வருவான்- 2

 வருவான் -2

அன்று இரவு பூவினா அசந்து தூங்கும் பொழுது, யாரோ ஒரு பெண் ஓடுவதுபோலவும், யாரோ ஒருவன் சிரிப்பது போலவும், பிரேத ப‌ரிசோதனை‌க்கூடத்தில் அவள் மயங்கிச் சரிவதுபோலவும், அந்த வாலிபன் அவளையே கண்ணெடுக்காமல் பார்ப்பது போலவும் தோன்ற, அவன் கண்கள் பூவினாவின் கண்வழியாக உள்ளே ஊடுறுவ, சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்... கனவா?!! கனவு போல இல்லையே?!! நேரில் பார்ப்பது போல தோன்றியதே?!!' என்று நினைத்தவளுக்கு தண்ணீர் தாகம் எடுக்க, அருகில் இருந்த ஜாடியில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள்... உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது.

 

  

அம்மாவிடம் சென்று படுத்துக்கொள்வோமா? என்று நினைத்தவள், 'வேண்டாம் அம்மா பயந்துடுவாங்க. இன்டஸ்ட்ரியல் விசிட் பற்றிய நினைப்பிலேயே இருப்பதால் இப்படி கனவு கண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்.' என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டு மீண்டும் உறங்கினாள். அதன்பின், காலேஜ், வீடு, படிப்பு என்று மனம்மாற, அந்த கனவை முழுவதும் மறந்தாள்.

தினமும் பூவினா, அவ அப்பா ராஜன், விஜய் விஷ்வா மூவரும் சேர்ந்து, இன்டர்நெட்டில் பிரேத ப‌ரிசோதனை‌ பற்றிய வீடியோக்களை பார்த்தனர்... பூவினாவை விட விஜய் விஷ்வா தான் நிறைய சந்தேகங்கள் கேட்டான்... கொஞ்சம் கூட பயமோ, அருவருப்போ இல்லாமல்,

"இதற்குள் என்ன இருக்கும்? உயிருடன் இருக்கும் போது இந்த பாகம் இப்படி தான் இருக்குமா?" என்று பல கேள்விகளை காமடியாகவும் கதைபோல ஆர்வத்துடனும் விஜய் பேச பேச, பூவினாவிற்கும் பயம் மறைந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது...

பூவினா இந்த வீடியோக்களை டௌண்லோட் செய்து தனது நெருங்கிய தோழி கிரேசாவிடமும் கொடுத்து, தினமும் இது சம்பந்தமாக டிஸ்கஸ் செய்து, பூவினா, ஓரளவு இன்டஸ்ட்ரியல் விசிட் டுக்கு தாயாராகினாள். ..

எவ்வளவுதான் தயாராக இருந்தும், விசிட் செல்லும் நாள் வரவும், மீண்டும் உதறல் எடுத்தது பூவினா விற்கு. சாமி கும்பிட்டு நெற்றியில் பட்டை பட்டையாக திருநீறு, குங்குமம், சந்தனம் பூசிக்கொண்டிருந்த பூவினாவை,

"ஏங்க்கா, ருத்ராட்சம், காவி உடை இதெல்லாம் கிடைக்கலையா உனக்கு? இறந்த உடல் உன்னை என்ன செய்துவிடும்? நீதான் அதை வச்சு செய்யப்போற. .. " என்று விஜய் கலாய்க்க,

"அம்மா! பாருங்கம்மா இவனை." என்று வள்ளி யிடம் புகார் செய்தாள்.

"கிளம்பிட்டியா? இரு... இந்த சிவப்பு கயிறை கட்டிக்கோ மாரியம்மன் கோயிலில் குடுத்தாங்க." என்று கூறியபடி பூவினாவின் கையில் வள்ளி கயிறை கட்ட,

"நீ தான் அவளை பலவீன படுத்துற... இப்ப எதுக்கு இந்த கயிறு?" என்று வள்ளி யிடம் கேட்டார் ராஜன்.

"வயசுப் பொண்ண சுடுகாட்டு பக்கத்தில் போனாலே இரும்பு கம்பி, அடுப்புக்கரி எல்லாம் குடுத்து விடுவாங்க பெரியவங்க... அதுக்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கும். யார் என் பேச்ச கேட்குறா? உங்களுக்கெல்லாம் கிண்டலாக போச்சு.." என்று நொடித்தார் வள்ளி.

"உன்னை பார்த்தா பேயோட்ட போறவ மாதிரி இருக்கு..." என்று சொல்லி சிரித்த விஜய் முதுகில் மொத் மொத் என்று அடித்தாள் பூவினா.

"வாய வச்சிட்டு சும்மா இருக்க முடியாதா உனக்கு?" என்று வள்ளி, விஜய்யை அதட்ட,

"சம்போ சிவ சம்போ...

சிவனே மந்திரம் ....

சிவனே எந்திரம்... "

என்று பாடியபடி பள்ளிபேருந்து நிற்கும் இடத்திற்கு ஓடினான் விஜய்...

பூவினாவும், "நான் போயிட்டு வரேன் ம்மா... ப்பா" என்று கூறியபடி வாசலை நெருங்க, படிதட்டி விட்டது. விழப் போனவளை பிடித்து நிறுத்திய ராஜன்,

"என்னடா குழப்பத்துடன் இருக்கியா?" என்று கேட்டார்.

"வா! வீட்டிற்குள் வந்து உட்கார்..." என்று கூறிய வள்ளி தன் மகளுக்கு தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் சொன்னார். வள்ளியின் உள்மனம் ஏதையோ எண்ணி கலங்கியது. 'சொன்னா எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க" என்று நினைத்தவள், பூஜை அறைக்கு சென்று திருநீறு எடுத்து பூசானார். வள்ளி அறியவில்லை, அவர் கணவர் மனமும் படியில் தட்டியதால், துணுக்குற்று இருப்பதை... இப்பொழுது வள்ளி தடுத்திருந்தால் ராஜனும், பூவினாவும் கேட்டிருப்பார்கள்... பல பிரச்சினைகளிலிருந்தும் பூவினா தப்பித்திருப்பாள். விதி பூவினாவை காலேஜுக்கு அழைத்துச் சென்றது.

பூவினாவின் வேஷங்களைப் பார்த்து சக மாணவ, மாணவிகள் கிண்டலடிக்க, அவள் புரபசரும்,

"வீடியோ பார்த்தேன் அது இதுன்னு சொன்ன? இன்னைக்கு சாமியாடி மாதிரி வந்திருக்க? இங்க பாருங்க! இவ்வளவு பயத்துடன் யாரும் வரவேண்டாம்... கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் மட்டும் வாங்க." என்று கூறினார்.

எல்லோரும் கிண்டலடிக்க வே முகத்தைக் கழுவி விட்டு வந்தாள். கையில் இருந்த கயிறையும் கழட்டி காலேஜ் பேக் கில் போட்டுவிட்டு இன்டஸ்ட்ரியல் விசிட் டுக்கு கிளம்பினாள் பூவினா.

"நான் உங்களுக்கு எதிரில் உங்கள் கண்ணில் படுவது போல தான் நிற்பேன்... உங்களுக்கு வித்யாசமா தோன்றினால் என்னைப் பாருங்கள்... அங்கே வந்து பேயறஞ்ச மாதிரி நிக்காம சந்தேகங்களைக் கேளுங்கள்." என்று கூறி மாணவ மாணவிகளை ஒரு வேனில் ஏற்றினார் புரபசர். கூடவே ஒரு லேப் அசிஸ்டெண்ட் மேடமும் வந்தார்கள்.

வேனிலிருந்து அரசு மருத்துவ மனையில் இறங்கியதுமே பூவினா விற்கு உடல் சில்லிட்டது. அவள் தன் தோழி கிரேசாவைப் பார்க்க, அவளுக்கும் பற்கள் தந்தியடிக்க, 'எல்லோருக்குமே இப்படி தான் இருக்கும் போல.' என்று எண்ணிய வாறு, அவர்களுடைய புரபசரை பின் தொடர்ந்து சென்றாள்.

பரிசோதனை அறைக்குள் நுழைந்ததுமே பூவினாவின் பயம் மறைந்தது. ஏனோ மனம் அமைதியாக, இனிமையாக, யாரையோ பார்க்கப் போகும் குதூகலத்துடன் இருந்தது. பூவினா விற்கே ஆச்சரியமாக இருந்தது. திடீரென்று மனநிலைமாறியது எப்படி? என்று புரியவில்லை பூவினா விற்கு.

அவர்கள் முன், தற்கொலை செய்து கொண்ட வாலிபனின் உடல் கிடத்தப்பட்டு இருந்தது... ஏற்கனவே ஆங்காங்கே உடம்பின் பாகங்களை திறந்து வைத்திருந்தனர்.

ஐம்பது வயதொத்த டாக்டரும், துணை டாக்டர்கள் இருவர், செவிலியர் இருவர் என ஐந்து பேர் மாணவர்களுக்கு எதிரில் நின்றிருந்தனர். ஏற்கனவே சொல்லி வைத்ததைப்போல் புரபசரும் எதிரிலேயே நின்று கொண்டார். அந்த ஐம்பது வயது டாக்டர் பேச ஆரம்பித்தார்.

"என் பெயர் செந்தில். இந்தப் பையன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட தாக சொல்கின்றனர்... அது உண்மையா? என சில பரிசோதனை முலம் நாம் தெரிந்து கொள்ளலாம்." என்று கூறியவர், உடம்பின் உள்பாகங்களை பற்றி விவரித்தார். இப்பொழுது இன்னும் ஆழமாக சென்று பார்க்கப் போகிறோம். கழுத்தைச் சுற்றியுள்ள தோல்பகுதியை தனியாக எடுத்து பரிசோதனை செய்தும், நிஜ தூக்கா, பொய் தூக்கா என்று கண்டுபிடித்துவிடலாம். அது எப்படி என்றால், என்று டாக்டர் செந்தில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே, பூவினாவின் பின்னால் நின்றவர்,

"பொதுவாக தானே தூக்கில் தொங்கினால், கழுத்தின் மேலிருந்து கீழாக லிகேச்சர் மார்க் கணப்படும். .. ஆனால் இந்த பையனுக்கு கழுத்தைச் சுற்றி படுக்கை வசம் வட்டமாக லிகேச்சர் மார்க் தென்படுகிறது. சோ, இவனை கொன்று தூக்கில் போடப்பட்டிருக்கிறது... " என்று சொல்ல, பூவினாவும் பதற்றமாக, கிரேசாவிடம் விளக்க, டாக்டர் செந்தில் ஆச்சரியமாக பூவினாவைப் பார்த்தார்.

"உனக்கு எப்படிமா இந்தளவு விவரங்கள் தெரிந்திருக்கிறது?" என்று கேட்க,

"இதோ இவர்தான் சார் சொன்னார்." என்று பின்னால் திரும்பி பேசியவரை காட்ட, அங்கே யாருமே இல்லை! எங்கே அவர்?" என்று பூவினாவே கேட்டதும், அனைவரும் சிரித்துவிட்டனர். வீடியோ பார்த்து, பார்த்து அதே எண்ணத்தில் இருக்கிறாயா?" என்று கிண்டலடிக்க,

பூவினாவிற்கு சங்கடமாக போய் விட்டது. அவள் கிரேசாவிடம்,

"நிஜமாவே யாரோ சொன்னாங்க கிரேசா." என்று கூற,

"சரி விடு! இங்கே கவனி." என்று கூறி டாக்டர் செந்தில் கூறுபவற்றை கவனிக்க ஆரம்பித்தாள்.

சரியாகதானே சொன்னாங்க? பிறகு ஏன் தன்னை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். குரலை கவனித்தால் மாணவன் போல தெரியலையே? ஒரு வேளை புரபசரா இருக்குமோ? என்று நினைத்தபடி, எதிரில் நின்ற புரபசரை யே பார்த்துக்கொண்டிருக்க, ஒவ்வொரு மாணவ மாணவிகளும் பூவினாவை நகரவைத்து, அவள் இடத்திற்கு வந்தனர். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து டேபிளின் நடுப்பகுதிக்கு வந்தவளிடம் மீண்டும் அவன் குரல் காதில் கேட்டது. பூவினா திரும்பி பார்க்க முயல, அவளை தலையைத் திருப்பி பாடத்தை கவனி... எங்க வேடிக்கை பார்த்துக் கிட்டிருக்க?" என்று கூற

புரபசர் தான் என்று நினைத்தவள், பாடத்தை கவனிக்க, 'அடப்பாவிகளா என்னை கடைசியில் தள்ளி விட்டானுங்களே என்று எண்ணிய வாறு எட்டி எட்டி பார்த்தாள்.

"ஏன் இவ்வளவு சிரமப்படுற? இங்கே பார் வயிற்று பகுதியில் இனிப்பு செரிமானம் ஆகாமல் இருக்கு... அப்படினா இந்த பையன் சாகும் முன் இனிப்பு சாப்பிட்டிருக்கிறான். ... உளவியல் பிரகாரம், இனிப்பு சுவைக்கு மனநிலையை சாந்தப்படுத்தும் திறன் உள்ளது. சந்தோஷமான மனநிலையில் தான் இனிப்பு சாப்பிட முடியும்... அல்லது மனக்கஷ்டம் இருக்கும் பொழுது இனிப்பு சாப்பிட்டால் மனம் கொஞ்சம் இலேசாகும். அப்படி இருக்கையில் அவன் எப்படி தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்பட்டிருப்பான்? சோ, இவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை... கொல்லப்பட்டிருக்கலாம்." என்று கூற,

"அப்படியா?" என்று பூவினா கேட்டதும், அமைதியான அந்த பரிசோதனை கூடத்தில் அவள் குரல் மட்டும் அறை முழுவதும் எதிரொலித்தது.

எல்லோரும் அவளைப் பார்க்க,

"ம்ம் சொல்லு" என்று அவர் கூறினார்.

பூவினாவும் அனைவருக்கும் விளக்க, டாக்டர் செந்தில் பூவினாவை யே பார்த்துக் கொண்டிருந்தார்... அவர் கண்கள் ரெத்தமென சிவந்தது. டாக்டர் செந்திலுக்கு அந்த ஏசி அறையிலும் வியர்த்தது. கைகால்கள் வெடவெடத்தன...

"இவ்வளவு விவரமாகவா இன்டர்நெட்டில் வீடியோ வெளியிடுகிறார்கள்?" என்று ஒரு மாணவன் கேட்க,

"இல்லை! நம்ம புரபசர் தான் சொல்லிக் கொடுத்தார்." என்றாள் பூவினா.

"நான் இங்கே நிற்கும் போது உனக்கு எப்படி சொல்லித்தருவேன்? எனக்கே தெரியாத விபரங்கள் இது... ராத்திரி நேரத்தில் வீடியோவைப் பார்த்துட்டு வந்து என் பிராணனை வாங்காம இங்க என்ன சொல்றாங்களோ அதை மட்டும் கவனி." என்று அதட்டினார்.

'எவனோ என்னை கலாய்க்கிறான்... இருடி நீ யாருன்னு மட்டும் தெரியட்டும் உன் டங்குவாரைக் கிழிக்கிறேன்...' என்று புலம்பியபடி பாடத்தை கவனிக்க, டாக்டர் செந்தில்,

'இந்த பொண்ணு என்ன இந்தத் துறையில் பெரிய ஸ்பெஷலிஸ்ட் போல விபரங்கள் கூறுகிறாள்? சாத்தியமில்லையே!' என்று நினைத்தவர்,

"இன்றைக்கு இவ்வளவு போதும்! எனக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் இருக்கு... மீதி பாடத்தை நாளைக்கு பார்க்கலாம்" என்று கூறி வியர்வையை துடைத்தவாறு, பூவினாவை யே பார்த்தபடி வெளியேறினார்.

"உன்னால்தான் டாக்டர் வெளியே போயிட்டார்... அவசரகுடுக்கை மாதிரி உன்னை யார் பேசச் சொன்னது? இனி நாளைக்கெஸ்லாம் இந்த டாக்டர் அப்பாயின்மென்ட் கிடைக்காது... இது என்ன காய்கறி மார்கெட்டா நினைச்ச நேரத்துக்கு வர்றதுக்கு." என்று புரபசர் பூவினாவை திட்ட, அவர் காலுக்கடியில் இருந்த ஏதோ ஒரு பொருளில் கால் இடறி தலைக்குப்புற விழுந்தார். அந்த அதிர்ச்சியில் மாணவர்கள் பின்வாங்க, பூவினா அருகில் இருந்த சின்ன அலமாரியில் விழ, அதன் கதவு திறந்து பூவினாவின் கோட் பாக்கெட்டில் எதுவோ விழுந்தது. 'என்ன அது?' என்று பூவினா பாக்கெட்டுக்குள் கையைவிட, திடீரென்று ஏதோ தாக்கி விழப் போனவளை அவன் பிடித்தான்....

யார் அவன்? அவள் கோட் பாக்கெட்டில் என்ன விழுந்தது?

                                       💍💍💍💍💍💍

 


Post a Comment

0 Comments