வருவான்-14
பூவினாவின் அப்பாவிடம், "பூவினாவிற்கு, பெருசா ஆக்ஸிடன்ட் ஆகியிருக்கா? என்று கேட்டான் வேலு.
"ஏன்? என்னாச்சு வேலு? அப்படி எதுவும் நடந்ததில்லையே..." என்றார் ராஜன்.
"நீங்க தப்பா எடுத்துக்காம, எனக்கு உதவுங்க சார். உங்களுக்கு ரகுநந்தன்னு டாக்டர் யாராவது தெரியுமா? சார்"
"நீங்க யார கேட்கிறீங்க? அவர் எந்த ஆஸ்பத்திரில டாக்டரா இருக்கார்?"
" நம்ம ஊர் அரசு மருத்துவமனையில்."
"போட்டோ எதுவும் இருக்கா? என்கிட்ட அவரைப் பற்றிக் கேட்கிறதுக்கான காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா?"
"போட்டோ இப்போதைக்கு இல்லை!... அந்த ரகுநந்தன், உங்க பொண்ணைக் கொஞ்ச நாளாவே பின் தொடர்கிறார். உங்க பொண்ணுக்கு மட்டும் அவர் உருவத்தைக் காட்டுறார்... விஜய், கிரேசா பார்க்கும்போது மறைந்து நின்று கொள்கிறார். எனக்கு முகத்தைக் காட்டுவதில்லை... ஏன்? என்று தெரியவில்லை."
"எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்க... யோசித்து சொல்றேன்." என்று கூறி ராஜன் ஃபோனை வைப்பதற்கும் டாக்டர்ஸ் அறையை வேலு நெருங்கவும் சரியாக இருந்தது.
"என்ன சொன்னார் அப்பா? வீட்ல இருக்கிறவங்களைப் பயமுறுத்த வேண்டாம்னு நெனச்சேன். நீங்க சொல்லிட்டீங்க." என்றாள் குற்றம்சாட்டும் குரலில்.
"இந்த விஷயம், அப்பா, அம்மாவுக்குத் தெரியாம இருக்கக் கூடாது வினி. நமக்கு ஒருவர் தொந்தரவு கொடுக்கிறதுக்கு, ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்... அந்தக் காரணம் உனக்குத் தெரியலை... ஒருவேளை உன்னைப் பெத்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்... பிரச்சனையோட ஆரம்பம் தெரிஞ்சாத்தான் சரிசெய்ய முடியும்.... சரி அப்புறம் பேசுவோம்." என்றவன், டாக்டர்ஸ் அறை வாசலில் நின்ற ஜெயராமிடம்,
"என்ன இங்கே நிக்கிறீங்க?" என்று கேட்டான்.
"நாம உள்ளே போக அனுமதி இல்லையாம் வேலு. நர்ஸ் உள்ளே போயிருக்காங்க." என்று கூறினான்.
'ஜெயராம் எந்த டென்ஷனும் இல்லாமல் இயல்பாக நின்றது, அவன்மேல் தப்பில்லையோ? அவனும் பாதிக்கப்படுகிறானோ?னும் தோணுது. அதேநேரத்தில் சந்தேகமும் வருகிறது.' என்று நினைத்த வேலு, ஜெயராமை கவனித்த படியே ரகுநந்தன் எங்காவது தென்படுகிறானா? ' என்றும் கவனித்தான்.
வெளியே வந்த நர்ஸ், "டாக்டர் ரகுநந்தன் இன்று வரவில்லையாம்." என்றதும்,
"ஏன் சிஸ்டர் பொய் சொல்றீங்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவரைப் பார்த்தேன்..." என்றான் வேலு.
"பார்த்தேன்னு சொல்றீங்க. பின்ன ஏன் இங்க வந்து கேட்கிறீங்க?"
"அவர் அருகில் நான் போவதற்குள் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்... நான் சரவணவேல் ஐ.பி.எஸ்." என்று அடையாள அட்டையைக் காட்டித் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு,
"இப்போ அவரை நான் பார்க்கலாமா?" என்று நர்ஸிடம் கேட்டான்.
வேலு ஐ.பி.எஸ் ஆபிசர் என்றதும் அரண்டு போன நர்ஸ், மீண்டும் டாக்டர்ஸ் அறைக்குள் புகுந்தாள்.
"நீ ஐ.பி.எஸ் ஆபிசர்னு சொன்னதும் உள்ளே ஓடுறதை பார்த்தாயா வேலு? உள்ளேதான் ரகு இருக்கார் போல, ரெஸ்ட் எடுத்துக்கிட்டு..." என்று சொல்லிக் கொண்டிருந்த ஜெயராம்,
"அவரோட ரெஸ்ட் ரூம் இது இல்லை..." என்றவன், அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே,
'ஜெயராமுக்கு எப்படி தெரியும்? ஏன் சட்டென்று அமைதியாகிவிட்டான்?' என்று வேலு யோசித்துக் கொண்டிருந்தபொழுது,
"நீங்க எதுக்காக டாக்டர் ரகுநந்தனைத் தேடிவந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா சார்?" என்று கேட்டார் இரண்டாவது முறையாகப் பூவினா சந்தித்த டாக்டர்.
"இவங்க பூவினா. இரண்டு நாள் முன்னாடி டாக்டர் ரகுநந்தனை தேடிவந்தாங்க, எப்போ வந்து அவரைக் கேட்டாலும், "இன்னைக்கு வரலை" ன்னு பதில் சொல்வதாக இவங்க ரகசியப்புகார் கொடுத்திருக்காங்க." என்றான்.
ஏற்கனவே பூவினாவைப் பார்த்திருந்த டாக்டர், "அவர் இருந்தா நாங்க ஏன் சார் வரலை'ன்னு சொல்லப் போறோம்?" என்று கேட்டார்.
"எப்போ வருவார்? "
"தெரியல"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் டாக்டர் ரகுநந்தனை இங்கே இடது பக்க கட்டிடத்தில் பார்த்தேன். நீங்க வரலைனு சொல்றீங்க... கொஞ்சம் நல்லா விசாரிச்சு சொல்ல முடியுமா? இல்லை உங்க மருத்துவமனை டீன் கிட்ட நான் பேசுறேன்." என்று வேலு சொன்னதுதான் தாமதம், கிட்டத்தட்ட உள்ளே ஓடினார் டாக்டர்.
சிறிது நேரத்திற்குப் பின் வந்த டாக்டர், "உள்ள வாங்க சார்." என்று கூறி விட்டு அறையின் உள்ளே நடந்தார்.
அந்த அறைக்குள் இருந்த தனியறைக்குச் சென்று, "வாங்க! இந்த அறைக்குள் சீனியர் டாக்டர் இருக்கிறார். அவருக்குத்தான் டாக்டர் ரகுநந்தனைப் பற்றித் தெரியும்." என்று கூறி விட்டு அந்த அறைக்குள் செல்ல,
அனைவரும் அறைக்குள் சென்றனர். அங்கிருந்த ஷோபாவில் ஒருவர் அமர்ந்திருந்தார்.
'இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே?' என்று பூவினாவும், கிரேசாவும் நினைத்தனர்.
அவருக்கு எதிரில் இருந்த ஷோபாவில் அமரச் சொன்னதும், அமர்ந்த பூவினா, சட்டென்று எழுந்து,
"நீங்க எங்களுக்கு டிரைனிங் கொடுத்த டாக்டர்தானே? " என்று கேட்டாள்.
"ஆமா! என் பெயர் செந்தில். உங்களுக்கு ரகுநந்தனை எப்படித் தெரியும்? இப்ப எதற்காக அவரைத் தேடி வந்திருக்கீங்க?" என்று நேராக விஷயத்துக்கு வந்தார்.
"அன்னைக்கு டிரைனிங் வந்தபோது பழக்கமானது." சுருக்கமாகக் கூறினாள் பூவினா.
"என்னிடம் உண்மையான காரணம் சொன்னால் மட்டுமே, என்னால் உங்களுக்கு உதவ முடியும். அதனால் உண்மையை மட்டும் கூறுங்கள்." என்றார் டாக்டர் செந்தில்.
"உங்க கிட்ட நான்ஏன் பொய் சொல்லப் போறேன்? அவர் என்னோட நண்பர்."
"நம்பமுடியல... வேற?"
"நீங்க எங்களைத் தவிர்ப்பதற்காகச் சொல்றீங்க டாக்டர்... இதோ இவரும் ரகுநந்தனுடைய நண்பர்தான்." என்று தனக்கு பின்னால் சற்று மறைந்து நின்ற ஜெயராமைகீ காட்டி கூறினான் வேலு.
'கடவுளே! ரகுநந்தனைப் பற்றி முழுசாகத் தெரியாததால், இந்த டாக்டர் ரகு சம்மந்தமா என்னிடம் ஏதாவது கேட்டுட்டா என்ன பண்றதுன்னுதான் மறைஞ்சு நிக்கிறேன். காட்டிக்கொடுத்துட்டானே?' என்று நினைத்தவாறு மெல்ல மெல்ல வெளியே வந்த ஜெயராமை அப்பொழுதுதான் பார்த்த டாக்டர் செந்தில்,
"நீ?... நீ... நீ எப்படி?... நீங்க யாரு?" என்று அதிர்ச்சியுடன் எழுந்துவிட்டார்.
'என்னடா இது? இவர் என்னைப் பார்த்துப் பயப்படுறார்?!!' என்று நினைத்த ஜெயராம், வேலுவை பார்த்து,
"என்னடா நடக்குது?" என்று ரகசியமாகக் கேட்டான்.
வேலு ஜெயராமை ஒரு பார்வை பார்த்து விட்டு, டாக்டர் செந்திலைப் பார்த்து,
"உங்களுக்கு இவரைத் தெரியுமா?" என்று கேட்டான்.
"எனக்குக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்." என்று அருகில் இருந்த டாக்டரிடம் கேட்டுவிட்டு, இண்டர்காம்ல் யாரையோ அழைத்து லேப்டாப் பை எடுத்து வரச் சொன்னார். பிறகு தண்ணீர் குடித்து விட்டு ஜெயராமையே பார்த்துக்கொண்டிருந்தார்.
"என்ன இவர்? இவரோட பொண்ணை, பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பார்ப்பது போல என்னைக் குறு குறுன்னு பார்க்கிறார்?!!" என்று நினைத்தபடி ஜெயராம் வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் கொண்டு வரப்பட்ட லேப்டாப் -ஐ உயிர்பித்த, டாக்டர் செந்தில், எதையோ தேடி எடுத்து விட்டு, ஜெயராமை பார்த்தார். ஜெய்! உங்க பேரென்ன?" என்று கேட்டார்
"அதான் நீங்களே ஜெய் னு தானே டாக்டர் கூப்பிட்டீங்க. அதான் என் பேரு, ஜெயராம்! என்றவன்,
'அப்பாடி ஈஸியான கேள்விதான் கேட்டார்.' என்று தன்னையே அசுவாசப்படுத்தும்போது லேப்டாப் - ஐத் திருப்பி, திரையைக் காட்டி,
"இது நீங்கதானா?" என்று கேட்ட பிறகுதான் மானிட்டரில் தன்னுடைய ஃபோட்டோ தெரிந்ததைப் பார்த்தான். அவனோடு மற்றவர்களும் சேர்த்து பார்க்க,
"இது என்ன! அங்கிள் ஹேர்ஸ்டைல்ல இருக்கீங்க சார்?" என்று கேட்டு விஜய் சிரித்தான்.
'ஜெயராமிற்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை... அந்த ஃபோட்டோவில் இருந்தது சாட்சாத் ஜெயராம் தான். ஆனா இந்த மாதிரி எப்ப ஃபோட்டோ எடுத்தேன்' என்று யோசிக்கும்போதே, அவனைத் தட்டிய வேலு, "கீழ பேரைப் பாரு!" என்றான்.
ஜெயராமின் ஃபோட்டோ விற்கு கீழே, "ஜெய் சஞ்சீவ்" என்று எழுதியிருக்க,
எல்லோருமே அதைப் பார்த்தனர்.
"உங்க அப்பாவா சார்?" என்று கேட்டாள் பூவினா.
"இல்லை! எங்கப்பா பெயர் "கேசவன்" என்றான் ஜெயராம்.
"இதுல வேற பெயர் போட்டிருக்கே?" என்று டாக்டர் செந்திலிடம் கேட்டான் ஜெயராம்.
"இவர் பெயர் ஜெய் சஞ்சீவ்... " என்ற டாக்டர் செந்தில், மற்றொரு குரூப் ஃபோட்டோவைக் காட்டி, "இந்த ஃபோட்டோவில் ஜெய் சஞ்சீவ் இங்கே இருக்கார். இதே ஃபோட்டோவில் ரகுநந்தன் எங்கேன்னு சொல்லும்மா... நீதானே ரகுவை பார்த்திருக்க." என்று கூறி லேப்டாப் - ஐ பூவினா புறம் திருப்ப,
நடுவில் நின்றிருந்தான் ரகுநந்தன். அவனைப் பூவினா அனைவரிடமும் காட்ட, அதிர்ச்சியடைந்த டாக்டர் செந்தில்,
"அப்போ... இவர் யார்னு தெரிகிறதா?" என்று மீண்டும் வேறு ஒருவரை ஃபோட்டோவில் காட்ட, அவரை எங்கோ பார்த்தது போலிருந்தது பூவினாவிற்கு,
"இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் டாக்டர்" என்று கூறியபடி நிமிர்ந்தவள் அதிர்ந்தாள்.ஏனென்றால் அவள் எதிரில் டாக்டர் செந்தில் காட்டிய நபர் இருந்தார்.
"நீங்களா?!!!" என்று அனைவருமே அதிர்ச்சியடைந்தனர்.
டாக்டர் செந்தில் கண்ணாடியைக் கலட்டி, தலையை வகிடு எடுத்து ஒதுக்கியிருந்தார்.
யாருமே எதுவுமே பேசவில்லை ஏனெனில் அந்த ஃபோட்டோவில் இருந்த டாக்டர் செந்தில், முப்பது வயதிற்குள் இருந்தார். இப்பொழுது இவர் ஐம்பதுகளில் இருக்கிறார்!!! இவருடன் இருந்த ஜெயராமும் ரகுநந்தனும் இப்பொழுதும் வயதில் இருபதுகளில் இருக்கின்றனர்... எப்படி?!!!
முதலில் பேசியது டாக்டர் செந்தில் தான்.
"இப்ப சொல்லுங்க, நீங்க ரகுநந்தனைப் பார்த்தீர்களா?" என்று கேட்டார்.
"ஆமாம் பார்த்தேன்." என்று பூவினா கூற,
"என்னுடன் பேசினாரே? என் ஃபிரண்ட்னு சொன்னார்?!!! எனக்கு உடம்பு சரியில்லாதபோது என் கூடவே இருந்தார்... ஆனா அவரும் என் வயதில்தான் இருந்தார்." என்றான் ஜெயராம் இன்னும் அதிர்ச்சி விலகாத குரலில்.
"இப்ப இவங்க ரெண்டு பேரும் எங்கே இருக்காங்க? நாங்க பார்க்க வேண்டுமே" என்று கேட்டான் வேலு.
"நீங்க எதுக்காக ரகுநந்தனைத் தேடுறீங்க? இப்பவாவது உண்மை சொல்லுங்க... ஏனென்றால் எனக்குத் தான் ரகுநந்தனைப் பற்றித் தெரியும்ங்கிறது உங்களுக்கு இப்ப தெளிவாயிருக்கும். ம்ம் சொல்லுங்க."
"ஓகே உங்க வழிக்கே வர்றோம்... நாங்க எதுக்கு தேடுறோம்னு நீங்க நினைக்கிறீங்க?"
"போலீஸ் ஆபிசர் தேடுறதுதான் குழப்பமா இருக்கு. ஏன்னா இவங்க ரெண்டு பேருமே நேர்மையான டாக்டர்ஸ்... எந்த வகையிலும் தவறு செய்ய வழியில்லை..." என்று டாக்டர் செந்தில் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,
"நான் போலீஸ்காரன்ங்க... டாக்டர் படிக்கிற அளவு படிப்பாளி கிடையாது." என்றான் வேகமாக மறுத்தான் ஜெயராம்.
"உன் விஷயம்தான் என்னைக் குழப்புது. யார் நீ? எங்க ஜெய்க்குக் குழந்தை இருக்க வாய்ப்பே இல்லை... அவனுக்கு உடன்பிறந்தவர்களும் இல்லை... அவனுக்கு இருந்த ஒரே உறவு அம்மா மட்டும் தான்... பிறகு நீ எப்படி?"
"நான் தாங்க ஜெயராம்... என்னிடம் ரகு, 'என்னை அடையாளம் தெரியலையா?' ன்னு கேட்டாரே!"
"அதுனாலதான் சொல்றேன், நீங்க ரகுவைப் பார்த்ததா சொல்றதெல்லாம் பொய். ஏன்னா அவங்க ரெண்டு பேருமே என்னுடன் வேலை பார்த்தவர்கள்... ஜெய், ரகுவோட ரொம்ப நெருங்கிய நண்பன். அவனுக்குத் தெரியாதா? நீ எங்க ஜெய் இல்லைனு." என்று கூறி வேறுபுறம் திரும்பிக் கொண்டார்.
"நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை."
"நீங்க எதுக்கு தேடுறீங்கனு நான் எப்படி சொல்ல முடியும்? இந்தப் பொண்ணு தேடி வந்தபோது, காலேஜில் யாராவது சீனியர் புரபசர், ரகுவைப் பற்றிப் பெருமையாகச் சொல்லியிருக்கலாம்... அதில் ஈர்க்கப்பட்டு, அவரைப் பார்க்க வந்திருக்கலாம்...னு நினைச்சேன். ஏன்னா ரகுவைப் பற்றிக் கேள்விப்பட்டு பெண்கள் தேடிவர்றது இது புதுசில்ல...
"அடக்கடவுளே! அவ்வளவு கேள்ஃபிரண்ஸ்சா ரகுவிற்கு? சரியான காதல் மன்னனோ?" என்று கிரேசா கேட்டதும்,
"தெரியாத மனுஷரைப் பற்றி இப்படி பேசக்கூடாதும்மா... அவன் ராமன்! ஒரே ஒரு பெண்ணைத்தான் விரும்பினான்."
"அந்தப் பெண்ணையும் எவனோ ஏதோ சொன்னான்னு காட்டுக்கு அனுப்பிட்டு ஜாலியா வாழ்ந்தவரா?" என்று கேட்டான் வேலு.
"நீங்க சொல்லும் ராமரை பற்றியும் முழுசாகத் தெரிஞ்சுக்கிட்டு, இனி இந்த மாதிரிப் பேசுங்க. சரி கிளம்புங்க... "
"சார் ஒரு காலேஜ் பொண்ணோட விளையாட்டுக்கு ஐபிஎஸ் ஆபிசர் வரமாட்டோம்... என்ன காரணமா இருந்தாலும் ரகு எங்கே இருக்கார்ன்னு எனக்கு இப்பத் தெரிஞ்சாகனும் இல்லைனா... ஆட்கொணர்வு மனு போட்டு, உங்களுக்கு நோட்டீஸ் வரும்... என்ன செய்யலாம் சொல்லுங்க…" என்று அடங்கிய நிலையில் கோபத்தை வெளிப்படுத்தினான் வேலு.
"நானே நினைச்சாலும் இவங்க ரெண்டு பேரையும் உங்களால பார்க்க முடியாது ..."
"அதுதான் ஏன்?"
"ஏன்னா... அவங்க ரெண்டு பேருமே இப்ப உயிரோட இல்லை!!!"
ரகுநந்தன் உயிருடன் இல்லையா? அவன் ஏன் பூவினாவைத் தேடி வந்தான்.
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
💍💍💍💍💍💍💍💍💍
0 Comments