வருவான் -3
கோட் பாக்கெட்டில் ஏதோ விழுந்ததை உணர்ந்து கையை பாக்கெட்டுக்குள் விட்ட பூவினா, தடுமாறி விழப் போனவள் சமாளித்து நின்றாள்.
'நான் விழும் போது யாரோ பிடித்தார்களே? நன்றி சொல்வோமா' என்று நினைத்து திரும்பிப் பார்த்தாள்.
அவன் நின்றிருந்தான். டாக்டர் -கோட்டைக் கழட்டி வைத்தவன் பூவினா தன்னைப் பார்ப்பதை பார்த்தான்.
"நன்றி ஸார்!" என்றாள் பூவினா.
'தன்னிடமா நன்றி கூறுகிறாள்?' என்று ஆச்சர்யப்பட்டவன், 'தனக்குப் பின்னால் யாரும் இருக்கிறார்களா?' என்று திரும்பிப் பார்த்தான்.
"உங்ககிட்ட தான் நன்றி சொன்னேன். நீங்க இந்த ஆஸ்பத்திரில டாக்டரா ஸார்?" என்று பூவினா அவனிடம் கேட்டாள்.
'தன்னிடம்தான் பேசுகிறாள்!' என்று நினைத்தவன்.
அவள், "நீங்க டாக்டரா?" என்று கேட்டதற்கு,
"ஆமா" என்பதைப் போல தலையாட்டினான். இருந்தாலும் அவன் முகத்தில் ஏதோ ஒரு சந்தேக சாயல் இருந்தது, தெள்ளத்தெளிவாக பூவினாவிற்கும் தெரிந்தது.
'என்ன பேச மாட்டேன்றார்.... நான் பேசும் போது என் முகத்தை கூர்ந்து கவனிக்கிறார்... ஒரு வேளை என் உதட்டசைவை வைத்து, பதிலாக தலையசைக்கிறாரோ? கடவுளே! இந்த டாக்டர் செவிட்டு ஊமையா? பார்ப்பதற்கு எவ்வளவு அழகா இருக்கார். டாக்டர் படிப்பும் இவருக்குத் தனி கம்பீரத்தை கொடுத்திருக்கிறது... அறிவுஜீவி போலவும் தெரிகிறார்... ஆனால் பாவம் பேசமுடியவில்லையே? இவரிடம் எப்படி பேசுவது?' என்று நினைத்தபடி நின்று கொண்டிருந்தவளின் முகம் ஒரு நிமிடத்தில் ஆயிரம் உணர்ச்சிகளைக் காட்டியதைப் பார்த்தவன் சிரித்துவிட்டான்.
'அப்பாடி சிரிச்சுட்டார்.' என்று நினைத்த பூவினா,
"என் பேரு பூவினா. பி.எஸ்.சி., ஃபாரன்சிக் சயின்ஸில் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன்." என்றாள்
அவன் தன்னுடைய பெயரை எப்படி சொல்வான்? என்று ஆவலுடன் அவன் முகத்தையே பார்த்த பூவினாவிற்கு மீண்டும், "சரி" என்பதைப் போல தலையசைத்து, சிரிப்பையே பதிலாக தந்தான்.
"வினு! எல்லாரும் போயிட்டாங்க வா! ஏற்கனவே புரபசர் உன் மீது கோபமா இருக்கார் வா! வா!" என்று கூறியபடி பரிசோதனைக் கூடத்தின் வாசலை நோக்கி நடந்தாள் கிரேசா.
கிரேசாவைத் திரும்பிப் பார்த்த பூவினா, 'இவனிடம் பேச மறுபடியும் சந்தர்ப்பம் கிடைக்காதே' என்று நினைத்தபடி,
"நீ போ! இதோ வரேன்." என்றாள்.
பூவினாவின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவன்,
"எனக்கும் உன்கூட பேசனும் போல இருக்கு " என்றான் மிகவும் மெல்லிய குரலில்!!
சட்டென்று திரும்பிப் பார்த்த பூவினா,
"நீங்களா பேசுனீங்க?" என்று விழி விரித்து கேட்டாள்.
" நான் பேசியது உனக்குக் கேட்டுவிட்டதா?" என்று மீண்டும் புருவத்தில் முடிச்சு விழ, அவள் முகத்தையே பார்த்தவாறு கேட்டான்.
"ஆமா! நீங்க தான் பேசுறீங்க!" என்று அவனது உதட்டசைவைக் கண்டு, மிகவும் சந்தோஷமாக கூறினாள் பூவினா.
அவன் மீண்டும் அவள் முகத்தையேப் பார்க்க,
"உங்க பேர் என்ன டாக்டர்?" என்று கேட்டாள் பூவினா.
அவனுக்கு அதிர்ச்சியால் சின்ன தடுமாற்றம் ஏற்பட, மீண்டும் பூவினாவின் கண்களைப் பார்த்தவாறே,
"ரகுநந்தன்." என்றான்.
"நீங்க ஏன் இப்படி முகத்தை உத்து உத்து பார்த்து பேசுறீங்க? நான் கூட, உங்களுக்கு பேச வராதோ? ன்னு பயந்துட்டேன்." என்றாள்.
ரகுநந்தன் மீண்டும் சிரிப்பை பதிலாக தந்தான்.
"நான் இங்கே வரும்போது உங்களைப் பார்க்கலையே? நீங்க எப்ப உள்ள வந்தீங்க டாக்டர்?" என்று கேட்டாள் பூவினா.
"நான் இங்கேயேதான் இருக்கிறேன். இதோ இந்த திரையை விளக்கினால் என் அறை இருக்கிறது." என்று கூறி திரையை விளக்க, அங்கே ஒரு கதவு இருந்தது. பூவினா அந்தக் கதவை ஆர்வமுடன் பார்க்க,
"வா!" என்று கூறி அறைக்கதவை திறந்து உள்ளே சென்றான் ரகுநந்தன்.
பூவினா அவனைப் பின்தொடர்ந்து செல்ல, அந்த அறை ஒரு மனிதன் தங்கும் அளவு சகல வசதிகளுடன் இருந்தது. ஆனால் அறைக்குள் கொஞ்சம் பழைய வாடை அடித்தது.
"இங்கேதான் இருக்கீங்களா? இந்த பரிசோதனைக் கூடத்துக்குள் எப்படி இருக்கீங்க? உங்களால் இங்கே எப்படி சாப்பிட முடிகிறது?!!... பயமா இல்லையா?... இந்த அறையிலும் ஒரு மாதிரி யாரும் உபயோகப் படுத்தாத வாசனை வரலை?" என்று கேள்விகளை அடுக்கியவளிடம்.
"பரவாயில்லையே என் மேல் உனக்கு இவ்வளவு அக்கறையா?" என்று கேட்டான் ரகுநந்தன்.
"ஏன் இப்படி கேட்கிறீங்க?"
"என்னுடைய வேலை அப்படி... என்னோட ஃபிரண்ட்லியா பழகவே யோசிப்பாங்க... "
"நான் அப்படில்லாம் இல்லை! ஒருத்தருடன் பழக குணம் மட்டுமே போதும்... பார்க்கும் வேலைக்கும் குணத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கமுடியும்?" என்று கூறிய பூவினாவை உற்றுப் பார்த்தான் ரகுநந்தன்.
'இப்ப எதுக்கு உத்து பார்க்கிறார்?' என்று நினைத்த பூவினாவின் பின்னால்,
"ஏய்! இங்கேயா இருக்க? இந்தக் கதவு திறந்து இருப்பதைப் பார்த்து வந்தோம்... இங்க ஒரு அறை இருக்கே?" என்று கிரேசாவும், இன்னொரு தோழி மஞ்சுவும் ஆச்சரியமாக கூற,
"ஆமா ல்ல? " என்று ரகுநந்தனை பார்த்து சிரித்தபடி கூறினாள் பூவினா.
"சரி சரி! வா! ஸார் கூப்பிடுறார்." என்று பூவினாவிடம் கூறிவிட்டு நகர்ந்தாள் மஞ்சு.
அவள் சென்றதும்,
"என்ன ஆச்சரியம் கிரேசா? மஞ்சு டாக்டர்கிட்ட பேசாம போறா? லட்சணமா ஒரு ஆம்பளையைப் பார்த்தாலே கடலை போடுவாளே? !!! இன்னைக்கு என்ன ஆச்சு? " என்று கேட்டாள் பூவினா.
" இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம்! வா வினு!" என்று கையைப் பிடித்து இழுத்தாள் கிரேசா.
"ஒரே ஒரு நிமிஷம்... ஸார் கிட்ட நான் வாஷ்ரூமில் இருக்கேன் னு சொல்லு இதோ வந்துடுறேன்."
"இங்க வர அவ்வளவு பயந்த? இப்ப இங்கிருந்து வர மாட்ற? சீக்கிரம் வா!" என்று கூறி விட்டு, அறை முழுவதையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள் கிரேசா.
"நிஜமாதான் சொன்னியா? " என்று கேட்டான் ரகுநந்தன். அவன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை பார்த்தவள்,
"என்ன சொன்னேன்?" என்று கேட்டாள்.
"லெட்சணமான ஆண் என்று என்னைத்தானேக் கூறினாய்?"
அவனுடைய ஆர்வத்திற்கான காரணம் புரிந்து,
"உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்த்ததில்லையா டாக்டர்? பிறகு ஏன் நிஜமா சொன்னேனான்னு கேட்கிறீங்க?"
அவன் ஒன்றும் சொல்லாமல் சிரிக்கவே,
"என் ஃபிரண்ட்ஸ்க்கு இங்கே வர பயம். அதான் உங்ககிட்டக் கூடப் பேசாமப் போறாங்க.. தப்பா எடுத்துக்காதீங்க டாக்டர்." என்று கூறினாள் பூவினா.
"உனக்கு பயமா இல்லையா?"
"நீங்க பக்கத்துல இருக்கும் போது என்ன பயம்?"
"என்னிடம் உனக்கு பயம் இல்லையா?"
"உங்களைப் பார்த்தாலே நல்லவர் போல தெரிகிறதே... பிறகு என்ன பயம்?"
"சரி! நீ கிளம்பு."
'என்னவோ தெரியல இவரைவிட்டு போகப் பிடிக்கலை....' என்று நினைத்தவள்,
"எனக்கு எதாவது பாடத்தில் சந்தேகம் வந்தா உங்ககிட்ட கேட்கலாமா?"
"உன் பாடங்களைப் பத்தி எனக்கு எப்படி தெரியும்? எனக்கு என் தொழில் பற்றிய விஷயங்கள் தானே தெரியும்?"
"அதைதான் கேட்டேன்... இன்னைக்கு அந்த பையன் தற்கொலை செய்யவில்லைனு ஏதேதோ ஆதாரங்கள் சொன்னாங்க.. உங்களுக்கு இந்த விஷயங்கள் நன்றாக தெரிந்திருக்குமே? அதான்..." என்று அடுத்து எப்படித் தொடர்வதென்று தெரியாமல் ரகுநந்தனைப் பார்த்து சிரித்தாள் பூவினா.
"உங்களுக்கு டாக்டர் செந்தில் பாடம் நடத்தும் போது, நான் உங்கிட்ட சொன்ன விஷயங்கள் போக நிறைய இருக்கு... உனக்குத் தேவைப்பட்டா இது சம்பந்தமாக உனக்குச் சொல்றேன்." என்று ரகுநந்தன் கூறிய பிறகே, தன் பின்னால் நின்று அந்த பையனின் உடல் சம்மந்தமாக பேசியது இவரோ என்று தோன்ற,
"நீங்கதான் என் பின்னாடி நின்னு ரிப்போர்ட் பத்தின டீடைல்ஸ் சொன்னதா?"
"ஆமா"
"திரும்பி பார்த்தப்ப நீங்க இல்லையே?"
"அங்க தான் நின்னுக்கிட்டிருந்தேன். நீ கவனிக்கலைன்னு நினைக்கிறேன்."
"ஓ!" என்று பேசியபடி பரிசோதனைக் கூடத்தின் வாசலுக்கு வந்துவிட்டனர்.
அவனிடமிருந்து செல்ல எதுவோ தடுத்தது.
"மறுபடியும் உங்களைப் பார்க்கனும் னா என்ன செய்றது?" என்று கேட்டாள்.
"நீ நினைத்தால் போதும் வருவேன்." என்றான்.
"ஆஹா! பெரிய ஆளுதான்... சரி! நான் கிளம்புறேன்..." என்று கூறி விட்டு ரகுநந்தனை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி காலேஜ் வேனில் ஏறி, ஜன்னல் வழியாகப் பார்த்தாள். ரகுநந்தன் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான்.
அவனைப் பார்த்துக் கையசைத்தாள் பூவினா. அவனும் சிரித்தபடி கையசைத்து விடைகொடுத்தான்.
ஏனோ பூவினாவிற்கு கண்கள் கலங்க, 'இறங்கிச் சென்று விடலாமா?' என்று தோன்றியது. அவனும் கண்மறையும்வரை வேனைப் பார்த்தபடி நின்றான்.
வேனில் எதுவும் பேசாமல் யோசனையாகவே வந்த பூவினாவிடம்,
"என்னாச்சு வித்யாசமா நடந்துக்கிற?" என்று கிரேசா கேட்டாள்.
"நான் எப்பவும் போல தான் இருக்கேன்." என்றாள் பூவினா.
"என்னைக்காவது இப்படி என்னிடம் பேசாம அமைதியா வந்திருக்கியா? மழைத் தூரல் விழுது... எப்பவுமே ஜன்னல் வழியே கைநீட்டி மழையோட விளையாடுவ. .. ஆனா இப்ப எதையோ யோசித்தபடி வர்ற... உன்னைப் போட்டு குடையுறது எது?" என்று உண்மையான பரிவுடன் கேட்டாள் கிரேசா.
'அட! ஆமா மழைத் தூரல் விழுது! இதைக்கூடவா உணராமல் இருக்கேன்?' என்று அதிர்ந்தவள்,
"ஒன்னுமில்லை." என்று கூற,
பூவினாவைப் பார்த்த கிரேசா, 'இன்று நடந்ததில் பயந்து விட்டாளோ?' என்று நினைத்தபடி அவளும் அமைதியாக வந்தாள்.
மாலை வீட்டுக்கு வந்ததும், தம்பி, அப்பா இருவரும் பரிசோதனைக் கூடத்தில் நடந்த விபரங்களைக் கேட்டனர்.
ஏனோ ரகுநந்தனைத் தவிர மற்ற விபரங்களை மட்டும் கூறினாள்.
இரவு உணவு முடித்து மாடி அறைக்குச் சென்றவளுக்கு ரகுநந்தன் ஞாபகமே வந்தது.
'அவர் எப்படி அந்த அறையில் இருக்கிறார்? அவர் வீட்டுக்கு போகமாட்டாரா? என்னதான் டாக்டரா இருந்தாலும் இரவில் அங்கேத் தங்க பயமாக இருக்காதா?' என்று ரகுநந்தனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு,
'நீ நினைத்தால் போதும் வருவேன் ' என்று அவன் சொன்னது ஞாபகம் வர, சிரித்துக் கொண்டாள்.
'இதோ நான் உங்களைப் பார்க்கனும்னு நினேக்கிறேன். வந்து விடுவீர்களா?' என்று மனதிற்குள் கேட்டாள்.
சட்டென்று ஜன்னல் கதவுகள் காற்றில் திறக்க,
'இன்னைக்கு என்ன? மத்தியானம் திடீர்னு மழை பெய்தது... இப்ப பலமா காத்து அடிக்குது?' என்று நினைத்தவள்,
'ஜன்னல் கதவைச் சாத்துவோம். இல்லைனா ராத்திரி பூராவும் கொசு கடித்தே கொன்னுடும்' என்று நினைத்து, எழுந்து சென்று ஜன்னல் கதவை மூடுவதற்காக கையை வெளியே கொண்டுசென்றவளின் கண்களில், கீழே சாலை ஓரத்தில் யாரோ நிற்பது தெரிந்தது.
'இந்த நேரத்துல யாரு தனியா அங்க நிக்கிறது?' என்று உற்று பார்த்தாள்.
ஏனென்றால் இவர்கள் இருக்கும் ஏரியாவில் இரவு ஏழு மணிக்கெல்லாம் அவரவர் வீட்டுக்குள் சென்று அனைவரும் வீட்டைப் பூட்டிக்கொள்வர். திருட்டு பயமும் இல்லாத ஏரியா…
'பின்ன யாரு நம்ம வீட்டுக்கு எதிரே நிற்பது?' என்று மீண்டும் உற்று பார்க்க, அங்கே ரகுநந்தன் நின்று கொண்டிருந்தான்.!!
ஒரு நிமிடம் பூவினாவிற்கு இதயமே நின்றுவிட்டது. வேகமாக பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தாள்.
சந்தேகமே இல்லை ரகுநந்தனே தான். 'எப்படி வந்தான்? எப்ப இருந்து இங்கே நிற்கிறான்? யாராவது பார்த்து விடுவார்களே?' என்ற பயத்தில் அவனைப் பார்த்து கையைத்தாள். அவனும் கையசைக்கவே,
'என்ன இங்கே நிக்கிறீங்க?' என்பது போல் சைகையில் பூவினா கேட்க,
'கீழே வா! 'என்பது போல கையை அசைத்தான் ரகுநந்தன்.
மெல்ல படியிறங்கிச் சென்றவளுக்கு, அப்பாவுடைய அறையில், அப்பா எதையோ வாசித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
தம்பி, அவனுடைய அறையில் உறங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.
அம்மா அடுப்படியில் எதையோ சுத்தம் செய்யும் சப்தம் மெல்லியதாக கேட்டது.
பூனை போல் அடியெடுத்து வைத்து வாசலுக்கு வந்த பூவினா, சப்தம் எழுப்பாமல் மெல்லக் கதவைத்திறந்து, வெளியே அக்கம்பக்கத்தினர் யாராவது தெரிகிறார்களா? என்று பார்த்தபடி ரகுநந்தன் அருகில் வந்தாள்.
"என்ன? யாராவது பார்த்து விடுவார்களேன்னு பயப்படுகிறாயா?" என்று சிரித்தபடி கேட்டான் ரகுநந்தன்.
"இங்கே எப்படி வந்தீங்க? என் வீடு எப்படி உங்களுக்குத் தெரிந்தது?" என்று கேட்டாள்.
"உன்னிடம் என்னுடைய மோதிரம் இருக்கிறது... இன்று, ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த போது, உன் கோட்பாக்கெட்டில் மோதிரம் விழுந்து விட்டது. அதுதான் உன் வீட்டை எனக்கு அடையாளம் காட்டியது." என்றான்
"அடேயப்பா! பெரிய மாயாஜால மோதிரம். என் வீட்டு முகவரியை உங்களுக்குச் சொல்லி விட்டது... நம்பிவிட்டேன்." என்றாள் பரிகாசமாக.
ரகுநந்தன் சிரித்தான்...
'இவன் சிரிப்பில் சிறு வேதனை தெரிகிறதே?... என்னால் முடிந்தால் அவனுடைய வேதனையை முழுவதும் போக்கிவிடுவேன்.' என்று நினைத்தவள்,
"இந்த நேரத்தில், இங்கே வந்து என்னைப் பார்ப்பது, தப்பில்லை?" என்று கேலியாக கேட்டாள்.
"நான் தான் சொன்னேனே நீ நினைத்தால் போதும் வருவேன்னு. நீ நினைத்தாய் நான் வந்துவிட்டேன்." என்றான்.
எப்படி பூவினா நினைத்ததும் வந்தான்? அல்லது எதார்த்தமாக வந்தானா?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...
💍💍💍💍💍💍
0 Comments