உனது விழியில் எனது விலோசனம்…
அத்தியாயம்🌟26
"எந்த விசயமா இருந்தாலும் எனக்கு ஏன் முதலிடம் கொடுக்கிற?" என்ற நேத்ராவிடம்,
என்ன சொல்வதென்று புரியாமல் திருதிருவென விழித்தாள் சுபத்ரா.
அவளைத் தன் புறம் திருப்பி, "எங்கிட்ட நீ எதுவும் மறைக்க முடியாது… சொல்லு… நீ முன்னாடி எம்மேல வச்சிருந்த பிரியத்துக்கும், இப்ப காட்டுற பிரியத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அது ஏன்?" என்ற நேத்ராவிடம், மறைக்க முடியாது. என்பதை உணர்ந்த சுபத்ரா, மிகவும் தயங்கி,
"என்னால் தானே நீ உங்க அப்பா அம்மாவ இழந்து…" என்று நிறுத்த. சுபத்ராவின் நாடியைத் தொட்டு,
"அடிப்பாவி! குற்ற உணர்ச்சியா இது? நல்லவேளை! நீ எம்மேல இரக்கப்படுறன்னு மட்டும் சொல்லிருந்தேன்னு வை, உங்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருந்திருப்பேன்." என்று நேத்ரா கூறும்போதே,
"அப்படி எதுவும் செஞ்சுடக்கூடாதுன்னு தான் உண்மையச் சொன்னேன்." என்று வேகமாக கூறினாள் சுபத்ரா.
"எனக்கு சிரிப்பு தான் வருது… நீ மட்டும் என்னை சிங்கப்பூருக்குப் போக விட்டிருந்தா, இன்னேரம் ஆவி லோகத்துல தான் இருந்திருப்பேன்… அப்பவும் உன்னை ஃபிரியா விட்டிருக்க மாட்டேன். ஆவியா உன்னையே சுத்தி சுத்தி வந்திருப்பேன்." என்று சிரித்தவளை செல்லமாக அடித்து விட்டு,
"சாயந்திர நேரத்தில என்ன வார்த்தை பேசுற?" என்று கடிந்தாள் சுபத்ரா.
"பின்ன என்ன சுபா? சரியா சொன்னா இந்த விமான விபத்தில் இருந்து நீ என்னை காப்பாத்தி இருக்க. இப்பவாவது புரியுதா இந்த மரமண்டைக்கு." என்று சிரித்த நேத்ராவுடன் சேர்ந்து சிரித்தாலும், சுபத்ராவின் அடி மனதில் இருந்து குற்ற உணர்ச்சியை முழுதாக நீக்க முடியவில்லை.
அதற்கு பரிகாரமாகத் தான் நேத்ராவின் ஒவ்வொரு ஆசைகளையும் நிறைவேற்ற எண்ணுகிறாள் சுபத்ரா.
ஆனால் இன்றைய நிலை?
காதல் என்பது உடல் சார்ந்ததாக இருந்தால் விட்டுக் கொடுத்து விடலாம். காதல் என்பது உணர்வோடு பயணித்து உயிரில் கலந்தது. உணர்ச்சிகளைத் தொலைத்துவிட்டு வாழமுடியுமா?
இப்போது அந்த நிலை தான் சுபத்ராவிற்கு.
பல வருட நட்பு, குற்ற உணர்ச்சி, காதலனை விட்டுக் கொடுப்பது… என்று அவளுக்குள் பெரிய போராட்டமே நிகழ்ந்தது.
ஒரு சமயம், 'என்னுடைய விருப்பத்திற்காக அவளுடைய பெத்தவங்களையே இழந்து நிற்கிறா. அதைவிடவா காதல் பெரிய இழப்பு?' என்று தோன்றியதும்,
'சரி! விபாவிடம் பேசி விடுவோம்' என்று ஃபோனை எடுப்பாள்.
இரண்டு எண்களைக் கூட டயல் செய்திருக்க மாட்டாள், விபாட்சுவின் முகமும், அவனுடைய சிரிப்பு, அவன் கண்களில் இருக்கும் காதலும், மனதில் காட்சியாய் விரிய,
அதற்கு மேல் டயல் செய்ய முடியாமல் ஃபோனை அப்படியே வைத்துவிட்டு அழ ஆரம்பித்து விடுவாள்.
"என்னால முடியல விபா… அவளுக்காக என் உயிரக்கூட குடுத்துடுவேன். ஆனா உங்கள? என்னால முடியாது விபா… அத நெனச்சாலே நெஞ்சுக்குள்ள ஏதோ பண்ணுது… வயிறெல்லாம் ஒரு மாதிரி பிசையுது… தலை வலிக்குது… பைத்தியமே புடிச்சுடும் போல இருக்கு… சத்தியமா சொல்றேன். நீங்க இல்லைன்னா என் வாழ்க்கைல எதுவுமே இல்லாம போயிடும்… உயிரோடுதான் இருப்பேன்… ஆனா நடைப்பிணமாய் ஆயிடுவேன்." என்று மனதிற்கு தோன்றியதெல்லாம் உளறி அழுதாள்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் அழுவது, ஓய்ந்து போவது, மனதை திடப்படுத்துவது, மீண்டும் விபாட்சுவைப் பிரிய முடியமல் தவிப்பது, அதிலிருந்து தெளிவு பெற்று, எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு மனதை கொண்டு வருவது… என்று போராடிக் கொண்டிருந்தவளிடம் வந்து அமர்ந்தார் மேனகா.
"என்னங்கம்மா ஆஸ்பத்திரில இருந்து சீக்கிரம் வந்துட்டீங்க" என்று கேட்ட சுபத்ராவிடம்,
"நீ வந்து நேத்ராவை பார்க்கவில்லையா?" என்று கேட்டார்.
"நான்… வந்து… அம்மா… அந்த ஆக்ஸிடென்ட் ஐ நேர்ல பார்த்துட்டேன் இல்லையா? அது வந்து மனசுல ரொம்ப பாதிச்சுட்டதால தலை வலி கொல்லுது…"
"ஓ… அந்த தலைவலிக்காக, பெரிய ஆக்ஸிடென்ட்ல இருந்த தப்பிப் பிழைச்சு வந்தவளை, கூட இருந்து பார்த்துக்க மாட்ட? அவ்வளவு சுயநலக்காரியா சுபா நீ?"
"அம்மா…" என்றவளின் கண்களைப் பார்த்து,
"விபாவ, உன்னால நேத்ராவுக்கு விட்டுக் குடுக்க முடியலைல? அப்படீன்னா இதுவரைக்குமே, உனக்குத் திரும்பிக் கிடைக்கக்கூடிய விசயங்களைக் தான் நேத்ராவுக்காக விட்டுக் குடுத்திருக்க? அப்படித்தானே? இதுக்குப் பேருதான் விட்டு குடுக்கிறதா சுபா?"
"அம்மா!"
"என்ன அம்மா? உனக்கு, நான், நம்ம குடும்பம் இருக்கோம்… ஆனா நேத்ராவுக்கு? ஆறுதல் சொல்லக்கூட நீயும் நானும் தான் இருக்கோம்… இன்னும் நேத்ராவோட அப்பத்தா தாத்தானால எவ்வளவு துன்பத்தைத்தான் தாங்க முடியும்? நேத்ராவுக்கு ஒண்ணுன்னா அவங்க உசுரோட இருப்பாங்கனா நினைக்கிற?"
"அம்மா…"
"எமோசனல் ப்ளாக் மெயில் பண்றதா நினைச்சாலும் நான் சொல்றதுதான் நிஜம். நேத்ரா விபாவ எவ்வளவு தூரம் உயிரா விருப்புறா தெரியுமா?"
"இப்பதான் தெரிஞ்சுச்சும்மா"
"இருக்கட்டுமே இப்ப தெரிஞ்சிருச்சு இல்ல? கொஞ்சம் அவ நிலைமையில் இருந்து யோசிச்சு பாரு. அவளும் எல்லாத்தையும் இழந்துட்டு என்ன வாழ்க்கை வாழப்போறா? பெத்தவங்க இல்ல… ஆசைப்பட்ட படிப்பு இல்ல… இப்போ காதலும் இல்லைனா, எந்த ஒரு பொண்ணால தான் தாங்க முடியும்?"
"நானும் பாவம். இல்லையாம்மா?…"
"ஒரே ஒரு இழப்புதானே சுபா? இதை இழப்புன்னு கூட சொல்ல முடியாது… நீ கெட்டிக்காரியா இருந்தா, நேத்ரா, விபாவோட நிம்மதியான வாழ்க்கைக்காக, நீ வேற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்துட முடியும்!"
"அது நேத்ராவால மட்டும் முடியாதாம்மா?"
"ஏற்கனவே பலவீனமா இருக்கும் அவ மனசு… என்னதான் நாம பார்த்துக்கிட்டாலும், அவ பெத்தவங்க கூட இருந்து, டாக்டருக்குப் படிச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்?னு நினைக்க மாட்டா ன்னா நினைக்கிற? இப்போ காதலையும் விட்டுட்டு வேற பையனை கட்டிக்க னு சொன்னா என்ன ஆவா? அதை விடவா உன் துன்பம் பெருசு?"
"அம்மா விபா என்னைத்தான் விரும்புறார். அதை நேத்ராட்ட சொல்லிப் பார்க்கலாமா?" என்று கெஞ்சுதலாக கேட்ட சுபத்ராவை,
'இவ்வளவு தூரம் சொல்லியும் புரியலையா?' என்பதுபோல் பார்த்துவிட்டு,
"ம்ம் சொல்லு… ஆனா அவ குணமாகி வீட்டுக்கு வரும்வரை பொறுத்துக்க… அவ புரிஞ்சுக்குவா… ஆனா விபாவ கூட்டீட்டு கண்காணாத தூரம் போயிடு. அவ கண்ணு முன்னால நின்னு வதைக்காத… நேத்ராவுக்கு நான் இருக்கேன். கடைசிவரை என் பொண்ணா நினைச்சு பார்த்துக்குவேன்." என்று விரக்தியான குரலில் கூறிவிட்டு அறைக்குச் சென்று படுத்துவிட்டார்.
மேனகாவின் பார்வையும் வார்த்தைகளும் முள்ளாய் குத்தியது…
"துரோகி!" "சுயநலக்காரி!" என்று அவளது மனசாட்சியே திட்டித் தீர்க்க,
கண்களையும் காதுகளையும் இறுக மூடிக்கொண்டு அழலானாள்.
ஓரளவு ஓய்ந்ததும் சுபத்ராவிற்கு ஒன்று மட்டும் நன்றாக விளங்கியது.
சுபத்ரா விபாட்சுவைத் திருமணம் செய்து கொண்டாலுமே, 'இந்த ஜென்மம் முழுவதும் இதேபோல் அழுது தான் தீர்க்க முடியும்… நிச்சயமாக சந்தோஷமாக மட்டுமில்லை நிம்மதியா கூட வாழ முடியாது… குற்ற உணர்ச்சியில காலம்பூரா நொந்து வாழுறத விட, காதல் இல்லாம தனியா வாழ்ந்துடலாம்' என்று தீர்க்கமான முடிவுக்கு வந்தாள்.
அன்று இரவே ஆஸ்பத்திரிக்குச் சென்றாள்.
நேத்ராவின் அறைக்கு வெளியே இருந்த ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த தாத்தாவிடம்,
"நான் இங்க இருக்கேன் தாத்தா. நீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க." என்று கூறி தாத்தாவை அனுப்பிவைத்து விட்டு அறைக்குள் சென்றாள்.
அப்பத்தா ஒருபுறம் உறங்கிக்கொண்டிருக்க,
வலி தெரியாமல் இருக்க கொடுத்த மாத்திரைகளின் தயவால் நேத்ராவும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.
நேத்ராவின் முகத்தில் மெல்லிய புன்னகை நிலைத்திருக்க, அதைக் கண்ட சுபத்ராவிற்கு நேத்ராவின் புன்னகையைக் குலைக்கும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டேன். என்ற உறுதி பிறந்தது.
சப்தம் எழுப்பாமல் நேத்ராவின் படுக்கைக்கு அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.
சுத்தமாக தூக்கம் தொலைந்திருக்க, கைப்பையில் இருந்த, எழுத்தாளர் கல்கி எழுதிய "சிவகாமியின் சபதம்" புத்தகத்தை எடுத்துக்கொண்டு, படிப்பதற்கு வாகாக அமர்ந்து படிக்கலானாள்.
கதையில் மூழ்கி உறங்கியவளின் செவியில் "சுபா!" என்று நேத்ரா அழைப்பது போல் கேட்க,
கண்விழித்து நேத்ராவைப் பார்த்தாள்.
நேத்ரா உறங்கிக் கொண்டிருந்தாள்.
'இவ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு!' என்று எண்ணியபடி சிறிது நேரம் நேத்ராவை பார்த்தவள், 'தூக்கத்துல கனவு கண்டிருப்பேன் போலிருக்கிறது' என்று நினைத்து மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள்.
மறுபடியும் "சுபா" என்று நேத்ரா அழைக்க, படுத்தவாறே தலையைத் தூக்கி நேத்ராவை பார்த்தாள் சுபத்ரா.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நேத்ராவின் முகத்தில் புன்னகை விரிந்திருக்க,
"சுபா நான் விபாவ உயிருக்கு உயிராக விரும்புகிறேன். அவன்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. அவனுக்கும் என்னைய புடிச்சிருக்கானு எப்படியாவது தெரிஞ்சிட்டு வந்து சொல்றியா?" என்று தூக்கத்தில் புலம்பியவள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,
"எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும் ல்ல? அவனுக்கு நான் பொருத்தமா இருப்பேன்ல?" என்று வெட்கப்பட,
அதைப் பார்த்த சுபத்ராவிற்கு நெஞ்சம் பிளப்பது போல் வலித்தாலும்,
மெல்ல எழுந்து நேத்ராவின் அருகில் சென்ற சுபத்ரா, அவளது தலையை பரிவுடன் கொதியவாறு, "நிச்சயமா உனக்கும் விபாவுக்கும் கல்யாணம் நடக்கும் நேத்ரா. நிம்மதியா தூங்கு." என்று அவள் காதில் கிசுகிசுத்தாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேத்ராவிற்கு அது புரிந்ததோ என்னவோ தெரியவில்லை. விரிந்த புன்னகையுடன் புரண்டு படுத்து உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலையில் உறங்கிக் கொண்டிருந்த சுபாவை, "சுபா சுபா' என்று நேத்ராவின் அப்பத்தா எழுப்பி,
"நீ எப்ப மா வந்த?" என்று கேட்டார்.
"அம்மா வீட்டுக்கு வந்ததும் நான் இங்க வந்துட்டேன் அப்பத்தா." என்றாள் சுபத்ரா.
"தாத்தா வெளிய காணோம்" என்ற அப்பத்தாவிடம்,
"நேற்று நான் வந்ததும் தாத்தாவை வீட்டிற்குப் போகச் சொல்லி விட்டேன் அப்பத்தா" என்றாள்.
"அப்படியா சரிப்பா. நேத்ரா எந்திரிச்சா என்ன ஏதுன்னு பாத்துக்க. அப்பத்தா போய் குளிச்சிட்டு வந்துடறேன்" என்று கூறிவிட்டு அப்பத்தா செல்ல,
சிறிது நேரத்திலேயே கண்விழித்த நேத்ரா,
"ஹேய் நீ எப்ப வந்த? எனக்கு உடம்பு நல்லா இருக்கு சுபா! வீட்டுக்கு போயிடலாமே. எனக்கு இந்த ஆஸ்பத்திரி வாடையே பிடிக்கலை. ஒரு மாதிரி, நோயாளி மாதிரி இருக்கு." என்று கூற,
"டாக்டர் சொல்ற வரைக்கும் இங்கே இருப்போம் உனக்கு நல்லாயிருச்சுன்னா இங்க எதுக்கு வச்சிருக்க போறாங்க?" என்று கேட்டாள் சுபத்ரா.
"பாபியும் கைலாசும் தான் தினமும் வராங்க. நீயும் வரல்ல, விபாவும் வரல. ஆமா… விபா எங்கே?" என்று கேட்டாள் நேத்ரா.
"கார்த்திக் சார்… அதான் விபாவோட அப்பா. அவர்கூட, விபாவும் பிஸினஸ் விசயமா வெளிநாடு போயிருக்கார்." என்று கூறி சமாளித்தாள்.
சிறிது நேரம் அமைதியாக தன் விரல் நகங்களை பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா, நிமிர்ந்து சுபத்ராவை பார்த்து,
"உன்கிட்ட ஒன்னு சொல்லனும். ரொம்ப நாளா உன்கிட்ட இத பத்தி பேசணும்னு நினைச்சேன்... வந்து… சுபா…" என்று மிகவும் தயங்கித் தயங்கி நேத்ரா ஆரம்பிக்க,
அவளது கையைப் பிடித்து மெல்ல அழுத்தம் கொடுத்த சுபத்ரா, "எதுவா இருந்தாலும் வீட்டுக்குப் போனதும் பேசிக்கலாம். இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம்."
"இல்ல சுபா! ஒவ்வொரு தடவையும் உன்கிட்ட சொல்லனும்னு நினைக்கும் போதெல்லாம் இப்படித்தான் ஏதாவது ஒரு சிச்சுவேஷன் வந்துடுது. இன்னைக்கு நம்ம சும்மா தானே இருக்கோம்.?" என்று கேட்டவளை,
'நீ சொல்லப்போகும் விசயத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வர, எனக்கு கொஞ்சம் டைம் குடு நேத்ரா' என்று நினைத்தவாறு தன் தோழியை கெஞ்சுவது போல் பார்த்தாள் சுபத்ரா.
வார்த்தைகள்: 1087
விலோசனம் தொடர்ந்து வரும்…
❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️
0 Comments