சிம்டாங்காரன்: அத்தியாயம்-5

5

அனலாய் தகிக்கிறேன்...

அன்பெனும் பனியாய் அணைக்கிறாய்!

🌹🌹🌹🌹🌹🌹

 

மூன்று நாட்களாக நிறைமதிக்கு (அவளுடைய உண்மையான பெயர் தெரியும் வரை நாமும் நிறைமதி என்றே அழைப்போம் ஃபிரண்ட்ஸ்!) எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை... தோழிகளிடம் அரட்டை அடிப்பது கூட குறைய ஆரம்பித்தது....

 

"ஏன்டி இப்படி இருக்க?" என்று தோழிகள் கேட்டும் அவள் பதில் சொல்லாமல் இருக்கவே,

 

இவள் நிலையை யூகித்து அவள் தோழிகள்... கோயிலுக்கு சென்று, 'மேகனின் தாத்தாவைப் பார்க்க வேண்டும்' என்று கூறி அவருடைய முகவரியைக் கேட்டனர். "அவர்கள் அனுமதி இல்லாமல் முகவரி தரமுடியாது ம்மா! இன்று மாலை அவர் கோயிலுக்கு வரும் போது பார்த்துக் கொள்ளுங்கள்... " என்று கூறினார் கோயில் அலுவலர்.

 

"எங்களுக்கு அவருடைய தொலைபேசி எண்ணையாவது கொடுங்கள் சார்... அனுமதி கேட்டு விட்டு நாங்கள் வருகிறோம்." என்று தோழிகள் கூறியதும், தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்.

 

தோழிகள் தனக்காக எவ்வளவு செய்திருக்கிறார்கள்? என்று நினைத்தவளுக்கு கண்ணீரே வந்தது.

கண்கள் கலங்க, "ரொம்ப நன்றி பா!" என்றாள்.

 

“சரி!சரி! போய் உன் ஆளுக்கு போன் பண்ணு. அவசரத்தில் அவன் தாத்தாவிடம் ப்ரபோஸ் பண்ணிடாதடி! ஆல் த பெஸ்ட்!" என்று கூறினர்.

 

காலேஜ் முடிந்ததும் தோழிகளுடன் சேர்ந்து, ஒரு பொது தொலைபேசியில் மேகன் வீட்டிற்கு ஃபோன் பண்ணினாள். ..ரிங் போய்க் கொண்டிருந்தது... நிறைமதியின் மனதில், "தடக்! தடக்!" என்று ரயில் ஓடும் சப்தம் தோழிகளுக்கே கேட்டது.

எதிர் முனையில் ரிசீவர் எடுத்து யாரோ " ஹலோ!" என்றதும் நிறைமதி ' டக்' என்று ஃபோனை கட் செய்து விட்டாள்.

 


"ஏண்டி மாடே! யார் பேசறதுன்னு கூட தெரியாம ஃபோனை கட் பண்ணிட்ட?" என்றனர் தோழிகள்.

 

"இல்ல... என்ன பேசுறதுன்னு தெரியல..." என்று நிறைமதி இழுக்கவும்,

 

"ம்ம்... மாடு கன்னு போட்டிருச்சான்னு கேளு... " என்று தோழிகள் நக்கலடிக்கவும்,

 

"அது இல்ல பா! அவர் மனதில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம எப்படி பேசுறதுன்னு பயமா இருக்கு."

 

"ஏய்! என்னடி இவ இப்படி இருக்கா?" என்று ஒரு தோழி அங்கலாய்க்க. ..

 

மற்றொரு தோழி, "அத தெரிஞ்சுக்க தானே எருமை ஃபோன் பண்ற...." என்றாள்.

 

மீண்டும் ஃபோன் பண்ணினாள். அதே போல் ரிசீவரை யாரோ எடுத்ததும், கட் செய்து விட்டு, "அவர் இன்னேரம் வேலைக்கு போயிட்டு, வீட்டுக்கு வந்திருப்பாரா?" என்று தோழிகளிடம் கேட்டாள்.

 

"அதுவும் ஃபோன் பண்ணி பேசினாதானே தெரியும்?"

 

மீண்டும் போன் பண்ணி, மூன்று ரிங் போனதும் கட் செய்து விட்டாள்.

 

"இப்ப என்ன ஆச்சு?!!" என்று தோழிகள் கேட்டதும்,

 

"என்ன பேசுறது? எப்படி பேசுறதுன்னு கொஞ்சம் யோசித்து விட்டு ஃபோன் பண்றேன் பா"

 

‘இது சரிப்படாது’ என்று நினைத்த தோழி, அவளே ஃபோன் பண்ணி, எதிர்முனையில் "ஹலோ!" என்றதும்,

 

"சார் நாங்க லோக்கல் சேனல்ல இருந்து பேசுறோம், ஸ்ரீமேகனிடம் பேச முடியுமா?" என்றாள்

 

"அவர் இன்னும் வீட்டிற்கு வரல... என்ன விஷயமா போன் பண்ணி இருக்கீங்க?"

 

"நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா சார்?"

 

"மேகனுடைய தாத்தா."

 

"பரிசு விழுந்திருக்கு அவர் பேருக்கு... அவரிடம் மொபைல் போன் இருந்தா நம்பர் கொடுக்க முடியுமா சார்?"

 

தாத்தா விற்கு ஆச்சரியமாகிவிட்டது... 'அவன் டிவியில் பிஸினஸ் சேனல் அல்லது நேஷனல் ஜியாக்ரஃபி சேனல் மட்டும்தான் பார்ப்பான்.... பின்ன எப்படி? யாரோ விளையாடுறா.' என்று நினைத்தவர்,

 

"ஏழு மணிக்கு ஃபோன் பண்ணி அவரிடமே கேட்டுக்க மா... " என்றார்.

 

"சரிங்க சார்" என்று கூறி ஃபோனை வைத்தாள்.

 

"அவ்வளவுதான்! உன் ஆளு ஏழு மணிக்குத் தான் வருவாரு போல, பெருசு மொபைல் நம்பர் தரமாட்டேனுட்டார். இன்னைக்கு பேசிடுவேல?"

 

"ஏழு மணிக்கு எப்படி பேசுறது வீட்டில இருப்பேனே?" என்று கேட்டாள் நிறைமதி.

 

"ம்ம் வாயால தான் பேச வேண்டும்... இங்க பாரு! இதுவா, அதுவா னு திண்டாடிகிட்டு இருக்குறதுக்கு, என்ன தான் இருக்குன்னு பார்த்து விடுவது நல்லது. எப்படி பேசுறதுன்னு முதல்லயே யோசிச்சுக்க. என்னபா ஓகே வா? " என்று கேட்ட தோழிகள், அவரவர் வீடு போய் சேர்ந்தனர்.

 

வீட்டிற்கு வந்து ஒரு மணிநேரமாகியும் நிறைமதிக்கு ‘எப்படி ஆரம்பிக்கிறது? ன்னு தெரியவில்லை. அண்ணியிடம் சென்றவள்,

 

"அண்ணி! உங்க போன குடுங்களேன். என் தோழிக்கிட்ட பேசிட்டு தரேன்." என்று கேட்டாள்.

 

அண்ணிக்கு நிறைமதி மேல் பிரியம் உண்டு. ‘அவளோட அம்மாகிட்ட கேட்கப் பயந்து தான் தன்னிடம் கேட்கிறாள்’ என்று புரிந்தது.

 

"எங்க ரூம்லயே வச்சு பேசிட்டு குடுத்துடு. அத்தை பார்த்தா என்னை உங்க அண்ணாட்ட சொல்லிக் கொடுத்துடுவாங்க. " என்று சொல்லி மொபைலைக் கொடுத்தாள்.

 

மொபைலில் தன் தோழியை அழைத்தவள்.

 

"இது எங்க அண்ணி நம்பர். அவங்க ரூம்ல இருந்துதான் பேசுறேன். ஏழு மணிக்கு சார் ட்ட பேச சொன்னேல? இன்னும் பயமாயிருக்குடி. எப்படி கேட்கிறதுன்னு தெரியல. ஏதாவது ஐடியா குடேன்.... "

 

"இங்க நாங்க மட்டும் எங்க ஃபோன்ல யா பேசுறோம்?... எங்கம்மா ஃபோன். எப்படி பேசுறது?... நீயே யோசி. மொபைல்ல பேசாத. பொது தொலைபேசியில் பேசு. நோட்டு வாங்க போறேன்னு சொல்லிட்டு வெளிய போ!"

 

"அது ஒத்துவராது இங்க இருக்குற கடைக்காரர் எல்லாருக்கும், என்னையும் என் அண்ணன்களையும் தெரியும். சரி! நானே யோசிக்கிறேன். ஃபோன வச்சுடவா? என்று கேட்டு வைத்து விட்டாள்.

 

“ஏழு மணிக்கு வந்து ஃபோன் பண்ணிக்கிறேன் அண்ணி!" என்று கூறியவளிடம்,

 

"உங்க சார் ட்ட என்ன பேசனும்? எனக்கு தெரிந்தவரை ஐடியா கொடுப்பேன்ல? என்று அண்ணி கேட்டதும்,

 

"என்ன?" என்று  வெலவெலத்துப் போனாள் நிறைமதி. பிறகு திக்கித் திணறி,

 

"அது... வந்து. .. அண்ணி! ... வந்து,... என் ஃபிரண்ட் சொல்லிட்டா... நா நானே பேசிக்கிறேன் அண்ணி." என்று கூறி முடித்தாள்.

 

அவளிடம் வித்யாசம் தெளிவாக தெரிந்தது. 'ஏன் இப்படி உளருறா?' என்று நினைத்தபடி நிறைமதியைப் பார்த்தாள் அண்ணி. நிறைமதி வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

 

       ஏழு மணியானதும் மீண்டும் அண்ணி ரூமிற்கு சென்றாள் நிறைமதி. ஃபோன் ரிங் ஆன சிறிது நேரத்தில் மேகன் ஃபோனை எடுத்து,

 

      "ஹலோ! மேகன் பேசுறேன்." என்றதுதான் தாமதம், நிறைமதி க்கு மீண்டும் மனதிற்குள் தந்தி அடிக்க,

 

ஒன்றும் பேசாமல், ஃபோனை யும் கட் செய்யாமல் இருந்தாள். மேகன் மீண்டும், "ஹலோ!" என்றான். பதில் இல்லாமல் போகவே, ‘நிறைமதியா இருக்குமோ?’ என்று தோன்றியது. எனவே மீண்டும்,

 

"ஹலோ! பேசறதுக்கு தானே ஃபோன் பண்ணீங்க?... அமைதியா இருந்தா நான் என்ன புரிஞ்சுக்கிறது?.... பேசுங்க...” என்று மேகன் சிரிக்கவும்,

ஃபோனைக் கட் செய்து விட்டாள் நிறைமதி. அவன் குரல் அவள் உயிர் வரை ஊடுருவியது. மனசுக்குள் இனிப்பது போன்ற உணர்வை முதன்முதலாக அனுபவித்தாள். மனசுக்குள் இருந்த இனிமை தலையின் உச்சி வரை பரவ, முகம் தகதகவென வென ஜொளித்தது! ஃபோனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளை நெருங்கிய அவளுடைய அண்ணி, "யாரு நிறைமதி அவர்?" என்று கேட்டதும்தான் சுயஉணர்வுக்கு வந்தவள்,

 

  "யாரு அண்ணி?" என்று கேட்டாள்.

 

  "உன் முகத்தில் இவ்வளவு பளபளப்பைக் கொண்டு வந்தவர்."

 

  "அப்படியெல்லாம் யாருமில்லண்ணி." என்று நிறைமதி பதட்டமாக,

 

  "பிறகு ஏன் ஃபோனை அவர் எடுத்தும், நீ பேசல?"

 

  "அண்ணி!"

 

      "பயப்படாதே நிறைமதி! ஆனா அவர எனக்கு அறிமுகப் படுத்தி வை. உனக்கு நல்லவரா? கெட்டவரா? னு தெரிஞ்சுக்கிற வயசில்ல... உன் நல்லதுக்கு தான் சொல்றேன். " என்று கூறி நிறைமதியை கூர்ந்து பார்த்தாள்.

 

   "அண்ணி! நான் இன்னும் அவர்ட்ட பேசியதே இல்ல... அவர் என்ன நினைக்கிறார்னும் எனக்குத் தெரியாது..."

 

  "அதான் பாத்துக்கிட்டே இருந்தேனே... அவர் உன்னை விரும்புறாரானு  தெரியாதா?"

 

  "ஆமாண்ணி!"

 

   "அடிப்பாவி! பிறகு ஏன் அவருக்கு ஃபோன் பண்ற?..."

 

   நிறைமதி ஒன்றும் பேசாமல் தலையைக் குனிய,

 

  "உனக்கு அவர பிடிச்சிருக்கா?" என்று அண்ணி சிரித்தபடி கேட்க,

 

  "ம்ம்ம்!" என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள் நிறைமதி.   

 

  "இது அவருக்குத் தெரியுமா?"

 

  "தெரியாதுண்ணி! நான் சொல்லல."

 

       "பின்ன எந்த நம்பிக்கையில் அவன விரும்புற?" என்று அண்ணி கேட்டதும், பாவமாக பார்த்தாள் நிறைமதி.

 

       "என்ன ஏதுன்னு தெரியாம மனச விட்டுடாத. .. இந்த ஒருதலைக் காதல் எல்லாம் சினிமாவில் பார்க்கத் தான் நல்லா இருக்கும். நம்மாள தாடிகூட வளர்க்க  முடியாது... பேசாம படிக்கிற வேலையைப் பாரு. .. புரியுதா?" என்று கூறி அவ ரூம்க்கு அனுப்பி வைத்தாள்.

 

       இங்கே நம்ம மேகன் ஃபோன் பண்ணியது நிறைமதிதான் என்று நம்பினாலும் சின்ன சந்தேகம் வேற மண்டையைக் குடைந்தது. 'அவள் என் மொபைல் நம்பர்ல ஏன் கால் பண்ணவில்லை?' என்று யோசித்தான்... பிறகு தாத்தாவிடம் வந்து,

 

       "தாத்தா! இன்னைக்கு எனக்கு யாராவது ஃபோன் பண்ணாங்களா?" என்று கேட்டான்.

 

  "ஆமாய்யா! யாரோ லோக்கல் சேனல்ல இருந்து பேசுனாங்க. .."

 

      அவனுக்கு நிறைமதிதான் என்று தெளிவாக, "என் மொபைல் நம்பர் கேட்டாங்களா தாத்தா?" என்று கேட்டான்.

 

      "ஆமாம் பா கேட்டாங்க. ஏழு மணிக்கு மேல ஃபோன் பண்ணி உங்கிட்ட யே வாங்கிக்க சொல்லிட்டேன்." என்று கூறியவாறு பேரன் முகத்தையே கூர்ந்தவர், 

 

   "என்னப்பா கரெக்ட்டா பேசிட்டேனா?" என்று கேட்டார்.

 

      "ம்?.... ம்ம்ம்... ஆமா...இல்ல!.. இதுல கரெக்ட்டா பேச என்ன இருக்கு தாத்தா?”

என்று உளறியவனை நமுட்டு சிரிப்புடன் பார்த்து,

 


      "இத்தனை வருஷமா இல்லாம ப்ளாங்க் கால் (blank call) எல்லாம் வருது பா!" என்று போலியாக ஆச்சரியப் பட்டார்.

 

       'ஆஹா! தாத்தா விடமும் பேசாமல் இருந்திருக்கிறாள்!' என்று நினைத்தவன்,  "எங்கிட்டயும் பேசல, தாத்தா கிட்டயும் பேசலயா? இதுக்கு என்னடா மேகா அர்த்தம்?!!" என்று தன்னையறியாமல் சத்தமாய் சந்தேகம் கேட்க,

 

      "அதானே அந்த பொண்ணு யார லவ் பண்றானு தெரியலையே மேகா? உன்னையா? என்னையா?!!”  என்று தாத்தா  கிண்டலடிக்க...

 

  "ஹூம்! சத்தமா பேசிட்டியேடா?"

 

      "அப்போ அது மைண்ட் வாய்சா மேகா?!! அடடே இது தெரியாம நான் என்னை லவ் பண்றாளோனு உளறிட்டேனே! !!

 

  "இங்க என்ன நடக்குது?" என்று உறுத்து விழித்தபடி மரகதம் கேட்க,

 

      "மேகா! எஸ்கேப்!" என்றவாறு தாத்தாவும் பேரனும் எதிர் எதிர் திசையில் ஓடினர்.

 

       "திருட்டு ராஸ்கல்ஸ்! " என்று மரகதம் இருவரையும் செல்லமாக திட்டினார் .

 

அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்!

                                                            ❤❤❤❤❤❤❤ 

Post a Comment

0 Comments