சிம்டாங்காரன்: அத்தியாயம்-3

 

3

 

மௌன கவிதை நீ

ரசிக்கும் ரசிகை நான்....

 

🌹🌹🌹🌹

 

சன்னமாக விசில் அடித்தபடியே வந்த பேரனை பார்த்த தாத்தா, ‘குஷி மூடில்தான் இருக்கிறான்.’ என்று நினைத்தவர்,

 

"மேகா! கொஞ்சம் இப்படி வாயா." என்று அழைத்ததும்தான், ‘தான் இன்னும் முடிவு சொல்லவில்லை’ என்பது மேகனுக்கு நினைவில் வந்தது. தாத்தாவின் அருகில் தரையில் அமர்ந்தவன்,

 

"நான் ஆஸ்திரேலியா போகல தாத்தா. உங்க கூட தான் இருக்கப் போறேன்... அம்மாகிட்ட நீங்களே சொல்லிடுங்க தாத்தா ப்ளீஸ்!" என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

 

‘எப்போதடா படிப்பு முடியும் அம்மாவிடம் ஓடிவிடலாம் என்று இருந்தவன்.’ ஒரு வருடமாகத்தான்,

 

"நீங்க ரெண்டு பேரு மட்டும் ஏன் தனியா இருக்கீங்க? எங்களோட வந்துடுங்களேன்." என்று அடிக்கடி கூறினான். இப்பொழுது படிப்பு முடிந்தும் மேகன் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் தாய் தந்தையிடம் செல்லாமல், இங்கேயே வேலை தேடிக் கொண்டான். இதை எதிர்பாராத அவனது பெற்றோர், அதாவது அவனுடைய தாத்தாவுடைய மகளும் மருமகனும்,

 

"நீ என்ன செய்கிறாய்? ஆஸ்திரேலியாவுக்கு வர்றியா? அல்லது இந்தியாவிலேயே இருக்கப் போகிறாயா? நீ எங்கே செட்டில் ஆகப்போகிறாய் என முடிவாக கூறினால், அங்கேயே நீ தொழில் தொடங்க தேவையான அனைத்தும் செய்து தருகிறேன். நல்லா யோசித்து முடிவெடு. ஏன்னா? நீ எங்க செட்டில் ஆகிறாயோ. அங்கேயே நாங்களும் இருக்கப் போகிறோம். அதனால ஒரு வாரம் அல்லது தேவையான நாள் எடுத்துக்க... ஆனா தீர்க்கமான முடிவெடு.” என்று கூறியதிலிருந்து, மேகன் குழப்பமான மனநிவையிலேயே, சிரிக்கக்கூட மறந்து திரிந்தான்.

 

கடைசியில் அவன் ஆசையான ஆஸ்திரேலியா செல்வதை விட, எங்கள் மேல் உள்ள பாசம் ஜெயித்துவிட்டது. அதனால் தான் "இங்கேயே இருந்து விடுகிறேன்" என்கிறான்.' என்று நினைத்தவர், மேகனின் பாசத்தில் கரைந்தார்.

 

அவருக்கு என்ன தெரியும்? மேகன் இந்தியாவிலேயே செட்டில் ஆவதற்கு, அவர்மேல் உள்ள பாசம் மட்டும் காரணமல்ல என்று.... சிவகாம சுந்தரியை பார்க்கும் வரை குழப்பிக் கொண்டு இருந்தவன், அவளை பார்த்தவுடன் முடிவெடுத்து விட்டான் என்று....

 

மாடிக்கு சென்றவன், ‘சிவகாம சுந்தரியை அடுத்து எப்போ பார்கிறோமோ, அப்பொழுதே தன் காதலை சொல்லி விட வேண்டும்’ என்று முடிவெடுத்தான். ..

 

"காதலா?!!!! இரண்டே சந்திப்பிலா?!! அதை சந்திப்பு என்று கூட கூறமுடியாதே? என் முகம் கூட அவளுக்கு ஞாபகம் இருக்குமோ என்னவோ! இரு முறையும் நான்தான் அவளைப் பார்த்தேன். அதற்குள் காதலா?!! இன்னும் நான் செட்டில் ஆகல. அவள பத்தியும் எதுவும் தெரியாது... அதுக்குள் ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்று எப்படி போய் சொல்றது? ஆனா இதெல்லாம் தாண்டி அவள் மேல் எனக்கு இருப்பதுதான் காதலா? முதலில் அவளிடம் பேசுவோம், அவ மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு, அப்புறம் நம்ம மேட்டர பேசலாம்... திடீர்னு அவட்ட என் காதல சொன்னா அவ என்ன நினைப்பா?... கொஞ்சம் பொறு டா மேகா, இன்னும் கொஞ்சம் பழகிட்டு பிறகு சொல்லலாம். இவள எங்கே போய் தேடறது?... இத்தனை நாள் நல்லாதானடா இருந்த? யாராவது உங்கிட்ட வந்து ரெண்டு தடவ தான் பாத்திருக்கேன், சரியா பேசக்கூட இல்ல, ஆனா எனக்கு அவ மேல காதல்னு சொன்னா சிரிக்க மாட்ட?"

 

'என்னடா ஆச்சு உனக்கு? அவள நினைக்கவும் முடியல, தூக்கிபோட்டுட்டு, தூங்கவும் முடியல...'

 

-என்று புலம்பியபடி தூங்குவதற்கு படு முயற்சி செய்து, ஒருவழியா தூங்க ஆரம்பித்தான்.

 

அடுத்தநாள் மாலை மேகன் கடற்கரையில், சிவகாம சுந்தரி வருகிறாளா? என்று பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். வெகு நேரமாகியும் அவள் வராமல் போகவே மெல்லிய குரலில்,

 

"மேகமாய் வந்து போகிறேன்

வெண்ணிலா உன்னைத் தேடினேன்

யாரிடம் தூது சொல்வது?

என்று நான் உன்னைச்சேர்வது

என் அன்பே ஏஏஏஏ "

 

என்று கண்மூடி பாடிக் கொண்டிருந்தவன் கண்களைத் திறந்ததும், அவன் எதிரே ஓடி வந்து கொண்டிருந்தாள் சிவகாம சுந்தரி.

ஒரு நிமிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தவனிடம்,

 

"ப்ளீஸ் காப்பாத்துங்க." என்றவள் அவனுக்குப் பின்னால் இருந்த கைப்பிடிச் சுவருக்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் இரு இளைஞர்கள் அவளைத் தேடிக் கொண்டு வந்தனர். மேகனிடம்,

 

"ஒரு பொண்ணு இந்த பக்கம் வந்தாள் பாத்தீங்களா பாஸ்?" என்று கேட்டானர்.

 

'இவளுக்கு எத்தனை அண்ணன்கள்?' என்று நினைத்தவன், திரும்பி அவள் மறைந்திருந்த இடத்தைப் பார்த்தான்.

அதற்குள் அவர்களும் பார்த்து விடவே, "இதோ இங்க இருக்கா." என்று ஒருவன் கூறியதில் நிமிர்ந்து பார்த்தவள், மேகனிடம்,

 

"காப்பாத்துங்க ப்ளீஸ்!" என்றவாறு மேகனை நோக்கி வர, அதற்குள் இரு இளைஞர்களில் ஒருவன் கத்தியை எடுத்து சிவகாம சுந்தரி யைக் குத்திவிட்டான்.

 

நடந்ததை உணர்ந்து, "டேய்!" என்று கத்தியவாறு மேகன் அவளைக் காப்பாற்ற கிளம்ப 'பொத்' என்று கீழே விழுந்தான்.

 

"ஆ!" என்று கத்தியவாறு, அவர்களைப் பார்க்க, அவனைச்சுற்றி இருட்டாக இருக்கவும், கண்களைக் கசக்கி பார்த்தான். அவன் வீட்டில், அவன் அறையில் இருப்பது புரிந்தது!

'என் ரூம்க்கு எப்படி வந்தேன்? அவளுக்கு என்ன ஆச்சு?' என்று பதறி எழுந்தவன், கைக் கடிகாரத்தைப் பார்க்க, அது நாலு மணியானதைக் காட்டியது. ஏதோ தோன்ற ஜன்னல் வழியே வெளியே பார்க்க, அது அதிகாலை நான்கு மணி என்பதை உணர்த்தியதுமே, நடந்தது அனைத்தும் கனவு என்று புரிந்தது.

 

"சட்! என்ன கனவு இது? என்று யோசித்தவள், மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

 

‘ஆபீஸ் முடிந்து, கடற்கரை செல்வோமா?’ என்று யோசித்தவனுக்கு விடிகாலை கனவு ஞாபகம் வர, ஏதோ உள்ளுணர்வு 'வேண்டாம்' என்று தடுத்தது. 'சரி! இன்னைக்கு ஏதோ சரியில்லை, நாம் வீட்டிற்கே செல்வோம்’ என்று முடிவெடுத்து வீட்டுக்கு செல்கிறான்.

 

அவன் சீக்கிரமே வீடு வந்ததை பார்த்த தாத்தா,

 

"ஐயா! மேகா!" என்று அழைத்ததும். அருகில் வந்தவனிடம்,

 

"நீ இப்ப எங்கயாவது போறியாப்பா?" என்று கேட்டார்.

 

"இல்ல தாத்தா."

 

"அப்போ நம்ம கோயில்ல ஆடி மாதம் திருவிழா நடக்குது. மத்தியானம் வரை நானும் உன் ஆச்சியும், அங்க தான் இருந்தோம். இன்னைக்கு சாயந்தரம் வித்யாசமான நிகழ்ச்சி நடக்கப்போகுது. விஞ்ஞானமும், ஆன்மிகமும்னு ஏதோ நிகழ்ச்சி, கட்டாயம் வாங்கன்னு அந்த நிகழ்ச்சியை நடத்துறவங்க கேட்டுக்கிட்டாங்க... நீ போறியாப்பா?" என்று கேட்டார்.

 

"தாத்தா! நான் அங்க போயி என்ன செய்யப் போறேன்? மரியாதை பண்றேன் அது இதுன்னு ஏதாவது செய்வாங்க! எனக்கு போர் அடிக்கும் தாத்தா!"

 

"எனக்கு அப்புறம் நீதானய்யா இதெல்லாம் பாத்துக்கனும். அது நம்ம மூதாதையர் கட்டின கோயில். காலங்காலமாக நாமதான் பார்த்துக்கிட்டு வர்றோம். நம்ம ஊரில நமக்குன்னு ஒரு மரியாதை இருப்பதற்கு அந்த கோயில் நம்ம நிர்வாகத்தில இருப்பதும் ஒரு முக்கியமான காரணம்யா. இப்பவே நீயும் போய் பார்த்துக்க. அதோட இன்னைக்கு எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு." என்றார்.

 

எது அவன் தலையில் ஏறிச்சோ, இல்லையோ. அவனுடைய தாத்தா டயர்டா இருக்குன்னு சொன்னது கொஞ்சம் அசைத்தது. "சரி! நானே போயிட்டு வரேன். நீங்க நல்லா ஓய்வெடுத்துக்குங்க. நான் இந்த பக்கம் போனதும், நீங்க அந்தப் பக்கம் கிளம்பிடாதிங்க...” என்று கூறி மாடிக்குச் சென்று, குளித்து, வேட்டி சட்டையில் கீழே இறங்கி வந்த பேரனை கண் எடுக்க முடியாமல் பார்த்தனர் அந்த முதிய தம்பதிகள்.

 

"இவனுக்கு 'சிம்டாங்காரன்' ன்னு பேர் வச்சிருக்கலாம் மரகதம்." என்றார்.

 

"அப்படினா என்னங்க?"

 

"கண் சிமிட்டாம நம்மைப் பார்க்க வைப்பவன்னு அர்த்தம்." என்றார்.

 

"யார் தாத்தா அது?"

 

"நீ தான்யா! "

 

"ஹஹ்ஹஹ்ஹாஆஆ! உங்கள மாதிரி தானே நான் இருக்கிறதா சொல்றாங்க! ஆனாலும் இவ்வளவு தற்பெருமை கூடாது தாத்தா!" என்று சிரித்தபடி கூறினான்.

 

"கார்ல போ ய்யா! அதுதான் மரியாதையா இருக்கும்." என்றார்.

 

அவன் சென்ற பிறகு, மரகதம், மேகனின் தாத்தாவிடம்,

 

"சரி நீங்க போய் ஓய்வெடுத்துக்குங்க.." என்று கூறி விட்டு நகரப்போனவரை,

 

"என்னை எதுக்கு ஓய்வெடுக்க சொல்ற?" என்று கேட்டார்.

 

"அசதியா இருக்குன்னு சொன்னீங்களே?"

 

"அடி போடி! மேகன்ட கோயில் பொறுப்பை ஒப்படைக்கப் போறேன். அதச் சொன்னா, மழுப்பலாக ஏதாவது பதில் சொல்லிடுவான். .. கொஞ்ச கொஞ்சமா உள்ள இழுத்து விட்டுட்டா, அப்புறம் அவனே பொறுப்பா பார்த்துப்பான். .. அதான் அசதியா இருக்குன்னு சும்மா சொன்னேன்..."

 

"ஓ!... சரி! உங்களுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வரவா?" என்று கேட்டபடி உள்ளே சென்றாள்...

 

"என்ன இவ! ஏதாவது வேணுமான்னு கேட்டுட்டு, அவ பாட்டுக்கு உள்ள போயிட்டா?!! எனக்கு என்ன வேணும்னு, காத்து கிட்டயா சொல்லுவேன்?....." என்று புலம்பியபடி அன்றைய செய்தித் தாளை நான்காவது முறையாக எடுத்து படிக்க ஆரம்பித்தார்.

 

கோயிலில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது... மேகனை அழைத்துச் சென்று, நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு எதிரில் இருந்த மேடையில் அமரவைத்து விட்டுச் சென்றனர் கோயில் அலுவலர்கள்...

 

மேடையில் இருந்தவர், ‘ஆன்மீகத்திலிருந்து வந்ததுதான் விஞ்ஞானம்!' என்று ஐயம் திரிபட விளக்கிக் கொண்டிருந்தார். ..

 

"நம்முடைய ஆன்மீகம், முற்பிறவி, மறுபிறவி என்பதெல்லாம் இருக்கிறது என்று நம்புகிறது.. ஆனால் விஞ்ஞானமோ, பல ஆதாரங்கள் இருந்தும், முற்பிறவி, மறுபிறவிகளை ஏற்கவும் இல்லை! மறுக்கவும் இல்லை! இதை விவரிக்கும் விதமாக இங்கே ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது... இதைப்பற்றிய உங்களுடைய விவாதங்களை, கருத்துக்களை, நீங்கள் முன் வைக்கலாம்... என்று கூறியவர்,

ஒரு பெண் மேடை ஏறுவதைப் பார்த்தார்...

அவள்!... சிவகாம சுந்தரி!!!

 

அவளை அந்த ஆன்மீகப் பெரியவர் கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

“இந்தப் பெண்ணிற்கு ஒரு வகையான இசையைக் கேட்டாள் முற்பிறவி ஞாபகங்கள் வருகிறதாம்... இந்த கூட்டத்தில் தன் முற்பிறவி உறவினர்கள் வந்திருக்கின்றனரா? என்று தேட வந்துள்ளார். இவருக்கு நம்மால் உதவ முடிகிறதா என்று பார்ப்போம்." என்று கூறி வாத்தியக் கருவிகள் வைத்திருப்பவர்களிடம் கண் காட்ட அவர்கள் இசைத்தனர்.

 

சிவகாம சுந்தரி, மேகனைப் பார்க்கவே இல்லை. வாத்தியங்கள் முழங்கவும், அமைதியாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.



 

'இவ இங்க என்ன பண்றா?’ என்பதுபோல் மேகன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

சட்டென்று எழுந்தவள், "இங்கே என் காதலர் வந்திருக்கிறார்." என்று கூறியவாறு மேடையை விட்டு இறங்கி, ஆண் வரிசையில் இருந்த ஒவ்வொருவரையும் பார்த்தபடி வந்தாள்.

 

'இது என்ன நவீன சுயம்வரமா? நல்ல ஐடியாவாக இருக்கே?' என்று மனதிற்குள் கலாய்த்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான் மேகன்.


அவள் அனைவரையும் தாண்டி, இவன் அமர்ந்து இருந்த மேடையில் ஏறினாள்.

 ‘ஆஹா! இங்க இருக்கும் தாத்தா தான் காதலனா?' என்று சிரித்தபடி பார்த்தான்.

 

அவள் நேராக மேகனிடம் வந்து, "அத்தான் வந்துட்டியளா?" என்று கேட்க, தூக்கிவாரிப் போட்டவனாக,

 

"ஹேய்! சிவகாம சுந்தரி! இது என்ன விளையாட்டு?" பற்களுக்குள் வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

 

"ஆண்டவா! என்ன மாதிரி கேட்டுட்டீய? நீங்களே என்னை நம்பலையா? ஆமா! அது யாரு அத்தான் சிவகாம சுந்தரி?" என்று அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, கூட்டத்திலிருந்த ஒருவன்,

 

"நிறைமதி! நான் இங்கிருக்கும் போது யாரை அத்தான் என்கிறாய்" என்றபடி இவர்களை நோக்கி ஓடிவந்ததான்.

 

"அடடா இவன் யாரு?" என்று மேகன் வந்து கொண்டிருந்தவனைப் பார்க்க, அவனைப் பார்த்த சிவகாம சுந்தரி,

 

"அத்தான்! அதோ அவன்தான் போன ஜென்மத்திலும் நம்மைப் பிரித்தான். என்னைக் காப்பாத்துங்க... என்னைக் கொன்னுடுவான்." என்று நிஜமாகவே பயந்து மேகனின் பின்னால் மறைந்து கொண்டாள்.

 

தற்போதய அவளின் நடவடிக்கைகள், கனவில் கண்டதை போலிருக்க, ஓடிவந்தவனை உற்று பார்த்தான். அவன் கண்களில் கோபமும், சட்டைப் பையில் கத்தியும் இருந்ததைப் பார்த்து விட்டான். ஓடிவந்தவன் நேராக சிவகாம சுந்தரியை நெருங்க, கனவில் நடந்ததால் ஏற்பட்ட தாக்கமும் சேர, மேகன், தங்களை நோக்கி ஒடி வந்தவனை, ஓங்கி ஒரு அடி அவன் தோள் பட்டையில் அடித்து, சிவகாம சுந்தரியை தன் பக்கம் இழுத்தான்....

 

சிவகாம சுந்தரியைக் காப்பாற்றி விட்டானா மேகன்?

 

அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்...

 

❤❤❤❤❤❤❤

Post a Comment

0 Comments