அத்தியாயம் 🌟1.

 உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟1


மதுரை நீதிமன்றத்திலிருந்து, மத்திய சிறைச்சாலையை நோக்கிக் காவல்துறை வாகனம் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.


திடீரென வழியெங்கும் இருள் பரவ, காவல்துறை வாகனம், கட்டுப்பாடு இழந்து, தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. 


வாகனம் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லாததை உணர்ந்த ஓட்டுனர், பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த காவலர்களிடம், 


"சார் வேன்ல ஏதோ பிரச்சனை ஆயிடுச்சு!" என்று முறையிட்டார்.


எதிரே மோதவரும் கரிய மேகத்துடன் நேருக்குநேர் மல்யுத்தம் செய்வதைப் போல சீறிப் பாய்ந்து, புயலைவிட வேகமாக வேன் ஓடுவதைக் கண்டு, 


காவலர்கள் 'என்ன ஆயிற்று?' என்று யோசிக்கும் பொழுதே வேனின் பின் பக்க கதவுகள் தானாகப் படீரெனத் திறந்து, வேனிலிருந்து தனியே பிரிந்து சாலையில் பறக்க,


அதைப் பார்த்துக் கோபம் கொண்டு,


"என்னாச்சு? ஏன் இப்படி ஓட்டுற? வண்டிய நிறுத்து!" என்று கைதிக்குக் காவலாக வந்த காவலர் ஒருவர் ஆணையிட,


ஓட்டுனரோ கண்களில் பீதியுடன், வார்த்தைகள் தந்தியடிக்க


"சார் வேன் என்னோட கட்டுப்பாட்டுலயே இல்ல… தானா ஓடுது பாருங்க!" என்று ஸ்டியரிங்கைக் காட்டினார்.


ஸ்டியரிங் தானாகச் சுழல்வதைக் காவலர் அதிர்ச்சியுடன் பார்க்கும் போதே, 


ஓட்டுனரை யாரோ வண்டியிருந்து வேகமாகப் பிடித்துத் தள்ளிவிட்டதைப் போல சாலை ஓர மண்மேட்டில் போய் விழுந்தார்.


ஆனால் வாகனமோ ஓட்டுனர் இல்லாமல் சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.


"வண்டியை ஹேக் பண்ணும் வித்தை தெரிஞ்சுகிட்டு எவனாவது இந்தமாதிரி செய்றாங்களா?" என்று ஒரு காவலர் கலாய்க்க,


"ஏதோ தப்பாத் தெரியுது... கண்ட்ரோல் ரூமுக்கு கால் பண்ணுங்க" என்று ஒரு காவலர் கூற,


காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுப்பதற்காக வாக்கிடாக்கியை எடுத்த காவலரும், 


திடீரென வீசும் காற்றோடு பறக்கும் காகிதம்போல விசிறியடித்து சாலையோர மணல் திட்டில் தூக்கியெறியப்பட்டார்.



மற்றொரு காவலர், வாகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டுனர் இருக்கையை நோக்கி நகர,


அவரைக் கொத்தாக தூக்கி ஓட்டுனர் இருக்கையில் போட்டு, அந்த இருக்கையோடு சேர்ந்து வண்டிக்கு வெளியே போய் விழுந்தார்.


அதைக்கண்ட மற்ற காவலர்கள் பீதியில் செய்வதறியாது திகைக்க,


ஒரு பெண்காவலர் சமயோசிதமாக வேனோடு கட்டுப்பட்டிருந்த கைதியை விடுவிக்க எண்ணி, அதற்குரிய சாவியோடு இரண்டடி எடுத்து வைத்திருக்கமாட்டார்…


சூறாவளிபோல் சுழற்றியடித்த காற்று பெண்காவலரோடு வேனிற்குள்ளிருந்த மற்ற காவலர்களையும் சாலையோர மணல்மேட்டில் தூக்கி வீசி விட்டு, 


கைதியோடு தறிகெட்டு ஓடிய வேன் தொலைவிலிருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி நெருப்புக்கு இரையாக


கொழுந்து விட்டு எரிந்த நெருப்பு ஜுவாலையும் புகையும் விண்ணை முட்ட, 


ஹஹ்ஹஹ்ஹா…. என்று அந்தப் பகுதியே நடுநடுங்கும் அளவிற்கு சிரிப்பொலி ஆங்காரமாய் ஒலித்தது.


"உனக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாது வேட்டையாடும் வேட்டைக்காரன்தான் வேணும்… ஹஹ்ஹஹ்ஹா…" என்று தன் வெறியடங்கிய சந்தோசத்தில் கர்ஜித்தது அந்த அமானுஷ்ய குரல். 


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


பரமக்குடி, விஜய கிருபாகரபூபதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கான வரவேற்பு விழா ஆரம்பிக்கச் சில மணித்துளிகளே இருப்பதால் கல்லூரி உற்சாகக் கலை கட்டியது…


வானம் போன்று பரந்து விரிந்திருந்த கல்லூரி வளாகத்தில் பளபளவென விண்மீன்கள்போல் மாணவிகள் கண்களைக் கவர, 


அவர்களைத் தொடரும் மேகங்கள்போல மாணவர்களும் உலாவர, இவர்களை மேற்பார்வையிடும் நிலவுபோல் ஆசிரியப் பெருமக்களுமாய், கல்லூரி மழைக்கால மாலைநேரம் போல் காண்பவரை மதிமயங்கச் செய்வதாய் இருந்தது.


கல்லூரி நுழைவாயிலிலிருந்து ஆடிட்டோரியம் வரை எழில்மிகு வண்ணத்தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.


இப்படியான இனிய சூழ்நிவையில் இரு தேவதைகள் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தனர்.


கல்லூரியின் நுழைவாயிலை அடைத்தவாறு இடப்பட்டிருந்த அழகான கோலங்கள் கண்களுக்கு விருந்தளித்தது.


"இன்னைக்கு ஏதோ விசேசம் போலிருக்கே நேத்ரா?" என்றாள், வண்ணப் பறவைகளாய் சிறகடிக்கும் மாணவ மாணவியரின் களிப்பைப் பார்த்தவாறு.


"எனக்கும் அப்படித்தான் தோணுது சுபா!"


"அங்க பாரேன்… 'இளஞ்சிட்டுக்களை எங்கள் அழகிய கூட்டிற்கு வரவேற்கிறோம்!' னு போர்டு மாட்டீருக்காங்க!" என்று தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டு, வண்ணமயமாய்ப் பளபளத்த பேனரைக் காட்டினாள், நேத்ராவால் சுபா என்று அழைக்கப்பட்ட சுபத்ரா.


"நல்ல சகுனம் இல்ல? இன்னைக்கு நாம ஃபர்ஸ்ட் இயர் ஜாய்ன் பண்ண வந்திருக்கும்போது, காலேஜ் நம்மல சந்தோசமா வரவேற்கிற மாதிரி ஃபீல் ஆகுது… யார் கண்டா இந்தக் காலெஜ் நம்ம லைஃப்ல என்னமாதிரியான திருப்பத்தக் கொடுக்கப் போகுதோ?" என்று நேத்ரா கூறியதும்,


அதைக் கேட்டு,


கல்லூரி வளாகத்திலிருந்த மைனாக்கள், அவற்றின் மீது கல்லெறிந்தது போல் ஒரே சமயத்தில் கூட்டமாக மேலே எழும்பின.


அதையும் ரசித்து, "ஹை… எவ்ளோ மைனா பாரேன்!" என்று கன்னங்களில் இரு உள்ளங்கைகளை வைத்தவாறு சுபத்ரா வியக்க,


"ம்ம்ம்" என்று கண்கள் மலர்ந்து ரசித்தாள் நேத்ரா.


நம் நாயகிகளை நாமும் கொஞ்சம் ரசிக்கலாம் தானே?


நேத்ரா மாநிறத்தில், ஐந்தடி நான்கு அங்குல உயரத்தில்,ஃ அழகான உடல்கட்டும் அதற்குப் பொருத்தமான இள நீல வண்ணச் சுடிதார் அணிந்து, 


கட்டுக்கடங்காத கூந்தலை இரு புறமும் கிளிப் மாட்டி, அப்படியே விரித்து முதுகில் படரவிட்டிருந்தாள். 


அழகாகத் திருத்தப்பட்ட புருவமும், ஒளியுடன் கூடிய தீர்க்கமான கரிய விழிகளும், நேத்ரா என்று பெயரிடுவதற்குத் தாகுந்தாற் போலிருந்தது.


சிற்பிகொண்டு செதுக்கினாற் போன்ற நாசியும், புன்னகை சுமக்கும் இதழ்களும்…


இத்தனை சுந்தரமான பெண்ணைப் படைத்த இறைவன் திருஷ்டி பொட்டாக நினைத்து இடதுபக்க மேல் வரிசையில் சிங்கப்பல்லை வைக்க, 


அதுவும் நேத்ராவின் அழகைக் கூட்டி காட்டியதே உண்மை!...


நானும் பக்கத்தில் நிற்கிறேன்..‌ என்னையும் வர்ணிக்கலாம் என்று சுபத்ரா நம்மைச் சீண்ட,


சுபத்ரா சந்தன வண்ணத்தில் ஐந்தடி நான்கு அங்குலத்தில் கொஞ்சம் கொழுக்மொழுக் கென்று இருப்பவள். 


அடர் சாம்பல் வண்ணச் சுடிதார் அணிந்திருந்தாள்.


சுருள் கேசத்தை அழகாக இடைவரை தொங்கவிட்டிருந்தாள்.


துருதுருவென்றிருக்கும் அரக்குவண்ண விழிகள், எள்ளுப்பூ நாசி, உணர்வுகளை வெளிப்படுத்தும் இதழ்கள்…


என்று நாம் ரசிக்கும்போது கரடியாய் தொந்தரவு செய்தது ஒரு குரல்.


"ஹாய் கேர்ள்ஸ்! ஃபர்ஸ்ட் இயர்ரா?" என்று மரத்தடி கல்மேடையில் குழுவாய் அமர்ந்திருந்த மாணவ மாணவர்களில் ஒருவன் கேட்க,


அவர்களை நோக்கிச் சென்ற சுபத்ராவின் கையைப் பிடித்து நிறுத்திய நேத்ரா, சுபத்ராவின் காதருகில்,


"பசங்க ராகிங் பண்ணக் கூப்பிடுறாங்க… வா நழுவிடலாம்!" என்றவளை,


"ஹேய் ப்ளூ சுடிதார் அங்க என்ன கிசுகிசு இங்க வா" என்று இன்னொரு மாணவன் அழைக்க,


கோபம் கொண்ட நேத்ரா தனது நீல வண்ணச் சுடிதாரைப் பார்த்து விட்டு விடுவிடுவென்று அக்குழுவை நோக்கிச் சென்றாள்.


நேத்ராவின் இயல்பு, அவளாக யாரிடமும் வம்பு வைத்துக்கொள்ளமாட்டாள்! வம்பு செய்பவர்களிடமிருந்தும் ஒதுங்கிச் செல்வதையே விரும்புவாள். 


ஆனால் அவளிடம் வேண்டுமென்றே வம்பு வளர்த்தால் இரண்டில் ஒன்று பார்க்காமல் ஓயமாட்டாள்.


அது புரிந்த சுபத்ரா வேகமாக ஓடி நேத்ராவிற்கு முன்னாள் சென்று,


"குட் மார்னிங்!" என்று அந்த மாணவ மாணவியரிடம் கூற,


"அது!... சீனியரைப் பார்த்தா இப்படிதான் வணக்கம் வைக்கனும். ஆனா உன் அக்காவுக்கு அது தெரியல போலயே?" என்று நெற்றிக்கண்ணைத் திறக்காத குறையாக நின்ற நேத்ராவைப் பார்த்தவாறே கூற,


"அக்காவா? நோ ப்ரோ!" என்றதும் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் கோரஸாக,


"நோ!... ப்ரோ!" என்று கத்த


'இவர்கள் ஏன் நான் சொன்னதையே திரும்பச் சொல்கின்றனர்?' என்ற விழித்த சுபத்ராவிடம்,


"இவங்கள ப்ரோ… னு கூப்பிடக் கூடா…தா…மா" என்று நேத்ரா நீட்டி முழக்கிச் சொல்ல,


"யப்பா என்ன இழுவ… இங்க வா… இதேமாதிரி இழுத்து ஒரு பாட்டு பாடு" என்று நேத்ராவிடம் மாணவர்கள் வம்பிழுக்க,


"மரி மரி நின்னே மொரலிட நீ மனஸுன தய ராது…" 


என்று கண்களை மூடிக்கொண்டு சுபத்ரா பாட ஆரம்பிக்க,


"நிறுத்து! நிறுத்து. என்ன பண்ற? அவளத்தான பாடச் சொன்னோம்?" என்று சீனியர் மாணவி கேட்க,


"சிந்து பைரவில வர்ற பாட்டுக்கா" என்ற சுபத்ராவிடம் அவசரமாக,


"அக்கா வா? சீனியர்னே கூப்பிடு... ஓகே!" என்று மிதப்பாகக் கூறவும்,


சுபத்ராவும் சந்தோஷமாகத் தலையாட்டினாள்.


"ரொம்ப முக்கியம்… ஆமா உன்னை சீனியர்னு கூப்பிடச் சொல்றதுக்குத்தான் அழகா பாடிட்டிருந்த பொண்ண நிறுத்தச் சொன்னியா?" என்று அந்த சீனியர் மாணவியை ஒருவன் கேட்க,


"என்ன? அழகா பாடினாளா? நீ அந்தப் பாட்ட ஒரு தடவையாவது கேட்டிருப்பியா?"


"பாடவே செய்வேன்!"


"கிழிப்ப"


"யாரப் பார்த்துப் பாடத்தெரியாதவன்னு சொல்ற? நா விபாவோட உயிர்த்தோழனாக்கும்." என்று அவன் பெருமையாகக் காலரைத் தூக்கிய போதே அருகிலைருந்த ஒளிப்பெருக்கியில்,


"ப்ரொக்ராம் ஆரம்பமாறதுக்கு முன்னாடி, நமக்காக நம்ம நண்பன் விபாட்சு என்ற விபா தனது இனிய கானத்தால் விழாவைச் சிறப்பிக்கப்போகிறார்." என்று அறிவித்து முடிக்கும்முன் அரங்கமே கைதட்டலில் அதிர்ந்து, அங்கே இருந்த ஸ்பீக்கரையே கிழித்துக் கொண்டு கேட்க,


சீனியர் குரூப் "ஹே...ய் அவனுங்க ஆரம்பிச்சாட்டாங்கப்பா" என்று சந்தோஷக் கூச்சலிட்டபடி, நேத்ராவையும் சுபத்ராவையும் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஓடினர்.


"அட யாரு நேத்ரா அந்த விபா?… என்ன அது முழுப் பேரு? ஏதோ சொன்னாங்களே!" என்று சுபத்ரா கேட்க,


"எனக்கெப்படித் தெரியும்? உன்கூடத்தானே வந்தேன்?"


"அதில்லப்பா! அந்த சீனியரும் விபாவோட ப்ரண்ட்னு காலர தூக்கி விட்டான். இப்ப, அந்த விபா பாடப்போறது தெரிஞ்சதும் அத்தனைபேரும் தலைதெறிக்க ஓடுறாங்களே!"


"ரொம்ப சிலிர்த்துக்காத! நீ சினிமா பாக்கிறதில்ல? இந்த… 'பூவே உனக்காக' படத்துலகூட ஒரு தாத்தா பாட ஆரம்பிச்சதும் ஊரே தலை தெறிக்க ஓடி ஒழியுமே அது மாதிரிதான் இதுவும் இருக்கும்னு எனக்குத் தோணுது!" என்று நேத்ரா கூறும்போதே,


 "அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்…"


என்று அருகிலிருந்த ஒளிபெருக்கியில் ஆண் குரல் கம்பீரமும் குலைவுமாக ஒலிக்க, 


"ஹேய்… நேத்ராஆஆஆ... என்ன வாய்ஸ்சு… வா! வா! " என்று கூறிவிட்டு சுபத்ரா முன்னால் வேகமாக நடக்க,


தன்னை நேத்ரா பின்தொடராததை உணர்ந்து திரும்பிப் பார்த்தவள் சிரித்துவிட்டாள்.


சற்றுமுன் விபா என்பவனின் பாடலை விமர்சித்த நேத்ரா, அவன் குரல் கேட்டு ஸ்தம்பித்து நின்றுகொண்டிருந்தாள்.


"வா நேத்ரா! இங்கிருந்து கேட்கிறத விட நேர்ல கேட்போம் வா!" என்று கூறி நேத்ராவை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு ஓடினாள்.


மாணவர்கள் ஓடும் திசையும் பாடல் ஒலிக்கும் திசையும் ஒன்றாக இருக்கவே அம்மாணவர்களைத் தொடர்ந்து ஓடினாள் சுபத்ரா.


"உன்னோடு நானும் வாழ

உன்னோடு நானும் சாக

உன் மடி சாயவா

உன் மடி சாயவா"


நேத்ராவோ பாடல் ஒலிக்கும் ஒளிபெருக்கியைப் பார்த்தவாறே சுபத்ராவால் இழுக்கப்பட்டு ஓடினாள்.


ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தால் அனைவரின் கண்களும் மேடையையே நோக்க,


அவ்வளவு பெரிய ஆடிட்டோரியத்தில் ஒரு மாணவனின் குரல் தவிரக் குண்டூசி விழும் சப்தம் என்ன? மூச்சுவிடும் சப்தம் கூடக் கேட்கவில்லை!!!


"ஓ உனது சிரிப்பினில்

சிதறும் அழகினை

பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ

எனது பிறவியின் அர்த்தம் உணரவே

உன்னை எனது வாழ்வில் தந்ததோ…"


முண்டியடித்து ஓரளவு மேடைக்கு அருகே சென்றனர்.


"இருவர் வாழும் உலகிலே

உன்னை அணைத்துக் கொள்வேன் உயிரிலே

இரவில் தேயும் நிலவிலே

நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே"


ஒரு காதில், ஒரு விரலை வைத்து, வெளிசப்தம் வராதவாறு அடைத்துக்கொண்டு, மறுகையால் மைக்கைப் பிடித்தபடி, பாடலின் வரிகளை உணர்ந்து பாடிக்கொண்டிருந்தான் விபா!



“அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்

இறகைப் போலப் பறக்கிறேன்

நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ

மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன்”


என்று விபா முடிக்க… 


"உன் பாடல் கேட்கும்

ஒவ்வொரு நொடியும்

மீண்டும் ஒருமுறை பிறக்கிறோம்…"

என்று மாணவியர் கோரஸாக பாட,


கைதட்டலிலும், விசில் சப்தத்திலும், மகிழச்சி ஆரவாரத்தில் மாணவ மாணவியர் எழுப்பும் ஒலியிலும் அந்ந ஆடிட்டோரியக் கட்டிடமே குத்தாட்டம் போட்டதோ? 


“விபாஆஆஆ இன்னொரு பாட்டு” என்று மாணவியர் கூவ,


மாணவர்களும் “வி...பா! வி...பா!” என்று முழங்க, 


“நானே பாடிக்கிட்டிருந்தா மத்த நண்பர்கள்லாம் என்ன பண்ணுவாங்க? அவங்களையும் பாடவிட்டு கேட்போமே? இந்த வருசம் நம்ம காலேஜுக்குப் புதுசா வந்திருக்கிற ஸ்டூடண்ட்ஸ் யாராவது வாங்க! எங்களுக்கும் நல்ல அறிமுகமா இருக்கும்!” என்று அழைத்ததுமே,


சுபத்ராவை இழுத்துக் கொண்டு நேத்ரா மேடையேற, மீண்டும்கரகோசம் விண்ணைப் பிளந்தது…


கரகோசம் சற்று அடங்கும் நேரத்தில் சற்று முன் சுபத்ரா, நேத்ராவை கலாய்த்த மாணவர்கள்,


“ஹே நீலச் சுடிதார்! சும்மாவே இழு...த்து பேசுவ... என்ன பாடப்போற?” என்றும்,


“ரெண்டு பேரும் மேடையேறியிருகீங்க? சுலமங்கலம் சகோதரிகளா? இல்ல பம்பாய் சகோதரிகளா?” என்றதும், அரங்கம் சிரிப்பலையில் மூழ்க,



“மேகம் பாடும் பாடல் கேட்டேன்

நானும் பாடிப் பார்க்கிறேன்…”


என்று நேத்ரா ஆரம்பிக்க, அவள் குரலிலிருந்த எதோ ஒன்று அனைவரின் ஆராவாரத்தை நிறுத்த,


“வண்ணங்கள்… நான் எண்ணும் எண்ணங்கள்

எங்கிருந்தோ இங்கு வந்தேன்

இசையினிலே எனை மறந்தேன்

இறைவன் சபையில் கலைஞன் நான்…”


என்று சுபத்ரா தொடர,


“ஹேஏஏஏ… விபா உன் பாட்டுக்கு எசப்பாட்டு படுறாங்க” என்று மாணவர்கள் குதுகலிக்க,


“தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்,

தேடும் கைகள் தேடினால்

அதில் ராகமின்றிப் போகுமோ”


என்று நேத்ரா, சுபத்ரா இருவரும் சிரித்தபடியே விபாவைப் பார்த்தவாறு சேர்ந்து முடிக்க,

இருவரையும் கண்ணிமைக்காமல் பார்த்தான் விபா!


யார் அவன்? 

சுபத்ராவும், நேத்ராவும் சகோதரிகளா?


அடுத்த அத்தியாயத்தில் காண்போம்!


விலோசனம் தொடர்ந்து வரும்…


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


Post a Comment

0 Comments