம் ஃபிரண்ட்லியாவும் இருந்தா... கிளாஸ் கொஞ்சம் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும். என்ன நினைக்கிறீங்க?" என்று சரவணவேல் கேட்டதும்,


"நீங்க சொன்னா சரிதான் ஸார்." என்று மாணவ மாணவிகள் குதூகலித்தனர்.


" நான், சரவணவேல் ஐ.பி.எஸ். இவர் ஜெயராம், இவங்க பானு, அவங்க ஜான்சி... இப்போ உங்க முறை. உங்கள அறிமுகப்படுதிக்கிடுங்க..." என்று சரவணவேல் சொல்ல,


அனைத்து மாணவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அனைவருக்குமே கௌண்டர் கொடுத்தபடியும் ஜாலியாக சிரித்து பேசியபடியும் இருந்தான் சரவணவேல். பூவினாவின் நேரம் வரவே, அவள் எழுந்து,

"நான் பூவினா."


"என்ன "னா"?" என்று வேண்டுமென்றே கேட்டான் சரவணவேல்.


'கொழுப்பு? ம்ம்... நீ போலீஸ் ஆபிசரா இருந்தா நாங்க பயந்துடுவோமா?' என்று நினைத்தபடி, நெற்றியில் கைவைத்து, கையால் கண்களை மறைத்துக் கொண்டு, யாரும் பார்க்காதவண்ணம் அவனை முறைத்தவள்,


"பூவினா." என்றாள்.


அவளுக்கு மட்டும் கௌண்டர் எதுவும் சொல்லாமல், 'பொருத்தமான பேர்.' என்பது போல், 'அன்று அவளைத் தூக்கிய தருணத்தை' நினைத்தபடி தலையாட்டினான். 


'அடுத்து' என்பது போல அவன் கிரேசாவைப் பார்க்க,


"என்ன ஸார் அநியாயம்? எங்களைப் பற்றிச் சொல்லும்போது கௌண்ட்டர் கொடுத்த நீங்க... பூவினாவை மட்டும் விட்டுட்டீங்க... அவ பேரே வித்யாசமாச்சே" என்று எடுத்துக் கொடுத்தனர், கோரஸாக,


"அவங்களுக்கும் கௌண்ட்டர் குடுத்தேனே… ஆனா…அவங்க எனக்கு முறைபெண்..." என்று சரவணவேல் குறும்பாகப் பார்த்தபடி தயங்க,


"ஹோஓஓஓ!"என்று கத்தினர்.


"வினு சொல்லவே இல்ல!!" என்று பூவினாவிடம் சிலரும்.


"அப்படியா ஸார்?" என்று சரவணவேலிடம் சிலரும்.

"அதான் அவர் வந்ததும் உளறினாயா ? " என்று பூவினாவிடம் அவளருகிலிருந்தவர்களும் கேட்டனர்.


"நான் வந்தபோது பூவினா என்ன சொன்னாங்க?" என்று சரவணவேலும் 


"முறைப்பெண்ணா?" என்று சரவணவேலை முறைத்தபடி, பூவினாவும் ஒரே நேரத்தில் கேட்டனர்.


"நீங்க போலீஸ் ஆபிசரான்னு கேட்டா சார்."


"முறைப்பெண்னு சொல்றீங்க... நீங்க என்ன வேலை பார்க்கிறீங்கன்னு வினுவிற்குத் தெரியாதா சார்?" என்று குஷியாக மாணவர்கள் கேட்க,


"நான் பேசி முடிக்கும் முன் நீங்களா கற்பனைக் குதிரையைத் தட்டாதீங்க நண்பா..." என்று மற்ற மாணவர்களைப் பார்த்துக் கேட்டவன், 


பூவினாவைப் பார்த்து, "நான் என்ன சொல்ல வந்தேன்னா. ..." என்று நிறுத்தி, பூவினாவின் கண்களுக்குள் பார்த்தவாறு மீண்டும், "பூவினா என்னை, முறைப்பெண் மாதிரி, ஏற்கனவே மொறச்சு பார்த்துகிட்டு இருக்காங்க... இதுல அவங்களுக்கு எப்படி கௌண்ட்டர் கொடுக்குறதுன்னு கேட்க வந்தேன். அவ்வளவுதான்" என்று முடித்தவன் கண்களில் இருந்த குறும்பைப் பார்த்த மாணவர்கள்


"ஐய்... ஐய், ஐய்!! உடான்ஸ்... நம்பீட்டோம் சார்." என்று குஷியாகக் கத்தினர்.


இவ்வாறு பேச்சும் சிரிப்பும் கலாட்டாவாகவும், பாடமும் நடந்தது. நேரம் ஆக ஆக, டிபார்ட்மெண்ட் சம்மந்தமாக சரவணவேலுக்கு இருந்த திறமையையும், அதில் அவனுக்கு இருந்த ஆர்வமும், அதை மாணவர்களுக்குப் புரியும்படி எடுத்துக் கூறிய விதத்திலும், அசந்து போய் அவன் பேசுவதையே, மற்ற மாணவர்களைப் போல, பூவினாவும் மிகவும் ஆர்வமாகக் கவனித்தாள். 


அப்பொழுது, யாரோ வகுப்பறையின் ஜன்னல் வழியாகத் தன்னைப் பார்ப்பது போல் உணர்ந்தவள், ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்த்தாள். 


அங்கே ரகுநந்தன் நின்றுகொண்டிருந்தான்!!! 


ஆச்சரியத்தில் கண்கள் விரிய, 'இவர் எப்படி இங்க?' என்பது போல் பார்த்தாள். 


பூவினா ஜன்னலைப் பார்க்கவும் சரவணவேலும் திரும்பிப் பார்க்க, அங்கே யாரோ நிற்பது தெரிந்தது. 


'யார் இவன்? இவனை ஏன் இவள் இப்படிப் பார்க்கிறாள்?' என்று நினைத்தவாறு, இருவரையும் யோசனையாகப் பார்த்தபடி, மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். 


"இங்க எப்படி வந்தீங்க?" என்பது போல யாரும் அறியாவண்ணம் பூவினா, ரகுநந்தனிடம் கேட்டாள்.


சரவணவேலின் யோசனையான முகத்தைப் பார்த்த ரகுநந்தன், பூவினாவைப் பார்த்து, சிரித்தபடி தோள்களைக் குலுக்கினான். 


அவனின் இந்தச் செயல் பூவினாவிற்கு மிகவும் பிடித்துப்போக, அவளும் அதேபோல் தோள்களைக் குலுக்கிச் சிரித்தாள். இதைக் கவனித்த சரவணவேல்,


"பூவினா உங்க கவனம் எங்க இருக்கு?" என்று சீரியஸாகக் கேட்க, 


சட்டென்று திரும்பிப் பார்த்தவள், 'ஒன்றுமில்லை' என்பது போல இடவலமாகத் தலையசைக்க, சரவணவேல் சிரித்துவிட்டான். 


"அங்க நின்னுகிட்டிருப்பவரை இங்கே வரச்சொல்லுங்க பூவினா. எதுக்கு அவர் மட்டும் தனியா அங்க நிற்கிறார்." என்று கூற


"எங்கே சார்? அங்கே யாருமில்லையே..." என்று மழுப்பினாள் பூவினா.


அனைவரும் ஜன்னலைத் திரும்பிப் பார்க்கவும், ரகுநந்தன் சற்று மறைந்து கொள்வது, சரவணவேலுக்கு நன்றாகத் தெரிந்தது. 


'அவர் யார் என்று தெரியவேண்டுமே!' என்று நினைத்த சரவணவேல், அருகில் இருந்த ஜெயராமிடம், 


"அங்கே ஜன்னல் அருகில் ஒருவர் நின்று கிளாஸை டிஸ்டர்ப் பண்றார். உள்ளே கூட்டிட்டு வாங்க ஜெயராம்." என்றான்.


இயல்பாகவே ஜெயராமிற்கு சரவணவேல் சொல்வதுதான் வேதம்... அப்படி இருக்கையில் சரவணவேலையே டிஸ்டர்ப் பண்ணுபவரை, அழைத்து வந்தே தீருவேன்... என்று சபதம் எடுத்ததைப் போல் அவர் வகுப்பறை வாசலை நோக்கி நகர, 


சரவணவேல் ஜெயராமிடம் பேசியதைக் கவனித்த பூவினா, ரகுநந்தனை பார்த்து, "போங்க! போங்க!" என்பதுபோல் சைகை செய்ய, அதை சரவணவேலும் கவனித்தான்.


ஜெயராம், 'ஜன்னல் அருகே யார் நிற்கிறார்கள்?' என்று பார்த்தான். 


அங்கே ரகுநந்தன் நிற்க, ரகுநந்தனுக்கு அருகில் சென்றான்.


ஜெயராமைப் பார்த்த ரகுநந்தனுக்கு ஆச்சர்யமாகி விட்டது. 


“ஜெய்! நீயா?!! இப்பவும் சரவணவேல் கூடவேவா இருக்க?' என்று நினைத்தவாறு, ரகுநந்தன் ஜெயராமைப் பார்த்தான். 


ஆனால் ஜெயராம் அந்நிய பார்வையுடன் ரகுநந்தன் அருகில் வந்து,


"யார் சார் நீங்க? இங்க நின்னு என்ன பண்றீங்க? உங்களை சார் கூப்பிடுறார். வாங்க." என்றதும், ரகுநந்தன் சிரித்தபடி ஜெயராமைப் பார்த்து,


"என்ன ஜெய் என்னை உனக்கு அடையாளம் தெரியலையா? நான்தான் உன் ரகு!" என்று ஜெயராமின் கைகளை நெகிழ்ச்சியுடன் பிடித்துக் கண் கலங்க .... 


யார் இந்த ஜெயராம்? இவனுக்கும், ரகுநந்தனுக்கும் என்ன சம்மந்தம்?


அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...


💍💍💍💍💍💍💍💍💍



Post a Comment

0 Comments